Wednesday, September 10, 2014

சிவன் சந்நிதிகளில் ஏன் காலபைரவர் ----பைரவரின் சிறப்புகள்

காலபைரவர் சிவன் சந்நிதிகளில் ஏன்
சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.
பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும்.
அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது. திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்;
வழக்கில் வெற்றி கிட்டும். திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம். தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும்.
பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. *
பைரவரின் வழிபாடும், அதன் சிறப்புகளும்
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கே இருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும் அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது.
வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது.
இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர்.
ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது.
அந்த விசேஷ தின பூஜையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும் நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.
வழிபாட்டிற்கு உகந்த நேரம்......
பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்.


நட்சத்திரங்களுக்குரிய பைரவர்களும் வழிபட வேண்டிய இடங்களும்:-
எண். நட்சத்திரம் வழிபட வேண்டிய பைரவர் இடம்
1. அசுவினி ஞான பைரவர் போரூர்
2. பரணி மகா பைரவர் பெரிச்சியூர் 3. கார்த்திகை அண்ணாமலைபைரவர் திருவண்ணாமலை 4. ரோகிணி பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர் 5. மிருகசீரிஷம் ஷேத்திரபால் பைரவர் ஷேத்திரபால புரம் 6. திருவாதிரை வடுக பைரவர் வடுகூர் 7. புனர்பூசம் விஜயபைரவர் பழனி
8. பூசம் ஆவின பைரவர் ஸ்ரீவாஞ்சியம் 9. ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி 10. மகம் நர்த்தன பைரவர் வேலூர் 11. பூரம் பைரவர் பட்டீஸ்வரம் 12. உத்திரம் ஜடாமண்டல பைரவர் சேரன்மாதேவி 13. அஸ்தம் யோகாசன பைரவர் திருப்பத்தூர் 14. சித்திரை சக்கர பைரவர் தர்மபுரி 15. சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை 16. விசாகம் கோட்டை பைரவர் திருமயம் 17. அனுஷம் ஸ்வர்ண பைரவர் சிதம்பரம், ஆடுதுறை, 18. கேட்டை கதாயுத பைரவர் சூரக்குடி, 19. மூலம் சட்டைநாதர் சீர்காழி 20. பூராடம் வீரபைரவர் அவிநாசி, ஒழுகுமங்கலம் 21. உத்திராடம் முத்தலைவேல் வடுகர் கரூர் 22. திருவோணம் மாரித்தாண்டபைரவர் வயிரவன்பட்டி 23. அவிட்டம் பலிபீட மூர்த்தி சீர்காழி, ஆறகளூர் (அஷ்டபைரவர்கள் உறையும் பலிபீடம்)
24. சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில் 25. பூரட்டாதி அஷ்டபுஜ பைரவர் கொக்கரையான்பேட்டை 26. உத்திரட்டாதி வெண்கல ஓசை பைரவர் சேஞ்ஞலூர் 27. ரேவதி சம்ஹார பைரவர் தாத்தையங்கார்பேட்டை
ஸ்ரீ சொர்ண பைரவர்
செல்வத்திற்கே அதிபதியான குபேரர் மற்றும் இலக்குமி போன்றவர்களுக்கே பொன் கொடுக்கும் தலைமைக் கடவுளாக ஸ்ரீ சொர்ண பைரவர் கூறப்படுகின்றார். ஒவ்வொரு இல்லத்தின் பூசை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீ சொர்ண பைரவரின் படம் அல்லது பொற்காசு அல்லது டாலர் போன்றவற்றை வடக்குத் திசை நோக்கி வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். இப்படத்திற்கு நல்ல மணமுள்ள வண்ண மலர்களை மாலையாக அணிவித்து தாம்பூலம், பழம், தேங்காயுடன் மூன்று வேளையும் பூசை செய்யின் நல்ல பலன் கிடைக்கும். ஸ்ரீ சொர்ண பைரவருக்கு அவல் பாயாசம் விருப்பமான நைவேத்தியமாகக் கூறப்படுகிறது.
மிகவும் எளிமையான இந்த நைவேத்தியத்திற்கு மனமிரங்கி தன்னை வழிபடும் அன்பர்களின் இல்லங்களில் செல்வ மழையைப் பொழியச் செய்வார். இந்த சொர்ண பைரவரின் படத்தை டாலரையோ சட்டைப்பை மற்றும் கைப்பை பர்சுகளில் வைத்தால் பணத்தட்டுப்பாடு வராது என்று கூறப்படுகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சொர்ண பைரவர் படத்தினை எத்தகைய அலங்காரங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. கார், மோட்டார் சைக்கிள், வீட்டு வாசற்படி, வரவேற்பறை போன்ற பலரின் நடமாட்டம் உள்ள இடங்களில் வைக்கக்கூடாது. புனிதமான பூசை அறையில் அல்லது பூசை செய்யப்படும் இடத்தில் மட்டுமே வைத்து வணங்க வேண்டும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தப் படத்தில் அணிவிக்கப்படும் பூமாலை அல்லது பூக்களை வாடி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாடிய பூக்களையோ பிளாஸ்டிக் காகிதப் பூக்களையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் அணிவிக்கக் கூடாது.
பிரம்மன் ஆணவத்தை அழித்த பைரவர்

பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைக்கேறி சிவபெருமானையே கேலி செய்தான். இதனையறிந்த சிவன் பிரம்மனின் ஆணவத்தை அடக்கி உலக மக்களுக்காக தன் அங்கமான சர்வசக்தி படைத்த பைரவரை உண்டாக்கினார்.
பிறகு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவ மூர்த்தி பிரம்மனின் ஒருதலையைக் கிள்ளி எடுத்தார். இப்படி பிரம்மனின் ஆணவத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளிலிருந்தும் நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த்தும் மிகப்பெரும் தத்துவமாகும்.
பிரம்மனின் தலையைத் துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவனை பைரவர் வேண்டினார். சிவன் பைரவரை பூலோகத்தில் தோஷம் நீங்க பிட்க்ஷைஎடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூறினார். அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷைபெற்று வருகையில் குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம நீங்கிற்று.
பின்பு அங்குள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டவுடன் விநாயகர் தோன்றி, "உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசு. அது எங்கு சென்று சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோவில் கொண்டிருப்பாயாக'' என அருளினார். பைரவர் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது தற்போதுள்ள சேத்திரபாலபுரம் இடத்தில் விழுந்தது.
அந்த இடத்தில் இருந்த ஸ்வேத விநாயகரை வழிபட்டு அவ்விடத்திலேயே கோவில் கொண்டார். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு சேத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயரே அந்த ஊருக்கு அமைந்து சேத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று. இந்த சேத்திர பாலபுரம் மயிலாடுதுறை தாலுகா, குற்றாலம் அருகிலுள்ளது.
இவ்வாறு கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார். இதைத் தவிர எல்லைக் காவல் தெய்வமாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.
கால பைரவர்:பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். காசி கோவிலில் பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார். எண்ணற்ற மக்கள் கால பைரவரின் புனித ரட்சையை (காசிக்கயிறு) அணிந்து கொண்டு எவ்வித அச்சமும் இல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கவுரவக் குறைவை அடைந்தார். சனி அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள் பாலிக்கிறார்.
அசுரர்களை அழிக்க தோன்றியவர் பைரவர்
சிவ பெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்று சொல்லப்படுகிறது. ஐவரில் மகா பைரவர் பொதுவாக எல்லா ஆலங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக் கோலத்தினராய் நீல மேனியராய் நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் பைரவர் பெருமாள்.
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்ய பூஜா விதி கூறுகிறது. அதேபோல ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம்பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர்.
சனியை சனீஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமைச் சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக் கொண்டவர். இவரைக் காலபைரவர், மார்த்தாண்ட பைரவர், க்ஷேத்ரபாலகர், சத்ரு சம்ஹார பைரவர், வடுக பைரவர், சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.
ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பரைவ யோகினிகள் யார், யார் என்பதைக் காண்போம். அசிதாங்க பைரவர் பிராம்ஹி, குரு பைரவர் மாகேஸ்வரி, சண்டபைரவர் கவுமாரி, குரோதான பைரவர், வைஷ்ணவி, உள் மத்த பைரவர், வாராஹி, கபால பைரவர், இந்திராணி, பீஷண பைரவர், சாமுண்டி, சம்ஹார பைரவர், சண்டிகா தேவி ஆகியோர் ஆவர்.
தாட்சாயிணி தேவி தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை தராது அவமதித்ததால் தச்சனின் மகளான பார்வதிதேவி யாக குண்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தபோது அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத் தாங்கி உலகமெல்லாம் சுற்றி அலைந்த போது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச் செய்தார் என்றும் தேவியின் உடலுறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களாயின என்றும் அவ்வாறு ஏற்பட்ட சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக பைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்
துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம்.
காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்ட வருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.
மாதங்கள் - பைரவர்கள்
சித்திரை - சண்ட பைரவர்
வைகாசி - குரு பைரவர்
ஆனி - உன்மத்த பைரவர்
ஆடி - கபால பைரவர்
ஆவணி - ஸ்வர்ணகர்ஷண பைரவர்
புரட்டாசி - வடுக பைரவர்
ஐப்பசி - க்ஷேத்ர பாலபைரவர்
கார்த்திகை - பீஷண பைரவர்
மார்கழி - அசிதாங்க பைரவர்
தை - குரோதன பைரவர்
மாசி - ஸம்ஹார பைரவர்
பைரவர் வரலாறு
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள் கூறப்படுகிறது. எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.
எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
பைரவரை ஏன் வழிபட வேண்டும்?
துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகி போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள்.
இந்த துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூஜை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூஜை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
நமது ஜாதகத்தில் எந்த கிரகத்தால் தோஷம் உள்ளதோ அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.
பைரவரின் சிறப்பு வடிவங்கள்
பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமாëர்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன.
உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார். ஸ்ரீபைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாயானது பைரவருக்கு பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது.
நகரத்தார் கோவில்களில் காணப்படும் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகக் காட்சியளிக்கிறது.
பைரவர் வாகனம்
1. அசிதாங்க பைரவர் அன்னம்
2. ருரு பைரவர் ரிஷபம்
3. சண்ட பைரவர் மயில்
4. குரோதன பைரவர் கருடன்
5. உன்மத்த பைரவர் குதிரை
6. கபால பைரவர் யானை
7. பீஷண பைரவர் சிம்மம்
8. சம்ஹார பைரவர் நாய்
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.
ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்ப அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.
நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர். அப்படி வழிபடக் காரணம் என்னப பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் "செல்வ வள சக்தி'' குறைகிறது;
அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;
அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்; அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதாப யார் சொன்னது.
இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது அனுபவ உண்மை ஆகும்.
1. வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2. தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.
4. சனியின் தாக்கம்(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.
5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.
7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8. நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.
பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்
1. தலை குனியா வாழ்க்கை.
2. சுப மங்களம் ஊர்ஜிதம்.
3. தீயவினைகள் முற்றிலும் அழிவு.
4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.
5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.
6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.
7. கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.
8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.
9. இறைவனை எளிதாக உணர்தல்.
10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்

No comments:

Post a Comment