தாயாகத்         திகழாத குற்றம்
நாகா கண்ணன்
நாகா கண்ணன்
பாரதத்தின் பெருமைக்குரிய மாபெரும் இதிகாசமான மகாபாரதம்         சொல்லும் நீதியென்ன? தர்மம் வெல்லும். தர்மம் வென்றது. அதர்மம் வேரோடு அழிந்தது.          ஆனாலும் அதர்மம்தான் எத்தனை செருக்கோடு அலைந்தது! அதனால் ஏற்பட்ட பாதிப்புகள்தான்         எத்தனை, எத்தனை! நியாயவான்களும், தர்மவழி நடப்பவர்களும்தான் எவ்வளவு துன்பங்களை         அனுபவித்தார்கள்! 
நல்ல வேளையாக அந்த மென்மையான மனம் கொண்ட நல்லவர்களை, அப்பாவிகளை         வழிநடத்த கிருஷ்ணன் என்ற ஒரு பற்று கோல் கிடைத்தது. தருமன் தலைமையிலான சகோதரர்கள்,          தம் மனைவியோடு அடையாளம் காட்டிக் கொள்ளாமல் காடுகளிலும், மலைகளிலும் அலைந்து,          ஒளிந்து திரிய வேண்டியிருந்ததே, அந்தக் கொடுமைக்கெல்லாம் முடிவு கட்டப்பட்டுவிட்டது.        
தருமன் மாதிரியான துலாக்கோல் நியாயாதிபதிக்கு, சூதாட்டம்         என்பது மேன்மக்களுக்கான பொழுதுபோக்கு அல்ல என்று தெரியாதா? தெரியும். ஆனாலும்         அவன் கண்ணையும், கருத்தையும் கட்டியது யார்? இழப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக         ஏற்பட்டும், தலையைச் சிலுப்பி, சுதாரித்துக் கொண்டு அந்த வியூகத்திலிருந்து         வெளியே வர அவனுக்கு ஏன் தெரியவில்லை? சூதாட்டம் என்ற ருசி கண்டுவிட்டால்         இழப்பு பற்றிய பயம் இருக்கவா செய்யும்?
'எனக்கு ஒன்றும் தெரியாதே!' என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்         கொண்டு கண்ணன் இதற்கு மழுப்பலாகத்தான் பதில் சொல்வான். ஆனால், பிரபஞ்சத்திற்கே         சூத்திரதாரி அவன். பாண்டவர்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டான்.          எதற்கு? கௌரவர்கள் என்ற அதர்மக் கூட்டத்தைப் பூண்டோடு அழிப்பதற்கு. இது இவன்         ஆடிய சூதாட்டம்! நியாயத்துக்குப் புறம்பானதெல்லாம் நிலைத்திருக்கக் கூடாது         என்ற நீதியின் தீர்ப்பு!
குருக்ஷேத்திரம்         குருதியால் தோய்ந்திருந்தது. இரு தரப்பிலும் உயிர் பிரிந்த உடல்கள் போர்க்களமெங்கும்         சிதறியிருந்தன. பீஷ்மர் மட்டும் விதிவிலக்கு. அம்புப் படுக்கையில் தன் ஆயுளைப்         போக்கிக் கொண்டார். ஆனால் துரியோதனன், அவனுடைய தொண்ணூற்றொன்பது தம்பிகள்,          கர்ணன் போன்ற உயிர்த் தோழன், தன் ராஜ குருக்கள் என்று எல்லோரும் ஒட்டு மொத்தமாக         அழிந்திருந்தார்கள். 
இந்த உடல் குவியலைக் கண்டு அர்ஜுனன் விண்டு போனான். 'என்         உறவினர், என் குரு, என் பங்காளிகள்... இவர்களுக்கெதிராக நான் வில்லெடுத்து         அம்பு தொடுப்பதோ' என்று கிருஷ்ணன் முன்னால் சத்தியாகிரகம் செய்தவன். இப்போது         அந்த உறவுகள், நட்புகள், ஆச்சார்யத் திருவுருவங்கள் எல்லாம் சடலங்களாக அந்தக்         குருக்ஷேத்திர பூமியை ஆக்கிரமித்திருப்பது கண்டு, மனம் உடைந்து கண்ணீர் பெருக்கினான்.
இதோ கர்ணன், அவன் உடலிலிருந்து உயிர் லேசில் பிரிந்ததா?          அதற்கும்தான் கண்ணன் எவ்வளவு நாடகமாட வேண்டியிருந்தது! கர்ணனின் உயிர் நீங்கியபோது         தர்மதேவதையும் ஓடோடி வந்து அவனைக் கட்டிப் பிடித்து அழுதாளே!
துரியோதனன் - தொடை பிளந்து மல்லாந்து கிடக்கிறான். துச்சாதனன்         கைகள் துண்டிக்கப்பட்டு சரிந்திருக்கிறான். பிற கௌரவர்களில் சிலரது தலைகள்         தனியே உருண்டு கிடக்கின்றன. ஆங்காங்கே தனித்தனியாக கைகள், கால்கள், உடல்கள்...அப்பப்பா!          என்ன கொடூரம்! போரின் விளைவு இத்தனை கடுமையாகவா இருக்கும்? போருக்கு முன்னும்,          போரின்போதும் உள்ளத்தை வெற்றிவெறி மூடியிருந்தது. இரக்கம், கருணையெல்லாம்         நீறு பூத்த நெருப்பாகவே இருந்திருப்பது இப்போது புரிகிறது.
பஞ்ச பாண்டவர்களும் திரௌபதியும் தங்கள் சபதத்தை நிறைவேற்றிக்         கொண்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு விலையாக இத்தனை உயிர்களைப் பலி         கொடுக்க வேண்டியிருந்ததே, என்ன செய்ய? போர் என்று வந்துவிட்டால் இதுதான்         தருமம்!
போர்க்களத்தில் உயிர் நீத்தவர்கள் ஆடவர்கள். இவர்களைச்         சார்ந்திருந்த பெண்களின் நிலை என்ன? அவர்கள் இனியும் எந்தக் கொழுகொம்பைப்         பற்றிக் கொண்டு படர முடியும்? தாய், மனைவி, சகோதரி, மகள் ஆகிய அந்தப் பெண்களுக்கு         இனி என்னதான் கதி? கௌரவர்களை வென்றவர்கள் என்ற முறையில், அந்தப் பெண்களுக்கு         சகோதர ஆதரவாகத் தாம் விளங்க வேண்டும் என்று பாண்டவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.          போர் என்ற அரசியல் நியதியில் ஆடவர் இறப்பதும், காயமுறுவதும், போர்க்கைதிகளாவதும்         தவிர்க்க இயலாதுதான். ஆனால் அவர்களையே சார்ந்திருக்கும் பெண்கள்? அவர்களைக்         காப்பதுதான் வெற்றிபெற்ற அரசனின் கடமை. அதை நிறைவேற்ற வேண்டும். 
கிருஷ்ணனுடன் துரியோதனனின் அரண்மனைக்குச் சென்றார்கள் பாண்டவர்கள்.          அங்கே சோகம் ஓலமிட்டுக் கொண்டிருந்தது. இனி தங்களுக்கு வாழ்வு இல்லை என்ற         முடிவில் ஆதரவற்ற பலர் தம் உயிரைத் தாமே மாய்த்துக் கொண்டிருந்தார்கள். அவலம்         அரண்மனையை அலம்பி விட்டிருந்தது. காட்சிகளை கண்கள் கண்டாலும், மனம் ஜீரணிக்க         மறுத்தது.
அதோ, அங்கே யார்...? காந்தாரியல்லவா? கௌரவர்களின் தாய்!          துணியால் கட்டப்பட்டிருந்தாலும், அந்தக் கண்களிலிருந்து பெருகி வந்த கண்ணீர்         அவளுடைய ஆடைகளை நனைத்துக் கொண்டிருந்தது. ஒன்றுக்கு நூறாகப் பெற்றும் ஒன்றுகூட         மிஞ்சாத வேதனை அவள் உள்ளத்தைச் சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கும். இவள்         என்ன சொல்லப் போகிறாள்? ஒரு தாயாக, தன் உதிரத்தில் உதித்தவர்கள் எல்லாரும்         தம் உதிரம் சிந்தி உயிர்நீத்த கொடுமையை எப்படி சாடப் போகிறாள்? அதற்கு என்ன         பதில் சொல்வது?
பாண்டவர்களின் தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்ட கண்ணன் வழக்கம்போல         முன்வந்தான். பாசத்துடனும், பாசமில்லாமலும்; அன்புடனும், அன்பு இல்லாமலும்;          நேசத்துடனும், நேசம் இல்லாமலும்; தர்மத்துடனும், சமயத்துக்கு ஏற்ப அதர்மத்துடனும்         நடந்து கொள்ளும் கண்ணன் காந்தாரியை நெருங்கினான். “அம்மா!...”
அப்படியே நெக்குருகி நெகிழ்ந்து போனாள் காந்தாரி. ''யார்,          யார் அது? என்னை அம்மா என்றழைத்து உரிமை கொண்டாடவும் ஒரு பிள்ளை இருக்கிறானா?          யார் அது...?''
“நான் கிருஷ்ணன் அம்மா....” சற்றே தயங்கியபடி பதிலளித்தான்         கண்ணன். 
பளிச்சென்று உதறி, விலகிப் பாய்ந்து, தட்டுத் தடுமாறி கீழே         விழுந்தாள் காந்தாரி. ''வராதே, என் பக்கம் வராதே. என் பிள்ளைகளை அநியாயமாகக்         கொன்றவன் நீ. நூறு பிள்ளைகளில் ஒருவன்கூட மீதமில்லாதபடி செய்தவன் நீ. இப்போது         என்ன தந்திரம் செய்யப் போகிறாய்? என்ன மாயம் நிகழ்த்தப் போகிறாய்? நான் இன்னும்         உயிரோடு இருக்கிறேனே, என்னையும் அழிப்பது எப்படி என்ற யோசனையோடுதான் வந்திருக்கிறாயா?          அப்படியானால் வா. என்னையும் கொன்றுபோடு. நான் சௌக்கியமாக என் பிள்ளைகளோடு         போய்ச் சேர்ந்துகொள்கிறேன்...'' அவளுடைய கதறல் அனைவரது நெஞ்சையும் பிளப்பதாக         இருந்தது.
பாண்டவர்களும், திரௌபதியும் கலக்கத்துடன் கிருஷ்ணனைப் பார்த்தார்கள்.          என்ன பதில் சொல்லப் போகிறான் இவன்? எப்படி இவளை சமாளிக்கப் போகிறான்?
“அம்மா!...” கருணை பொங்க அழைத்தான் கண்ணன். “உங்களுக்குத்         தெரியாத உண்மையா அம்மா? நீங்களும்தான் கூடவே இருந்து எல்லா விஷயங்களையும்         தெரிந்து கொண்டிருந்திருக்கிறீர்கள். அப்படி இருந்துமா இப்படி கேட்கிறீர்கள்?''        
“நான் வேறு எப்படி கேட்பது? ஒரு தாயாக நான் வேறு எப்படி         கேட்பது?”
“அம்மா! இந்த நிலைமைக்குத் தாங்கள் ஒரு முக்கிய காரணம்         என்பது உங்களுக்குப் புரிகிறதா அம்மா?”
“என்ன, நான் காரணமா? அதுவும் முக்கிய காரணமா? என்ன உளறுகிறாய்?”
கண்ணனை அனைவரும் குழப்பத்துடன் பார்த்தார்கள். பிள்ளைகளின்         நயவஞ்சகத்துக்கும், இந்தப் போருக்கும், அவர்கள் அழிவிற்கும் காந்தாரி எப்படிப்         பொறுப்பாவாள்? ஒருவேளை இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற்றாயே அதுதான் காரணம்         என்று கண்ணன் விதண்டாவாதம் செய்யப்போகிறானோ?
“சொல், கிருஷ்ணா! சொல். நான் எப்படிக் காரணமானேன்?” ஆதங்கத்துடன்         கேட்டாள், காந்தாரி. இப்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருக         ஆரம்பித்திருந்தது. 'என் பிள்ளைகளின் இறப்புக்கு நானே காரணமாமே!'
“அம்மா! நீங்கள் ஒரு பதிவிரதை. கணவன் பார்வையற்றவராக இருந்தும்         பெருந்தன்மையோடு அவருடன் இல்லறத்தைச் செம்மையாக நடத்தியவர்கள். அவரால் பார்க்க         முடியாததையெல்லாம் உங்களாலும் பார்க்க முடியாமல் போகட்டும் என்று உங்கள்         பார்வைக்குத் தடை போட்டவர்கள். இமைகள் எந்த சந்தர்ப்பத்திலும் உயர்ந்துவிடக்கூடாது         என்பதற்காக கண்களைச் சுற்றி கட்டு போட்டுக் கொண்டவர்கள். ஒரு சரியான தர்ம         பத்தினியாக நீங்கள் நடந்து கொண்டிருந்திருக்கிறீர்கள். ஆனால்....”
“ஆனால்? என்ன ஆனால்?” காந்தாரியின் இந்தக் கேள்வி, சுற்றியிருந்தவர்கள்         மனங்களிலும் எதிரொலித்தது.
“நீங்கள் ஒரு நல்ல தாயாக வாழவில்லையே அம்மா!”
“கண்ணா! என்ன சொல்கிறாய் நீ?”
“ஆமாம், அம்மா! கணவருக்காகக் கண்களைக் கட்டிக் கொண்ட நீங்கள்,          பிள்ளைகளுக்காகக் கண்களைத் திறந்திருக்கலாம். உங்கள் பார்வை அவர்கள் மேல்         படவே இல்லையே அம்மா! அவர்களுடைய நடத்தை உங்களால் கண்காணிக்கப்படவே இல்லையே!          அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கே போகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள்,          எப்படிப் பழகுகிறார்கள், என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்         என்று எதையுமே கவனிக்காமல் விட்டுவிட்டீர்களே அம்மா! கவனித்திருந்தால் நீங்கள்         அவர்களைத் தடுத்திருப்பீர்கள். கண்டித்திருப்பீர்கள். ஏன், அடக்கிக் கூட         இருப்பீர்கள். இல்லை. எதுவும் இல்லை. இப்போது தாயன்பு மட்டும்தான் மிச்சமிருக்கிறது;          ஆனால் அதில் பங்குகொள்ளப் பிள்ளைகள்தான் இல்லை. ஆரம்பத்தில் ஒரு கண்டிப்பான         தாயாகத் தாங்கள் விளங்கியிருந்தீர்களானால், இப்போது இத்தனை பெரிய இழப்பு         உங்களுக்கு ஏற்பட்டிருக்காது அம்மா!”
அப்படியே சரிந்தாள் காந்தாரி. கிருஷ்ணனின் குரல் வந்த திக்கில்         சாய்ந்து அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டாள். “உண்மைதான் கண்ணா! தவறு என்னுடையதுதான்.          பிள்ளையைச் சரியாக வழிநடத்தத் தெரியாத ஒரு தாய், அவன்மீது பாசம் வைக்கவும்         தகுதியற்றவள்தான். என் குற்றத்தை உணர்கிறேன். என்னை மன்னித்துவிடு” என்று         கதறினாள்.
ஒரு கனத்த அமைதி அங்கே நிலவியது.
No comments:
Post a Comment