Friday, April 24, 2015

கவனத்தின் பெருமை-----தெனாலி ராமன்

ஒரு சிலர் எப்போதுமே எவர் மீதாவது பொறாமை கொண்டே வாழ்வர். இது நாம் அன்றாட வாழ்வில் காணும் ஒரு நிகழ்வே. தெனாலிராமன் விஷயத்திலும் இதுபோலவே நிகழ்ந்தது! அவன் மீது, ஒருவர் அல்ல; கிருஷ்ண தேவராயரின் அரசவையில் இருந்த பெரும்பாலானோர் அவனது திறமை கண்டு அவன் மீது பொறாமை கொண்டிருந்தனர்.

'தெனாலிராமன் வேண்டுமானால் புத்திசாலியாகவும், விஷய ஞானம் உள்ளவனாகவும்
இருக்கலாம்; ஆனால் அவனது எதையும் கூர்ந்து கவனிக்கும் அறிவு சற்றுக்
குறைவாக இருக்கிறது' என அவர்கள் மன்னரிடம் புகார் செய்தனர். அவனது திறமை
குறித்து மன்னருக்கு எந்தவித ஐயப்பாடும் இல்லையென்றாலும், இவர்களைச்
சமாதானம் செய்யவென, 'அப்படி ஒரு குறை இருக்கிறதென்றால், நீங்களே
பரிசோதியுங்களேன்' என அனுமதி தந்தார்.

அவர்கள் அனைவரும் தங்களுக்குள் கூடி ஆலோசித்து ஒரு திட்டம் தீட்டினர்.
அதன்படி, பொன்னாலான இரண்டு உருளைகளைக் கட்டித் தொங்கவிட்டு, அதைத்
தொடாமலேயே அவற்றுள் எது முழுத் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கிறது எனச்
சொல்ல வேண்டுமென தெனாலி ராமனைச் சோதிப்பது என முடிவெடுத்து அப்படியே
செய்தனர். ராஜாவும் தன் பங்குக்குத் தெனாலி ராமனைப் பார்த்து, 'நீ
மட்டும் சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், அவ்விரு உருளைகளையும் நீயே
வைத்துக் கொள்ளலாம். உனக்கு மேலும் 1000 பொற்காசுகளும் தரப்படும். ஆனல்,
அப்படிச் செய்யத் தவறினால், இவற்றைச் செய்ய எவ்வளவு தங்கம் ஆனதோ, அதை
கருவூலத்தில் கட்ட வேண்டும் அது மட்டுமல்ல, அபராதமாக நீ 1000
பொற்காசுகளைத் தர வேண்டும்' என நிபந்தனை விதித்தார். தன்னால் இதைச் செய்ய
முடியும் என உணர்ந்த தெனாலி ராமனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அந்தப் பந்துகளைப் பார்க்க அவன் அருகில் செல்ல முற்பட்டபோது, தூரத்தில்
இருந்தே, அதுவும் தொடாமலேயே நீ சொல்ல வேண்டும் என சபையோர் கொக்கரித்தனர்.
ஒப்புக்கொண்ட தெனாலி ராமன், குறைந்த பட்சம் அவற்றைத் தொடாமல் சற்று
அருகிலிருந்து கவனிக்க அனுமதி வேண்டினான். இது ஒப்புக்கொள்ளப் பட்டது.
அருகில் சென்ற தெனாலி ராமன் மிகக் கவனமாக அந்த இரு பந்துகளையும்
அவதானித்தான். தனது இந்த இக்கட்டான நிலையைக் குறித்து கவலைப்படுபவன்போல,
வேகமாகப் பெருமூச்சு விட்டான். அவனது தவிப்பைக் கண்ட அந்தப் பொறாமை
பிடித்தவர்களும் 'வசமாக இன்று மாட்டிக் கொண்டான் ' எனத் தங்களுக்குள்
மகிழ்ந்தனர்.

சற்றுப் பொறுத்து அங்கிருந்து நகர்ந்த தெனாலி ராமன், 'வலது பக்கத்தில்
தொங்கிக் கொண்டிருக்கும் உருளையே முழுவதும் சொக்கத்தங்கத்தால் செய்தது'
எனத் தன் முடிவைக் கூறினான். அவன் சொன்னதே உண்மையென அறிந்திருந்த
சபையினர் பேசமுடியாமல் திகைத்தனர். ராஜாவுக்கும் கூட, 'அதெப்படி தொட்டுப்
பார்க்காமலேயே உன்னால் சொல்ல முடிந்தது, ராமா? என ஆச்சரியத்துடன்
வினவினார்.

'அரசே! நான் அந்த உருளைகளை மிகக் கவனமாக நோக்கினேன். என்னால் அவற்றுள்
வேறுபாடே காண இயலவில்லை. அப்போது சட்டென என் பார்வை அவற்றைத்
தொங்கவிட்டிருந்த சங்கிலிகளின் மேல் பதிந்தது. உடனேயே எனக்குப் புரிந்து
போயிற்று. முழுவதும் தங்கத்தாலன உருளையைத் தாங்கிக் கொண்டிருந்த சங்கிலி,
மிக இறுக்கமாக இருந்தது. ஆனல், உள்ளே ஒன்றுமில்லாமல் வெளியில் மட்டும்
தங்கத்தால் செய்யப்பட்டிருந்த உருளையின் சங்கிலி நான் பெருமூச்சு
விட்டபோது லேசாக அசைந்ததைக் கவனித்தேன். எனவே, எது முழுத் தங்கத்தால்
செய்யப்பட்ட உருளை என என்னால் கண்டுபிடிக்க முடிந்தது' எனச் சொன்னான்.

அவனது இந்தப் பதிலைக் கேட்ட மஹாரஜா மிகவும் சந்தோஷம் அடைந்தார். அவனது
கவனக் கூர்மையால் தனது எதிரிகளை அவன் வெற்றி கொண்ட செயலைப் பாராட்டி,
நிபந்தனைப்படியே, அவனுக்குத் தக்க சன்மானம் அளித்தார். அவன் மீது பொறாமை
கொண்டோர் தோற்றுப்போன அவமானத்தால் தங்களது தலைகளைக் குனிந்தனர்.

அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின். - திருக்குறள்

ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச்
செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.

முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். - திருக்குறள்

ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு
இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில்
ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment