ராவணன் ஆட்சிபுரியும் இலங்கை நகரில்தான் சீதாதேவி இருக்கிறார் என்பதை கண்டு வந்து ராமரிடம் கூறி விட்டார் அனுமன். இனி இலங்கைக்கு சென்று ராவணனிடம் போரிட்டு, சீதாதேவியை மீட்கும் வழியைத்தான் பார்க்க வேண்டும். கடலுக்குள் தீவு போன்று இருக்கும் இலங்கைக்கு செல்லும் வழி யாது?
கடலில் பாலம்................
கடலின் முன் நின்று தான் இலங்கை தீவுக்கு செல்ல வழிவிட்டு உதவும்படி சமுத்திர அரசனிடம் வேண்டினார் ராமபிரான்.ஆனால் சமுத்திர அரசனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. உயிரினும் மேலான மனைவி,மாற்றானின் பிடியில் சிக்கித் தவிக்கும்போது,அவளைக் காப்பாற்ற உதவும் படி கேட்டும் பதிலளிக்க மறுத்த சமுத்திர அரசனின் செய்கையால் கோபத்தில் கொந்தளித்தார் ஸ்ரீராமர்.
தனது அஸ்திரத்தை எடுத்து கடல் நீரை வற்ற வைக்க வில்லில் அம்பை தொடுத்து விட்டார். அதனால் பயந்து போன கடலரசன்,உடனடியாக ராமபிரானின் முன் தோன்றினான். மேலும் தவறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், கடல் மேல் பாலம் அமைத்து செல்லும்படி வழியும் கூறினான். கடலின் மீது பாலமா?, முடிகிற காரியமா?, கடலில் எதை வைத்து பாலம் கட்டுவது?
ராம தரிசனம்..............
'நீங்கள் இருவரும் எதை தண்ணீரில் போட்டாலும் அது மிதக்கும்படி ஆகட்டும்' என்று நளனுக்கும், நீலனுக்கும் முனிவர் ஒருவர் அளித்திருந்த சாபம் அதற்கு கைகொடுத்தது.கடலில் பாலம் கட்டும் பணி தொடங்கி விட்டது. வானரங்கள் அனைவரும் தங்கள் சக்திக்கு ஏற்றாற்போல் மலைகளில் இருந்து பாறைகளை பெயர்த்து எடுத்து வந்து போட, அதனை நளனும், நீலனும் கடலில் போட்டு பாலம் கட்டிக் கொண்டிருந்தனர்.
பாலம் கட்டும் பணிக்காக வானர வீரர்களில் பலசாலியான ஆஞ்சநேயர் சில மைல் தூரம் பறந்து சென்று கோவர்த்தன மலையைவேருடன் பெயர்த்து எடுத்துவர முயன்றார். அது அசையக் கூட இல்லை. மலையரசன், அனுமனைப் பார்த்து, 'ஆஞ்சநேயரே! ராமபிரானின் தரிசனம் எனக்கு கிடைக்கும்படி நீங்கள் செய்வீர்கள் என்றால், நான் உங்களுடன் வர சித்தமாக உள்ளேன்' என்றான்.
ராமனின் உத்தரவு.......
அனுமனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 'சரி' என்று ஒப்புக்கொண்ராமரின் உத்தரவுடார். பின்னர் கோவர்த்தன மலையை எடுத்துக் கொண்டு சென்றார். அவர் விரஜபூமி என்ற இடத்திற்கு மேலாக வந்தபோது, பாலம் கட்டும் பணி முற்றிலும் முடிந்து விட்டது.
'வானர வீரர்களே! பாலம் வேலை முடிந்தது. நீங்கள் மேலும் பாறைகளை கொண்டு வரத் தேவையில்லை. யார், யார் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே பாறைகளை போட்டு விட்டு வந்து விடுங்கள்' என்று உத்தரவும் போட்டு விட்டார் ராமபிரான்.
வருந்தி நின்ற அனுமன்.........
ராமரின் உத்தரவை மீறுவார் யார்? வானர வீரர்கள் அனை வரும் தாங்கள் எடுத்து வந்த பாறைகளை தாங்கள் நின்ற இடத்திலேயே போட்டு விட்டு ராமரிடம் சென்றனர். தான் பெயர்த்து எடுத்து வந்த கோவர்த்தன மலையை விரஜபூமியிலேயே வைக்கும்படி ஆகிவிட்டது ஆஞ்சநேயருக்கு.மலையரசனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாதவராக அவர் முன் நின்று கொண்டிருந்தார்.
'ஆஞ்சநேயரே! தாங்கள் எனக்கு ராமரின் தரிசனம் கிடைக்கச் செய்வதாக கூறிவிட்டு, இப்போது இங்கேயே விட்டுச் செல்கிறீர்களே! நியாயமான செயலா இது? நான் இப்போது இருக்கும் நிலையில் எப்படி ராமபிரானை தரிசிப்பது?' என்று வருத்தத்துடன் வினா எழுப்பினான் மலையரசன். 'மலையரசே! நான் ராமரிடம் சென்று முறையிடுவேன்.
அவரின் ஒப்புதலுடன் அவரைக் காண உங்களை வெகு சீக்கிரம் அழைத்துச் செல்வேன். வருந்த வேண்டாம்' என்று கூறிவிட்டு அங்கிருந்து ராமர் இருக்கும் இடத்திற்கு வந்தார் அனுமன். அங்கு ராமபிரானை தரிசித்து விட்டு, தனக்கு நேர்ந்த இக்கட்டான நிலையை அவரிடம் கூறி,மலையரசனுக்கு தரிசனம் கிடைக்கச் செய்யும்படி யாசகம் கேட்டு நின்றார்.
துவாபர யுகத்தில்......
கோவர்த்தன மலைக்கு ஆஞ்சநேயர் கொடுத்த வாக்குறுதியை கேட்ட ராமபிரான், 'வாயு புத்திரனே! உன் வாக்கு பொய்த்து போகுமோ என்று வருந்தாதே! என் பக்தனின் வாக்கு தவறினால், என் வாக்கே தவறியது போல் ஆகும். நீ இப்போதே கோவர்த்தன மலை இருக்கும் இருப்பிடம் செல்!. அதனிடம் துவாபர யுகத்தில் நான் கிருஷ்ணராக அவதரிக்கும்போது,தரிசனம் அளிப்பேன்.
தற்போது வருந்த வேண்டாம் என்று தெரிவித்து வா!' என்று கூறினார்.அனுமனும் கோவர்த்தன மலை இருக்கும் விரஜபூமிக்கு சென்று, ராமர் கூறிய வண்ணமே கூறி வந்தார்.துவாரயுகத்தில் கிருஷ்ணராக வந்த பகவான் ஸ்ரீமந்நாராயணர்,கோவர்த்தனகிரி மலைக்கு தரிசனம் அளித்ததுடன், மழை வெள்ளத்தில் இருந்து தன் மக்களை காப்பாற்ற அதனை குடையாகவும் பிடித்து கிருபை செய்தார்.
No comments:
Post a Comment