Monday, November 2, 2015

கந்த சஷ்டி விரத கால முழுமை நிர்ணயம்

சஷ்டி விரதம் இருந்தால் சத்புத்திர யோகம் உண்டாகும்.கந்த சஷ்டி விரத நிர்ணயம்
    கந்த சஷ்டி விரத கால நிர்ணயம் செய்யப்பட வேண்டியது சாந்திர மாதத்திலா? சௌரமாதத்திலா?
இவ்விரதத்தினை சாந்திர மாதத்தை அடிப்படையாய்க் கொண்டே அனுஷ்டிக்க வேண்டும் என்பது விதி.
    கந்த சஷ்டிக்குரியது எந்தப் பட்சம்?
இவ் விரதத்திற்குரிய பட்சம் சுக்ல பட்சமாகும் (வளர்பிறை).
    கந்த சஷ்டிக்குரிய திதி எது?
இவ் விரதத்திற்குரிய திதி வளர்பிறை பிரதமை தொடங்கி சஷ்டி ஈறாகிய  ஆறு திதிகளுமாம். சப்தமி திதியில் பாரணை செய்து விரதத்தை முடித்தல் வேண்டும்.
கந்த சஷ்டி விரத கால முழுமை நிர்ணயம்
இது சாந்திரமான ஐப்பசி மாதத்து சுக்கில பட்ஷ பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாட்களும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாம்.
கந்த சஷ்டி விரத தொடக்கத்திற்கான நிபந்தனை
மேற்படி விரதத்தினை வெறுமனே ஐப்பசி மாதப் பிரதமையில் தொடங்க இயலாது. ஐப்பசி மாதத்தில் வரும் கிருத்திகா சுத்தப் பிரதமையில் தான் கந்தசஷ்டி விரத ஆரம்பத்தினைக் கொள்ள வேண்டும்.
    மேற்கோள் – கிருத்திகா சுத்தப் பிரதமையில் கந்தசஷ்டி ஆரம்பத்தினைக் கொள்வதே ஆகம சம்மதமாகும்.
கந்த சஷ்டி விரதத்தினை முடிப்பது எப்போது?
மேற்சொன்ன பிரதமையில் தொடங்கி சஷ்டி திதி முடியும் வரை விரதம் அனுஷ்டித்தல் வேண்டும்.
மேற்கோள் 1. ஐப்பசி மாதத்து சுக்கில பட்ஷ பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாட்களும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாம். (ஆறுமுகநாவலர் சைவ வினாவிடை 2)
மேற்கோள் 2. கந்தசஷ்டி விஷயத்தில் கிருத்திகா சுத்தப் பிரதமை தொடங்கி சஷ்டி முடிய விரதானுஷ்டானம் விதிக்கப்பட்டிருக்கிறது(சிவாகம வித்தகர் சிவஸ்ரீ எஸ். சுவாமிநாத ஆச்சாரியார், தர்மபுர ஆதீனம்)
விரதம் முடித்துப் பாறணை செய்வது எப்போது?
சஷ்டி முடிந்து மறுநாள் காலை வரும் சப்தமி திதியில் விரதம் முடித்துப் பாறணை செய்தல்
வேண்டும்.
கந்த சஷ்டி விரதத்தில் பாறணை சொல்லப்பட்டிருக்கிறதா?
கந்தசஷ்டி விரதத்தைப் பொறுத்தவரையில் பாறணையும் அவசியமென்றே கந்தபுராணம் கூறுகிறது.
மேற்கோள் 1. கந்தபுராணம் ஸ்கந்த விரதப்படலத்தில் வரும் 23ஆம் பாடலையும் அதற்கான நம் நாட்டுப் பேரறிஞர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் உரையையும் கீழே தருகிறேன்.
     ஆரண முனிவர் வானோர் அங்(கு) அதன் மற்றை வைகல்
    சீரணி முருகவேட்கு சிறப்பொடு பூசையாற்றி
    பாறணம் விதியில் செய்தார் பயிற்றும் இவ்விரதம் தன்னால்
    தார் அணி அவுணர் கொண்ட தம் பதத் தலைமை பெற்றார்.
(வேதம் உணர்ந்த முனிவர்களும், தேவர்களும் அந்த சஷ்டித் தினத்திற்கு அடுத்த தினமாகிய சப்தமியில் திருவருட் சிறப்பமைந்த முருகப்பிரானுக்கு வெகு சிறப்பாக விசேட பூசை செய்து விதித்ததன் பிரகாரம் பாறணம் செய்தார்கள். அனுட்டிக்கும் இந்த விரத விசேடத்தினாலே மாலையை அணிந்த அசுரர்கள், தம்மிடமிருந்து கவர்ந்துகொண்ட தத்தம் பதத்தின் தலைமையை மீண்டும் பெற்றார்கள்.)
மேற்கோள் 2. நமது நாட்டின் சைவத் தமிழ்க் காவலரான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களாலும்,சிதம்பரம் பாடசாலை அறங்காவலர் பொன்னம்பலபிள்ளை அவர்களாலும் எழுதப்பெற்ற காசி மட வெளியீடான கந்தபுராண உரைநடை நூலில் வரும் மற்றொரு மேற்கோளையும் இங்கு தருகிறேன். கந்த விரதப்படலத்தில் வரும் அப்பகுதி இதோ
“சுப்பிரமணியக்கடவுளுக்குரிய ஒப்பில்லாத விரதம் வேறுமொன்றுளது.அதனையுஞ்சொல்வோம். முசுகுந்தனே கேட்பாய். தேவர்களும் முனிவர்களும் துலா மாசத்துச் சுக்கில பட்சப் பிரதமை முதலாக ஆறு நாளும் காலையில் ஸ்நானம் செய்து சுத்த வஸ்திரம் இரண்டு தரித்து சந்தியா வந்தனம் முடித்து கிரௌஞ்ச மலையையும்   சூரபன்மனையும் சங்கரித்த வேலாயுதராகிய முருகக் கடவுளை தம்ப விம்ப கும்பம் என்னும் மூன்றினும் இரவிலே விதிப்படி பூசை செய்து வெல்லம் சேர்த்து நெய்யினாற் சமைத்த மோதகத்தை நிவேதித்து பிற உபசாரங்களையும் செய்து, வணங்கித் துதித்து அவருடைய புராணத்தைப் படித்து சிறிது ஜலத்தை ஆசமித்து உபவசித்திருந்து சப்தமி திதியில்  முருகக் கடவுளுக்கு விஷேச பூசையியற்றி விதிப்படி பாரணஞ்    செய்து,  பதங்களைப் பெற்றார்கள்.” (பக்கம் 667)
மேற்படி இரண்டு மேற்கோள்களாலும் பாறணையும் விரதத்தின் ஒரு பகுதியே என்பதையும்,
அதனை சப்தமி காலையிலேயே செய்த வேண்டும் என்பதனையும் அறிந்து கொள்கிறோம்.
சூரன்போருக்கும் கந்த சஷ்டி விரதத்திற்குமான தொடர்பு என்ன?
சஷ்டி திதியில் முருகன் சூரனை வதைந்தமையே சஷ்டிக்கும், சூரன் போருக்குமான தொடர்பு.
சூரன் போருக்குப் பின் தான் சஷ்டி விரதம் வந்ததா?
இல்லை. அது தவறான கருத்து. சூரன் அழியவேண்டும் என்பதற்காக தேவர்கள் கந்தசஷ்டி விரதம் பிடித்ததாக கந்தபுராணம் கூறுகிறது. முன் சொன்ன இரண்டு மேற்கோள்களும் இதற்கும் சான்றாம்.
கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்தது எப்போது?
கந்தசஷ்டி விரத ஆரம்பம் பற்றி அபிதான சிந்தாமணி நூலில் பின்வருமாறு
கூறப்பட்டிருக்கிறது.  பிரதமையில் சிவனிடம் பிறந்த நெற்றிக்கண் பொறிகள், துதியையில்
கௌரியின் கற்பத்திலிருந்து திருதியையில் அக்கினியிடம் கொடுக்க அவன் அதைப் பெற்று சதுர்த்தியில் கங்கையிடமிருந்து பஞ்சமியில் கார்த்திகைப் பெண்கள் பாலூட்ட ஆறு முகமும் பன்னிரண்டு கையும் பெற்று வளர்ந்த நாள். இதுவே கந்தசஷ்டி விரதம் ஆரம்பித்த வரலாறு.
கந்த சஷ்டி விரதத்தில் ஆலயங்களில் சூரன்போர் செய்யும் முறை எங்கேனும் விதிக்கப்பட்டிருக்கிறதா?
இல்லை. கந்தபுராணக் கதையை ஒட்டியே மேற்படி கிரியை முறை ஆலயங்களில்
நடாத்தப்படுகிறது.
சஷ்டி திதி இரண்டு நாட்களில் பங்கிடப்பட்டு இருக்கும்போது முதல் நாளில் சூரன்போர் செய்து விரதத்தை முடிப்பது சரியா?
தவறு. விரத நிர்ணயத்தில் சஷ்டி திதி முடியும் வரை விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும்
என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இரண்டு நாட்களில் திதி நிற்குமாயின் இரண்டாம் நாள் திதி
முடியும் வரை விரதம் இருந்து சப்தமி வரும் மூன்றாம் நாளில் பாறணை இயற்றுவதே சரியாகும்.
திதி நிற்கும் இரண்டாம் நாளில் அத் திதி முடிந்த பிறகு சப்தமியில் பாறணை இயற்றல் ஆகாதா?
காலைச் சந்தியில் வழிபாடியற்றி விரதம் முடிப்பதுவே சிறந்தது. எனவே இடை நேரத்தில்
பாறணை இயற்றுவது பொருந்தாது.
சஷ்டித் திதி நிற்கும் இரண்டாம் நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக அத்திதி முடிந்துவிட்டால் அதன் பின் சூரன்போர் செய்வது பொருத்தமில்லை என்பது உண்மையா? இரவும் பகலும் இல்லாத நேரத்திலே தான் சூரனைக் கொள்ள முடியும் என்பது உண்மையா?
முன்பு சொன்னது போல சஷ்டியில் சூரன்போர் நடத்துவது வெறும் சம்பிரதாயமே சூரன் போருக்காக சஷ்டி முடியும் முன் விரதத்தை முடிப்பதும், சஷ்டி நிற்கும் நேரத்திலும், மதியம் முதலிய நேரங்களிலும் பாறணை செய்வதும் பாவம்.
வேண்டுமானால் சஷ்டி நிற்கும் நேரத்திற்குள் சூரன் போரை நடத்திக்கொள்ளலாம். சூரன் போர் நடத்தும் நேரத்தில் சஷ்டி விரதத்தை முடிக்க முடியாது.
அந்திப்பொழுதில் இறக்கும் வரத்தைப் பெற்றிருந்தவன் இரணியன் மட்டுமே.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை
சைவ விரத நிர்ணயம்
சைவ விரதங்கள்
உலகில் உயிர்கள் பிறந்த நோக்கம், இறைவனை அடைவதுவே. அங்ஙனம் உயிர்கள் இறைவனை அடைய, வழிபாடொன்றே வழி. அவ்வழிபாட்டினுள் உயர்ந்தோரால் விதிக்கப்பட்ட விரதங்களை மேற்கொள்ளுதல் சிறந்ததாய்க் கருதப்படுகிறது. சைவ விரதங்கள் பலவாய் விரிகின்றன. அவ் விரதங்களுக்காய் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பல நூல்களிலும் பொதிந்து கிடக்கின்றன. அங்ஙனம் விரத நியதிகளை விதித்த நூல்களை முதலில் நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம்.
சைவ நூல் வரிசை
வேத, ஆகம, புராண, இதிகாசம் என்பதே சைவ நூல் வரிசையாம். இந்நூல் வரிசையில் இறைவனால் அருளிச் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என நான்காம்.
அங்ஙனமே இறைவனால் அருளிச்செய்யப்பட்ட ஆகமங்கள் காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம்,அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புயம்,ஆக்கினேயம்,வீரம்,ரௌரம்,மகுடம்,விமலம், சந்திரஞாலம், முகவிம்பம்,புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம். இவை தவிர உப ஆகமங்கள பலவும் உள.
புராணங்கள் சைவம், பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம், காரூடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரமம், பதுமம், ஆக்நேயம், பிரம்மகைவர்த்தம் என பதினெட்டாம். இவை தவிர, உப புராணங்கள் பதினெட்டும் உள.
இதிகாசங்கள் இராமாயணம், மகாபாரதம், சிவரகசியம் என மூன்றாம். பெரும்பாலும் இவற்றுள் ஆகம, புராண, இதிகாசங்களே விரதங்களை நிர்ணயிக்க பயன்படுகின்றன.
விரதங்களும் ஆகமங்களும்
நம் சைவ சமயத்திற்கு வேதங்கள் பொது நூல் எனவும், ஆகமங்கள் சிறப்பு நூல்கள் எனவும் உரைக்கப்படுகின்றன. மூல ஆகமங்கள் 28. சிறப்பு நூலாகிய ஆகமம் சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் என நான்காக வகுக்கப்படும். ஆகமங்களின் சரியா, கிரியாபாதங்களில், வழிபாடு சார்ந்த அனைத்துக் கிரியைகளுக்கான வரையறைகளும் உரைக்கப்படுகின்றன. யோக, ஞானபாதங்களில் அறிவு மார்க்கமாய் இறைவனை அடைவதற்கு உரைக்கப்பட்ட தத்துவங்கள் விரித்துரைக்கப்படுகின்றன. ஆகமங்களின் நான்கு பாதங்களிலும் அமையும் விடயங்கள் பின்வருமாறு:
சரியா பாதத்தில் அமைபவை – பிராயச்தித்த விதி, பவித்திர விதி, சிவலிங்க லட்சணம்,செபமாலை,யோகப்பட்டம் முதலியவற்றின் இலட்சணம்.
கிரியா பாதத்தில் அமைபவை – மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை
செப ஓமங்கள், சமய, விசேட, நிர்வாண ஆச்சாரியர் அபிசேகங்கள்
யோக பாதத்தில் அமைபவை  – 36 தத்துவங்கள், தத்துவேசுரர், இயம, நியம, ஆசன சமாதி முறை
ஞானா பாதத்தில் அமைபவை – பதி, பசு, பாச இலட்சணங்கள்
(?)ஆகமங்களின் கிரியாபாதத்திலேயே விரதங்கள் பல நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அங்ஙனம் ஆகமங்கள் பொதுப்பட விதித்த விரத நியதிகளை பின் வந்த யோகக் காட்சிமிக்க ஞானியர் பலர் மேலும் விரித்துரைத்துப் பல நூல்களைச் செய்துள்ளனர். அந்நூல்களைக் கொண்டும் அதன் பின்வந்த ஆற்றல் மிக்க சிவாச்சாரியர் பலர் அந்நூல்களுக்குச் செய்த வியாக்கியானங்களைக் கொண்டுமே பல சைவ விரதங்கள் இன்று நிர்ணயம் செய்யப்படுகின்றன.
விரதங்களும் புராண இதிகாசங்களும்
ஆகமங்களில் விதிக்கப்படாத சில விரதங்கள் புராண, இதிகாச செய்திகள் கொண்டும் மேற்கொள்ளப்படுகின்றன. கந்தசஷ்டி விரதம் புராணங்களால் விதிக்கப்பட்ட விரதமாய்க் கருதப்படுகிறது.
விரத கால நிர்ணயம்
மாரி காலத்தில் விதைக்கப்படும் விதை விருத்தி அடைந்து வளர்வதும், கோடை காலத்தில் விதைக்கப்படும் விதை விருத்தி அற்றுப் போவதும் கால விஷேடத்தினாலேயாம். அதுபோலவே குறித்த விரதங்களை குறித்த காலங்களில் அனுஷ்டித்தால் அதற்காம் பயன் அதிகம் என்பதால், விரதங்களை எப்போது கடைப்பிடிக்க வேண்டும் எனும் கால நிர்ணயம் ஞானியரால் வரையறை செய்யப்பட்டுள்ளது.
அவ் விரத கால வரையறைகள் இருவகைப்பட்டனவாம். விரதங்களுள் சில திதிகளை அடிப்படையாய்க் கொண்டும், வேறு சில நட்சத்திரங்களை அடிப்படையாய்க் கொண்டும் வரையறுக்கப்படுகின்றன. இத்திதிகளும் நட்சத்திரங்களும் அமையும் மாதங்கள் இரு வகைப்பட்டனவாம். அவை சாந்திர மாதம், சௌரமாதம் என உரைக்கப்படும்.
திதி என்றால் என்ன?
குறித்த மாதத்தில் சூரியனோடு சமமாக நின்ற சந்திரன் சூரியனைப் பிரிந்து கிழக்கு நோக்கிப் பூமியைச் சுற்றி வந்து திரும்பவும் சூரியனைச் சந்திக்கிறது. இவ் இடைப்பட்ட காலத்தை பன்னிரண்டு பாகைக்கு ஒரு அலகு எனக் கொண்டு முப்பதாகப் பிரித்து, வளர்பிறை பிரதமை முதல் தேய்பிறை அமாவாசை ஈறாக முப்பது திதிகள் வகுக்கப்படுகின்றது.
இத் திதிகள் வளர்பிறை பிரதமை முதல் அமாவாசை ஈறாக பதினைந்தும், தேய்பிறை பிரதமை முதல் பௌர்ணமி ஈறாக பதினைந்துமாக முப்பதாகின்றன. அமாவாசை முதல் பௌர்ணமி ஈறாக வரும் திதிகளை சுக்கில பட்ச திதி அல்லது பூர்வ பட்ச திதி என உரைப்பர். பௌர்ணமி முதல் அமாவாசை ஈறாக வரும் திதிகளை கிருஷ்ணபட்ச திதி அல்லது அபரபட்ச திதி என்று உரைப்பர். இப் பூர்வ பக்கத்தினையே உலகியலில் நாம் வளர்பிறை என்கிறோம். அபரபக்கத்தினையே தேய்பிறை என்கிறோம். பூர்வம் – தொடக்கம். அபரம் – முடிவு. சுக்கிலம் – வெண்மை. கிருஷ்ணம் – கருமை. வளர்பிறைத்திதிகள், முப்பது திதிகளினதும் தொடக்கமாய் அமைவதால் பூர்வபக்கத் திதிகள் என அழைக்கப்படுகின்றன. தேய்பிறைத்திதிகள், முடிவாய் அமைவதால் அபரபக்கத்திதிகள் என உரைக்கப்படுகின்றன. அது போலவே தேய்பிறைக்காலம் இருட்காலம் ஆதலால், அத்திதிகள் கிருஷ்ணபட்சத் திதிகள் என உரைக்கப்படுகின்றன. வளர்பிறைத் திதிகள் ஒளிக்காலம் ஆதலால் சுக்கில பட்சத்திதிகள் என உரைக்கப்படுகின்றன.
இத் திதிகளுள் பௌர்ணமி அல்லது அமாவாசை முடிந்து வரும் முதல் திதி பிரதமை எனப்படுகிறது. இரண்டாவது திதி துதியை எனப்படுகிறது. மூன்றாவது திதி திருதியை எனப்படுகிறது. நான்காவது திதி சதுர்த்தி எனப்படுகிறது. ஐந்தாவது திதி பஞ்சமி எனப்படுகிறது. ஆறாவது திதி சஷ்டி எனப்படுகிறது. ஏழாவது திதி சப்தமி எனப்படுகிறது. எட்டாவது திதி அட்டமி எனப்படுகிறது. ஒன்பதாவது திதி நவமி எனப்படுகிறது. பத்தாவது திதி தசமி எனப்படுகிறது. பதினொராவது திதி ஏகாதசி எனப்படுகிறது. பன்னிரண்டாவது திதி துவாதசி எனப்படுகிறது. பதின் மூன்றாவது திதி திரியோதசி எனப்படுகிறது. பதினான்காவது திதி சதுர்த்தசி எனப்படுகிறது. சதுர்த்தசி திதிக்கு அடுத்து வருவது பூர்வபக்கமாயின் பெர்ணமித் திதி அபரபக்கமாயின் அமாவாசை திதியாம்.
நம் விரதங்களில் சில இத்திதிகளைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.
நட்சத்திரங்கள் என்றால் என்ன?
சந்திரன் மேஷ ராசியின் தொடக்கத்திலிருந்து பதின்மூன்று பாகை இருபது கலை வீதம் விலகிச் செல்வதனால் ஏற்படும் காலப்பகுதி ஒரு நட்சத்திரமாய்க் கணிக்கப்படுகிறது. பன்னிரண்டு ராசி காலப்பகுதியையும் சந்திரனின் சுற்றைக் கொண்டு மேல் வருமாறு பிரிக்க அப் பிரிவுகள் இருபத்தியேழாகும். இவ் இருபத்தியேழு காலப்பகுதிகளும் இருபத்தியேழு நட்சத்திரங்களாய் உரைக்கப்படுகின்றன. இந் நட்சத்திரங்கள் முறையே அச்சுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திரட்டாதி, திருகோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி என்பனவாம்.
நம் விரதங்களில் சில இந்நட்சத்திரங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.
சாந்திர மாதம்  என்றால் என்ன?
இது சந்திரனின் சுற்றை வைத்து மாதங்களைக் கணிக்கும் முறை. பூர்வ பக்கப் பிரதமை தொடக்கம் (வளர்பிறை முதலாம் நாள்) அமாவாசை முடியவுள்ள காலப்பகுதி இங்கு ஒரு மாதமாம். இங்ஙனம் வரும் பன்னிரண்டு காலப் பிரிவுகள் சாந்திர மாதங்கள் எனப்படும்.
சைத்திரம்(சித்திரை), வைசாகம்(வைகாசி), ஜ்யோஷ்டம்(ஆனி), ஆஷாடம்(ஆடி), சிராவனம்(ஆவணி), பாத்திரபதம்(புரட்டாதி), ஆஸ்வீஜம்(ஐப்பசி), கிருத்திகா(கார்த்திகை), மார்க்கஷீசம்(மார்கழி), புஷ்யம்(தை), மாகம்(மாசி), பார்க்குணம்(பங்குனி) என்பனவே அவையாம்.
மூன்று சௌர வருடங்களில் (சூரியனை அடிப்படையாகக் கொண்ட வருஷங்களில்) வரும் முப்பத்தியாறு மாதங்களில் சாந்திர மாதங்கள் முப்பத்தியேழு நிகழும். சூரியமாதத்துடன் சந்திர மாதம் இணங்கிச் செல்லும் பொருட்டு ஒரு சூரிய மாதத்தில் இரண்டு அமாவாசை நிகழ இடையில் வரும் சாந்திர மாதம் அதிக மாதம் அல்லது மலமாதம் என உரைக்கப்படும். இவ் அதிக மாதம் விரத அனுஷ்டானங்களிற்கு உரியதாகாது.
விரதங்களில் சில இச் சாந்திர மாதத்தை அடிப்படையாய்க் கொண்டு கணிக்கப்படுகின்றன.
சௌர மாதம்  என்றால் என்ன?
இது சூரியனின் சுற்றை வைத்து மாதங்களைக் கணிக்கும் முறை. மேடம் முதல் மீனம் ஈறாகிய பன்னிரண்டு ராசிகளிலும் தனித்தனி முறையே  சூரியன் சஞ்சரிக்கின்ற சித்திரை, வைகாசி, ஆனி,  ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி,  பங்குனி ஈறான பன்னிரண்டு காலப்பகுதி சௌர மாதங்கள் எனப்படும்.
விரதங்களில் சில இச் சௌர மாதத்தை அடிப்படையாய்க் கொண்டு கணிக்கப்படுகின்றன.
வளர்பிறைத்திதிகள், முப்பது திதிகளினதும் தொடக்கமாய் அமைவதால் பூர்வபக்கத் திதிகள் என அழைக்கப்படுகின்றன. தேய்பிறைத்திதிகள், முடிவாய் அமைவதால் அபரபக்கத்திதிகள் என உரைக்கப்படுகின்றன. அது போலவே தேய்பிறைக்காலம் இருட்காலம் ஆதலால், அத்திதிகள் கிருஷ்ணபட்சத் திதிகள் என உரைக்கப்படுகின்றன. வளர்பிறைத் திதிகள் ஒளிக்காலம் ஆதலால் சுக்கில பட்சத்திதிகள் என உரைக்கப்படுகின்றன.
இத் திதிகளுள் பௌர்ணமி அல்லது அமாவாசை முடிந்து வரும் முதல் திதி பிரதமை எனப்படுகிறது. இரண்டாவது திதி துதியை எனப்படுகிறது. மூன்றாவது திதி திருதியை எனப்படுகிறது. நான்காவது திதி சதுர்த்தி எனப்படுகிறது. ஐந்தாவது திதி பஞ்சமி எனப்படுகிறது. ஆறாவது திதி சஷ்டி எனப்படுகிறது. ஏழாவது திதி சப்தமி எனப்படுகிறது. எட்டாவது திதி அட்டமி எனப்படுகிறது. ஒன்பதாவது திதி நவமி எனப்படுகிறது. பத்தாவது திதி தசமி எனப்படுகிறது. பதினொராவது திதி ஏகாதசி எனப்படுகிறது. பன்னிரண்டாவது திதி துவாதசி எனப்படுகிறது. பதின் மூன்றாவது திதி திரியோதசி எனப்படுகிறது. பதினான்காவது திதி சதுர்த்தசி எனப்படுகிறது. சதுர்த்தசி திதிக்கு அடுத்து வருவது பூர்வபக்கமாயின் பெர்ணமித் திதி அபரபக்கமாயின் அமாவாசை திதியாம்.
நம் விரதங்களில் சில இத்திதிகளைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.

6 நாள் நடந்த போரின் முடிவில் முருகனை ஏமாற்றும் விதத்தில் மாமரமாக மாறி நிற்கிறான் சூரன். ... சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ், ...
முருகன், குமரன், கந்தன், சரவணன், ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமணியன், வடிவேலன், சுவாமிநாதன், செந்தில்நாதன் என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுபவர் தமிழ் கடவுள் முருகப் பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். கொடுமைகள் புரிந்து வந்த சூரபத்மனை அவர் சம்ஹாரம் செய்த நாள் கந்த சஷ்டி என்று அழைக்கப்படுகிறது. முருகனின் அவதார நோக்கமே சூரனை வதைப்பதுதான். இதை கொண்டாடும் வகையில் அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை தொடங்கி சஷ்டி திதி வரையிலான 5 நாட்கள் விரதம் இருப்பது சஷ்டி விரதம் எனப்படுகிறது.
5 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி தினத்தில் மட்டுமாவது விரதம் இருந்து வழிபடலாம். ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்‘ என்பார்கள். இந்த சொற்றொடர் கந்த சஷ்டி விரதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. சஷ்டி விரதம் இருந்தால் சத்புத்திர யோகம் உண்டாகும். கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கும் குழந்தைகள் பிறப்பார்கள் என்பது இதன் பொருள். சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து உருவானவன் கந்தப்பெருமான். நெற்றிக் கண்ணில் இருந்து புறப்பட்ட தீப்பொறி சரவணப் பொய்கையில் 6 பகுதியாக விழுந்தது. அவை ஒவ்வொன்றும் ஒரு குழந்தையாக உருப்பெற்றது. 6 கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை பார்வதி தேவி இணைத்து ஆறுமுகனாக மாற்றினாள் என்கிறது புராணம்.
தேவர்களை அடக்கி பஞ்ச பூதங்களின் செயல்பாட்டையும் தன்வசப்படுத்தியிருந்தனர் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய அசுரர்கள். அவர்களை அழிப்பதற்காக தோன்றியவர் முருகன். முருகப் பெருமான் சூரபத்மனை அழிக்க 6 நாள் போர் நடக்கிறது. சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரை முருகப் பெருமான் முதலில் வதம் செய்கிறார். 6 நாள் நடந்த போரின் முடிவில் முருகனை ஏமாற்றும் விதத்தில் மாமரமாக மாறி நிற்கிறான் சூரன். அன்னை பார்வதி தேவி கொடுத்த வேலால் மரத்தை பிளக்கிறார் முருகன். பிளவு பட்ட மாமரமானது சேவலாகவும், மயிலாகவும் மாறுகிறது. சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் ஏற்றுக்கொள்கிறார் முருகப் பெருமான்.
அசுரர்களுக்கு மோட்சம் அளிக்கும் முருகப்பெருமான் தேவலோகத்தை தேவேந்திரனிடம் ஒப்படைக்கிறார். சூரனை சம்ஹாரம் செய்த கந்தனுக்கு தன் மகள் தெய்வானையை மணமுடித்து தருகிறார் தேவேந்திரன். தேவசேனா, தேவயானை, தேவயானி, ஜெயந்தி ஆகிய பெயர்கள் தெய்வானையையே குறிக்கிறது. இதை கொண்டாடும் வகையில் சூரசம்ஹாரத்துக்கு அடுத்த நாள் முருகன் கோயில்களில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. சிங்கமுகன், தாரகாசுரன், சூரபத்மன் ஆகியவை நமக்குள் இருக்கும் ஆணவம், வன்மம், மாயை என்ற மூன்று தீய குணங்களின் அடையாளங்கள். அவற்றை நாம் வெற்றி கொண்டால் உயர்நிலையை அடையலாம் என்பது சூரசம்ஹாரம் காட்டும் நெறியாகும்.
முருகனுக்கு கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன. கிழமைகளில் செவ்வாய், நட்சத்திரத்தில் கிருத்திகை, திதியில் சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை. வெறுமனே தண்ணீர் மட்டும் குடிப்பது, மவுன விரதம் இருப்பது என விரதத்தில் பல வகைகள் இருக்கின்றன. அவரவர் குடும்ப வழக்கப்படி இதை அனுசரிப்பார்கள். அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோயில்கள் அனைத்திலும் கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகள் நடக்கும்.
சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்யலாம். விரதம் இருந்து, உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி மனதார பிரார்த்தித்து வழிபட்டால் நமக்கு எதிராக வரும் அனைத்து தடைகள், தடங்கல்கள், பிரச்னைகளையும் முருகப் பெருமான் தகர்த்தெறிந்து வளமான வாழ்வு அருள்வார் என்பது நம்பிக்கை. முருகனை கந்த சஷ்டியன்று வழிபட்டு சகல நலன்களும் பெறுவோம்

No comments:

Post a Comment