Wednesday, September 26, 2012
சேவலும் மயிலும் வாழ்க!
முருகப்பெருமானுக்கு வாகனம் மயில். அதனால் அவனுக்கு மயில் வாகனன் என்று பெயர். முருகனுடைய கொடி சேவற்கொடி. முருகன் சூரபத்மனுடன் போர் புரிந்தபோது ஈற்றில் அவன் மாமரமாக உருவெடுத்து வந்தான். அப்போது முருகப்பெருமான் எய்த வேல் அந்த மரத்தை இரு கூறுகளாக்கித் தள்ளிற்று. அப்போது ஒரு பாதி மயிலாகவும் மற்றொரு பாதி சேவலாகவும் உருவெடுத்து முருகனை எதிர்த்து வந்தன. அப்போது அவை முருகனுடைய அருட் பார்வை பெற்று அடங்கின.
“தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டுங் கொல்லோ அடுசமர் இந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள் பெற்றுய்ந்தான்”
என்று இதை கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்திலே வருணிக்கின்றார். இப்பொழுது ஒரு வினா எழுகின்றது. சூரபத்மனைக் கொல்வதற்கு முன்னர் முருகனுக்கு சேவல் கொடியும், மயில் வாகனமும் இருந்தனவா? இல்லையா? முருகனுக்கு சூரபத்மனை வதைப்பதற்கு முன்னரே மயில் வாகனமும், அவரின் தேரில் சேவற்கொடியும் இருந்தன. முருகன் யுத்தத்தின் இடையில் சூர பத்மனுக்கு விசுவரூபக் காட்சி கொடுத்தபோது மயில்வாகனத்திலேயே காட்சி கொடுத்திருக்கின்றார். அப்போது சூரன் உள்ளத்தில் நிகழ்ந்த உதித்த எண்ணத்தை அவன் வார்த்தையில் சொல்லுவதே
“கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப்
பாலன் என்றிருந்தேன் அந்நாள் பரிசிலை உணரந்திலேனால்
மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூல காரணமாக நின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ?”
என்கின்றது பிரபலமான கந்தபுராணப் பாடல். கோலமா மஞ்ஞை என்பது முருகனுடைய மயிலை. அப்போது இந்த மயில் யாது? யுத்தத்திலே சூரபத்மன் சக்கரவாகப்பறவை வடிவெடுத்து அண்டசராசரங்கள் எல்லாம் எண்டிசைகளிலும் பறந்து சென்று போர் புரிந்தான். பறவையாகப் பறந்து செல்லும் சூரபத்மனை தேரில் துரத்தி யுத்தம் செய்வது தகாது என்று முருகன் இந்திரனை நோக்க அவன் மயில் வடிவெடுத்து முருகப்பெருமானைத் தாங்கிப் பறந்து சென்று அவர் யுத்தம் செய்ய உதவினான்.
“இந்திரன் அனையகாலை எம்பிரான் குறிப்புந் தன்மேல்
அந்தமில் அருள் வைத்துள்ள தன்மையும் அறிந்து நோக்கிச்
சுந்தர நெடுங்கட் பீலித் தோகை மாமயிலாய் தோன்றி
வந்தனன் குமரற் போற்றி மரகத மலைபோல் நின்றான்”
என்று கந்தபுராணம் இதனை வர்ணிக்கின்றது. இதேபோல போரின் தொடக்கத்தில் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளியபோது அக்கினி தேவன் அவருக்கு சேவற் கொடியாக வந்தான். இதைப் பின்வரும் கந்தபுராணப் பாடல்கள் கூறுகின்றன.
“போதம் அங்கதிற் புங்கவர் யாவருஞ்
சோதி வேற்படைத் தூயவன் ஏறுதேர்
மீது கேதனம் இல்லை வியன்கொடி
ஆதி நீயென்று அழலினை ஏவினார்” அழல் என்பது அக்கினி.
“ஏவலோடும் எரிதழற் பண்ணவன்
வாவு குக்குட மாண்கொடி யாகியே
தேவதேவன் திருநெடுந் தேர்மிசை
மேவி ஆர்த்தனன் அண்டம் வெடி பட” குக்குடம் என்பது சேவல்.
ஈற்றிலே சூரபத்மன் சேவலாகவும் மயிலாகவும் வந்தபின்னர் மயிலாக இருந்த இந்திரனையும் சேவல் கொடியாக இருந்த அக்கினியையும் மீண்டும் தத்தமது பழைய நிலைக்கு அனுப்பினார் முருகன்.
“புக்குள குமரமூர்த்தி பொறிமயில் உருவமாயுங்
குக்குடமாயும் நின்ற அமரரைக் குறித்து நோக்கி
மிக்கநும் இயற்கையாகி மேவுதிர் விரைவின் என்ன
அக்கணம் அவருந் தொல்லை வடிவுகொண்டு அடியில் வீழ்ந்தார்”. தொல்லை வடிவு என்பது பழைய வடிவு.மயில் வாகனம் எனபது பிரணவ மந்திரமாகிய் ஓம் என்பதனைக் குறிக்கும்.
“....ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடு மயிலென்ப தறியேனே...”
-(வாதினை)திருப்புகழ்-
இதை ஆடும் பரி என்று அருணகிரிநாதர் கந்தரனுபூதி முதற் பாடலில் கூறுகின்றார். பரி என்பது குதிரை. இதையே திருப்புகழில்
“...ஓகார பரியின் மிசை வர வேணும்...”
- (இரவி)திருப்புகழ்-
என்று அருணகிரி பாடுகின்றார். இது நடராசப் பெருமானின் திருவாசிக்கு ஒப்பானது.
“......ஓங்காரமே நல் திருவாசி..”
- உண்மை விளக்கம் 35-
“ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கும் வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்”.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment