பகவானை ஸந்தோஷப்படுத்துவது எப்படி?
(ஸ்ரீஸ்ரீசந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகள் அருளிய உபன்யாசம்)
ஆர்.ஆர். குருதியாகராஜா
(ஸ்ரீஸ்ரீசந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகள் அருளிய உபன்யாசம்)
ஆர்.ஆர். குருதியாகராஜா
எதை எடுத்தாலும் ‘என்னுடைய, என்னுடைய’ என்று சொல்லிக் கொண்டு மனுஷ்யன் தன்னை பந்தப் படுத்திக் கொள்கிறான். என்னுடைய வீடு, என்னுடைய சொத்து, என்னுடைய கார் என்று இப்படிச் சொல்லிச் சொல்லிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான். இதற்குப் பதிலாக ‘உன்னுடையது’ உன்னுடையது’ என்று தேவதாராதனம் செய்து வந்தால் சுகத்தை சாசுவதமாய் அடைகிறான். ‘எனது’ என்ற அஞ்ஞானம் நீங்க வேண்டும். அது நீங்குவதற்கு வேண்டிய ஸாதனங்களை அனுஷ்டானம் செய்ய தேஹம் வேண்டும். அந்தத் தேஹம் கிடைத்தவன் குரூபஸதனம் செய்து ஆத்மவிசாரம் செய்ய வேண்டும். ஸத்கர்மானுஷ்டானம் செய்யவேண்டும். அஞ்ஞானத்தை ஜயிக்க இந்த ஸத்கர்மானுஷ்டானம் நான் ஸைநிகர்கள். ஸத்கர்மானுஷ்டானத்தால் ஈசுவரன் ப்ரீதி அடைகிறான். அவன் ப்ரீதி அடைந்தால் அவனுடைய பிரதிபிம்பமாகிய ஜீவனும் சுகத்தை அடைகிறான். ஈசுவரனுக்கு ஸந்தோஷம் வந்தால் தானாகவே ஜீவனுக்கும் ஸந்தோஷம் வருகிறது. ஏன்? பிம்பத்தில் இருக்கிற அழகு பிரதிபிம்பத்தில் தெரியுமல்லவா? ஈசுவரனுடைய பிரதிபிம்பமே ஜீவன் அல்லவா?
த்வத்பிரபுஜீவ ப்ரியமிச்சஸி சேன்னரஹரிபூஜாம் குருசததம்
ப்ரதி பிம்பாலங் க்ருதி த்ருதிகுஷலோ பிம்பாலங்க்ருதிமாதனுதே
என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.
ப்ரதி பிம்பாலங் க்ருதி த்ருதிகுஷலோ பிம்பாலங்க்ருதிமாதனுதே
என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.
ஒரு சந்திரன் இருக்கிறான். பத்து பாத்திரங்களில் ஜலம் விட்டுப் பார்த்தால் பத்து சந்திரனாகத் தோன்றுகிறான். சந்திரப் பிரகாசம் அந்த ஒவ்வொன்றிலும் தோன்றுகிறது. அந்த ஒரு சந்திரன் மேகத்தில் மறைந்தால் பிரதிபிம்பங்களும் காணாமல் போகின்றன.
இதேமாதிரி ஒரு கண்ணாடியை வைத்துக் கொள்வோம். அதற்கு முன் நாம் நின்றுகொண்டால் நம் முகம் தெரிகிறது. அந்தக் கண்ணாடியில். நம் முகத்தில் அலங்காரம் செய்தால் பிரதிபிம்பத்திலும் அலங்காரம் ஏற்படுகிறது. பிரதிபிம்பத்தின் காதில் கடுக்கன் இருக்க வேண்டுமானால் கண்ணாடியை உடைத்து பின்னால் இருந்த பிரதிபிம்பத்தைக் கையால் பிடித்து கடுக்கன் போடமுடியுமோ? பிரதிபிம்பமே போய்விடுமல்லவா? இதைவிட்டு நம் காதில் கடுக்கன் போட்டால் பிரதிபிம்பத்திலும் உடனே தோன்றும். பிம்பத்திலிருக்கும் கடுக்கன் பிரதிபிம்பத்தில் வரக்கூடாதென்றால் வராமல் இருக்குமா?
ஈசுவரன் ஸந்தோஷப்பட்டால் ஜீவனும் ஸந்தோஷப்படுகிறான். ஈசுவரன் ஸந்தோஷப்பட்டால், வேண்டாமென்று சொன்னாலும் அந்த ஸந்தோஷம் ஜீவனை விட்டுப் போகாது. ஈசுவரனுக்கு ஸந்தோஷம் இல்லாதபோது வேண்டும் வேண்டுமென்று கத்தினாலும் கிடைக்காது. ஈசுவரனுக்கு ஸந்தோஷம் எப்படி உண்டாகுமென்றால், அவன் சொன்னபடி நடந்தால்தான்.
ஒரு தகப்பனுக்கு ஒரு பிள்ளை இருக்கிறானென்று வைத்துக் கொள்வோம். அவன் தகப்பன் சொன்னபடி கேட்கிறதேயில்லை. ஆனால் காலையிலெழுந்து பிதாவுக்கு பிரதக்ஷிண நமஸ்காராதிகள் மாத்திரம் செய்கிறான். தகப்பனுக்கு அவனிடத்தில் திருப்தி உண்டாகுமோ? அவன் சொன்னபடி கேட்டால்தான் ஸந்தோஷம் உண்டாகும். அதேமாதிரி பகவானுக்கு நம்மிடத்தில் திருப்தி வரவேண்டுமானால் அவன் சொன்னபடி நாம் நடக்க வேண்டும். அவனிச்சைப்படி நம் நடத்தை இருந்தால் அவனுடைய அனுக்ரஹத்திற்குப் பாத்திரமாவோமே தவிர மற்றபடி கிடைப்பதல்ல. அவனுடைய இச்சையை எப்படி அறிகிறது? அவன் சொன்ன வார்த்தையால். அது எது?
ஸ்ருதி ஸ்ம்ருதி மனம்வாக்யே
என்று அவன் சொன்னபடி வேதமும், ஸ்மிருதிகளும் அவனுடைய உத்தரவுகள். வேதத்தைச் சரியாக அறிந்துகொள்வது சிரம ஸாத்தியமானதால், வேதார்த்தங்கள் ஸ்மிருதிகளால் தெளிவாய்த் தெரிவிக்கப்படுகின்றன. வேதார்த்தங்களை நன்றாகத் தெரிந்து கொண்டு அதை நன்றாய் மற்றவர்களுக்கு ஸ்மிருதிகள் போதிக்கின்றன. அந்த ஆக்ஞைகள் தான் என்னவென்றால், பிரம்ஹ முகூர்த்தத்தில் எழுந்திருத்தல், சௌசம் தந்ததாவனாதிகளைச் செய்து ஸ்நானம் பண்ணி பஹிச்சுத்தியைச் செய்துகொண்டு அகமர்ஷணாதி ஸூக்தாதிகளை ஜபித்து அந்த சுத்தியையும் அடைந்து காலத்தில் அர்க்யப்பிரதானம் செய்து காயத்ரீ ஜபம் ஆயிரமோ, நூறோ, பத்தோ யதாவகாசம் செய்து பிறகு தேவதாராதனம் செய்வது இது முதலியன. இவ்விதம் தினமும் செய்துவந்தால் சித்த சுத்தி ஏற்படும். பிறகு ஞானோதயமுண்டாகும்.
என்று அவன் சொன்னபடி வேதமும், ஸ்மிருதிகளும் அவனுடைய உத்தரவுகள். வேதத்தைச் சரியாக அறிந்துகொள்வது சிரம ஸாத்தியமானதால், வேதார்த்தங்கள் ஸ்மிருதிகளால் தெளிவாய்த் தெரிவிக்கப்படுகின்றன. வேதார்த்தங்களை நன்றாகத் தெரிந்து கொண்டு அதை நன்றாய் மற்றவர்களுக்கு ஸ்மிருதிகள் போதிக்கின்றன. அந்த ஆக்ஞைகள் தான் என்னவென்றால், பிரம்ஹ முகூர்த்தத்தில் எழுந்திருத்தல், சௌசம் தந்ததாவனாதிகளைச் செய்து ஸ்நானம் பண்ணி பஹிச்சுத்தியைச் செய்துகொண்டு அகமர்ஷணாதி ஸூக்தாதிகளை ஜபித்து அந்த சுத்தியையும் அடைந்து காலத்தில் அர்க்யப்பிரதானம் செய்து காயத்ரீ ஜபம் ஆயிரமோ, நூறோ, பத்தோ யதாவகாசம் செய்து பிறகு தேவதாராதனம் செய்வது இது முதலியன. இவ்விதம் தினமும் செய்துவந்தால் சித்த சுத்தி ஏற்படும். பிறகு ஞானோதயமுண்டாகும்.
வேதாத்யயனம் இனிமேல் செய்வது சிலருக்குக் கஷ்டமாய் இருக்கலாம். வேத ஸாரத்தை யாரும் தெரிந்து கொள்ளலாமல்லவா? வேதாத்யயனம் செய்து யதாவத்தாய் ஸகலத்தையும் செய்தால் மிகவும் சிரேயஸ்தான். அதிலும் அர்த்தம் தெரிந்து கொண்டு செய்தால் மிகவும் நல்லதுதான். அப்படியில்லாமல் போனாலும் ஸாமான்ய பலனாவது கிடைக்குமல்லவா? சிரேயோ விஷயத்தில் திருப்தி வரவே கூடாது. நமக்குப் பணத்தில் எத்தனை ஆசை இருக்கிறதோ, எப்படி ஆயிரம் வந்தால் பத்தாயிரம் வேண்டுமென்ற இச்சையிருக்கிறதோ அதேமாதிரி சிரேயஸ் எவ்வளவு வந்தாலும் மேலும் வேண்டுமென்ற புத்தியிருக்க வேண்டும். அதேமாதிரி இந்த சிரேயஸ்ஸை ஸம்பாதிக்க வேண்டும். காயத்ரீ மந்திரத்தைச் சரியாகத் தெரிந்து கொண்டு அதன் அர்த்தத்தை விசாரம் பண்ணித் தெரிந்து கொண்டு, பிரம்ஹயக்ஞம், தேவதாராதனம், அவகாசம் கிடைத்தால் ஹரிஹரநாமோச் சாரணம், கூடுமானவரை அதிதி பூஜை ஆகியவற்றைச் செய்து கொண்டு வந்தால் சிரேயோ விருத்தி அவசியமாய் உண்டாகும். பகவானை ஸ்தோதிரம் செய்வதனால், அதாவது பகவந் நாமோச்சாரணம் செய்து கொண்டே வருவதனால், வீணாக மௌட்யத்திலும் சோம்பேறித் தனத்திலும் விருதாவாய்க் கழிந்து கொண்டிருக்கும் காலமானது உபயோகப் படுத்தப்பட்டதாக ஆகும். இப்படி செய்தால் கெட்ட காரியம் செய்வது தானாகவே விலகிப்போகும். சுருதி, ஸ்மிருதிகளில் “இதைச் செய்” என்று சொன்னதைச் செய்யாமல் போனாலும் அவற்றில் ‘இதைச் செய்யாதே’ என்று இருப்பதை விட்டுவிட்டால் மட்டுமே க்ஷேமம் உண்டாகும்.
ஸூத ஸம்ஹிதையில் அவென்னபி வித்யுக்தம் என்று தொடங்கி இதே விஷயம் உபதேசிக்கப் படுகிறது.
மனுஷ்யனுடைய ஸ்வபாவம் எப்படியிருக்கிற தென்றால், அவன் நித்ரா ஸமயம் தவிர மற்ற எல்லாக் காலங்களிலும் ஏதாவதொன்றைச் செய்து கொண்டேயிருக்கிறான். அவன் அப்படிச் செய்யும் காரியங்களை, நிஷித்தம், விஹிதம், உதாஸீதனம் என்று மூன்று விதமாகப் பிரிக்கலாம். அந்ருத வசனம் (பொய் பேசுதல்) அபேயபானம் (குடிக்கத்தகாததை குடித்தல்) அபோஜ்ய போஜனம் (உண்ணத் தகாததை உண்ணுதல்) த்யூதம் (சூதாடுதல்) சீட்டு ஆடுதல் முதலியன நிஷித்தகர்மங்கள். ஸ்நானம், ஸந்தியா பூஜை முதலியன விஹித கர்மங்கள். நித்திரை முதலியன உதாஸீன கர்மங்கள். இப்படி மூன்றுவகைப்பட்ட காரியங்களில், நிஷித்த காரியங்கள் கூடாதென்று தள்ளிவிட்டால், அப்புறம் செய்யமுடிகிற விஹிதத்தையோ உதாஸீனத்தையோ செய்தோ அல்லது சும்மா இருப்பதோ இதைத்தானே செய்து தீரவேண்டும்? இதில் எதைச் செய்தாலும் தோஷமில்லை. உதாஸீனமான காரியத்தைச் செய்தால் சிரேயோஹானி இல்லை. விஹித காரியத்தைச் செய்தால் சிரேயோவிருத்தி உண்டாகிறது. அதனால்தான் நிஷித்வ பரிஹாரேன பிஹிதம் லபதே த்ருவம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கு ஒரு கதை உண்டு. ஒரு பிராம்ஹணனுக்கு ஒருபிள்ளை இருந்தான். அவன் ஸதா திருடிக்கொண்டு வருவதையே வழக்கமாகச் செய்துகொண்டு வந்தான். என்ன சொல்லியும் பையன் திருந்தவில்லை. இவனை எப்படி நல்வழிக்குத் திருப்புவது என்று தகப்பனார் யோசித்துப் பார்த்ததில் பையனிடத்தில் ஒரு குணம் இருப்பதாகக் கண்டார். அதாவது, அவன் பிரதிக்ஞை செய்துவிட்டால் அந்தமாதிரி நடப்பான் என்று தெரிந்து கொண்டார். திருடாதே என்று சொன்னால் அந்தமாதிரி பிரதிக்ஞையையே செய்யாமல் போய்விடுவான் எனத் தெரிந்துகொண்டு, தன் பையனைக் கூப்பிட்டு, ‘மகனே! நீ எப்பொழுதும் பொய் சொல்கிறதில்லை என்று எனக்குப் பிரதிக்ஞை செய்’ எனக் கேட்டார். பையன் அப்படியே ஆகட்டுமென்று கைதட்டிக் கொடுத்துவிட்டான்.
இப்படிச் செய்ததன் பிறகும் சிறு திருட்டாகவே கொஞ்சநாள் நடந்தது. பிறகு பையன் சிறு திருட்டில் அலுத்துப் போய் பெரிய திருட்டாய்த் திருடவேண்டுமென்று உத்தேசித்து ராஜகிருஹத்திலேயே திருடப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தான். அதற்காக ராஜதானியில் ஊருக்கு வெளியில் ஒரு குடிசை ஏற்படுத்திக் கொண்டு அதில் வசிக்க ஆரம்பித்தான். அந்த தினத்தன்றே நகர சோதனைக்காகப் புறப்பட்ட ராஜா புதிதாக ஒரு குடிசை ஏற்பட்டிருப்பதைக் கண்டு உள்ளே போய் விசாரித்தான். ‘நீ யார்?’ என்று கேட்க அவன் உண்மையைச் சொல்லிவிட்டான். “நான் திருடன். அரண்மனையில் திருட வந்திருக்கிறேன். மார்க்கம் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான். இதைக் கேட்டதும் ராஜாவுக்கு ஆச்சரியமுண்டாயிற்று. திருடனுடைய ஸத்திய வாக்கைக்கண்டு அதிசயித்தான். உடனே தனக்குள் தீர்மானித்துக் கொண்டு திருடனைப் பார்த்து “அப்பா! நான் ஸதா அந்த அரண்மனையிலேயே வசிக்கிறேன். அதிலிருக்கிற ஸகல ஸமாசாரங்களும் எனக்குத் தெரியும். நான் உனக்கு சகாயம் செய்கிறேன். எனக்கு என்ன தருவாய்?” எனக் கேட்டான். கிடைப்பதில் பாதி எனத் தீர்மானித்துக் கொண்டு மறுநாள் ராத்திரியே திருட ஏற்பாடு செய்து வைப்பதாகவும், அரண்மனை வாசலில் வந்து குறித்த ஸமயத்தில் சேரும்படியாகவும் ஏற்பாடு செய்துகொண்டு ராஜா புறப்பட்டுப் போனான்.
ஸங்கேதப்படி ராஜா மறுநாள் அரண்மனையில் வாசலைத் திறந்துவிட, அவன் நேராக பொக்கிஷசாலையை அடைந்து அதை நன்றாய்ப் பரிசோதித்ததில், விலையுயர்ந்த மூன்று ரத்னங்கள் அடங்கிய ஒரு ஸம்புடத்தைப் பார்த்தான். அதில் தனக்கு ஒன்றும் தன் கூட்டாளிக்கு ஒன்றும் எடுத்துக் கொண்டு மற்றொன்றை அவ்விடத்திலேயே வைத்துவிட்டு வெளியே வந்து கூட்டாளியாகிய ராஜாவிடம் ஒன்று கொடுத்துவிட்டு மற்றொன்றைத் தான் எடுத்துக்கொண்டு குடிசையை நோக்கிப் போய் விட்டான். பொழுது விடிந்ததும், பின் கதவு திறந்து கிடப்பதும் பொக்கிஷசாலை மூடாமல் திறந்து கிடப்பதும் கண்டு விசாரணை நடந்தது. மந்திரி வந்து பார்த்ததில் ஒன்றும் களவு போகாமல், மூன்று ரத்னங்கள் அடங்கிய ஸம்புடத்தில் ஒ ன்று நீங்கலாக மற்ற ரத்னங்கள் களவாடப் பட்டிருப்பதைக் கண்டு, மற்றொன்றும் திருட்டுப் போனதாகச் சொன்னால் எல்லாரும் நம்புவார்களாகையால், அது தனக்கு இருக்கட்டும் என நினைத்து அதை மடியில் வைத்துக் கொண்டான்.
பிறகு ஸேவகர்கள் வெளியில் போய் எங்கும் தேடி திருடனைக் கண்டுபிடித்து விசாரித்ததில் திருடன் தன் பிதாவுக்குக் கொடுத்த பிரதிக்ஞையால் உண்மையைக் கூறி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஆனால் தான் இரண்டு ரத்னங்கள் தான் எடுத்ததாகவும், அதில் ஒன்று அரண்மனை அதிகாரியிடம் கொடுத்ததாகவும், மற்றது தன்னிடமிருப்பதாகவும், தெரிவித்து அதை எடுத்துக்கொடுத்தான். உடனே ராஜன் தன்னிடமிருக்கும் இரண்டாவது ரத்னத்தை எடுத்து வைத்துவிட்டு மந்திரியை மூன்றாவது ரத்னத்தைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டான். மந்திரி வேறு வழியில்லாமல் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ரத்னத்தை எடுத்துக் கொடுத்துவிட்டான். மேலும் தன்னை மன்னிக்கும்படியாகக் கேட்டான். திருடனாயிருந்தும் பொய் சொல்லாததால் அவனை மந்திரி வேலையில் அமர்த்தி அரசன் முந்தின மந்திரியை வேலையிலிருந்து நீக்கினான். மந்திரி ஸ்தானத்திற்குத் திருடன் வந்தது எப்படி? கூடாததை விலக்கினதாலல்லவா? கூடாததை விலக்கினது ஒன்று. நல்லதை நடத்தினது ஒன்று. இப்படி இரண்டும் கிடைக்கிறது. ஈசுவரானுக்கிரஹமும் அப்படியே பூர்ணமாகக் கிடைத்துவிடும்.
சாஸ்திரம் என்ன வெறுமனே கஷ்டமானதையா செய்யச் சொல்லும்? பிரபஞ்சத்தையே க்ஷேமமார்க்கத்திற்குத் திருப்புவதற்காக ஹிதமானதைத்தான் சாஸ்திரம் சொல்கிறது. அப்பேர்ப்பட்ட சாஸ்திரத்திற்கு விரோதமாகச் செய்தால் ஈசுவர கோபம்தான் நிச்சயமாக ஏற்படும். தற்காலத்தில் அர்த்தம் ஸம்பாதிப்பதுதான் நீதியாய்விட்டது. எந்த வழியிலும் பொருள் ஸம்பாதித்தே தீரவேண்டியது என்பது மதமாகிவிட்டது. இது நீதியாகுமோ? இது துர்நீதியல்லவா? எது நியாயமாகுமோ, எதன்படி நடந்தால் ஸகலருக்கும் க்ஷேமம் உண்டாகுமோ அதைத்தான் சாஸ்திரங்கள் சொல்கின்றன. இதுதான் தர்ம சாஸ்திரம். இப்பொழுது என்ன? எல்லாரும் மனம் போனபடி நடக்க வேண்டியது. பிதாவோடு புத்திரன் சண்டை; புருஷனோடு ஸ்திரீ சண்டை; முதலாளியுடன் தொழிலாளி சண்டை. இதனால் தர்மப் பிரதிஷ்டை வருமோ? பேச்சென்னமோ தர்மம்தான். நடப்பது முழுவதும் அதற்கு நேர் விரோதம். ஸகல தர்மத்திற்கும் காரணம் அவரவர்கள் ஸ்வதர்மானுஷ்டானம் அல்லவா? மேலதிகாரிக்கும் கீழ் அதிகாரிக்கும் சண்டையும், தகப்பன் பிள்ளைகளிடையே சண்டையுமெனில், எப்படி உலகம் நடக்கும்? ஆதி அடிப்படையான ஸ்வதர்மானூஷ்டானம் நடந்தால் ஸகலமும் கைகூடும். விக்னேசுவர பூஜைக்கே லோபம் வந்துவிட்டால், அப்புறம் மற்ற கர்மானூஷ்டானங்கள் எப்படி நடைபெறும்? கர்மம் எப்படி ஸார்த்தகமாகப் போகிறது? ஆகையால் சாஸ்திரப்படி அவரவர்கள் தங்கள் தங்கள் ஸ்வதர்மானுஷ்டானத்தை ஆசரித்து வந்தாலன்றி சந்தோஷம் கிடைக்காது. ஈசுவரனுக்கு அப்படி நடந்தால்தான் ப்ரீதி உண்டாகிறது. அவனுக்கு ஸந்தோஷம் வந்தால்தான் பிம்பம் பிரதிபிம்ப ரீதியாய் ஜீவர்களும் ஸந்தோஷத்தை அடைவார்கள். பகவானுடைய அனுக்கிரஹம் கிடைத்தால், ஸதா ஸந்தோஷத்துடன் இருக்கலாம். ஆகையால் ஸகலரும் தங்கள் தங்கள் தர்மம் இன்னதென்பதைத் தெரிந்துகொண்டு அதன் பிரகாரம் நடக்க ஏற்பாடுசெய்து அந்தப்படி நடந்து ஈசுவரனுக்கிரஹத்தை அடைய வேண்டும்.
No comments:
Post a Comment