Monday, September 3, 2012
தேவைகளைக் கடுமையாக சுருக்கும்போது விலைஉயர்வு பற்றி கவலையில்லாமல் இருக்கலாம்
நாடெங்கும் இப்போதுள்ள முக்கிய பிரச்னை விலைவாசி <உயர்வு. அரிசி, பருப்பு, துணிமணி... எல்லாம் பல மடங்கு விலை கூடிவிட்டது. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்ன! ஜைதீவஷ்ய முனிவரின் கதையில் இருந்து கிடைக்கும் நீதியைத் தெரிந்து கொள்வோமே!
ஒருமுறை பார்வதிக்கு ஒரு சந்தேகம். பரமேஸ்வரனிடம் கேட்டாள். ""அன்பரே! பொருள் பெரிதா? அதனுள் புதைந்திருக்கும் சக்தி பெரிதா?'' என்று!
அப்போது சிவனை வணங்க ஜைதீவஷ்ய முனிவர் வந்தார். அவர் காதில் அம்பாள் கேட்ட கேள்வி விழுந்தது.
""இதிலென்ன சந்தேகம்! சக்தி என்பது பொருளுக்குள் புதைந்திருக்கும் ஒரு அம்சம். பொருள் இருந்தால் தானே சக்தி என்ற ஒன்றே அதனுள் புதைந்திருக்க முடியும்! எனவே பொருள் தான் பெரிது,'' என்றார்.
பார்வதிக்கு கோபம் வந்து விட்டது.
""நீர் யார்? என் கணவரிடம் நான் கேட்டால், நீர் முந்திக்கொண்டு பதிலளிக்கிறீரே! அவ்வளவு தைரியமா உமக்கு!''
ஜைதீவஷ்யர் பதிலேதும் சொல்லவில்லை, அங்கிருந்து போய்விட்டார்.
சிவனிடம்,""பார்த்தீர்களா உங்கள் பக்தரை! நான் கேட்டும் ஏதும் சொல்லாமல் கிளம்பி விட்டதை! யார் அவர்?'' என்றாள்.
""அவர் பரமசாது. பெயர் ஜைதீவஷ்யர். ஆசை என்பது அவரிடம் எள்ளளவும் கிடையாது''.
""ஆசை இல்லாத ஒருவன் பூமியில் இருக்கிறானா என்ன! வாருங்கள், அவரைச் சோதித்து அறியலாம்,'' என்று பார்வதி சொல்லவும், சிவன் உடனே கிளம்பி விட்டார்.
அவர் தங்கியிருந்த குடிலை அவர்கள் அடைந்தனர்.
ஆங்காங்கே கிடைத்த கிழிந்த துணிகளை தைத்து தனக்கு ஆடையாக்கிக் கொண்டிருந்த முனிவர், சிவபார்வதி தன்னைத் தேடி வந்ததும் ஆச்சரியம் கொண்டார். பணிவுடன் வரவேற்றார்.
""உங்களுக்கு என்ன வேண்டும்?'' எனக்கேட்டார் சிவன்.
"""ஏதும் தேவையில்லை! எல்லாம் தான் தந்திருக்கிறீர்களே! ஓலைக்குடிசை. உடலை மறைக்குமளவுக்கு உடை! தேவைக்கு உணவு! போதுமே!'' என்றார்.
சிவன் அவரை பலமுறை வற்புறுத்தியும், ""எனக்கு எந்தக்குறையும் இல்லை,'' என மறுத்துவிட்டார் முனிவர். பார்வதிதேவி அவரை வாழ்த்தினாள்.
ஜைதீவஷ்யர் போல் வாழ்வது இக்காலத்தில் சாத்தியமல்ல! ஆனால், இவரது வாழ்க்கை மூலம், தேவைகளைக் கடுமையாக சுருக்கும்போது விலைஉயர்வு பற்றி கவலையில்லாமல் இருக்கலாம் என்பது நிஜமல்லவா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment