Thursday, September 6, 2012
சக்தி வழிபாடு
சக்தியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் சாக்தமாகும். இந்து சமயத்தில் இறைவனைத் தந்தையாக, தலைவனாக, தோழனாக, தனயனாக என்று பல வழிகளில் அடியார்கள் அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும், அந்நியோன்மானதுமான அன்பு முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி வழிபாடாகும்.
பிள்ளையானவன் நன்றே செய்கினும், தீதே செய்திடினும் மாறாத தாய் அன்புக்கு; ஒப்பானது தெய்வத்தின் அன்பு, கூடவே தாயின் தன்மையுடைய தெய்வத்தை வழிபடுவது யாருக்கும் எளிதாகிறது. சக்தி என்பது என்ன? சக்திக்கும் சிவத்துக்கும் இடையே என்ன தொடர்பு? இதனை விளக்குவதே இந்து மதம். சிவம் என்பது மெய்ப்பொருள்.
பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு சக்தி என்று பெயர். சிவத்தினின்று சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம் யாவும் சிவசக்தி மயமானது. சக்தி பல்வேறு தொழில்களைப் புரியவும் பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை எடுக்கிறாள். முத்தொழில்களை செய்யும் போது பிரம்மாணி, வைஷ்ணவி, உருத்ராணி என்று பெயர் பெறுகிறாள்.
சிவத்திற்கு ஒப்பிடும்போது துர்க்கை என்றும், தீமையை அழிக்கும் போது காளியுமாகிறாள். வித்தை- கல்வியின் வடிவெடுக்கும் போது சரஸ்வதி என்றும், தனதானிய-செல்வம் என்று வடிவெடுக்கும் போது இலக்குமியாகவும் பெயர் பெறுகிறாள். வாழ்வு சிறப்புற ஆட்சியானது சிறப்புற்றிருக்க வேண்டும்.
என்பதை துர்க்கையும், செல்வத்தை வழங்க திருமகளும், கலை ஞானங்களைப் பெற சரஸ்வதியும், ஞானத்துக்கும் நல்லறிவிற்கும் அறிகுறியாக விநாயகரும், வாழ்வை ஆற்றல் படைத்தாக்க முருகனும் விளங்குகின்றனர். அவதாரபுருஷர்களாக, சித்தர்களாக தோன்றியவர்கள் கூட சக்தியை வணங்கி வந்தனர்.
இராமபிரான் இலங்கை போகும் முன்பு துர்க்கை பூஜை செய்த்தாகவும், கண்ணன் காத்யாயினி பூஜை செய்தாகவும், சங்கராச்சியார் சாரதா பூஜை செய்ததாகவும், இராமகிருஷ்ணர் காளியை வணங்கியதாகவும் நாம் அறிந்த செய்தியாகும். ஜகதம்பா; உணவு அளிக்கும் அன்ன பூரணியாகவும், அனைத்துக்கும் அரசியான இராஜராஜேஸ்வரி [பவானி] இயற்கையின் உயிரை உண்டு தோற்றுவிப்பவளாகவும், மகாசக்தி, பேராற்றல் மிக்கவள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
வீரம்,செல்வம்,கல்வி அருள் வேண்டி சக்தியை நோக்கி நோற்கப்படும் நவராத்திரி விழா நம்மவர்களால் பயபக்தியுடன் கொண்டாப்படுகிறது. இதுவே சக்தியின் சிறப்பை உலகெங்கும் பறை சாற்றுகிறது. இது மட்டுமன்றி கெளரி விரதம், வரலெட்சுமி விரதம் போன்ற சக்தியை நோக்கி நோற்கப்படும் விரதங்களாகும்.
சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது. சக்தி இன்றேல் சிவன் இல்லை, புறச்சமயங்களின் தாக்குதலால் சக்திக்கு தனி உரிமை கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையாலும் புராணங்களின் செல்வாக்கு நிலையாலும் சாக்தம் என்ற மதம் உருவாகியது. பெண்ணுக்கு முதன்மை கொடுக்கும் மதமே சாக்தம் ஆகும்.
சைவம் தத்துவநிலையில் சக்திக்கு இடம் கொடுத்தது. முதன்மை வேறுபாடே இருமதத்திற்கும் உள்ள வித்தியாசம். பிருங்கி முன்வர் சிவத்தையன்றிச் சக்தியை வழிபடுவதில்லை. பொன்னம்பலவாணேசர் கோவில் ராஜராஜேசர் முன்னிலையிலும், நயினை நாகபூசனி அம்பாள் முன்னிலையிலும், முன்னேஸ்வர ஆலயத்தில் வடிவாம்பிகை முன்னிலையிலும் சக்கர யந்திரத்தில் எழுதப்பட்ட மந்திரங்களை உபாசிக்கும் போது அது பயன்கொடுப்பதில் பெருமையுள்ளதாகிறது.
இவ்வழிபாட்டின் அடிப்படையில் சிவனாலயங்களிலும் விக்கிரகங்களின் கீழ் யந்திரம் வைத்து மருந்து சார்த்தப்படுகிறது. சக்தி என்ற கருத்து மக்களிடையே நிலையூன்றி இருந்தது. இக்கருத்தை ஆதரிக்குமாற்போல இருக்கு வேதம் துணைநின்றது. பராசக்தியாகிய அம்பாள் அறக்கருணை மூலமும் மறக்கருணை மூலமும் அருள்செய்ய வல்லவள். அதாவது அன்பின் மூலமும் தண்டித்தல் மூலமும் அருள் செய்வாள்.
அம்பாள் வழிபாட்டை புராணங்கள் விரிவுபடுத்தின. தேவி பாகவதம் அம்பாளுக்கு முதன்மை கொடுத்து அம்பாளின் பல்வேறு மூர்த்தங்களையும் அவற்றுக்குரிய மந்திரங்களையும் சிறப்பித்தன. ஒளியைத் தாங்கியுள்ள தீபம் அம்பாள் எனப் போற்றப்பட்டு திருவிளக்கு வழிபாடும் அம்பாளுக்கே ஆயிற்று.
பராசக்தியின் வெவ்வேறு தோற்றங்களாக கௌரிமனோன்மணி, சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகமாரி என்பவற்றை குறிப்பிடலாம். இவற்றுள் மகமாரி மாரகாசுரனை சங்காரம் செய்ததால் அப்பெயர் பெற்றாள் என காரணாகமம் கூறுகின்றது. இவளது தலையைச் சுற்றிலும் அக்கினிச் சுவாலைகள் தோன்றும். கபாலம், சக்தி, பாசம், உடுக்கு என்னும் நான்கு ஆயுதங்களை இவள் ஏந்தி நிற்பாள்.
இந்த அடிப்படையை கொண்ட முத்துமாரி வழிபாடும் தோன்றி இருக்கலாம். காளிதாச மகாகவியும் சக்திமீது பல பாடல்களை பாடியுள்ளார். இதிகாச புராணத்தில் தாட்சாயினி, பார்வதி பற்றிய கருத்துக்கள் உண்டு. சிவ புராணத்தில் உமை தன்னை பிரமமாகவும், பேரொளியாகவும் பரந்த இவ்வுலகமாகவும் காரண காரியமாகவும் எல்லாமாகவும் இருப்பதாகவும் கூறுகின்றது.
மார்க்கண்டேய புராணம் சக்தியின் பெருமைகள், வடிவங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் புராணங்களது குறிப்பின்படி சிவன், பிரம்மா, விஷ்ணு எனும் 3 தெய்வங்களினதும் பேரொளியிலிருந்து சக்தி தோற்றம் பெற்றாள் எனக் குறிப்பிடுகின்றது. 1 1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment