Tuesday, September 18, 2012
திருமூலர் எழுதிய திருமந்திரம் கூறும் வேதச் சிறப்பு (வேதத்தின் பெருமை)--ஆகமச் சிறப்பு (ஆகமத்தின் பெருமை)
. வேதச் சிறப்பு (வேதத்தின் பெருமை)
51. வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.
பொருள் : வேதத்தில் சொல்லப்படாமல் விட்டுப் போன நீதி ஒன்றும் கிடையாது. நாம் ஓதத்தக்க நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளன. அதனால் அனுபூதிமான்கள் தர்க்க வாதத்தை விடுத்து எல்லாப் பொருளும் நிரம்பிய வேதத்தை ஓதியே முத்தி அடைந்தார்கள். திருக்குறளே செந்தமிழ் மறை என்று கழகப் பதிப்பில் கண்டுள்ளது. ஆனால் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற வடமொழி வேதங்களைப் பற்றி தான் ஆசிரியர் கூறுகின்றார்.
52. வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.
பொருள் : வேதங்களை ஓசையளவில் எடுத்தும் படுத்தும் சொல்கின்றவன் அவற்றை அறிந்தவன் ஆவான். வேதத்தை உரைத்த இறைவன் பிரமப் பொருள் விளங்கவும், அவன் அந்தணர் வேள்வி செய்வதன் பொருட்டும், உண்மைப் பொருளை உணர்த்தவும் வேதத்தைக் கூறியருளினான். ஆரிய வேதம் உரைத்தவன் பிரம்மா.
53. இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாய்உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.
பொருள் : மந்திர வடிவான அழகிய வேதத்தில் உள்ளத்தை உருக்குகின்ற உணர்வாய் உணரப்படுகின்ற வேதத்தினில் விளங்கி, அச்சத்தை விளைவிக்கும் கம்பீரத் தொனியுடைய வேத மந்திரங்களாய், சூக்கும நிலையில் நின்றவன் முக்கண்ணையுடைய சிவபெருமான் ஆவான். இருக்கு என்று சொல்லப்படுகின்ற சுலோகங்களையுடையது ஆரிய வேதம்.
54. திருநெறி யாவது சித்துஅசித்து அன்றிப்
பெருநெறி யாய் பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.
பொருள் : தெய்வீக நெறியாவது, அறிவு அறியாமையற்ற வீடு பேறாய் உள்ள இறைவனை எண்ணி, குருவால் உணர்த்தப்பெறும் நெறியாய்ச் சிவத்தைப் பொருந்தும் ஓர் ஒப்பற்ற நெறியாகும். இந் நெறியினையே சிறப்பாக வேத முடிவான உபநிடதம் கூறும். தெய்வீக நெறியாவது குரு அருளால் சிவனடி சேர்ப்பிக்கும் நெறி என்று உபநிடதம் கூறும்.
55. ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.
பொருள் : ஆறு அங்கங்களாக ஆராயப் பெற்று வரும் வேதத்தை அருளிச் செய்தவனை உடம்பின் பகுதியாகக் கொண்டு அவனது இயல்பை உணர்வார் இல்லை. தம்மின் வேறான அங்கமாக வைத்து வழிபட்டு, பிறகு தமது இஷ்ட காமியங்களைப் பெருக்கிக் கெடுகின்றார்களே. ஆறங்கமாவன; சிட்சை, கற்பகம், வியாகரணம், சந்தோவிசிதி, சோதிடம், நிருத்தம் என்பன.
56. பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே.
பொருள் : பாடல்களும், அவற்றுக்கான இசையும், அலைந்து ஆடுகின்ற ஆடல் மகளிரின் ஆட்டமும் நீங்காத உலகில் வேதநெறி காட்டும் உண்மை நெறிநில்லார், வேள்வி செய்யும் விருப்பம் உடையவராய் விரதமில்லாதவர் ஆவர். அவர் புறத்தே சென்று மாறுபாடுற்று அழிகின்றனர். பாட்டும் இசையும் ஆட்டமும் இறைவனது உண்மையை உணர அமைக்கப் பெற்றவை. இவ்வுண்மையை உணராமல் புறத்தோற்றத்தில் மயங்கிக் கெடுவதாகக் கூறுகின்றார்.
3. ஆகமச் சிறப்பு (ஆகமத்தின் பெருமை)
57. அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
பொருள் : கரிய நிறமுடைய உமாதேவியை இடப்பாகத்தில் உடையவன், அருளிச் செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. வணக்கத்தைச் செய்து பிரணவர் முதல் மகாளர் ஈறாக அறுபத்தறுவரும் ஐந்தாவது முகமாகிய ஈசான முகத்திலிருந்து அவற்றின் பொருளைக் கேட்டனராம். உமாபாகன் இருபத்தெட்டு ஆகமங்களை அறுபத்தாறு பேர்களுக்கு ஈசான முகத்திலிருந்து உபதேசித்தருளினான். ஐந்து முகங்களாவன; சத்தியோபாதம், வாம வேதம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்பனவாம்.
58. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
பொருள் : இறைவன் ஆன்மாக்கள்மீது வைத்த கருணையால் கூறியருளிய ஆகமங்கள் எண்ணுவதற்கு இயலாது. இருபத்தெட்டுக் கோடியே நூறாயிரமாகும். இவற்றின் வழி தேவர்கள் இறைவனது பெருமையைச் சொன்னார்கள். நானும் அவ்வழியைப் பின்பற்றி அப் பொருளை வணங்குகிறேன். இந்த எண் ஆகமத்திலுள்ள கிரந்தங்களைக் குறிக்கின்றன. கிரந்தங்கள் - சூத்திரங்கள்.
59. பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.
பொருள் : அறிஞர் என்பவர் பதினெட்டு மொழிகளும் தெரிந்தவர். அத்தகையோர் ஆகமம் கூறும் உண்மையை நன்றாக அறிவர். அறிஞர்கள் அறிந்த பதினெட்டு மொழிகளும் அண்டங்களுக்கு முதல்வனாகிய சிவன் வெளிப்படுத்திய அறத்தைச் சொல்லுவனவாம். பதினெட்டு மொழிகளிலும் சிவன் சொன்ன அறமே உள்ளது.
60. அண்ணல் அருளால் அருளும்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
பொருள் : இறைவன் கருணையால் அருளிச் செய்த தெய்வத் தன்மை பொருந்திய ஆகமம், வானுலக வாசிகளாகிய தேவர்களுக்கும் அனுபவத்துக்கு வாராதது. அவற்றைக் கணக்கிடின் எழுபது கோடியே நூறாயிரமாகும். அவ்வாறு கணக்கிட்டு அறிந்தாலும் அனுபவன் இன்றேல் அவை நீரின்மேல் எழுத்துப் போலப் பயன்படாது போகும். ஆகமத்தை அனுபவமின்றி அறிந்தால் பயனில்லை.
61. பரனாய் பராபரம் காட்டில் உலகில்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.
பொருள் : மிக மேன்மையானவனாய்ப் பரஞானம் அபரஞானம் ஆகிய இரண்டையும் அறிவித்து, உலகைத் தாங்குபவனாய் சிவ புண்ணியத்தைத் தான் அருள் செய்யும்போது அரனாய், தேவர்கள் வணங்கி வழிபடும் சிவபெருமான் அறிவாய் ஆகமத்தில் விளங்குகின்றான். பராபரம் - பரஞானம், அபரஞானம். பரஞானம் - சிவஞானம், அபரஞானம் - கலைஞானம்.
62. சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.
பொருள் : சிவமாகிய பரம்பொருளிடமிருந்து சத்தியும் சதாசிவமும் மனத்துக்கு உவந்த மகேசர் உருத்திரர் தவத்தைச் செய்த திருமால் பிரமன் ஆகியோர் அவரவர் அறிவில் விளங்கிய ஒன்பது ஆகமங்களும் எங்களது குருநாதனாகிய நந்தியெம் பெருமான் வழிமுறையாகப் பெற்றவையாகும். பரமசிவத்திடமிருந்து பெற்ற ஆகமத்தைக் குருநாதனாகிய நந்தியெம் பெருமான் பெற்றான்.
63. பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றுஅவ் வியாமளம் ஆகும்கா லோத்தரம்
துற்றநல் சுப்பிரம் சொல்லு மகுடமே.
பொருள் : குருபரம்பரையில் பெற்ற ஆகமங்கள் காரணம், காமிகம், பொருந்திய நல்லவீரம், உயர்ந்த சிந்தியம், வாதுளம், மேலும் தந்திர சாத்திரமாகிய யாமளம், நன்மையாகும் காலோத்திரம், மேற்கொண்டு ஒழுகவல்ல நல்ல சுப்பிரம், சொல்லத் தகுந்த மகுடம் என்ற ஒன்பது மாகும். 1. காரணம், 2. காமிகம், 3. சிந்தியம், 4. சுப்பிரம், 5. வீரம், 6. மாதுளம், 7. காலோத்திரம், 8. மகுடம், 9. யாமளம். இவையே நந்தியெம்பெருமான் பெற்ற ஒன்பது ஆகமங்களாகும்.
64. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.
பொருள் : இறைவன் அருளால் வந்த சிவாகமங்கள் கணக்கற்ற கோடிகளாகத் தொகுத்துச் சொல்லப்பட்டிருப்பினும், இறைவன் சொன்ன உண்மைப் பொருளை உணராவிடின் அவை அனைத்தும் நீர்மேல் எழுத்துப் போலப் பயனற்றவையாகும்.
65. மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
பொருள் : மழைக் காலமும் கோடைக் காலமும் பனிக்காலமும் இலயப்பட்டு நின்று, ஏரியும் வறட்சியடைந்திருக்கும் ஊழிக்காலத்து, வடமொழியையும் தமிழ் மொழியையும் ஏக காலத்து உபதேசித்து, சிருஷ்டி தொடங்குமுன் பராசத்திக்குச் சிவபெருமான் அருள் புரிந்தான்.
66. அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.
பொருள் : ஆன்மாக்களைப் பந்தத்தினின்றும் நீக்கும் முறைமையினையும் பந்தத்தில் விடுகின்ற முறைமையினையும் கண் இமைத்தல் ஒழிந்து உயிர்போகின்ற முறைமையினையும், தமிழ்சொல் வடசொல் ஆகிய இரண்டாலும் உணர்ந்துகின்ற சிவனை உணர முடியுமோ? முடியாது. பந்தமும்வீடும் அருளுகின்ற சிவனை ஆகம அறிவினால் அறிய முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment