Wednesday, September 26, 2012
காலக்கணிப்பின் அடிப்படை
காலக்கணிப்பின் அடிப்படை
அறுபது நொடி கொண்டது ஒரு விநாடி
அறுபது விநாடி கொண்டது ஒரு நாழிகை
அறுபது நாழிகை கொண்டது ஒரு நாள்
முன்னூற்று அறுபது நாள் கொண்டது ஒரு (சாந்திர) வருடம் (Lunar Year)
ஆகவே ஒரு வருடத்தில் 21, 600 நாழிகைகள் உண்டாம்.
எமக்கு ஒரு நாளில் நடக்கும் சுவாசமும் 21, 600.
இது சிதம்பர இரகசியத்தின் ஒரு பகுதி. சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் உள்ள பொன் ஓடுகளின் எண்ணிக்கை 21, 600. இந்த பொன் ஓடுகளைத் தைத்துப் பொருத்தியுள்ள ஆணிகளின் எண்ணிக்கை 72, 000. இது எமது உடலில் உள்ள 72, 000 நாடிகளைக் குறிக்கின்றது. சிதம்பரத்தில் இருந்து தீக்ஷிதர்களை விரட்டியடிப்பதில் முனைப்பாக இருக்கும் சைவர்களாகிய நமக்கு அங்கிருக்கும் ஓடுகளையும் ஆணிகளையும் கவனிக்க எங்கே நேரமும், அக்கறையும் இருக்கப்போகின்றது?
360 மானுட வருடங்கள் = ஒரு தேவ வருடம். இவ்வாறு
4000 தேவ வருடங்கள் கிருத யுகம்; இதனோடு 400 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; நானூறு தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 4800 தேவ வருடங்கள் கொண்டது கிருத யுகம்.
3000 தேவ வருடங்கள் திரேதா யுகம்; இதனோடு 300 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; முன்னூறு தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 3600 தேவ வருடங்கள் கொண்டது திரேதா யுகம். .
2000 தேவ வருடங்கள் துவாபர யுகம்; இதனோடு 200 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; 200 தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 2400 தேவ வருடங்கள் கொண்டது துவாபர யுகம்.
1000 தேவ வருடங்கள் கலி யுகம்; இதனோடு 100 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; 100 தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 1200 தேவ வருடங்கள் கொண்டது கலி யுகம்.
முன் சொன்ன சிதம்பர் இரகசிய இலக்கமான
21, 600 ஐ 80 ஆல் பெருக்க வருவது கிருத யுக வருடங்கள். இது பதினேழு இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் (17, 28, 000) மானுட வருடங்கள்.
இந்த 21, 600 ஐ 60 ஆல் பெருக்க வருவது திரேதா யுக வருடங்கள். இது பன்னிரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம் (12, 96, 000) மானுட வருடங்கள்.
இந்த 21, 600 ஐ 40 ஆல் பெருக்க வருவது துவாபர யுக வருடங்கள். இது எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம் (8, 64, 000) மானுட வருடங்கள்.
இந்த 21, 600 ஐ 20 ஆல் பெருக்க வருவது கலி யுக வருடங்கள். இது நான்கு இலட்சத்து முப்பது இரண்டாயிரம் (4, 32, 000) மானுட வருடங்கள்.
அடுத்தடுத்து வரும் இந்த நான்கு யுகங்களையும் சேர்த்து ஒரு சதுர் யுகம் என்பர்.
பன்னீராயிரம் 12,000 தேவ வருடம் = நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம் 43,20, 000 மானுட வருடங்கள் = ஒரு சதுர் யுகம்.
சிதம்பர இரகசியத்தின் ஒரு பகுதிதான். எல்லாவற்றினது கணக்கும்; எமது சுவாசத்தில் இருந்து அண்ட சராசரங்களின் கால எல்லை வரை, சிதம்பர இரகசியத்தில் அடங்கும்.
எட்டல்:
60 நொடி அல்லது தற்பரை = 1 விநாடி
60 விநாடி = 1 நாழிகை (= 24 நிமிடம்)
(2-1/2 நாழிகை = 1 மணித்தியாலம்)
60 நாழிகை = 1 நாள்
360 நாள் = 1 சாந்திர வருடம்
365நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி = 1 சௌர வருடம்
360 சௌர வருடம் = 1 தேவ வருடம்
சதுர் யுகங்கள்
4800 தேவ வருடங்களைக்கொண்டது கிருத யுகம்.
3600 தேவ வருடங்களைக் கொண்டது திரேதா யுகம்.
2400 தேவ வருடங்களைக் கொண்டது துவாபர யுகம்.
1200 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கலி யுகம்.
அடுத்தடுத்து வரும் இந்த் நான்கு யுகங்கள் கொண்டது ஒரு சதுர் யுகம்.
1. கிருத யுகம்; 4800 தேவ வருடங்கள் = பதினேழு இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்கள் (17, 28, 000 = 1.728 million years).
2. திரேதா யுகம்; 3600 தேவ வருடங்கள் = பன்னிரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம் வருடங்கள் (12, 96, 000 = 1.296 million years).
3. துவாபர யுகம்; 2400 தேவ வருடங்கள் = எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம் வருடங்கள்(8, 64, 000 = 0. 864 million years).
4. கலி யுகம்; 1200 தேவ வருடங்கள் = நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் வருடங்கள் (4, 32, 000 = 0. 432 million years).
சதுர் யுகம்- 4800 + 3600 + 2400 + 1200 = 12, 000 தேவ வருடங்கள் = நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம் மானுட வருடங்கள் (43, 20, 000 வருடங்கள் = 4. 32 million years).
பிரம்மாவின் நாள்
இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது உலகைப் படைக்கும் பிரம்ம தேவனின் ஒரு பகற் பொழுதாகும். அதுபோல ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது பிரம்மதேவனுக்கு ஒரு இராக்காலமாகும். ஆக மொத்தம் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள்.-பகவத் கீதை 8.17-
இந்திரனின் காலம்
இவ்வாறு பிரம்மாவின் ஒரு நாளில் சுவர்க்க லோகத்துக்கு 14 இந்திரர்கள் வந்து இருந்து ஆண்டு மாளுவர். ஒரு பகலிலே 420 இந்திரர்கள் மாளுவர். ஒரு வருடத்திலே 5040 இந்திரர்கள் மாளுவர். இவ்வாறு ஒரு பிரம்மாவின் ஆயுட்காலத்தில் 540,000 இந்திரர்கள் வந்து போவர். ஆறுமுக நாவலரின் நான்காம் பாலபாடம்.
இது விஷ்ணுவின் ஒரு நாளாகும். இவ்வாறு விஷ்ணுவின் ஒரு ஆயுட்காலம் உருத்திரனின் ஒரு நாளாகும். -சிவ மகா புராணம் -
கற்ப காலம்
பிரமதேவனின் பகற்காலத்தில் படைப்பும், இராக்காலத்தில் பிரளயமும் உண்டாகின்றன. அந்தப்பிரளய காலத்தில் பூலோகம், புவர லோகம், சுவர்க்க லோகம் ஆகிய மூன்று உலகங்களும் அழிந்து விடுகின்றன. பலர் பூலோகம் என்பது எமது பூமியைக் குறிக்கின்றது என்று தவறாக எண்ணுகிறார்கள். பூலோகம் என்பது நாம் வாழும் பூமி உள்ளடங்கிய புவனத்தொகுதி (Galaxy)முழுமையையும் குறிக்கும். எமது பூமி உட்பட்ட கிரகங்கள் சூரியனைச்சுற்றி வருவது நாம் அறிந்ததே. இந்த சூரியன் உண்மையில் ஒரு நட்சத்திரம். இந்த சூரியனாவது ஒரு இடத்தில் நிலையாக நிற்கின்றானா என்றால் இல்லை. சூரியனும் அதன் கிரகங்களுடன் சேர்ந்து தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு எமது சூரியக் குடும்பம் உள்ள ஆகாய கங்கை எனப்படும் பால்வீதியில் சூரியனைப்போல 2000 பில்லியன் நட்சத்திரங்களுக்கு மேல் உள்ளன. இவையெல்லாம் சுழற்சியாகச் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன என்றும் இன்றைய அண்டவியல் விஞ்ஞானம் கூறுகின்றது. இவை இவ்வாறு எதைச் சுற்றும் அச்சு என்பது இன்றைய விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால் எமது சைவ நூல்கள் இவ்வாறு சூரியன் உள்ளிட்ட நடசத்திரங்களும், கிரகங்களும் சந்திரர்களும் சுற்றி வரும் அச்சை மகாமேரு என்று கூறுகின்றன. இந்த அச்சை சுழற்சியின் (Spiral) மையமாக உள்ள மலை என்று வர்ணிக்கின்றன.
'உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு' என்று 11ம் திருமுறையான திருமுருகாற்றுப்படை சூரியன் மேருவை வலம் வருவதாகக் கூறுகின்றது.
'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்'
என்று ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் சூரியன் மேருவை வலம் வருவதாகக் கூறுகின்றது. இவற்றில் இருந்து எமது பூலோகம் முழுவதுக்குமான சுழற்சிக்குரிய அச்சே மேரு என்று தெரிகின்றது.
இதேபோல புவர் லோகம், சுவர்க்க லோகம் என்பவை வேற்று புவனங்களாம் (parallel galaxies). காயத்திரி மந்திரமும் 'ஓம் பூர் புவ வ்வ' என்றே தொடங்குகின்றது. இவற்றுள் புவர் லோகம் இன்றைய விஞ்ஞானம் கூறும் எமது புவனத்தொகுதிக்கு அடுத்துள்ள அன்ட்றோமீடா புவனத்தொகுதியாக (Andromeda Galaxy) இருக்கலாம். பிரமனின் இரவுக்காலத்தில் நிகழும் இந்த மூன்று புவனங்களினதும் பிரளயத்தை நைமித்திகப் பிரளயம் என்பார்கள். பின்னர் பிரமதேவனின் பகற்காலத்தில் பூலோகம், புவர் லோகம், சுவர்க்க லோகம் ஆகிய உலகங்களின் படைப்பு மீண்டும் தொடங்குகின்றது. மற்றெல்லா உலகங்களும், அண்டங்களும் முன்போலவே இருக்கின்றன. இவ்வாறாக பிரமதேவனின் ஒரு பகற்காலத்தை ஒரு கற்ப காலம் என்பர்.
“பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழூழ் செல்ல” –பரிபாடல்-
இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்ட ஒரு கல்ப காலம் பிரம்மாவுக்கு ஒரு பகல். இது இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு பகலும் இரவும் கொண்ட ஒரு முழு நாள்.
ஒரு கற்ப காலம் = ஆயிரம் சதுர்யுகம் = 432 கோடி வருடங்கள (432 Million years).
இவ்வாறு அநேக கற்பங்கள் உள்ளன. அவைகளுக்குப் பெயர்களும் உள்ளன. பினவருவன அவற்றுள் சிலவாகும்.
1. பார்த்திவ கல்பம்
2. கூர்ம கல்பம்
3. பிரளய கல்பம்
4. அனந்த கல்பம்
5. சுவேதவராஹ கல்பம்
6. பிராஹ்ம கல்பம்
7.. சாவித்ர கல்பம்
இப்போது நடப்பது சுவேதவராஹ கல்பம். விஷ்ணு வெள்ளைப் பன்றியாக வராக அவதாரமெடுத்து வெள்ளத்துள் மூழ்கிக்கிடந்த பூவுலகை மேலெடுத்ததால் இது இப்பெயர் பெற்றது. சுவேத என்றால் வெண்மை என்று பொருள்; வராகம் என்றால் பன்றி. சைவக் கிரியைகளின் தொடக்கத்தில் சங்கல்பம் என்று ஒன்று வரும். இன்ன காலத்தில், இன்ன இடத்தில், இன்னாராகிய யான், இன்ன கருமத்தைச் செய்யச் சங்கல்பிக்கிறேன் என்பதுதான் இது. இதிலே "சுவேதவராஹ கல்பே" என்று வரும். அடுத்த முறை கிரியைகள் செய்யப்படும்போது அவதானியுங்கள். இப்படி எண்ணற்ற கற்பங்கள் வந்து போயுள்ளனவாம்.
“கற்பமும் ஈறும் கண்டோன் காண்க...”
– திருவாசகம்-
“ஏதிலாக் கற்பம் எண்ணில சென்றன ”
- கந்த புராணம் காசியப முனிவர் உபதேசம் 20ம் பாடல்-.
“கற்பங்கள் தொறுர நடஞ்செய் கழலடைந்தோர்
கணிப்பிலர் தஞ் சிற்பங்கள் தரும்புகழுஞ் சென்றன”
-உமாபதி சிவாச்சாரியார்-
பான்மைதருங் கற்பமிது பாத்ம்மெனும் பரிசுணர்ந்து -என்று இரணிய வர்மன் தில்லைக்கு வந்த காலத்தை பாத்ம கற்பம் என்று உமாபதி சிவாச்சாரியார் கோயிற்புராணத்தில் கூறுகின்றார்.
இவைகளையெல்லாம் நாம் இப்போதுள்ள சரித்திராசியர்களுடைய கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்ற கால அளவுகளுக்குள் அடக்கி ஆராய முடியுமா?
மன்வந்தரம்
ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்ட கற்ப காலத்தில் 14 மனுக்கள் அதிகாரம் பண்ணுவார்கள். ஒவ்வொருவருடைய காலமும் 71 சதுர் யுகங்களாகும். இந்த 71 சதுர் யுகங்களின் சுற்றை மன் வந்தரம் என்பார்கள். ஒவ்வொரு மன்வந்தர முடிவிலும் ஒரு பிரளயம் பூலோகத்துக்கு மட்டும் நடைபெறும். இதில் பூலோகம் மட்டும் நீரில் அமிழும். தற்போது உலகம் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தினால் வெப்பமாகின்றது என்று அலறும் சூழல் பாதுகாப்பாளர்களும் சூழலியல் விஞ்ஞானிகளும் இதைத்தான் சொல்லுகிறார்கள். பிரம்ம தேவனின் ஒரு பகற்காலத்திற்குள்ளேயே பதினான்கு தடவைகளுக்கு வந்து போகும் இந்த மன்வந்தர பிரளயத்தையே நைமித்தியப் பிரளயம் என்பர். இது ஒரு கிருத யுக காலத்துக்கு நீடிக்கும். அதாவது 4800 தேவ வருடங்கள் அல்லது எமது கணக்குப்படி பதினேழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் (17, 28, 000) வருடங்கள்.
ஒரு மன்வந்தரம்= 71 சதுர் யுகம் = முப்பது கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் = 306.72 million years.
ஒவ்வொரு மன்வந்தரத்துக்கும் ஒவ்வொரு மனு தொடக்கமாக வருவார். அந்தந்த மன்வந்தர காலங்களில் தொடக்க புருஷர்களாயுள்ள அவர்களின் பெயரால் அந்த மன்வந்தர காலம் விளங்கும். இவ்வாறு ஒரு கற்ப காலத்துக்கு பதினான்கு மனுக்கள் உள்ளார்கள். அவர்களின் பெயர்கள் வருமாறு;
1. சுவயாம்புவ மனு
2. சுவாரோசிஷ மனு
3. உத்தம மனு
4. தாமஸ மனு
5. ரைவத மனு
6. சாட்சூஷ மனு
7. வைவஸ்வத மனு
8. பௌஷ்ய மனு
9. அக்னி ஸாவர்ணி ஞ்னு
10. சூர்ய ஸாவர்ணி மனு
11. இந்திர ஸாவர்ணி மனு
12. பிரம்ம ஸாவர்ணி மனு
13. ருத்ர ஸாவர்ணி மனு
14. ரௌச்ய மனு
இவர்களில் முதல் ஆறு மனுக்களும் இறந்து போனார்கள். தற்போதுள்ள காலத்தின் மனு வைவவ்வத மனு. இவரின் பெயரால் இப்போதுள்ள மன்வந்தரம் வைவவ்வத மன்வந்தரம் எனப்படுகின்றது. சைவக்கிரியைகளில் சங்கல்பம் செய்யும்போது 'வைவவ்வத மன்வந்தரே' என்று வரும்; கவனியுங்கள்.
பிரம்மாவின் ஆயுள்
இப்போது இருக்கும் பிரம்மாவுக்கு 50 வயது முடிந்து, ஐம்பத்தோராவது வயதில் முதலாவது மாதத்தில் முதலாவது நாள் நடக்கின்றது. இவ்விதமாக ஒவ்வொரு பிரம்மாவுக்கும் நூறு ஆண்டு கால ஆயுள் உண்டு. இது நமது கணக்குப்படி மூன்று இலட்சத்துப் பதினோராயிரத்து நாற்பது கோடி வருடங்கள் (31.104 billion years). இதை பரம் என்று கூறுவர். இதிற் பாதி பரார்த்தம். அர்த்தம் என்றால் பாதி. பரத்தில் பாதி பரார்த்தம். பாதி பெண்ணுருவாகக்கொண்ட இறை வடிவு அர்த்த நாரீசுவரர். நாரீ என்றால் பெண்.
ஆக இப்போது பிரம்மாவுக்கு ஐம்பது ஆண்டுகள் முடிந்து ஐம்பத்தோராவது ஆண்டில் (இரண்டாவது பரார்த்தத்தில்) முதலாவது மாதத்தில் முதலாவது நாள் நடக்கின்றது. இவ்வாறு ஒரு பிரமதேவனின் ஆயுள் முடிந்தவுடன், அடுத்தாக இந்தப்பதவிக்கு வரும் பிரமதேவன் படைப்பைத் தொடங்குவார்.
இப்படி பல கோடி பிரம்மர்கள் இருந்திருக்கின்றார்கள். மகா பாரதத்தில் மார்க்கண்டேய பர்வத்தில் என்றும் பதினாறு வயதான மார்க்கண்டேயர் பாண்டவர்களை வன வாசத்தில் சந்தித்தபோது அவர் இவ்வாறு மூன்று பிரம்மாக்களைக் கண்டவர் என்று கூறுகின்றார். தற்போதிருக்கும் பிரம்மாவுக்கு அடுத்தாக பிரம்ம பதவிக்கு வரப்போகின்றவர் உருத்திரர்களில் ஒருவரின் அவதாரமும், ஏழு சீரஞ்சீவிகளில் ஒருவரும், ஸ்ரீராமருக்கு அணுக்கத் தொண்டருமாகிய வாயு புத்திரன் ஆஞ்சநேயர் ஆவார் என்று பவிஷ்ய புராணம் கூறுகின்றது. இவ்வாறே இப்போதிருக்கும் இந்திரனுக்கு அடுத்ததாக இந்திர பதவிக்கு வரப்போகின்றவர் மகாபலிச் சக்கரவர்த்தி என்றும் பவிஷ்ய புராணம் கூறுகின்றது. இவர் தற்போது சுவர்க்த்துக்கும் மேலான போகங்களை உடைய சப்த பாதாளங்களில் ஒன்றின் அதிபதியாக இருந்து வருகின்றார்.
“....கோடி கோடி பிரம்மர்கள்..”
- திருவாசகம்-
“நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே”
- திருநாவுக்கரசர் தேவாரம் -5ம் திருமுறை 100ம் பதிகம் 3ம் பாடல்-
நடப்பு கால அளவையும் உலக அழிவும்,
ஆதியில் ஒரு பிரளயமும் அதன் பின் 6 மன்வந்தரங்களும் அவற்றின் பிரளயங்களும் கழிந்தன. இப்போது நடப்பது ஏழாவது மன்வந்தரம், இது வைவஸ்வத மன்வந்தரம்.
இந்தக் கால அளவு "சுவேத வராஹ கல்பே - வைவஸ்வத மன்வந்தரே - கலியுகே" என்று பூசைகளில் சங்கல்பம் செய்யும்போது கூறும் மந்திரத்தில் வரும்.
இப்போது நடப்பது சுவேதவராஹ கற்பம். இதிலே தற்போதைய நடப்பு வைவஸ்வத மன்வந்தரம். ஒரு மன்வந்தரத்துக்கு 71 சதுர் யுகங்கள் உள்ளன என்று முன்னர் பார்த்தோம். வைவஸ்வத மன்வந்தரத்துக்கு இதில் 27 சதுர் யுகங்கள் கழிந்துவிட்டன. இப்போது நடப்பது 28வது சதுர் யுகம். பூஜைகளில் சங்கல்பம் செய்யும்போது இது “அஷ்டா தசா விம்சதீ” என்று வரும், கவனியுங்கள். இதில் கிருத, திரேதா, துவாபர யுகங்களும் முடிந்து இப்போது நடக்கும் கலி யுகம் 17 பெப்ரவரி. 3102 BC இல் ஆரம்பமாகி இந்த 2012 February 17 உடன் 5113 வருடங்கள் கழிகின்றன. தற்போது நடக்கின்ற கலியுகம் முடிவதற்கு இன்னமும் 4,26, 887 வருடங்கள் உள்ளன. இத்துடன் இருபத்தெட்டவாது சதுர்யுகம் முடிவுக்கு வர இருபத்தொன்பதாவது சதுர் யுகம் தொடங்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக 71 சதுர் யுகங்கள் கழியும்போது மன்வந்தரத்தின் முடிவில் வருகின்ற பிரளய அழிவு வரும். அப்போது எஞ்து பூமி உட்பட இந்த பூலோகத் தொகுதியில் இருக்கும் அனைத்து உலகங்களும் நீருள் அழிந்து மறையும். அதற்கு இன்னமும் இவ்வாறு 43 சதுர் யுகங்கள் அதாவது 185.76 மில்லியன் வருடங்கள் இருக்கின்றன.
சப்தரிஷி சகாப்தம்
எங்களுக்கு தற்போது கிடைத்துள்ள காலக்கணிப்புகளில் (Calenders) பழைமையானது சப்தரிஷி சகாப்தம் ஆகும். வானநூல் குறிப்புகளை வைத்துப் பார்க்கும்போது இந்த சகாப்தம் கி.மு.8516 இல் தொடங்கியதாகத் தெரிகிறது. இந்தக் கணிப்புமுறை நட்சத்திரங்களையும், சூரியனுடைய செல்கதியையும் அடிப்படையாகக் கொண்டது. தற்போது பூமத்திய ரேகைக்கு சூரியன் செப்ரெம்பர் மாதம் 21ம் திகதி உச்சம் கொடுத்துக் கடக்கிறது என்பது நாம் அறிந்ததே. வானசாத்திர ரீதியில் சூரியன் துலா இராசியில் பிரவேசிக்கிறது. ஆனால் பெப்ரவரி மாதம் 21ம் திகதிதான் சூரியன் கும்ப ராசியில் பிரவேசிக்கிறது. ஆனால் சப்தரிஷி காலக்கணக்கு தொடங்கியபோது இந்த இரண்டு நிகழ்வுகளும் அதாவது சூரியனது கும்ப ராசிப்பிரவேசம், பூமத்தியரேகைக் கடப்பு ஆகிய இரண்டும் ஒன்றாக நவம்பர் மாதத்தில் நிகழ்ந்தன. விளங்குவதற்கு சிரம்மாக இருந்தால் வாசித்து விட்டு சற்று ஆறுதலாக இருந்து அசை போட்டுப் பாருங்கள்: விளங்கும். இந்தக்கணிப்பின் படி சப்தரிஷி சகாப்த காலக்கணக்கு கி.மு. 8516 நவம்பர் மாதம் 21 இல் தொடங்கியிருக்கிறது. இதுவே அக்காலத்திய வருடப்பிறப்பாக இருந்தது. இதற்கு முந்தைய காலக்கணிப்புகளைப்பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை.
இதன் பின்னர் இற்றைக்கு அண்ணளவாக ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்னர் விசுவாமித்திரர் அக்காலத்திய வானசாத்திர வல்லுனர்களையும் அறிஞர்களையும் கூட்டி ஆராய்ந்து தைமாதத்தில் வருடப்பிறப்பு தொடங்குவதாகக் கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டதாக வியாசர் மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர கர்க மஹரிஷி என்பவர் வசந்த காலத்தில் சூரியன் பூமத்திய ரேகையைக் கடக்கும் காலமாகிய சித்திரை மாதத்தை வருடப்பிறப்பாக ஏற்படுத்தினார். இதையே பின்னால் வந்த ஆரியப்பட்டர், வராஹமிஹிரர் போன்ற கணித, வானியல் சாத்திர வல்லுனர்களும் ஏற்றுப் பின்பற்றி வந்துள்ளார்கள். இதுவே இன்று வரை நடைமுறையில் உள்ளது. அடிப்படைகள் ஒன்றாக இருந்தபோதிலும் காலத்துக்குக் காலம் வானியல் அறிஞர்களான மேதைகள் இதில் சில நடைமுறை மாற்றங்களை ஏற்படுத்தினார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகின்றது.
தற்போதுள்ள இந்து சமய வருடங்களுக்கு அறுபதாண்டு வட்டம் உள்ளது நாம் அறிந்ததே. இதேபோல சப்தரிஷி சகாப்தத்தில் நூற்றாண்டு வட்டம் வழமையில் இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திரகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு அசுவினி தொடக்கம் ரேவதி வரை இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயராலும் 2700 ஆண்டுகள் கொண்ட இருபத்தேழு நூற்றாண்டு வட்டங்கள் இருக்கின்றன. இதன் பின்னர் அடுத்த இருபத்தேழு நூற்றாண்டுகளின் வட்டம் மீண்டும் அசுவினி நட்சத்திரத்தில் இருந்து ஆரம்பமாகும்.
இப்போது நடப்பது சப்தரிஷி சகாப்தத்தின் படி 10,059ம் ஆண்டு ஆகும். இது நான்காவது வட்டம். இதில் உள்ள புனர்பூச நட்சத்திர நூற்றாண்டின் எண்பத்து ஆறாம் ஆண்டுதான் எமது இன்றைய கி.பி. 2010ம் ஆண்டு.
இந்த ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஐந்தாண்டுகளைக்கொண்ட இருபது சிறு கால வட்டங்கள் இருந்தன. இந்த ஒவ்வொரு ஐந்தாண்டு சிறு வட்டத்தின் தொடக்க ஆண்டு சம்வத்சரம் என்று தொடங்கும். பின்னாளில் சம்வத்சரம் என்ற பெயரே ஆண்டு என்னும் சொல்லைப் பொதுவாகக் குறிப்பதாக ஆகிவிட்டது. சைவசமயக் கிரியைகளில் சங்கல்பம் செய்யும்போது "நாம்சம்வத்சரே" என்று தொடங்குவதைக் கவனியுங்கள்.
தமிழ் வருடங்கள்
தற்போது தமிழ் ஆண்டுகள் என வழங்கப்படும் கால அட்டவணை முறை அறுபதாண்டு வட்டம் ஒன்றைக் கொண்டுள்ளது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் நிறைவுபெற மீண்டும் அடுத்த பிரபவ ஆண்டு சுழற்சியாகத் தொடங்குகிறது. சிலர் இவ்வாறு ஒரே வருடத்தின் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதால் பிற்காலத்தில் பழைய நிகழ்வுகளைச் சரியாக நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது என்று குழம்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டுகளின் கால அளவைகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் வானியல் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு மிகவும் கச்சிதமாகக் கணித்து வரையறுக்கப்பட்டவை.
ஒவ்வொரு தமிழ் வருடமும் எமது பார்வையில் சூரியன் பன்னிரு ராசிகளில் சஞ்சரிக்கும் கால அளவாகும். சூரியன் முதலாவது இராசியான மேட இராசியில் பிரவேசிப்பது புது வருடப்பிறப்பாகும். இவ்வாறு ஒவ்வொரு பன்னிரு இராசிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக சூரியன் பிரவேசிக்கும் காலம் பன்னிரு தமிழ் மாதப்பிறப்பு அல்லது மாத முதல் நாட்களாகும். இவ்வாறு சூரியன் மேடம் முதல் மீனம் ஈறாக உள்ள பன்னிரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஒரு தமிழ் வருடமாகும். இது வானியல் விஞ்ஞான ரீதியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி என்று கச்சிதமாகக் கணிக்கப்பட்ட ஒன்று. இதையே பஞ்சாங்க கணக்கில் 365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி என்று கூறுவார்கள். இதையே வானியல் விஞ்ஞானத்தில் வானியல் வருடம் (Astronomical Year) என்று சொல்லுவார்கள்.
நாம் இதையே அழகாக தமிழ் வருடம் என்று சொல்லி அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்களும் வைத்துள்ளோம். இது முயல், வேதாளம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி என்ற பன்னிரண்டு வருடங்களைக் கொண்ட சீனர்களின் கால வட்டத்தைப் போன்றது. ஆனால் அதைவிட ஆழமான வானியல் விஞ்ஞான கணிப்பீடுகளை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டது. இந்த அறுபது வருடங்களைக்கொண்ட காலவட்டத்தின் வருடங்கள் தமிழ் வருடங்கள் என்றும் இந்த வருடங்களின் தொடக்கம் தமிழ் வருடப்பிறப்பு என்றும் வழங்கும் வழமையே எமது வழமை. அவையாவன
1. பிரபவ வருடம்
2. விபவ வருடம்
3. சுக்கில வருடம்
4. பிரமோதூத வருடம்
5. பிரசோற்பத்தி வருடம்
6. ஆங்கீரச வருடம்
7. ஸ்ரீமுக வருடம்
8. பவ வருடம்
9. யுவ வருடம்
10. தாது வருடம்
11. ஈசுர வருடம்
12. வெகுதானிய வருடம்
13. பிரமாதி வருடம்
14. விக்கிரம வருடம்
15. விஷு வருடம்
16. சித்திரபானு வருடம்
17. சுபானு வருடம்
18. தாரண வருடம்
19. பாரத்திப வருடம்
20. விய வருடம்
21. சர்வசித்து வருடம்
22. சர்வதாரி வருடம்
23. விரோதி வருடம்
24. விகிர்த்தி வருடம்
25. கர வருடம்
26. நந்தன வருடம்
27. விஜய வருடம்
28. ஜய வருடம்
29. மன்மத வருடம்
30. துர்முகி வருடம்
31. ஏவிளம்பி வருடம்
32. விளம்பி வருடம்
33. விகாரி வருடம்
34. சார்வாரி வருடம்
35. பிலவ வருடம்
36. சுபகிருது வருடம்
37. சோபகிருது வருடம்
38. குரோதி வருடம்
39. விசுவாவசு வருடம்
40. பராபவ வருடம்
41. பிலவங்க வருடம்
42. கீலக வருடம்
43. சௌமிய வருடம்
44. சாதாரண வருடம்
45. விரோதிகிருது வருடம்
46. பரிதாபி வருடம்
47. பிரமாதீச வருடம்
48. ஆனந்த வருடம்
49. இராட்சத வருடம்
50. நள வருடம்
51. பிங்கள வருடம்
52. காலயுத்தி வருடம்
53. சித்தார்த்தி வருடம்
54. ரௌத்திரி வருடம்
55. துர்மதி வருடம்
56. துந்துபி வருடம்
57. ருதிரோற்காரி வருடம்
58. இரத்தாட்சி வருடம்
59. குரோதன வருடம்
60. அட்சய வருடம்
என்பனவாம்.
இது திராவிடர்களிடையே உள்ள வழமையே அன்றி வட இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ இந்த வழமையைப் பார்க்கமுடியாது. பின்னர் இதைப்போய் ஆரியர்களின் கால அளவை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? இது யாருடைய கால அளவையாக இருந்தாலும் வானியல் விஞ்ஞான ரீதியாக அச்சொட்டாக இருக்கின்றது. நீங்கள் வேண்டாமென்றால் என்ன செய்வது?
வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்
நடப்பில் உள்ள ஆங்கில வருடம் 365 நாட்களை மட்டும் கொண்டது. அது டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின் தொடங்கி அடுத்த டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் முடிவுறுகின்றது. இதற்கு எந்தவிதமான வானியல் விஞ்ஞான ஆதாரமோ அடிப்படையோ இல்லை.
365 நாட்களைக்கொண்ட இந்த ஆங்கில வருடக்கணக்கின்படி, வானியல் விஞ்ஞானரீதியாக உள்ள 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் 43 விநாடிகள் கொண்ட வானியல் வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேலதிகமாக 6 மணித்தியாலங்கள் மிகுதியாகும். இந்த ஆறு மணித்தியாலங்களை நான்கு ஆண்டுகளுக்குச் சேரவிட்டு நான்காம் ஆண்டில் ஒரு முழு நாளாகின்றது. இதை பெப்ரவரி மாதத்தில் ஒரு மேலதிக நாளாக இணைத்து விடுவார்கள். சாதாரணமாக 28 நாட்களை மட்டுமே கொண்ட பெப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்களைக் கொண்டிருக்கும். இதுவே லீப் வருடம் எனப்படுகின்றது.
இப்படியாக 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் சரி செய்யப்பட்டாலும் இன்னமும் 11 நிமிடங்கள் 48 வினாடிகள் மிகுதியாக உள்ளன. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு நூற்றாண்டுக்கு ஒரு நாளைக்கூடுதலாகச் சேர்த்து சரிப் பண்ணுவார்கள். இப்படி சரிப்பண்ணும்பொழுது கொஞ்சம் அதிகமாக ஆகிவிடுகின்றது. இதற்காக நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை நழுவவிட்டு விடுவார்கள். இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நாளையும் ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு நாளையும் கூட்டி நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளைக் கழிப்பதனால்தான் நமது தமிழ் மாதப்பிறப்புடன் கூடிய தைப்பொங்கல் சித்திரை வருடப்பிறப்பு என்பன 13, 14, 15, 16 ம் ஆங்கிலத் திகதிகளில் மாறி மாறி வருகின்றன. இது நமது குற்றமல்ல; நாம் பாவிக்கும் வழமையில் உள்ள ஆங்கிலக் கலண்டரின் குற்றம்.
தமிழ் வருடங்களில் இந்த வம்பெல்லாம் கிடையாது. சரியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 வினாடி தான் கணக்கு. ஒவ்வொரு தமிழ் வருடமும் அதற்கு முந்திய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கு அடுத்த வாரத்திலும், எந்த திதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும், எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி (15 நாழிகை 31 விநாடி 15 நொடி) பின்னராகவும் பிறக்கின்றது. . " Nothing more and nothing less" - Merchant and Venice by Shakespeare.
தமிழ் மாதங்கள்
சூரியன் செல்லும் ஆகாயப்பாதையை சமமாக 30 பாகைகள் கொண்ட 12 பாகங்களாகப்பிரித்து அவற்றிற்கு இராசிகள் என்று பெயரிட்டுள்ளோம். ஆரம்பமாக 0 பாகையைக்கொண்டு மேடம், இடபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம் என்று பன்னிரண்டு இராசிகளும் தொடர்ந்து 360 பாகையுள்ள நீள்வட்டமாக முடியும் இடத்தில் மீண்டும் மேட இராசி தொடங்கும். ஒரு இராசியில் சூரியன் சஞ்சரிக்கும் கால அளவை ஒரு தமிழ் மாதம் ஆகும். அப்படியென்றால் ஏன் எல்லா தமிழ் மாதங்களும் ஒரே அளவு நாட்களைக்கொண்டதாக இல்லை என்று கேட்கிறீர்களா?
சூரியன் சந்திரன் சஞ்சரிக்கும் இந்த பாதை விண்வெளிப்பாதை (Zodiacal Path) என்று அழைக்கப்படுகின்றது. இதன் நடுவில் இருப்பது விண்வெளி மத்திய ரேகை (Celestial Equator)ஆகும். இந்தப்பாதையை சூரியன் வடக்கு நோக்கிக் கடக்கும் காலம் உத்தராயண காலம் என்ற ஆறு மாதங்களாகும். இதே போல தெற்கு நோக்கிக்கடக்கின்ற காலம் தட்சிணாயன காலம் என்ற ஆறு மாதங்காளாகும். ஆடிப்பிறப்புடன் ஆரம்பமாகும் தட்சிணாயனம் தைப்பொங்கலில் முடிவடைகின்றது. இவ்வாறு தைப்பொங்கலில் தொடங்கும் உத்தராயணம் அடுத்த ஆடிப்பிறப்பில் முடிவடைகின்றது. எங்களுடைய தமிழ்ப் பண்டிகைகளுக்கு எவ்வளவு வானியல் விஞ்ஞான அடிப்படை உள்ளது பார்த்தீர்களா?
தமிழ் மாதங்களின் கால அளவு சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தையும் இவற்றில் ஏற்படும் வேறுபாடுகளையும் பொறுத்தது. சூரியனை பூமி சுற்றி வரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதை அல்ல. இது ஒரு நீள்வட்டமான பாதை. இதனால் எப்போதும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரமும் ஒரே அளவாக இருப்பதில்லை. மார்கழி மாதத்தில் மிகவும் கிட்ட இருக்கும் சூரியன் ஆடியில் அதிக தூரத்துக்கு தள்ளிப்போய்விடும். அதிக பட்ச தூரத்தை பெரிஹீலியன் (perihelion) என்றும், குறைந்த பட்ச தூரத்தை அப்போகீலியன் (Apohelion) என்றும் வானியல் விஞ்ஞானத்தில் கூறவார்கள்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள இடைவெளி குறைந்த காலங்களில் பூமியின் வட்டப்பாதையில் உள்ள 30 பாகையைக் கடக்கும் நீளமும் குறையும். அத்தோடு சூரியனின் ஈர்ப்புச்சக்தியின் தாக்கத்தாலும், பூமியின் மையநோக்க இழுவையில் (Centripetal force) ஏற்படும் மாற்றத்தாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும். இவ்வாறு குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும்.
இதேபோல சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது இந்த 30 பாகையைக் கடக்கும் தூரமும் கூடும். அதேபோல பூமியின் மையநோக்க இழுவையும் குறைந்து பூமியின் வேகமும் குறையும். அப்பொழுது சூரியன் அந்தக் குறிப்பிட்ட இராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்க, அதற்கான கால அளவும் அதிகரிக்கும்.
இதனால்தான் தமிழ் வருடங்களில் வெவ்வேறு மாதங்கள் வெவ்வேறு அளவான நாட்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவையெல்லாம் வெறுமனே எழுந்தமானமான கணிப்புகள் அல்ல. இவற்றைக் கணிப்பதற்கென்றே பிரத்தியேகமான வானியற் கணிப்பு முறைகள் சைவ ஆகம நூல்களில் விரிவாக உள்ளன. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றின் பெயரும்கூட எழுந்தமானமாக இல்லாமல் காரணப் பெயராக வானியல் விஞ்ஞானரீதியில் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. இந்த மாதங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மாதங்களில் வரும் பௌர்ணமி முழு நிலவு தொடர்புறும் நட்சத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.
1. தை மாதம் என்னும் பௌஷ்ய மாதம் - பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மகர இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 29 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
2. மாசி மாதம்: என்னும் மக மாதம்- மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கும்ப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
3. பங்குனி மாதம் என்னும் பல்குணி மாதம்-பல்குணி என்னும் அத்த நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மீன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப் பகுதியாகும்.
4. சித்திரை மாதம் என்னும் சைத்ரா மாதம்- சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மேட இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
5. வைகாசி மாதம் என்னும் வைசாக மாதம் - விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் இடப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
6. ஆனி மாதம் என்னும் ஜேஷ்டா மாதம் - கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மிதுன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
7. ஆடி மாதம் என்னும் ஆஷாட மாதம்- அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கடக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
8. ஆவணி மாதம் என்னும் சிரவண மாதம்- திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் சிம்ம இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
9. புரட்டாதி மாதம் என்னும் பத்ரபாத மாதம்- உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கன்னி இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
10. ஐப்பசி மாதம் என்னும் அசுவினி மாதம்- அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் துலா இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
11. காரத்திகை மாதம் என்னும் கிருத்திகா மாதம்- கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் விருச்சிக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
12. மார்கழி மாதம் என்னும் மார்கசீர மாதம்- மிருகசீரிட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் தனு இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
கோவிலில் பூசை மற்றும் ஹோமங்களில் சங்கல்பம் செய்யும்போது இன்ன காலத்தில் செய்கிறோம் என்று சங்கல்பிக்கும்போது இந்த மாதங்களின் பெயர்கள் வரும்; அவதானியுங்கள்.
தமிழ்ப் புத்தாண்டு
சூரியன் பன்னிரு இராசிகளில் முதலாவதான மேட இராசியில் பிரவேசிக்கும் காலம் தற்போது ள்ள தமிழ் வருடப்பிறப்பு ஆகும். இது சித்திரை மாதத்தில் நடக்கும். இவ்வாறு சூரியன் ஒவ்வொரு இராசிக்கும் பிரவேசிக்கும் காலத்தை சங்கிராந்தி என்று கூறுவர். சூரியன் மேடத்தில் பிரவேசிக்கும் சித்திரை மாதப்பிறப்பாகிய மேட சங்கிராந்தியே எமது தமிழ் புது வருடப்பிறப்பு ஆகும். இதையே இலங்கையில் உள்ள பௌத்தர்களும் பின்பற்றுகின்றார்கள். ஒவ்வொரு புது வருடமும் அதற்கு முந்தைய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கு அடுத்த நாளிலும், எந்த திதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும் எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 15 நாழிகை 31 விநாடிகள் கழித்தும் பிறக்கும்.
வட இந்தியாவிலும் தெலுங்கு மற்றும் கன்னட சம்பிரதாயத்திலும் அவர்கள் சந்திரனது சஞ்சாரத்தை அடிப்படையாகக்கொண்ட சாந்திரமான மாசங்களையே பிரமாணமாகக் கொள்வர். அவர்களுக்கு மாதம் ஆரம்பிப்பது ஒவ்வொரு மாதத்தினது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் இருந்தாகும். இதிலிருந்து அடுத்த மாதத்தின் வளர்பிறைப் பிரதமை வரை ஒரு மாத காலம் ஆகும். இதுவேதான் சில வேளைகளில் மகா சிவராத்திரி நாளை நிர்ணயிப்பது பற்றிய விவாதங்களுக்குக் காரணமாகின்றது. சாந்திரமானப்படி இவர்களுக்கு பங்குனி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்றே சித்திரை மாதம் ஆரம்பமாகி விடுகின்றது. அதையே யுகாதி என்று தெலுங்கு மற்றும் கன்னட புதுவருடமாக தெலுங்கர்களும், கன்னடர்களும் கொண்டாடுகிறார்கள்.
மலையாளத்தில் நம்மைப்போல சூரியன் மேடத்தில் பிரவேசிக்கும் நாளாகிய மேட சங்கிராந்தியையே சித்திரை மாதப்பிறப்பாக வைத்திருக்கின்றார்கள். ஆயினும் இவர்கள் சூரியன் தனது சொந்த இராசியாகிய சிங்க ராசியில் பிரவேசிக்கும் ஆவணிமுதல் நாளையே தமது மலையாள வருடப் பிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அம்மாதமே வருடத்தின் முதல் மாதமாகக் கொள்ளும் மரபு தமிழர்களிடையே இருந்தது என்று சில பழந்தமிழ் நூல்களில் இருந்து அறியக் கிடைக்கின்றது. இதுவே இப்பொழுதும் மலையாளத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதே போல பௌர்ணமியில் இருந்து அடுத்த பௌர்ணமி வரை ஒரு மாதமாகக்கொள்ளும் மரபும் வங்காளத்தில் காணப்படுகின்றது. ஹரே கிருஷ்ணா கோவில்களில் இந்த முறையிலான நாட்காட்டிகளே பின்பற்றப்படுகின்றன. எங்களுடைய சாந்திரமான அல்லது சூரியமான முறைப்படி கார்த்திகை மாதம் ஆரம்பமாவதுக்கு முன்னரே அவர்களது கார்த்திகை மாதம் ஆரம்பமாகி விடுகின்றது, இது கிருஷ்ணர் யசோதையின் தாயன்புக்கு அடங்கி உரலில் கட்டுண்ட மாதமாகும். இந்த மாதத்தை அவர்கள் தாமோதர மாதம் என்று கொண்டாடுவார்கள். தாமம் என்றால் கயிறு. தமிழில் தாம்புக் கயிறு என்று சொல்லும் வழமை உண்டல்லவா? உதரம் என்றால் வயிறு. வயிற்றிலே கயிறினால் கட்டுண்டபடியினால் கிருஷ்ணனுக்கு தாமோதரன் என்று பெயர்.
முற்காலத்தில் சூரியன் தனது சொந்த இராசியாகிய சிம்மத்தில் பிரவேசிக்கும் ஆவணி மாதத்தின் முதல் நாளை வருடத்தின் முதல் நாளாகத் தமிழர் கொண்டாடினர் என்ற குறிப்பு சில பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றது. .
சூரியன் பத்தாவது இராசியாகிய மகரத்தில் பிரவேசிக்கும் காலமாகிய மகர சங்கிராந்தியே தை மாதப்பிறப்பும் அத்துடன் கூடிய தைப்பொங்கலும் ஆகும். இதையே 2009 இல் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் தமிழ் வருடப்பிறப்பாகப் பிரகடனப்படுத்தியது.
வட இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியை இராமர் வனவாசத்தில் இருந்து மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளாகக் கொண்டாடி அதையே புது வருடப்பிறப்பாகக் கொண்டாடுவர். ஆங்கில புதுவருடம் போலவே இதற்கும் எந்தவிதமான வானியல் கணித விஞ்ஞான அடிப்படையோ ஆதாரமோ அல்லது ஆகம நூல்களின் ஆதாரமோ இல்லை என்பது இங்கு நோக்கத்தக்கது. உண்மையில் இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி நகருக்குத் திரும்பியது சித்திரை மாதத்து வளர்பிறை சஷ்டி நாள் என்றும் அதற்கு அடுத்த நாளான சப்தமியில் அவர் முடி சூடினார் என்றும் வான்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 127ம் சர்க்கம் கூறுகின்றது. இராமர் மீண்டும் நாடு திரும்பிய நாள்தான் புதுவருடப் பிறப்பு என்றால் இது நாம் புதுவருடம் கொண்டாடுகின்ற சித்திரை மாதத்தில்தான் வர வேண்டும்.
திதி
சாந்திர மாதம்; 29 நாள் 12 மணி 44 நிமிடங்கள் கொண்டது ஒரு சாந்திர மாதம் (Lunar Month).
சாந்திர வருடம்; இப்படி பன்னிரண்டு சாந்திர மாதங்கள் கொண்டது ஒரு சாந்திர வருடம் (Lunar year).
இது 354 நாட்கள் கொண்டது. ஒரு சாந்திர மாதத்தின் இருபத்து ஒன்பதரை நாட்கள் சொச்சத்துக்குள் முப்பது திதிகள் அடங்கி நிற்கும். முன்னர் குறிப்பிடப்பட்ட கணக்குகள் சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கணக்கு சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது.
கிருஷ்ண பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது தேய்ந்து வருகின்ற காலம் தேய்பிறைக் காலமாகும். இது அமாவாசையில் (New Moon) முடிவுறும். இதை கிருஷ்ண பட்சம் என்பர். கிருஷ்ண என்றால் இருளான என்று பொருள். இதிலிருந்தே கருமை நிறக் கண்ணனுக்கு கிருஷ்ணன் என்ற பெயர் வந்தது. பூரண சந்திரன் நிலையில் இருந்து அது கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து வரும்போது ஒவ்வொரு நாளும் தேய்வடையும் பாகத்தைக் கலை என்பார்கள். இவ்வாறு பௌர்ணமியில் தொடங்கி நாளுக்கு ஒன்றாக பதினைந்து கலைகள் தேய்ந்ததும் வானில் நிலவில்லாத, ஒரு கலையுடன் கூடிய அமாவாசை (New moon) வருகின்றது.
சுக்ல பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது வளர்ந்து வருகின்ற காலம் வளர்பிறைக் காலமாகும். இது பௌர்ணமி என்னும் முழுநிலவில் முடிவுறும். இதை சுக்ல பட்சம் என்பர். சுக்ல என்றால் பிரகாசமான என்று பொருள். " சுக்லாம் பரதரம்" என்று தொடங்கும் பிள்ளையார் மந்திரம் பிரகாசமானவர் என்று பிள்ளையாரைக் குறிக்கின்றது. சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக முழு நிலவாக வளரும்பொழுது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் பாகத்தை கலை என்பார்கள். இவ்வாறு அமாவாசையில் தொடங்கி நாளுக்கு ஒன்றாக பதினாறு கலைகள் வளர்ந்ததும் அது பதினாறு கலைகளுள்ள பௌர்ணமி என்னும் முழுநிலவாகப் பரிணமிக்கின்றது.
திதி; இவ்வாறு சந்திரனின் ஒவ்வொரு கலையும் வளரும் அல்லது தேயும் காலம் திதி எனப்படுகின்றது. திதி என்ற சொல்லில் இருந்துதான் 'திகதி', 'தேதி' என்ற சொற்கள் வந்தன. இவ்வாறு வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன. பதினைந்து திதிகள் கொண்டது முன்னர் சொன்ன ஒரு பட்சம். இவ்வாறுள்ள பதினைந்து திதிகள் வருமாறு;
. அமாவாசை - நிலவில்லாத நாள். இன்று நிலவுக்கு ஒரு கலை.
1. பிரதமை - முதாலம் பிறை. இன்று நிலவுக்கு இரண்டு கலைகள் உள்ளன.
2. துதியை - இரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு மூன்று கலைகள். துவி என்பது இரண்டு என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இரண்டைக் குறிக்கும் 'one' என்ற சொல்லும் இதிலிருந்ந்தே வந்தது. இதில் இருந்துதான் துவிச்சக்கர வண்டி, துவைதம் போன்ற சொற்கள் வந்தன. அத்துவைதம் என்றால் இரண்டு அல்லாதது என்று பொருள்.
3. திருதியை- மூன்றாம் பிறை. இன்று நிலவுக்கு நான்கு கலைகள். திரி என்ற சொல் மூன்று என்று பொருள்படும். ஆங்கிலத்தில் மூன்றைக் குறிக்கும் 'Three' என்ற சொல் இதில் இருந்துதான் வந்தது. திரிபுரம் என்பது முப்புரங்களான மூன்று நகரங்களைக் குறிக்கும். திரிநேத்ரன் என்றால் முக்கண்ணன் என்று சிவனைக் குறிக்கும்.
4. சதுர்த்தி- நாலாம் பிறை. இன்று நிலவுக்கு ஐந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பொருள். சதுரம் என்றால் நான்கு பக்கங்கள் உள்ளது என்று பொருள். சதுர்முகன் என்றால் நான்கு முகங்களை உடைய பிரம்மாவைக் குறிக்கும். 'சுக்லாம் பரதரம்' என்ற பிள்ளையார் மந்திரத்தில் வருகின்ற சதுர்ப்புஜம் என்பது பிள்ளையாரின் நான்கு தோள்களைக் குறிக்கும். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களினதும் கூட்டாகும்.
5. பஞ்சமி-ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். ஆங்கிலத்தில் ஐந்தைக் குறிக்கும் 'five' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் ந-ம-சி-வா-ய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும். பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும்.
6. ஷஷ்டி-ஆறாம் பிறை. இன்று நிலவுக்கு ஏழு கலைகள். ஷ என்றால் ஆறு என்று பொருள். ஆங்கிலத்தில் ஆறு என்ற எண்ணைக் குறிக்கும் 'six' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது.ஷண்முகன் என்பது ஆறு முகங்களுடைய முருகனைக் குறிக்கும். ஷடாட்சரம் என்பது முருகனின் ச-ர-வ-ண-ப-வ என்ற ஆறு எழுத்து மந்திரமாகும்..
7. ஸப்தமி-ஏழாம் பிறை. இன்று நிலவுக்கு எட்டு கலைகள். ஸப்த என்றால் ஏழு என்று பொருள். ஆங்கிலத்தில் ஏழைக் குறிக்கும் 'seven' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. ஸப்த ரிஷிகள் என்பது ஏழு முனிவர்களைக் குறிக்கும்.
8. அட்டமி-எட்டாம் பிறை. இன்று நிலவுக்கு ஒன்பது கலைகள். ஆங்கிலத்தில் எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் 'Eight'என்ற சொல் இதிலிருந்தே வந்தது. அட்டம் என்றால் எட்டு என்று பொருள். அட்டலட்சுமி என்றால் எட்டு இலட்சுமிகளைக் குறிக்கும். அட்ட திக்குகள் என்றால் கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திக்குகளைக் குறிக்கும். அட்டதிக்குப் பாலகர்கள் என்றால் முறையே இந்த எட்டு திக்குகளுக்கும் உரிய இந்திரன். அக்கினி, இயமன், நிருதன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் எட்டு திக்குத்தெய்வங்களையும் குறிக்கும். ' அருணன் இந்திரன் திசை அணுகினான்' என்றால் சூரியனின் சாரதியாகிய அருணன் இந்திரனுக்குரிய கிழக்குத் திசையை அணுகினான் என்று பொருள். இந்த வரி திருவாசகத்தின் திருப்பள்ளி எழுச்சியில் வருகின்றது.
9. நவமி- ஒன்பாதம் பிறை. நிலவுக்கு பத்து கலைகள். நவம் என்றால் ஒன்பது. ஆங்கிலத்தில் ஒன்பதைக் குறிக்கும் 'Nine' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகளைக்குறிக்கும். நவதானியம் என்றால் ஒன்பது தானியங்களைக் குறிக்கும். நவக்கிரகம் என்பது ஒன்பது கிரகங்களைக் குறிக்கும்.
10. தசமி- பத்தாம் பிறை. இன்று நிலவுக்கு பதினொரு கலைகள். தசம் என்றால் பத்து. கணிதத்தில் தசமத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்களே. இதை ஆங்கிலத்தில் Decimal என்று கூறுகிறார்கள். தசகாரியம் என்பது ஆத்மீகப்பாதையிலுள்ள பத்துப்படிநிலைகளைக் குறிக்கும். தசரா என்று நமது நவராத்திரியை வட இந்தியாவில் பத்து நாட் கொண்டாட்டமாகக் கொண்டாடுவர். 'தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்' - திருவாசகம். இங்கு தசமதி என்பது பத்து மாதங்கள். இது தாயின் வயிற்றில் நாம் இருந்த காலத்தைக் குறிக்கின்றது.
11. ஏகாதசி- பதினோராம் பிறை. இன்று நிலவுக்கு பன்னிரண்டு கலைகள். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். ஏகம் என்றால் ஒன்று. ஏகாதசி என்றால் பத்தும் ஒன்றும் சேர்ந்த பதினொன்று.
12. துவாதசி- பன்னிரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு பதின்மூன்று கலைகள். துவி என்றால் இரண்டு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். துவாதசி என்பது பத்தும் இரண்டும் சேர்ந்த பன்னிரண்டைக் குறிக்கும்.
13. திரயோதசி-பதின்மூன்றாம் பிறை. இன்று நிலவுக்குப் பதினான்கு கலைகள். திரி என்றால் மூன்று என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். திரயோதசி என்பது பத்தும் மூன்றும் சேர்ந்த பதின்மூன்றைக் குறிக்கும்.
14. சதுர்த்தசி- பதினான்காம் பிறை. இன்று நிலவுக்குப் பதினைந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். சதுர்த்தசி என்பது பத்தும் நான்கும் சேர்ந்த பதினான்கைக் குறிக்கும்.
15. பௌர்ணமி- பூரண நிலவு. இன்று பூரண நிலவுக்கு கலைகள் பதினாறு. அமாவசையில் இருந்து ஒவொரு கலைகளாக வளர்ந்து இன்று பதினாறு கலைகள் கொண்ட பூரண நிலவாகப் பரிணமிக்கின்றது. .
இந்த திதிகளை தேய்பிறைக்காலத்தில் கிருஷ்ண பட்ச திதிகள் என்றும் வளர்பிறை காலத்தில் சுக்ல பட்ச திதிகள் என்றும் அழைக்கிறோம். ஆக மொத்தம் திதிகள் முப்பது.
ஒவ்வொரு மாதமும் வரும் திதிகள் ஒரே கால அளவு கொண்டதாக இருப்பதில்லையே? ஒவ்வொரு திதியும் கால அளவில் வித்தாயசப்படுகின்றனவே? ஒரே திதியே ஒரு மாதத்தில் நீண்டதாகவும் இன்னொரு மாதத்தில் குறுகியதாகவும் இருக்கின்றதே? ஒரே திதி ஒரே மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் ஒர் கால அளவுக்கும் தேய்பிறைக்காலத்தில் இன்னொரு கால அளவுக்கும் இருக்கின்றதே? இப்படி வேறுபாடுகள் ஏன் என்று குழப்பமாக இருக்கின்றதா? அது நமது கால அளவை துல்லியமான வானியல் கணக்கீட்டை ஆதாரமாகக் கொண்டிருப்பதால்தான். பூமியில் இருந்து சந்திரன் நிற்கும் தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில சமயங்களில் கிட்ட இருக்கும். சில சமயங்களில் தூர விலகிப் போகும். அதிக தூரத்தில் இருக்கும்போது திதியும்28 மணித்தியாலங்கள் வரை நீண்டதாக இருக்கும். அதிக கிட்டத்தில் இருக்கும்போது திதியும் 19 மணித்தியாலங்கள் வரை குறுகியதாக இருக்கும். இடைப்பட்ட காலங்களில் திதியின் அளவும் இவற்றுக்கு இடைப்பட்ட கால அளவில் இருக்கும். சந்திரன் கிட்ட இருக்கும் தூரத்தை வானியல் விஞ்ஞானத்தில் அபோகீ (Apogee) என்பார்கள். சந்திரன் எட்ட இருக்கும் தூரத்தை பெரிகீ (Perigee) என்பார்கள். இப்போது புரிகிறதா எமது பழைய பஞ்சாங்கங்களின் வானியல் விஞ்ஞான கணித அடிப்படை?
மண்டலம்
பட்சம் என்பது அமாவாசை தொடக்கம் பௌர்ணமி ஈறாக பதினைந்து நாட்கள் கொண்டது என்று பார்த்தோம். இவ்வாறு இரண்டு பட்சங்கள் கொண்டது ஒரு மாதம் என்று பார்த்தோம். இவ்வாறு மூன்று பட்சங்கள் கொண்டது ஒரு மண்டலம். இது நாற்பத்தைந்து நாட்கள் கொண்டது. மண்டலாபிஷேகம் என்றால் இவ்வாறு ஒரு மண்டல காலத்துக்கு நடைபெறும் பூசை அபிஷேகங்களைக் குறிக்கும். சில இடங்களில் மண்டலம் என்பது நாற்பத்தெட்டு நாட்களாகவும் நாற்பத்தாறு நாள்களாவும் கொள்ளும் வழமையும் உள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சம் என்றால் ஐந்து; அங்கம் என்றால் உறுப்பு அல்லது பகுதி. பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய ஐந்து விடயங்களைப் பற்றிய விபரங்களைத் தருவது. இந்த ஐந்து விடயங்களாவன;
1. வாரம்; நவக்கிரகங்களில் இராகு, கேது இரண்டும் நிழற் கிரகங்களாம். அவை தவிர்ந்த ஏழு கிரகங்களுக்கும் நாள் தோறும் ஆட்சி முகூர்த்தங்கள் மாறி மாறி வரும். ஒவ்வொரு நாளிலும் சூரியோதய காலத்தில் எந்த கிரகத்தினுடைய ஆட்சி முகூர்த்தம் வருகின்றதோ அக்கிரகத்தின் பெயரால் அந்த நாள் வழங்கப்படுகின்றது.
உதய காலத்தில் சூரியன் ஆட்சியில் இருக்கும் நாள் ஞாயிற்றுக்கிழமை
உதய காலத்தில் சந்திரன் ஆட்சியில் இருக்கும் நாள் திங்கட் கிழமை
உதய காலத்தில் செவ்வாய் ஆட்சியில் இருக்கும் நாள் செவ்வாய்க் கிழமை
உதய காலத்தில் புதன் ஆட்சியில் இருக்கும் நாள் புதன் கிழமை
உதய காலத்தில் வியாழன் ஆட்சியில் இருக்கும் நாள் வியாழக் கிழமை
உதய காலத்தில் வெள்ளி ஆட்சியில் இருக்கும் நாள் வெள்ளிக் கிழமை
உதய காலத்தில் சனி ஆட்சியில் இருக்கும் நாள் சனிக் கிழமை
இவ்வாறுதான் வாரத்தின் ஏழு நாட்களும் எமது சம்பிரதாயத்தில் பெயரிடப்பட்டிருக்கின்றன.
2. நட்சத்திரம்; எமக்கு புலனாகக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் 27 முக்கியமானவையாக உள்ளன. அவற்றுக்கு அச்சுவினி தொடக்கம் ரேவதி வரை முறையாக பெயர்களும் உள்ளன. சந்திரனுக்கு அருகில் காணப்படும் நட்சத்திரத்தை வைத்து அந்த நேரத்துக்கு அல்லது நாளுக்கு உரிய நட்சத்திரம் சொல்லப்படுகின்றது. எமது புராணங்களின் படி 27 நட்சத்திரங்களும் தட்சனின் மகள்மாராகப்பிறந்து சந்திரனுக்கு மனைவியானவர்கள். ஆகவே நட்சத்திரம் என்பது சந்திரன் அந்த நேரத்தில் எந்த மனைவியுடன் கூடியிருக்கிறான் என்பதை வைத்துக் குறிக்கப்படுகின்றது.
3. திதி; ஒவ்வொரு நாளும் எமது பார்வைக்கு சந்திரன் ஆகாய வீதியில் செல்லும் தூரத்தில் இருந்து சூரியன் செல்லும் தூரத்தைக் கழித்து வந்த மிகுதியே திதி ஆகும். இத்தூரம்தான் அன்றன்று சந்திரனின் தெரிகின்ற பாகத்தை நிர்ணயிக்கின்றது. இதனால் இது சந்திரனின் தேய்மானம் மற்றும் வளர்ச்சியுடன் ஒத்திசைந்து வருகின்றது. இதில் அமாவாசை முதல் பௌர்ணமி வரை பதினாறு திதிகள் உள்ளன. அமாவாசையில் தொடங்கி பௌர்ணமி வரையுள்ள காலம் வளர் பிறைக்காலம் ஆகும். இதை சுக்கில பட்சம் என்று கூறுவர். சுக்கிலம் என்றால் பிரகாசமான என்று பொருள். பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரையுள்ள காலத்தை தேய்பிறைக்காலம் ஆகும். இதை கிருஷ்ண பட்சம் என்று கூறுவர். கிருஷ்ண என்றால் இருண்ட என்று பொருள்.
4. யோகம்; ஒவ்வொரு நாளும் எமது பார்வைக்கு ஆகாய வீதியில் சூரியன் செல்லும் தூரத்துடன் சந்திரன் செல்லும் தூரத்தைக் கூட்டி வந்த தொகையே யோகம் எனப்படுகின்றது. இவ்விதமான யோகங்கள் 27.
5. கரணம்; ஒவ்வொரு திதியையும் இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியும் கரணம் எனப்படுகின்றது.
இனிமேல் பஞ்சாங்கம் பாரக்கும்போது சற்று விளக்கத்துடன் பார்க்கலாம்.
தற்கால காணக்கணிப்பகளும் கால அளவைகளும்
1. சாலிவாகன சகாப்த வருடம் - 1934. சாலி வாகனன் விக்கிரமாதித்த மகாராஜாவின் பேரன். இவன் காலத்தில் பஞ்சாங்க கணிதத்தை சீர் படுத்தினான். அதிலிருந்து 1934 வருடங்கள் கழிந்தன.
2. கொல்லம் வருடம்- 1187- கேரளாவில் உள்ள பழைய கொல்லம் நகரம் கடலில் அமிழ்ந்தது. இதை எண்டும் கட்டி எழுப்பிய ஆண்டில் இருந்து 1187 வருடங்கள் கழிந்தன. சுந்தர மூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் இன்றைய கேரளத்தில் உள்ள திருவஞ்சைக்களத்தில் இருந்து கைலாயத்துக்குச் சென்ற ஆண்டில் இருந்து கொல்லம் வருடம் ஆரம்பிக்கின்றது என்பது சைவர்களின் கணக்கு.
3. திருவள்ளுவர் ஆண்டு- திருவள்ளுவர் பிறந்த ஆண்டில் இருந்து ஆண்டுகளைக் கணக்கிடும் வழமை திருவள்ளுவர் ஆண்டு. திருவள்ளுவர் பிறந்ததில் இருந்து 2043 ஆண்டுகள் கழிந்தன. கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ் நாடு அரசாங்கம் இதையே புத்தாண்டின் தொடக்கமாக கி.பி 2008 இல் இருந்து பிரகடனப்படுத்தியது.
4. கிறிஸ்து வருடம் 2012: கிறிஸ்து பிறந்ததில் இருந்து ஆண்டுகளை கணக்கிடும் வழமை. கிறிஸ்து பிறந்து 2012 வருடங்கள் கழிந்தன. கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ம் திகதி என்று சொல்லப்பட்டாலும் புதுவருடம் பிறப்பது ஜனவரி 1 இல் தான். இது டிசம்பர் மாதத்தின் 31ம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னாகும். இதற்கு எந்தவிதமான கணித வானியல் விஞ்ஞான அடிப்படையும் இல்லை. இவ்வாறு ஜனவரியில் புத்தாண்டு கொண்டாடும் முறையே 1582ம் ஆண்டு பரிசுத்த போப்பரசராக இருந்த கிரிகோரி என்பராலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பிரான்சு உடபட பல நாடுகள் இப் புதிய நடைமுறையை ஏற்று அமுல் படுத்தினாலும் இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இவ்வாறு அமுல்படுத்தவில்லை. இவர்கள் தொடர்ந்தும் தமது புத்தாண்டை ஏப்ரல் மாதம் முதலாம் திகதியே கொண்டாடி வந்தார்கள். இவர்களை ஏளனம் செய்து அவமதிக்கும் நோக்கில்தான் ஏப்ரல் முதலாம் தினத்தை முட்டாள் தினம் என்று கூறும் வழமை ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான தகவல் ஐயா நன்றி 🙏
ReplyDelete