காளி தத்துவம்
சுவாமி கமலாத்மானந்தர்
சுவாமி கமலாத்மானந்தர்
கல்கத்தா அருகில் தட்சிணேஸ்வரத்தில் காளி கோவில் இருக்கிறது. இங்கு காளிக்கு ‘பவதாரிணி’ என்று பெயர்.
‘பவதாரிணி’ என்றால், ‘ஜீவாத்மாக்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுவித்து, முக்தி என்னும் கரை சேர்ப்பவள்.’ என்று பொருள்.
இந்த பவதாரிணி காளிதேவியை வழிபட்டவர் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணர்.
காளிதேவி கருமை நிறம் கொண்டவள்.
காளிதேவி கருமை நிறம் கொண்டவள்.
நாம் தூரத்திலிருந்து பார்த்தால், கடலின் நிறம் நீலமாகத் தென்படுகிறது. அருகில் சென்று கடல் நீரை எடுத்துப் பார்த்தால், அந்தக் கடல் நீருக்கு என்று தனியே ஒரு நிறமும் இல்லை.
அதுபோல் அஞ்ஞான நிலையில் இருப்பவர்களுக்கு, காளி கருமை நிறம் கொண்டவளாகத் தென்படுகிறாள். ஞானிகளுக்கோ அவள் எல்லையற்ற தெய்விக ஒளி வடிவினள்.
காளி பார்ப்பதற்கு பயங்கர வடிவம் கொண்டவள். அஞ்ஞானிகளுக்கு பயங்கர வடிவம் உள்ளவளாகத் தென்படும் காளிதேவி, ஞானிகளுக்கு ஆனந்த சொரூபிணியாகக் காட்சி தருகிறாள்.
காளிக்கு ‘திகம்பரி’ என்று ஒரு பெயர். இதற்குத் ‘திசைகளையே ஆடையாகக் கொண்டிருப்பவள்’ என்று பொருள்.
திசைகள் அனைத்தையுமே ஆடையாகக் கொண்ட அவளுக்கு, எந்த ஆடை பொருத்தமாக இருக்கும்? எந்த ஆடையை, எவ்வளவு பெரிய ஆடையை அவள் அணிந்து கொள்ள முடியும்? பிரபஞ்சமே அவளாக இருக்கும்போது, அவளை எந்த உடை கொண்டு போர்த்த முடியும்? எனவேதான் அவள் உடை எதுவும் இல்லாமல் இருக்கிறாள்.
நம் இந்துமதத்தில் நான்கு கைகள் உடையவர்களாக தேவர்கள்-தேவியரின் வடிவம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இது அவர்கள் மனிதர்களைக் காட்டிலும் அதிக ஆற்றல் உடையவர்கள் என்பதை உணர்த்துகிறது.
காளி தன் இடுப்பில் கைகளை ஒட்டியாணமாக அணிந்திருக்கிறாள்.
கைகளைக் கொண்டு நாம் செயல் புரிகிறோம். உலகில் உள்ள அனைவரின் கைகளின் மூலமாகவும் காளியே செயல்படுகிறாள். எனவே உலகில் செயல் அனைத்தும் காளிதான் நடத்திக் கொண்டிருக்கிறாள் என்பதை, அவள் இடுப்பில் அணிந்திருக்கும் கைகளாலான ஒட்டியாணம் குறிப்பிடுகிறது.
கைகளைக் கொண்டு நாம் செயல் புரிகிறோம். உலகில் உள்ள அனைவரின் கைகளின் மூலமாகவும் காளியே செயல்படுகிறாள். எனவே உலகில் செயல் அனைத்தும் காளிதான் நடத்திக் கொண்டிருக்கிறாள் என்பதை, அவள் இடுப்பில் அணிந்திருக்கும் கைகளாலான ஒட்டியாணம் குறிப்பிடுகிறது.
காளிக்கு ‘முண்டமாலினி’ என்று ஒரு பெயர். இதற்கு ‘மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவள்’ என்று பொருள். காளியின் கழுத்தில், குழந்தைப் பருவத்திலிருந்து வெவ்வேறு வயதுடையவர்களின் மண்டையோடுகள் மாலையாக உள்ளன.
இது குழந்தை பிறந்ததிலிருந்து எந்த வயதிலும் மரணம் நேரிடும்; வாழ்க்கை நிலையற்றது; எனவே அரிதாகக் கிடைத்த மனிதப்பிறவியைப் பயன்படுத்தி மனிதன், ஆண்டவனுக்கும் ஆண்டவனின் அடியார்களுக்கும் மனிதகுலத்திற்கும் பயன்படும் வகையில் அற வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
காளியின் ஒரு கை வரதஹஸ்தம்-வரம் தரும் நிலையில் இருக்கிறது. பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்வதில் அன்னை காளிக்கு இணை அவளேதான்.
அன்னையின் இன்னொரு கை அபயஹஸ்தம். அது பக்தர்களின் பயத்தையும் துன்பங்களையும் நீக்கிப் பாதுகாப்பு அளிக்கிறது.
காளி தன் ஒரு கையில் வாள் ஏந்தி இருக்கிறாள். அது தீமை எங்கே இருந்தாலும், முடிவில் அதை காளி வெட்டிச்சாய்த்து விடுவாள்; அவளுடைய தண்டனையிலிருந்து தீமைகள்-தீயவர்கள் தப்பிவிட முடியாது என்பதை உணர்த்துகிறது.
காளி இன்னொரு கையில் வெட்டிய ஒரு தலையைப் பிடித்திருக்கிறாள். இது தீயவர்கள் காளிதேவியால் தண்டிக்கப்படுவது உறுதி என்பதை உணர்த்துகிறது.
உலகிற்கு ஒளி தரும் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்றையும் காளி தன் மூன்று கண்களாகக் கொண்டிருக்கிறாள்.
காளியின் கணவன் சிவபெருமான். அவர் சடைமுடி உடையவர், காளியும் விரிந்த கரிய கூந்தல் உடையவள்.
காளியின் விரிந்த கரிய கூந்தல், அவளது எல்லை காண இயலாத வியாபகத் தன்மையையும் ஆற்றல்களையும் உணர்த்துகிறது.
“சக்திக்கும் சிவனுக்கும் உள்ள வேறுபாடு, பெயர் அளவில்தான் இருக்கிறதே தவிர உண்மையில் இல்லை. நெருப்பும் அதன் உஷ்ணமும் போல, பாலும் அதன் வெண்மையும் போல, சுயம் பிரகாசமுள்ள மணியும் அதன் ஒளியும் போல, சக்தியும் சிவமும் ஒன்றேயாகும். ஒன்று இல்லாமல் மற்றொன்றை நினைக்க முடியாது. அவை இரண்டையும் வேறுபடுத்தவும் முடியாது” என்று தட்சிணேஸ்வரத்திலிருந்து மாமுனிவராய் விளங்கிய பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணர் கூறியுள்ளார்.
சிலர் காளிதேவிக்கு ஆடு பலியிடுகிறார்கள். வாமாசாரத்தில் பலியிடும் வழக்கம் இருக்கிறது. ‘பலி’ என்பது நம்மிடம் உள்ள உட்பகைவர்களாகிய காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யங்களை-ஜபத்திலும் ஹோமத்திலும் தியாகம் செய்வதேயாகும்.
அவை பின்வருமாறு: 1.வெள்ளாடு-காமம், 2.எருமை-குரோதம் (கோபம்), 3.பூனை-லோபம் (கருமித்தனம்), 4.செம்மறியாடு-மோகம் (பெண்ணாசை), 5.நரன்-மதம் (ஆணவம்), 6.ஒட்டகம்-மாத்சர்யம் (பொறாமை).
இவ்வாறு காமம், கோபம் போன்றவற்றை நீக்கிக் கொள்ளாமல் அடையாளச் சொற்களாகக் குறிப்பிடப்பட்ட மிருகங்களையே பலியிடுவது, ஜகன்மாதாவாகிய காளிதேவிக்கு ஒவ்வாத செயலாகும்.
சிவபெருமானின் மார்பின் மீது, காளிதேவி தன் கால்களை ஊன்றி நிற்பது போன்ற படங்கள் இருக்கின்றன. இது சிவன் ‘சிவனே’ என்று சவம் போல் இருப்பான். சக்தி அவன் மீது நடனம் புரிவது உலக இயல்பைக் காட்டுகிறது.
ஒரு விளக்கில், விளக்கின் அடிப்பாகமும் எண்ணெயும் சும்மா இருக்கும் சிவன்; எரியும் சுடர் சக்தி. இமயம் சும்மா இருக்கும் சிவன்; அதன் மீது பாய்ந்தோடும் கங்கை சக்தி. உலகெங்கும் இப்படித்தான் சிவனும் சக்தியும் பிரகாசிக்கின்றன. சக்தியின் இயக்கத்தால்தான் நாம் சிவனை அறிந்து கொள்ள முடியும். இதுதான் காலசொரூபமான ‘காலீ சக்தி’ அல்லது காளியின் தத்துவம்.
படுத்திருக்கும் சிவன் செயலற்ற நிர்க்குண பிரம்மத்தைக் குறிப்பிடுகிறது. சிவன் மீது நிற்கும் காளி செயல் உள்ள சகுணப் பிரம்மத்தைக் குறிப்பிடுகிறது. மேலே அலைகள் உள்ள கடல் சக்தி. அந்தக் கடலைத் தாங்கி நிற்கும் கடல் அடியிலுள்ள நிலப்பகுதி சிவன்.
சிவனும் சக்தியும் ஒன்றுதான் என்றாலும், அசையாமல் படுத்திருக்கும் பாம்பின் நிலை சிவனுடையது; அதே பாம்பு ஓடும் நிலையில் இருப்பது சக்தியுடையது.
No comments:
Post a Comment