சத்குரு, எனக்கு யோகா, பிராணாயாமம் போன்ற ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆவல் உள்ளது. ஆனால், ‘ஒரு குடும்பப் பெண் இதையெல்லாம் செய்தால், கணவனிடம் இருந்து விலகிவிடுவாள். 60 வயதுக்குப் பிறகு ஆன்மீகத்திற்குப் போகலாம்’ என்று என் கணவர் எச்சரிக்கிறார். எனக்கு ஆன்மீகமும் வேண்டும், இல்லறமும் வேண்டும், என்ன செய்வது? சத்குரு: “உடல் திடமாக இருக்கும்போது, சிறுசிறு இன்பங்களை நாடுவதற்கு மட்டும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உடல் வேறு எதற்கும் லாயக்கு இல்லாமல் போகும்போது, ஆன்மீகத்தில் அதை ஈடுபடுத்தலாம் – இப்படி ஒரு கலாச்சாரம் உலகத்தில் வளர்ந்துவிட்டது. இளம்வயதில் யோகா செய்வதால், வாழ்க்கைமீது விரக்தி வந்துவிடாது. மாறாக, வாழ்க்கையின்மீது முழுமையான காதல்தான் பிறக்கும். உடல் ஒழுங்காக இயங்க முடியாதபோது, சாப்பிட முடியாது. சாப்பிட்டால் ஜீரணிக்க முடியாது. உட்கார்ந்தால் நிற்கமுடியாது. நின்றால் உட்காரமுடியாது. அப்போதுதான் ஆன்மீகமா? என்ன கணக்கு இது? இளம்வயதில் யோகா செய்வதால், வாழ்க்கைமீது விரக்தி வந்துவிடாது. மாறாக, வாழ்க்கையின்மீது முழுமையான காதல்தான் பிறக்கும். ஆன்மீகம் குடும்பத்தில் இருந்து உங்களை விலக்கிக்கொண்டு போய்விடும் என்று உங்கள் கணவர் சொல்கிறாரே… தங்களைச் சேர்ந்தவர் மேன்மை அடையக்கூடிய வாய்ப்பைப் பற்றிக் கவலைப்படாமல், மனைவி என்பவளை வேலை செய்யும் இயந்திரமாக, சுகம் தரும் சொந்தமாக மட்டும் நினைப்பவருடன் வாழ்க்கையை நடத்தும் அமைப்பைக் குடும்பம் என்று எப்படி அழைப்பது? குடும்பம் என்றால் ஒருவருக்கு ஒருவர் பங்களிப்பது, பகிர்ந்துகொள்வது. கணவன் மனைவி இருவரும் அடுத்தவர் பற்றிய அக்கறையில் முழுமையாக இருக்க வேண்டாமா? இருவரும் இணைந்து மனதார ஒரு திசையில் பயணம் செய்ய வேண்டாமா? குடும்பப் பொறுப்பை விரும்பி ஏற்றுக்கொண்டதால் பெண்கள் மேன்மையான விஷயங்களுக்கு ஆசைப்படக்கூடாதா? சங்கரன்பிள்ளையின் கண்ணாடி… ‘என்னிடம் மூன்று கண்ணாடிகள் இருக்கின்றன. ஒன்று கிட்டப்பார்வைக்கு, ஒன்று தூரப் பார்வைக்கு’ என்றார் சங்கரன்பிள்ளை. ‘மூன்றாவது…?’ ‘மற்ற இரண்டு கண்ணாடிகளைத் தேடுவதற்கு’ என்றார் சங்கரன்பிள்ளை. இப்படிப்பட்ட தேவைகளோடு இருப்பவரா உங்கள் கணவர்? அதனால்தான் உங்களை, உங்கள் நன்மைக்காகக்கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லையா? ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதால், கணவரைவிட்டுப் பிரியவேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. ஆன்மீகம் என்றால்… ஆன்மீகம் என்றால் கைகளில் விளக்கையோ, மணியையோ, பூவையோ வைத்துக்கொண்டு ஏதாவது பண்ணுவது அல்ல. கடவுள்மீது பக்தி என்று செய்யப்படும் நாடகங்கள் அல்ல. பக்கத்தில் இருக்கும் உயிரை மதிக்கத் தயாராக இல்லாமல், அதைப் படைத்தவனைப் பற்றிய கற்பனைகளை மட்டும் மதிக்கும் செயல் அல்ல. ஆன்மீகம் என்பது, அடிப்படையில் நமக்கு உள்ளே நடக்கும் பயணம். அதற்குக் குறுக்கே எப்பேர்ப்பட்ட உறவும் வந்து மறிக்க முடியாது. பாதி உயிராகவே வாழ்ந்துவிட்டுப் போய்ச்சேரலாம் என்று நினைத்துவிட்டால், அது லௌகீகம். நீங்கள் சினிமாபோக வேண்டும் என்றால், கூடாது என்று நிறுத்தலாம். தினம் கேட்கவில்லை, மூன்று நாளைக்கு ஒன்றுதான் கேட்கிறேன் என்று பெருந்தன்மையுடன் சொன்னால்கூட, புடவை வாங்கப் போவதைத் தடுக்கலாம். கோயில் போகிறேன் என்றால், குறுக்கே விழுந்து மறிக்கலாம். கைலாச மலை ஏறப்போகிறேன் என்று சொன்னால், அந்த மலையையே மறைப்பதுபோல் நின்று மறிக்கலாம். கணவனோ, மனைவியோ, மாமியாரோ, நாத்தனாரோ யாரோ உங்களை இப்படியெல்லாம் தொந்தரவு செய்யலாம். அதெல்லாம் ஆன்மீகத்தின் பிரச்சினை அல்ல… குடும்பத்தின் பிரச்சினை. இதையெல்லாம் எப்படித் தீர்த்துக்கொள்ள வேண்டுமோ, அப்படித் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் உள்நோக்கிப் பயணம்செய்ய நீங்கள் முடிவுசெய்தால், வெளியில் இருப்பவர்களில் யாரை அது குறுக்கிடப்போகிறது? அல்லது வெளியில் இருக்கும் யாருடைய அனுமதி தேவை அதற்கு? உள்ளே நீங்கள் எப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க, வெளியில் இருக்கும் யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது, சக்தியும் கிடையாது. குடும்பத்தில் பிரச்சினை என்றால், அந்தச் சூழ்நிலைகளை நீங்களே சரிப்படுத்திக்கொள்வது எப்படி என்று பார்க்கவேண்டும். சரிப்படுத்தக்கூடிய சூழ்நிலையே இல்லை என்றால், வேறு என்ன செய்யவேண்டும் என்பதையும் நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். மனைவியுடன் சண்டையா? இப்படித்தான், சங்கரன்பிள்ளைக்கும் அவர் மனைவிக்கும் ஒருநாள் பெரிய சண்டை வெடித்தது. உலகயுத்தம் அளவுக்கு அது போய்விட்டது. சங்கரன்பிள்ளை விரக்தியுடன் கால்போன போக்கில் நடந்தார். ஊர் எல்லையைத் தாண்டி நடந்தார். வெகுதொலைவு நடந்தபிறகு ஒரு மரத்தடியில், சாது ஒருவர் அமர்ந்து இருப்பதைக் கவனித்தார். அந்தச் சாதுவின் முகத்தில் அத்தனைச் சந்தோஷம், அபார அமைதி. சங்கரன்பிள்ளை அவரை வணங்கினார். ‘ஐயா, வீட்டில் என் மனைவி ரொம்பப் பிரச்சினை பண்ணுகிறாள். உட்கார்ந்தால் தப்பு, நின்றால் தப்பு என்று வாட்டி எடுக்கிறாள். பேசாமல் இருந்தால், ஊமையா என்று கத்துகிறாள். பேசினால், எதிர்த்துப் பேசுகிறாயா என்று புரட்டி எடுக்கிறாள். நிம்மதி இழந்து அல்லாடுகிறேன். அவளைச் சமாளிப்பதற்குச் சுலபமான வழி எதாவது இருந்தால், சொல்லிக்கொடுங்களேன்’ என்று பணிவுடன் கேட்டார். அந்த சாது சங்கரன் பிள்ளையைப் பரிதாபமாகப் பார்த்தார். ‘அடப்போடா, முட்டாள்! எனக்கு அந்தச் சுலபமான உபாயம் தெரிந்து இருந்தால், நான் எதற்கு இப்படிச் சந்நியாசம் வாங்கிக்கொண்டு வந்து உட்காரப் போகிறேன்?’ என்றார். இப்படிச் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரைவிட்டு ஒருவர் விலகுவதைவிட, ஆன்மீகத்திற்காக விலகினால் எவ்வளவு நன்றாக இருக்கும். (சிரிக்கிறார்) உங்களுக்கு முழுமையான உயிரோட்டத்துடன் இருக்க வேண்டும் என்று ஆசையா? அல்லது அரைகுறை உயிரோட்டத்துடன் வாழ்ந்தால் போதுமா? சாவதற்குள், பிரபஞ்சத்தையே முழுமையாக உணர்ந்து பார்க்கமுடியாவிட்டாலும், வாழ்க்கையின் அத்தனை பரிமாணங்களையும் தெரிந்துகொள்ள ஆசையா, இல்லையா? அந்த நோக்கம் இருந்தால், அதுதான் ஆன்மீகம். பாதி உயிராகவே வாழ்ந்துவிட்டுப் போய்ச்சேரலாம் என்று நினைத்துவிட்டால், அது லௌகீகம். ஒவ்வொரு தனிமனிதரும் தான் எப்படி மேன்மையான நிலைக்குப்போவது என்பதில் கவனம் வைப்பதால், கடமையிலிருந்து தவறியவராக மாட்டார். உங்கள்மீது கணவர் மெய்யான அன்புடன் இருந்தால், அதை எதிர்க்காமல், சந்தோஷமாக உதவுவார். ஒருவர் உன்னத நிலையை உணர்ந்துவிட்டால், அந்த ஆனந்தம் அவரை மட்டும் உய்விக்கப் போவது இல்லை. அவரைச் சுற்றியுள்ள அத்தனைப்பேரையும் அது மேல்நிலைக்குக் கொண்டுச் செல்லும். இதை உங்கள் கணவர் புரிந்துகொள்ளட்டும்!”
No comments:
Post a Comment