Monday, April 27, 2015

கயிலை என்றால் சிவமே சிவம் என்றால் கயிலையே

கயிலை என்றால் சிவமே சிவம் என்றால் கயிலையே
சாரதாசுப்ரமணியன்
கயிலை என்றால் நம் எல்லார் கண்முன் காட்சிக்கு வருவது இமயமலையின் பனிமூட்டத்துடன் காணும் கயிலைமலைதான். இயற்கை எழில் சூழ வானமே கூரையாக உறைபனியில் அமர்ந்திருக்கும் சுயம்பு மூர்த்தியான சிவன் எம்பெருமான் கயிலைநாதன். ஆனால் நம் தமிழ்நாட்டில் நெல்லையில் உள்ள நவகயிலை ஆலயங்களைப் பார்த்துவிட்டுக் கடைசியாக பெரிய கயிலையான கயிலைநாதனை தரிசிக்கலாமா!
நெல்லை என்றதும் நினைவுக்கு வருவது நெல்லயப்பரும், காந்திமதி அம்மனும்தான். எப்படி நவதிருப்பதிகள் உள்ளனவோ, அப்படி நவகயிலாயங்களும் அவ்விடம் உண்டு. இரண்டு நாள் நெல்லையில் இருந்தால் போதும். ஆட்டோ, டாக்ஸி, அல்லது அரசு பேருந்துகள் மூலம் இவ்வாலயங்களைத் தரிசித்துவிட்டு வரலாம். ஒன்பது கயிலாயங்களும் ஒன்பது கிரகங்களின் தொடர்புடையன ஆக நவக்ரஹ சிறப்பும் இந்த ஆலயங்களுக்கு உண்டு. நெல்லை ஜங்ஷனில் இறங்கியவுடனே நமக்கு தங்க வசதி செய்து கொண்டு, நெல்லயப்பரையும், காந்திமதியையும் வணங்கி பிரதக்ஷணம் செய்து விட்டு, கயிலாயக் கோவில்களுக்குப் போவோம்.
முதலில் இந்த மாவட்டத்தில் எப்படி நவ கயிலாயம் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். அகத்தியரின் முதல் சீடரான உரோமச முனிவர் தன் குருவின் உதவியால் சிவபெருமானைப் ப்ரத்யக்ஷமாகக் காணவேண்டும் என நினைத்தார். இதனை ஞானத்ருஷ்டியால் அறிந்த அகத்தியர் அதற்கான வழிமுறைகளையும், பல உபதேசங்களையும் தம் சீடருக்குக் கூறினார். அதன்படி உரோமச முனி எப்படி எங்கிருந்து தொடங்குவது என்று எண்ணுகையில் குருவான அகத்தியர் தாமிரவருணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விட்டார். அவை ஒவ்வொன்றும் ஒதுங்கி நிற்கும் இடங்களில் சிவலிங்கம் ஸ்வயம்புவாகவே எழுந்தருளின. அந்த ஒன்பது இடங்களே நாம் காணும் நவ கயிலாயங்கள்.
முதல் கயிலாயம் பாபநாசம்
இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. முக்கூடல் வழியாகவும், சேரன்மாதேவி வழியாகவும் செல்லலாம். ஊரின் பெயரிலேயே செய்யும் பாபங்கள் அனைத்தும் நாசம் செய்து விடும் தெய்வம் உறையும் ஊர் என மனத்தில் படுகிறது. கோவிலின் அருகிலேயே தாமிரவருணி சலசலத்து ஓடுகிறது. படித்துறையில், குளித்தாலே அப்படி ஒரு புத்துணர்ச்சி. குளித்து உலர்ந்த உடை உடுத்தி ஜபம் முடித்து கோவிலினுள் பிரவேசித்தால், பெரிய மூன்று பிராகாரங்கள், பெரிய ஏழு நிலைகள் கொண்ட கோபுரம், கொடிமரம், நந்தியை வணங்கிஉள்ளே சென்றால் உள்ளே ஸ்வயம்புமூர்த்தி பாபநாசப்பெருமாள் ருத்ராக்ஷ மேனியுடன் காட்சி கொடுக்கிறார். குனிந்து வணங்கி தீபாராதனை தரிசித்து திருநீறு பெற்றுப் பக்தியுடன் நெற்றியில் இட்டு நிமிர்ந்தால், நல்ல கலையம்சத்துடன் கூடிய கோவில் கட்டுமானம், பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஸ்வாமிக்கு பாபநாசர், வயிராசலிங்கம், பழமுறைநாயகர், முக்காளலிங்கர், பரஞ்ஜோதி லிங்கர், எனப் பல நாமங்கள் உடையவராக அருள் பாலிக்கிறார். உட்சுற்று மண்டபம், வசந்தமண்டபம், கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். மற்றும் நவகிரஹங்கள், கோவில் நந்தவனம் ஆகிய உள்ளன. மலைகளும் பாபநாசரை வணங்கியுள்ளன. அவை பொதிகைமலை, கையமலை தருத்தாரம் என்னும் மலைகள்.
பொதிகை மலையில் சந்தன விருட்சத்தின் அடியில் தமிழ் முனிவரான அகத்தியர் சிவபெருமானின் திருமணக் கோலம் காணும் பேறு எப்போது கிட்டும் என நினைக்கையில், சிவபெருமான் ரிஷப வாகனந்தில் எழுந்தருளி, பொதிகை மலைச்சாரலில் பாபநாசத்தில் காட்சி கொடுத்தாராம். இந்த ஸ்தலம் நவகிரகங்களில் சூரியன் ஸ்தலமாக வணங்கப்படுகிறது. இந்தக் கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை. மாலை 5.00 மணி முதல் 7.00 மணிவரை
இரண்டாவது கயிலாயம் சேரன்மாதேவி
திருநெல்வேலியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. தாமிரவருணி ஆற்றின் தென்கரையில் உள்ளது. சிறிய கோபுரமானாலும் பெரிய வாயில்கள் கொண்டதாக உள்ளது. ஸ்வாமியின் திருநாமம் அம்மநாதஸ்வாமி; அம்பிகை ஆவுடைநாயகி. எதிரே நந்தி மற்றும் வாயிலின் இருபக்கமும் துவாரபாலகர்கள். தென்புறம் நடராஜர், அருகில் சிவகாமி அம்மை, மற்றும் காரைக்கால் அம்மையார்; மேற்கு நோக்கி சூரியனும், சந்திரனும் மற்றும் காசிவிஸ்வநாதரும், விசாலாக்ஷியும் அருள் பாலிக்கிறார்கள். வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானையுடன் கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இக்கோவிலின் ஸ்தலவிருட்சம் ஆலமரமாகும். இக்கோவிலை இரண்டு பேர் சேர்ந்து கட்டியுள்ளார்கள் என்பதற்கு சான்று உள்ளது. இங்கு தென்புறத்தூணில் இரண்டு பெண்கள் உரலின் இரு உலக்கைகொண்டு நெல் குத்துவதுபோல், புடைப்பது போல் சிற்பம் ஒன்று உள்ளது. அதாவது இரண்டு சகோதரிகள் சேர்ந்து நெல்குத்தும் தொழிலைச் செய்து வந்தனர்.
அதற்கான கூலியைச் சேமித்து வைத்துக் கோவில் கட்டுமானப் பணிகளுக்குச் செலவு செய்தனர். இருந்தாலும் மூலஸ்தானம் கட்டுவதற்கான பணம் போதவில்லை. சகோதரிகள் இருவரும் அம்மநாத ஸ்வாமியிடம் அதற்காகப் பிரார்த்தனை செய்தனர். அதற்குச் செவிசாய்த்த சிவபெருமான் ஒருநாள் மாலை வேளை ஓர் அந்தணர் உருவெடுத்து அந்தச் சகோதரிகள் இல்லத்திற்குச் சென்றனர். சகோதரிகள் இருவரும் அந்தணரை உபசரித்து அவருக்கு மணை போட்டு இலை போட்டு போஜனம் செய்வித்தனர். அதனால் மகிழ்ந்த எம்பெருமான் வயிறார உண்டு அவர்களை வாழ்த்தி விட்டுச் சென்று விட்டார். அன்றிலிருந்து அவ்விடத்தில் செல்வம் கொழித்தது. அதனால் மகிழ்ந்த சகோதரிகள் கோவிலின் மூலஸ்தானத்தைக் கட்ட முற்பட்டனர். பிறகு கட்டியும் முடித்தனர்.
ஊரின் பெயர்க் காரணம்: இக்கோவிலின் கட்டடப்பணியை ஏற்று இராஜராஜ சோழன், இராஜேந்திரசோழன், ஆகியோர் கட்டியதாக கல்வெட்டுகள் சான்று உள்ளது. சேரன் மகாதேவி என்பது சேர அரசன் ஒருவனின் மகளின் பெயர் என சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும், சில கல்வெட்டுகளில் ஸ்வாமியின் திருநாமம் கயிலாயமுடையார் எனவும் இருக்கிறது. கோவிலுக்கும் யாகதீர்த்தம் என்னும் இடத்திற்கும் இடையே ரணவிமோசனப் பாறை ஒன்றுள்ளது. இங்கு ஒரு மண்டலம் நீராடினால் தீராத ரணங்கள் தீரும். மேலும் தீய எண்ணங்களுடன் மற்றும் சுத்தபத்தம் இல்லாமல் நீராடினால் எதிர் மறை விளவுகள் நேரும் என்று நம்புகின்றனர். மார்கழி மாதம் மஹாவிதிபாகம் என்ற திருவிழா நடக்கும். அன்று அனைத்து நதிகளும் மூன்று நாள்கள் கூடும் என்பது புராண வரலாறு. நித்யபூஜை நடக்கிறது. பிரதோஷம், ஆருத்ரா, சிவராத்திரி சமயங்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது. தரிசித்து வரலாம். கோவில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணிவரை மாலை 5.00 மணி முதல் 7.00 மணிவரை.
மூன்றாவது கயிலாயம் கோடகநல்லூர்.
இது நவகிரகங்களில் செவ்வாய்க்கு உகந்த ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்தலம் திருநெல்வேலியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலேயே உள்ளது. சேரன்மாதேவி, முக்கூடல்போகும் சாலையில் நடுகநல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கே ஒரு கி.மீ. தொலைவிலுள்ளது. இதன் பழையபெயர் கார்கோடக க்ஷேத்திரம் ஆகும். அதன் வரலாறு: பல யுகங்களுக்கு முன் முனிவர் ஒருவர் வனத்தில் தவம்புரிந்து கொண்டு இருக்கையில், அவருடைய புதல்வன் அவர் செய்ய வேண்டிய வேள்விக்கு சமித்துகளைச் சேகரிக்க வனத்தின் மற்றொரு பகுதிக்குப் போனான். அப்போது அவ்வழியாக வேட்டையாட குதிரையில் வந்த பரீக்ஷித்து மஹாராஜனின் மகன், தவத்தில் இருந்த முனிவரைக் கூப்பிட, ஆழ்ந்த தவத்தில் இருந்த முனிவர் செவிசாய்க்கவில்லை. அதனால் கோபமடைந்த இளவரசன் இறந்த பாம்பு ஒன்றை முனிவர் கழுத்தில் போட்டுவிட்டுச் சென்று விட்டான். சமித்துகளைச் சேமித்த முனிகுமாரன் அவ்விடம் வந்தவுடன், தம் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு இருப்பதைக் கண்டு, கோபமடைந்தான். உடனே அதனை அகற்றிவிட்டு, இதனை யார் செய்தது? என ஞான திருஷ்டியால் அறிந்தான். உடனே “எந்தப் பாம்பை என் தந்தை மீது போட்டாயோ, அந்தப் பாம்பாலேயே உன் தந்தை அழிவான்” என சாபமிட்டான்.
சில நாள்கள் கழித்து பரீக்ஷித்து மஹாராஜனின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோஸ்யர்கள் அவருக்கு கால ஸர்ப்பதோஷம் உள்ளதாகவும், ஸர்பத்தினால் தீங்கு ஏற்படவாய்ப்பு அதிகம் உண்டு எனவும் கூறி, பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தினர். அதனால் பதற்றமடைந்த பரீக்ஷித்து ஏழு கடல்கள் ஏழு மலைகள் கடந்து எட்டாவது கடலில் நடுவில் ஒரு மண்டபம் கட்டி, அதன்மேல் ஒரு கட்டில் போட்டு மிகவும் பாதுகாப்பாக இருந்தார். “தன்னை மிதிச்சாரைக் கடித்தாலும், விதிச்சாரைக் கடித்தே தீரும்” என்ற சொல்லுக்கிணங்க, கார்க்கோடகன் என்ற அரவம் புழுவடிவம் பூண்டு, ஒரு பழத்தினுள் நுழைந்து, பழம் மூலமாக பரீக்ஷித்து இருக்கும் இடத்திற்குச் சென்றது. பழத்தினைப் புசிக்க கையில் எடுத்த அரசன் புழு என நினைத்து உதறிவிட அது உடனே பாம்பாக மாறி அவரைத் தீண்டியது.
நள சரித்திரத்திலும் நளமகராஜனைத் தீண்டியது கார்க்கோடகன் என்ற விஷ நாகம்தான். இவ்விருவரையும் தீண்டிய பாவத்திற்கான பரிகாரத்திற்கு, விஷ்ணுவை நினைத்து த்யானம் செய்தது. அந்த ஊர்தான் இந்தக் கோடகநல்லூர். இங்குதான் விஷ்ணு அதற்கு முக்தி அளித்தார். இவ்வூரின் பழையபெயர் கார்க்கோடகநல்லூர் ஆகும். இவ்வூரில் இன்றும் கரு, நீல வர்ணங்களில் நாகங்கள் தென்படுவதாகவும், ஆனால் யாரையும் தீண்டியதில்லை எனவும் கூறுகின்றனர். இவ்வூரை ஒட்டித் தாமிரவருணி நதி ஓடுகிறது. இங்கு ஸ்வாமியின் பெயர் கயிலாயநாதர். அம்மன் சிவகாகி அம்மை. சந்நிதி முன் நந்தி உள்ளது. கோவில் அளவில் சிறியது. கோபுரம், கொடிமரம் இல்லை. ஸ்வாமி சந்நிதியின் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் அருள் பாலிக்கிறார்கள். பூஜை ஒரு நேரமே நடைபெறுகிறது. திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் மட்டும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் ரிக், யஜுர், சாம, அதர்வண வேத வேதியர்கள் வாழ்ந்த இடமாதலால் இவ்வூருக்கு சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்ததாகத் தெரிகிறது. கோவில் திறந்திருக்கும் நேரம் காலை ஒன்பது மணி முதல் பத்து மணிவரையும், மாலை ஐந்து மணிமுதல் ஏழு மணிவரையும்.
நான்காவது கயிலாயம், குன்றத்தூர்.
இது புகழ்பெற்ற இராகுஸ்தலம் இந்த ஊர் நெல்லை மாவட்டத்திலேயே உள்ளது. திருவேங்கநாதபுரம் செல்லும் வழியில் உள்ள ஊர். செங்காணி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூரின் மண்ணும் அதற்கு ஏற்றாற்போல் செம்மண்ணாக இருப்பதும் காரணமாகும். தற்போது செங்காணி என்ற சொல் மருவி சங்காணி என்றே அழைக்கப்படுகிறது. ஊரில் ஒரு சிறு குன்று காணப்படுகிறது. அதனாலும் குன்னத்தூர் என்று பெயர் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அங்கு உறையும் ஈசன் திருநாமம் கயிலாச நாதர் என்ற கோதாபரமேஸ்வரர். தாயார் சிவகாமி அம்மை. கோவில் சிறிய கோவிலாகக் காணப்படுகிறது. கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிறிய முன் மண்டபம், மற்றும் அர்த்தமண்டபம், நடுமண்டபம் என மூன்று அமைப்புகளாக இருக்கிறது. முன் மண்டபத்தில் சிவகாமி அம்மை தெற்குப் பார்த்தவாறு அருள்பாலிக்கிறாள். கருவறையின் மேல் விமானம் உள்ளது. அங்கு இரண்டு வானரங்கள் ஒன்றோடு ஒன்று விளையாடுவதுபோல் உள்ள சிற்பம் நம் கண்ணைக் கவருகிறது. ஸ்வாமி சந்நிதிக்கு வலப்புறம் விநாயகரும் மற்றும் இடப்புறம் சிவலிங்கமும் உள்ளது. அதற்குமுன் நந்தியும் பிரதிஷ்டையாகியுள்ளது. கருவறையில் உள்ள கோதாபரமேஸ்வரர் லிங்கத்தின் நடுப்பகுதியில் ஸர்பம் படமெடுத்திருப்பது போல் சிறிய புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. பிராகாரத்தில் முருகன் பன்னிரண்டு கரங்களுடன் அருள் பாலிக்கிறார். இச்சிலாரூபம் ஒரே கல்லினால் ஆனது. அதனைப் பிரதிஷ்டை செய்தபின்தான் மண்டபமே அமைத்ததாகக் கூறுகிறார்கள். அக்கோவில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கல்வெட்டுகள் விவரிக்கின்றன.
இக்கோவிலுக்கான பராமரிப்புக்கு மன்னர்கள் ஏகபோகமான நிலபுலன்களைக் கொடுத்துள்ளனர். இங்கு பழங்கால நிலம் அளக்கும் அளவுகோல் ஒன்று உள்ளது. இன்றும் நிலம் காரணமாக தகராறு வந்தால்இந்தக் கோல்கொண்டு அளந்து தீர்ப்பு கூறுவது வழக்கமாக உள்ளது.
இங்குள்ள நந்தியின் சிலாரூபம் மிக அழகாக வடிவமைக்கப்பெற்றுள்ளது. ஊர் சிறிய ஊர்தான். அதிக மக்கள் நடமாட்டம் இல்லை. ஏதோ புயலடித்தபின் உள்ள அமைதி போல் ஊர் காணப்படுகிறது. உண்மைக் கதை ஒன்றைக் கூறுகின்றனர் அவ்வூர் மக்கள். அது: அரசர் ஆட்சிக் காலத்தில் நடந்த கதை. அவ்வூரில் அரசன் தங்கியிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அது வருடத்தில் ஒரு பூவும், ஒரு காயும் ஒரு பழமும் மட்டுமே கொடுக்கும். அதை அரசனைத் தவிர வேறு யாரும் புசிக்கமாட்டார்கள். அதற்கு கடும்காவல் இருந்தது. காவலை மீறினால் சிரச்சேதம் அல்லது கழுவேற்றம் கண்டிப்பாக உண்டு என்று சட்டம் இருந்தது. ஒரு நாள் ஒரு பெண் ஆற்றில் குளித்துவிட்டு குடத்தில் நீர் நிரப்பிச் செல்லுகையில் காற்றடித்து மரத்தின் கிளையில் இருந்த பழம், அப்பெண்ணின் குடத்தினுள் விழ அதனை அறியாத அப்பெண் தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். பழத்தைக் காணாத அரசன், காவலாளிகளைக் கொண்டு வீடுவீடாக சோதனை போட்டான். அதற்குள் விட்டிற்குச் சென்ற பெண் குடத்தில் விழுந்து இருக்கும் கனியினைக் கண்டு திடுக்கிட்டு அதனை எடுத்துக் கொண்டு அரனிடம் கொடுக்கப் போனாள். கொண்டு போய்க் கொடுத்தாள். அவளின் நேர்மையை மதியாத அரசனோ “அரசன் அன்று கொல்வான்” என்ற பழமொழிக்கு இணங்க அவளைக் கழுவில் ஏற்றி விட்டான். அப்பெண் தம் உயிர் பிரியும் தருவாயில் “இவ்வூர்ப் பெண்கள், பசுக்கள் தவிர மற்றவை அழியட்டும்” எனச் சாபமிட்டு இறந்து விட்டாள். அதனால் இவ்வூர் வளங்கள் குன்றிக் காணப்படுகிறது என்று இந்த வரலாறு தெரிவிக்கிறது. ஊரில் உள்ள ஒரே கோவில் இந்தக் கோவில்தான். திருவாதிரை, பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இராகு பரிகாரஸ்தலம். கோவில் திறந்து இருக்கும் நேரம்: காலை ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரை மாலை ஐந்து மணிமுதல் ஆறு மணி வரை.
ஐந்தாவது கயிலாயம் முறப்பநாடு.
திருநெல்வேலியிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து எல்லாப் பேருந்துகளும் இந்த ஊரில் நிற்கின்றன. தவிர, பஸ் நிறுத்தத்திலிருந்து நடக்கும் தூரம் தான். கோவிலைச் சுற்றிலும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் பசும் வயல் வெளிகள், தென்னை மரச்சோலைகள் என மிகக் குளிர்ச்சியான சூழல். இங்கு தாமிர வருணி நதிக்கு ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் காசியில் உள்ள கங்கைபோல் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்கிறது. அதனால் இதற்கு இங்கு தக்ஷிணகங்கை என்று பெயர். இது நவகிரகங்களில் குருஸ்தலமாக விளங்கிவருகிறது.
ஊரின் பெயர்க் காரணம்: தாமிரவருணி நதியின் தீரத்தில் பருக்கைக் கற்கள் நிரம்பியுள்ளன. அப்படி உள்ள நிலத்திற்கு முறம்பு உடைய நிலம் என்பர். அதனால் முறப்பநாடு என்ற பெயர் ஏற்பட்டது என்பது ஒரு காரணம். மற்றொரு காரணம்: அசுரனின் கொடுமை தாங்காமல் முனிவர்கள் ஈசனிடம் முறையிட்டு வேண்டியதால் முறப்பநாடு என்று பெயர் வந்ததாகவும் செவி வழிச் செய்தியாகத் தெரிகிறது.
இங்குள்ள நதி தீர்த்தத்திற்கு மற்ற பெயர்கள்: காசி கட்டம், சபரி தீர்த்தம். ஆடி, தை அமாவாசை அன்றும், மாதாந்தரக் கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் நீராடுதல் விசேஷம்.
ஸ்வாமியின் திருநாமம் கயிலாயநாதர். அம்பிகை சிவகாமி அம்மை. கோவிலின் தென்கிழக்கில் சூரிய பகவானும், வடக்குப் பார்த்து அதிகார நந்தியும் அருள் பாலிக்கின்றனர். வெளிப் பிராகாரத்தில் ஜுரதேவர், அஷ்டலக்ஷ்மிகளின் சிலாரூபங்களைத் தரிசிக்கலாம். மற்றும் 63 நாயன்மார்கள் அருள் பாலிக்கின்றனர். இங்கு விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது கண் கொள்ளாக் காட்சி. மற்றும் சனிபகவான், கால பைரவர், சண்டேஸ்வரர் ஆகியோருக்குத் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. கருவறையிலேயே விமானம் உள்ளது. நாங்கள் சென்றபோது ஆலயம் கட்டுமானப் பணியில் இருந்ததால் பாலாலயம் எழுப்பி பூஜை நடந்து கொண்டிருந்தது. இக்கோவிலைக் கட்டியவர் வல்லாள மஹாராஜா என சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. இக்கயிலைநாதன் அருளால் மன்னன் ஒருவரின் மகள் குதிரை முகத்துடன் பிறந்தவள் இங்கு வந்து தவமியற்றி நதியில் புனித நீராடி நிமிர்ந்தவுடன் குதிரைமுகம் மறைந்து மானிடமுகம் அமைந்து விமோசன கிடைத்தது. உடனே மன்னன் இக்கோவிலைப் பெரிது படுத்திக் கட்டினான் எனக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. குருஸ்தலம் என்றும் இங்கு குருபரிகாரம் செய்து நலம் பெறலாம் என்றும் தெரிவிக்கின்றனர். கோவில் திறந்து இருக்கும் நேரம் காலை ஏழு மணியிலிருந்து 9 மணிவரை. மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரை.
ஆறாவது கயிலாயம் ஸ்ரீவைகுண்டம்:
வைகுண்டம் என்றவுடன் நினைவுக்கு வருவது பெருமாள். ஆம்! இது நவதிருப்பதியிலும் இந்த ஸ்தலம் கணக்கிடப்படுகிறது. சிவஸ்தலத்திலும் ஆறாவது ஸ்தலமாக உள்ளது. நவகிரகங்களில் சனிபகவான் ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.
ஸ்வாமி கயிலாயநாதர். அம்பாள் சிவகாமி அம்மை. இந்த ஸ்தலத்தில்தான் குமரகுருபரர் பிறந்தார். வாய்பேசாது ஊமையாக இருந்த குழந்தை தன் திருவாய் திறந்து பேசிய ஊர் ஸ்ரீவைகுண்டம்தான். இதன் பழையபெயர் கயிலாசபுரி ஆகும்.
ஸ்வாமி ஸ்வயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். உள் பிராகாரத்தில் அறுபத்து மூவர், தக்ஷிணாமூர்த்தி. தென் மேற்கில் கன்னிமூலகணபதி, மேற்கில் பஞ்சலிங்க மூர்த்திகள், வடமேற்கில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலிக்கிறார். வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர், அதனை அடுத்து சிவகாமி அம்மை பள்ளியறை. கிழக்குப்பார்த்து சூரியன், சந்திரன், அதிகாரநந்தி உள்ளன. கோவிலின் உட்புறத்தில் நவ கயிலாயங்கள் பற்றி மூலிகைகள் வண்ணங்களால் தூரிகை கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் வண்ணச் சித்திரங்களாகக் காட்சி யளிக்கின்றன. இக்கோவிலில் உள்ள பூதநாதர் இங்கு காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார். இவ்வூர் திருவிழா சமயத்தில் இந்தப் பூதநாதர் ஸாஸ்தாவிற்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. மற்றும் அக்னிபுத்திரர், வீரபத்திரர் என இரு காவல் தெய்வங்கள் உள்ளன. அந்தக் காலங்களில் கோவிலைப் பூட்டிச் சாவியினை அக்னிபுத்திரரின் காலடியில் வைத்துவிட்டுப் போய் விடுவார்களாம். இக்கோவிலின் கொடி மரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட செப்புத்தகடு கொண்டு அமைக்கப்பட்டதாகும். தினம் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. கோவில் திறந்திருக்கும் நேரம் காலை ஆறு மணிமுதல் பத்து மணிவரை. மாலை நான்கு மணிமுதல் எட்டு மணிவரை.
ஏழாவது கயிலாயம் தென் திருப்பேரை
இக்கோவில் நவ கிரகங்களில் புதன் ஸ்தலமாகும். திருநெல்வேலியிலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது. சுவாமியின் திருநாமம் கயிலைநாதர். அம்பாள் சிவகாமி அம்மன் மற்றும் அழகிய பொன்னம்மை. கோவில் அளவில் சிறியது. முதலில் நமக்கு அருள்பாலிப்பவர் அம்மன் அழகிய பொன்னம்மைதான். பிறகு அர்த்த மண்டபம், பள்ளி அறை, ஆகியவை உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில் திருவிழாவிற்கான வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோஷ்டங்களில் தக்ஷிணாமூர்த்தி, விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். கர்ப்பக்ரஹத்தில் கயிலைநாதர் சிறு லிங்க வடிவில் காட்சி தருகிறார். வாயிலில் காவலாக துவாரபாலகர்கள். ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனி விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஊரின் பெயர் தென்னாட்டுத் திருப்பேரை என்று இருந்தது மருவி தென் திருப்பேரை என்று ஆகிவிட்டதாகக் கூறுகிறார்கள். அம்பாள் சந்நிதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று கட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் உண்மை வரலாறு: ஒரு சமயம் ஆங்கிலேயத் துரை ஒருவன் இப்பகுதியினை ஆய்வு செய்ய வருகையில் ஓய்வாக சாவடியில் அமர்ந்தபோது அவன் கண் எதிரே பசுமையான தென்னை மரங்களைக் கண்டான். உடனே அம்மரத்தில் இருந்து இளநீர் பறித்து வர ஆட்களை அனுப்பினான். அவர்களும் அங்கிருந்த ஆட்களிடம் துரைக்கு இளநீர் பறித்துத் தருமாறு கேட்டார்கள். ஆனால் ஆட்களோ “அது ஈசனின் அபிஷேகத்திற்காக உள்ள காய்கள். இதிலிருந்து இளநீர் தரமுடியாது” என மறுத்தனர். இதனை ஆட்கள் துரைக்குத் தெரிவித்தார்கள். உடனே கோபமுற்ற துரை அவ்விடம் வந்து மிகுந்த சினத்துடன் “என்ன உங்கள் சுவாமியின் இளநீருக்கு கொம்பா முளைத்திருக்கு?” என வினவ, உடனே ஒரு காய் கீழே விழுந்து மூன்று கொம்புகள் முளைத்துவிட்டன. அதைக் கண்டு திடுக்கிட்ட துரை உடனே சாமியிடம் சென்று மன்னித்தருளும்படி வேண்டினான். அந்தக் காய் இன்னும் அங்கு உள்ளதை நாம் பார்க்கலாம். நித்திய பூஜைகள் நடக்கின்றன. கோவில் திறந்திருக்கும் நேரம் காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை. மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரை ஆகும்.
எட்டாவது கயிலாயம் இராஜபதி
இத்தலம் நவகிரகங்களில் கேது ஸ்தலமாக கருதப்படுகிறது. இங்கு கோவில் இல்லை இயற்கையின் சீற்றத்தினால் கோவில் புதையுண்டு போய்விட்டது. ஒரே ஒரு தூண் மட்டும் உள்ளது. அதையே கும்பிட்டு விட்டுச் செல்கின்றனர். நாங்கள் சென்ற பொழுது புனருத்தாரணப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. இந்த இடம் தென் திருப்பேரையிலிருந்து மணத்தி என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ. வடக்கே உள்ளது இராஜபதி. தாமரை மலர்களில் எட்டாவது மலர் ஒதுங்கிய இடம். இக்கோவிலை மதுரை சந்திரகுப்த பாண்டியன் கட்டினதாக கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. இக்கோவிலில் இருந்த நந்தி ஒட்டப்பிடாரம் கோவிலில் இருக்கிறது. இன்னும் கால் நடைகளுக்கு ஏதாவது நோய் என்றால் இந்த நந்திக்கு அபிஷேகம் செய்தால் சரியாகி விடுகிறது. ஸ்வாமி கயிலைநாதர். அம்பிகை அழகிய பொன்னம்மை. கோவில் இல்லாவிட்டாலும் திசை நோக்கி கும்பிடு போட்டாலும் புண்ணியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஒன்பதாவது கயிலாயம் சேர்ந்தம்பூமங்கலம்
நவகிரகங்களில் சுக்கிரன் ஸ்தலம். இங்குதான் தாமிரவருணி கடலில் கலக்கும் இடம். சுவாமியின் பெயர் கயிலாயநாதர். அம்பாள் சிவகாமி அம்மை. திருநெல்வேலியிலிருந்து புன்னக்காயல் செல்லும் வழியில் உள்ள ஊர். தாமரை மலர்களில் ஒன்பதாவது மலர் ஒதுங்கிய இடம். ஸ்வாமி சந்நிதி கிழக்குப் பார்த்து உள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கோவிலின் சுற்றுப் பிராகாரங்களில் சூரியன், சந்திரன், தக்ஷிணாமூர்த்தி, கன்னி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கொடி மரத்துடன் கூடிய கோவில். குலசேகர பாண்டியன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இங்குள்ள சண்டீசர் தீர்த்தத்தில் நீராடி கயிலைநாதரையும், அம்பாளையும் தரிசித்தால் சுக்கிர யோகம் சிறப்பாகக் கிட்டும் என்பதில் ஐயமில்லை. கோவிலில் பிரதோஷம் சிவராத்திரி, திருவாதிரை நாள்களிலும் மற்றும் தினப்படியும் நித்ய பூஜைகள் நடக்கின்றன. கோவில் திறந்திருக்கும் நேரம் காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை. மாலை ஐந்து மணியிலிருந்து ஆறரை மணிவரை.
நம் தமிழ்நாட்டில் உள்ள நவ கயிலாய ஆலயங்களைத் தரிசிக்கப் பெரும் சிரமம் என்பதில்லை. நெல்லை ஜங்ஷனில் இரண்டு நாள்கள் தங்கினால் ஒன்பது கோவில்களையும் தரிசித்துவிடலாம். முக்கியமாக கோவில் நடை திறந்து இருக்கும் நேரமாகப் போனால் நல்லது.
கயிலாயமலை (மானஸரோவர்)
இந்தக் கயிலாயத்தை தரிசிக்க முதலில் நம் உடலில் தெம்பு, பக்தி, பாஸ்போர்ட், தனம் ஆகியவை தேவை. மற்ற கோவில்களுக்குத் தனம் வேண்டாமா என்று கேட்பது தெரிகிறது. அதற்கு ரூபாய் ஆயிரத்திலிருந்து மூவாயிரம் வரை போதும். ஆனால் கயிலாயத்திற்கு பாஸ்போர்ட், விசா, உடல் உபாதைகள் இல்லாமை போன்ற அதிக செலவுகள் உள்ளதால் தனம் கொஞ்சம் அதிகமாகவே தேவை. குறைந்தபட்சம் ரூபாய் எண்பத்தி ஐயாயிரத்திலிருந்து ஒரு லக்ஷம் வரை தேவைப்படும். புறப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் நம் குடும்ப வைத்தியரிடம் ரத்தக்கொதிப்பு, ஹிமோகுளோபின் இ.சி.ஜி. போன்ற உடற் பரிசோதனைகள் செய்து நம் உடலைப் பயணத்திற்குத் தகுதியாக்கிக் கொள்வது நல்லது. நடைப்பயிற்சி மிகமிக அவசியம். (காலை, மாலை) குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று கி.மீ. கண்டிப்பாக நடக்க வேண்டும். பிராணாயாமம் தினமும் காலை, மாலை பத்து நிமிடம் செய்வது நல்லது. கூடுமானவரை உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பது, அதுவும் இரவில் சப்பாத்தி, கஞ்சி, ஓட்ஸ் எனப் பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. பழங்கள் புசிப்பதும் நல்லது. இப்படி பழகினால் கயிலாயத்திற்கு உடல், உள்ளம், உணவு எல்லாம் கயிலையாத்திரை செல்லத் தயாராகிவிடும்.
பல ஊர்கள் வழியாக பல டிராவல்ஸ் நடத்துகிறார்கள். சிலர் டெல்லி வந்து பிறகு அங்கிருந்து நேபாளம், காட்மண்டு வந்து சீன எல்லையை அடைந்து பயணம் தொடங்குகிறார்கள். சிலர் கோரக்பூர் வழியாக ரயில் பயணமாக வந்து பஸ்ஸில் நேபாள எல்லையைக் கடந்து காட்மண்டு வந்து பிறகு பஸ் மூலம் சீன எல்லையை அடைந்து கயிலாய யாத்திரையைத் தொடங்குகிறார்கள். சிலர் காஷ்மீரம் வழியாகவும் வருகிறார்கள். ஆனால் நிறைய யாத்ரீகர்கள் நேபாளம் வழியாகத்தான் வருகிறார்கள்.
சிலர் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி, நேபாளம் வந்து பிறகு யாத்திரையைத் தொடங்குகிறார்கள். எப்படி ஆனாலும் எப்படி வந்தாலும், காட்மண்டுவிலிருந்து சீன எல்லையை அடைய ஆறிலிருந்து ஏழு மணி நேரம் பஸ் பிரயாணம் செய்தே ஆகவேண்டும். நடுவில் அந்த ஊரில் அவ்வப்போது பந்த் ஏற்பட்டால் வண்டிகள் நிற்கு வேண்டும். பந்த் முடியும் வரை காத்துக் கொண்டு நிற்க வேண்டும். பிறகே புறப்பட முடியும்.
சென்னையிலிருந்து ரயிலில் கோரக்பூர் செல்ல இரண்டரை நாள்கள் பயணம்செய்து மாலையில் கோரக்பூரை அடையலாம். பிறகு அன்று ரயில் அலுப்பு தீர நம் தங்குமிடத்தில் ஸ்நானம் செய்து சிறிது ஆகாரம் உட்கொண்டு சிரம பரிகாரம் அவசியம். மறுநாள் வாடகை வண்டிகள் ஆட்டோக்கள், கிடைக்கும். போகவர வாடகை பேசிக் கொண்டு குழுவாக கோரக்நாதர் ஆலயம், குஷிநகர் (புத்தர் கைவல்யம் ஆன ஊர்) இராதாக்ருஷ்ணர் கோவில், பிரபலமான கீதாபிரஸ் ஆகியவற்றைப் பார்க்கலாம். மறுநாள் பஸ்மூலம் நேபாள எல்லையைக் கடந்து (மூன்று மணி நேரம் பிரயாணம்) ஹோட்டலில் சிற்றுண்டி உண்டுவிட்டு லும்பினி என்று புத்தர்பிரான் அவதரித்த ஊரைப் பார்க்கலாம். பிறகு எட்டு மணி நேரம் பிரயாணம் செய்தால் நடுவில் தடங்கல் இல்லாமல் இருந்தால் இரவோ, விடிந்தோ காட்மண்டுவை அடையலாம். அங்கு தங்கும் விடுதிகள் நிறைய உள்ளன. தங்கிக் குளித்து, காலைச் சிற்றுண்டி உண்டு டாக்ஸி அல்லது லோக்கல் பேருந்து மூலம் பசுபதி நாதர் கோவிலை தரிசிக்கலாம். பெரிய பிராகாரங்களுடன் நான்கு வாசல்களுடன் நடுநாயகமாக அருள்பாலிக்கிறார் பசுபதி நாதர். சுந்தி கோஷ்டங்களில் விநாயகர், பைரவர் எனப் பல சந்நிதிகள் உள்ளன. புராதனக் கோவில். பெரிய கொடிமரமும் காணப்படுகிறது. நந்தியும் எதிரே காட்சி தருகிறார். அருகிலேயே சக்திபீடத்தில் ஒன்றாகிய குஹ்யேஸ்வரி கோவிலும் உள்ளது. அதுவும் புராதனக் கலையம்சத்துடன் விளங்குகிறது. ஸ்தம்ப புத்தா, ஸ்வயம்புநாத் புத்தா, நீல்கண்ட் புத்தா ஆகிய ஆலயங்களை தரிசிக்கலாம்.
பிறகு காட்மண்டுவில் இருந்து சீன எல்லைக்கு பஸ் மூலம் பயணம் செய்ய வேண்டும். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் பிரயாணம். பிறகு அங்கு மாலை ஐந்து மணிக்குச் சீன அலுவலகம் மூடிவிடுவார்கள். அதற்குள் நாம் போகமுடியாவிட்டால், அங்கு ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கி மறுநாள் காலை எட்டு மணி அளவில் தான் எல்லையைக் கடக்கமுடியும். ஹோ என்ற இரைச்சலுடன் குளிர் காற்றுடன் பிரம்மபுத்திரா பாய்ந்து ஓடுவதைப் பார்க்கலாம். மறுநாள் எல்லாரும் அவரவர் பாஸ்போர்ட்டுடன் சீன எல்லையில் வரிசையில் நின்று அலுவலகத்தினுள் சென்று பரிசீலனை முடித்து மருத்துவப் பரிசோதனை எல்லாம் முடிந்து வெளியே வந்தோமானால் அவரவர்கள் நான்குபேர் குழுக்களாக டயோட்டா வண்டிகள் மூலம் சுமார் 950 கி.மீ. மூன்று நாள்கள் கடந்தே ஆகவேண்டும். அதற்கு முன் அவரவர் வழக்கமாகச் சாப்பிடும் மருந்துகள், அந்த சீதோஷ்ண நிலைக்கான மருந்து எல்லாம் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது அவசியம்.
பிறகு டயோட்டா வேன் மூலம் நியாலத்துக்குச் சென்று அங்கு ஓய்வு என்பதை விட அந்த ஊரில் காலை ஏழு மணியிலிருந்து மாலை ஏழு மணி வரை பந்த் எப்போதும் உண்டு. ஆதலால் அங்குள்ள கடைத் தெருக்களைச் சுற்றிக் கொண்டு நேரத்தைக் கடத்த வேண்டும். அப்போதே நமக்குத் தேவையான பழச்சாறு, தண்ணீர் போன்றவற்றை வாங்கிக் கொள்ளுதல் நல்லது. காட்மண்டுவிலிருந்து கொடாரி ஜாங்கு வழியாக நியாலம் அதாவது சீன எல்லை வரும்வரை இயற்கையின் எழிற் காட்சிகள் கண்ணைக் கவர்கின்றன. நியாலத்தில் இருந்து சாகா என்ற இடம் போகவேண்டும். அங்கு மாலை வேளை போய்ச் சேர்ந்தால் மண் வீட்டில்தான் தங்க வேண்டும். மாலை ஆறுமணிக்கெல்லாம் குளிர் உடலில் ஊடுருவி விடும். மறுநாள் மறுபடியும் கார் பயணம். சாகாவிலிருந்து பர்யாஸ் என்னும் இடம், அங்கும் மண் வீடுகள்தான் தங்குமிடம். இந்த மூன்று இடங்களிலும் தங்கும்போது, குளியல் கிடையாது. காரணம் கடும் குளிர். பல்துலக்க முகம் கழுவ வெது வெதுப்பான வெந்நீர் கிடைக்கும். காலைக் கடன்களைக் கழிக்க வெட்ட வெளிதான். கழிவறை ஏதுமில்லை. மறுநாள் மானஸரோவர் குகை சென்று அடையலாம். நாம் காரில் பயணம் செய்யும்போது கண்களுக்கு குளிர்கண்ணாடி அவசியம். முகத்திற்கு மாஸ்க் அவசியம். மானஸரோவர் பிரும்மாவின் மனஸில் இருந்து மானசீகமாகத் தோன்றியதால் மானஸரோவர் எனப்பெயர். இதுதான் சக்தி ஸ்வரூபம். கயிலைநாதன் சிவஸ்வரூபம். மானஸரோவர் கயிலைநாதனை ஆவுடையாக ஓடுகிறாள். இதன் ஆழம் 300 அடி. 115 கி.மீ. சுற்றளவு. நதியை காரிலேயே வலம் வரலாம். நதி தீரத்தில் இருந்தபடியே கயிலைநாதனையும் தரிசிக்கலாம். ரகுவம்ஸத்தின் முன்னோனான மாந்தாதா அரியணை துறந்து துறவறம் ஏற்று கயிலாய மலையில் மானஸரோவர் நதி தீரத்தில் தவமியற்றி முக்தி பெற்றதாகப் புராணம் கூறுகிறது. அதனால் இந்த இடம் மாந்தாதா மலை என வழங்கப்படுகிறது. இவ்வளவு உயரத்தில் இவ்வளவு பெரிய நதி உலக அதிசயங்களில் ஒன்றாகும் என்றால் மிகையாகாது. இன்னும் சூட்சும ரூபத்தில் ரிஷிகளும், சித்தர்களும் தவமியற்றுகிறார்கள். இங்குள்ள பறவைகளும் ‘உமா உமா’ என்றும் ‘சிவா சிவா’ என்றும் கூவுகின்றன. இப்புனித நீரில் நீராடுவதால் தீராத வினைகள், பண்ணிய பல ஜன்ம பாபங்கள் அனைத்தும் தீரும். தண்ணீரைத் தொட்டாலோ ஷாக் அடித்தாற் போல் சில்லிப்பு. கையே மரத்துவிடும். பனிமலையிலிருந்து உருகிப் பாய்வதால் அப்படி. காலில் ஷூ கையில் க்ளவுஸ் மாட்டிக் கொண்டுதான் கேனில் தண்ணீர் நிரப்ப வேண்டும். சிலர் தாம் தங்கியிருக்கும் இடத்திலேயே சிறியசிறிய அகல் விளக்கு ஏற்றி சக்தி ஸ்வரூபமான மானஸரோவரை வழிபடுகின்றனர். பிறகு அங்கிருந்து தார்சன் கேம்ப் சென்று இரவு தங்க வேண்டும். இங்கு தங்குவதற்கு டென்ட் தான் கிடைக்கும். அறைகள் இருந்தாலும் முன் வந்த குழுக்கள் புக் செய்துவிடுவதால் டென்ட் தான். குளிர் நடுக்கிவிடும். தெர்மல் வேர், ஜீன்ஸ், ஸ்வெட்டர், ஜெர்கின் எல்லாவற்றையும் மீறி உடலை ஊடுருவும் ஊதைக்குளிர் காற்று தாங்கமுடியாது.
பிறகு மறுநாள் காலை எல்லாரும் காலைக் கடன்களை முடித்து, முகம் கழுவி, சிவநாமம் ஜபித்து கயிலைமலைக்குப் போக தயாராகவேண்டும். யமத்துவார் என்ற இடம் வரை கார்மூலம் செல்லலாம். நடக்க முடியாதவர்கள் வாடகைக்கு குதிரை எடுத்துக் கொள்ளலாம். சுமை தூக்கமுடியாதவர்கள் செர்பா அமர்த்திக் கொள்ளலாம். தார்சனில் கம்பு ஒன்று கண்டிப்பாக வாங்கிக் கொள்ள வேண்டும். தார்சனிலிருந்து யமதுவாரை பத்து முறை வலம் வந்து பஞ்சாட்சர மந்திரத்தை மனத்தில் ஜபித்த வண்ணம் கம்பை ஊன்றியபடி அடி அடியாக மெதுவாக ஸ்வயம்பு மூர்த்தியைப் பிரார்த்தனை செய்தபடி நடக்க வெண்டும். 15நிமிடத்திற்கு ஒரு முறை நின்று சோர்வு நீங்கிச் செல்லலாம். பேசக்கூடாது, வேகமாக நடக்கக்கூடாது. முதலில் கொஞ்ச தூரம் காற்று காதை அடைக்கும். தொண்டை வறண்டு போகும். அப்போது கொஞ்சம் எனர்ஜி டிரிங்க் ஒரு மிடறு பருகலாம். பசித்தால் உலர்ந்த பழங்கள் ஒரு கை சாப்பிடலாம். ஒரு கர்ச்சிப்பில் நுனியில் ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரத்தைக் கட்டி முடியிட்டு முகர்ந்து கொண்டே செல்லலாம். அவ்வப்போது கயிலைநாதனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஆனந்தமாக அடியெடுத்து வைக்கலாம். எப்படியும் எட்டு மணி நேரம் ஆகும், திரபுக் என்ற வடக்கு முக தரிசனத்திற்கு. அங்கு போய்ச் சேர்ந்தவுடன் அலுப்பில் படுத்துவிடத் தோன்றும். மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து பல் துலக்கி காலைக் கடன் முடித்து கயிலைநாதனைக் கண்டால் சூரிய ஒளியில் பொன்மயமாகக் காட்சியைக் காண ஆயிரம் கண்கள் போதாது. ஆதவனே ஆரத்தி எடுப்பது போல் இருக்கும். ஆனந்தமான தரிசனம். சில சமயம் ஒரு நொடி தான் கிடைக்குமாம்.எங்களுக்கு ஐந்து நிமிடம் கிடைத்தது பெரும் பாக்கியம். அன்று புத்தபௌர்ணிமா வேறு. பரவசத்திற்கு அளவேயில்லை. பிறகு தோர்மா பஸ் மூலம் செங்குத்தான பாதை. கொஞ்சம் சிரமம், குதிரைகூட ஏறாது. நாங்கள் சிலர் திரும்பிவிட்டோம். எங்கள் குழுவில் மற்றும் பலர் அதனைக்கடந்து பிறகு இறங்கி தார்சனை அடைந்தனர்.
பிறகு நாங்கள் எல்லாரும் அஷ்டபர்வத் என்ற மலையை தரிசனம் செய்தோம். மறுநாள் கார் மூலம் வந்த பாதையிலேயே பர்யாஸ், சாகா, நியாலம் என மூன்று நாள்கள் பயணம் செய்து வந்தடைந்தோம். காரில் போகும்போது பாறை முழுக்கப் பாலைவனமாகத்தான் இருந்தது. ஒரு மரம், செடி கூட கிடையாது. ஒதுங்குவதற்கும் கூட நிழல் இல்லை. சுற்றிலும் மலை. அதன்மீது தேங்காய் துருவிப் போட்டாற் போல பனி. சில இடங்களில் அடர்த்தியான பனிக்கட்டிகள், சில இடங்களில் பனி உருகி நீராகி வழியில் வரும். கயிலைநாதன் எப்போதும் காட்சி தரும் ஸ்வயம்பு நாதன் ஆவார். அந்தக் கோவிலின் நடை எப்போதும் எல்லார்க்கும் திறந்தபடியே இருக்கும். வானமே கூரை. மழையும், பனியுமே, அபிஷேகம். காற்றே அர்ச்சனை. ஆதவனின் கிரணங்களே தீப ஆராதனை. ஒரு கணம் பனிமூடிக் காணப்படும். மறு கணம் தயிர் அபிஷேகம் செய்தது போல் தோன்றும். ஆதவனின் கிரணங்கள் பட்டால் தங்கக் கவசம் போட்டது போல் பொலிவான தோற்றம். உற்றுப் பார்த்தால் ஓம் என்று வரையப்பட்டு உள்ளது போல் இருக்கும். எதிரே நந்தி அமர்ந்து உள்ளது போல் இருக்கும். மலையைச் சுற்றி வெண்தாடியுடன் முனிவர்கள் அம்ரந்து இருப்பது போல் தோன்றும். முழுக்க முழுக்கத் தெய்விகச் சூழல். மனத்தில் மஹாதேவனின் திருநாமமே நிறைந்திருக்கும். அழகைச் சொல்லியோ, எழுதியோ மாளாது சென்று நேரில் தரிசித்தாலே அனுபவம் கிட்டும் என்பது சத்யம். வாழ்வில் கண்டிப்பாக ஒரு முறையாவது மானஸரோவர் கயிலைநாதரை தரிசித்து வணங்கி புண்ணியம் பெறவேண்டும்.
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே யானென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
யாறங்கத்தால் வேதமானாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
திருத்தாண்டகம்.
நாம் கிரிவலம் வருவதை விட திபெத்தியர்களின் கிரிவலமும் அவர்களின் பக்தியும் நம்மைத் திகைக்க வைக்கிறது. அவர்கள் கிரிவலத்தை சாஷ்டாங்க நமஸ்காரமாக விழுந்து விழுந்து பத்து நாள்கள் செய்கின்றனர். அதனைக் கண்டு கண்களில் நீரே வந்துவிட்டது. என்ன பாக்யம். மனம் சுத்தம் போதுமானது என்பதற்கு இணங்க கயிலாய யாத்திரை ஓர் உதாரணம். உள்ளமே கோவில் ஊன் உடம்பே ஆலயம் ஆதலால் குளிக்கவில்லையே என்ற கவலை வேண்டாம். உடல் சுத்தத்தைவிட மனத்தூய்மையே முக்கியம் என்பது கயிலை யாத்திரைதான். எல்லாமே சிவன் உட்பட இயற்கைதான். வர மனமில்லாமல் தான் திரும்பினோம். பெரிய யாத்திரைதான். அவனருளால் அவன்தாள் வணங்கி காட்மண்டு வந்து கோரக்பூர் வந்து சென்னைக்குத் திரும்பினோம்.
டிராவல்ஸ் மூலம் செல்பவர்கள் கவனிக்க வேண்டியவை: மருந்து மாத்திரைகள் கண்டிப்பாக நாம்தான் எடுத்துச் செல்ல வேண்டும். மருத்துவர்கள் உடன் வருவது இல்லை. நாம் கூட மனிதாபிமானம் காரணமாக உதவிபுரிய வாய்ப்பு உண்டு. காமாபேன், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வருவதில்லை. காணப்படவும் இல்லை. மினரல் வாட்டர் தரப்பட மாட்டாது. சில டிராவலர்ஸ் வெந்நீர் கொடுக்கிறார்கள். சமையல் மெனு பிராமணாள் தயாரிப்பு என்பதெல்லாம் இல்லை. அங்குள்ளவர்கள் தான் செய்கிறார்கள். லக்ஸரி பஸ்ஸில் பிரயாணம் என்கிறார்கள். கிடையாது நம்மூர் மொபசல் டப்பா பஸ்தான். டயடோ காரும் மிகப் பழசு, பாதி வழியில் பல வண்டிகள் மக்கர் பண்ணும். சிலர் லக்ஸரி ட்ரிப் என நிறைய பணம் செலவழிக்கின்றனர். அப்படி வருபவர்களுக்குக் கிரிவலம் கிடையாது. நம் பயணச்சீட்டை ரயிலோ விமானமோ, நாமே புக் செய்து கொள்வது நல்லது. இதையெல்லாம தீர விசாரித்துச் செல்வது நல்லது. முக்கியமான சீன கரன்ஸி யுவானை சென்னையிலேயே மாற்றி எடுத்துக் கொண்டு போவது நல்லது.

No comments:

Post a Comment