Wednesday, September 26, 2012
முத்திகள் பலவிதம்
மதங்கள் பல உள. ஆயினும் அவை எல்லாம் கூறுவது ஒன்றே. அதாவது விடுதலை அல்லது வீடுபேறு. இவ்வாறு வெவ்வேறாக உள்ள மதங்கள் கூறவது வீடுபேறு ஆயினும், அவை கூறும் வீடு பேற்று நிலைகளில் பெரும் வேறுபாடுகள் உள்ளன.
ஒரு மதம் சுவர்க்கத்தை அடைந்து அங்கு அழகான பெண்களுடன் போகத்தை அனுபவித்துக்கொண்டிருத்தல் முத்தி என்கின்றது. இஸ்லாத்தில் இவ்வாறான விவரணம் காணப்படுகின்றது. இன்னொரு மதம் இந்த உடல், மனம் என்ற இருப்புகள் கெடுவது முத்தி என்கின்றது. பௌத்தம் இவ்வாறான முத்தியைப்பற்றிப் பேசுகின்றது. சில மதங்கள் எமது ரஜோ, தமோ, சத்துவ குண பேதங்கள் அடங்குவது முத்தி என்கின்றன. எமது தீய செயல்கள் அல்லது வினைகள் எல்லாம் விடுபடுவது முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன. எம்மைப் பீடித்திருக்கும் மலமாசான ஆன்ம அழுக்குகள் நீங்குவதே முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன. நித்திய ஜீவனாகும் தன்மையே முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன. விவேகம் அல்லது ஞான நிலையே முத்தி என்று சில மதங்கள் பேசுகின்றன. உயிர் என்ற இருப்பே இல்லாது போதலே முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன. அட்டமாசித்திகளை அடைதலை முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன. கல்லைப்போல துக்கம், சுகம் எது வந்தாலும் சலனம் இல்லாமல் இருக்கும் நிலையை அடைதலே முத்தி என்று சில மதங்கள் கூறுகின்றன.
மற்ற மதங்கள் கூறுவது இருக்கட்டும். இந்து மதத்திலேயே பல விதமான முத்திகள் கூறப்படுகின்றனவே. இறைவன் உயிர் என்ற பேதம் இல்லாமல் உயிர் தானே இறை என்று உணர்தல் முத்தி என்று சங்கரரின் அத்துவிதம் கூறுகின்றது. உயிரும் இறையும் ஒருபோதுமே ஒன்றாக முடியாது; உயிர் இறையை அடைந்து அணுக்கத்தில் பேரின்பத்துடன் இருத்தலே முத்தி என்று மத்துவரின் துவைதம் கூறுகின்றது. உயிருக்குள் உயிராக உடனாக இருக்கும் இறையை அறிந்து அனுபவிப்தே முத்தி என்று இராமானுஜரின் விசிட்டாத்துவிதமும், நீலகண்டரின் சிவாத்துவிமும் கூறுகின்றன.
உண்மை ஒன்றாகத்தானே இருக்கவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மதமும் முத்தியைப்பற்றி பலபல விதமாகக் கூறுகின்றனவே. இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரணாக ஒரே குழப்பமாக இருக்கின்றனவே என்று எண்ணுகின்றீர்களா? இவற்றுள் எது உண்மை என்று கேட்டால் ஒவ்வொரு மதமும் தத்தமது முத்திக் கொள்கையே உண்மை என்று சாதிக்கின்றன; மற்ற மதங்களுடன் பேதிக்கின்றன; அவையெல்லாம் கூறுவது பொய் என்றும் போதிக்கின்றன. இதற்காக ஒன்றையொன்று எதிர்க்கவும், தாக்கவும் இவை தயங்குவதில்லை. இதை தமது மதக் கடமையாகவும், கடவுளுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டாக தமக்கு கிடைத்த ஒரு பேறாகவும் எண்ணி இவ்வாறு செய்கிறார்கள். ஜீவனுக்கான சாந்தியையும், உலகத்துக்கான சமாதானத்தையும் வார்த்தைக்கு வார்த்தை கத்திக் கத்திப் போதிக்கும் இம் மதங்களால் மனித வரலாற்றில் பல யுத்தங்கள் நிகழ்ந்திருக்கினறன; பல உயிர்கள் அழிந்திருக்கின்றன. இவ்வாறு அழிந்த மனித உயிர்களின் எண்ணிக்கை இரண்டு உலக மகா யுத்தங்களில் அழிந்த மனித உயிர்களைவிட அதிகம் என்றும் அறிகின்றோம். ஆனால் அறிவியல் வானத்தை முட்ட வளர்ந்துவிட்டது என்று பெருமை பேசும் இக்காலத்திலும் கூட இந்த யுத்தங்களும் அழிவுகளும் தொடருகின்றன.
”சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்”.-என்றும்
”இத்தேவர் அவர் தேவர் தேவரவர் என்றிங்கன்
பொய்தேதவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே”- என்றும் திருவாசகம் இவர்களைப்பற்றி 1100 ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருக்கின்றது. .
இந்தச் சமயங்கள் ஒன்றுதானும் உலக சமாதானத்துக்கோ, உலக மக்களின் ஒருமைப்பாட்டுக்கோ உதவுவதாகத்தெரியவில்லை. இவற்றினால் உலக சாமாதனாத்துக்கும் மனித குல ஒற்றுமைக்கும் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகவே தெரிகின்றது. இவர்கள் கூறும் சமாதானம் எல்லாம் உலகம் முழுமையும் தமது ஒரே மதத்தின் கீழ் வரும்போது வருகின்ற சமாதானமே. இவர்களுடைய கடவுள் இறுதிக்காலத்தில் மற்றவர்களை நியாயம் தீர்த்து நரகத்துக்கு அனுப்பியபின் இவர்களுக்கு உலகைக் கொடுக்கும்போது வருகின்ற நித்திய சமாதானம் பற்றியும் இவர்கள் பேசுகின்றார்கள். .
சைவம் இதைப்பற்றி என்ன சொல்லுகின்றது?
அரிவையர் இன்புறும் முத்தி, கந்தம் ஐந்தும்
அறும் முத்தி, திரி குணமும் அடங்கும் முத்தி,
விரவு வினை கெடும் முத்தி, மலம் போம் முத்தி,
விச்சிரகம் நித்தம் முத்தி, விவேகம் முத்தி,
பரவும் உயிர் கெடும் முத்தி, சித்தி முத்தி,
பாடாண முத்தி, இவை பழி சேர் முத்தி
திரி மலமும் அகல, உயிர் அருள் சேர் முத்தி
திகழ் முத்தி, இது முத்தித் திறத்தது ஆமே
என்று இவ்வாறான பல வகைப்பட்ட முத்திகள் பற்றி சைவத்தின் மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான சிவப்பிரகாசம் நூலின் 50வது பாடல் கூறுகின்றது. அந்தந்த மதங்களை அனுசரித்து அதன்படி வாழ்ந்தவர்கள் அடைகின்ற இவ்வகையான முத்திப்பேறுகள் எல்லாவற்றையும் சைவம் ஏற்றுக்கொள்கின்றது. ஆயினும் இவ்வாறான முத்திகள் எல்லாம் பத முத்திகள், அதாவது ஒவ்வொரு விதமான பதவி நிலைகளை அடைந்து அனுபவிக்கும் முத்திகள் என்றும், உயிர்களின் இந்த அனுபவ காலம் முடிந்ததும் அவை மீண்டும் தமது பயணத்தை தொடர வேண்டும் என்றும் சைவம் கூறுகின்றது.
இவ்வாறு உயிர்கள் நாத்திகம் முதலான பல்வேறு விதமான மதங்களில் பல பிறவிகளில் பிறந்து அவ்வச்சமய நூல்களும் தாபகர்களும் போதகர்களும் கூறும் முறைப்படி ஒழுகி அவ்வச் சமயங்கள் கூறும் சுவர்க்க போகங்களையும், முத்தி பதங்களையும் அனுபவித்து ஈற்றில் வேதங்கள் கூறும் வைதிக மதங்களில் பிறந்து, அவற்றின் பல வழிகளையும் அனுசரித்து ஒழுகி, அவை கூறும் துவைத, விசிட்டாத்துவித, அத்துவித முத்தி நிலைகளில் தோய்ந்து, கடைசியாக உயிர் இறையுடன் இரண்டலா நிலையில் ஒன்றி அனுபவிக்கும் நித்தியானந்த சுத்த அத்துவித முத்தி நிலையை அடைகின்றன என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. மெய்யியல் ரீதியாக இதற்கு மேலான நிலை என்று ஒன்றை கூறவோ அல்லது கற்பனை பண்ணவோ முடியாத நிலை உள்ளது. ஆகவே தான் சைவம் இதுவே இறுதியில் வருகின்ற நித்தியமான பேரின்ப வீடு என்றும் இதற்கு மேல் எந்தவிதமான முத்தியும் இல்லவே இல்லை என்றும் அறிவியல் ரீதியாக ஆணையிட்டுக் கூறுகின்றது.
அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதமாம் என்று
அபேதம், பேதாபேதம், பேதமாக
முத்தி பலவும் பகர்ந்தோம் பக்குவத்துகு ஈடா(ய்)
முத்தி அதி ரிக்குச் சொன்ன முத்தி குக கேள்,
சுத்த அத்துவிதமான சாக்ஷாத் தாரகையாஞ்
சொன்ன இம் முத்திக்கு மேல் அறிவது ஒன்றும் இல்லை
சத்தியமா(ய்), முதற், புனர், சத்தியம் முக்காலும்
சத்தியமாகும், நாத்தி, நாத்தி, நாத்தி
அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதம் என்று அபேதம், பேதம், பேதாபேதமாக பக்குவத்துக்கீடா(க) முத்தி அதிகாரிக்குச் சொன்ன முத்தி(யை) குக(னே) கேள்! சுத்த அத்துவிதமான சாட்சாட்காரதையாக ( விளங்கப்பெறுகின்ற) சொன்ன முத்திக்கு மேல் அறியத்தக்கது ஒன்றும் இல்லை. நாத்தி நாத்தி நாத்தி. ( இல்லை, இல்லை, இல்லை.) இது முதல் சத்தியம், புனர் (மீண்டும்)சத்தியம், முக்காலும் சத்தியம்.
-சர்வஞானோத்தர ஆகமம்; பாடல் 32-
இதையே திருமூலர் பத்தாம் திருமுறையான திருமந்திரத்திலே பின்வருமாறு கூறுகின்றார்.
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராதாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த முத்தியே
-திருமந்திரம் 1437-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment