Monday, September 3, 2012
காஞ்சிப்பெரியவர்
<நடமாடும் தெய்வம் காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். வயது முதிர்ந்த கணவனும்,மனைவியும் அவருக்காக காத்திருந்தனர். அவர்களின் முறை வந்ததும் பெரியவரிடம் ஆசி பெற்றனர்.
கண்ணீர் ததும்பும் கண்களுடன் முதியவர், ""சுவாமி! எங்களுக்கு குழந்தை கிடையாது. உத்யோகத்தில் இருந்து ரிட்டையர் ஆகி
பலகாலம் ஆச்சு. வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் போச்சு. இனி, இங்கேயே மடத்தில் கைங்கர்யம் செய்யலாம் என நினைக்கிறேன்,''என்றார் பணிவாக.
அவரிடம், ""பிடிப்பு இல்லைன்னு தானே கவலைப்படறே! ஏதாவது காரியம் கொடுத்தா பண்ணுவியா?'' என்றார் பெரியவர் கனிவாக.
""பெரியவா! உத்தரவிடுங்கோ!'' என்றனர் இருவரும் ஒரே சமயத்தில்.
அப்படியே பேச்சை முடித்துக் கொண்டு காஞ்சிப்பெரியவர் மற்றவர்களுக்கு தரிசனம் அளித்து பிரசாதம் வழங்கிக் கொண்டிருந் தார். வரிசையில் மற்றொரு தம்பதி தன் மகளுடன் வந்திருந்தனர்.
அவர்கள் ,""சுவாமி! இவ எங்க ஒரே பொண்ணு! இவளுக்கு கல்யாணம் பண்ணனும். அதுக்கு உங்கஆசிர்வாதம் வேணும்!"" என்றனர்.
பக்கத்தில் நின்ற முதியவரை அழைத்தார் பெரியவர்.
""வாழ்வில் பிடிப்பு இல்லைன்னு நீ சொன்னியே! இதோ இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உன் பொறுப்பு. நீ தான் கன்னிகாதானம் பண்ணி வைக்கணும்!'' என்றார்.
""செஞ்சுடறேன் பெரியவா!'' என்று சொல்லி விழுந்து வணங்கினார்.
அப்போது காஞ்சிப்பெரியவர் அவரது மனைவியை நோக்கி இரண்டு விரல்களை மட்டும் காட்டினார். சட்டென்று புரிந்து கொண்ட முதியவர், ""ஆமாம் பெரியவா! இவ என்னோட இரண்டாவது மனைவி தான். மூத்தவ காலமானதும் இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!,'' என்றார் அமைதியாக.
பெரியவர் அவரிடம், ""உன் மூத்த தாரத்துப் பெண்குழந்தை இருந்ததே! இப்போ என்னாச்சு!'' என்றார்.
இடி தாக்கியது போல, ஒருநொடியில் முதியவரின் முகம் கறுத்துப்போனது.
""இவ சித்தியா வந்தா. குழந்தையை ரொம்ப பாடு படுத்தினா..... ஒருநாள் யாரிடமும் சொல்லிக்காம வீட்டை விட்டு எங்கோ போயிட்டா.... தேடாத இடமில்லை. போன போனவ தான்....,'' மேலும் அவரால் பேச முடியவில்லை.
துக்கம் தொண்டையை அடைத்தது.
""பிடிப்பு இல்லைன்னு சொன்னியே! இவ தான் உன் நிஜமான குழந்தை. வீட்டுக்கு கூட்டிப் போய் கல்யாணம் பண்ணி வைச்சு சந்தோஷப்படு!'' என்றார் காஞ்சிப்பெரியவர். அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது முதியவருக்கு. பல ஆண்டுக்கு முன், ரயில்வே ஸ்டேஷனில் அழுது கொண்டிருந்த சிறுமியை எடுத்த வளர்த்த விபரத்தை அந்த தம்பதி மூலம் அனைவரும் அறிந்து கொண்டதும் அங்கிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
பெற்றோர், வளர்த்தோர் இருவரும் சேர்ந்து காஞ்சிப்பெரியவரின் ஆசியோடு அப்பெண்ணின் திருமணம் இனிதாக நடந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment