Tuesday, September 11, 2012
சரியான பிரதோஷ காலம்
இரவும்+பகலும் சந்திக்கின்ற காலத்தை "உஷத் காலம்'' என்றும், பகற்பொழுதின் முகம் என்றும், விடியற்காலம் என்றும் கூறுவர். இக்காலத்தின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய "உஷாதேவி'' எனவேதான இக்காலத்தை அவள் பெயரால் "உஷத் காலம்'' என்று அழைக்கப்படுகிறது. அதே போல, பகலும்+இரவும் சந்திக்கின்ற காலத்தை "பிரத் உஷத் காலம்'' என்றும், இரவுப் பொழுதின் முகம் என்றும், சந்தியா காலம் என்றும் கூறுவர்.
இக்காலத்தின் அதிதேவதை சூரியனின் மற்றொரு மனைவியாகிய "பிரத் உஷாதேவி'' என்வேதான் இக்காலத்தை அவள் பெயரால் "பிரத் உஷத் காலம்'' என்று அழைக்கப்படுகிறது. பிரத் உஷத் காலம் என்பதே காலப்போக்கில் பிரதோஷ காலம் என மாறி அழைக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு நாள் மாலை வேளையும் பிரதோஷ காலமே! இதனை நித்தியப் பிரதோஷ காலம் என்று கூறுவர்.
அத்துடன், இக்காலத்தை "சாயங்காலம்'' என்றும் கூறுவர். பிரத் உஷாதேவிக்கு "சாயா'' என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. எனவே, இக்காலம் சாயதேவிக்குரிய காலம் என்ற வகையில் சாயங்காலம் எனப்பெயர் பெற்றது. அதேபோல, பகலும்+இரவும் சந்திக்கும் வேளை என்பதால் இந்த வேளையைச் "சந்திவேளை'' என்றும், இந்த வேளையில் திருமால் இரண்யனைக் கொன்ற காரணத்தால் இந்த வேளையை "இரண்ய வேளை'' என்றும் கூறுவர்.
ஆக, சூரியன் மறைவதற்கு முன் உள்ள கடைசி மூன்றே முக்கால் நாழிகையும்+சூரியன் மறைந்த பின் உள்ள முதல் மூன்றே முக்கால் நாழிகையும் சேர்ந்த கூட்டு நேரமே பிரதோஷ காலத்தின் மொத்த நேரமாகும். ஒரு நாழிகை நேரம் என்பது 24 நிமிடம். அதாவது, மாலை 04 மணி 30 நிமிடம் முதல் இரவு 07 மணி 30 நிமிடம் வரையுள்ள மூன்று மணி (ஏழு நாளிகை) நேரமும் பிரதோஷ காலமே.
என்றாலும், பிரதோஷ கால வழிபாடு செய்வதற்கு மிகவும் சரியான நேரம் என்பது இவைகளின் மைய நேரமாகிய மாலை 05 மணி 15 நிமிடம் முதல் இரவு 06 மணி 45 நிமிடம் வரையுள்ள ஒன்னரை மணி (மூன்றே முக்கால் நாழிகை) நேரமே ஆகும். மூன்றே முக்கால் நாழிகை (ஒன்னரை மணி) நேரம் என்பது ஒரு முகூர்த்த கால அளவாகும்.
இந்தச் சரியான பிரதோஷ கால நேரம் என்பது அன்றைய தினம் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவை பொருத்து சற்று மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்க. இத்தகைய சிறப்புப் பெற்ற பிரதோஷ கால வழிபாட்டினால் பிரம்மாதிதேவர்களுடைய துன்பங்களைப் போக்கி இன்பம் அளித்த கயிலாய நாதனாம் சிவ பரம்பொருளாகிய ஈசனை நாமும் அதே பிரதோஷ காலத்தில் தரிசித்து வணங்கி வழிபாடு செய்து வாழ்வில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று இன்புற வாழ்ந்து, பேரின்பப் பெரிய வீட்டை அடைந்து, மீண்டும் பிறவா அமைதி நிலையை அடைவோமாக. 1 1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment