Wednesday, September 26, 2012
சவால்களை எதிர்கொள்வோம்;
உலகெ லாமுணரந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவியன் நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்”.
உலகளாவிய சைவம்- விஞ்ஞானப் பார்வையிலும் மெஞ்ஞானப் பார்வையிலும்;
சைவம் உலகளாவியது. அறிவியல் ரீதியில் இறையை அண்ட சராசரம் எங்கும் பரந்து உறையும் பேரறிவான பரசிவம் (Cosmic Consciousness) என்றும், அதன் இயக்கமாகிய சக்தியான பராசக்தியை (Cosmic Energy) என்றும் ஆண் பெண் வடிவில் அம்மையப்பராகக் காணும் மரபு சைவம். இறையை நாதம் என்கின்ற சிவம் அல்லது அப்பன் என்ற ஆண் வடிவும், பிந்து என்கின்ற சக்தி அல்லது தாய் என்ற பெண்வடிவும் இணைந்த ஒருமித்த அம்மையப்பர் வடிவில் எப்பொழுதும், எங்கும் காணும் தரிசனம் சைவத்தின் முனைப்புண்மை. இதுவே ஆண் என்றும் பெண் என்றும் சகல உயிரினங்களும் முனைப்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டும் அண்டப்பேரறிவியல்; உயிரற்ற சடப்பொருட் துணிக்கைகளான அணுக்களின் நேரேற்றம் உள்ள புரோத்தன்களும் எதிரேற்றம் உள்ள இலத்திரன்களும் கூட அகச்சமநிலை நாடி ஓடும் கவர்ச்சியையும் அசைவையும் விளக்கும் அண்டப்பேரறிவியல்; ஒளி, ஒலி, மின்சாரம், மின்காந்தம், ஈர்ப்பு, காந்தம், மற்றும் அணுச்சக்திகளும் கூட அகச்சமநிலை நாடி நேர் எதிர் முனைகளாகத் தொழிற்படுவதை விளக்கும் அண்டப்பேரறிவியல். இதுவே சைவத்தின் முழுமையான அண்டப்பேரறிவியலின் வடிவு. இந்தப் பேரண்டஅறிவியலின் தரிசனத்தைத்தான் அப்பர் சுவாமிகள் "கண்டறி யாதன கண்டேன்" என்று திருக்கைலாயக் காட்சியாகத் திருவையாற்றுப் பதிகத்தில் பாடுகின்றார்.
இந்த எதிர்முனைப்பட்ட உந்தல்கள் எப்போதும் அகச்சமநிலையை அடைவதற்கான ஓட்டத்தில், ஆட்டத்தில், அல்லது அசைவில் உள்ளன. தொடர்ந்தேர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்டமே அணுவிலும் காணப்படுகின்றது; அண்டத்திலும் காணப்படுகின்றது; உயிர் வாழ்வனவும் இந்த ஆட்டத்தில்தான்; உயிரற்ற சடப்பொருட்களில் கூட இந்த ஆட்டம்தான். இவை இரண்டிலுமே அடங்காத மின்சாரம், காந்தம், மின்னியற் சக்திகளும் கூட இந்த ஆட்டத்தின் படியே ஆடுகின்றன. எளிமையான நுண்ணுயிர்களிலும், உயிர் உள்ளதோ, அற்றதோ என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நியூக்கிளிக்கமில உயிரக வடிவங்களிலும் இந்த ஆட்டமே. அவன், அவள், அது என்று மூவகைப்பட்டு நிற்கும் இந்த அண்டசராசரம் முழுமையிலும் நின்று இயங்குவதும், இயக்குவதும் இந்த ஆட்டமே (The Cosmic Dance). இதுவே நடராச நர்த்தனம் (Dance of Siva). இந்த ஆட்டத்தை உணர்ந்து தெளிதலே சிதம்பர தரிசனம் (Realization of the Chith). யாரும் நிலை நிறுத்தவோ, நிரூபிக்கவோ, வாதிக்கவோ தேவையில்லாத, கால தேச வர்த்தமானங்களைக் கடந்த, அண்டசராசரங்கள் எங்கும் நிறைந்த, என்றும், எங்கும் சாசுவதமான, உலகளாவிய சைவம் இது.
உள்ளிருந்தே சவால்கள்
இப்பெற்றிய உலகளாவிய சைவம் இன்று இருபத்தோராம் நூற்றாண்டில் நடைமுறையில் கொள்ளும் சவால்கள் பல. ஏனைய மதங்களைப்போல் அல்லாது இன்றைய விஞ்ஞானமும் அதன் புதிய விளக்கங்களும் சைவத்துக்கு மேன்மேலும் உரம் சேர்க்கின்ற போதிலும் சைவத்துக்கு உள்ளிருந்தே அதை நலிவித்து வருகின்ற சவால்கள் பல.
மூவகை அறிவு- பாசஞானம் அல்லது சிற்றறிவு
நம் போன்ற எளியோரின் ஆய்வுகளும், ஊகங்களும், வாதங்களும், பிரதிவாதங்களும் பாச ஞானம் என்னும் உலகியல் பற்றிய சிற்றறிவு ஆகும். இது எமது புலன்களின் காட்சி கொண்டும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் எமது அகக்கருவிகளின் ஆராய்ச்சி கொண்டும் தெளியப்படும் அறிவு ஆகும். இக்கருவிகளைப்போலவே அதன் மூலமாக வரும் இந்த அறிவும் வரையறைகளுக்குட்பட்டது; வழுக்கள் நிறைந்தது. ஆகவேதான் மருத்துவத்திலும், விஞ்ஞானத்திலும் நேற்று சரியானவை எனக்கூறப்பட்ட கருத்துகளும், முடிபுகளும், மருந்துகளும் இன்று தவறானவை என்று கை விடப்படுகின்றன. அன்று திருச்சபை கூடி எடுத்த முடிபுகளுக்கும், தீர்மானங்களுக்கும் இன்று மன்னிப்புக்கோரப்படுகின்றன. இன்றைய கொள்கைகளுக்கும், கருத்துக்களுக்கும், முடிபுகளுக்கும் நாளை இதே கதி வரலாம். இதனால் எமது வரையறைக்குட்பட்ட புலன்களினாலும், அகக்கருவிகளினாலும் பகுத்து அறியப்படும் இந்த அறிவு மட்டுப்படுத்தப்பட்ட அறிவு என்பது தெளிவாகின்றது. ஆகவேதான் சைவம் இதைப் பாச ஞானம் என்றது. நாம் அதைச் சிற்றறிவு என்கின்றோம்.
மூவகை அறிவு- பசுஞானம்
சமய குரவர்கள், நாயன்மார்கள், ஜீவன் முத்தர்களின் வாழ்க்கை வரலாறுகள், போதனைகள், மற்றும் பாடல்கள் மூலமாகவும், குருவருளினாலும், அடியார்களின் தொடர்பினாலும் நாம் பெறுவது பசுஞானம் என்னும் அறிவாகும். இது வரையறைக்குட்பட்டதும், வழுக்கள் உடையதுமான எமது புலன்களையும், அகக்கருவிகளையும் கொண்டு பூரண அறிவாகிய இறையறிவு அல்லது பதி ஞானத்துடன் தொடர்புடையவர்களின் போதனைகளையும், வாழ்க்கை வரலாறுகளையும் பகுத்து, ஆய்ந்து, கடைப்பிடித்து, தெளிய முயலும்போது பெறும் அறிவாகும். இதுவும் வரையறைக்குட்பட்ட எமது புலன்கள் மற்றும் அகக்கருவிகளின் சம்பந்தத்தால் பெறுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட அறிவேயாகும். ஆதலால்தான் இறைபணியிலும், சமயசேவையிலும் ஏன் ஒரே குருவினுடைய சீடர்களிடையே கூட நடைமுறைகள் பற்றியும், கருத்துகள் பற்றியும், முடிபுகள் பற்றியும் எண்ணற்ற வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை சிலவேளைகளில் வாக்குவாதங்கள், கலகங்கள், கைகலப்பில்கூட முடிவதைப் பார்க்கின்றோம். இவ்வாறு வரையறைகளை உடையதாயினும் பசுஞானமானது நாயன்மார்களுடைய, சமயகுரவர்களுடைய, குருவினுடைய பதிஞானம் என்னும் பூரண இறையறிவு சம்பந்தம் காரணமாக பாசஞானம் என்னும் எமது சிற்றறிவைவிட மேலானது. காலப்போக்கில் நம்மைப் பக்குவப்படுத்தி பதிஞானம் என்னும் இறைஅறிவுக்கும், அனுபவத்துக்கும் வழிப்படுத்துகின்றது. இதையே " குறியறி விப்பான் குருபர னாமே" என்கின்றது திருமந்திரம். பாச ஞானத்தின் உச்ச நிலையே இறையையும் தன்னையும் பேதமின்றிப் பிரிவறக் காணும் ஆத்ம ஞானமாகும். ஆயினும் இது சிவ ஞானம் என்னும் பதி ஞானம் ஆகாது.
மூவகை அறிவு- பதிஞானம் அல்லது இறையறிவு
இறையருள் ஒன்றினால்தான் பதிஞானம் என்னும் இறையறிவு கூடும். இறையருளினால் நமது ஆணவம் என்னும் அறியாமை இருள் விலக நமக்குத் தெளிவாவது பதிஞானம் என்னும் உயரிய இறையறிவு என்று சைவசித்தாந்தம் கூறும். அது எமது ஊனப்புலன்களுக்கும், மனம், புத்தி, சித்தம் என்ற அகக்கருவிகளுக்கும் அப்பாற்பட்டது. இறை அறிவிக்க நாம் அறிவது; இறை காட்ட நாம் காணுவது; இறை உணர்த்த நாம் உணருவது; இறை எம்மை அமிழ்த்த நாம் அனுபவிப்பது; அவனருள் விளக்க நாம் விளங்கிக்கொள்வது; அவன் தெளிவிக்க நாம் தெளிந்து கொள்வது. இதுதான் நாயன்மார்களினதும், சமய குரவர்களினதும் வாழ்க்கை வரலாறுகள், அனுபவங்கள், போதனைகள், பாடல்களில் காணப்படுவது. ஆயினும் இறையருள் காட்டாமல் நாம் அவற்றை வெறுமனே படித்தோ, ஆராய்ந்தோ விளங்கிக்கொள்ள முடியாது. இதைத்தான் வடமொழில் உள்ள இரத்தினத்திரயம் போன்ற ஆகம வழிநூல்களும், தமிழில் உள்ள மெய்கண்ட சாத்திரங்களும் சத்திநிபாதம், குருவருள், தீட்சை, மலநாசம் என்ற படிமுறைகளில் செல்லும்போது வந்தடைகின்ற எல்லாம் அறிந்த சர்வக்ஞத்தன்மை என்று கூறுகின்றன. இறையருள் காட்டினால் எந்தவித முன்னறிவும், பரிச்சயமும் இல்லாதவர்களுக்கும்கூட இச் சிவ ஞானம் கை வந்து விடலாம்.
சைவம் எதிர்கொள்ளும் சவால்கள்.
1.சைவசித்தாந்தம் திராவிட சிந்தனையின் உன்னதப்படைப்பு;
ஆகவே பாசஞானம் என்னும் சிற்றறிவை வைத்துக்கொண்டு சைவ சித்தாந்தம் மானுடப்படைப்பு என்றும் திராவிட சிந்தனையின் உச்ச விளைவு என்றும் கூறி மயங்கும், மயக்கும் எம்போன்ற அறிவுவாதிகளினதும், புத்திஜீவிகளினதும் எழுத்துகளும், பேச்சுகளும், கருத்துகளும் அவற்றை உண்மை என்று எண்ணி மயங்கும் சைவசமயிகளும் இருபத்தோராம் நூற்றாண்டின் சைவம் எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்று.
2. கடவுளை அளந்து அறியும் போலிப் புத்திஜீவிகள்;
சைவ சித்தாந்தம் சொல்லும் வழு நிறைந்த சிற்றறிவாம் பாச ஞானத்தை வைத்துக்கொண்டு, சைவ சித்தாந்தம் சொல்லும் அறிவரிய பதி ஞானமாம் இறையை அளந்து விட்டோம் என்று இறுமாந்து திரியும் அடி முடி தேடும் எம்போன்ற நவீன பிரம்மாக்களான புத்திஜீவிகளும், எழுத்தாளர்களும், நவீன பிரமாக்களான பேராசிரியர்களும், பதிப்பாளர்களும், சமுதாயத்தின் மதிப்புக்குரிய பெரிய மனிதர்களும் இருபத்தோராம் நூற்றாண்டின் சைவம் எதிர்கொள்ளும் இன்னொரு சவால். " மாலறியா நான்முகனும் காணாமலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்" என்று திருவாசகம் கூறும்.
சைவம் எதிர்கொள்ளும் சவால்
3. காலம் கடந்த மேற்கத்திய ஆராய்ச்சிகளில் இன்னும் மோகம்;
இப்படி எம்போன்ற எளியர்கள் பாசஞானமாம் சிற்றறிவு கொண்டு எழுதுவதையும், பேசுவதையும் பகுத்தறியும் ஆற்றல் இல்லாமல், அதனை வேதவாக்காகக் கருதி மீண்டும் மீண்டும் சொல்லியும், எழுதியும், மேற்கோள் காட்டியும் 'பாரீர் சைவத்தின் பெருமையையும் தொன்மையையும்' என்று கூறிப் புளகாங்கிதம் கொண்டு மயங்கும் சைவ சமயிகள் பலர். நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் செய்யப்பட்ட அரைகுறை ஆராய்ச்சிகளையும், அவர்களின் சைவ சித்தாந்தம் திராவிட சிந்தனைப் படைப்பு என்றும், தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் என்றும், சிந்து நாகரிகத்துக்கு உரிய தொன்மை என்றும் சொல்லும் கூற்றுகளையும், வார்த்தைகளையும் எமது வேத, ஆகம, சாத்திர நூல்களின் ஆதாரங்களிலும் மேலாக சிரமேற்கொண்டு போற்றி புளகாங்கிதம் அடைகின்றோம். எழுதியவரின் கல்வி, சமயபத்தி, சமய நூல்வழி ஒழுகும் ஒழுக்கம், சமய அறிவைத் திறக்கும் திறவுகோலாம் குரு பாரம்பரியம், உண்மை, நீதி ஆகியவற்றை நோக்காவிட்டாலும் இன்றைய விஞ்ஞான, சரித்திர, தொல்லியல், மானுடவியல், அறிவியல் ரீதியில் தானும் ஆராய்ச்சி, அளவை, பிரமாணம், ஆதாரம், எடுகோள், வழுக்கள் முதலானவைகளைத்தானும் பகுத்தறிந்து, ஆராய்ந்து, விமர்ச்சித்து உண்மையை நோக்கும் பகுத்தாய்வும் இல்லாமல் மயங்கும் எம்போன்ற சைவத் தமிழ் மரபின் மைந்தர்கள் இருபத்தோராம் நூற்றாண்டில் சைவத்தின் இன்னொரு சவால்.
4. காலம் புனையும் சரித்திராசிரியர்கள்;
எமது வேதங்களுக்கும், ஆகமங்களுக்கும், காலங்களும், தோற்றங்களும், மறைவுகளும் கூறி மயங்குகிறார்கள் சரித்திராசிரியர்கள். சைவ சித்தாந்தம் சிவனிடம் இருந்து வந்தது என்பதைப் புனைகதையாக்கும் எம்போன்ற சரித்திராசிரியர்கள் சைவத்தின் அடுத்த சவால். சைவர்களாகிய நாம் சதாசிவனுடைய நான்கு முகங்களில் இருந்து தோன்றிய வேதங்கள் நான்கு என்றும், அவனுடைய ஐந்தாவது முகமான ஈசான முகத்தில் இருந்து தோன்றிய ஆகமங்கள் இருபத்தெட்டு என்றும், அவற்றின் வழி நூல்கள் இருநூற்றேழு உபாகமங்கள் என்றும், சிருஷ்டிக்காலத்தில் சிவனிடம் இருந்து தோன்றி பிரளய காலத்தில் மீண்டும் ஒடுங்கி நின்று அடுத்த சிருஷ்டிக்காலத்தில் மீண்டும் வெளிப்படும் இந்த வேத ஆகமங்களுக்கு அவை அவ்வப்போது எழுத்துருப்பெற்ற காலம் கூற முடியுமே தவிர தோற்ற காலம் கூற இயலாது என்றும், இந்த ஆகமங்கள் இறைவனை அடையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பெரும் படிகளைக் கூறுகின்றன என்றும் ஏற்றுக்கொண்டவர்கள். இவற்றை எமது வாழ் முதலாகக்(Our Total Life Source) கொள்பவர்கள். எங்களுக்கு புது வரலாற்று ஆசிரியர்களின் வேத காலம், ஆகம காலம் என்ற சரட்டுகளும், ஆரிய திராவிட இனவேறுபாடு என்ற ஆதாரமற்ற வெற்று ஆராய்ச்சி ஊகங்களும் தேவை இல்லை. எமக்கு ஆதாரம் சிவன்; அவன் முகத்தில் இருந்து தோன்றிய வேதங்கள்; ஆகமங்கள். இவை சிவனிடமிருந்து தோன்றியவை ஆதலால் சாசுவதமானவை; சத்தியமானவை; அழிவற்றவை. அவற்றின் வழி வந்தவை புராணங்களும், இதிகாசங்களும். திருமுறைகள் பன்னிரண்டும் தமிழ் வேதங்கள். மெய்கண்ட சாத்திரங்கள் தமிழ் மெய் நூல்கள். சிவ சம்பந்தமான இவற்றை வெறும் மொழி, கலாச்சார, இன அடையாளங்களாகக் கருதி சிறுமைப்படுத்தக்கூடாது. நாம் இந்நெறியில் வாழ்ந்து பார்க்க முயலும்போது பெறும் இன்ப அனுபவத்தில் திளைத்து இதை மற்றவர்கள் அனுபவிக்காமல் அலைச்சலுறுகின்றார்களே என்று அங்கலாய்த்தல் ஏற்புடையது. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற திருமூலரின் அங்கலாய்ப்பு இதுவே.
சைவத்தின் மிகப்பெரும் சாபக்கேடு-
ஆரியமாயையின் தோற்றமும் வளர்ச்சியும்;
நாமெல்லாம் கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலமாக ஆரிய திராவிட கொள்கைகளினாலும், பேதங்களினாலும், வாதங்களினாலும் நன்றாக அலைப்புண்டு விட்டோம். இது நம்மையெல்லாம் எங்கேயோ கொண்டு வந்து விட்டுவிட்டது. இந்த ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர்?. திராவிடர்கள் எங்கிருந்து வந்தனர்? ஆரியன் என்ற சொல் பாரத பாரம்பரியத்தில் பெரிய மனிதன், பண்பானவன், சிறந்தவன், உயர்வானவன் என்ற கருத்தில் பயன்பட்டு வந்தது. விந்திய மலைக்கு வடக்கே இருந்தவர்களையும் ஆரியர் என்றும் வடவர் என்றும் குறிக்கும் வழக்கம் தமிழ் இலக்கியங்களில் இருந்தது. இது சேர, சோழ, பாண்டியர் என்பதுபோல ஒரு பிரதேச, ஒரு நில இயல் சேர்ந்த குறிப்புப்பெயரே அன்றி ஒரு இனத்தைக்குறிக்கும் பெயரல்ல. விந்திய மலைக்குத் தெற்கே குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பிரதேசங்களில் வசித்த பிராமணர்கள் பஞ்ச திராவிடர்கள் என அழைக்கப்பட்டனர். இன்றைய கேரளம் அன்றைய தமிழ்நாட்டில் அடங்கும். ஆதி சங்கரர் சௌந்தரியலகரியில் 'திராவிட சிசு' என்று அந்தணர் குலத்துதித்த திருஞானசம்பந்தரைப் பாடுகின்றார். 'வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த திண்திறல் நெடுவேல் சேரலன்' என்று சிலப்பதிகாரம் தமிழ் மறையோர் என்று அந்தணரைக்கூறும். 'பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே' என்றும், 'நந்தம்பாடியில் நான்மறையோனாய் அந்தமில் ஆரியனாய் அமர்ந்த நெறி' என்றும் மாணிக்கவாசகர் சிவனைப் பாடுகின்றார். 'ஆரியன் தோற்ற முன் அற்ற மலங்களே' என்று திருமூலர் திருமந்திரத்தில் பாடுகின்றார்.
ஆரியம் என்பது வடமொழியாகிய சமஸ்கிருதத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. 'வட சொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே' என்று தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களைப்பற்றி தொல்காப்பியம் பேசும். தமிழும் வடமொழியும் எமது இரு கண்கள் போன்றவை. செந்தமிழ் இலக்கியங்களைச் சுவைப்பதற்கும், பொருள் கொள்வதற்கும்கூட வடமொழி இலக்கணமும், விளக்கமும் தேவைப்படுகின்றது. அல்லாவிட்டால் இரு பெயர்ச்சசொற்கள் சேரும் தமிழ் இலக்கண சொற்புணர்ச்சி விதிகளின் இருபெயரொட்டுப்பண்புத்தொகையின்படி திருக்குறளின் முதற்சொல்லாகிய ஆதி+பகவன்= ஆதிபகவன் என்று அல்லாமல் ஆதிப்பகவன் என்றுதான் வரவேண்டும். திருக்குறளுக்கு உரை எழுதியவரின் பெயர்கூட கருணை+நிதி= கருணாநிதி என்று இல்லாமல் கருணையாநிதி என்றுதான் வரவேண்டும்.
வடமொழி என்பது பரதகண்டம் என்னும் அன்றைய இந்திய துணைக்கண்டம் எங்கும் காணப்பட்ட வெவ்வேறு மக்கட் கூட்டங்களுக்கு இடையிலான பொதுத்தொடர்பு மொழியேயன்றி ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, அல்லது மக்கட் கூட்டத்துக்கோ உரிய மொழி அல்ல. அது கற்றறிந்தவர்களின் மொழியாக விளங்கியது. அவர்களின் இடைத்தொடர்பு மொழியாக விளங்கியது. வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கட் கூட்டத்தினரின் பொதுத் தொடர்பாடல் மொழியாக விளங்கியது. ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது மக்கட் கூட்டத்துக்கோ அல்லாது பரதகண்டம் முழுமைக்கும் அறிய வேண்டி அறிவு நூல்களும், மெய் நூல்களும் இம்மொழியில் எழுந்தன. 'ஆரியமும் தமிழும் உடனே சொலிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே' என்கின்றது திருமந்திரம்.
முதன்முதலில் 1853 இல் 'ஆரிய' என்ற சொல் ஐரோப்பாவில் ஒரு இனத்தைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிந்து நதி தீர ஆராய்ச்சியாளரான சேர் ஜோன் மார்ஷல் (Sir John Marshall) ஆரியர் படையெடுப்பைப்பற்றிப் பேசுகின்றார். தொன்மையான சிந்து நதி தீர குடியிருப்புகள் திராவிடர்களின் நாகரிகம் என்றும், மத்திய ஆசியாவில் இருந்து குதிரைகளில் வந்த ஆரியர்களின் படையெடுப்பால் இந்நாகரிகம் அழிக்கப்பட திராவிடர்கள் தெற்கே குடி பெயர்ந்தார்கள் என்றும், ஆரியரின் இயற்கை வழிபாட்டுடன் திராவிடர்களின் சிவ வழிபாடும், சக்தி வழிபாடும் கலந்து உருவாகியதே இன்றைய இந்து மதம் என்றும் கூறினார் இவர். இவருடன் அக்காலத்திய வரலாற்று ஆசிரியர்களாகிய மார்டைமர் வீலர் (Martimer Wheeler), ஸ்ருவார்ட் பிகொட் (Stuart Piggot) போன்றோர்களும் சேர்ந்து கொண்டார்கள். இக்காலத்திலே நமது கீழைத்தேச வேத, உபநிடத, பௌத்த சாத்திரங்களையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பித்துப் பதிப்பித்து ஐம்பத்தொரு தொகுதிகளாக வெளியிட்ட மாக்ஸ் முல்லர் (Max Muller) தமது எழுத்தின் மூலமாகவும், உரைகளின் மூலமாகவும், அவரது சமகாலத்திய அறிஞர்களுடனான தொடர்பாடல்கள் மூலமாகவும் ஆரியப்படையெடுப்புக் கொள்கைக்கு உரம் சேர்த்தார்.
இதற்கு அக்கால உலக அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்ந்த புறநிலைக்காரணிகள் முக்கிய காரணமாக அமைந்தன. சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராச்சியம் உலகளாவி வளர்ந்திருந்த காலம். இவ்வாறு உலகம் முழுவதும் போக்குவரத்தும், பரிமாற்றமும் பெருகிவர கீழைத்தேய தத்துவங்களை மேலைநாட்டார் கண்டறிந்து மூக்கின் மேல் விரலை வைத்த காலம். இவ்வாறான பண்பாட்டுச்சிறப்பு மிக்க கலாச்சாரத்தை தாம் மறுதலித்து அரசியல் ஆதிக்கமும், மதப்பிரசாரமும் செய்வதை நியாயப்படுத்தவும், நிலை நிறுத்தவும் வேண்டிய வரலாற்றுக்கட்டாயம் இங்கு அவர்களுக்கு ஏற்படுகின்றது.
ஐரோப்பாவின் நூற்றாண்டுகளான இருண்ட காலத்தின் பின் 15ம் நூற்றாண்டில் தொடங்கிய அரசியல், சமுதாய, கைத்தொழில், பொருளாதார, பண்பாட்டு மறுமலர்ச்சியின் உச்சக்காலமும் இதுவே. அதன்விளைவாக ஐரோப்பாவில் உதயமானதுதான் தூய ஆரியமேன்மைவாதக் கொள்கை. ஜேர்மானியில் இது ஹிட்லரை உருவாக்கி இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குக் காரணமாகி இலட்சக்கணக்கான மக்களின் உயிரைக்குடித்த பின்தான் ஓய்ந்தது.
ஏறக்குறைய இதேகாலத்தில் இக்கொள்கை தமிழ் நாட்டிலே அதன் மறுவடிவான திராவிட மேன்மைவாதக் கொள்கையாகப் பிறப்பெடுத்தது. இதற்கு பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடப் புத்தகங்களினூடாகப் புகுத்தப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளர்களினதும், நூலாசிரியர்களினதும் ஆரியப்படையெடுப்புக் கொள்கையோடு, இந்தியாவின் அரசியலில் நிலவிய வட இந்தியர்களினதும், ஹிந்தி மொழியினதும் மேலாதிக்கமும், தென்னிந்தியாவில் நிலவிய பிராமணர்களின் கல்வி, சமுதாய, பொருளாதார மேலாதிக்கமும், இந்தியா எங்கணும் நிலவிய உயர்சாதிக்காரர்களின் சாதீய மேலாதிக்கமும், புற மதப்பிரசாரகர்களின் நிதி உதவிகளும், பிரசார தந்திரோபாயங்களும் புறநிலைக்காரணிகளாக அமைந்தன. தொல்காப்பியர் தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஆக்கப்பட்ட தமிழ் நூல்களில் ஒன்று கூட ஆரியரை ஒரு இனம் என்றோ, ஆரிய மொழியாம் சமஸ்கிருதத்தை வேற்றின மொழி என்றோ ஒரு வரி தானும் எழுதவில்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஆயினும் இன்று " நன்றும் தீதும் பிறர் தர வாரா" என்றுரைத்த புறநானூற்றுத் தமிழ் மரபில் வந்த நாம் எமது சமூகத்திலும், சமயத்திலும் பீடித்திருக்கும் பீடைகள் எல்லாம் இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களால் படைக்கப்பட்ட ஆரியரின் வேலையே என்று சொல்லி மாய்கின்றோம். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக எம்மிடையே புரையோடிப்போயுள்ள இந்த ஆரிய திராவிட பேதம் இருபத்தோராம் நூற்றாண்டில் சைவம் எதிர் நோக்கும் இன்னொரு மா பெரும் சவால்.
இன்று இன்றைய அறிவியல் ஆராய்ச்சி விமர்சன முறையாக மீண்டும் இந்த ஆரியப் படையெடுப்பு அல்லது குடியேற்றக் கொள்கையை அலசி ஆராய்ந்து டேவிட் ஃபுரோலி (David Frawley the author of ' The myth of Aryan invasion of India, Co- author of ' Vedic Aryans and the origin of civilization), முனைவர் கொன்ராட் எல்ஸ்ட் (Dr. Koenraad Elst the author of 'Update on the Aryan invasion debate), மிஷெல் டானினோ (Mishell Danino the author of ' The invasion that never was) போன்ற பல வரலாற்று ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் மீள எழுதியிருக்கின்றார்கள். இவர்கள் ஆரியப்படையெடுப்பு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளர்களின் அனுமானமான ஒரு கற்பனாவாதம் என்றும் அதற்கு எந்தவிதமான தொல்லியல், மானுடவியல், வரலாற்று ஆதாரங்களும் இல்லையென்றும் தெட்டத்தெளிவாக நிரூபித்துள்ளனர். இது 1980 களின் பின்னர் விஞ்ஞான, மருத்துவ, சரித்திர, தொல்லியல், மொழியியல், மானுடவியல் போன்ற துறைகள் யாவற்றிலும் தோன்றி வளர்ந்த கூர்த்த விமர்சன நோக்குடன் கூடிய வழு குறைந்த ஆராய்ச்சி அணுகுமுறைகளின் பயனாகும். முன்னர்போல ஒவ்வொரு துறைகளிலும் பெயர் எடுத்த பெரிய மனிதர்கள் சொல்லும் மேம்போக்கான கருத்துக்களையெல்லாம் வேதவாக்காகக் கொண்ட காலம் மலையேறிவிட்டது. ஆனால் இருபத்தைந்து வருடங்களாகியும் இன்னமும் எங்களிடமிருந்து இந்த பழைய சரித்திரக் குப்பைகளும், அவற்றின் கொள்கைகளும், தாக்கங்களும், சுவடுகளும் போகவில்லை.
யார் திராவிடர்?
காலங்காலமாக திராவிட மொழிகளையே தமது தாய் மொழியாகக்கொண்ட பிராமணர்களை அவர்கள் திராவிடர்கள் அல்ல என்றும் ஆரியமாயை என்றும் சொல்லிப் புறந்தள்ளி விட்டோம். அவர்களும் இதை நம்பிக்கொண்டு, தம்மை ஒரு புறம்பான இனக்கூட்டமாக அடையாளம் கண்டு பாரத மண்ணில் ஆரியர் என்னும் இனத்தை முதன்முதலாகத் தோற்றுவித்து மயங்குகின்றார்கள். தமிழ் ஞானசம்பந்தன் என்று தனது பாடல்களில் தன்னைக்குறித்த சம்பந்தர் திராவிடர் இல்லை என்றால் வேறு யார் தான் இங்கு திராவிடர்? திராவிட சிசு என்று சங்கராசாரியார் சௌந்தரிய லகரியில் பாடிய இந்த சம்பந்தர்கூட திராவிடர் இல்லை என்றால் வேறு யார்தான் இங்கு திராவிடர்? அந்தணச் சீராளர்களான சுந்தரரும், மாணிக்கவாசகரும் திராவிடர் இல்லை என்றால் யார் தான் இங்கு திராவிடர்? தமிழில் மெய்யில் நூல்கள் படைத்த சந்தனாசாரியார்களான அருணந்தி சிவம், உமாபதி சிவம் ஆகியோரும் திராவிடர் இல்லை என்றால் யார்தான் இங்கு திராவிடர்? நாயன்மார்களில் பெரிய புராணம் கூறும் அந்தணர்களான அப்பூதியடிகள், சடையனார், இசை ஞானியார், கணநாதர், குங்கிலியக்கலயர், சண்டேசர், சிறப்புலி நாயானார், சிறுத்தொண்டர், சோமாசிமாற நாயனார், திருநீலநக்கர், நமிந்ந்தியடிகள், புகழ்த்துணை நாயனார், பூசலார் நாயனார், முருக நாயானரார் ஆகியோர் திராவிடர் இல்லை என்றால் வேறு யார் தான் சைவத்தின் திராவிடர்கள்? அழிந்து மறைந்து மறந்து போய்க்கொண்டிருந்த தமிழ் நூல்களையெல்லாம் மாட்டு வண்டியில் ஊர் ஊராகச்சென்று தேடி எடுத்துச் சரி பார்த்துப் பதிப்பித்து வெளியிட்ட உ. வே. சாமிநாதையர் திராவிடர் இல்லை என்றார் வேறு யார்தான் இங்கு திராவிடர்? நவீன தமிழ் இலக்கிய உலகுக்கே திறவுகோலாக விளங்கிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் திராவிடர் இல்லையென்றால் வேறு யார்தான் இங்கு திராவிடர்? தமிழ் இலக்கிய இலக்கண் நூல்களையெல்லாம் பதினாறு வருடங்கள் செலவழித்து ஆராய்ந்து பத்து வருடங்களை செலவழித்து அதை சரி பார்த்து இருபத்தோராம் நூற்றாண்டில் பதினேழு தொகுதிகளாக தமிழ் இலக்கணப் பேரகராதியை வெளியிட்டிருக்கும் புதுச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தின் தமிழ் பண்டித வித்துவான், மாந்தக் கணணி தி. வே. கோபாலையர் திராவிடர் இல்லையென்றால் வேறு யார்தான் இங்கு திராவிடர்?
5.ஆரிய-திராவிட பேதம்;
வட மொழியில் உள்ள வேதங்களும், ஆகமங்களும், புராணங்களும், இதிகாசங்களும் ஆரியரினதும், பிராமணரினதும் படைப்பு என்றும், அவர்கள் புகுத்தியவை என்றும் புறந்தள்ளுகின்றோம். இவர்கள் மேல் கொண்ட கோபத்தாலும், துவேஷத்தாலும் எமது பெருஞ்செல்வங்களான வேத ஆகமங்களையும், ஏனைய வட மொழி நூல்களையும் அவர்களுடன் சேர்த்துப் புறந்தள்ளி வறியவராகின்றோம். சைவத்தின் தாரக மந்திரமாம் பஞ்சாட்சரம் கிருஷ்ண யசுர் வேத்த்தில் உள்ள ஸ்ரீ ருத்திரத்தில் இருக்கும் வட மொழி மந்திரம் என்பதை மறந்து விடுகின்றோம். வடமொழியில் உள்ள வேதத்தின் ஸ்ரீ ருத்திரத்தை செபித்தே உருத்திர பசுபதி நாயானார் சிவபதம் பெற்றார் என்று பெரிய புராணம் கூறுவதையும் மறந்துவிடுகின்றோம். திருமுறைகளில் இருந்து புராணக்கதைகளையும், இதிகாசக்கதைகளையும் தணிக்கை செய்து எடுத்து விட்டால் புத்தகங்களில் வெற்று அட்டை மட்டும் தான் நமக்கு மிஞ்சும். நாம் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம், உள் வீட்டுக்குள் இருந்து கொண்டு அதையே உடைத்தெறிகின்றோம்; நுனிக்கிளையில் இருந்து கொண்டு அடி மரத்தை வெட்டுகின்றோம்; தேவாரம் படித்துக்கொண்டு திருக்கோயில்களை இடிக்கின்றோம். வேறு எந்த சமயத்துக்கோ அல்லது இந்திய தத்துவத்துக்கோ இல்லாத பிரிவினைவாதம் வடக்கு- தெற்கு என்றும், ஆரியம்- திராவிடம் என்றும், தமிழ்- வட மொழி என்றும், பிராமணர்-பிராமணரல்லாதார் என்றும், தமிழர்- தமிழர் அல்லாதார் என்றும் சைவத்தில் தலைவிரித்தாடுகின்றது. இது எமது சவால் மட்டுமல்ல சாபக்கேடும்கூட.
6. கிரியைகளை ஒதுக்கும் ஞானவாதிகள்;
"ஆலயந் தானும் அரனெனத் தொழுமே" என்று சைவத்தின் ஞான முதனூலாம் சிவஞானபோதம் சொல்வதை மறந்து "சைவம் மேலான இறை ஞானத்தைக்காட்டும் மார்க்கமாயினும் அதிலுள்ள கோயில் வழிபாடும், சடங்குகளிலும், கிரியைகளும், விழாக்களும் அதை சிக்கலாக்கி உண்மையை இலகுவில் புரிந்து கொள்ள முடியாதபடி மறைக்கின்றன; இவற்றுக்கு அவசியமேயில்லை; ஞானம் நாடுவோருக்கு இவை தேவையும் இல்லை; இந்த சடங்குகளும், கிரியைகளும், விழாக்களும் அவற்றை நடத்துவோரின் பிழைப்புக்காக எழுந்தவை; அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நாம் ஞான நூல்களின் துணைகொண்டு இறைஞானத்தை அடைவோம்" என்று கூறும் எம் போன்ற சைவ ஞானிகள் சைவத்தின் இன்னொரு சவால். ஞானத்தை மறைப்பது சடங்குகளும் கிரியைகளும் அல்ல எம்மில் உள்ள ஆணவம் முதலிய மலங்களே. இவற்றை சிறுகச் சிறுக அகற்றி ஞானத்தை விளக்க உதவுவையே சைவத்தின் கோயில்களும், சடங்குகளும், கிரியைகளுமாம்.
7. சைவத்தில் ஒரு நெறி காணமுயலும் திருச்சபைக்காரர்:
"யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே மாதொருபாகனார்தாம் வருவர்" என்றும் "அத்தெய்வம் அத்தனை க்காண் எங்கும்வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது" என்றும் சிவஞானசித்தியார் கூறுவதையும், திருத்தொண்டர் புராணம் சொல்லும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் காட்டிய அறுபத்து மூன்று விதமான வழிகளையும், நெறிகளையும் மறந்து சைவம் கூறும் தெய்வங்களும், வழிகளும், நெறிமுறைகளும் குழப்பமாக இருக்கின்றன; நாம் எல்லோரும் ஒன்று பட்டு ஒரே கொள்கை, ஒரே வழிபாடு, ஒரே நோக்கம், ஒரே செய்கை உடையோராக வேண்டும் என்று சைவத்தில் ஒருநெறித் திருச்சபை காண முயலும் எம்போன்ற ஒருநெறிச் சைவர்கள் இன்னொரு சவால்.
8. சைவ ஆலய நிர்வாகம்;
கோயில்களையும் சமய நிறுவனங்களையும் நடாத்துவதிலும் நிர்வகிப்பதிலும் எமது சமய சாத்திர நூல்களைப் பிரமாணமாகக் கொள்ளாது மேற்கத்திய நிர்வாகக்கலாச்சார முறைகளைப் பின்பற்றி நாமே ஏற்படுத்திய யாப்புகளையும், ஒழுங்குகளையுமே விதிமுறைகளாகக்கொண்டு, நிர்வாகக் கூட்டங்கள் தோறும் இவற்றையே பிரமாணமாகக் கொண்டு வாதித்து, பேதித்து சமயாசாரமும், நெறிமுறையும் இல்லாத மாக்களையும் மக்களாட்சியின் சனநாயகம் என்ற பெயரில் இதிலே சேர்த்து, வாக்கெடுப்பு நடாத்தி தீர்மானங்களை நிறைவேற்றி, இந்த ஆத்மீக நிறுவனங்களை கொம்பனிகள் போலவும், கூட்டுத்தாபனங்கள் போலவும் வியாபார நிறுவனங்களாகத் தரமிறக்கி வழிநடாத்தும் எம் போன்ற ஆலய அறங்காவலர்களும், நிர்வாகத்தர்களும் இருபத்தோராம் நூற்றாண்டின் சைவம் எதிர்கொள்ளும் இன்னொரு சவால்.
சவால்களை எதிர்கொள்வோம்;
உலகளாவிய சைவத்தின் இருபத்தோராம் நூற்றாண்டுக்கான இந்தச் சவால்களை இனங் காண்போம்; எதிர்கொள்வோம்; பதில் காண்போம்; தெளிவுறுவோம். சைவத்தை வாதிப்பதை விட்டு வாழ்க்கையில் வாழ முயலுவோம். நமது வினைகள் ஓயவும், உலக நன்மை கருதியும் சைவத்தின் உண்மையைத் தரணியெங்கும் எடுத்துரைப்போம். இதுவே இருபத்தோராம் நூற்றாண்டின் எமது சிவ வழிபாடாகக் கொண்டு செயற்பட்டு உய்வோம்.
“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment