Sunday, September 7, 2014

விஷ்ணு ஆலயங்களில் சிவன் இருப்பது கிடையாது. ஆனால் சிவன் ஆலயங்களில் விஷ்ணு காணப்படுகிறார் இது ஏன்

விஷ்ணு ஆலயங்களில் சிவன் இருப்பது கிடையாது. ஆனால் சிவன் ஆலயங்களில் விஷ்ணு காணப்படுகிறார் இது ஏன் ? யோசிக்க வேண்டியதுதான். ஆனால் விஷ்ணு ஆலயங்களில் சிவன் இல்லை என்று கூறும் நாங்கள் ஒன்றை மறந்து விட்டோம். முருகனை மூலஸ்தானமாக கொண்ட முருகன் ஆலயங்களிலோ அல்லது கருவறையில் பிள்ளையார் வீற்றிருக்கும் விநாயகர் ஆலயங்களிலோ கூட சிவன் இருப்பதில்லை. காரணம் சிவனை ஒரு ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டுமானால் அவரை நடுநாயகமாக மூலஸ்தானத்தில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும். இல்லையெனில் ஆலயத்தில் இருந்து தனியே வெளியில் தனி சன்னிதியாக பிரதிட்டை செய்ய வேண்டும். பரிவார மூர்த்தியாக எந்த கடவுளின் ஆலயத்திலும் அவரைப் பிரதிட்டை பண்ண முடியாது. ஆனால் விஷ்ணு முதற்கொண்டு மற்றைய அனைத்து தெய்வங்களும் சிவாலயத்தில் பரிவார தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்படலாம். . இதன் காரணமாகத் தான் விஷ்ணு ஆலயங்களில் சிவன் இருப்பதில்லை. ஆனால் சிவாலயங்களில் விஷ்ணு பரிவார தெய்வமாக வீற்றிருக்கிறார்.
சிவன் விஷ்ணுவை வணங்கியவர் என்று சொல்வதில் தவறு இல்லை. சிவன் எத்தனையோ தடவை விஷ்ணுவை வணங்கி இருக்கிறார். இருவரும் ஒருவரே.
பரப்ரும்மம் என்பது சங்கர-நாராயணம் என்கிறார் ஆதி சங்கரர். இதில் சங்கர என்பதை எடுத்து விட்டு நாராயணம் தான் ரெண்டும் கலந்தது என்னும் மாயத்தோற்றத்தை எட்படுத்துபவர்களை என்னவென்பது. இருவரும் ஒருவர், இருவரும் ஒவ்வொரு சமயத்தில் தங்கள் சக்திநிலையில் மேம்பட்டு நிற்கும் போது மற்றவரால் வணங்கப் படுவார், நரசிம்மாவதாரம் எடுத்து இரண்ய கசிபுவைக் கொன்ற பிறகு கோபம் அடங்காமல் இருந்த நரசிம்மரின் கோபத்தை சரபேஸ்வரராலும் அடக்க முடியவில்லை. சரபேஸ்வரரின் சிறகில் இருந்து வெளிப்பட்ட சக்தி யான ப்ருத்தியங்கரா தேவி தான் அடக்கினாள் . ப்ருத்தியங்கரா தேவி நரசிம்மருக்கும் சரபேஸ்வரருக்கும் பிறந்த மகள் இல்லை.அவள் சரபேஸ்வரரின் சக்தி. கோபம் அடக்கப்பட்ட நரசிம்மரை குளிர்விக்க லக்ஷ்மி தேவியை அவர் மடியில் வீற்றிருக்குமாறு வேண்டிக்கொள்ள அவர் லக்ஷ்மி நரசிம்மராக காட்சி அளித்தபோது சிவனும் தான் வணங்கினார். வாமனாவதாரத்தில் உலகளந்த காட்சியை சிவனும் தான் கண்டுகளித்தார்.அதே மாதிரி தில்லையில் நடராஜர் ஆடியதை விஷ்ணுவும் வணங்கி கண்டு களித்தார் .சக்கரம் வேண்டி தவம் இருந்து தன கண்ணையே அர்ப்பணித்து வணங்கினார்.
சிவன் விஷ்ணுவை வணங்கினார் என்று சொல்வதில் தப்பேதும் இல்லை. அதனால் அவர் முதல் வைணவர் என்று சொல்வது தான் தப்பு. அதையும் ராமர் சிவனை வணங்கினார் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வது இல்லை என்று கூறிவிட்டு இதை மட்டும்கூறி சிவனே வணங்கிய விஷ்ணுவை நீங்கள் ஏன் நிராகரிக்கிறீர்கள் என்பது தான் தப்பு. கூறினால் இரண்டையும் கூற வேண்டும் ஏற்றுக்கொண்டால் இரண்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கடைசில சிவன் ஒரு வைணவன் ன்னு முடிக்க கூடாது. நல்லவேளை ஈசனுக்கு நாமம் போட்டு விடவில்லை (அப்படி ஒரு படமும் கிடைக்கவில்லை )
வால்மீகி ராமாயணத்தில் ராமர் சிவனை வணங்கியது இருக்கிறதா இல்லையா என்று மொழி பெயர்ப்பை வைத்து சொல்ல முடியாது. மூல நூலில் உள்ளதா இல்லையா என்று எனக்கு தெரியாது. மற்றவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது.ஆனால் வான்மீகி முனிவர் ராமர் காலத்தில் எங்கோ காட்டுக்குள் இருந்து ராம சரித்திரத்தை தன ஞான திருஷ்டியால் கண்டு அதை எழுதியவர்.சிலதை விட்டு இருக்கலாம். ஆனால் வசிஷ்டர் ராமனின் குலகுரு. ராமரின் காட்டு வாழ்க்கையைத் தவிர மீதி நேரம் எல்லாம் அவருடன் நேரடியாக தொடர்பு பட்டவர். அவர் கூறுகிறார் அழகாக ராமன் ஈசனை வணங்கியதை.
வசிஷ்டர் எழுதிய தாரித்த்ரிய தகன ஸ்தோத்ரம் இல் வருகிறது.
ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய 
நாமப்ப்ரியாய நரகர்ணவ தாரணாய 
புன்யேஷு புண்ய பரிதாய சுரர்ச்சிதாய 
தாரித்ரிய துக்க தகநாய நமசிவாய!
ராமனுக்கு பிரியமானவனும் ராமனுக்கு வரங்களை அளித்தவனும், .... வழிபடாமலா வரம் பெற்றார் ராமர் ? இது வசிஷ்டர் கொடுக்கும் வாக்கு மூலம். ராமர் சிவனை மட்டும் அல்ல அகத்திய முனிவரால் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் உபதேசிக்கப்பட்டு தனது வெற்றிக்காக சூரியனையும் பிரார்த்திக்கிறார். 
நடு நிலை என்பது இதுவல்ல. கடைசியில் மிஞ்சியது சிவன் ஒரு வைணவன்.அவன் தான் முதல் வைணவன். நடுநிலை என்பது இருபக்கமும் சமமாக நோக்க வேண்டும். பாகவதத்தில் எப்படி சமமாக சொல்லி இருக்கிறது என்று பார்த்தால் சிவமகாபுராணத்தில் எப்படி சொல்லி இருக்கிறது என்றும் பார்க்கப் பட வேண்டும்.
சைவசித்தாந்தம் ஒன்றும் வேதத்துக்கு முரனானதோ வேதத்தில் இல்லாததோ கிடையாது. அது இன்று அகம்பாவிகளின் கையில் சிக்கி உள்ளது. ஆனாலும் அவர்கள் விஷ்ணுவை இகழ்வதட்கு காரணம் சைவசித்தாந்தம் அல்ல. வைஷ்ணவர்கள் தான். பின்னே என்னங்க. அந்நிய மதங்கள் ஊடுருவும் போதெல்லாம் சைவம் அதற்கெதிராக போராடியுள்ளது.சமணத்துக்கும் பௌத்தத்துக்கும் எதிராக சைவம் தான் முழுமூச்சுடன் போராடியது. அப்படி சமணமும் பௌத்தமும் வைதீக மதங்களை விழுங்கப் பார்த்தபோது சைவர்கள் அதற்கெதிராக நின்ற போதும் இந்த வைஷ்ணவர்கள் சிவன் பெரிதா விஷ்ணு பெரிதா என்று தான் சண்டை இட்ட்டுக் கொண்டு இருந்தார்கள். இன்று ஆபிரகாமிய மதங்கள் வைதீக மதங்களை அடியோடு அழிக்க நினைக்கும் போதும் சைவர்கள் அதற்கெதிராக முழுமூச்சுடன் இயங்கும் போதும் வைணவர்கள் சிவன் பெரிதா விஷ்ணு பெரிதா என்று கச்சேரி நடத்துகிறார்கள். ஆக வைஷ்ணவர்களுக்கு எது நடந்தாலும் அதைப்பற்றிக் கவலை இல்லை. சிவன் பெரிதா விஷ்ணு பெரிதா இது மட்டும் தான் பேசத் தெரியும். இப்படிப்பட்டவர்கள் மீது வரும் வெறுப்பை கடைசியாக சைவர்கள் விஷ்ணுவின் மேல் காட்டித் தொலைகிறார்கள் அவ்வளவு தான்.
ஆனால் இங்கு யார் என்ன குட்டிக்கரணம் போட்டு பதிவு எழுதினாலும் தொடர்கதை எழுதினாலும் நாராயணன் சங்கர நாராயணனாக சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கலாமே தவிர சிவத்துக்கு மேற்பட்டவராக ஒரு நிலையை அடைய முடியாது.பகவத்கீதையில் கிருஷ்ணன் வாக்குமூலம் கொடுக்கிறார். நான் எங்கிருந்து வந்தேனோ அந்த ஈஸ்வர சொரூபத்தைக் காண்பாயாக என்கிறார். விஸ்வரூப தரிசனத்தின் போது தமோ குணமுள்ள அழித்தல் மூர்த்தியாக ருத்திர மூர்த்தியாக உள்ளவருடன் சேர்ந்தே அந்த ஈஸ்வர சொரூபத்துடன் சேர்ந்தே அவரால் விஸ்வரூப தரிசனம் காட்ட முடிந்தது. சாத்விக குணமுள்ள நாராயனமாக அங்கு பரம்பொருள் காட்சி தரவில்லை.சிவத்தை விடப் பெரிது வேறெதுவும் இல்லை.

3 comments: