Wednesday, September 26, 2012
ஏழரைச் சனியும், அட்டமத்துச் சனியும்.--ஔவையார் பாடல்-
ஏழரைச் சனியும், அட்டமத்துச் சனியும்.
சனைஸ் சரன் என்பதுதான் மருவி சனீஸ்வரன் என்று ஆகிவிட்டது. சரம் என்றால் நகர்தல். மெதுவாக நகர்வதால் சனிக்கு சனைச்சரன் என்று பெயர். சனி ஒருமுறை சூரியனைச் சுற்றி வர முப்பது வருடங்கள் எடுக்கும். ஆகவே பன்னிரண்டு இராசிகளிலும் இராசிக்கு இரண்டரை ஆண்டுகள் சனியின் சஞ்சாரம் நிகழும். சாதகத்திலும் சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி என்று உண்டு. தொழில், வாழ்க்கைத்துணை, கல்வி, சகோதரத்தானங்கள் மற்றும் இலக்கினம் சர ராசியாக இருந்தால் அடிக்கடி இவை சம்பந்தமாக மாற்றங்கள், நகர்வுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இதற்கும் பல விதிகள், விலக்குகள் உள்ளன; கேட்டுவிட்டு அப்படியே பிரயோகிக்க கூடாது.
சாதகத்தில் சந்திரன் நிற்கும் இடத்தை ஜன்ம இராசி என்பர். இது சந்திர இலக்கினமாக இருப்பதால் எமது தலை, மூளை, புத்தி ஆகியவற்றின் செயற்பாட்டைப் பிரதிபலிக்கின்றது. சந்திரன் மனத்துக்கு காரகனாக இருப்பதால் எமது மன ஓட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. இவ்வாறு மனம், புத்தி இரண்டையும் பிரிதிபலிக்கும் சந்திர இலக்கினத்துக்கு அருகில் இருண்ட, மந்தக்கிரகமான சனி சஞ்சரிக்கும்போது புத்தியிலும், மன ஓட்டத்திலும் ஒரு இருண்ட மந்த நிலையை ஏற்படுத்தும். இது எமது வாழ்க்கையிலும் இவ்வாறே ஒரு சோதனைக் காலமாகப் பிரதிபலிக்கும்.
ஆகவேதான் சந்திர இலக்கினமான ஜன்ம இராசி, அதற்கு முன் பின்னான இரு இராசிகள் என மூன்று அடுத்தடுத்த இராசிகளில் ஒவ்வொரு இராசிக்கும் இரண்டரை வருடப்படி சனி சஞ்சரிக்கின்ற ஏழரை ஆண்டுக் காலத்தையே ஏழரைச் சனி என்று சோதனைக்காலமாக சோதிட நூல்கள் கூறுகின்றன. இதிலே பன்னிரண்டாம் இராசியிலே சனி சஞ்சரிக்கின்ற இரண்டரை ஆண்டுக் காலம் ஏழரைச்சனியின் முதற்கூறு என்றும், சந்திரனின் இராசியிலே சனி சஞ்சரிக்கின்ற இரண்டரை ஆண்டுக் காலம் ஏழரைச் சனியின் நடுக்கூறு என்றும், இரண்டாம் இராசியிலே சனி சஞ்சரிக்கின்ற இரண்டரை ஆண்டுக் காலமும் ஏழரைச்சனியின் கடைக்கூறு என்றும் கூறப்படுகின்றது.
ஒரு முறை சனி பன்னிரு இராசிகளையும் சுற்றி வர எடுக்கும் காலம் முப்பது வருடங்கள். ஆகவே நிறைவான ஆயுள் உள்ள ஒருவரின் வாழ்நாளில் மூன்று முறை இவ்வாறான சனியின் சஞ்சாரம் நடைபெறும். இதனால் மூன்று முறை ஏழரைச்சனியின் காலம் நடை பெறும். இதிலே முதலாவது முறை நடைபெறுகின்ற ஏழைச்சனியின் காலத்தை மங்கு சனி என்பர். இது முதல் முப்பது வயதுக்குள் இளமைக்காலத்தில் நடைபெறுவதால் இது வாழ்க்கையின் அத்திவாரத்தைப் பாதிக்கின்றது. ஆகவேதான் இதை மங்கு சனி என்பர்.
ஒருவரின் வாழ்வில் இரண்டாவது முறை நடைபெறும் ஏழரைச்சனியை பொங்கு சனி என்பர். இது தன் கால முடிவில் வாழ்வில் உயர்ச்சியை தந்துவிட்டுப்போவதால் இதை இவ்வாறு கூறுவர். பொதுவாக வாழ்வின் நடுப்பகுதியில் நாம் செய்கின்ற கடும் முயற்சிகள் பின்னர் பலன் கொடுக்கும். ஆகவே எமது வாழ்வாதார முயற்சிகளில் நாம் படும் பாடுகளுடன் சனியின் இரண்டாவது சுற்று வந்து அமைகின்றது.
ஒருவரின் வாழ்வில் சனியின் மூன்றாவது சஞ்சாரத்தில் நடைபெறும் ஏழரைச்சனியை மரணச் சனி என்பர். எப்படியும் இது மரணத்துக்குரிய முதிய பருவமாகின்றது என்பதால் இப்படி அதை அழைக்கின்றனர் போலும்.
இதேபோல சனி ஒருவருடைய ஜன்ம இராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலமும் சோதனைக்காலமாகும். இதை அட்டமத்துச் சனி என்பர். தனது கல்வியில் கவனம் செலுத்தாத தலைமகனும், பகை கொண்ட அயலானும், குடும்பக் கட்டுக்கோப்பைக் குலைக்கும் மனையாளும் அட்டமத்துச் சனிக்குச் சமம் என்று ஔவையாரும் பாடியுள்ளார்.
காலையிலே பல்கலைநூல் பயிலாத தலை மகனும்
ஆலை எரிபோன்ற அயலானும்
சால மனைக் கட்டழிக்கும் மனையாளும்
இம்மூவர் தனக்கு அட்டமத்துச் சனி
-ஔவையார் பாடல்-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment