Sunday, April 26, 2015

இந்து மதச்சிறப்பு

இந்து மதச்சிறப்பு
டாக்டர் கலியன் சம்பத்து
உலகில் பல மதங்கள் உள்ளன. இந்து மதம், இஸ்லாம், சீக்கிய, கிறிஸ்துவம், புத்தம், சமணம், யூத, பார்சி, ஷிண்டோ (ஜப்பான்) மதம் என்று பல மதங்கள் உள்ளன.
இம்மதங்கள் விஷ்ணு, சிவன், அல்லா, இயேசுநாதர், மாலிக் என்று வேறு வேறு கடவுளர்களை வணங்குகின்றன. மதங்கள் என்பது இறைத் தத்துவங்களையும், ஆன்மிகத்தையும் அடிப்படையாகக் கொண்ட நெறி முறையாகும். ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையன. ஒருவனுக்குத் தன் தாய் மீது எந்த அளவிற்குப் பற்றும் பாசமும் உண்டோ, அந்த அளவிற்குத் தன் மதத்தின் மீதும் பக்தியும், பாசமும் உடையவனாக விளங்குகிறான். தன் தாய் உயர்ந்தவள் என்று கூறும்போது, அடுத்தவன் தாய் தாழ்ந்தவள் என்று பொருள் அல்ல; அப்படி நினைப்பதே தவறு. மனிதர்கள் ஒரு குறிக்கோளுடன் சரியான பாதையில் தங்கள் வாழ்க்கையைச் செலுத்த வேண்டும் என்பதே ஒவ்வொரு மதத்தின் குறிக்கோள் என்பதை நாம் உணரவேண்டும்.
மதுரை, திருவரங்கம் ஆகிய ஊர்களில் ஆலயங்களுக்கு நான்கு கோபுர வாயில்கள் உண்டு; எப்பக்கம் நுழைந்தாலும் இறைவன் சந்நிதியை அடையலாம். அது போலவே இறைவனை அடைய இந்து, இஸ்லாம், கிறிஸ்து, சமண மதங்கள் வழிகாட்டுகின்றன. எந்த வாயில் தமக்கு அருகில் உள்ளதோ அதன் வழியாக கோவிலுக்குள் நுழைவார் போல, எம்மதத்தில் பிறந்துள்ளார்களோ அம்மதத்தை, அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதையும் உணரவேண்டும்.
சிறு வேறுபாடுகள்:- யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மேலை நாடுகளின் மதங்களில் மனிதனே உலகின் எஜமான் ஆகிறான். ஏனைய ஜீவராசிகள், தாவரங்கள், உலகிலுள்ள செல்வங்கள் யாவும் மனிதனின் எல்லையற்ற, தடையற்ற உபயோகத்திற்கும், அனுபவிக்கவும் படைக்கப்பட்டவை. ஆனால், இந்து மதத்தில் மனிதன் உலகின் எஜமானன் அல்லன்; மற்ற ஜீவராசிகள், தாவரங்கள், மற்றுமுள்ள செல்வங்களை உபயோகப் படுத்திக் கொள்வதுடன், அவற்றைக் காப்பாற்றிச் செழிக்க வைக்கும் கடமையும் மனிதனுக்கு உண்டு. ‘தர்மம்’தான் உலகில் உயர்ந்தது. தர்மத்திற்குக் கட்டுப்பட்டு வாழ மனிதன் கடமைப்பட்டவன். எல்லா உயிர்களும் சமமானவை; மனிதனைப் போலவே மற்ற உயிர்களும் உலகில் வாழ உரிமை உடையன என்று அதர்வண வேதம் கூறுகிறது. (காண்டம் 12-4. சூக்தம் 15 பாடல்)
இந்து மதத்தில் மனிதன் செய்யும் நற்செயல்களுக்கும், தீச்செயல்களுக்கும் கர்ம வினை உண்டு. அந்தக் கர்மாவுக்கு ஏற்றபடி மறுபிறவி உண்டு. ஆனால், மேலை நாட்டு மதங்கள் மனிதனுக்கு ஒரே ஒரு பிறவிதான் மறுபிறவி இல்லை என்கின்றன. பாப, புண்ணியங்களால் உண்டாகும் ‘கர்மவினை’ மேலை நாட்டின் மதங்களில் இல்லை.
நம் நாட்டில் தோன்றிய சமணமதத்தில் கர்ம வினை உண்டு என்பதையும், மறுபிறவி உண்டு என்பதையும் நாம் காணலாம். இதற்கு, ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரமே தக்க சான்றாகும்.
இந்து மதக் கொள்கை:-
இந்து மதத்தின் தலையாய கொள்கை மனிதன் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவன். மனிதன் தன் தேவைக்குத் தகுந்தபடி உலகின் பொருள்களை உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் தன்னலம் கொண்டு அழிக்க அவனுக்கு உரிமை இல்லை. ‘தர்மம்’ மனிதனைக் கட்டுப்படுத்துகிறது. அவனை வழிநடத்துகிறது. பொதுவாக இந்துமதத்தைச் சார்ந்தவர்கள் ஏழு நம்பிக்கைகள் கொண்டவர்களாக உள்ளனர். அவை:
1.கடவுள் நம்பிக்கை உடையவர்கள். 2.வேதங்களில், ஸ்மிருதிகளில் நம்பிக்கை கொண்டவர்கள். 3.கர்ம வினையில் நம்பிக்கை கொண்டவர்கள். 4.மறுபிறவியில் நம்பிக்கை கொண்டவர்கள். 5.வீடுபேற்றில் (மோட்சம்) நம்பிக்கை கொண்டவர்கள். 6.உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். 7.மத சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.
மூன்றுவித உருவகம்:-
இந்துக்கள் கடவுளை மூன்று விதமாக உருவகம் செய்கிறார்கள்.
1.இறைவன் உருவத்தையோ, படத்தையோ வைத்துப் பூஜை செய்யும் ‘ப்ரதிகா’ என்பது.
2.இறைவனைக் குறியீடாக வைத்துப் பூஜை செய்வது ‘லிங்க’ முறை வழிபாடு ஆகும். எடுத்துக்காட்டாக சிவனுக்கு ஸ்படிகம்; விஷ்ணுவிற்கு சாளக்கிராமம்.
3.கோலங்கள், கோணங்கள் முதலியன வரைந்து யந்திர முறையில் வழிபாடு செய்தல். உதாரணமாக ‘மேரு’ வரைந்து சக்தியை வணங்குதல், ‘இருதய கமலம்’ வரைந்து லக்ஷ்மி பூஜை செய்தல்.
இன்னும் சில விளக்கங்கள்:- இறைவன் உருவத்தை அன்பர்களே வடிவமைத்துக் கொள்ளலாம். அவனுக்குரிய பெயரையும் அவர்களே சூட்டலாம். இதனை,
“தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர்மற் றப்பேர்-தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ண மாழியா னாம்” (2125)
என்ற பொய்கையாழ்வார் பாசுரத்தால் உணரலாம்.
சமரசம் உயர்வானது:-
எல்லா நதிகளும் கடலை நோக்கியே செல்கின்றன. எல்லா மலர்களும் சூரியனையே நோக்கி மலர்கின்றன. எல்லா உயிர்களும் இறைவனையே நாடுகின்றன. சமரசமே சமயத்தின் அடிப்படை. இதனை,
“வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபலவாக்கி அவையவைதோறும்
அணங்கும் பலபல வாக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்நின்கண் வேட்கையெழுவிப்பனே” (2573)
என்ற நம்மாழ்வார் பாசுரத்தின் மூலம் ஓரளவு அறியலாம்.
ஜீவகாருண்ய ஒழுக்கம்:-
இந்துமதம் எல்லா உயிர்களையும் நேசிக்கச் சொல்கிறது. ஜீவகாருண்யம் ஒழுக்கமாகக் கூறப்படுகிறது. மகாகவி பாரதியார், “தின்ன வரும் புலிதன்னையும் அன்போடு சிந்தையில் போற்றுவாய் நன்நெஞ்சே!” என்கிறார். பாய்ந்து வரும் புலியிலும் இறைவனைக் காணவேண்டும் என்பது இதன் பொருள்.
பாணினி என்பவர் காட்டில் அமர்ந்து சீடர்களுக்குப் பாடம் நடத்தியபோது, புலிவந்தது; சீடர்கள் ஓடிவிட்டனர். பாணினி புலியின் உருவத்தில் இறைவனைக் கண்டு இன்புற்றார்; புலி அவரை அடித்துக் கொன்று தின்றது; அத்வைத நிலையைக் கண்ட முனிவர் பாணினி, பின்வந்த பாஷ்யங்களில்’பாணினி பகவான்’ என்று போற்றப்படுகிறார்.
இந்து மதத்தின், இந்த அடிப்படையில் தான் அனுமான் (குரங்கு) தெய்வமாக வழிபடப்படுகிறார். மயிலையும், சேவலையும், கருடனையும், பசுவையும், காளையையும் இறைவனோடு இணைத்து வழிபட்டார்கள். நாயைக்கூட வயிரவனாக வழிபட்டார்கள்.
உயிர்க்குலத்தை வணங்கி, அவற்றில் இருக்கும் இறைவனைக் கண்டு போற்றி வழிபட்டவர்கள் இந்து சமயத்தினர்.
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா! நின்றன்
கரியநிறந் தோன்றுதையே, நந்தலாலா!
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா!-நின்றன்
பச்சை நிறந்தோன்றுதையே நந்தலாலா;
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா-நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்தலாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா!
என்று பாரதியார் பாடி எதிலும் எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு அனுபவிக்கும் உயர்ந்த நிலையைக் கூறுகிறார்.
எங்கும் பரவி வியாபித்து இருப்பவன் விஷ்ணு என்பதை, ‘வியாப்னோதி இதி விஷ்ணு’ என்று வேதம் கூறுகிறது. இதனை,
“திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவதுமாய் அவை அவை தொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே (2681)
என்று நம்மாழ்வார் கூறுகிறார்.
கொல்லாமைக் கொள்கை:-
“பிற உயிர்களைக் கொல்வது பாபம்” என்கிறது இந்துமதம். திருவள்ளுவர் புலால் மறுத்தல், கொல்லாமை என்று இரண்டு அதிகாரங்களைப் படைத்துள்ளார்.
“தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்” (குறள் 256)
பொருள்: புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லாது இருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் எவரும் இருக்கமாட்டார்கள்.
“அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.” (குறள் 321)
பொருள்: அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும். என்ற குறட்பாக்களைப் படித்தோர், கடைப்பிடித்தால் தான்
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்” (குறள் 260)
என்ற குறளுக்குப் பலன் கிட்டும்.
அருட்பிரகாச வள்ளலாரும்,
“கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில் வந்தஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்குபோல் கோடிதானம் வள்ளலாய் வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு(அ)டைவன் அன்றே!”
என்று கூறியுள்ளார்.
அகங்காரம் கூடாது:
இந்துமதத்தில் ‘நான்’ என்ற அகங்காரம் (ஆணவம்) இருத்தல் கூடாது. அடியேன், தாசன் என்ற சொற்களைக் கூறித் தம்மைப் பணிவுடையவன் ஆகவும், அடக்கமுடையவனாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒரு சீடன் குருவிடம் சென்று, ‘நான் வந்திருக்கிறேன்’ என்று கூற, குருவோ, ‘நான் செத்ததும் வா’ என்று கூற, சீடன் திகைத்து விட்டான். குரு செத்ததும் யாரிடம் உபதேசம் கேட்பது என்று யோசித்தான். ‘நான்’ என்ற ஆணவத்தை ஒழிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை.
கடவுள் தேவை:
டயருக்குள் டியூப் உள்ளது. டியூபுக்குள்ளே காற்று உள்ளது. வண்டி இயங்கக் காற்று தேவை. டயர் போல் உடம்பும் டியூப் போல உயிரும் உள்ளன. உயிருக்குள் காற்று போலக் கடவுள் இருக்கிறார். உடல் இயங்கக் கடவுள் தேவை.
எது தெய்வம்:
“உண்மைப்பொருள் ஒன்று. அதனைப் பலபேர் பலவாறு சொல்கிறார்கள்.” என்று ரிக்வேதம் கூறுகிறது. “சுத்த அறிவே சிவம்.” என்று தாயுமானவரும், “அறிவே தெய்வம்” என்று பாரதியாரும் கூறுகின்றனர். “ஈசன் ஒளி எல்லாப் பொருள்களிலும் திரைக்குள் மறைந்தது போல் நிற்கும் ஒளியே தெய்வம்” என்று இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார். “உடலில்லாதது, தோற்றமில்லாதது, வடிவமற்றது, ஜடமில்லாதது, நம் புலன்களுக்கு எட்டாதது இது தெய்வம். தெய்வம் எது? ஜகத்தின் உயிர் என்கிறார் எகிப்து தேசத்து ஞானியாகிய ஹெர்மெஸ்.
தீர்ப்பாக பாரதியார் கூறுவது:-
“அன்புதான் இதற்கெல்லாம் தீர்ப்பு. மனிதருக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும் குழந்தைக்கும், வெள்ளைக்கும், மஞ்சளுக்கும், செம்புக்கும், கருநிறத்து நீக்ரோவருக்கும் சகலருக்கும் உள்ளே பரமாத்மா பரம புருஷனாகிய நாராயணனே அந்தர்யாமியாக நின்று வெளித்தொழில்களை நிகழ்த்துகிறான். ஆதலால் மானிடரே சகோதர உணர்ச்சியே தீர்ப்பு,” என்கிறார் பாரதியார்.
முடிவுரை:
நாத்திகம் பேசுபவர்களை மற்ற மதத்தினர் தண்டிக்கிறார்கள்; ஆனால் இந்து மதத்தினர் நாத்திகம் பேசுபவர்களைப் பொருட்படுத்தாமல் அமைதி காக்கின்றனர்; இதற்கு இந்துமதம் கூறும் ‘அன்பே கடவுள்’ என்ற கொள்கைதான் காரணம்.
மத நல்லிணக்கம் இன்றைய உலகின் தேவையாகும்.மதத்தால் வேறுபடுவது அறிவுடையார் செயலன்று. இந்தியாவின் ஆன்மா மதத்தில் உள்ளது என்ற பொருள்பட ஜிலீமீ sஷீuறீ ஷீயீ மிஸீபீவீணீ வீs வீஸீ ஸிமீறீவீரீவீஷீஸீ என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அது உண்மைதான். இந்தியாவின் இமயமலையும், கங்கையும், காவிரியும், குமரி முனையும் மத உணர்வுகளால் பிணைக்கப்பட்டவை. எனவே, மத நல்லிணக்கம் காண பாரதியார் பாடல் ஒன்று:
ஆத்திசூடி, இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற்கடல் மிசைகிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
இயேசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
****

No comments:

Post a Comment