கேள்வி நாம் பிறக்கும்போதே மரணம் உட்பட அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு விட்டதா? அல்லது நாம் வாழும் வாழ்க்கையைப் பொறுத்து அவை மாறுபடுமா? சத்குரு: பிறக்கும்போதே அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் நாம் எதற்கு யோகா செய்ய வேண்டும்? “நாளைக்கு பயிற்சி செய்யலாமா வேண்டாமா? எப்படியும் முதலிலேயே நிர்ணயம் ஆகியிருந்தால் நான் ஏன் யோகா செய்ய வேண்டும்?” அதற்காகத்தான் இந்த கேள்வியை கேட்கிறீர்களா? (கூட்டத்தினர் கைதட்டல்) ‘தோல்வி விதியின் வசத்தால் ஏற்படுகிறது’ என்பது ஒரு நல்ல சாக்குப் போக்காகிவிட்டது. முதலிலேயே அனைத்தும் நிர்ணயம் செய்திருந்தால், வாழ்க்கையை வாழுகின்ற திறமை உங்களுக்கு இல்லை என்பதுதானே பொருள்? உலகத்தில் பலவிதமான ஜாதி, மதம், குலம் என்ற பேதங்களை உருவாக்கியிருந்தாலும், உயிரை தன் போக்கில் நிகழ அனுமதித்தால், இங்கே இரண்டு விதமான ஜாதி மட்டுமே இருக்கும். திறமையுள்ள ஜாதி, திறமையற்ற ஜாதி. உலகத்தில் எங்கே சென்றாலும் இந்த இரண்டு ஜாதியிலிருந்து தப்ப முடியாது. மற்ற ஜாதிகளை நீங்கள் அறவே நீக்கிவிட்டாலும் இந்த இரண்டு குறிப்பிட்ட ஜாதிகளைத் தவிர்க்கவே முடியாது. திறமையுடன் செயல்படுபவர்கள் மற்றும் திறமையின்றி போராடுபவர்கள் என்ற இரண்டு ஜாதிகளையும் வெளி உலகத்தில் நீக்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் உள்நிலையில் அனைவருக்கும் ஆனந்தமாக இருக்கும் வாய்ப்பு உள்ளதால், அங்கே பிரிவினை இன்றி இருக்க முடியும். திறமை இல்லாமல் போராடிக் கொள்பவர்கள், எப்போதுமே அனைத்தும் முன்னரே நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது என்று கூறிக் கொள்கிறார்கள். ஏனென்றால், அவருடைய தோல்வியை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தான் தோல்வி பெற வேண்டும் என்று கடவுள் நிர்ணயித்து வைத்திருப்பதாகவும், கடவுளின் விருப்பத்தைத் தாண்டிச் செல்ல மாட்டோம் என்றும், மேலும் கடவுள் எனக்களித்த வாய்ப்பு அவ்வளவுதான் என்றெல்லாம் காரணம் கூறுவார்கள். ‘தோல்வி விதியின் வசத்தால் ஏற்படுகிறது’ என்பது ஒரு நல்ல சாக்குப் போக்காகிவிட்டது. தோல்வியின் காரணம் திறமையற்றுப் போனதுதான் என்ற கோணத்தில் பார்த்தால், திறமையை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. தன்னுடைய தோல்விக்கு கடவுளுடைய கட்டளை அல்லது விதிதான் காரணம் என்றால், தோல்விக்கு நல்ல காரணம் கிடைக்கிறது. ஆனால் வாழ்க்கையைக் கடந்து செல்வதற்கான கருவி இல்லாமல் போய்விடுகிறது. உங்களுடைய உயிரின் தன்மை, அதனுடைய துன்பம், ஆனந்தம் மற்றும் உயிரின் பிறப்பு, இறப்பு அனைத்தையும் நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள். இதற்குத்தான் கர்மா என்று கூறப்படுகிறது. கர்மா என்றால் என்ன? செயல். யாருடைய செயல்? உங்களுடைய செயல். உங்களுக்கு ஏதோ ஒன்று நடந்தால், ‘உன் கர்மா அப்படி’ என்று சொன்னார்கள். நீங்கள் கர்மா என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு ‘உன்’ என்பதை விட்டுவிட்டீர்கள். எனவே நீங்கள் வாழ்ந்தாலும், இறந்தாலும் அது ‘என் கர்மா’ என்று பார்க்கவேண்டும். என் என்பதை அடிக்கோடிட்டு, “என் கர்மா” என்று நன்கு புரிந்து கொண்டால், இந்தக் கேள்வியெல்லாம் எழாது. நீங்கள் எவ்வளவு நேரம் வாழ்கிறீர்கள், எப்படி வாழ்கிறீர்கள், எந்த மாதிரி நிலையில் வாழ்கிறீர்கள், அனைத்தும் உங்களுடைய செயல். விழிப்புணர்வாக செயல்பட்டிருந்தால் இந்த உயிர் நல்லவிதமாக நிகழ்வதுபோலச் செய்திருப்பீர்கள். விழிப்புணர்வு இல்லாமல் வாழும்போது, வாழ்க்கையானது தற்செயலாக நடப்பதுபோல எப்படியோ நடக்கிறது. பிறப்பும், இறப்பும் கூட உங்களுடைய கர்மாதான். நிர்ணயிக்கப்பட்டது எதுவும் கிடையாது. நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அது உங்களுடைய கர்மத்தினால் நிர்ணயிக்கப்பட்டதுதான். நேற்று செய்த செயலினால் இன்றைக்கான சூழ்நிலை ஓரளவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இல்லையா? நாம் நேற்று நிகழ்த்திய செயலை மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த கணத்தின் கர்மாவை நாம் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நேற்று நடந்ததை நாம் மாற்ற முடியாது. ஆனால் இந்த கணத்தின் கர்மாவை நாம் முழுமையாக நம் கையில் எடுத்தால், நாளைக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை நாம் நிர்ணயிக்க முடியும். அதற்கான ஒரு சக்தி, திறமை, மற்றும் வாய்ப்பு நம் வாழ்க்கையில் இருக்கிறது.
No comments:
Post a Comment