அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் கோலம் போட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்ற வேண்டும். குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கவும்.
பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்துக் கோலம் போடவும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். அதன் மீது தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும்.
இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம்.
இவ்வாறு பூஜை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும். அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாக்கும்.
பொருளை தேடிக் கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது. நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் 10 சதவீதம் தர்மம் செய்தாலே, அது பல்கி பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தைத் தேடித் தரும். இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மகாலட்சுமி படம் முன்பு நெய் தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலை மகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்
No comments:
Post a Comment