நாம         மகிமை
ஜகத்குரு சிருங்கேரி ஸ்ரீசாரதாபீட ஸ்ரீமத் சங்கராசார்ய சுவாமிகள் திருவாக்கு
ஜகத்குரு சிருங்கேரி ஸ்ரீசாரதாபீட ஸ்ரீமத் சங்கராசார்ய சுவாமிகள் திருவாக்கு
“மனிதன் எதைத் தியானத்தினால் கிருதயுகத்தில் அடைவானோ, திரேதாயுகத்தில்         எந்தெந்த யாகங்களைச் செய்து எதை அடைவானோ, மேலும் பூஜைகள் செய்து துவாபரயுகத்தில்         எதை அடைவானோ அவை எல்லாவற்றையும் கலியுகத்தில் இறைவனின் நாமாக்களைப் போற்றிப்         பணிந்தே அடைந்து விடுகிறான்.” என்று விஷ்ணுபுராணத்தில் கூறப்பட்டிருக்கிறது.          இதிலிருந்து கடவுளின் நாமங்களை உச்சரிப்பது பெரும் பயன் அளிக்கும் என்று         தெரிகிறது. இராமனைவிட அவனுடைய நாமம் உயர்ந்தது என்று இராமதாசர் சொல்லியிருக்கிறார்.
நாமஸ்மரணம் முக்தியை அளிக்கும். ஆனால் இந்த விஷயத்திலும்         சில கருத்துகளை நாம் கவனிக்க வேண்டும். கடவுளின் நாமத்தைச் சொல்வது மிகவும்         சிலாக்கியமானது என்று சொன்னதால், தியானம் பூஜை முதலியவை செய்யத் தேவயில்லை         என்று அர்த்தம் இல்லை. குறிக்கோள் ஒன்றுதான். ஆகவே தியானம், பூஜை முதலியவற்றுக்கும்         அதே அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நம் முன்னோர் காலம் செல்லச் செல்ல ஆன்மிக வழியில் தீவிரமாகப்         பங்கு பெற மனிதர்களால் இயலாமல் போகலாம், சக்தி குறைந்து கொண்டே வரும் எனக்கருதி,          சற்றே சுலபமான ஆன்மிகப் பயிற்சிகளை நமக்குச் சொல்லி வந்தார்கள். இவ்வாறு         சொல்லியிருக்கிறார்கள் என்பதனால், தியானம், பூஜை, நியமங்கள் என்று செய்து         வருபவர்களும், ‘நாம பஜனம் எளிதாக இருப்பதனால் நானும், பகவானைப் போற்றிக்         கொண்டே இருக்கிறேன். தியானம் பண்ண வேண்டாமே’ என்று சொல்லக்கூடும். இதற்கு         ஒரு கதையும் சொல்வதுண்டு.
மகான் ஒருவர் இருந்தார். தம் சிஷ்யன் ஒருவனுக்கு எளிய வழியைக்         கூற ஒரு யோசனை சொன்னார். புடலங்காய் ஒன்றை வாங்கி அவனைத் தினமும் தானம் பண்ணச்         சொன்னார். அவ்வாறு செய்தால் அவன் நன்மை அடையலாம் என்றும் கூறினார்.
அந்த மனிதனும் மிகவும் சிரத்தையோடு தவறாமல் அவ்வாறே செய்து         வந்தான். அவன் காலமான பிறகு ஓர் இராஜாவாக மீண்டும் பிறந்தான். மறு பிறவியிலும்         அவனுக்குப் பூர்வ ஜன்மாவில் தான் புடலங்காயை அன்றாடம் தானம் பண்ணிக்கொண்டிருந்த         செயல் ஞாபகத்துக்கு வந்தது. அதை மனத்தில் வைத்துக்கொண்டு அந்த அரசன் மீண்டும்         புடலங்காயை விடாமல் தானம் செய்து வந்தான். ஆனால் என்ன ஆச்சரியம்!
அவன் அடுத்த பிறவியில் ஒரு பிச்சைக்காரனாகப் பிறந்தான்.          ஒரே திகைப்பாக இருந்தது அவனுக்கு. ஒன்றும் அவனுக்குப் புரியவில்லை. அன்றாடம்         தவறாமல் தானம் செய்தும் இப்படி ஒரு கீழ்ப்பிறவி கிடைத்து விட்டதே ஏன்? ஒரு         மகானிடம் சென்று இது பற்றிக் கேட்டான்.
அவர் அவனிடம், “நீ ஒன்றும் இல்லாதவனாக வாழ்ந்து வந்த சமயம்         உன்னை அவர் புடலங்காயைத் தானம் பண்ணச் சொன்னார். அதன் பலன் நீ இராஜாவாகப்         பிறந்தாய். அரசனாகப் பிறந்தும், உன் அந்தஸ்து மிக உயர்ந்துங்கூட அதே தானத்தைச்         செய்தாய். நீ ஏழையாயிருந்தபோது நீ அந்தக் காயைத் தானம் செய்ததே உனக்கு நன்மை         அளிக்கப் போதுமானதாய் இருந்தது. நீ அரசனானதும் உனக்குச் செல்வம் பல மடங்கு         பெருகியது. அதற்கேற்றாற்போல் மதிப்பு மிகுந்த பொருளை நீ தானம் செய்திருக்க         வேண்டும். சாதாரணப் புடலங்காயையே தானம் செய்ததன் மூலம் பெரிய நன்மை எவ்வாறு         கிடைக்க முடியும்?” என்றார். அதிலிருந்து நம்மால் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவு         தூரம் உயரந்த தானம் செய்ய வேண்டும் என்பது புலனாகும்.
அதுபோலவே தியானம், பூஜை என்று செய்து வந்தவன் நிச்சயமாகத்         தியானத்தையே பயிற்சி செய்ய வேண்டும். அத்துடன் நாமபாராயணமும் செய்யலாம்.          மிகுந்த பலன் உண்டாகும். இந்தச் சமயத்தில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க         வேண்டும். “இவ்வாறு இறைவனைப் பூஜை, தியானம், நாமபாராயணம் என்று செய்து போற்றிக்         கொண்டிருக்கிறேன். ஆகையால் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட ‘ஸந்த்யாவந்தனம்’          போன்ற நித்திய கர்மாக்களை நான் ஏன் செய்யவேண்டும்?” என்று ஒருவனும் கேட்கக்         கூடாது.
ஒரு முதலாளிக்கு இரண்டு உதவியாளர்கள் இருந்து வந்தனர்.          ஒருவன் எப்போதும் அந்த முதலாளியைப் பாராட்டிக்கொண்டே இருப்பான். ஆனால் தனக்கு         உண்டான வேலைகளைச் சரிவரச் செய்யவே மாட்டான். மற்றொருவன் மிகவும் சிரத்தையுடன்         தன் எஜமானன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதிலேயே கவனமாக இருப்பான். கடமையில்         கண்ணாக இருப்பான். முகஸ்துதி செய்பவனைக் காட்டிலும் இரண்டாவது உதவியாளனைத்தான்         எஜமானனுக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல் சாஸ்திரங்களில் விதித்துள்ள கட்டளைகளை         விட்டுவிட்டு இறைவனைப் போற்றிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அது நமக்கெல்லாம்         எஜமானனாக இருக்கும் இறைவனுக்கு விருப்பமாகாது என்பதை நாம் கருத்தில் கொண்டு         செயலாற்ற வேண்டும்.
மேலும் இறைவனுடைய நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருந்து,          சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கடமைகளை மேற்கொள்ளாவிட்டால், அது பலன் அளிக்கவே         அளிக்காது. அது மிக மிக முக்கியம். இந்த விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இறைவனின் நாமத்தைச் சொல்வதால் ஏற்படும் பலனைப் பத்து விதமான         அபராதச் செயல்கள் குறைகின்றன. அவை:
1. நல்லவர்களைக் குற்றம் சொல்வது. 
2. துஷ்டர்களிடம் நாமாவின் மகிமையை எடுத்துக் கூறுவது.
3. சிவனும் விஷ்ணுவும் வேறுவேறு என்று நினைப்பது.
4. வேதத்தில் நம்பிக்கையில்லாமல் இருப்பது.
5. சாஸ்திரத்தில் நம்பிக்கையில்லாமல் இருப்பது.
6. குருவின் சொற்களில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது.
7. இறைவனின் பெயர்கள் உண்மையில் சக்தியற்றனவாயினும், போற்றப்பட்டிருக்கின்றன என்கிற பிரமையுடன் இருப்பது.
8. நாம மகிமையால் ஏற்படும் பலன் இருக்கிறதென்ற தைரியத்தால் விலக்கப்பட்ட செயல்களைச் செய்வது.
9. விகித கர்மாக்களைச் செய்யாமல் இருப்பது.
10. மற்ற தர்மங்களுடன் நாமாவைச் சமமாக எண்ணுவது.
2. துஷ்டர்களிடம் நாமாவின் மகிமையை எடுத்துக் கூறுவது.
3. சிவனும் விஷ்ணுவும் வேறுவேறு என்று நினைப்பது.
4. வேதத்தில் நம்பிக்கையில்லாமல் இருப்பது.
5. சாஸ்திரத்தில் நம்பிக்கையில்லாமல் இருப்பது.
6. குருவின் சொற்களில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது.
7. இறைவனின் பெயர்கள் உண்மையில் சக்தியற்றனவாயினும், போற்றப்பட்டிருக்கின்றன என்கிற பிரமையுடன் இருப்பது.
8. நாம மகிமையால் ஏற்படும் பலன் இருக்கிறதென்ற தைரியத்தால் விலக்கப்பட்ட செயல்களைச் செய்வது.
9. விகித கர்மாக்களைச் செய்யாமல் இருப்பது.
10. மற்ற தர்மங்களுடன் நாமாவைச் சமமாக எண்ணுவது.
இவை பத்தும் அபராதங்களாகும். இப்படி ஒரு சுலோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
ஆகவே நற்கதியை அடைய விரும்பும் ஒருவன், இத்தகைய அபராதங்களைத்         தவிர்த்து, எப்போதும் இறைவனுடைய நாமத்தையே ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும்.
பூஜை, தியானம் முதலியவற்றைச் செய்ய முடிந்தவன் அவற்றை விடாமல்         செய்ய வேண்டும். கலியுகத்தில் மனிதர்களுக்கு இத்தகைய பூஜைகள் செய்வதற்கு         அவகாசமும் மனமும் இல்லாமல் போகலாம் என்பதை எண்ணியே, நம் பெரியவர்கள் ஒரு         மார்க்கமாக நாம பாராயணத்தை விதித்திருக்கின்றனர்.
நாமபாராயணம் சிறந்த பலன் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.          ஆனால் நாம பாராயணம் செய்கிறோமே என்ற தைரியத்தில் மேற்கூறிய பத்துத் தவறுகளையும்         செய்துவிடக்கூடாது. அப்படிக் கவனமாக இருந்தால் தான் நாம பாராயணத்தின் முழுப்         பலனையும் அடைய முடியும். ஆனால் நாம பாராயணத்தைவிடச் சிறந்த பயனை, தியானம்,          பூஜை முதலியவை அளிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அவரவர்கள் சக்திக்கு         ஏற்ப இறைவனைப் பூஜித்து நற்பயன் பெற வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க         வேண்டும்.
No comments:
Post a Comment