Wednesday, September 26, 2012
வேதம் அனைவருக்கும் பொது
சைவத்தின் அடிப்படைப் பொது நூல் வேதம். வேதங்கள் நான்கு. இவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பனவாம். சைவத்தின் அடிப்படை சிறப்பு நூல்கள் ஆகமங்கள். காமிகம் தொடக்கம் வாதுளம் வரை எல்லாமாக இருபத்தெட்டு ஆகமங்கள் உள்ளன.
இவற்றில் வேதம் ஓதுவதற்கு உரியவர்கள் பிராமணர்கள் முதலான முதல் மூன்று வர்ணத்தவர்கள் மட்டுமே என்ற கருத்து எம்மிடையே நிலவி வருகின்றது. ஆகமங்கள் எல்லோருக்கும் உரியவை. இன்றும் காஞ்சி சங்கராசாரிய மடம் நடத்தும் குருமார் பயிற்சிப்பள்ளியில் பிராமணர் அல்லாதவர்களுக்கு வேதங்கள் கற்பிக்கப்படுவதில்லை. அத்தோடு பிராமணராய் இருந்தலாலும் பெண்கள் வேதம் ஓதக்கூடாது என்ற மரபும் உள்ளது. ஆனாலும் வேதத்தில் உள்ள காயத்திரி மந்திரம் இன்று பிராமணர் அல்லாத பலரும், பெண்களும்கூட ஓதுவதையும், கேட்பதையும் பார்க்கின்றோம். இந்த நிலையில் வேதமும், வேத மந்திரங்களும் பிராமணர் அல்லாதார் ஓதலாமா கூடாதா என்ற கேள்வி பலரிடமும் உலாவுகின்றது. சில இடங்களில் இது பற்றிய வாதப்பிரதிவாதங்களையும் பாரக்கின்றோம்.
இத பற்றி நமது கருத்து என்பது ஒரு பக்கம் இருக்க நமது ஞானிகள் இது பற்றி என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்று பார்ப்போம். எப்போதும் சமய மற்றும் ஆத்மீக விடயங்களில் நமது கருத்தை விட ஞானிகள் என்ன சொல்லுகின்றார்களோ அதுவே பிரமாணமாகும். ஏனெனில் பாச ஞான, பசு ஞான விளக்கமுள்ள நமது அறிவு குறையுடையது; வழுவுடையது. ஆனால் பதி ஞான விளக்கமுள்ள ஞானிகளின் கருத்து என்றும் உண்மையானது; சாசுவதமானது; மாறாதது; எக்காலத்தும் எவ்விடத்துக்கும் பொருந்துவது. .
பதின் மூன்றாம் நூற்றாண்டில் சமய சாஸ்திரங்களையெல்லாம் நன்கு அறிந்த உத்தம பிராமணர் ஒருவர் வாழ்ந்தார். அவர் பெயர் அருள்நந்தி சிவம். அவரின் வேத ஆகம வித்தகத்தன்மை காரணமாக அவரை சகலாகம பண்டிதர் என அழைப்பர். சகலாகம பண்டிதராகிய இந்த அருள்நந்தி சிவத்திடம் பிராமணரல்லாத வேளாள குலத்தைச்சார்ந்த அச்சுதகளப்பாளர் தம்பதிகள் தமக்கு பிள்ளையில்லாத குறைக்கு பரிகாரம் கேட்டு வந்தனர். அவர் தேவார நூலில் ஏடு சார்த்திப் பார்த்தார். 'பேயடையா பிரிவெய்தும்' என்ற சம்பந்தர் பாடிய திருவெண்காட்டு பதிகம் வந்தது. தம்பதிகளை திருவெண்காட்டு தலத்துக்கு போய் வழிபட்டு வருமாறு ஏகினார். அச்சுதகளப்பாளர் தம்பதிகளும் அவ்வாறே திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கி தினமும் திருவெண்காட்டு பெருமானை வழிபட்டு ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தனர். குழந்தைக்கு சுவேதனப்பெருமாள் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். தமது சித்தால் வான்வழியாகப் பிரயாணம் செய்யும் வல்லமை பெற்றிருந்த பரஞ்சோதி முனிவர் திருவெண்ணெய் நல்லூரில் இரண்டு வயதுடைய இப்பிள்ளை தன்னுடைய தாய் மாமன் காங்கேய பூபதி என்பவருடைய இல்லத்தின் முன்னால் விளையாடிக்கொண்டிருந்தபோது இவரது பக்குவ நிலை உணர்ந்து கீழே இக்குழந்தைக்கு பாவனா தீட்சை செய்து, மெய்கண்டார் என்று தீட்சா நாமமும் கொடுத்து, சன்னியாசத்திலேயே உத்தமமான பரமகஞ்ச சன்னியாசமும் கொடுத்துச் சென்றார். பிறவியிலேயே முற் பிறப்புகளில் சரியை, கிரியா, யோகங்களை அனுட்டித்து முதிர்ந்த சாமு சித்தராகிய சுவேதனப்பெருமாள் அன்றிலிருந்து ஞானத்திலும் முதிர்ந்து, மேலான மெஞ்ஞானமாம் சுத்த அத்துவித சைவ சித்தாந்த உண்மைகளை மற்றவர்களுக்கும் உபதேசித்து வந்தார். இதன் சாரத்தை இரத்தினச்சுருக்கமாக பன்னிரண்டு சூத்திரங்களில் சிவஞானபோதம் என்னும் நூலாக தமிழில் வடித்து அதற்கு வார்த்திகம் என்னும் பொழிப்புரையும் செய்தவர் இவர். இந்த மெய்கண்டாரின் பிறப்புக்கு ஆலோசனை சொன்ன குலகுருவாகிய பிராமணராகிய அருள்நந்தி சிவமே பின்னாளில் இவருடைய சீடராகி சிவஞான சித்தியார் என்ற சித்தாந்த நூலும் எழுதியுள்ளார். பிராமணரல்லாத மற்றவர்கள் வேதம் ஓதுவதைப்பற்றி இவர் எழுதிய சிவஞான சித்தியார் பரபக்கம் செய்யுள் 199 பின் வருமாறு கூறுகின்றது.
“முடிவு இன்றி வேதியர்கள் முதல் வந்த மூவர்களும் மொழியும் சொல் ஆரியம் எனில்
கடிவு இன்றியே கணிதர் அவர் கண்டவாறு அதுஏன்? வடகண்ட சாதி கடியா
ஒடிவு இன்றி ஓதுவது ஏன்? உரைதங்கு வேதமொழி உளது என்று கூறும் அவர்தாம்
அடிஇன்று தான் எனும்அது அறிவுஇன்றி ஈனும் அவர் இலை என்ற ஆதரவு அதே”
ஆரிய வேதம் வேதியர், சத்திரியர், வைசியர் என்னும் முதல் மூன்று வருணத்தாரால் மட்டும் ஓதப்படுவது என்று கூறினால் சோதிடம் முதலிய வேதங்களின் ஆறு அங்க நூல்கள் மட்டும் ஏனைய வருணத்தார்கள் ஓதாமல் எப்படி அறிய முடியும்? மேலும் பாரதத்தின் வட நாடுகளில் சாதி வேற்றுமை இல்லாமல் எல்லோராலும் வேதம் ஓதப்படுகின்றதே. அது எப்படி? எனவே வேதம் பொது என்பது பெறப்படும். வேதத்தை அபௌர்ஷேயம் அல்லது மூல ஆசிரியன் இல்லை என்று கூறுவது பிறந்த பிள்ளைக்குப் பெற்றோர் இல்லை என்று அறிவில்லாமல் வேண்டுமென்றே கூறுவதைப்போன்றது.
கடிவு இன்றி- நீக்கம் இன்றி
ஒடிவு ஓன்றி- தவிர்தல் இன்றி
முடிவு இன்றி - அளவு இறந்து
இருக்கு வேதம் ஐதரேயப் பிராஹ்மணம் இரண்டாவது பஞ்சகம் கவசஐலுசன் என்னும் தாச புத்திரன் அதைப் பாடியவனாகச் சொல்லுகின்றது. இதேபோல அங்கதேசத்து அரசனின் அடிமைப் பெண்ணின் மகனாய கச்சீவது என்பானும் இருக்கு வேத சுலோகங்கள் பாடியுள்ளான். இதே போல புலோமனை புத்திரி சசி, காமை புத்திரி சிரத்தை, அகத்தியர் மனைவி உலோபாமுத்திரை, சத்தி புத்திரி கோரவி, அப்ரீனா புத்திரி வாக்கு என்னும் பெண்களும் இருக்கு வேதத்தின் பாகங்களுக்கு கர்த்தாக்களாக விளங்குகின்றார்கள். மகாபாரதத்தில் குந்திதேவி அதர்வண வேதம் ஓதியதாகக் கூறப்பட்டுள்ளது. வேதங்களின் சிரசாக உள்ள உபநிடதங்களில் கார்க்கி, மைத்ரேயி ஆகிய ரிஷி பத்தினிகளின் வினாக்களும், விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.
இவற்றிலிருந்து வேதம் பொது என்றும் அதை ஓதுவதற்கு சாதி, மற்றும் ஆண் பெண் பேதம் இருக்கவில்லை என்றும் தெரிகிறது. ஆயினும் இன்றைய எமது தென்னாட்டு சைவ சம்பிரதாயத்தில் நாலாம் வர்ணத்தாராகிய சூத்திரர்கள் வேதம் ஓதும் வழமை இல்லை. அதேபோல பெண்கள் வேதம் ஓதும் வழமையும் இல்லை. ஆயினும் இதற்கு விதி விலக்குகளும் உள்ளன. அபரக்கிரியைகளின் போது சூத்திரரும் பூணூல் தரித்து அதற்குரிய வேத மந்திரங்கள் சொல்லலாம். இதன்போது அவர்கள் பூணூல் தரிப்பதற்குரிய விதி சைவசமயநெறியில் பின்வருமாறு கூறப்படுகின்றது.
“தர்ப்பணத்தில் அர்ச்சனையில் ஆகுதியிலுந் தரிக்க
இல் பயிலும் சூத்திரர் இந்நூல்”
-சைவசமயநெறி- குறள் 52-
அதாவது தர்ப்பணம், அர்ச்சனை, ஆகுதி பண்ணுங் காலங்களில் இல்வாழ்வானாகிய சூத்திரன் பூணூல் தரிக்கலாம். இது குறிப்பிட்ட வழிபாடுகளில் வேத மந்திரங்கள் ஓதி வழிபடுவதற்கேயாம். சூத்திரர்களிலும் ஆசைகளை அறுத்த நைட்டிகப்பிரமச்சாரி எக்காலத்தும் பூணூல் தரிக்கலாம் என்றும் சைவசமயநெறியின் அடுத்த குறள் கூறுகின்றது.
“இவருள் நயிட்டிகன் எப்போதுந் தரிக்க
அவனியிலும் ஆசை அறுத்தால்”
-சைவசமயநெறி - குறள் 53-
இறைவன் நேரடியாக அருளிச்செய்த நூல்கள் இரண்டு. அவை வேதங்களும் ஆகமங்களுமாம். வேதங்களுக்கு அணுகுதற்கு அரியவனான இறையை ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிமுறைகளினூடாக எமக்கு அணுக்கமாக்குகின்ன்றன. இதனாலேயே வேதம் பொது நூல் என்றும் ஆகமம் சிறப்பு நூல் என்றும் சொல்லப்படும். "வேதங்கள் ஐயா! எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்ற திருவாசக வரிகளும் "ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க" என்ற திருவாசக வரிகளும் இந்த உண்மையை தெளிவாக விளக்குகின்றன.
வேதங்களைப்போல் அல்லாது ஆகமங்களை எவரும் கற்கலாம்: ஓதலாம். இதற்கு வர்ண சாதி மற்றும் பால் வேறுபாடு கிடையாது. ஞானத்தில் நாட்டமுடைய யாவரும் இதற்கு உரியவராவார் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இந்த ஆகமங்களில் உள்ள மந்திரங்கள் பல வேதங்களின் பிராஹ்மணியங்களிலிருந்து எடுக்கப்பட்ட மந்திரங்களே என்று சுவாமி விவேகானந்தர் முதலானோர் கூறியிருக்கின்றனர். ஆகமங்களில் உள்ள வேத மந்திரங்களை சூத்திரர்கள் ஓதும்போது வேதங்களை சூத்திரர்கள் ஓதுதல் ஆகாதா? என்ற வினாவும் எழுகின்றது. மேலும் சைவர்களின் மூல மந்திரமான “நமசிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரம் கிருஷ்ண யசுர் வேதத்தின் ஸ்ரீ ருத்திரத்தில் உள்ள மந்திரமே. இதை சைவர்கள் யாரும் ஓதலாம் என்றால் அதுவும் வேதம் மந்திரத்தை ஓதுவதுதானே.
வேத மந்திர உச்சரிப்புகள் காதால் கேட்டு முறையாக குருமுகமாகப் பயிற்சி பெற்றவர்களுக்கே சிரமமான, கடினமான ஒன்று. ஆகவே அதை சாமானியர்கள் அரைகுறையாகக் கேட்டும், புத்தகங்களில் பார்த்துப்படித்தும் ஓதக்கூடாது. இப்படி உச்சரிப்புத் தவறாக ஓதுவதால் நன்மைக்குப்பதிலாக தீய விளைவுகளே விளையும் என்று பலர் கூறுகின்றனர். உண்மைதான். ஆனாலும் வேத அத்தியயனம் பண்ணும் பிராமணர்கள் தாம் பழகும் காலத்திலும் இவ்வாறே பல உச்சரிப்புத் தவறுகளினூடாகவே முறையான உச்சரிப்பைப் பழகுவார்கள் என்பது வெளிப்படை. அப்போதெல்லாம் அதற்கு தீய விளைவுகளைக் கொடாத வேதங்கள், சூத்திரர்கள் வேதம் ஓதப்பழகும்போது மட்டும் தீய விளைவுகளைத் தருமோ என்ற வினாவும் எழுகின்றது.
முடிவாக வேதம் எல்லோருக்கும் பொதுவான நூல் என்றும்; அதிலுள்ள சிறப்பான மந்திரங்கள் ஆகமங்களில் தொகுக்கப்பட்டுள்ளன என்றும்; இந்த ஆகமங்களையும் அதிலுள்ள வேத மந்திரங்களையும் ஓதும் தகுதி சூத்திரருக்கும், பெண்களுக்கும் இருப்பதால், அவர்களுக்கு விதிக்கப்படாதிருப்பினும் தீவிர நாட்டமும், ஆசாரமும் இருந்தால் வேதம் கற்பதற்கும் ஓதுவதற்கும் அவர்களுக்குத் தடை இல்லை என்பதும் பெறப்படுகின்றது. ஆனாலும் இது விதி விலக்கே அன்றி பொது விதி அல்ல.
“வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள
நாதன் உரையவை நாடில் இரண்டு அந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே”
-திருமந்திரம் 2397-
“வேதநூல் சைவநூல் இரண்டே நூல்கள்
வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள்
ஆதிநூல் அமலன் தரும் நூல் இரண்டும்
ஆரண நூல் பொது; சைவம் அருஞ் சிறப்பு நூலாம்”
-சிவஞானசித்தியார் சுபக்கம் 267-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment