Monday, September 3, 2012
சிவன்சொத்து குலநாசம்
ஒருமுறை எமன் தனது தூதர்களை அழைத்து, ""அடேய்! இன்ன ஊரிலே, இன்ன தெருவிலே சங்கரன் என்ற பெயரில் இருவர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் ரொம்பவும் நல்லவன். இன்னொருவன் தீயகுணங்களை உடையவன். ஊரையே மிரட்டுபவன். அவனது ஆயுள் நாளையுடன் முடிந்து விட்டது. அவன் உயிரைப் பறித்து வாருங்கள்,'' என <உத்தரவிட்டான்.
எமதூதர்களும் தங்கள் தலைவன் குறிப்பிட்ட ஊருக்குச் சென்று, சங்கரனை ரகசியமாகக் கண்காணித்தார்கள். யார் நல்ல சங்கரன், யார் தீயவன் என்ற குழப்பம் ஏற்பட்டது. இதை எமலோகத்தில் போய் கேட்கப் போனால், தீயவனுக்கு குறிக்கப்பட்ட நேரம் கடந்து விடும், எமன் தங்களைத் தொலைத்து விடுவான் என்று பயந்த தூதர்கள், அவசரத்தில் நல்ல சங்கரனின் உயிரைப் பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
அங்கே போன பிறகு தான் தாங்கள் பறித்தது நல்லவனின் உயிரை என்பது தெரியவந்தது. எமன் நல்ல சங்கரனிடம் மன்னிப்பு கேட்டு, ""சங்கரா! தவறு நடந்து விட்டது. உன் உடலை எரிப்பதற்குள் பூலோகம் போய் விடு,'' என்றான். அவன் திரும்பும்வழியில், எமலோக சேவகர்கள். நான்கைந்து பேரை மிகவும் கொடுமைப்படுத்துவதைக் கண்டான்.
அதுபற்றி எமனிடம் கேட்டான்.
""சங்கரா! இவர்கள் சிவன்கோயிலில் திருடியவர்கள். சிவன்சொத்து குலநாசம் எனத்தெரிந்தும் களவாடிய இவர்கள், இங்கே கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்கள். பூலோகத்தில் இவர்களது குடும்பத்திலுள்ளவர்களும் பசி, பட்டினி, விபத்தில் சிக்கி அகால மரணமடைகிறார்கள்,'' என்றான்.
சங்கரனும் ஒரு நல்ல தகவலைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில், மீண்டும் பூலோகம் வந்து தன் உடலில் புகுந்து உயிர்பெற்றான். சிவாலயங்களுக்கு திருப்பணி செய்து பல்லாண்டு வாழ்ந்து மறைந்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment