Wednesday, September 26, 2012
புராணங்கள் பொய்யா?
புராணங்கள் எமது சைவத்தின் கருவூலங்கள். இன்றைய விஞ்ஞான அண்டவியல் உண்மைகளுக்கு ஒத்துப்போகின்ற சைவ சமயத்தின் கால விபரங்களையும்,  அண்டவியல் விவரணங்களையும், மீண்டும் மீண்டும் தோன்றி நின்று ஒடுங்கும் அண்டங்களையும். இவற்றை நடைமுறைப்படுத்துகின்ற பல்வேறு பிரம்ம, விஷ்ணு, உ,ருத்திர தேவர்களையும் பற்றிய விளக்கமும், அறிவும், உணர்வும் இல்லாமல் வெறுமனே புராணங்கள் பொய் என்றும், புழுகு என்றும், ஆரியர் கட்டி விட்ட கதை, என்றும் பாமர மக்களைப் பயங்காட்டும் உத்தி என்றும் கூறி அலைந்து சைவத்தின் பெயரால் சைவத்தை நசிக்காமல் காப்போமாக) 
 
சைவம் கூறும் புரணாங்கள் பதினெட்டு. இவை வட மொழியில் உள்ளவை. உப புராணங்களும் பதினெட்டு உள்ளன. இந்தப் புராணங்கள் கட்டுக்கதைகள் அல்லது புழுகு மூட்டைகள் என்று இன்று சில சைவப்பெருமக்கள் சொல்லி வருகின்றார்கள். வேறு சிலரோ "எங்கேயோ மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியப் பிராமணர்களினால் எழுதிப் புகுத்தப்பட்டவையே இந்தப் புராணங்கள்" என்று சொல்லுகிறார்கள். இன்னும் சிலரோ என்றால் "படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு பயத்தைதையும் பக்தியையும் ஊட்டுவதற்காகப் படைக்கப்பட்ட கதைகளே இந்தப் புராணங்கள்" என்று சொல்லுகின்றார்கள். வேறு சில சைவர்கள் "பதினெட்டு புராணங்களில் சிவனைப் பரமாகக் கொண்ட பத்து புராணங்கள் மட்டுமே எமக்குப் பிரமாணம்" என்றும் சொல்லுகின்றாரக்ள. இந்தக் கருத்துகள் எல்லாமாகச்சேர்ந்து எமது மக்களை ஒரு குழப்ப நிலையில் வைத்திருக்கின்றன.
 
இதிலே எமது தனிப்பட்ட கருத்துகளும். சார்புகளும், அறிவு, ஆராய்ச்சிகளும் ஒருபக்கம் இருக்க எமது ஞானிகளும், குருமாரும், வழிகாட்டிகளும் புராணங்கள் பற்றி என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்று பார்ப்பதே நமக்கு தெளிவு தரும் வழிகாட்டலாக இருக்கும்.
 
1.திருஞான சம்பந்தர்: புராணங்கள் சிவனி டம் இருந்து வந்ததாகவே எமது சைவம் கூறுகின்றது.  எமது சமயகுரவர் நால்வரில் முதலாமவராகிய திருஞான சம்பந்தர் வேதங்கள் நான்கும், புராணங்கள் பதினெட்டும், வேதாங்கங்கள் ஆறும் விரித்து உரைத்தது இறைவனே என்று தமது தேவாரத்திலே கூறுகின்றார்.
 
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே
 
வேத நான்கும் பதினெட்டோடு ஆறும் விரித்தார்க்கு இடம்
 
தாதுவிண்டம் மதுவண்டு மிண்டிவரு வண்டினம்
 
கீதம்பாடம் மடமந்தி கேட்டுகளும் கேதாரமே
 
                                                   -சம்பந்தர் தேவாரம்-
 
2.கந்தபுராணம்: சைவ சித்தாந்தம் போலவே புராணங்களும் சிவனால் நந்திதேவருக்கு அருளிச்செய்யப்பட்டன. நந்திதேவர் புரணங்களை சநற்குமார்ருக்கு கூறினார். பாதராயணர் என்னும் வேதவியாசர் இவற்றை சநற்குமாரரிடம் இருந்து கேட்டு அவற்றை எழுதினார். வியாசர் எழுதிய புராணங்களை சூத முனிவர் மற்றவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த விபரம் கந்தபுராணத்திலே சொல்லப்பட்டுள்ளது.
 
நாதனார் அருள்பெறு நந்தி தந்திடக்
 
கோதிலாது உணர்சனற் குமரன் கூறிட
 
வாதரா யணமுனி வகுப்ப ஓர்ந்துணர்
 
சூதன் ஓதியதுமூ வாறு தொல் கதை
 
                                               -கந்தபுராணம்- 
3. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்;  யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் தாம் எழுதிய சைவவினாவிடை இரண்டாம் புத்தகத்தில் பின் வருமாறு கூறுகின்றார்.
 
சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டு அருளிச்செய்த முதனூல்கள் எவை?
 
வேதம், சிவாகமம் என்னும் இரண்டுமாம்.
 
வேதத்துக்கு உபாங்கமாகிய நூல்கள் எவை?
 
புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் நான்குமாம்.
 
புராணமாவது யாது?
 
பரமசிவன் உலகத்தைப் படைத்தல் அழித்தல் முதலியவைகளைக் கூறும் வேத வாக்கியப் பொருள்களை வலியுறுத்தி விரித்து அறிவிப்பது. உலகத்தின் தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும், மனுவந்தரங்களும், பாரம்பரியக் கதைகளுமாகிய இவ்வைந்தையும் கூறுதலால், புராணம் பஞ்சலக்கணம் எனவும் பெயர் பெறும். இதிகாசமும் புராணத்துள் அடங்கும். 
 
4.அருணந்தி சிவம்:  இதேபோல சைவ சித்தாந்த சந்தான குரவர் நால்வரில் இரண்டாமவராகிய அருணந்தி சிவம் தாம் எழுதிய சிவஞானசித்தியாரில் "வேத ஆகமப்பொருள்களை விரித்து பின்னர் இறைவனுடைய அருளினாலே அருளாளர்கள் தனித்தனியே புராணங்கள், ஸ்மிருதிகள், கலை நூல்களை வகுத்தார்கள் என்று கூறுகின்றார்.
 
“வேத,சிவாகமங்கள் கூறும் பொருளும் இவை கூறும் பொருளும் ஒன்றே. அவ்வாறில்லை என்று சொல்லிப் பிணங்கும் பேதைகட்கு விடை கூறித் திருத்தல் இயலாது" என்றும் அழகாகக் கூறியுள்ளார். 
 
அருமறை ஆகமம் முதனூல், அவை அனைத்தும் உரைக்கையினால்
 
அளப்பு அரிதாம் அப்பொருளை அரன் அருளால் அணுக்கள்
 
தருவார்கள் பின் தனித்தனிதயே தாம் அறிந்த அளவில்
 
தர்க்கமொடு உத்தரங்களினால் சமயம் சாதித்து
 
மிருதி புராணம் கலைகள் மற்றும் எல்லாம்
 
மெய்ந்நூலின் வழி புடையாம் அங்கம் வேதாங்கம்
 
சுருதி சிவாகமம் ஒழியச் சொல்லுவது ஒன்று இல்லை
 
சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே
 
                                                              -சிவஞான சித்தியார் 266-
 
இதேபோல புராணங்கள் வேதங்களில் குறிப்பாகச் சொல்லப்பட்டவற்றை விரிவாக எடுத்துச் சொல்வதால் அவற்றைச் சிறப்புடைய புராணங்கள் என்று சிவஞானசித்தியாரின் இன்னொரு பாடலிலே சொல்லுகின்றார்.
 
புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
 
புகல் மிருதி வழி உழன்றும் புகலும் ஆச்சிரம
 
அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
 
அருங்கலைகள் பல தெரிந்தும் ஆரணங்கள் படித்தும்
 
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
 
சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத்
 
திறத்தடைவர் இதிற் சரியை கிரியா யோகம்
 
செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்
 
                                                          - சிவஞான சித்தியார் 263-
 
 5. புராணத்தைப் பொய் என்னும் சைவர்கள் சொல்வதை ஒப்புக்கொண்டு தேவார திருவாசகங்களில் உள்ள புராணக்கதைகளை தணிக்கை செய்து எடுத்துவிட்டால எமக்கு மிஞ்சப்போவது இப் புத்தகங்களின் வெளிப்புற அட்டைகள் மட்டுமே. உதாரணத்துக்கு மாணிக்கவாசகரின் திருவுந்தியாரை ஒருமுறை திறந்து படித்துப் பாருங்கள். இதில் உள்ள புராண வரலாற்றுக் கூற்றுகளை எடுத்துவிட்டால் அங்கு திருவுந்தியாரே இருக்காது. 
 
மேற்கூறிய வடமொழிப் பஞ்ச இலட்சண வரையறைகளுக்கு அப்பாற்பட்டு தமிழில் எமக்கு மூன்று முக்கிய புராண நூல்கள் உள்ளன. அவையாவன கந்தபுராணம், பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம், திருவிளையாடற் புராணம் என்பனவாம்,
 
1. கந்த புராணம்: வட மொழியில் உள்ள ஸ்காந்த புராணத்துக்கு ஆறு சம்கிதைகள் உள்ளன.இவற்றில் ஒன்றாகிய சங்கர சம்கிதையில் பன்னிரண்டு கண்டங்கள் உள்ளன. அவ்ற்றில் ஒன்றாகிய சிவரகசிய கண்டத்தின் ஏழு கண்டங்களில் முதல் ஆறு கண்டங்களைத் தமிழில் கந்த புராணமாகப் பாடினார் கச்சியப்ப சிவாச்சாரியார்.இதில் பத்தாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து பாடல்கள் உள்ளன. யாழ்ப்பாணச் சைவ சித்தாந்த மரபுக்கு அடித்தளமாய் அமைந்தது இந்த கந்தபுராணம்.
 
2. பெரிய புராணம்: இது அறுபத்து மூன்று நாயன்மார்களைப்பற்றிச் சேக்கிழார் பெருமானால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாடி அரங்கேற்றப்பட்டது. சிவனால் " உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுக்கப்பட்ட பெருமைக்கு உரியது. திருமுறைகளில் ஒன்றாக வகுக்கப்பட்டு பன்னிரண்டாம் திருமுறையாக உள்ளது. தமிழில் இருந்து வடமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட புராணம் இது. இது வடமொழியில் "உபமன்னியு பக்த விலாசம்” என்னும் பெயரில் உள்ளது. திருவண்ணாமலை இரமணாசிரம மரபில் படிக்கப்பட்டு வருவது இந்த வடமொழிப் பெரியபுராண நூல்.
 
3. திருவிளையாடற் புராணம்: இது மதுரை சோமசுந்தரேஸ்வரர் கோவிலின் ( மீனாட்சி அம்மன் கோவில்) தல புராணமாகும். அங்கு சிவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களைக் கூறுவது. இதிலே திருஞானசம்பந்தர் மற்றும் மாணக்கவாசகரின் வரலாறுகளும் உள்ளன.
 
புராணங்களை புனை கதை என்போரும், புழுகு மூட்டை என்போரும், அறிவிலிகளுக்காக ஆக்கப்பட்ட பயங்காட்டும் கதைகள் என்போரும், சைவத்துக்கு ஒவ்வாதன எனபோரும், சைவர்கள் பதினெட்டுப்புராணங்களில் சிலவற்றைத் தள்ளி சிலவற்றைக் கொள்ள வேண்டும் என்போரும் கூறும் கூற்றுகள் சிற்றறிவுடைய எம்மில் சிலரின் தனிப்பட்ட சமூக, கல்வி, கலாச்சார ஊறல்களுக்கும், இன, மொழி, பிரதேச, அரசியல் சார்புகளுக்கும் இனிப்பாகவும், உவப்பாகவும், ஏறபுடையதாகவும் இருந்தாலும் எமது சமய நூல்களின் கருத்துகளுக்கும்,  சைவசமய குரவர்களின் வார்த்தைகளுக்கும் மட்டுமல்லாது இன்றும் விரிவடைந்துகொண்டு செல்லும் அண்டவியல் விஞ்ஞான அறிவுக்கும்கூட முற்றிலும் முரணாகவும் புறம்பாகவுமே உள்ளன. எமக்குப் பிரமாணம் இறையிடம் இருந்து காலம் காலமாக மீண்டும் மீண்டும் வெளிப்படுகின்ற வேதங்களும் ஆகமங்களும் இறை அருளார்களால் வெளிப்படுகின்ற திருமுறைகளும் மெய்கண்ட சாத்திர நூல்களுமேயன்றி இன்று வந்து புகுந்துள்ள புதுப்பிரசாரகர்களின் முரண்பட்ட மயக்குகின்ற புத்துரைகள் அல்ல. 
 
புராணங்கள் எமது சைவத்தின் கருவூலங்கள். இன்றைய விஞ்ஞான அண்டவியல் உண்மைகளுக்கு ஒத்துப்போகின்ற இந்து சமயத்தின் கால விபரங்களையும்,  அண்டவியல் விவரணங்களையும், மீண்டும் மீண்டும் தோன்றி நின்று ஒடுங்கும் அண்டங்களையும். இவற்றை நடைமுறைப்படுத்துகின்ற பல்வேறு பிரம்ம, விஷ்ணு, உருத்திர தேவர்களையும் பற்றிய விளக்கமும், அறிவும், உணர்வும் இல்லாமல் வெறுமனே புராணங்கள் பொய் என்றும், புழுகு என்றும், ஆரியர் கட்டி விட்ட கதை, என்றும் பாமர மக்களைப் பயங்காட்டும் உத்தி என்றும் கூறி அலைந்து சைவத்தின் பெயரால் சைவத்தை நசிக்காமல் காப்போமாக.
 
 
 
Last Updated on Wednesday, 08 August 2012 15:37 
  
EXPOSITION OF TRUTH
 
Portrait of a helper 
Afterlife
 
Why I am Not a Christian
 
Siva Ratri
 
What are those eighteen    languages?
 
SIVA JNANA BODHAM
 
SIVA JNANA SIDDHIYAAR 
BRAHMANDA PURANAM
 
THAYUMANAVAR 
YOGAR SWAMI
 
A CURIOUS COURT CASE
 
THE MAHA RISHI
 
RITUALS
 
BHIKSHA
 
BAGAVAT GITA 
BHAJA GOVINDAM
 
BRAHMINS
 
THE CRY BABY
 
ARUKU
 
TEN STEPS
 
ANSWERS
 
SIVA LINGA
 
HINDU TIMELINE
 
Category
 
SIDDHANTA
 QUESTIONS
 
SCIENCE
 HISTORY
 ASTROLOGY
 
TEMPLES
 STOTRAS
 
PICTURE GALLERY
 KIDS FILES
 VIDEO FILES
 AUDIO FILES
 YOUTH FILES
 
ARCHIVE
 YOGA
 STORIES
 
IN ENGLISH
 WHO IS WHO
 COMMENTS
 
BEGINNERS
 TREASURE
 
IN ENGLISH
 
LINKS
 TEXTS
 SCRIPTURES
 FESTIVALS
 
Copyright © 2009 knowingourroots.com. All Rights Reserved.
 
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment