Tuesday, October 30, 2012

காந்தி எப்படி மகாத்மா ஆனார்?

தென் ஆப்பிரிவிக்காவில் அந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்; அங்கிருந்து வீறு கொண்டு கிளம்பிய அந்த மனித சக்தி, அகிலம் முழுவதும் தனது அஹிம்சை நெறியை ஆற்றலோடு பரப்பியதெப்படி? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி மகாத்மா ஆனார்? சத்குருவின் வார்த்தைகளில் அழகாக வெளிப்படுகிறது அந்த அற்புத உண்மை... படித்து மகிழுங்கள்...


அனைத்து ஆன்மீகச் செயல்முறைகளையும் ஒவ்வொருவரும் செய்யமுடியும். இதில் கேள்விக்கே இடமில்லை. அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், அது மிகவும் துன்பகரமானது. ஏதோ ஒன்றுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதால்தான் அவர்கள் ஓர் எல்லைக்குள் தங்களை குறுக்கிக் கொள்கிறார்கள். நம் அடையாளங்கள் குறுகிய எல்லைக்குள் இருப்பதால், நம்முடைய சாத்தியங்களும் குறுகிய எல்லைக்குள்ளேயே இருக்கிறது. உடலுடன் உள்ள அடையாளத்தை விட, எவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

சரித்திரத்தில் இடம் பெற்ற பலருடைய வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கிறது. ஒரு குறுகிய எல்லைக்குள் வாழ்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏதாவது நடந்து அவர்கள் எல்லையை உடைத்துவிடும். பிறகு அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விரிந்த செயல்முறைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தாங்களே எதிர்பார்க்க முடியாத விஷயங்களைச் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் தெரிந்த ஓர் உதாரணம்... மகாத்மா காந்தி, மிகுந்த எல்லைக்குள் இருந்த மனிதர். அவர் திறமையான வழக்கறிஞரும் அல்ல. நீதிமன்றத்தில் தைரியமாக எழுந்து சரளமாக பேசக்கூடியவரும் அல்ல. ஆனால் ஒரே ஒரு சம்பவம், திடீரென அவருடைய அடையாளங்கள் கழன்றுவிட்டன.

தென் ஆப்பிரிக்காவில் அவர் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டு இருந்தபோது ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது நடுவில் ஒரு ரயில் நிறுத்தத்தில் ஏறிய ஒரு வெள்ளைக்காரர், காந்தியிடம் ஒழுங்கான பயணச்சீட்டு இருந்தபோதும் அவர் கறுப்பர் என்பதால் இறங்கச் சொன்னார். காந்தி மறுக்க, அந்த வெள்ளைக்காரர் பயணச்சீட்டு பரிசோதகருடன் சேர்ந்து காந்தியை அவருடைய உடைமைகளுடன் அந்த பெட்டியிலிருந்து தூக்கி வெளியே வீசினார்.

அப்போது பிளாட்பாரத்தில் விழுந்த காந்தி பல மணி நேரங்களுக்கு அங்கிருந்து எழுந்திருக்கவே இல்லை. "எனக்கு இது ஏன் நடந்தது? நானும் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தேன், பிறகு நான் ஏன் தூக்கி எறியப்பட்டேன்? இதற்கு வழி காண வேண்டும்" என்று அன்று முதல் மக்களின் பெரிய பிரச்சனைகளுடன் தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ள, காந்தி மகாத்மாவாய் மலர்ந்தார். சிறிய அடையாளங்களைத் தகர்த்தெறிந்து மிகப் பெரிய அடையாளங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் மகாத்மாவானார்.

மகாத்மா காந்தியைப் போல் வேறு யாரும் இந்தப் பிரபஞ்சத்தில் இவ்வளவு மனிதர்களை வழிநடத்தியதில்லை. அதுவும் மிக எளிய வழிகளில். இந்த நாட்டில் நன்றாக வேர் ஊன்றியிருந்த அன்னியரை போர், வன்முறை போன்ற எந்த வழிகளுமின்றித் துரத்தினார். இந்தப் பிரபஞ்சத்தில் இதற்கு முன் நடந்திராத அதிசயம் இது. இந்த நாட்டை வென்றவர்கள் அதற்கென்று சில விலை கொடுத்துதான் இந்த நாட்டைக் கைப்பற்றினர். அவர்களும் எளிதாகப் போய்விடவில்லை. ஆனாலும், சண்டையில்லாமல், துப்பாக்கி ஏந்தாமல், வன்முறையைக் கடைப்பிடிக்காமல் அவர்களைத் துரத்தியடித்தார் மகாத்மா. இந்த நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது.

காவலர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடுவது ஒரு விஷயம். அவர்கள் மீது குண்டு எறிவது மற்றொரு விஷயம், ஆனால் நிராயுதபாணிகளாகத் தெருவில் சென்று தலையில் அடிவாங்கி மண்ணில் வீழ்வது முற்றிலும் வேறு விஷயம். முதல் பகுதி மக்கள் அடிபட்டு வீழ்ந்தவுடன் அடுத்த குழுவைச் சார்ந்த மக்கள் அடிவாங்கப் போய் நிற்பது என்பது மிகவும் வேறுவிதமான வலிமையான விஷயம். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் அப்படிச் செய்வதற்கு மிகவும் ஆழமான மன வலிமை வேண்டும். லட்சக்கணக்கான மக்களை அவரால் அப்படி ஈடுபடுத்த முடிந்தது.

தான், தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையை விட்டுவிட்டு அப்போது சமூகத்தில் நிலவிவந்த மக்களின் முக்கியப் பிரச்சனைகளோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால் அவருடைய சிறிய அடையாளம் சிதறியது. எனவே நீங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று நிர்ணயித்து ஓர் எல்லைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

உங்களால் செய்ய முடிந்த எதையும் செய்யுங்கள். செய்ய முடியும் என்று நினைக்கும் எதையும் செய்யுங்கள்!

கோயிலில் கொடுக்கும் இறைவனுக்கு சூட்டிய மலர்களை என்ன செய்ய வேண்டும்?

ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரஸாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. ரூபாய் நோட்டுக்கும் வெறும்தாளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா. ரூபாய் நோட்டுக்களிலும் கூட அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. இதுபோன்று ஒவ்வொரு கடவுளர்களின் பிரஸாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும். பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்குவேறு மலர்களை சார்த்துவது சிறந்தது

மரணத்தின் பின்.. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது?

மரணத்தின் பின்.. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது?
 
மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது. இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.

Saturday, October 13, 2012

விநாயகர் உருவத் தத்துவம்

தோப்புக்கரணம் போடுவது ஏன்?
 
 
விஷ்ணு தாம் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம். அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.


அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய "சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.


மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கரப்படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணுவின் கையிலிருந்த சுதர்சனக் சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.


அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.


அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சனச் சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு. (இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் என போற்றப்படுகிறார். இவர் காஞ்சீபுரம் கோவிலில் வீற்றிருந்த அருளாட்சி செய்கிறார்). இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.
 
விநாயகருக்கு 21 வகை இலை அர்ச்சனை
 
விநாயகர் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்து கொள்வது நலம் பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-
1. முல்லை இலை: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. விஸ்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடை யலாம்.
6. ஊமத்தை இலை: பெருந்தன்மை கைவரப் பெறும்.
7. வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.
8. நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.
10. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
11. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.
12. மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்
13. விஷ்ணுகிராந்தி இலை: நுண்ணிவு கைவரப் பெறும்.
14. மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
15. தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
16. மருக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.
17. அரசம் இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
18. ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.
19. தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.
20. அகத்தி இலை: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.
 
 
விநாயகர் 12 அவதாரம்
 
விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறு கிறது.
  வக்ரதுண்ட விநாயகர்:பஇவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.
கஜானனபவிநாயகர்: சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.
விக்கிரனபராஜர்: காலரூபன் என்ற அரக் கனை கொல்வதற்காக பிறந்தவர்.
மயூரேசர்: பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.
உபமயூரேசர்:சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.
பாலச்சந்திரர்:தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.
சிந்தாமணி:கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.
கணேசர்:பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.
கணபதி:கஜமுகாசுரனை வென்றவர்.
மகோற்கடர்:காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.
துண்டி:துராசதன் என்ற அசுரனை வென்றவர்.
வல்லபை விநாயகர்:மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர்.டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
 
விநாயகர் சிலை முன்பு நின்று தலையில் குட்டிக் கொள்ளும் பழக்கம் எப்படி தோன்றியது தெரியுமா?

* விநாயகர் முன் தோப்புக் கரணம் இடுவதனால் அறிவு வளர்ச்சியும், உடல் நலமும் உண்டாகும். அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரும்போது குடகு மலையில் சிவ பூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் பூஜை செய்து கொண்டிருந்தான்.

மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனை பார்த்து, "அகத்தியருடைய கமண்டலத்தில் உள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும்'' என்று கூறினார். இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான். விநாயகர் காக்கை வடிவம் எடுத்து சென்று காவிரி அடங்கிய கமண்டலத்தின் மீது அமர்ந்தார்.

அகத்தியர் காகத்தைக் கரத்தால் ஓட்டினார். காகம் காலால் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார். அது சிறுவனாகி நின்றது. அச்சிறுவனை இரு கரங்களாலும் குட்டும் பொருட்டுக் குறுமுனி ஓடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஓடினார்.

அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார். ஐங்கரங்களுடன் விநாய க்ஷ்கர் காட்சி தந்தருளினார். அகத்தியர் திகைத்து போனார். விநாயகப் பெருமானே உம்மைக் குட்டுவதற்கா கையை ஓங்கினேனே? என்று தன் தலையிலேயே குட்டிக் கொண்டார்.

விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி "இன்று முதல் என் முன் பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறு வார்கள்'' என்று அருளினார். இதனால் விநாயகர் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.*
 
பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
 
வராக புராணத்தில் இதற்கொரு கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப் பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வர னிடம் சென்று முறையிட்டனர்.

பரமன் தனது தர்ம பத்தினி யாம் பார்வதி தேவியை ஞானக் கண் ணால் உற்று நோக்கி னார். அந்த சமயத் தில் அதிசயிக் கும் வகை யில், மோகன வடிவத்தில், எல்லோரை யும் கவர்ந் திழுக் கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான்.

மற்றவர்களது கண்கள் படாமல் இருக்கப் பார்வதி தேவியானவர் பிறரை மயங்கச் செய்யும் இந்த அழகான வடிவத்தை விடுத்துப்பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி உருவத்தை மாற்றினாள். பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கெல்லாம் தலைவனாக நியமனம் செய்தார்.

இனிமேல் எந்தக் காரியங்கள் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத் தடைகள் ஏற்படும் என்றும் அறிவித்து விட்டார். அன்றைய நாள் முதல் இந்நாள் வரை பிள்ளையாரை முதலில் வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது.
 
 
32 விநாயகர் மூர்த்தங்கள்
 
1. பால கணபதி
2. தருண கணபதி
3. பக்தி கணபதி
4. வீர கணபதி
5. சக்தி கணபதி
6. துவிஜ கணபதி
7. சித்தி கணபதி
8. உச்சிட்ட கணபதி
9. விக்ன கணபதி
10. க்ஷிப்ர கணபதி
11. ஏரம்ப கணபதி
12. லட்சுமி கணபதி
13. மஹா கணபதி
14. விஜய கணபதி
15. நிருத்த கணபதி
16. ஊர்த்துவ கணபதி
17. ஏகாட்சர கணபதி
18. வர கணபதி
19. திரயாக்ஷர கணபதி
20. க்ஷிப்ரபிரசாத கணபதி
21. ஹரித்திரா கணபதி
22. ஏகதந்த கணபதி
23. சிருஷ்டி கணபதி
24. உத்தண்ட கணபதி
25. ரணமோசன கணபதி
26. துண்டி கணபதி
27. துவிமுக கணபதி
28. மும்முக கணபதி
29. சிங்க கணபதி
30. யோக கணபதி
31. துர்க்கா கணபதி
32. சங்கடஹர கணபதி
 
விநாயகர் உருவத் தத்துவம்
தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து `ஓம்` என்ற பிரணவ நாதமே தோன்றியது. பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் `பிரணவன்' என்றும் `மூத்த பிள்ளையார்' என்றும் அறியப்படுகின்றது. `ஓங்கார நாத தத்துவம்` சிவனையும் சுட்டி நிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது.

பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். `ஓம்` என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர். அவரது திருமேனிய ஒரு தத்துவ வித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர். அவருடைய இரு திருவடிகளிலே வலது திருவடியை "முற்றறிவு'' அதாவது `ஞானசக்தி' என்றும்" இடது திருவடியை "முற்றுத்தொழில்'' அதாவது `கிரியாசக்தி' என்றும் உணர்த்தப்படுகின்றது.

அவ்விரு திருவடிகளின் துணையின்றி உயிர்கள் ஒன்றினை அறிந்து கொள்ளவோ, செயலாற்றவோ முடியாது. எல்லாப் பொருட்களையும் ஆகாயம் தன்னுள் அடக்கவும், உண்டாக்கவும், விரிக்கவும், ஒடுக்கவும் கூடிய தன்மையைக்கொண்ட பரந்து விரிந்ததொரு பூதம். ஆகாயம் போலவே சகலவற்றையும் உள்ளடக்கியதாகவே அவரது பேருந்தி காட்சி கொடுக்கின்றது.

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு `ஐங்கரன்' என்ற நாமம் விளங்குகின்றது. அவரை `பஞ்சகிருத்திகள்' என்றும் கூறுவர்.

அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன. வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு "பாசஞானத்தையும்` இடது பக்கமுள்ள கொம்பு "பதிஞானத்தையும்` உணர்த்துவதாக உள்ளன. விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.

அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் `குண்டலினி சக்தியின்' வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே பிரபஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகின்றது. அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதானது, உலகிற்கு நிமித்த காரணர் அவர்தாம் என்பதையும் உணர்த்துகின்றது. மேலும் விநாயகர் முக்கண் உடையவரெனவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கண்ணுடைய பெருமை சிவனுக்கே உரியது.

ஆயினும் கிரியா வழி, ரூப வழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். மேலும், விநாயகருக்கு `சித்தி', `புத்தி' என இரு சக்திகள் உள்ளதாகவும் புராணங்களில் பேசப்படுகின்றது.

விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோதகம் அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றது. துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார்.

செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திருப்பார். விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக்கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலியனவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது.

உலகிலுள்ள சைவ மக்கள் எதையாவது எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில் முதலாவதாக பிள்ளையார் சுழி எழுதிய பின்னரே விடயத்தை எழுதத் தொடங்குவர். பிள்ளையார் சுழி `ள' என்ற ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து இருக்கும். இதற்கு ஒரு தத்துவம் உண்டு, புஜ்ஜியமன வட்டதை `0' பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டை `' நாதம் என்றும் கொள்கின்றனர்.

எனவே பிள்ளையார் சுழியை `நாதபிந்து' என்பர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது. எக்கருமத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களிடையை காலாதிகாலமாக நிலவிவருகின்றது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை .
 
யானை முகனுக்கு உகந்த நான்கு லட்ச ஜப வழிபாடு
 
 
விநாயகருக்குப் பல வழிபாடுகள் வித்யாசமான முறையில் இருப்பதை காண பத்ய முறையிலும் விநாயகப் புராணத்திலும், காணலாம். சகங்ரநாமம் என்கிற ஆயிரத்தெட்டு நாமங்கள் தொகுப்பில் கணபதியின் பூரண அருளைப்பெற்றிட சதுர் லட்ச ஜபம் எனனும் நான்கு லட்சம் மூலமந்திர உச்சரித்தல் வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது கணபதி சகஸ்ரநாமத்தில் உள்ள 1016-வது நாமா வளியில்லும் சதுர்லட்ச ஜபப்ரீதாயை நம என்று வருகிறது. அடுத்ததாக வரும் 1017-ம் நாமாவனியில் ஓம் சதுர்வசட்ச ஜபப்ரகாசிதாய நம: என்று வருகிறது.

அதாவது நான்கு லட்சம் மூல மந்திர ஜபம் செய்பவர்களுக்கு விநாயகர் கனவில் ப்ரசன்னமாகி வேண்டும் வரங்களை அருள்வார் என்று பொருள். சதுராவர்த்தி தர்ப்பணம் என்ற விதிப்படி இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் மங்களங்கள் உண்டாகும் என்பது பெரியோர்கள் மற்றும் கணபதி உபாசகர்களின் கருத்து.

சதுர் ஆவர்த்தி தர்ப்பண பூஜை செய்முறை:.........


விநாயகர் வழிபாடு மட்டும் அல்லாமல் மற்ற எல்லா தெய்வங்களுக்கும் விசேட வழிபாடுகள் செய்யும் பொழுத ஹோமம் செய்வது முதல் அங்கமாக விளங்குகிறது. விநாயகருக்குச் சதுராவர்த்தி என்கிற நான்கு லட்சம் ஜபம் செய்கின்ற போது முதலில் அஷ்ட திரவியம் என்ற எண் வனகக் கலவையால் 10 % ஹோமம் செய்தல் வேண்டும்.

மோதகம், அப்பம், கரும்பு துண்டு, அவல், எள், வாழைப்பம் சத்துமாவு, நெல்பொறி, ஆகியன மேலும் இந்த வகை ஹோம பூஜையின் போது சமர்ப்பிக்கப்படுகிற சமித்துக்களுக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருக்கின்றன. சமித்து ஓம குச்சிகள். அத்தி குச்சியால் ஓமம் செய்ய - மக்கட் பேறு உண்டாகும். நாயுருவி குச்சி- மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும். எருக்கன் குச்சி- எதிரிகள் இல்லாத நிலை உருவாகும்.

• அரசங்குச்சி- அரசாங்க நன்மையை எதிர்பார்க்கலாம்
• கருங்காலிக் கட்டை- ஏவல்கல் பில்லி சூன்யங்கள் விலகிவிடும்.
• வன்னிக்குச்சி- கிரஹத் கோளாறுகள் நீங்கி விடும்.
• புரசங்குச்சி- குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
• வில்வக்குச்சி- செல்வம் சேர வாய்ப்பு உண்டாகும்
• அருகம்புல்- விஷபயம் நீங்கும்.
* ஆலங்குச்சி- புகழைச் சேர வைக்கும்.
• நொச்சி- காரியத்தடை விலகி வழக்குகளில் வெல்லச் செய்யும்.

யக்நத்தைச் செய்த பிறகு தர்ப்பணம் 10% செய்தல் வேண்டும். மகாகணபதியின் மூல மந்திரத்தைக் கூறி 108 தடவைகள் அல்லது 54 முறை, ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதியே சர்வ ஜனம்மே வசமாயை ஸ்வாஹா சித்தலட்சுமி சமேத ஸ்ரீமகா கணபதிம் தர்ப்பயாமி மிகச் சிறிய மகாகணபதி சிலையை இரு தட்டில் வைத்து அதில் இந்த யந்திர கேசை வடிவை போட்டு மகா கணபதியைப் பிரார்த்தனை செய்து கொண்டு தொடர்ந்து இந்த 54 தர்ப்பண வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

கணேசருக்கு தர்ப்பணமிடும் போது கடைசியில் கிழுள்ள பிரார்த்தனையை மனதுக்குள் மானசீக மந்திரமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

1. எனது சங்கடங்கள் அனைத்தும் விலகிடச் செய்வாய் ஸ்ரீகணபதியே
2. நவக்கிரகங்கள் ஒன்பதும் நன்மையே அருளச் செய்வாய்.
3. சகல விதமான தோஷங்களும் என்னை விட்டுப் போகட்டும்
4. எல்லா விதமான வருத்தங்களும் என்னை விட்டு அகல வேண்டும்
5. துக்கங்களிலிருந்து நிவாரணம் எனக்குக் கிடைக்கட்டும்.
6. என்னுடைய தாபங்கள் தீர்ந்து விட அருள் செய்வாய்.
7. பாவங்கள் என்னிடம் நெருங்காமல் போகட்டும்.
8. என்னை வாட்டுகிற நோய்கள் உடலை விட்டு ஓடிவிடட்டும்
9. எதிரிகள் என்னை விட்டு விலகிப் போவார்களாக
10. உடல் சார்ந்த நோய்கள் தீர்ந்து போகட்டும்
11. என்னைச் சுற்றுகிற பீடைகள் மறைந்து விடட்டும்
12. எனக்கு பயம் என்பதே இல்லாமல் போக வேண்டும்.
13. எனக்கு சத்ரு உபாதைகள் தொந்தரவுகள் அகலட்டும்
14. கெட்ட சம்பவங்கள் வராமல் தடுக்கப்பட வேண்டும்.
15. கெட்ட கனவுகள்வராமலேயே நசிந்து போகட்டும்.
16. தரித்திரம் என்ற சொல்லுக்கு இடமின்றி போக வேண்டும்.
17. தீய சக்திகள் நெருங்காமல் விலகியே இருக்கட்டும்.
18. என்னைக் கடும் விஷம் பாதிக்கப்படாமல் இருக்கட்டும்
19. எல்லா வகையிலும் லாப நிலைகள் வந்து அடையட்டும்.
20. நெருங்குகிற போதே நோய்கள் நசிந்து குலையட்டும்.
21. தீய நினைவுகள் என்னிடம் வராமல் போகட்டும்.
22. சம்பத்துக்கள் மலைபோல வளரட்டும்
23. மனம் போல விருப்பங்கள் நிறைவேறட்டும்
24. நான் வசிக்கும் இல்லத்தில் மங்களங்கள் உண்டாகட்டும்.
25. உலகத்திற்கு உரிய நலன்களைக் கொடுப்பாயாக.
26. எனக்குள் அபூர்வ சக்திகள் வந்து சேரட்டும்.
27. என் வாழ்வில் பேரன் பேத்திகள் உருவாக வேண்டும்.
28. எப்போதும் சுப நிகழ்வுகளையே அருளுவாய்.
29. கல்வி அறிவு அபரிமிதமாக வளர்ந்து விடட்டும்
30. எங்கும் எப்போதும் சாந்தி நிலவிட அருள்க.
31. நான் சொல்லும் மந்திரங்கள் சித்தியாக வேண்டும்.
32. எனது சொல்லும் வாக்கும் பலருக்கும் பயனாக அருள்வாய்.
33. நான் செய்யும் யந்திர பூஜை சித்தியைத் தரட்டும்
34. நான் பயின்ற தந்திர சாஸ்திரங்கள் வெற்றியைத் தரட்டும்
35. முழுமையான வாழ்நாளை எனக்குத் தந்தருள்வாய்
36. என் நினைவுகளில் நல்லதே வந்து உதிக்கட்டும்.
37. மனதில் தோன்றும் விருப்பங்களை வெற்றி அடையச் செய்வாய்.
38. எனக்கு எப்போதும் மன நிம்மதியைக் கொடுப்பாயாக.
39. எனக்கு விருப்பம் எனத் தோன்றுவதைத் தந்து விடுக.
40. திரியும் விலங்குகள் எனக்கு வசமாக வேண்டும்.
41. அனைவருக்கும் சுகாதாரத்தை வளரச் செய்வாய்.
42. மனதில் வைராக்கியத்தை வளரச் செய்திடுக.
43. உலகில் எல்லா யோக பாக்யங்களும் சேர்ந்திட அருள்வாய்.
44. என் ஆத்மா புனிதத்தன்மை அடைந்து விடட்டும்.
45. என் குருவிடம் நான் அதிகமான பக்தி கொள்ச் செய்வீராக.
46. எனது சுயரூபத்தைப் பிரகாசமடையச் செய்வீராக.
47. கலிகாலத்தின் தோஷம் எங்களை விட்டு அகல வேண்டும்.
48. தனம், தான்யங்கள் வளர்ந்து செழிக்க வேண்டும்.
49. குடும்பத்தில் சூன்யங்கள் பிறரால் வைக்கப்படாமல் போகட்டும்.
50. மனவருத்தங்கள் கணவன- மனைவியரிடையே வராமல் இருக்கட்டும். 51. மனக்கிலேசம் விலகி அன்பு பெருகட்டும்.
52. வேண்டாத பயம் என் மனதை விட்டு நீங்கி விடட்டும்
53. அனைத்து பூத ப்ரேத பிகாச உபத்திரவங்கள் விலகி விடட்டும்.
54. வழக்கு வெற்றி முதல் சகல காரியங்களிலும் வெற்றியே தொடரட்டும்

மகா கணபதியே! தர்ப்பண பூஜை முடிந்த பிறகு சுற்றுப்புறங்களில் அங்கு வைக்கப்பட்ட கலசத்தில் உள்ள நீரை பார்ஜனம் என்ற வகையில் தெளித்தல் வேண்டும். பொதுவாக ஒரு பூஜை செய்யும் வகைகளில் விநாயகர் வழிபாடு முதல் கலச பூஜை, அக்னி ஓமம் என்று வசைப்படுத்தப்படும் பூஜாவிதி இச்த சதுராவர்த்தி தர்ப்பண பூஜையில் மட்டும் விநாயகர் வழிபாடு. வரிசையாக ஜெபம்.

யக்ஞம், தர்ப்பணம் (நீர் வார்த்தல்), மார்ஜனம் (தெளித்தல்), என்று அமைகிறது. இங்கே அபரிமிதமான பலன்களைத் தரக் கூடிய சதுர் ஆவர்த்தி தர்ப்பண பூஜை எளிமையாக உலக நலன் பொருட்டு கொடுக்கப்பட்டுள்ளது. பலர் கூடிப் பலன் பெற செய்ய நினைப்பவர்கள் விநாயகர் கோவில், மற்ற ஆலயங்களில் உள்ள விநாயகர் சன்னதி மண்டபங்களில் பொதுவாகச் செய்யலாம்.

விரிவாகக் செய்யும் இந்த வழிபாட்டு முறையில் நான்கு லட்சம் ஆவர்த்திகள் (தடைகள்) மூலமந்திர ஜெபமும் 40,000, ஆவர்த்திகள் அக்னி ஹோமமும். 4,000 ஆவர்த்திகள்- தர்ப்பண முறையும் 400 ஆவர்த்திகள் மார்ஜனம், என்ற தெனித்தல் நிகழ்வும் அடங்குகின்றன. அதாவது 4,444 என்று மொத்தம் 16 ஜக் காட்டுகிற இதன் எண்ணிக்கை முறை 16 லட்சுமி தேவிகளையும் அதன் மூலமாக வரும் வளங்களையும் காட்டுகின்றன.

என்ன பலன் கிடைக்கும்?

கணபதி வழிபாட்டு முறைகளில் இதுவரை வெளியிடப்படாத ரகசியமாகவே இருந்து வந்த சதுராவர்த்தி விதி இன்று எல்லோரும் அறியும்படி வெளியிடப்படுவதற்குக் காரணம் நாட்டில் எல்லோருக்கும் கடன் தொல்லைகள் அதிகமாகி விட்டது. இந்த வழிபாட்டைச் செய்வதால் கடன் தொல்லை தீர்ந்து விடும்.

தொழில் வியாபாரம் அமோகமா நடைபெற, இந்த பூஜையை பல தொழில் அதிபர்கள் சேர்ந்து செய்வதால் பலன் கிடைக்கும். வியாபார எதிரிகள் போட்டியிடுவோர் கோர்ட்டு, வழக்குகளில் சிக்க வைப்போர்களிடமிருந்து விடுதலை, தீர்வு, வெற்றிகள் கிடைக்கும். சர்வ சம்பத்துகளும் உண்டாகும்.

அம்பிகையைக் குறித்து செய்யப்படுகிற சண்டியாகங்கள் பெரும் பொருட்செலவில் பல திருத்தலங்கள், மடங்கள் பீடங்களில் உற்சவ காலங்களில் செய்யப்படுவதை போன்று விநாயக சதுர்த்தி விழாக்கள் தொடங்கும் இக்கால கட்டத்தில் சதுராவர்த்தி தர்ப்பண வழிபாட்டைப் பலன் வேண்டுவோர் செய்து கொள்ளலாம்.
 
 
விநாயகருக்கு செய்யவேண்டிய வைவேத்தியங்கள் அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், மோதகம், வாழப்பழம், ஆப்பிள், கரும்பு. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம்,காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.காரிய சித்திமாலை துதியை 3 வேளைகள் அதாவது காலை,மதியம்,மாலை உரைப்பவர்கள் நினைத்த காரியம் கைக்கூடும்.

8 நாட்கள் ஒதிவர மகிழ்ச்சி உண்டாகும்.சங்கடஹர சதுர்த்தியன்று 8 ஒதினால் அஷ்டமாசித்தி கைகூடும்.தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும்,செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.
விநாயகரின் ஜாதகத்தின் மகிமை.
 
சனிபகவான் ஒரு முறை விநாயகரைப் பார்த்து உங்களை நாளை வந்து பிடிக்க வேண்டும். நாளைக்கு வருகிறேன். என்றார். சனீஸ்வரனே எனக்கும் கணேசபுரியில் வேலைப்பளு அதிகம், உமக்கும் அதிக வேலை இருக்கும். என்னைப் பிடிக்க வரும் நீங்கள் என் முதுகில், நாளைக்கு வருகிறேன் என்று எழுதி விட்டுப் போங்கள் என்று முதுகைக் காட்டினார் விநாயகர்.

அதில் நாளை மறவாமல் வருகிறேன் என்று எழுதினார். சனீஸ்வரன் போய்விட்டு மறு நாள் வந்த போது முதுகைக் காட்டி என்ன எழுதி உள்ளீர் என்று கேட்க, சனீஸ்வரன் அவரிடம் அடி பணிந்தார். என்னை வணங்குபவர்களைப் பிடித்தால் உமக்கும் இது போல சங்கடம் ஏற்படும் என்றார்.

விநாயகர் கணேசப்பிரபுவே தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன் என்றார். உங்கள் ஜாதகத்தில் சனியின் பிடிப்புக் காலம் வந்தால் விநாயகர் ஜாதகத்தை ஒரு அட்டையில் எழுதி செவ்வாய் சனிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள் சனி தசையும், யோக தசை காலமாக அமைந்து விடும். இதுவே விநாயகரின் ஜாதகத்தின் மகிமை.
 
 
 
 

கடவுளால் மட்டுமே மனிதனுக்கு நல்லபுத்தியைக் கொடுக்க முடியும்.

எம்பார் சுவாமி என்ற வைணவ ஆசார்யர் ஸ்ரீரங்கத்தில் காலட்சேபம் செய்தார். பலர் வந்தனர். ஒருவர் மட்டும் வர மறுத்து, வீட்டுத்திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டார்.
"அங்கே வந்தால் நல்ல விஷயங்கள் காதில் விழுமே, வாருமே!' என்று பலர் வற்புறுத்தியும் அவர் காதில் விழவில்லை.
ஒருநாள் விடாப்பிடியாக அவரை இழுத்து வந்துவிட்டனர். மறுநாளில் இருந்து அவர் தான் முதல் ஆளாக வந்தார். காலட்சேபம் துவங்கும் முன்பே வந்து காத்திருந்தார்.
""இவரது இந்த மாற்றத்துக்கு காரணம் இவரை வற்புறுத்தி அழைத்து வந்தவர்கள் தான் காரணம்,'' என்பவர்கள் கை தூக்கலாம்'' என்றார் எம்பார்.
சிலர் கை தூக்கினர்.
""சரி...நீங்கள் அழைத்தாலும், மனம் மாறி வந்த அவரே தான் காரணம்'' என்பவர்கள் கை தூக்கலாம்,'' என்றார். அதற்கும் சிலர் கை தூக்கினர். ""இல்லை...இல்லை...இங்கே கதை சொல்பவர் மிக அழகாகச் சொல்கிறார். அதனால் தான் இவர் வந்தார் என்பவர்கள் கை தூக்குங்கள்,'' என்றார். அதற்கும் சிலர் கை தூக்கினர்.
கடைசியாக எம்பார் சுவாமியே கை தூக்கினார்.
""நான் கேட்காத ஒரு கேள்வி இருக்கிறது. இவர் இங்கு வர காரணம் இந்த மூன்றுமே அல்ல! வர மறுத்த ஒருவர் இங்கு வருகிறார் என்றால், அந்த புத்தியை கடவுள் தான் கொடுத்திருக்கிறார்,'' என்றார்.
கடவுளால் மட்டுமே மனிதனுக்கு நல்லபுத்தியைக் கொடுக்க முடியும்.

சமயோசிதமும் தலைகாக்கும்.

பாண்டியநாட்டுப் புலவர் வடநாட்டுக்கு போனார். அங்குள்ள ராஜாவைப் பற்றி தமிழில் அழகாக கவிபாடினார். அதை அங்கிருந்த பல்மொழி அறிஞர், மன்னருக்கு மொழி பெயர்த்துச் சொன்னார். மன்னருக்கு ரொம்பவே சந்தோஷம். நூறு ரூபாய் சன்மானம் கொடுத்தார்.
""அடடா! டில்லிக்கு ராஜாவாய் இருந்தாலும், இந்த ஆசாமி வெறும் நூறைத் தானே கொடுத்தான்...சரி..சரி...எங்கு போனாலும் நம்மை வறுமை விடாமல் துரத்தும் போலும்!'' என நினைத்தவர், பல்மொழி அறிஞர் நிற்பதைக் கவனிக்காமல், ""உப்பும் காயும் வாங்கத்தான் போதும்'' என வாய் விட்டு சொன்னார். இதைக் கவனித்த பல்மொழி அறிஞர் ராஜாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார்.
""ராஜா..ராஜா! நீங்கள் கொடுத்த சன்மானத்தை இவன் துச்சமாக பேசிவிட்டான்,'' என்றார்.
ராஜாவுக்கு கடும் கோபம். புலவர் ஆபத்தில் சிக்கிக்கொண்டதை உணர்ந்து சமயோசிதமாக சமாளித்தார்.
""ராஜா அவர்களே! நான் சொன்னதை இந்த அறிஞர் தவறாகப் புரிந்து கொண்டார் என நினைக்கிறேன். <உங்களைப் புகழ்ந்ததால் தான் நூறு ரூபாய் கிடைத்தது. மற்றவர்கள் கொடுத்திருந்தால் அஞ்சோ, பத்தோ உப்பும், காயும் வாங்கும் அளவுக்கு குறைவாகத் தான் கொடுத்திருப்பார்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்,'' என்றார்.
ராஜாவுக்கு இது மொழி பெயர்க்கப்பட்டதும், அவர் அகம் மகிழ்ந்து, ""என் தர்ம குணத்தை இவ்வளவு உயர்த்தியா பேசினீர்,'' என்றதுடன், பத்தாயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்து விட்டார்.
சிலருக்கு பேச்சாலேயே ஆபத்தான சூழல் வந்து விடுகிறது. அப்படி வந்துவிட்டாலும், சமயோசிதமாக பேசி சரி செய்து கொள்ள வேண்டும். சிலநேரங்களில் சமயோசிதமும் தலைகாக்கும்

தானத்தில் பெரிய தானம்,--புத்தர்

அமைதியே வடிவான புத்தபிரானுக்கு மேளம் அடிப்பதில் அலாதி இன்பம் தெரியுமா!
அவரது கையில் எப்போதும் ஒரு மேளம் இருக்கும். யார் தனக்கு பெரிய அளவில் காணிக்கை தருகிறார்களோ, அப்போது மகிழ்ச்சியுடன் அந்த மேளத்தை அடித்து, காணிக்கை அளித்தவரின் பெருமையைப் பறைசாற்றுவார்.
ஒரு சக்கரவர்த்திக்கு இந்த விஷயம் தெரியவந்தது. காணிக்கை கொடுப்பதில் தன்னை விட உயர்ந்தவர் யாரும் இருக்கக்கூடாது. தனக்கு மட்டுமே அந்தப் பெருமை சேர வேண்டும் என்ற எண்ணத்தில், யானைகள் மீது முத்து, பவளம், வைரக்கற்கள், தங்கக்
கட்டிகள், பழம், உணவு வகைகளை ஏற்றிக்கொண்டு சென்றார். வழியில் ஒரு மூதாட்டி வந்தாள்.
""மாமன்னரே! புத்தர் பிரானைத் தரிசிக்க போய்க் கொண்டிருக்கிறேன். பசி உயிர் போகிறது! அவரைப் பார்ப்பதற்குள் என் பிராணன் போய்விடக்கூடாது. ஏதாவது உணவளியுங்கள்,'' .
அவள் கேட்டதும், ஒரு மாதுளம்பழத்தை அவளிடம் வீசினார் மன்னர். சற்றுநேரத்தில், அவர் புத்தரின் இருப்பிடத்தை அடைந்து காணிக்கையைச் செலுத்தினார். தான் கொடுத்த தானத்தின் அளவிற்கு, புத்தர் அரைமணி நேரமாவது மேளம் அடிப்பார் எனக் கருதினார்.
புத்தர் எழவே இல்லை.
அரசர் அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரத்தில், மாதுளம்பழம் பெற்ற மூதாட்டி அங்கு வந்தாள். புத்தரின் காலடியில், அரசரிடம் பிச்சையாகப் பெற்ற மாதுளம்பழத்தைச் சமர்ப்பித்தாள்.
புத்தர் எழுந்தார். மேளத்தை வேகமாக அடித்தார்.
அரசருக்கு கோபம்.
""புத்தரே! இதென்ன அநியாயம்! இந்தக்கிழவி ஒரு பழத்தைத் தந்ததற்காக மேளம் அடித்தீர்கள். நான் இவ்வளவு காணிக்கை கொடுத்தும் எழாமல் இருந்தீர்களே!''.
புத்தர் பதிலளித்தார்: ""மன்னா! நீ காணிக்கை அளித்ததன் நோக்கம் உன் புகழ் வெளிப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்திற்காக! இவளோ, உன்னிடம் பிச்சையாகப் பெற்ற பழத்தை, கடும் பசியிலும் கூட சாப்பிடாமல், உயிர் போனாலும் போகட்டும் என்று என்னிடம் அளித்தாள். தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், அதையும் பொறுத்துக் கொண்டு பிறருக்கு உதவுவதே தானத்தில் பெரிய தானம்,'' என்றார்.
மன்னனின் குனிந்த தலை நிமிரவில்லை.

நாராயணன்' என்றால் "வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்', "வாழ்வுக்குப் பின் பிறவிப்பணி தீர்ப்பவன்'

எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம். ஒரு முனிவரிடம் கேட்டார்.
""நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?''
முனிவர் சொன்னார். ""ரொம்ப சுலபம்..."நாரம்' என்றால் "தண்ணீர்'. "அயனன்' என்றால் "சயனித்திருப்பவன்'. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார்.
நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை.
நாராயணனிடமே ஓடினார்.
""ஐயனே! உம்மை நான் நாராயணா...நாராயணா என்று துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம் சொல்லுமே!''
குறும்புக்கார நாரதர் கேட்ட கேள்விக்கு, குறும்பு நாராயணனும் குறும்பாகவே பதிலளித்தான்.
""அடடா...எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக்கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்''.
நாரதர் வண்டிடம் ஓடினார்.
""வண்டே! நாராயணன் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியுமா?''
கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே வண்டு விழுந்து இறந்து போனது.
நாரதர் நாராயணனிடம் திரும்பினார்.
""நாராயணன் என்ற நாமம் கேட்பவர்கள் இறந்து விடுவார்கள்..அப்படியானால் அது தானே அர்த்தம்,'' என்றார்.
""அப்படி நான் கேள்விப் பட்டதில்லையே! எதற்கும் அதோ! அந்தக் கிளியிடம் கேள்,'' என்று ஒரு மரத்தை நோக்கி கைநீட்டினார் பகவான்.
கிளியிடம் இதே கேள்வியை நாரதர் கேட்க, கிளி சுருண்டு விழுந்து இறந்து போனது.
நாரதருக்கு திக்கித்து விட்டது. மூச்சுக்கு முன்னூறு தடவை "நாராயணா' என்கிறோமே! நாமும் செத்து விடுவோமா!'' பயத்துடன் நாராயணனிடம் வந்தார்.
""பெருமாளே! அதற்கு அர்த்தம் "அது'தான்...உறுதியாகி விட்டது.
""நாரதா! அவை விதிமுடிந்து இறக்கின்றன. எதற்கும் அந்த பசுவின் கன்றிடம் போய் கேள்''.
""நல்லாயிருக்கு நாராயணா! இதை நான் போய் கேட்க, அந்த கன்று இறந்து போக, பசுக்கன்றை கொன்ற கொடியபாவம் என்னை அணுக வேண்டுமென திட்டம் போடுகிறீரா! முடியாது'' என்றார் நாரதர்.
""அப்படி ஏதும் ஆகாதென்றே நினைக்கிறேன். நீ ஒரு தபஸ்வி! தபஸ்விக்கு தைரியம் வேண்டாமோ!'' என்று உசுப்பிவிட்டார் பெருமாள்.
நாரதரும் சற்று தைரியத்துடன் கன்றிடம் போய் கேட்க, கன்றின் கதை முடிந்தது.
""நாராயணா! எல்லாம் போச்சு! இனிமேல் உம்மிடமில்லை பேச்சு! பசுக்கன்றைக் கொன்ற கொடிய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விட்டாய்! வருகிறேன்!'' எனக்கிளம்பியவரை, பெருமாள் தடுத்தார்.
""நாரதா! கலங்காதே! இதுவரை நீ கேட்டது பூச்சி, பறவை, விலங்குகளிடம்! இனி காசி இளவரசனிடம் போய் கேள், அவன் மனிதனாயிற்றே! அவனுக்கு ஏதும் ஆகாது!'' என்ற நாராயணனை,"" அய்யா! என்னை அரசதண்டனைக்கு ஆளாக்க எத்தனை நாள் திட்டம் போட்டு வைத்திருந்தீர்! முடியாதைய்யா! முடியாது'' என்ற நாரதரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
நாரதர் பயந்தபடியே இளவரசனிடம் கேட்டார். அவனுக்கு ஏதும் ஆகவில்லை. அவன் அழகாகப் பதில் சொன்னான்.
""நாரதரே! வண்டாய், கிளியாய், கன்றாய் உம் முன் காட்சி தந்தது நானே! உம் வாயால் "நாராயணா' என்ற நாமத்தை திரும்பத் திரும்பக் கேட்டு உயர்ந்த மனிதப்பிறவி... அதிலும் செல்வங்களையெல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய் பிறந்திருக்கிறேன். தொடர்ந்து நாராயண மந்திரத்தை பக்தியுடன் ஓதி வைகுண்டம் செல்வேன்!'' என்றான்.
""ஆகா! "நாராயணன்' என்றால் "வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்', "வாழ்வுக்குப் பின் பிறவிப்பணி தீர்ப்பவன்' என்றல்லவா அர்த்தம் எனப்புரிந்து கொண்டார் நாரதர்.

மனிதனின் எதிரி யார்?

ஆசை நம்மிடம் அடங்கமாட்டேன் என்றாலும், திரும்பத் திரும்ப அடக்கப் பார்த்துக் கொண்டே தானிருக்க வேண்டும். வைராக்யம் என்பதான ஆசையின்மையை, பற்றின்மையை சம்பாதித்துக் கொள்ள விடாமுயற்சி பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும்.
ஏனென்றால் ஆசை என்ற இந்த ஒரே சத்ருவை (எதிரி) எப்படியோ பாடு பட்டாவது ஒழித்துக் கட்டி விட்டால் போதும், அப்புறம் நீங்க ராஜா தான். ராஜா என்றால் இந்த உலகத்து ராஜா இல்லை. அவனுக்குள்ள ஆசையும் தொல்லையும் நமக்கு வேண்டவே வேண்டாம். ஆசை கிட்டேயே வராத சாஸ்வத சாந்தத்தை உடைய ராஜா.
மனதில் எழும் பல நூறாயிரம் கெட்ட விஷயங்களை ஒவ்வொன்றாக அடக்கப் பார்த்து பிரயோஜனமில்லை. அது முடியாத காரியம். ஆகையால் அவை கிளைகள் என்றால் அவற்றுக்கு வேராக உள்ள ஆசை என்ற ஒன்றை வெட்டிவிட்டால் போதும். ஆனால், வெளியே நீண்டிருக்கும் கிளையை வெட்டுவதைவிட, உள்ளே புதைந்துள்ள வேரைத் தோண்டி அழிப்பது ரொம்பவும் கஷ்டம் தான். இருந்தாலும் இதைச் செய்யாவிட்டால் வெட்டிய கிளைகள் மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டு தான் இருக்கும் என்பதால் எப்படியாவது இதைசாதித்துத் தான் ஆகவேண்டும்.

விஞ்ஞானம் -மெய்ஞ்ஞானம்

மனிதன் விஞ்ஞானத்தில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறான்.
உலகத்தின் எல்லையை விட்டு சந்திர மண்டலம், செவ்வாய் கிரகம் என அவன் சாதித்தவை அனைத்தும் மிக மிக பாராட்டுக்குரியவை. தனது அறிவைப் பயன்படுத்தி அவன் இதைச் சாதித்திருக் கிறான். ஆனால், இந்த சாதனைக்காக அவன் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதையும், கடவுளை வென்று விட்டதாக கூறுவதையும் ஒப்புக்கொள்ள முடியாது.
காரணம், வெறும் குதிரையும், யானையும் படைகளாக இருந்த காலத்தில் அவற்றை அடக்க பீரங்கியைக் கண்டுபிடித்தான். பீரங்கியை அடக்க வெடிகுண்டுகளை தயாரித்தான். சாதாரண குண்டுகளைத் தகர்க்க அணுகுண்டை கொண்டு வந்தான். காட்டையும் ஆற்றையும் விளைநிலங்களையும் அழித்து செயற்கை உணவு வகைகளை அவன் தயாரித்ததும், நோய்கள் கடுமையாகத் தாக்கின. ஆக, மனித அறிவு கடைசியில் அழிவைத் தான் தந்தது.
மெய்ஞ்ஞானம் அப்படியல்ல! அது அன்பைப் போதிக்கிறது. நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது நமக்கு அளித்துள்ளதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வினை உண்டாக்குகிறது. அக்கால மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர். அதனால் அவர்களுக்கு பிரச்னைகள் மிகக்குறைவாக இருந்தது. எனவே, மெய்ஞ்ஞானத்தை விஞ்ஞானம் வென்றுவிட்டதாகக் கூறுவதை எக்காலமும் ஏற்கமுடியாது.

ஹேமாவதி'

உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தாயாக இருப்பவள் அம்பிகை. உபநிடதத்தில் அம்பிகைக்கு "ஹைமவதி' என்று பெயருண்டு. தற்காலத்தில் இதை "ஹேமாவதி' என்கிறார்கள். இந்தச் சொல்லுக்கு இருவிதமான பொருள் உண்டு. "ஹிமம்' என்றால் பனி. பனிமலையான இமயமலைக்கு "ஹிமாசலம்' என்று பெயர். அந்த மலைக்கு அரசனான ஹிமவானின் மகள் என்பதால் அம்பிகைக்கு "ஹைமவதி' என்று பெயர் ஏற்பட்டது. "ஹேமம்' என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது ஹைமம். "ஹேமா' என்றால் "தங்கம்'. அம்பாள் "தங்கம் போல பொன்னிறத்தில் ஜொலிப்பவள்' என்பதால் "ஹேமாவதி' எனப் பெயர் கொண்டதாகவும் கூறுவர்.

12 ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்பை, இரண்டே மாதத்தில் முடித்தவர்கள்

12 ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்பை, இரண்டே மாதத்தில் முடித்தவர்கள் கிருஷ்ணரும், அவரது அண்ணன் பலராமனும். இவர்கள் சாந்தீபனி முனிவரிடம் குருகுலவாசம் செய்தனர். கிருஷ்ணர் தெய்வ அவதாரம் என்றாலும், மனிதனாகப் பிறந்து விட்டதால், மனிதனுக்குரிய குறைநிறைகளை அந்த அவதாரத்தில் அவர் காட்ட வேண்டியதாயிற்று. மனிதனுக்கு குருபக்தி அவசியம் என்பதை உலகிற்கு உணர்த்த அவர் குருகுலத்தில் சேர்ந்ததாக பாகவதம் கூறுகிறது. இருந்தாலும், கிருஷ்ணருக்கு அந்த அவதாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய இருந்ததால், மனிதனைப் போல மரபை மீறவும் செய்தார். அக்காலத்தில் 12 ஆண்டுகள் குருகுலவாசம் செய்வது மரபு. ஆனால், கிருஷ்ணரும், பலராமனும் 64 நாட்கள் மட்டும் குருகுலத்தில் இருந்து, நாளைக்கு ஒரு சாஸ்திரமாக கற்று முடித்தனர். கிருஷ்ண, பலராமரின் தெய்வீகசக்தியே அவர்கள் பாடங்களை விரைந்து முடித்ததன் ரகசியம் என்கிறார் சாந்தீபனி முனிவர்.

சாஷ்டாங்க நமஸ்காரம்


கோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும். கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ""ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது''.
முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தீட்டு என்றால் என்னதீட்டு என்றால் என்ன
பிறரைத் தீண்டக்கூடாத நாட்களை சுருக்கமாகத் தீட்டு என்பர். பங்காளிகள் வீட்டில் பிறப்பு, இறப்பு நிகழ்ந்தால் பத்துநாட்கள் தீட்டு உண்டு. பெண்களின் மாதவிடாய் காலமான மூன்றுநாள் தீட்டு. இக்காலங்களில் கோயிலுக்குச் செல்வது கூடாது. பிறரைத்
தீண்டக்கூடாது. இதனால் லட்சுமி கடாட்சம் குன்றி வறுமை உண்டாகும். ஆயுள் குறையும் என சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், தற்காலத்தில் பலர் இதை ஏற்றுக் கொள்வதில்லை.


செருப்பணிந்து பெண்கள் வாசல் தெளித்துகோலமிடுவது சரியானதா?
வீடு என்பது கோயில் போன்றது. வீட்டிற்குச் செய்யப்படுகின்ற எல்லாமே கோயிலுக்கு செய்யப்படுவதாக எண்ண வேண்டும். சாணம் தெளித்து கோலம் போடுவது என்பது, மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் நிகழ்ச்சியாகும். கிருமிகளை வீட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்ளும் ஆற்றலும் அதற்கு உண்டு. அரிசி மாவினால் தான் கோலம் போடவேண்டும். எறும்பு, பறவைகள் அதை உண்பதால் நமக்கு புண்ணியம் சேரும். இவ்வளவு தெய்வீகமான செயலைச் செருப்பணிந்தபடி செய்வது கூடாது.

ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

 
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
ஒவ்வொருவரும் பிறக்கும் போது அந்தந்த நட்சத்திரங்களின் அடிப்படையில் ஏதாவது ஒரு கிரகத்தின் தசையில் வாழ்வு தொடங்குகிறது. உதாரணமாக ஒருவர் பரணி நட்சத்திரத்தில் பிறந்தால் சுக்கிரதசையில் பிறந்திருக்கிறார். பொதுவாக சுக்ரதசை நல்லது என்றாலும், தொடர்ந்து வரும் தசாபுத்திகளான செவ்வாய், ராகு நடக்கும் காலத்தில் திருமண வயதை அடைவார். இதே பரணியில் பிறந்த பெண்ணை மணம் முடித்தால் இருவருக்கும் ஒரே தசாபுத்தி நடக்கும். இதற்கு "தசாசந்தி' என்று பெயர். நல்ல தசை நடந்தால் இருவருக்கும் நன்மை. கெட்ட தசை நடந்தால் இருவருக்கும் கஷ்டம் ஏற்படும். எனவே தான் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்பர். இது தவிர ஜாதகத்தில் கிரகபலம் அதிகமிருந்து, தசை சந்திப்பு இல்லாவிட்டால் ஒரே நட்சத்திரக்காரர்கள் திருமணம் செய்யலாம். சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.* கழுத்தில் சந்தனம் குங்குமம் வைக்கலாமா?
நெற்றி, கழுத்து, மார்பு, இரு புறங்கைகள் ஆகிய ஐந்து இடங்களில் சந்தனம் குங்குமம் திலகமிட்டுக் கொள்ளலாம். அவரவர்களின் சமயம் மற்றும் குடும்ப வழக்கப்படி மாறுபடலாம்.

Monday, October 8, 2012

வேண்டத் தக்க தறிவோய்நீ


வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.

பொழிப்புரை :

உயிர்களுக்குத் தேவையானது இது என்று அறிவோன் நீயே! மேலும் அவ்வுயிர்கள் எவற்றை வேண்டினாலும், அவையெல்லாவற்றையும் அருளுபவனும் நீயே! உன்னைக் காண விரும்பிய பிரமன், திருமால் என்பவருக்கும் அருமையாய் நின்ற வனாகிய நீ நீயாகவே விரும்பி, என்னையாளாகக் கொண்டனை. என் பொருட்டு நீ விரும்பி எதனை அருள் செய்தனை; அதனையே யானும் விரும்புவதல்லது, நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உளதாகு மெனில் அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பே யன்றோ?

குறிப்புரை :

வேண்டத் தக்கது - இரந்து பெறத்தக்க பொருள். `தாம் சாவ மருந்துண்ணார்` என்பதுபோலத் தமக்கு நன்மை பயப்பதனை யன்றித் தீமை பயப்பதனை ஒருவரும் இறைவன்பால் வேண்டார் எனினும் தீமை பயப்பதனைத் தீமைபயப்பது என்று அறியும் ஆற்றல் இலராகலின், இறைவன்பால் வேண்டத் தக்கது இதுவென்பதனையும் அவனே அறிதலன்றி, உயிரினத்தவருள் ஒருவரும் அறியார் என்க. ``வேண்ட`` என்றது. `தம் அறியாமையால் உயிர்கள் எவற்றை வேண்டினும்` என்றவாறு. தீமைபயப்பதனையும் இறைவன் மறாது தருதல்` அவற்றின்கண் பற்று நீங்குதற்பொருட்டாம். வேண்டும் அயன் மால் - உன்னை அளவிட்டறிய விரும்பிய பிரமனும் மாலும். இவர்க்கு அரியனாதலைக் கூறியது, தமக்கு எளிவந்தமையைப் புலப்படுத்தற்கு. எனவே, `அரியோயாகிய நீ` என ஒரு சொற்றன்மைப் படுத்து உரைக்கப்படும். ``பணி கொண்டாய்`` என்றதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. வேண்டி - எனக்கு உரியதாகக் கருதி. அருள் செய்தாய் - உணர்த்தியருளினாய். `அதுவே யானும் வேண்டினல்லால்` என மாற்றுக. வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் - பயிற்சிவயத்தால் ஒரோவொருகால் நான் உன்பால் இரக்கும் பொருள் வேறு ஒன்று இருக்குமாயின் அதுவும் உன்றன் விருப்பன்றே - அவ்வாறிருத்தலும் உன்றன் திருவருளே யன்றோ; என்றது, `வேண்டத் தக்கது அறிவோய் நீ என்பது முதலியவற்றை யான் அறிந்து உன் அருள்வழியே நிற்பேனாயினும், ஒரோவொருகால் பயிற்சி வயத்தால் அந்நிலையினின்றும் பிறழ்தலும் உனது திரோதான சத்தியின் செயலே` என்பதை விண்ணப்பித்து, `அக்குற்றத்தைப் பொறுத்து என்னை நின்பால் வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்` என வேண்டியதாம். இதன் இறுதிப் பகுதிக்கு மாதவச் சிவஞான யோகிகள் இவ்வாறே பொருள்கொள்ளுதல் காண்க. (சிவஞான சித்தி.சூ.10.3.)

பாடல் எண் : 7

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.

பொழிப்புரை :

எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடைய, எம் தலைவனே! மலையை ஒத்த பெரியோனே! என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட அப்பொழுதே, என்னுடைய உயிரையும், உடம்பையும், பொருள் எல்லாவற்றையும் உன்னுடையனவாக ஏற்றுக் கொள்ளவில்லையோ? அங்ஙனமாக இப்பொழுது ஒரு துன்பம் எனக்கு உண்டாகுமோ? உண்டாகாது. ஆதலின், எனக்கு நீ நன்மையே செய்வாய் எனினும், தீமையே செய்வாய் எனினும் இத்தன்மைக்குத் தலைவன் யானோ?

குறிப்புரை :

``அன்றே`` என்றதனை இறுதிக்கண் கூட்டி, அதன்பின், `ஆதலின், நின் திருவுள்ளத்திற்கு ஏற்றது செய்க` என்னும் கையறு கிளவியாகிய குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. இவ்வாறன்றி, வலியுறுத்தற் பொருட்டு, `அன்றே, என்னை ஆட்கொண்ட போதே` என இருகாற் கூறினார் என்றலுமாம். ஆவியாவது, சீவபோதம். உடைமையாவது, பிராரத்தமும், ஆகாமியமும் ஆகிய வினைகள். இறைவனுக்கு ஆட்பட்டார் பிற உடைமையை முன்னரே துறந்தமை யின், அவர்க்கு உடைமையாவன இவையன்றி இல்லை என்க. சிறுபான்மை எக்காரணத்தாலேனும் பிற உடைமை உளவாயின், அவையும், `உடைமை` என்பதனுள் அடங்கும். உடைமையை, `பொருள்` என்று கூறி, `உடல், பொருள், ஆவி மூன்றையும் இறைவன் பால் ஆக்குவிப்பவரே ஞானியர்` என்பது வழக்கு. `ஆவியும் உன்னுடையதாயினமையின், இப்பொழுது எனக்கென்று வரும் இடையூறு ஒன்று இல்லை` எனவும், `வருகின்ற இடையூற்றைத் தடுத்தும், வந்த இடையூற்றைப் போக்கியும் என்னை நான் காத்துக்கொள்ளுதலும், காவாது தீமையுறுதலும் ஆகிய செயல்களும் எனக்கு இல்லை; எல்லாவற்றிற்கும் உரியவன் நீயே` எனவும் கூறுவார், இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ? நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகம்` என்றும் அருளினார்.
``செய்வாய்`` என்றவை, `உன் விருப்பப்படி செய்தற்குரியை` என்னும் பொருளன. நன்று, பிழை என்னும் இரண்டனுள் தம்பால் செய்யப்படுவது ஒன்றேயாதலின், ``இதற்கு`` என ஒருமையாற் கூறப்பட்டது. நாயகம் - தலைமை; இஃது ஆகுபெயராய், `தலைவன்` எனப் பொருள் தந்தது.

 

Saturday, October 6, 2012

மனிதநேயப் பரிவு (திருமந்திரம் : -1857)

.4.6 அன்பே சிவம்
திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் உணரும் எளிமையும், இனிமையும் உடைய பாடல்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவர். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. திருவள்ளுவர் முதலிய அறநூலாசிரியர்களும் அன்பின் சிறப்பையும், இன்றியமையாமையையும் எடுத்துரைத்துள்ளனர். சைவர்களின் இறைவன் சிவன். அவன் யார்? அவன் இயல்பு எத்தகையது என்ற வினாக்களுக்குத் திருமூலர் தரும் விடை ஆழ்ந்த பொருட்சிறப்புடையது. அன்புதான் எங்கள் சிவன். சிவம் வேறு அன்பு வேறு என்பார் அறியாமை மிக்கவர்கள். இரண்டும் ஒன்றே என்று உணரும் உணர்வில் இறைமைப் பேறு வாய்க்கும்.அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
(திருமந்திரம் : -270)


என்பது அன்பின் சிறப்புரைக்கும் அரிய பாடல்.
2.4.7 மரமும் யானையும்
உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது. யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும், உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது.


மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே
(திருமந்திரம் : -2290)


இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி எழுந்தது. எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம் பெற்றுள்ளன.
2.4.8 மனிதநேயப் பரிவு
சைவம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறி. சிற்றுயிர்கள் இடத்தும் கருணை காட்டவேண்டும் என்று அது வற்புறுத்துகின்றது. இறைவன் உலகத்தையும், நுகர் பொருள்களையும் உயிர்கள் பெற்று இன்புறுவதற்கே படைத்தளித்தான். உயிர்களிடமிருந்து இறைவன் அன்பு ஒன்றைத் தவிர வேறு யாது ஒன்றும் பெற விரும்புவதில்லை. ஆனால் சமயவாதிகள், சடங்கு நெறியில் பற்றுக் கொண்டு நின்று, மனிதனின் பசிக்கு உணவிட விரும்பாது இறைவனுக்குப் படையலிட்டு மகிழ்கின்றனர். இறைவன் மனிதன் அளிக்கும் உணவையும், படையலையும் உண்டு மகிழ்கின்றானா என்றால் இல்லை. இறைவன் கவனத்திலும் கணக்கிலும் அவனுக்குப் படைக்கப்படும் படையல் இடம் பெறுவதில்லை. அவன் கணக்கில் இடம்பெற விரும்பினால் பசித்திருப்போருக்கு உணவு அளியுங்கள். அதுவே அவனைச் சென்றடையும் அரிய பெருநெறி என்று காட்டுகிறார் திருமூலர்.


படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே
(திருமந்திரம் : -1857)

(படமாடக் கோயில் = இறைவன் உருவத்தை ஓவியமாக எழுதி வைத்துள்ள இடம், பகவன் = இறைவன், நடமாடக் கோயில் நம்பர் = நடமாடும் கோயிலாகிய மனிதர்கள், ஆமே = போய்ச் சேரும்)
அது என்ன ‘நம்பர்க்கு’ என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது; ‘நம்பர்’ என்ற சொல் ‘நம்மவர், எம்மைப்போன்ற மனிதர்கள்’ என்ற பொருள் தரும். மனிதரின் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நடமாடும் கோயில்கள், நடமாடும் கோயில்களாகிய நம் போன்ற மனிதர்க்கு ஒன்று கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
2.4.9 வாழ்வியல் உண்மைகள்
இறைவனைச் சென்று அடைதற்கு உரிய எளிய வழி குருவை வழிபடுதலால் கிட்டும். பிறன் மனை நோக்காத பேராண்மையை ஆடவர் பெறல் வேண்டும். காக்கை தன் இனத்தைக் கூவி அழைத்துக் கலந்து உண்பது போல், சக மனிதர்களோடு கலந்து உண்ணல் வேண்டத்தக்கது. கற்றவர்களுக்கு மட்டுமே பேரின்பம் வாய்க்கும். கேள்விச் செல்வமே மனிதர்களுக்கு உற்ற துணை. மிகுந்த காமமும் கள்ளுண்டலும் கீழோர் என்று அடையாளம் காட்டும். விரும்பியவாறு ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றுக் கொள்வதற்குரிய மூச்சுப்பயிற்சி முறை, (வியப்பாக உள்ளதா? திருமந்திரம் பாடலில் இவ்விவரம் தரப்பட்டுள்ளது: பாடல் எண்-482) குழந்தைகள் குருடாய், ஊமையாய், முடமாய்ப் பிறப்பதற்குரிய காரண விளக்கம், திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமையாமை முதலான பல அரிய செய்திகளை வழங்கும் களஞ்சியமாகத் திருமந்திரம் அமைந்துள்ளது.

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்


என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே
(திருமந்திரம் : 81)

 

என்று குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது. தமிழில் ஆகமங்களின் சாரங்களைத் தொகுத்தளிப்பதே அவர் வருகையின் நோக்கம் என்பது உறுதியாகிறது.

 

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

(திருமந்திரம் : 147)

 

திருமந்திரம்; தந்திரங்களும் உள்ளீட்டுச் செய்திகளும்

 திருமந்திரம்; தந்திரங்களும் உள்ளீட்டுச் செய்திகளும்

தந்திரங்களின் உள்ளீட்டுச் செய்திகள்
தந்திர வரிசை


உள்ளீடு
ஒன்று
உபதேசம், யாக்கை நிலையாமை, கொல்லாமை
கல்வி, கள்ளுண்ணாமை
இரண்டு
சிவனின் எட்டுவகை வீரச் செயல்கள்
ஐந்தொழில்கள்; சிவனையும், குருவையும்
நிந்திப்பதால் வரும் துன்பங்கள்
மூன்று
யோகக் கலைகள், அஷ்டமாசித்திகள்
நான்கு
திரு அம்பலச் சக்கரம், நவகுண்டம், வயிரவ மந்திரம்
ஐந்து
இறைவனை அடைவதற்கு உரிய நூல் நெறிகள்:
சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்தி நிபாதம்
ஆறு
குருதரிசனப் பயன், திருநீற்றின் சிறப்பு, துறவு நிலை
ஏழு
ஆறு ஆதாரங்கள், சிவபூசை, குருபூசை, சமாதி அமைத்து வழிபடும் முறை, உயிர் இலக்கணம்
எட்டு
பக்திநிலை, முக்திநிலை
ஒன்பது நுண்பொருள் விளக்கம் (சூனியசம்பாஷணை)

மனிதனே தெய்வம்

நாம் பல பேர் கடவுளைத் தேடி அங்கும் இங்கும் அலைகிறோம். சிலர் காசி போகின்றார்கள்.சிலர் ராமேஸ்வரம் போகின்றார்கள்.. ஆனாலும் கடவுளை ஒழுங்காகப் பார்த்தார்களா என்றால் கண்டிப்பாக இல்லை. வெறும் சிலையைப் பார்த்துவிட்டு நல்ல தரிசனம் கிடைத்தது என்று சொல்பவர்களே அதிகம். இன்னும் சில பேர் அந்த கோவிலுக்கு போனேன் இந்தக் கோவிலுக்கு போனேன் ஆனாலும் கடவள் ஒன்றும் செய்யவில்லை. கடவுள் எங்கே இருக்கின்றார் என்று கடவுள் மேலேயே கோவித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், ஒன்றை மட்டும் எல்லோரும் எளிதாக மறந்துவிடுகிறார்கள். கடவுளுடைய உண்மையான இருப்பிடம் அதுவல்ல என்பதை. "கண்ணில் தெரியும் மனிதரில் எல்லாம் கடவுள் வாழ்கிறார். அவர் கருணை உள்ளவர்...." என்ற திரைப்பட பாடலில் கடவுள் எங்கே இருக்கிறார் என்பது அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. அருட்ப்ரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் கடவுளை " அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி" என்றே அழைக்கின்றார்.

இதை நம்பிரான் திருமூலரும்

படமாட பகவர்க்கொன்று ஈயில்
நடமாட நம்பர்க்கொன்று ஆகா
நடமாட நம்பர்க்கொன்று ஈயில்
படமாட பகவர்க்கு அதாமே.

என்று குறிக்கிறார்.

படம், மாடம் உள்ள கோவில்களில் உள்ள கடவுளுக்கு நாம் ஏதேனும் செய்தால் அதனால் நடமாடும் மனிதர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. ஆனால், நடமாடும் கோவில்களாக உள்ள மனிதர்களுக்கு ஒன்று செய்தால் அது எல்லாம் வல்ல அந்த பரம்பொருளுக்கே செய்ததாக அர்த்தம்.

ஆணவம், கன்மம், மாயை

ஆணவம், கன்மம், மாயை என்ற இந்த மூன்றும் மும்மலங்கள் என்று அழைக்கப்படுபவை. இதில் ஆணவம் அன்பது தேங்காயின் உள்ளே இருக்கும் ஓடு போன்றது. கன்மம் என்பது அந்த ஓட்டில் ஒட்டியிருக்கும் நார் போன்றது. வெளியே இருக்கும் மட்டை தான் மாயை.

இந்த உடல்.. இது ஒரு நாள் அழியக்கூடியது என்றாலும் நாம் இதை அழியாது நம்முடனே இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அதுபோல் நம்முடைய உடைமைகள். உறவுகள் .. அவையும் ஒரு நாள் அழியக்கூடியவை.. இதுபோல் நாம் எதையெல்லாம் அழியாமல் இருக்கக் கூடியவைகள் .. உண்மையானவைகள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோமோ .. அவையெல்லாம் உண்மையானவை என்று நம்மை நம்ப வைத்துக் கொண்டிருக்கும் ஒன்றே மாயை. நாம் முற்பிறவியில் செய்த, இப்பொழுது செய்து கொண்டிருக்கின்ற அனைத்து செயல்களின் விளைவுகளே கன்மம். என்னதான் நல்ல அறிவு இருந்தாலும் நல்ல மகான்களின் தொடர்பு இருந்தாலும் நல்ல வினைகள் செய்த புண்ணியம் இருந்தாலும் நான், எனக்கு என்ற எண்ணம் நம்மை விட்டு போகாது. நான் இதை செய்வேன்.. நானே செய்கிறேன்... எனக்கு தெரியும் .. என்ற அகங்காரம் நம்மை விட்டுப் போகாது. எல்லாம் கடவுள் செயல் என்று நாக்கு சொன்னாலும் மனதிற்குள் நான் நன்றாக இன்றைக்கு பேசினேன், நன்றாக கட்டுரை எழுதி இருக்கிறேன் என்றே நினைப்பு ஓடும். இதுவே ஆணவம்.

ஆணவம், கன்மம், மாயை என்ற இந்த மூன்றும் இருக்கும் வரை ஆன்மா தன்னிலை விளக்கம் அடைய முடியாது. ஆன்மாவும் பரம்பொருளைப் போன்ற ஒன்று தானே.. பின் ஏன் ஆன்மாவால் தானே இந்த மலங்களில் இருந்து வெளியே வர முடியவில்லை? என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது. இதற்கு தான் திருமூலர் ஒரு நல்ல பதிலைத் தருகின்றார்.

பஞ்சு இருக்கின்றது.. சூரிய காந்த கல் இருக்கின்றது.. இரண்டையும் ஒன்றாக வைத்தால் பஞ்சில் நெருப்பு பற்றிக் கொள்வதில்லை. அதே சமயம் சூரியனை நோக்கி சூரிய காந்த கல்லை வைத்து அதன் கீழ் பஞ்சை வைத்தால் பற்றிக் கொள்கின்றது. அது போல் இறைவன் என்ற சூரியனை துணைகொண்டால், சூரிய காந்த கல் என்ற ஆன்மா, மலம் என்ற பஞ்சை எரித்துவிடும். என்ன ஒரு அருமையான விளக்கம். கீழே உள்ள பாடலைப் பாருங்கள்.சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே

இனிமையாக பேசுவதே கடவுளை வணங்குவது போலத்தான்

இனிமையாக பேசுவதே கடவுளை வணங்குவது போலத்தான்
கடவுளை வணங்குவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. பெரிய பூஜைகள் பண்ணுவது, புனித நதிகளில் நீராடுவது, நீண்ட பயணங்கள் மேற்கொள்வது என்று பல வழிகளில் நாம் கடவுளை வணங்க அல்லது அவரின் அன்புக்கு பாத்திரமாக அல்லது எல்லோரும் சொல்வதுபோல் புண்ணியம் பெற ஏதேதோ செய்கிறோம் ... விரும்பியும்.. விரும்பாமலும்.. ஆனால் நம்முடைய திருமூலர் பெருமான் சொல்லுகின்ற மிக எளிமையான வழியைப் பாருங்கள்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

நாம் ஒரு பெரிய மனிதரைப் பார்க்கப் போகும்பொழுது வெறும் கையோடு போவதில்லை.. ஏதேனும் பழங்கள் அல்லது மாலை கொண்டு செல்கிறோம்.. ஏன் குழந்தைகளைப் பார்க்கப் போகும்பொழுது கூட ஏதேனும் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டுதான் போகிறோம். அது போல கடவுளைப் வணங்கப் போகும்பொழுது அது சிறிய கோவிலாக இருக்கலாம் அல்லது பெரிய கோவிலாகவும் இருக்கலாம் , சும்மா வெறும் கையோடு போகக்கூடாது. அதற்காக தேங்காய், பழம், மாலை எல்லாம் கொண்டு போக வேண்டும் என்று திருமூலர் சொல்லவில்லை. குறைந்த பட்சம் ஒரு இலையை கொண்டு போங்கள் என்கிறார். என்ன இலையா? என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. ஆம் இலை தான்.. பிள்ளையாருக்கு அருகம்புல்..முருகனுக்கு அத்தி.. சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, அம்மனுக்கு வேம்பு என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு இலை உண்டு.. அதையாவது கொண்டு சென்று வணங்குங்கள் என்று மூலர் பெருமான் கூறுகிறார்.

சரி.. அது என்ன பசு? வாயுறை ? அடுத்த படியாக அதே பாடலின் இரண்டாம் அடியில் அவர் சொல்லுவதை பாருங்கள்..
நாம் பார்க்கின்ற மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்களின் மீது அன்பு செலுத்த சொல்கின்றார். பசுவிற்கு ஒரு வாய் புல்லாவது கொடுங்கள் என்கிறார். நம்முடய மனதில் மற்ற உயிர்கள் மீது அருள் இல்லைஎனில் எப்படி கடவுளுக்கு நம் மீது அருள் வரும்? அதனால் நம்மோடு வாழ்கின்ற நாம் பார்க்கின்ற வாயில்லா ஜீவன்கள் மீது அன்பு செலுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை ஒரு கைப்பிடி புல்லையாவது கொடுங்கள் என்கிறார் நம்பிரான் திருமூலர்.
"எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி வாழ அருள் செய்வாய் பராபரமே" - தாயுமானவர்

நாம் கண்ணில் காண முடியாத ஜீவராசிகளைப் பற்றி யோசிக்க வேண்டாமா? உண்ணும் பொழுது ஒரு ஓரமாக சிறிதளவு உணவை ஒதுக்கி வையுங்கள்.. அல்லது உண்ணுவதற்கு முன் கொஞ்சம் உணவை வெளியே தாழ்வாரத்தில், முற்றத்தில், அல்லது வாசலில் எங்காவது வைத்துவிட்டு உண்ணுங்கள்.. அந்த ஒரு பருக்கையாவது கண்ணுக்கு தெரியாத ஜீவ ராசிக்கோ அல்லது குறைந்தது காகம், அணில், எறும்பு என்று எதாவது ஒரு ஜீவனுக்கோப் போய் சேரும்.

இந்த பாடலின் கடைசி வரியில் நம் திருமூலர் அதையும் பேசுகிறார். சக மனிதர்களுக்கு பொன் பொருள் கொடுத்து காப்பாற்ற வேண்டாம். அவர்களுக்கு வேண்டியதை செய்து அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டாம்.. வேறு என்ன தான் செய்வது? இனிமையாகப் பேசினாலே போதும் .. இனிமையான நல்ல சொற்களுக்குதான் இன்று பஞ்சமாய் இருக்கின்றது. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார் நம் சித்தர் பெருமான். கொடும் சொற்களைப் பேசி மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் இனிமையான வார்த்தைகளை பேசினாலே போது அதுவே கடவுளுக்கு பக்கமாக செல்லும் வழி என்று நான்காம் அடியில் சொல்லுகின்றார் திருமூலர்.
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" - திருவள்ளுவர்

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!

ந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அழகானவை; அர்த்தமுள்ளவை; மங்கலமானவை. திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் மூலம் ரிக் வேதமே. இந்துத் திருமணச் சடங்குகளில் இடம் பெறும் மந்திரங்கள் பெரும்பாலும் இறையைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைத் தாங்கியதாகவும், தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன. ஆனால் அந்தணர்கள் இந்த வடமொழி மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதனால் நமக்குத்தான் அதன் உட்பொருள் சரிவரப் புரிவதில்லை. நான் அறிந்த வரையில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. ‘கண’ என்றால் குழு. ‘பதி’ என்றால் தலைவன். எனவே கணபதி என்கிற மனிதக் குழுக்களுக்குத் தலைவனை வணங்கி, ‘கணானாஹந்த்வா கணபதிம்’ என்கிற மந்திரத்தில் துவங்கி கணபதி பூஜை நடககிறது. கோள்களின் சுழற்சித் தாக்கம் பூமியைப் பாதிக்கிறது என்கிற பட்சத்தில் மனிதர்களின் வாழ்வில் அவற்றின் தாக்கம் இல்லாதிருக்குமா? எனவே அடுத்ததாக நவக்கிரக பூஜை. பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்.

அடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம். இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல். அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது. மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக!’’ பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’பின் கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்: ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!’’ பின் மாப்பிள்ளையிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறார்.

மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை, ‘‘உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன். இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!’’ அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’


இதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’ பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள். பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.

மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்தபதி’ எனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரம்: ‘‘ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன். முதலடி நிறைவான உணவுக்காக. இரண்டாம் அடி எல்லாவிதமான செல்வங்களுக்காகவும். மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக. நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக. ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக. ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக. ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக. நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக! என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவி‌தை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ அ‌தையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல்! என்னுடன் நட்பாக இருப்பாயாக! இன்சொல் ததும்பும் பெண்ணே, வா... செல்வமும் நன்மக்களும் பெறுவோம்!’’

அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்: ‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள். இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்! தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்! இந்திரனே! இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக! இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக! சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக! ஓ, மணமகளே! உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!’’’

மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ’’ சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான். இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’

பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்: ‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’ பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’

பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’ இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள். வாழி நலம்!

Thursday, October 4, 2012

பக்தர்கள் பலருக்கு ஞானம் தந்த வேலவன்,

சூரபத்மாதியரின் வதத்திற்கென்றே தோன்றிய வன் முருகப் பெருமான். எனினும், அவன் அரங்கேற்றிய ஞானத் திருவிளையாடல்கள் எண்ணிறந்தன.

சூரனின் ஆணவத்தை மட்டுமே அழித்து, அவனை சேவலாகவும் மயிலாகவும் ஏற்று என்றென்றும் தன்னுடனேயே வைத்துக்கொண்ட அளப்பரிய கருணையை என் சொல்வது?

பிரணவப் பொருளறியான் படைப்புக் கடவுளா என வெகுண்டு, பிரம்மனை சிறையிலடைத்து, "உமக்கு பொருள் தெரியுமா?' என கேட்ட தந்தைக்கே குருவான சுவாமி நாதனைப் புகழ சொற்களேது!

அகத்தியர் தமிழ் தந்தாரென் பர். அவருக்குத் தமிழ் தந்தவன் முருகன். பொதிகை மலையில் அகத்தியர் தவம் செய்தபோது, ஒருநாள் மாலை வேளையில் தெய்வீக மணம் வீசியது. எதிலிருந்து அந்த மணம் வருகிறதென்று அறியாத அகத்தியர் முருகப் பெருமானை பிரார்த் திக்க, அவனருளால் அது தெய்வத் தமிழ் மணம் என்று சிந்தை தெளிந்தார். ஆறுமுகனையே ஆசானாகக் கொண்டு ஓதியுணர்ந்து இலக்கணம் செய்து தமிழை வளர்த்தார். முருகப் பெருமான் செந்தமிழ் நாட்டை அகத்தியருக்குக் கொடுத்தான் என்றும்; அதை அகத்தியர் பாண்டியனுக்கு வழங்கினாரென்றும் திருநெல் வேலித் தலபுராணம் கூறுகிறது.

சிவபூஜை செய்யும்போது சித்தத்தை வேறிடம் செல்ல விட்டார் நக்கீரர். அதனால் சிறைப்பட்டார். திருமுருகாற்றுப்படை பாடி முருகன் அருளால் விடுபட்டார்.

ஔவைக்கும் முருகனுக்கும் நடந்த தமிழ் விளையாட்டு நாடறிந்த ஒன்று.

"சும்மா இரு' என்று அருணகிரிக்கு உபதேசித்து, அவரை திருப்புகழ் அருளச் செய்து நீடுபுகழ் வழங்கியவன் முருகன்.

கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு "திகடச் சக்கர' என அடியெடுத்துக் கொடுத்து, அதற்கு விளக்கம் சொல்ல தானே புலவனாக வந்து கந்தபுராணத்தை அரங்கேறச் செய்ய அருளியவன் முருகன்.

குமரகுருபரர், தேவராய சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் என பலருக்கு அருளி தரிசனம் தந்தவன் முருகன்.

இவ்வாறு பக்தர்கள் பலருக்கு ஞானம் தந்த வேலவன், வேண்டுவோர் வினை தீர்த்து வாழ வைக்கும் வள்ளலாகவும் திகழ்கிறான்.

அவன் கோவில்கொண்டுள்ள இடங்ளெல்லாம் அருள் மன்றங்களே! அத்தகைய சிறப்புமிக்க முருகன் தலங்களில் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணிகை ஆகிய ஆறு படைவீடுகள் தனித்தன்மை வாய்ந்தவையாக சிறப் பிக்கப்படுகின்றன. இந்த தலங்களைச் சென்று ஒருமுறையேனும் தரிசித்து வரவேண்டியது முருக பக்தர்களின் கடமையாகும்.

ஒரே கடவுளுக்கு பல உருவங்கள் ஏன்?

ஒரே கடவுளுக்கு பல உருவங்கள் ஏன்? ஒரு மனிதன் ஒரு தந்தைக்கு மகனாகப் பிறக்கிறான். பின்னர் உடன்பிறந்தோருக்கு அண்ணனாகி றான்; தம்பியாகிறான். அவனே ஒரு பெண் ணுக்கு கணவனாகிறான். பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான். உறவுகளுக்கு பெரியப்பா, சித்தப்பா, மாமன், மைத்துனன் என பல உறவு களாகிறான். ஆனால் அந்த மனிதன் ஒருவனே. அதுபோலவே நம் ஆத்ம திருப்திக்கு இறைவனை பல வடிவங்களில் வழிபடுகிறோம். மனநிம்மதி பெறுகிறோம். இத்தகைய நிம்மதியை- மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது பக்தர்களுக்கு முதலில் சோதனைகள் வரலாம்; துன்பங்கள் தொடரலாம். ஆனால், "நீயே சகலமும்; உன் பாதமே அடைக்கலம்' என்று சரணடைந்துவிட்டால், நம்மைப் பற்றியுள்ள இடர்களனைத்தும் இல்லாமல் போய்விடும். துயரங்கள் தொலைதூரம் ஓடும்.

நோயற்ற வாழ்வு, சகல சௌபாக்கியங்கள், மணப்பேறு, மகப்பேறு என எல்லாம் அள்ளித் தரும்- ஓரிடத்தில் குடிகொண்டுள்ள அறுபடை வீட்டு முருகனை வணங்கி திருவருள் பெறுவோம்!

அமாசோம விரதம்-

-அமாசோம விரதம்-

சூரியனும் சந்திரனும் இணையும் நாளான அமாவாசையன்று செய்யப்படும் வழிபாடுகள், தவம் போன்றவை நல்ல பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறும். அன்று மறைந்த நம் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் தருவது மிகவும் போற்றப்படுகிறது.

அமாவாசையன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பாகப் பேசப்படுவதற்குக் காரணம், சூரிய சந்திர கிரணங்களின் உந்துதலால் கடலின் ஆழ்பகுதியில் அமிழ்ந்திருக்கும் சங்கு, பவளம் மற்றும் கடல்வாழ் ஜீவசக்திகள் மேலே வருகின்றன. அப்போது கடல்நீருக்கு ஒருவித சக்தி ஏற்படுவதால், அந்த நீரில் குளிக்கும்போது தோஷங்கள் விலகும்; உடல் நலம்பெறும்.

அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமே அரச மரம்.

மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு.

அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும்பொழுது அதனிடமிருந்து வெளிவரும் புகை பல நோய்களை நீக்கவல்லது. இது ஹோமம் செய்யும் இடத்தை சுத்தம் செய்வதுடன்,

அங்குள்ளவர்களின் உடல்நலத்தையும் சீர்படுத்துகிறது. இம்மரத்தை அச்வத்தம் என்றும் கூறுவர். அச்வத்தம் என்ற சொல்லிற்கு "இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை' என்று பொருளாகும். கபம், பித்தம் போன்ற நோய்களையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களையும் போக்கக்கூடிய குளிர்ச்சி தரும் மரம் அரச மரமாகும். அரச மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது; தொடக்கூடாது. ஆனால், சனிக்கிழமை மட்டும் அரச மரத்தைத் தொட்டு வழிபடலாம். அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்திவாய்ந்த ஓசோனின் தாக்கம் அதிகமிருக்கும். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்கில விருத்தி அதிகமாகி குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும்.


அரச மரத்தை ஞாயிறன்று வலம் வந்தால் நோய் அகலும்; திங்களன்று வலம் வந்தால் மங்களம் உண்டாகும்; செவ்வாய்- தோஷங்கள் விலகும்; புதன்- வியாபாரம் பெருகும்; வியாழன்- கல்வி வளரும். வெள்ளி- சகல சௌபாக்கியங் களும் கிட்டும்; சனி- சர்வ கஷ்டங்களும் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும்.

மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும்; ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும்; ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும்; பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும்; நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை யும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து பின்வரும் சுலோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

"மூலதோ பிரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினி
அக்கிரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம:'

இந்த சுலோகத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வரும்போது, தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின்முன் சமர்ப்பிக்க வேண்டும். நூற்றியெட்டு சுற்றுகள் முடிந்ததும் அப்பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்கவேண்டும். இந்த வழிபாட்டை அமாசோமவார விரதமென்று கூறுவர். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்; ஆடைகள் வாங்கி வழங்கலாம்; மூத்த சுமங்கலிகளின் கால்களில் வணங்கி ஆசிர்வாதம் பெறலாம்.

 

குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண் களுக்கு விரைவில் திருமணமும், சுமங்கலிகளுக்கு கர்ப்பப்பைக் கோளாறு நீக்கமும் உடல்நலமும், வயதானவர்களுக்கும் ஆடவர்களுக்கும் பித்ருசாப தோஷ நிவர்த்தியும் தருவது அரச மர வழிபாடு.

அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம்பெறுவோம்.

ஸ்ரீ ஆயுர்தேவி

கிருதயுகத்திலும் திரேதாயுகத்திலும் வீட்டுக்கு வீடு பூஜிக்கப்பட்டு வந்த ஸ்ரீஆயுர்தேவியை- சித்தபுருஷர்கள் வழிபடும் அன்னையை நவராத்திரியில் வணங்குவது மிகவும் விசேஷம். ஒன்பது கரங்களைத் தாங்கிய பராசக்தியானவள் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண் கரங்களிலேந்தி, ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகக் கொண்டு அருள் பாலிக்கின்றாள். இந்த தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்துத் துன்பங் களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு முழுமையான வழிபாடாகும்.

ஸ்ரீஆயுர்தேவியின் ஒன்பது கரங்களும் நவகிரக தத்துவங்களை விளக்குகின்றன. அன்னவாகனத்தைக் கொண்டவள் ஆயுர்தேவி.

அவள் திருவடியில் இரண்டு சிம்மங்கள் பீடங்களாக அமரும் பேறு பெற்றுள்ளன.

மனிதனுடைய தேகத்திலும் நவகிரகங்கள் ஆட்சி கொண்டுள்ளன. ஆத்மா இதயக்கமலத்தில் சர்வேஸ்வரனாக வீற்றிருக்கிறது. இதனால் உடலைக் கோவில் என்கிறோம். சித்திர குப்தர் இந்த தேவியின் ஆக்ஞைப்படி, கர்மவினைகளையும், ஆயுளையும் நிர்ணயிப்பவர். இவர் இறைவனின் அற்புதப் படைப்பு. ஒவ்வொரு மனிதனும் தினமும் இரவில் உறங்கும்முன் அன்றைய செயல்களை சித்திரகுப்தரிடம் சமர்ப்பித்து தவறுகளுக்கு வருந்தி, நற்செயலுக்கு நன்றி கூறி, பிறகே உறங்கவேண்டும்.

ஸ்ரீசித்திரகுப்தர் வெறும் கர்மக் கணக்கு எழுதுபவர் என நினைப்பது கூடாது. மனிதனின் ஆத்மவிசாரத்திற்கு வித்திடுபவர் இவரே. ஸ்ரீஆயுர்தேவியின் திருவடிக்கருகே இவர் அமர்ந்திருக்கிறார்- தலைப்பாகையுடன் கையில் ஏடு, எழுத்தாணியோடு.

ஆயுர்தேவி தனது வலது முதல் கரத்தில் கயாசுர மகரிஷியைத் தாங்கியிருக்கிறாள். இந்த தேவியை உபாசனை செய்து உன்னத நிலையை அடைந்தவர் ஸ்ரீகயாசுர மகரிஷி.

நவராத்திரியில் வரும் பிரதமை திதியில், இரண்டு வயது நிறைந்த பெண் குழந்தையை அலங்கரித்து, ஆபரணம் இட்டு, ஸ்ரீமாதேவியாக வரித்து வணங்க வேண்டும். இப்படிச் செய்வதால் தேவியின் அருட்தன்மை பன்மடங்காகப் பெருகும். ஸ்ரீமாதேவியை மனதால் தியானித்து பிரதமை திதியன்று ஏதேனும் ஒரு கோவிலில் மாக்கோலமிட்டு, மல்லிகைப் பூவை பெண்களுக்கு அளித்து வழிபட்டால் வேண்டும் வரம் பெறலாம்.


 

இமயமலைப் பகுதியிலும், ஸ்ரீமஹா அவதூத பாபா த்ரைலிங்க சுவாமி போன்ற அற்புத மகான்கள் தினமும் வழிபடுகின்ற பனிமலைக் குகையிலுள்ள ஸ்ரீதாராதேவி ஆலயத்திலும் ஸ்ரீஆயுர்தேவிக்கு சந்நிதி அமைந்துள்ளது என்றும்; குரு அருள் பெற்றவர்களால் மட்டுமே காண இயலும் என்றும் உபதேசித்திருக்கிறார் அகத்திய மகரிஷி.

ஸ்ரீஆயுர்தேவியை சாதாரணமாகவும், கலசம் வைத்தும் வழிபடலாம். நவராத்திரியில் கலச பூஜை மிகவும் விசேஷமானதாகும். வெள்ளிக் கலசம், வெண்கலக் கலசம், செப்புக் கலசம், மா அல்லது பலா மரத்திலான மரக் கலசம் ஆகியவையே பூஜைக்கு உகந்தவையாகும். கலசத்தை தூய்மைப்படுத்தி மஞ்சள், சந்தனம், குங்குமமிட்ட முழுத்தேங்காயை மேலே வைத்து, மாவிலை, பூ சேர்த்து, பூர்ணகும்பக் கலசமாய் அமைக்கவேண்டும்.

சுத்தமான நீர் அல்லது கங்கா நீர், புனித நதி நீரை, மூன்று முறை கொதி வந்ததும் ஆறவைத்து கலசத்தில் ஊற்றவும். வெட்டிவேர், துளசி இவற்றுடன் சிறிதளவு (பொடி செய்த) கடுக்காய், ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை கலச நீரில் சேர்க்கவும். நுனி வாழை இலையை கிழக்கு நோக்கி வைத்து பச்சரிசி பரப்பி, அதில் வலது மோதிர விரலால் "உ' "ஓம்' என எழுதி பின் அரிசிமேல் கலசத்தை வைக்க வேண்டும்.

கலசத்திற்கு பட்டு அல்லாத மஞ்சள் வஸ்திரம் சாற்றலாம் (நார்ப்பட்டு). நைவேத்திய மாக பொன்நிற (மஞ்சள்) பதார்த்தங்கள், சர்க்கரைப் பொங்கல், குங்குமப்பூ சேர்த்த பால் கலந்த கேசரி (கேசரி பவுடர் தவிர்க்கவும்) மஞ்சள் நிற வாழைப்பழங்கள், மஞ்சள் பிள்ளையார் வைத்து விநாயக பூஜையுடன் தேவி பூஜை தொடங்குகிறது. இது முறைப்படி கொஞ்சம் விரிவாக இருப்பதால், எல்லாருமே செய்ய வேண்டுமென்கிற நோக்கத் தில் எளிய நாமாவளிகள் மட்டும் வழங்கப் பட்டுள்ளன.

ஸ்ரீ ஆயுர்தேவியை நினைத்து தியானிக்க:

ஜயாம்ப ஜய ஸர்வாணி ஜயகௌரீ ஆயுர்தேவி
நமோ நமஸ்தே சிவகாம ஸுந்தரி
நமோ நமஸ்தே அருணாசலேச்வரி
நமோ மஹாகௌரீ நமோ நமஸ்தே.
ஆயுர்தேவியின் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
சுபாயை தேவ சேனாயை
ஆயுர்தேவ்யை ஸ்வாஹா.
24, 36, 64, 108 முறை ஜெபிக்கவும்.
ஸ்ரீஆயுர்தேவி காயத்ரி
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
பராசக்த்யை ச தீமஹி
தந்நோ ஆயுர் தேவ்யை ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை 24, 36, 64, 108 முறை ஜெபிக்கவும்.

ஆயுர்தேவியின் படம் கிடைத்தால் வைத்துப் பூஜிக்கவும். அல்லது தேவியை மனதில் நினைத்து மேற்கண்டவற்றைத் துதிக்கவும். அனைவரும் வழிபடலாம். அவரவர்களுக்குத் தெரிந்த சுலோகம் அல்லது பாடல் சொல்லியும் வழிபடலாம். இயன்றவர் அன்னதானம் செய்யலாம். ஒருவருக்கேனும் செய்வதும் தவறில்லை. அன்னதானத்தால் பலன் பன் மடங்காகிறது. ஸ்ரீஆயுர்தேவியை எம்முறையில் பூஜித்தாலும் உண்மையான மனதுடன் வழிபட்டால் ஸ்ரீ ஆயுர்தேவி மகிழ்ச்சியுடன் அருள்புரிகின்றாள்.

ஸ்ரீஆயுர்தேவி நாமாவளிகள்

ஓம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வர்யை நம:

ஓம் ஸ்ரீ அன்னவாஹின்யை நம:

ஓம் ஸ்ரீ அத்புதசாரித்ராயை நம:

ஓம் ஸ்ரீ ஆதிதேவ்யை நம:

ஓம் ஸ்ரீ ஆதிபராசக்த்யை நம:

ஓம் ஸ்ரீ ஈஸ்வர்யை நம:

ஓம் ஸ்ரீ ஏகாந்த பூஜிதாயை நம:

ஓம் ஸ்ரீ ஓங்கார ரூபிண்யை நம:

ஓம் ஸ்ரீ காலபைரவ்யை நம:

ஓம் ஸ்ரீ கிருதயுக சித் சக்தியை நம:

ஓம் ஸ்ரீ சக்ரவாஸின்யை நம:

ஓம் ஸ்ரீ சித்புருஷ தத்வாயை நம:

ஓம் ஸ்ரீ சிவசக்தி ஐக்யஸ்வரூபிண்யை நம:

ஓம் ஸ்ரீ லலிதா பரமேஸ்வர்யை நம:

ஓம் ஸ்ரீ திரிமூர்த்தி ஸ்வரூபிண்யை நம:

ஓம் ஸ்ரீ நவகர ரூபிண்யை நம:

ஓம் ஸ்ரீ நவமுத்ரா ஸமாராத்யாயை நம:

ஓம் ஸ்ரீ பத்மாஸனஸ்தாயை நம:

ஓம் ஸ்ரீ யோகாம்பிகாயை நம:

ஓம் ஸ்ரீ துர்க்கா, லஷ்மி, சரஸ்வதி நிஷேவிதாயை நம:

ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபிண்யை நம:

ஓம் ஸ்ரீ வேதமந்திர, யந்த்ர சக்த்யை நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம், அபாயை நம:

ஓம் ஸ்ரீ சிவகுடும்பின்யை நம:

ஓம் ஸ்ரீ அருணாசல மேருஸ்தாயை நம:

ஓம் ஸ்ரீ கரபீட வரப்ரசாதின்யை நம:

ஓம் ஸ்ரீ ஆயுர்தேவ்யை நம:

ஆயுர்தேவியை அற்புதமான இந்த நாமாவளி களால் மஞ்சள்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்திட, சர்வமங்கள சௌபாக்கியங்களும் கிட்டும்.