குடமுழுக்கு கண்டவர் கோடி நன்மை பெறுவர்
பி. ஹரிணிப்பிரியா
பி. ஹரிணிப்பிரியா
ஒரு சிறிய கிராமத்தில் வேங்கடவன் என்பவன் வசித்து வந்தான். அவன் மனைவியும் பிள்ளைகள் இருவரும் வறுமையில் துன்பப்பட்டனர். அவரது மனைவியின் சொற்படி பக்கத்து ஊரில் இருக்கும் சோதிடரிடம் ஜாதகங்களைக் காட்டி நல்ல நிலை எப்போது வரும் எனக் கேட்கச் சென்றான்.
ஜோதிடர் வேங்கடவனின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு மாலைநேரம் பார்க்கக்கூடாது மறுநாள் காலை வரும்படி கூறினார். ஏழை நிலையில் உள்ளவன் மயங்கிய நிலையில் திரும்பிச் சென்றான்.
மழையும் மின்னலும் இடியும் வந்தது. மழைக்காக அங்கிருந்த பாழடைந்த கோவிலில் தங்கினான். தலைக்கு மேலே இடிந்த கற்களின் இடையே நல்லபாம்பு தொங்கியதைப் பார்த்துப் பயந்து மண்டபத்தை விட்டு வெளியில் ஓடி வந்தான். அப்போது மண்டபம் இடிந்து விழுந்தது.
மின்னல் ஒளியில் அம்மண்டபத்தில் இருந்த சிவலிங்கம் தெரிந்தது. தூரத்தில் இருந்தே வழிபட்டான். மனமுருக வேண்டினான்.
‘என்னிடம் பணமிருந்தால் இதைச் சீர்படுத்தி கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம் கட்டியும் மடைப்பள்ளி, அலுவலகம் மற்றும் கோவிலுக்குள் சுவாமிகள் அபிஷேகத்திற்கு கிணறும், வெளியில், பக்தர்களுக்கு நீராழிமண்டபமும் வாகனங்கள் ஏற்படுத்தி அவற்றைப் பராமரிக்க மண்டபங்களும் கட்டலாமே! பக்தர்கள் வந்து தங்கி வழிபட மக்கள் மண்டபமும் கட்டி சேவை செய்வேன். ஆறுகால பூஜை நடக்க வேதமறிந்தோரைப் பணி செய்ய நியமிப்பேன்’ என்றெல்லாம் மனத்தில் தானாக கோவில் கட்டி குடமுழுக்கு செய்து கொண்டே ஊருக்குச் சென்றான்.
மறுநாள் காலையில் ஜாதகங்களோடு ஜோதிடரைக் காணச் சென்றான். ஜோதிடர் ஆச்சரியப்பட்டார். வேங்கடவனின் ஜாதகப்படி நேற்று இரவு இறந்திருக்க வேண்டும். எப்படி உயிரோடு வந்தான், என்று வியந்து பலநூல்களை ஆராய்ந்தார்.
வேங்கடவனிடம் நேற்றிரவு என்ன நடந்தது என்று கேட்டார். அவன் மண்டபத்தின் நிலையும் தான் மனத்துள் கோவில் கட்டி குடமுழுக்கு விழா நடத்தியதையும் கூறினார்.
கோவில்கட்டி குடமுழுக்கு செய்த புண்ணியம் உயிரைக் காத்ததை உணர்ந்தார். தெய்வாம்சம் நிறைந்த வேங்கடவன் நீண்டநாள் செல்வத்தோடு வாழ்வான் என்று வாழ்த்தி அனுப்பினார்.
பலருடைய உதவியால் வேங்கடவன் கோவில் கட்டி முடித்தான். ஊரார் புகழ்ந்தனர். செல்வம் சேர்ந்து பெரும் பக்திமானாக வாழ்ந்தார். வளமான வாழ்வில் வாழ்ந்தான்.
குடமுழுக்கு கோடி புண்ணியம். தெய்வ பக்தி திருவருளைச் சேர்க்கும். வாழ்க வையகம்
No comments:
Post a Comment