ஸத்குருவின் மலரடியே துணைகௌசிகரமணன்
“சற்குணம் வாய்மை தயா விவேகந்தண்மை
சத்குரு பாதமே சாயை போனீங்காமே
சிற்பர ஞானந்தெளியத் தெளிவோர்தல்
அற்புதமே தோன்றலாகுஞ் சற்சீடனே”
“சற்குணம் வாய்மை தயா விவேகந்தண்மை
சத்குரு பாதமே சாயை போனீங்காமே
சிற்பர ஞானந்தெளியத் தெளிவோர்தல்
அற்புதமே தோன்றலாகுஞ் சற்சீடனே”
நல்ல சிஷ்யன், சற்சீடனின் லட்சணத்தை இயம்புகிறார் திருமூலர். சீடன் நிழல் போலத் தொடர்ந்து குருபாதத்தை நீங்காமல் அவரிடம் கேட்டுத்த் தெளிதல் வேண்டும். அப்படி குருவையே அண்டியிருப்பின் அந்தச் சீடனுக்கு சற்குணம், வாய்மை, தயை, உயிர்களிடத்து அன்பு, நன்மை, தீமைகளையறியும் விவேகம் அனைத்தும் கிடைப்பதோடு சித்த சுத்தியேற்பட்டு, சித்பர ஞானம் பற்றிய அறிவு உண்டாகும். அப்படி தோன்றிய ஞானத்தைப் பின்னர் எவ்விதமான ஐயப்பாட்டிற்கும் இடமின்றித் தெளிந்து அதில் நிலைபெற்று நிற்கிறபோது ஆன்மதரிசனமாகிற அற்புதம் தோன்றும், என்று குருவை அண்டி அவர் பாதத்தை வழிபடுதலின் பெருமையை அல்லது ஞானம் அடையும் வழியைக் காட்டித் தருகிறார் திருமூலர். இதையேதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையிலே “பரிப்ரச்னேன ஸேவயா உபதேச்யந்தி: தே ஞானம் ஞானின: தத்வ தர்சிபி:” என்றெல்லாம் கூறுகிறார்.
தன் பண்பினாலும், அன்பினாலும் குருவின் கருணையைப் பெறவல்லவர்கள் அடைகின்ற பேற்றினை விளக்குகிற போது திருமூலர் சொன்னார்.
“இசைந்தெழு மன்பி லெழுந்தபடியே
பசைந்தெழு மீசரைப் பாசத்து ளேகச்
சிவந்த குருவந்து சென்னி கைவைக்க
உவந்த குருபத முள்ளத்து வந்ததே.”
பசைந்தெழு மீசரைப் பாசத்து ளேகச்
சிவந்த குருவந்து சென்னி கைவைக்க
உவந்த குருபத முள்ளத்து வந்ததே.”
இந்தப் பாட்டிலே அவர் கூறுகிற அற்புதத்தைப் பாருங்கள். சீடனின் உள்ளத்து உண்மையை உணரத் துடிக்கிற பக்தியும் அளவில்லாத பாச உணர்வு ததும்பி நிற்கிறபோது-இதைத்தான் ‘உணர்வுகோல் நட்டு’ என்று பாடினார்கள்-குரு கருணை மேலிட்டு சீடனுக்கு அருள் செய்ய விழைந்து தலையுச்சியிலே தன் கமலக் கரத்தினை வைத்து அருள்செய்ய, குருவின் பாதம் சீடனின் உள்ளத்து வந்து குடிபுகுந்ததே என்கிறார். இதைத்தான் ஹஸ்த தீட்சை என்பர். குரு கையை சிரசினில் வைத்தவுடன் குருபதம் அவன் உள்ளத்துள் நிறைந்தது. குருவின் உருவம் என்றோ, இறைவன் என்றோ, ஞானம் என்றோ அல்லது குருவின் அருட்கரம் என்றோ எதுவும் சொல்லாமல் ‘உவந்த குருபதம்’ அவன் உள்ளத்தில் வந்து நிறைந்ததென்கிறார். குருபதம் வேறு, இறைவன் வேறல்ல. இறைவனை வணங்கும்போது நாம் அவனுடைய மலர்ப் பாதங்களைத் தானே சென்னிமிசை இறைஞ்சுகிறோம்?
குருபாதம் வேறு இறைவன் வேறல்ல. ஆகவேதான் நாம் வழிபாடு தொடங்குமுன் குரு வணக்கத்திற்கு இரண்டு கைகளிலும் ஸ்ரீபாத முத்திரைதாங்கி உச்சியிலே குருபாதத்தை நினைந்து குரு வணக்கத்தைச் செய்கிறோம். குருவருளால் உயர்ந்த மெய்ஞானத்தை அடைகிறபோது குரு, சிஷ்யன், இறைவன் என்ற பேதமனைத்துமே நீங்கி
‘பேச்சற்ற வின்பத்துப் பேரானந்தத்திலே
மாச்சற்ற வென்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன் மூன்றுங் கைக்கொண்டு
வாச்ச புகழ்மானத் தாடந்து மன்னுமே.’
மாச்சற்ற வென்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன் மூன்றுங் கைக்கொண்டு
வாச்ச புகழ்மானத் தாடந்து மன்னுமே.’
என்று அந்த ஆனந்த அனுபவத்தைப் பாடுகிறார். மற்றொரு பாட்டில் குருவே சிவன் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பேசுகிறார்.
திருவடி வைத்தென் சிரத்தரு ணோக்கிப்
பெருவடிவைத் தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடிவிற் கண்ட கோனை யெங்கோவைக்
கருவழி வாற்றிடக் கண்டுகொண்டேனே.
பெருவடிவைத் தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடிவிற் கண்ட கோனை யெங்கோவைக்
கருவழி வாற்றிடக் கண்டுகொண்டேனே.
ஹஸ்த தீட்சையாலே ஞானம் பெற்று அதன் பயனாக உள்ளத்து உணர்ந்த இறைவனே குரு. குருவும் அவனும் வேறல்ல என்ற உண்மை கண்டுகொண்டவுடன் பிறவியற்றுப் போனது. நிலையான பேரின்ப நிலை அமையப்பெற்றது.
குரு, கருணையாலே நினைத்த மாத்திரத்திலேயே ஞானத்தைத் தந்து தோடகனை தோடகாச்சார்யராக மாற்றிவிடவில்லையா?
குரு இராமானந்தரின் அருள் பெறுவதற்காக அவர் அதிகாலையில், ப்ரும்ம முகூர்த்தத்தில் படித்துறையில் படுத்திருக்க இருட்டில் அதை கவனியாமல் வந்த ராமானந்தர், படுத்திருந்த கபீரை மிதித்துவிட உடனே “ராமா, ராமா” என்று அவர் சொன்ன சொல்லையே மந்திரமாக ஏற்று பக்த சிகாமணியாகப் பெருமையடைந்தது இராமானந்தரின் பாத தீக்ஷையா, ஸ்பரிச தீக்ஷையா? அதற்கும் மேலாக எப்படியும் அவர் உபதேசத்தை அடைந்துவிட வேண்டுமென்ற கபீரின் துடிப்பா?
கன்னடதேசத்திலே கம்பேகௌடா என்ற இடையர் போன்ற இனத்திலே பிறந்தவர் கனகதாசர். சிறந்த போர்வீரர். யுத்த பூமியில் எதிரிகளால் உடலெல்லாம் புண்ணாகி ரத்த வெள்ளத்தில் கிடந்து அவரை இறைவனே வந்து தன் அம்ருத ஹஸ்தத்தினால் தடவி குணப்படுத்தி, “கனகா! நீ எனக்கு தாசனாவாய்” என்று ஆட்கொள்கிறான். ஆயினும் என்ன? குருவுபதேசமில்லாது அருளில்லையல்லவா? ஆகவே, மஹான் வ்யாசராயரிடம் சென்று உபதேசம் பெறப் பணிக்கிறான். மஹான் வியாசராயரின் முகாமை அடைந்த கனகன் அந்தணர் நிறைந்த அந்த அவையில் நுழையத் தயங்கி தூரத்தில் நின்று, “குருவே! உபதேசம் அருளும்” என உரத்த குரலில் வேண்டினான். கனகனை முன்பு அறிந்திராத வ்யாசராயரும் “யாரடா அது? கம்பேகௌடாதானே, உனக்கு ‘கடா’ மந்திரம்” என்று அலட்சியமாகச் சொல்ல, அதையே உபதேசமாக ஏற்ற கனகன் சென்று ‘கடா’ “மந்திரத்தையே ஜபித்து யமனின் வாகனமாகிற ‘எருமைக் கடாவை’ ப்ரத்யட்சமாகப் பார்த்து வரம்பெற்றான்.
பிறகு அவன் வ்யாசராயருடனேயே இருந்ததும் வ்யாசராயர் அவன் பெருமையை உலகறியச் செய்ததும் தாசர்களின் வரலாற்றில் அற்புதம். கனகன் பெற்றது குரு தீட்சையாலா, மந்திரசக்தியினாலா? அல்லது அவனுடைய குருபக்தியும், ச்ரத்தையுமே அல்லவா?
கோழிக்கோட்டிலே ஒரு வைத்தியன் இருந்தான். அவன் விஷக்கடியிலிருந்து குணப்படுத்துவதில் மிகப் பிரபலமானவன். பயங்கர விஷமுடைய பாம்புக் கடியிலிருந்தும் காப்பாற்றும் திறமையுடயவன். அவன் வீட்டை விட்டு வெளியில் எங்குமே செல்வதில்லை. ஆனால் அவனைத் தேடி அனைவரும் வருவர். யாரிடமும் எந்தக் காசும் வாங்க மாட்டான். எந்தப் பிரதிபலனும் பெறமாட்டான். காசு வாங்கினால் மந்திர சக்தி பலிக்காது என்பது அவனுடைய தீர்மானம். ஆனால் அவன் திறமையை மதிக்கிற ஜனங்களுடைய ஆதரவினால் அவன் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உயர்ந்தான். சுகமாகவும் வாழ்ந்தான்.
அந்த வைத்தியனுடைய வீட்டிற்குத் தெற்குப்புறத்தில் சிறிது தொலைவில் ஒரு வீட்டில் ‘கொச்சு ராமன்’ என்றழைக்கப்படும் பாலராமன் என்ற ஓர் இளைஞன் வசித்து வந்தான். அவனுக்கென்று எந்த சாமர்த்தியமும் இல்லை என்றாலும் பக்கத்திலிருந்த வைத்தியனின் ப்ரபல்யமும், பெருமையும், சுகவாழ்வும் அவனைக் கவர்ந்தன. வறுமையில் வாடிய கொச்சுராமன் தானும் விஷ வைத்தியம் படித்தால் நிறையச் சம்பாதிக்கலாம் என்று எண்ணி ஏங்க ஆரம்பித்தான். வைத்தியனின் சீடர்களிடம் போய் விஷ வைத்தியம் தெரிந்து கொள்வது எப்படி என்று விசாரித்தான். அதற்கு அவர்கள் “வைத்தியன் நல்ல மகிழ்ச்சியுடனிருக்கையில் வந்து பார்த்து குருதக்ஷிணை தந்து, உபதேசம் பெற்று மந்திர சித்தி பெற்றால் நீயும் விஷ வைத்தியனாகலாம்.” என்று உபதேசித்தனர்.
விஷவைத்தியன் மந்திர சித்தி பெற்று ஜபம் செய்த தண்ணீரையோ அல்லது வேறு திரவத்தையோ உபயோகித்து விஷத்தை இறக்குவது வழக்கம். எப்படியும் உபதேசம் பெறுவதிலே தீவிரமாக இருந்த கொச்சுராமன் குருதக்ஷிணை கொடுக்க என்ன செய்வது என்று யோசிக்கலானான்.
சாப்பாட்டிற்கே வழியில்லாத ஏழைமையில் வாடும் அவனிடம் ஏது பணம், காசு? கடைசியில் ஒரு நாள் பாலராமன் தன் வீட்டுக் கூரையிலே காய்த்திருந்த பூசணிக்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு விஷ வைத்தியன் வீட்டை அடைந்தான். அதிகாலை நேரம். யாரும் வரவில்லை. வைத்தியனும் தூங்கி எழுந்து வாசல்பக்கம் வந்து நின்றிருந்தான். பாலராமன் பூசணிக்காயை அவன் முன் வைத்து நமஸ்கரித்தான். விஷ வைத்திய மந்திர உபதேசம் வேண்டுமென்ற ஆவலைத் தெரிவித்தான். விநோதமான அவன் செய்கையைக் கண்டு, “என்னடா? இது வெட்டிப் பூசணிக்காய்! (மலையாள மொழியில் ‘விட்டி கூஷ்மாண்டம்’) என்று கேலியாகச் சொல்லவும், மந்த்ரோபதேசத்தில் குறியாயிருந்த பாலராமனும் ‘விட்டி கூஷ்மாண்டம்’ என்பதே மந்திரம் என நினைத்து மறுபடி காலில் விழுந்து நமஸ்கரித்து உடனே வீடு திரும்பினான். ‘விட்டி’ உபயோகமற்றது என்று திட்டியதால் பையன் வருத்தப்பட்டுப் போய்விட்டான் என்று வைத்தியன் நினைத்தான். பாலராமனோ தனக்கு உபதேசம் ஆகிவிட்டது என்று திருப்தியோடு மந்திரஜபம் செய்ய ஆரம்பித்தான்.
ஸ்நானம் செய்து சுத்தமாக விளக்கேற்றி கோலம் போட்டு பலகையில் உட்கார்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்தான். ‘அக்ஷர லட்சம்’ என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது. ‘வெட்டி கூஷ்மாண்டம்’ என்ற சொல் மலையாள மொழியில் ஐந்து அட்சரங்கள் கொண்டது. ஐந்து லட்சம் ஜபம் செய்தான். அவனுக்குள்ள வேகத்தில் சீக்கிரமே ஐந்து லட்சம் முடிந்து சித்தியாயிற்று என்று நம்பி உடனே வைத்தியம் செய்யவும் ஆரம்பித்தான். எங்காவது விஷக்கடி பற்றிய செய்தி தெரிந்தால் இவன் தானாகவே அங்கு சென்று தன் மந்திரத்தைக் கூறி விஷத்தை இறக்கிவிடுவான். மந்திரத்தின் பலம் அமோகமாயிருந்தது. முதலில் நம்பிக்கையில்லாத ஜனங்களும் நம்பிக்கை வந்து இவனைப் புகழ ஆரம்பித்தனர். பண சௌகர்யம் ஏற்பட்டது. வீடு வாங்கினான். பொருளும், பெயரும் சேர்ந்தது. மந்திரம் உபதேசித்த குருவை வணங்காமல் வைத்திய்ம செய்யமாட்டான். ஆனால் அந்த விஷ வைத்தியனுக்கோ தான் செய்த உபதேசமோ, இப்படி ஒரு சீடனிருப்பதோ எதுவுமே தெரியாது.
ஒரு சமயம் கோழிக்கோடு ‘ஸாமூதிரிப்பாடு தம்பிரான்’ அதாவது அரசர், ஒருவித விஷக்கடியால் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் விஷக் காய்ச்சல் அதிகரித்து உடல் க்ஷீணமடையலாயிற்று. நாட்டிலுள்ள வைத்தியர்கள், மாந்திரிகர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். யாருடைய முயற்சியும் பலனளிக்கவில்லை. பிரசித்தி பெற்ற விஷ வைத்தியனும் வரவழைக்கப்பட்டான். அவனாலும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அரசன் குடும்பத்தினரும், அதிகாரிகளும் திகைத்து நின்றபோது சிலர் பாலராமன் என்கிற கொச்சுராமனைப் பற்றிச் சொல்லவும், அதையும் பார்த்து விடுவோமே என்றார்கள். உடனே கொச்சுராமன் வரவழைக்கப்பட்டான்.
தன் மந்திர சக்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையுடைய கொச்சுராமன் உடனே குளித்துவிட்டு, விளக்கேற்றி வைத்து நினைவற்றிருந்த அரசரின் முன் அமர்ந்து மந்திர ஜபத்தை ஆரம்பித்தான். ஜபம் செய்யச் செய்ய சிறிது நேரத்திலேயே விஷம் இறங்க ஆரம்பித்தது. அரசர் மெதுவாகக் கண் விழிக்கவும், அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது.
ஜபம் முடிவடைகிறபோது விஷம் முற்றிலும் இறங்கி அரசர் பேச ஆரம்பித்தார். கொச்சுராமனுடைய மந்திர சக்தி அங்கிருந்த வைத்தியர்களையும், மந்திரவாதிகளையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. அனைவரும் அவனைப் பாராட்டிப் பணமுடிப்பும் பெரும் சன்மானங்களும், சால்வைகளும் தந்து கௌரவித்தனர். இதையெல்லாம் கண்ட பிரபல விஷ வைத்தியன் இப்படிப்பட்ட கோரமான விஷத்தையும் போக்கவல்ல மந்திரம் எது என்பதைத் தெரிந்து கொள்ள எண்ணினான்.
கொச்சுராமன் தான் பெற்ற பெருமையனைத்தும் தன் குரு உபதேசத்தால் என்று எண்ணி பிரபல வைத்தியனுடைய வீட்டிற்குச் சென்று, “குருவே! என்னை மன்னித்துவிடுங்கள். நான் தங்கள் மந்திரோபதேசத்தால் பெற்ற இப்பணம் பொருள் அனைத்தையும் தங்களுக்கே அர்ப்பணிக்கிறேன். இதுவரை தங்களை வந்து காணாததற்கும் தகுந்த குருதக்ஷிணை தராததற்கும் என்னை மன்னிக்க வேண்டும்.” என்று பிரார்த்தித்து வணங்கினான். வைத்தியன் ஒன்றும் புரியாமல் ஆச்சரியத்தில் மூழ்கினான். “எனக்கு இந்தப் பொருள் எதுவும் வேண்டாம். நீ எந்த மந்திரத்தால் அரசரைக் குணப்படுத்தினாயோ அந்த மந்திரத்தை மாத்திரம் எனக்கு உபதேசம் செய்” என்று பிரபல விஷவைத்தியன் கேட்டான். கொச்சுராமனும் தான் அவன் வீட்டிற்கு முதலில் பூசணிக்காயோடு வந்ததும், “விட்டி கூஷ்மாண்டம்” என்ற மந்திர உபதேசத்தையும் ஞாபகப்படுத்தினான்.
இந்தக்கதை என்னவோ மலையாள தேசத்தில் பேச்சு வழக்கில் உள்ள வரலாறு. இதற்கு ஆதாரம் கேட்டால் கிடைக்காது. ஆனால் இந்தக் கதையில் கொச்சுராமன் பெற்ற மந்திரசக்தி அவன்பெற்ற மந்திர மஹிமையா? குருதீக்ஷையா? அல்லது அவனுடைய குருவிடமும், மந்திரத்திடமும் உள்ள விசுவாசமும் சிரத்தையுமா?
சிஷ்யனுடைய மனத்திலிருக்கிற உறுதிப்பாடும், குருவினிடத்தில் உள்ள நம்பிக்கையும்தான் குருவினுடைய பூரணமான கருணையை, அனுக்ரஹத்தைப் பெற்றுத் தரவல்லது. இந்தக் கருத்தைத்தான் இந்தக்கதை சொல்கிறது.
குருவருள் இல்லையெனில் திருவருள் இல்லை. இதை விளக்க எத்தனையோ கதைகள் உள்ளன. சொல்லிக் கொண்டே போகலாம்.
சிறுவயதிலிருந்தே பாண்டுரங்கனோடு ஓடி, விளையாடி அருள் பெற்றவர் நாமதேவர். ஒரு சமயம் மகாராஷ்டிரத்திலுள்ள ஞானேஸ்வரர், நிவர்த்தி, ஜானாபாய், கோராகும்பர், சேனா போன்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் பண்டரிபுரத்தில் ஒன்று கூடினர். நாமதேவருக்கு எப்பொழுதுமே பாண்டுரங்கன் அவருடைய தோழன் என்ற பெருமையான எண்ணம் உண்டு. பாண்டுரங்கன் தன் பக்தனான நாமதேவனுக்குப் பணிவு வர விரும்பினான். கோராகும்பரைக் கூப்பிட்டு, “கோரா! இங்கு கூடியிருக்கிற பக்தர்களுள் யார் நன்றாக முற்றிய பக்தர்? நீ தான் பானை செய்பவனாயிற்றே! சுட்டது, சுடாதது உனக்கு நன்றாகத் தெரியுமே!” என்றார் ஞானதேவர். “பிரபு! என்னை மாட்டிவிட்டு விட்டீர்களே இந்த வம்பில்.” என்று பயந்தார் கோராகும்பர். ஒவ்வொருவராக தலையைத் தட்டிப்பார்த்து குட்டிப்பார்த்து “இது விளைந்தது, இது நன்றாக முற்றிவிட்டது” என்று சொல்லிக்கொண்டே வந்தார். நாமதேவர் தலையைச் சோதித்து விட்டு “இது விளையவே இல்லை” என்றார்.
கோபம் வந்தது நாமதேவருக்கு. “பாண்டுரங்கா! ஐந்து வயதிலிருந்தே உன்னோடு விளையாடி, உன்னுடனேயே பொழுதுபோக்கி, உன்னைத் தவிர வேறெதுவுமே அறியாத என்னை விளையாதது என்றல்லவா இந்த பக்தர்கள் தீர்மானித்து விட்டனர்!” என்று பாண்டுரங்கனைப் பிடித்துக்கொண்டு கதறினார் நாமதேவர்.
பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிற லீலாவிநோதனான பாண்டுரங்கன் நாமதேவரைச் சமாதானப் படுத்தினான். “நாமதேவா! உன் பக்தியில் ஒன்றும் குறைவில்லை. நீ என்னுடைய பூரண அன்பைப் பெற்றவன்தான். ஆனால் மற்றவர்கள் மாதிரி நீ குருவின் அருளைப் பெறவில்லையப்பா! அதுதான் உன்னுடைய குறை” என்று சொல்ல உடனே நாமதேவர் அவன் பாதத்தைப் பிடித்துக்கொண்டு “நீதான் என் குரு” என்று கதறினார்.
பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிற லீலாவிநோதனான பாண்டுரங்கன் நாமதேவரைச் சமாதானப் படுத்தினான். “நாமதேவா! உன் பக்தியில் ஒன்றும் குறைவில்லை. நீ என்னுடைய பூரண அன்பைப் பெற்றவன்தான். ஆனால் மற்றவர்கள் மாதிரி நீ குருவின் அருளைப் பெறவில்லையப்பா! அதுதான் உன்னுடைய குறை” என்று சொல்ல உடனே நாமதேவர் அவன் பாதத்தைப் பிடித்துக்கொண்டு “நீதான் என் குரு” என்று கதறினார்.
குருவருளின்றித் திருவருளும் பூரணமாகாது. திருவருள் நமக்குத் தருவது குருவருளே. குருவருளே பரிபூரணத்தையடைய நமக்கு வழிகாட்டும்.
ஆதிசங்கர பகவத்பாதரின் வழித்தோன்றலாய், ஜகத்குருவாய், தவத்திருவுருவாய் என் போன்ற அறிவிலிகளையும் அணைக்கின்ற அன்புருவாய் விளங்குகின்ற ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளுடைய திருமலரடி தொழுது உய்வோமாக.
திருவடி ஞானச் சிவமாக்குவிக்குந்
திருவடி ஞானச் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
திருவடி ஞானச் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
No comments:
Post a Comment