Monday, September 3, 2012
"சிவபூஜையில் கரடி' என்பதன் பொருள் என்ன?
** "சிவபூஜையில் கரடி' என்பதன் பொருள் என்ன?
சிலருக்கு நல்லதே பிடிக்காது. நாலுபேர் மகிழ்ச்சியாய்ப் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் வகையில் ஒருவர் வலிய சண்டைக்கு வருவார். இந்தச் சூழலில் அவர் கரடிக்குச் சமமானவர். ஏன் கரடியை மட்டும் குறிப்பிடுகிறார்கள் என்றால் கொடிய மிருகங்களாகிய சிங்கமும், புலியும் தமது இரையைத் தாமே போரிட்டுக் கொன்று தின்னும் சிறப்புடையது. கரடி அப்படி கிடையாது. பிற மிருகங்கள் இரை உண்ணும்போது அவற்றை விரட்டி விட்டு தின்னும் குணமுள்ளது. பசி அடங்கி விட்டால் சிங்கமும், புலியும் யாரையும் தொந்தரவு செய்யாது. ஆனால், கரடி எந்த நேரத்திலும் கொடூரமாக உயிர்களைத் துன்புறுத்தும். சிவபூஜை செய்பவர்கள் தம்மைச் சுற்றி எது நடந்தாலும் கவலைப்படாமல் பூஜையிலேயே கவனமாக இருப்பார்கள். சிங்கம் புலியைக் கூடக் கண்டு அஞ்சமாட்டார்கள். அவற்றால் உயிருக்கு மட்டும் தானே ஆபத்து என்று கவலையில்லாமல் இருப்பார்கள். ஆனால், கொடூரகுணம் கொண்ட கரடி பூஜை செய்யும் சூழலையே கெடுத்து, விக்ரஹங்களையும் சேதப்படுத்திவிடுமே என்று அஞ்சுவார்கள். எதிரிகளைச் சமாளிப்பது வேறு. அசிகைப் பிடித்தவர்களை சமாளிப்பது என்பது வேறு. இரண்டாவதாகக் கூறப்படுபவர்கள் எங்கு வந்தாலும் சிவபூஜையில் கரடி தான்.
* துளசி மாடத்தை வீட்டில் வைப்பதன் நோக்கம் என்ன? அதை எத்தனை முறை சுற்றி வந்து வழிபடவேண்டும்?
துளசி மகாவிஷ்ணுவின் வாசஸ்தலம். துளசி இதழ்கள் மகாலட்சுமி வடிவமானவை. லட்சுமி நாராயண ஸ்வரூபமானது துளசிச்செடி. இதை வீட்டில் வைப்பதால் வறுமை, நோய், கண்திருஷ்டி, தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும். மூன்று முறை வலம் வர வேண்டும்.
* வீட்டில் கிரகலட்சுமி படத்தை எந்தத் திசை நோக்கி வைக்கவேண்டும்?
தாயாரும், மனைவியும், எல்லாப் பெண்களும் தான் கிரகலட்சுமிகளாக இருக்கிறார்களே! இவர்களை சந்தோஷமாக வைத்துக் கொண்டாலே கிரகலட்சுமி வழிபாடு தான். படம் வைத்து வழிபட வேண்டும் என நினைத்தால் கிழக்கு அல்லது வடக்குநோக்கி வைத்து பூஜிக்கலாம்.
* மந்திரம் சொல்லும்போது முடிவில் ததாஸ்து' என்று சொல்கிறார்களே. இதன் பொருள் என்ன?
ததா+ அஸ்து= ததாஸ்து. "ததா' என்றால் "அப்படியே' என்று பொருள். "அஸ்து' என்றால் "ஆகட்டும்' என்பது பொருள். ஆசிர்வாதம் எனப்படும் வாழ்த்து கூறும்போது,""எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் இறையருளால் கிடைக்கட்டும்'' என்பார்கள். மற்றவர்கள் அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்துவது தான் ""ததாஸ்து''.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment