Thursday, December 18, 2014

ஒழுக்கத்தின் மகிமை

ஒருமுறை யுதிஷ்டிரனுக்கு சீலத்தைப் (நல்லொழுக்கம்) பற்றிய சந்தேகம் வந்தது. பீஷ்மரிடம் அது பற்றி அவன் கேட்க, அவர் துரியோதனனுக்கு திருதராஷ்டிரன் சொன்ன ஒரு கதையை, அவனுக்குச் சொன்னார். அந்தக் கதை... அசுர குலத்தில் பிறந்த பிரகலாதன் மிகுந்த ஒழுக்க சீலனாக இருந்தான்.

அதன் பலனாக மூவுலகையும் வென்று, தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். இந்திரனின் ஆட்சியில் இருந்த பகுதிகளும் பிரகலாதனின் கைக்குப் போய்விட்டன. வருத்தம் கொண்ட இந்திரன், தன் குருவான பிருகஸ்பதியிடம் சென்று, தன் ஆட்சி பறிபோனதைப் பற்றிச் சொல்லி, தானும் சீலத்தின் பெருமையைத் தெரிந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.

பிருகஸ்பதியும் தனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிவிட்டு, ‘இதற்கு மேலும் நீ அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அசுர குருவான சுக்ராச்சாரியாரிடம் போய்க் கற்றுக் கொள்’ என்று கூறிவிட்டார். (பிருகஸ்பதி தான் கற்றுக் கொடுத்த விஷயத்தை, இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டுமானால், அசுர குருவிடம் சென்று கற்றுக்கொள்ளச் சொன்னது எப்பேர்ப்பட்ட உயர்ந்த குணம்!) இந்திரனும் தன் குருவின் சொற்படி, அசுர குருவான சுக்ராச்சாரியாரிடம் சென்றான்.

அவரை வணங்கி, பிருகஸ்பதி முனிவரின் ஆணைப்படி, சீலத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவரிடம் வந்து விஷயத்தைச் சொன்னான். மகிழ்ச்சியுடன் அவனுக்குப் போதித்த அசுர குரு, ‘இதற்கு மேலும் நீ நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், பிரகலாதன் என்ற அரசன் இருக்கிறான்.

என் மாணவன்தான்! சீலத்தில் மிகச் சிறந்தவன். அவனிடம் சென்று கற்றுக்கொள்’ என்றார். ‘யார் தன்னிடமிருந்து ஆட்சியைப் பறித்தவனோ, அவனிடமே போய்க் கற்றுக் கொள்வதா?’ என்று இந்திரன் நினைக்கவில்லை. இதுவே நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து, உடனே ஒரு அந்தணரின் வடிவம் கொண்டு பிரகலாதனை அடைந்தான்.

ஆட்சி சம்பந்தமான வேலைகளில் பிரகலாதன் மும்முரமாக இருக்க, அந்த சமயம் அந்த அந்தணர் உள்ளே வந்தார். ‘பிரகலாதரே! சீலத்தைப் பற்றி உங்களிடம் கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்’ என்று நேரடியாக விஷயத்தைச் சொன்னான் அந்தணர் உருவத்தில் இருந்த இந்திரன்.

அலுவல்கள் இருப்பதால், தன்னால் இப்போது சீலத்தைப் பற்றி விவரமாக எடுத்துச் சொல்ல முடியாது என்று பிரகலாதன் கூறவும், அந்த அந்தணரோ ‘பரவாயில்லை, நான் காத்திருக்கிறேன். உங்கள் அலுவல்களை முடித்துவிட்டு வாருங்கள்’ என்றார். பிரகலாதனும் தன் அலுவல்கள் அனைத்தும் முடிந்ததும் அந்த அந்தணரிடம் வந்து அவரை வணங்கினான்.

அவருடைய சந்தேகம் என்ன என்று அவன் கேட்க, ‘பிரகலாதரே! நீங்கள் சீலத்தினால் தான் மூவுலகையும் வென்றீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைப் பொறுத்தவரை அந்த சீலம் என்பது என்ன என்பதை உங்கள் வாயால் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்’ என்றார். பிரகலாதனும் சீலத்தைப் பற்றி விளக்க ஆரம்பித்தான்.

‘அந்தணரே! என் ஆட்சியில் எனக்கு ஆலோசனை செய்வதற்கென்று பல அந்தணர்களை வைத்திருக்கிறேன். அவர்களை நான் மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறேன். ‘சில சமயம் அவர்கள் என்னைப் பார்த்து, ‘பார்! நாங்கள் உன்னை அடக்குகிறோம்’ என்று ஏளனமாகச் சொல்வார்கள்.

ஆனாலும் அறிவாளிகளான அவர்களை விடுவது சரியில்லை என்பதால், அவர்கள் என்ன சொன்னாலும் நான் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளையும் செய்வேன். ‘இதுதான் என் சீலம். இந்தச் சீலத்தினால்தான், என்னால் எல்லா உலகங்களையும் வெல்ல முடிந்தது’ என்று கூறி முடித்தான்.

இத்தனை நேரம் தன்னிடம் சீலத்தைப் பற்றி விளக்கம் கேட்ட அந்தணர் மேல், பிரகலாதனுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டானது. எனவே, அவருக்கு ஒரு வரம் அளிக்க முடிவு செய்தான். ‘அந்தணரே! உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ, அதைக் கேளுங்கள்’ என்றான். அந்த அந்தணரோ, ‘பிரகலாதரே! எனக்கு உங்கள் சீலத்தைக் கொடுங்கள்; இதுவே நான் கேட்கும் வரம்’ என்றார்.

பிரகலாதனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘தன் சீலத்தையே வரமாகக் கேட்கிறாரே அந்தணர்! என்ன செய்வது?’ என்று கொஞ்சம் யோசித்தாலும், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டி, அவர் கேட்ட வரத்தைத் தந்தான். ‘மிக்க நன்றி பிரகலாதரே! நான் கிளம்புகிறேன்!’ என்று கூறிவிட்டு, அந்தணர் வந்த வழியே திரும்பினார்.

சற்று நேரத்தில் பிரகலாதனின் உடம்பில் இருந்து ஒளிமயமான ஒரு மனிதன் வெளியே வந்தான். ஆச்சரியம்அடைந்த பிரகலாதன், ‘யாரப்பா நீ?’ என்று கேட்க, அவன் ‘நான்தான் சீலம். உன் வாக்கின்படி, நான் அந்த அந்தணரிடம் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு அந்த அந்தணரைப் பின்தொடர்ந்தான்.

இன்னும் கொஞ்ச நேரத்தில், மற்றுமொரு மனிதனும் பிரகலாதனின் உடம்பில் இருந்து வெளியேறினான். அவனைப் பார்த்தும் பிரகலாதன் யாரென்று கேட்க, ‘நான்தான் தர்மம். சீலம் இருக்கும் இடத்தில்தான் நானும் இருப்பேன்’ என்று சொல்லிவிட்டு அவனும் சீலத்தைப் பின்தொடர்ந்து சென்றான். அடுத்து, இன்னொரு மனிதனும் பிரகலாதன் உடம்பில் இருந்து வெளியேறினான்.

‘நீ யாரப்பா?’ என்று பிரகலாதன் மீண்டும் கேட்க, ‘நான் சத்தியம். தர்மம் இருக்கும் இடத்தில்தான் நானிருப்பேன்’ என்று கூறிவிட்டு தர்மத்தின் பாதையில் அவனும் சென்றான். இன்னொரு மனிதனும் சிறிது நேரத்தில் பிரகலாதன் உடம்பில் இருந்து வெளியேறினான். பிரகலாதன் அவனிடமும் நீ யாரென்று கேட்க, ‘நான்தான் பலம்.

சத்தியம் இல்லாத இடத்தில் நானிருப்பதில்லை’ என்று சொல்லிவிட்டு, சத்தியத்தை நோக்கி நடந்தான். கடைசியாக, அழகான பெண் ஒருத்தி பிரகலாதன் உடம்பில் இருந்து வெளியேறினாள். அதிர்ச்சியுடன் பிரகலாதன் அவளையும் பார்த்து யாரென்று கேட்க, ‘நான்தான் செல்வம். பலமில்லாத இடத்தில் எனக்கு என்ன வேலை?’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

‘சற்றுப் பொறு! இப்படி ஒருவரைத் தொடர்ந்து மற்றொருவர் என்று அந்த அந்தணரிடம் போய்க் கொண்டிருக்கிறீர்களே! யாரவர்?’ என்று பிரகலாதன் கவலையுடன் அந்தப் பெண்ணைக் கேட்டான். ‘அவர்தான் இந்திரன்.

சீலத்தைத் தொடர்ந்து நாங்கள் எல்லோரும் அவரிடம் செல்கிறோம்’ என்று சொல்லிவிட்டு செல்வமான அந்தப் பெண், அந்தணன் உருவில் வந்து வரம் பெற்றுச் சென்ற இந்திரன் போன வழியில் சென்றுவிட்டாள். சீலத்தைத் தொடர்ந்து மற்ற குணங்கள் எல்லாம் தன்னிடம் வந்ததும், இந்திரன் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் அடைந்தான். சீலத்தை விட்டதால் அனைத்தையும் பிரகலாதன் இழந்தான்.

No comments:

Post a Comment