Wednesday, May 8, 2013

விதுரர் சொல்கிறார்

ஒருவர் பாவச் செயல் புரிந்தால் அது பலரையும் பாதிக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை காலப்போக்கில் சரியாகி விடும். ஆனால் பாவச்செயல் புரிந்தவரை விட்டு, பாவம் ஒருநாளும் நீங்காது.
* தகுதியற்றவர்களுக்குப் பணம் கொடுத்தல், தகுதி உடையவர்களுக்கு உதவ மறுத்தல்- இந்த இரு நடவடிக்கைகளும் நாம் சம்பாதித்த செல்வத்தைத் தவறாக பயன்படுத்துவதாகவே கருதப்படும்.
* காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் வாயில்களாக அமைந்துள்ளன. இவை நம் ஆத்மாவை களங்கப்படுத்தி விடும்.
* வாய்மை, தர்மசிந்தனை, சுறுசுறுப்பு, பொறாமை கொள்ளாதிருத்தல், பொறுமை, மனவலிமை ஆகிய ஆறு பண்புகளையும் கடைபிடியுங்கள். இவற்றையுடையவனின் மனம் ஆறுதலாக இருக்கும்.
* பெண் மோகம், சூதாடுதல், வேட்டையாடுதல், குடிப்பழக்கம், கடுமையான சொற்கள் பேசுதல், மிகையான தண்டனை கொடுத்தல், செல்வத்தை தவறான வழிகளில் செலவழித்தல் ஆகிய ஏழும் பெரும் அழிவை விளைவிக்கக் கூடியவை.
* யார் திமிருடன் நடந்து கொள்வதில்லையோ, பிறரை இகழ்ந்து தன்னை புகழ்ந்து கொள்வதில்லையோ, உணர்ச்சி வசப்பட்டாலும் தன்னை மறந்து பிறரை கடுஞ்சொல் கூறுவதில்லையோ அவர் எல்லோராலும் விரும்பப்படுபவர் ஆகிறார்.
* பிறர் பெற்றுள்ள செல்வம், அழகு, வீரம், குலகவுரவம், மகிழ்ச்சியான வாழ்க்கை, அதிர்ஷ்டம், பட்டம் பரிசுகள் ஆகியவற்றைக் கண்டு ஒருவர் பொறாமைப்பட்டால், வாழ்நாள் முழுவதும் தீராத நோயாளியைப் போல் மனம் புழுங்கியபடி இருக்க நேரிடும்.
* குடிப்பழக்கம் போன்ற போதைகளை விடச் செல்வ மிகுதியால் ஏற்படும் போதை அதிக அபாயம் கொண்டது. செல்வ போதை கொண்டுள்ளவர் தனக்கு பேரழிவு ஏற்பட்ட பிறகுதான் சுயநினைவிற்குத் திரும்புகிறார்.
* அறிவு குழம்பி அதனால் வீழ்ச்சியடையும் தருணம் நெருங்கி விட்டால், ஒருவருக்கு, தான் செய்யும் அநியாயம் எல்லாம் நியாயமாக தோன்றும்.
* பேசுவதைவிட மவுனமாக இருப்பது சிறந்தது. பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது உண்மையே பேச வேண்டும். அந்த பேச்சு பிறருக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்.
* ஏரி வறண்டு போனால் அன்னப் பறவைகள் வெளியேறி விடுவதைப் போல், ஒருவர் சஞ்சலமான மனதை உடையவராகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவராகவும், ஆசைகளுக்கு வசப்பட்டவராகவும் இருந்தால், அவருடைய செல்வமும் வசதிகளும் அவரை விட்டு நீங்கி விடும்.
* வாழ்வில் வளமாக இருக்க விரும்புகிறவர், பொருத்தமான உணவையே, தன்னால் சாப்பிடக் கூடிய உணவையே, சாப்பிட்டால் செரிக்கக் கூடியதையே, செரித்தால் நன்மை தரக் கூடியதையே உண்ண வேண்டும் அல்லது ஏற்க வேண்டும்.
* பணிவின் மூலம் அவமானத்தைத் தவிர்க்கலாம். வலிமையின் மூலம் பெரிய துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம். பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை வெல்லலாம். நன்னடத்தையின் மூலம் எல்லா தீய விளைவுகளையும் நீக்கலாம்.

No comments:

Post a Comment