Sunday, May 20, 2012

குரு பக்தி

தான் பெற்ற பிள்ளைகளை விட, சீடர்கள் மீது குருநானக் மிகுந்த அன்பு செலுத்தினார். இது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
ஒரு மகன் சொன்னான், ""பெற்ற பிள்ளையை விட சீடர்களை உயர்வாக மதிக்கிறார் என்றால், அதில் ஏதோ சூட்சுமம் இருக்க வேண்டுமே! அதைக் கண்டுபிடியுங்கள்,'' என்று.
எவ்வளவோ ஆய்வு செய்து பார்த்தார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தையிடமே கேட்டு விடுவதென முடிவு செய்தார்கள்.
""அப்பா! நீங்கள் செய்வது முறையா? பெற்ற பிள்ளைகளை விடவா சீடர்கள் உங்களுக்குப் பெரிதாகி விட்டார்கள்!
அப்படியென்ன உங்களுக்கு நாங்கள் வேண்டாதவர்களாகி விட்டோம்!'' குருநானக் புன்னகைத்தார். பதிலேதும் சொல்லாமல், ஒரு கிண்ணத்தைத் தூக்கி அருகிலிருந்த சாக்கடையில் எறிந்தார். கிண்ணம் மூழ்கி விட்டது. ""அதை எடுத்து வாருங்கள்,'' என்று கட்டளையிட்டார்.
ஒரு வேலைக்காரனை விட்டு அதை எடுத்து வந்து கொடுத்தார்கள் பிள்ளைகள்.
அந்தக் கிண்ணத்தை திரும்பவும் சாக்கடையில் எறிந்தார்.
"இவருக்கு என்னாயிற்று' என்று பிள்ளைகள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு சீடரை அழைத்து அதை எடுத்து வரச்சொன்னார்.
அவர் சற்றும் யோசிக்கவில்லை. சாக்கடைக்குள் குதித்தார். கிண்ணத்தை தேடி எடுத்து கழுவி, குருவின் கையில் ஒப்படைத்தார்.
இப்போது குருநானக் ஏறிட்டு பார்த்தார். பிள்ளைகள் அங்கே இல்லை.

என்னை விட்டால் உயர்ந்த பக்தன் யாரு


என்னை விட்டால் இந்த ஊரில் <உயர்ந்த பக்தன் யாரு! தூக்கத்தில் கூட "கிருஷ்ணா, ராமா' என்று தானே கத்துகிறேன்,'' என்ற ஆணவம் சிலரிடம் இருந்தது. அவர்கள் தான் நாரதர், பிரகலாதன், திரவுபதி, அர்ஜுனன் ஆகியோர் இந்த நான்கு பேருக்குமே பாடம் புகட்ட கிருஷ்ணர் எண்ணினார். அர்ஜுனனை தேரில் ஏற்றிக் கொண்டு, காட்டுவழியே போய்க் கொண்டிருந்தார். வழியில், ஒரு மகரிஷி கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார்.
""கண்ணா! கமண்டலம் ஏந்த வேண்டிய இந்த மகான் ஏன் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறார். உனக்கு ஏதாச்சும் தெரியுமா?''
""எனக்கென்ன தெரியும்! நானும் உன்னோடு தானே வருகிறேன். இப்போது அது தெரிந்து நமக்கென்ன ஆகப்போகிறது. போவோம் நம் வேலையைப் பார்த்துக்கொண்டு..'' என அதில் அக்கறையே இல்லாதவர் போல் நடித்தார் அந்த மாயவன்.
அர்ஜுனன் அடம் பிடிக்கவே, தேரை நிறுத்தி விட்டு அவர் அருகே சென்று வணங்கினார்கள்.
""மகரிஷி! சாந்தமூர்த்தியான தாங்கள் தாங்கள் கத்தியைத் தீட்டும் நோக்கமென்ன!'' என்றனர்.
""அதுவா! நாரதன்னு ஒருத்தன் இருக்கிறானே! அவன் என் சுவாமி தூங்கும் நேரம் கூட பார்க்காமல், அவன் இஷ்டத்துக்கு வைகுண்டத்துக்குப் போய் "நராõயணா நாராயணா' என்று கத்தி தூக்கத்துக்கு இடைஞ்சல் செய்கிறான். அவனை குத்தப் போகிறேன்,'' என்றவரிடம், ""ஓஹோ!'' என்ற கண்ணன் கிளம்பத் தயாரானார்.
அவரை மகரிஷி நிறுத்தினார்.
""இன்னும் கேள்! பிரகலாதன்னு ஒரு பொடியன். எங்க சாமி எங்கேயும் இருக்கிறார்னு சொல்லி, எல்லா இடத்திலும் அவரை நிற்க வைத்து பதறடித்தான்.
ஒரு தூணுக்குள் இருப்பதாகச் சொல்லி அவரை மூச்சு விட முடியாமல் செய்தான். இப்படி அவரைத் துன்பப்படுத்திய அவனுக்கும், இந்தக் கத்தி பதில் சொல்லப்போகிறது,'' என்றவரிடம் "கிளம்பட்டுமா!'என்றார்கண்ணன்.
""இன்னும் கேளுங்க!'' என்று அவர்களை நிறுத்திய மகரிஷி, ""திரவுபதின்னு ஒருத்தி. அவளது சேலையை துச்சாதனன் பறித்தான். ஒன்றுக்கு அஞ்சு புருஷன் உள்ள அவள் புருஷன்மாரை கூப்பிட வேண்டியது தானே! கண்ணனைக் கூப்பிட்டாள். அவன் கை வலிக்க புடவை தந்தான். அவளும் என் கையில் சிக்கினால்...,'' என்று பற்களைக் கடித்த அவரை சாந்தம் செய்ய முயன்றான்கண்ணன்.
""இன்னும் கேளுங்கப்பா!'' என்றவர், ""இன்னும் ஒருத்தன் இருக்கிறானே,'' என்றார்.
""அட...சீக்கிரம் சொல்லுங்க சாமி! உங்க பட்டியல் நீண்டுகிட்டே போகுது. எங்க வேலையைப் பார்க்க போகணும்,'' என்ற கண்ணனிடம், ""அர்ஜுனன்னு ஒரு பயல் இருக்கிறானாம். அவனை இதுவரை நான் பார்த்ததில்லை. அவன் என் பரமாத்மாவையே தேர் ஓட்ட வைத்திருக்கிறான். உலகத்துக்கே எஜமான், அந்தச சிறுவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறார். கண்ணனையே வேலைக்காரனாக்கியவனுக்கு காத்திருக்கிறது கத்திக்குத்து,'' என்று முடித்தார்.
""பார்த்தாயா அர்ஜுனா! நீ மட்டுமே என்னிடம் பக்தி கொண்டதாக எண்ணாதே! இவரைப் போன்ற ஆயிரம் பக்திமான்கள் உலகில் இருக்கிறார்கள். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு எல்லையே கிடையாது,'' என்றார் கண்ணன்.
அர்ஜுனன் தன் அறியாமையை எண்ணி தலை குனிந்தான்.

வாரியாரின் சொற்பொழிவில் இருந்து...மான் போல மானம் வேண்டும்!


உத்தரபிரதேசத்தில் கயா என்ற ÷க்ஷத்திரம் இருக்கிறது. இங்கே தர்ப்பணம் செய்வதற்காக செல்பவர்கள், தங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒன்றை விட்டு வருவது வழக்கம்.
ஒரு தம்பதியர் அந்த ஊருக்குப் போனார்கள். தர்ப்பணம் செய்யும் போது, பண்டா (குருக்கள்) அவர்களிடம், ""நீங்க எதை விடப்போறீங்க?'' என்று கேட்டார்.
கணவனுக்கு எதையும் விட மனமில்லை, யோசித்துக் கொண்டே இருந்தார்.
""கத்தரிக்காயை விடறீங்களா?''
""எனக்கு அது ரொம்ப பிடிக்குமே,''.
""கேரட்டு...''
""அது கண்ணுக்கு நல்லதாச்சே! வைட்டமின் "ஏ' இருக்கு''.
""சரி...போகட்டும், தக்காளியை விட்டுடுங்க. அதை அதிகமா சாப்பிட்டா கால் உளைச்சல் வரும்னு சொல்றாங்க,''.
""அது விலை குறைவாச்சே,''.
""அப்ப...உருளைக்கிழங்கு,''.
""பூரி மசால்னா எனக்கு உயிரு. உருளைக்கிழங்கு இல்லாம எப்படி மசால் செய்யுறது,''.
பண்டாவுக்கு சலிப்பு வந்துவிட்டது. ""சரி...நீங்களே ஒண்ணைச் சொல்லுங்க,''.
கணவன் ரொம்ப யோசித்தார்.
""ஐயா! காசு பணம் செலவழிக்காம, உடம்பைக் கெடுத்துக்காம ஒண்ணே ஒண்ணை விடுதேன்!''
""என்ன அது..'' பண்டா அவசரப்பட்டார்.
""மானம்,''.
பண்டா தலையில் அடித்துக் கொண்டே, ""அம்மா! நீங்க எதை உடுறீங்க!'' என மனைவியிடம் கேட்டார்.
""குருக்களே! இந்த புருஷனை விட்டுடுறேன்,''.
""ஏம்மா!''
மானத்தை விட்ட புருஷனோட எப்படி வாழுறது!''
திருவள்ளுவர் சொன்னார்.
""மான் கூட மயிர் நீக்கினால் உயிர் வாழ்வதில்லை,'' என்று.
அப்படியானால் மனிதன் எப்படி இருக்க வேண்டும்?


பிள்ளைகைளை நல்லமுறையில் வளர்க்க வேண்டும்

ஒரு மாந்தோப்பு வழியாக அப்பாவும் பிள்ளையும் சென்று கொண்டிருந்தனர். பிள்ளை அப்பாவின் தோளில் அமர்ந்திருந்தான். அவன் தோட்டக்காரனுக்குத் தெரியாமல் இரண்டு மாங்காயைத் திருடினான். வீட்டுக்கு வந்ததும் அப்பாவிடம் கொடுத்தான்.
கெட்டிக்காரப்பிள்ளையைப் பெற்றதை எண்ணி சந்தோஷத்தில் அப்பா, அவனை "ஏ மாங்கா' என்று செல்லமாக அழைத்தார்.
சிறுவன் வளர்ந்து வாலிபப்பருவம் அடைந்தான். அவனோடு சேர்ந்து திருட்டும் வளர்ந்து விட்டது. அரண்மனையிலேயே திருடும் அளவுக்கு துணிந்து விட்டான்.
ஒருநாள் ராணியின் விலை உயர்ந்த வைரமாலை காணாமல் போனது. திருடனைப் பிடித்து தண்டிக்க மன்னர் உத்தரவிட்டார். காவலர்கள் காட்டில் ஒளிந்திருந்த"மாங்காய்' திருடனைப் பிடித்து வைரமாலையை மீட்டு வந்தனர். மன்னர் முன்னிலையில் விசாரணை நடந்தது. திருடனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவனைக் கொலைக்களத்துக்கு கொண்டு சென்ற வேளையில், அந்தத் திருடனின் பெயரோடு சேர்ந்திருக்கும் "மாங்காய்' பற்றிய விபரத்தை மன்னர் கேட்டார்.
""மன்னா! சிறுவனாக இருந்தபோது, என் அப்பாவின் ஆதரவுடன் இரு மாங்காயைத் தோட்டக்காரனுக்குத் தெரியாமல் திருடினேன். அன்றுமுதல் என்னுடைய அப்பா,"மாங்கா' என்று செல்லமாக அழைத்தார். இன்று பெரிய திருடனாகி அதற்குரிய விலையாக உயிரையே இழக்கப் போகிறேன்'' என்று அழுதான்.
அவனது கதையைக் கேட்ட அனைவரும், பிள்ளைகைளை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தனர்.

சண்டிகேஸ்வரர் வழிபடு

சிவனடியார்களில் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவன் கோயிலுக்குச் சென்று, இவரை தரிசிக்காமல் திரும்பினால், கோயிலுக்கு சென்ற பலன் கிடைக்காது என்பது ஐதீகம். வலக்கையின் நடுவிரல்கள் மூன்றையும் இடக்கையால் தட்டுவது போல கையை வைத்து இவரை வழிபட வேண்டும். ஆனால், சத்தம் வரக்கூடாது. சிவதியானம் கலைந்து விடும் என்பதால் இவர் சந்நிதியில் ஒலி எழுப்புவதோ, நூலைப் பிய்த்து போடுவதோ கூடாது. இவரைச் சுற்றி வந்து வழிபடவும் கூடாது. இவர் நாயன்மார்களில் ஒருவர். 12வயது சிறுவனாக இருந்தபோதே சிவனருள் பெற்றவர். பன்னிரு திருமுறைகளில், கண்ணப்பருக்கு அடுத்தபடியாக போற்றப்படுவர் இவர் தான்.

முத்துசுவாமி தீட்சிதர்


நமது மகான்களினிடம் இருந்த தெய்வசக்திக்கு ஈடு இணை இல்லை என்பதற்கு <உதாரணமாக நடந்த நிகழ்ச்சி இது. திருவாரூர் முத்துசுவாமி தீட்சிதர் இளம் வயதிலேயே வேதம், இலக்கணம், பாட்டு, வீணை கற்றுத்தேர்ந்தார். சிதம்பர சுவாமி என்பவருடன் காசி சென்றார். அவரிடம் பல கலைகளைக் கற்றார். ஸ்ரீவித்யா மந்திர உபாசனை பெற்றார். ஐந்தாண்டு கடந்ததும், சிதம்பர சுவாமி அவரை சொந்த ஊருக்குச் செல்லும்படி உத்தரவிட்டார்.
""சுவாமி! ஊருக்குப் போகச் சொல்கிறீர்களே! நான் கற்றவித்தைகளில் தேர்ந்து விட்டேன் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?'' என்றார் தீட்சிதர். ""நீ கங்கைக்குச் செல். இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளி, மனதில் ஏதோ பொருளை நினைத்துக் கொண்டு, தண்ணீரைப் பார். அதில் நீ நினைத்தது தெரிந்தால், கலைகளில் தேர்ந்து விட்டதாக அர்த்தம்,'' என்றார் சுவாமி.
தீட்சிதரும் கங்கை நீரை கையில் அள்ளி, மனதில் வீணையை நினைத்தபடியே பார்த்தார். என்ன ஆச்சரியம்! தண்ணீரில் வீணை தெரிந்தது. அதன் குடப்பகுதியில் "ஸ்ரீராம்' என்ற மந்திரமும் தெரிந்தது. உணர்ச்சியின் விளிம்புக்கே சென்று விட்ட தீட்சிதர் சென்னை வந்தார். திருத்தணி முருகனின் அருளால் பல கீர்த்தனைகளைப் பாடினார்.

தெய்வங்களுக்கு அதிக தலை, கைகளை கொடுத்து வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?

* வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஹோமம் நடத்துவது சரியா?
.
குடியிருக்கும் வரை அது உங்கள் வீடு தான். வாடகை வீட்டில் குடியிருக்கிறோம் என்று மற்ற விஷயங்களை ஒதுக்கி விடுவதில்லையே. ஹோமம் நடத்துவது சிறப்பானதே.

** எண்களில் எட்டு ஒதுக்கப்பட்டதா? பலரும் இந்த எண்களை விரும்புவதில்லையே ஏன்?
.
வெள்ளையர்களின் வரவால் விளைந்த விபரீதங்களில் இதுவும் ஒன்று. நம்மைப் பொறுத்தவரை எட்டு மிக உயர்ந்த எண். இதனை "அஷ்ட' என்று சொல்வார்கள். அஷ்ட லட்சுமி, அஷ்ட ஐஸ்வர்யம், அஷ்ட மூர்த்தி என்று எவ்வளவோ எட்டைப் பற்றிச் சொல்லலாம்.

* தெய்வங்களுக்கு அதிக தலை, கைகளை கொடுத்து வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?

மனிதசக்திக்கும், தெய்வசக்திக்கும் வேறுபாடு உண்டு. ஒரே நேரத்தில் தெய்வத்தால் பல செயல்களைச் செய்ய முடியும். கோடிக்கணக்கானவர்களுடன் ஒரே சமயத்தில் பேச முடியும். எந்த தீய சக்தியையும் அழிக்கும் ஆற்றலை உணர்த்தும் வகையில் கைகளில் ஆயுதங்களையும் கொண்டிருக்கும். இதை நாம் உணர்வதற்காக பல கைகளும், தலைகளும் தெய்வ வடிவங்களில்
சித்தரிக்கப்படுகின்றன.

* நெய், எண்ணெய் இரண்டில் எது விளக்கேற்ற சிறந்தது?

நெய் மிக உயர்ந்தது. ஆனால், எல்லோராலும் இயலாது. நெய் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பதைக் கொண்டு தீபம் ஏற்றுவது தவறு. எல்லோராலும் இயன்றதும், எல்லா நன்மைகளும் அளிக்கவல்ல நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சாலச்சிறந்தது.


* தகுதிக்கு மீறிய பரிகாரங்களை ஜோதிடர்கள் சொல்லும்போது எல்லோராலும் செய்ய முடிவதில்லை. எளிய பரிகாரத்தை இறைவன் ஏற்கமாட்டாரா?

நம்மால் முடிந்ததைச் செய்தால் போதும். இறைவன் ஏற்றுக் கொள்வார்.

* ஒருவர் வேண்டிய காணிக்கையை மற்றொருவர் மூலம் செலுத்துவது ஏற்புடையது தானா?

வேண்டிக்கொண்ட காணிக்கையை காலம் தாழ்த்தாமல் எப்படியாவது இறைவனுக்கு செலுத்திவிட வேண்டும் என்ற அடிப்படையில் இது சரியானது தான்.

* தர்ப்பணம் செய்து முடித்தபின் குளித்துவிட்டுத் தான் கடவுள் பூஜை செய்ய வேண்டுமா?

கிடையாது. தர்ப்பணம் முடிந்தபின் கைகால்களைக் கழுவி விட்டு திருநீறு அல்லது திருமண் திலகமிட்டு பூஜை செய்யலாம். குளிக்கக்கூடாது.

சுவாமிக்குப் பிரசாதம் படைக்கும்போது திரையிட்டுக் கொள்வது ஏன்?* திருவிளக்கு பூஜையில் கன்னிப்பெண்கள், சிறுமிகள், சுமங்கலிகள் அனைவரும் பங்கேற்கின்றனர். இதற்கு ஏதேனும் வயது வரம்பு உண்டா?

பெண்களுக்கு வயது அடிப்படையில் சில பெயர்கள் உண்டு. ஏழுவயது வரை பாலா, பதினொரு வயதுவரை கன்னி, அதன்பிறகு திருமணமாகும் வரை வதூ, திருமணமான பின் சுமங்கலி, வயது முதிர்ந்த சுமங்கலிக்கு சுவாசினி என்று பெயர். சுமங்கலி, சுவாசினி ஆகியோர் திருவிளக்கு பூஜை செய்வது தான் சிறந்தது.

* அமாவாசையை சிலர் நிறைந்தநாள் என்று சொல்லி சுபநிகழ்ச்சி நடத்துவது சரியா?

திருமணம், நிச்சயதார்த்தம் அமாவாசையில் செய்யக் கூடாது. வியாபாரரீதியாக சில விஷயங்களை முடிவெடுப்பது, ஒப்பந்தம் செய்வது போன்றவற்றை சமீபகாலமாக சிலர் செய்து வருகிறார்கள். சாஸ்திரரீதியாக இதற்கு பதில் சொல்ல முடியாது. அவர்களது அனுபவத்தில் நல்லதாக இருக்கலாம்.

** ஆத்திகம் நாத்திகம் இரண்டுமே சரியானதாக என் மனதிற்குப் படுகிறது. ஆத்திகத்தை முழுமையாக ஏற்க வழிகாட்டுங்கள்.

நல்லது என்று ஒன்று இருந்தால் கெட்டது என்று ஒன்றும் இருக்கும். எது நமக்குப் பயனளிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு தேர்வு செய்து கொள்வதே நல்லது. இந்த அடிப்படையில் யோசித்துப் பார்த்தால் ஆத்திகம் நல்லது. மனித வாழ்விற்கு உறுதுணையாகவும், கவலையைப் போக்குவதாகவும் உள்ளது. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கடவுள் கைகொடுப்பார் என நம்பினால் காப்பாற்றப்படுகிறோம் என்பதை உங்கள் அனுபவங்களின் மூலமே சீர்தூக்கிப் பார்க்கலாம். நாத்திகம் நம் கலாச்சாரத்தை கேலிக்கூத்தாக்குகிறது. உலகப்பொதுமறையான திருக்குறள் கடவுள் வாழ்த்துடன் தான் தொடங்குகிறது. சிறந்த ஆன்மிகவாதியாக இருந்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.

*சுவாமிக்குப் பிரசாதம் படைக்கும்போது திரையிட்டுக் கொள்வது ஏன்?

வீட்டில் சாப்பிடும்போது எல்லோரும் பார்க்கும்படி வாசலில் உட்கார்ந்து நாம் சாப்பிடுவதில்லையே. குளிப்பது, சாப்பிடுவது, ஜெபிப்பது போன்ற விஷயங்களை பிறர் பார்க்கும்படி செய்வது கூடாது என்பது நியதி. தெய்வத்திற்குப் பிரசாதம் படைக்கும் நைவேத்யத்தை ரகசியமாக செய்யும்படி சாத்திரங்கள் கூறுகின்றன. கவுரவம், பயபக்தியோடு மட்டுமே கடவுளுக்கு உணவு படைக்கவேண்டுமே தவிர மேடை காட்சியாக செய்யக்கூடாது.

*பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வழிபாட்டில் தேங்காய் உடைக்கக் கூடாதா ஏன்?

கர்ப்பமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது. பெண்கள் தேங்காயை உடைக்கவோ, பூசணிக்காயை வெட்டவோ கூடாது. ஆண்கள் தான் எப்போதும் செய்ய வேண்டும்.

Monday, May 14, 2012

நாம் வணங்கும் ஒவ்வொரு தெய்வங்களும் நம் உடலில் ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கிறார்கள்

 அதே போல நாம் வணங்கும் ஒவ்வொரு தெய்வங்களும் நம் உடலில் ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கிறார்கள். முதலில் யார் யார் என்ன என்ன அம்சமாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறேன்.
சிவனார்- நமது உடல்
உமையவள்- உடலின் வலிமை, வெப்பம் மற்றும் பிராணன் முதலான வாயு சார்ந்த சக்திகள்.
விஷ்ணு- நமது உயிர்.
ப்ரம்ம தேவன்- நமது மனம்.
முருகப் பெருமான்- குண்டலினி சக்தி.
பிள்ளையார் - நம் உடலின் இயக்கங்கள்.

இப்படி நான் நினைப்பதற்கான காரணங்கள்.

சிவனார் எப்படி திடப்பொருள் என்பதும். உமையவள் எப்படி சக்தி என்பதும். விநாயகர் எப்படி செயல் என்பதும் இதற்கு முன்பு ஒரு பதிவில் விளக்கியிருந்தேன்.
அதன்படி பார்க்கும் பொழுது நம் உடல் சிவனார். உடலின் வலிமை, உடலின் வெப்பம், உடலில் உள்ள வாயு சார்ந்த சக்திகள் எல்லாம் உமையவள். அதனால் தான் அவளை சக்தி என்றும் நாம் அழைக்கிறோம். பிள்ளையார் செயலின் வடிவம் என்பதால், நம் உடலின் இயக்கங்கள் யாவும் அவரே ஆகிறார். உ-ம் இதயத் துடிப்பு.

மஹா விஷ்ணு உயிர்.

உயிருக்கும் மஹா விஷ்ணுவிற்கும் இடையிலான ஒற்றுமைகள்.
விஷ்ணு காக்கும் கடவுளாக அறியப் படுகிறார். உயிர் உடலில் இருக்கும் வரை உடல் அழுகாது. உயிர் பிரிந்தவுடன் அழுக ஆரம்பிக்கிறது.
விஷ்ணு பல்வேறு அவதாரங்கள் எடுக்கக்கூடியவர். உயிரும் அப்படித் தான் புல்லாக, பூடாய், புழுவாய், மரம், செடி, கொடிகளாய், எத்தனை எத்தனையோ வடிவம் தாங்கியிருக்கிறது.
விஷ்ணு வாமனனாகவும் பொடி நடை போடுவார். திருவிக்ரமனாகவும் வானளப்பார். உயிரும் அப்படித் தான் சிறு எறும்பாகவும் தன்னை வெளிப்படுத்துகிறது. பெரிய யானையாகவும் உருவம் கொள்கிறது.
விஷ்ணுவின் தங்கை மலைமகள். இது எதை உணர்த்துகிறது என்றால் உயிரும் உடலின் மற்ற சக்திகளும் அண்ணன் தங்கை போன்றவை. அதாவது உயிரும் உடலின் பிற சக்திகளும் ஓரே குணம் உடையது ஆனால் ஒன்றல்ல. மற்ற சக்திகளை அளக்கலாம் ஆனால் உயிரை அளக்க முடியாது. மற்ற சக்திகளின் தன்மைகளை விளக்கலாம் ஆனால் உயிரின் தன்மைகளை விளக்க முடியாது. மரணத்தின் போது உயிர் உடலை விட்டு செல்லும், பிற சக்திகள் செல்லாது. உடலுக்கும் அந்தச் சக்திகளுக்குமான திருமண பந்தம் அது தான்.

பிரம்ம தேவன் மனம்.

மனம் ஒயாமல் எதாவது சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பிரம்ம தேவனும் அப்படித் தான் இடைவிடாமல் கோடிகணக்கான ஜீவராசிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். மனம் ரஜோ குணமுடையது. பிரம்ம தேவனும் ரஜோ குணம் உடையவராகவே அறியப்படுகிறார்.

முருகப் பெருமான் குண்டலினி சக்தி.

ஒரு முறை முருகர் பிரம்ம தேவனை ஓம்காரத்தின் பொருள் கேட்கிறார். பிரம்ம தேவனோ மறந்துவிட்டதாகச் சொல்கிறார். உடனே கோபம் கொண்ட முருகர் பிரம்ம தேவனை சிறை வைக்க சொல்லிவிடுகிறார். பின் சிவனார் முருகரை விளக்கம் கேட்க, ஒரு சிஷ்யனாக இருந்து கேட்டால் தான் விளக்குவேன் என சொல்லி அப்பனுக்கே உபதேசம் செய்தவராக பெருமை பெறுகிறார் முருகர்.

பிரம்ம தேவன் சிறைப் படுகிறார் என்றால் மனம் சிறைப் படுகிறது என்று பொருள். மனம் ஒரு விஷயத்தில் சிறைப்படுகிறது என்றால் அதனால் அதை தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாமல் போய்விடும். சிலர் உணவுக்கு அடிமையாய் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மனம் உணவில் சிறைப்பட்டிருக்கிறது என்று பொருள். இதே போல நாம் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்திற்கு அடிமை தான். இப்போது இந்த சிறையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் உடல் வளைந்து யோகத்தில் ஈடுபட வேண்டும். மீண்டும் மீண்டும் ஓம்காரத்தை உச்சரித்து நம் மனதில் பதிய வைக்க வேண்டும். அப்போது நம் குண்ட்லினி குளிர்வடைந்து மனதை அந்தச் சிறையிலிருந்து விடுவிக்கிறது. இது தான் சிவனார் பிரம்மதேவனுக்காக முருகரிடம் பரிந்துரைப்பதும், முருகரின் விருப்பத்துக்கு வளைந்து கொடுப்பதும் காட்டுகிறது. முருகர் மனம் குளிர்வ்து என்பது நம் குண்டலினி சக்தி குளிர்வதை குறிக்கிறது.

பெரும்பாலும் முருகர் சிறுவனாக சித்தரிக்கப்படுகிறார். சிறுவர்களிடம் முரட்டுத்தனம் கூடாது. அன்பாக இனிமையாக நடந்து கொள்ள வேண்டும். குண்டலினி யோகத்தை பற்றி சொல்பவர்களும் குண்டலினியின் குணங்களாக இதையே தான் சொல்கிறார்கள். குண்டலினி சக்தியை மேலெழும்ப செய்ய வேண்டும் என்றால் முரட்டுத்தனமாக முயற்சிக்கக் கூடாது. பொறுமையாகவும் நிதானமாகவும் யோகத்தில் ஈடுபட வேண்டும். முருகருக்கு பிடித்த உணவு பழங்கள். குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யவும் நிறைய பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பரிந்துரைக்கப் படுகிறது.

முருகருக்கு ஆறு முகங்கள் உண்டு. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. குணடலினி சக்தியும் மனித உடலின் ஆறு சக்கரங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஒவ்வொரு சக்கரத்தில் இருந்து அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுதும் அது ஒவ்வொரு விதமாக தன்னை வெளிப்படுத்திகிறது.

முருகரின் தோற்றமும் இதற்கு பொருந்துவதாக இருக்கிறது. முருகர் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர். குண்டலினி சக்தி தியானத்தில் ஈடுபடும் எவருக்குமே நெற்றிப் பொட்டில் தான்
குவியும்.

இப்படியாக ஒவ்வொரு தெய்வமும் நம்மோடு நம் உடலிலேயே இருக்கிறார்கள். அவர்கள் யாவரும் வெவ்வேறானவர்கள் அல்ல. ஓன்றே இரண்டானது, பின் அதுவே பலவானது. ஆகையால் இவர்களுள் உயர்வு தாழ்வு காண்பது தவறு

பகவத் கீதைசித்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்தின் குறியீடு.

பகவத் கீதை என்றாலே என் நினைவுக்கு வரும் சித்திரம் ஸ்ரீ கிருஷ்ணர் தேரை செலுத்த, அதில் அர்ஜுனன் பின்னிருந்த படி பயணிக்கும் இந்த சித்திரம் தான்.இந்தச் சித்திரம் மிகுந்த உட்பொருள் உடையது

இந்த சித்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் நம்மில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்தின் குறியீடு.
முதலில் எவை எவற்றை குறிக்கின்றன என்பதை பார்ப்போம்.
போர்- வாழ்க்கை.
போர்க்களம்- இந்த பூவுலகம்.
தேர்- நம் உடலை குறிக்கிறது.
ஆர்ஜுனர்- ஜீவாத்மாவை, தனி ப்ரஞ்யை, குறிக்கிறார்.
குதிரைகள்- மனதை குறிக்கின்றன.
ஸ்ரீ கிருஷ்ணர் கையின் கடிவாளம் விதியை குறிக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணர் கையின் சாட்டை- நம் அறிவை புத்திசாலித்தனத்தை குறிக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணர்- பரமாத்மா, மனசாட்சி, உள்ளுணர்வு -இவற்றை குறிக்கிறார்.
தேர்க்கொடியிலிருக்கும் ஆஞ்சநேயர்- நல்லொழுக்கத்தை குறிக்கிறார்.

நாம் வாழும் இந்த பூமி போர்க்களம். நம் வாழ்க்கை போர்.
எதிர் அணியில் அணிவகுத்து நிறபவர்கள் நாம் செய்த தீவினைகள். அவை எப்போதும் நமக்கு ஒரு பிரச்சனை மாற்றி ஒரு பிரச்சனையாக கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. பாண்டவர் படை நாம் செய்த புண்ணியங்கள். அவை நமக்கு சாதகமாக நம்மை காப்பாற்ற முயற்சிக்கின்றன. நாம் செய்த தீ வினைகள் கொடுக்கும் தொல்லைகளை சமாளிக்க நாம் செய்த புண்ணியங்கள் உதவுகின்றன.

குதிரைகள் இழுத்துச் செல்லும் திசையில் எப்படி தேர் செல்கிறதோ அப்படி நம் உடலும் மனம் இழுத்துச் செல்லும் திசையில் தான் செல்கிறது. உ-ம்: மனம் சாப்பிட வேண்டும் என்றால், உணவு கிடைக்கும் இடத்தை நோக்கி நகர்கிறோம். அதனால் தேர் நம் உடலை குறிக்கிறது.

அர்ஜுனர் தான் ஜீவாத்மா. தனி ப்ரஞ்யை. அர்ஜுனர் தேரில் நிற்பதை போன்று ஜீவாத்மா நம் உடலில் உரைகிறது. அர்ஜுனரின் வேலை அம்புகள் எய்வது மட்டும் தான். அதே போல நமது வேலையும் நம் கடமையை செய்வது மட்டும் தான்.

மனம் குதிரை போன்றது. அது ஒரே சமயத்தில் நான்கு விஷயங்களை சிந்திக்கக்கூடியது. ஒரே சமயத்தில் நான்கு விஷயத்தை சிந்திக்கக் கூடியதாக இருந்தாலும், ஒரு முகப்பட்டு செயல்பட வேண்டும். மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும் குதிரையை அடக்குவது போன்றது தான். மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் குதிரை முரண்டு பிடிக்கும். மெல்ல மெல்ல தட்டி கொடுத்து வழிக்கு கொண்டு வர வேண்டும். எப்பொழுது உணவிட வேண்டுமோ அப்பொழுது உணவளித்து. எப்பொழுது நீர் கொடுக்க வேண்டுமோ அப்போது நீர் கொடுத்து, அதை உற்சாகப் படுத்த வேண்டும். மனமும் அப்படித் தான். ஓரேயடியாக அடக்கி வைத்தால் மன அழுத்தம், சோர்வு இவை ஏற்படும். அதனால் அதன் ஆசைகளையும் அவ்வப்போது நிறைவேற்றி அதை உற்சாகப்படுத்த வேண்டும். அப்போது அது கிருஷ்ணர் ஓட்டிச்செல்லும் இந்த குதிரை போல ஆரோக்கியமானதாக இருக்கும்.

கடிவாளம் தான் விதி. மனம் விதியின் பிடியில் இருக்கிறது. விதி எந்த திசையில் திரும்புகிறதோ மனமும் அந்த திசையில் தான் பயணிக்கும்.

கடிவாளத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணர் கடவுள். விதியை கடவுள் இயக்குகிறார். இங்கே இது ஒரு விதிவிலக்கு. கடவுள் நம் விதியை இயக்க வேண்டும் என்றால் நாம் இறைவனிடம் சரணடைந்து இருக்க வேண்டும்.

கிருஷ்ணர் கையின் சாட்டை நம் புத்தி. புத்தி மனசாட்சியின் பிடியில் இருக்கிறது. புத்தி மனசாட்சியின் பிடியில் இருந்தால் மனம் சரியான திசையில் செல்லும் போது அதை வேகப்படுத்தும். தவறான திசையில் செல்லும்போது இயங்காமல் இருந்து, வேகத்தை குறைத்து விடும்.

கிருஷ்ணர் மனசாட்சி, ஆழ்மனம், பேருணர்வு, பரமாத்மா... இவர் உருவம் எடுத்து வந்தால் ஆயிரம் நாமங்கள். உருவமின்றி நமக்குள் இருந்தால் அதற்கும் எத்தனை நாமங்கள். இந்த மனசாட்சியானது இந்த வாழ்க்கையால் பாதிக்கப்படுவது இல்லை. இது ஜீவாத்மாவிற்கு துணையாக இந்த வாழ்க்கையில் பங்கெடுக்கிறது.

ஆஞ்சநேயர்- இவர்கள் கொடியில் ஆஞ்சநேயர் இருக்கிறார். ஆஞ்சநேயர் நல்லொழுக்கத்தை குறிக்கிறார். நல்லொழுக்கம் நம்மிடம் இருக்கும் வரை தீய சக்திகளால் நமக்கு எந்த பாதிப்பும் வராது.

சபரி அன்னை
எத்தனை நாட்கள் எத்தனை நாட்கள்
உனக்காய் இங்கே தவம் கிடந்தேன்
என் எலும்பும் தோளும் உடலும் தேய
என் உயிரை மட்டும் வைத்திருந்தேன்

நீ வருகின்ற வழியை பார்த்து பார்த்து
என் நீள விழியும் பூத்ததய்யா
எங்கே ராமன்? என கேட்டு கேட்டு
என் இதயம் தினமும் துடித்ததய்யா

உணவும் மறந்தேன் நீரும் மறந்தேன்
பஞ்சனை தூக்கம் நான் துறந்தேன்
நீ வருவாய் என்ற ஆசையில் மட்டும்
இதுவரை நானும் பிழைத்திருந்தேன்

உனக்காய் நானும் கனிகள் சேர்க்க
வனத்துள் கொஞ்சம் திரிந்திடுவேன்
அந்த நேரத்தில் நீ வந்திருப்பாய் என
மீண்டும் இருப்பிடம் திரும்பிடுவேன்

தினமும் இப்படி ஏமாந்தும் கூட
உன் மேல் பாசம் மட்டும் வளர்ந்ததய்யா
என் வளர்பிறை பாசம் முழு மதியாகி
உன் முகத்தில் இன்று ஒளிருதய்யா

கண்டேன் கண்டேன் உன் திருமுகம் கண்டேன்
என் ஆயுளின் பயனை நான் அடைந்தேன்
ஆனந்தப் பெருநிலை திளைக்க திளைக்க
என் ஆன்மாவும் உச்சிக்கு ஏறுதய்யா

இனிக்கும் கனிகளை கொடுக்கும் எண்ணத்தில்
உன் விருந்தை எச்சில் செய்திட்டேன்
மறு வார்த்தையின்றி நீ உண்டு முடித்ததில்
இது வரை அது பற்றி மறந்திட்டேன்

இதுவரை காத்த ஆச்சாரம் அனைத்தும்
பாசமிகுதியால் அழித்திட்டேன்
விருந்து முடிந்த நிலையில் இப்போது
செய்வதறியாது விழித்திட்டேன்

என் தவிப்பை பார்த்து ராமா நீயும்
குழந்தை போல சிரிக்கின்றாய்
ஆச்சாரத்தில் நான் கொண்ட பிடிப்பை
அழகாய் நீயும் கரைக்கின்றாய்

அன்பே ராமா உனை கண்டது போதும்
என் உள்ளம் நிறைகுடம் ஆனதய்யா
மனித பிறவியின் உச்சத்தை தொட்டேன்
இனி மனித பிறவி போதுமய்யா

உன் பேரை நானும் ஜபித்துக் கொண்டே
அக்கினி ஜ்வாலையில் இறங்கிடுவேன்
ஆத்ம ஸ்வரூபனை கண்ட மகிழ்ச்சியில்
ஆத்ம ஸ்வரூபம் பெற்றிடுவேன்

ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்சபரிமூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்...

ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ராம அவதாரம்.


அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார்.


சபரி என்ற வேடகுலப் பெண்; வேட்டையாடிப் புலால் உண்ணும் தன் இனத்தவரை வெறுத்து மாதங்க வனம் எனும் வனத்தில் துறவியாக வாழ்க்கை நடத்தினாள். இவ்வனத்தில் ஆச்சிரமம் அமைத்து தன் சிஷ்யர்களுடன் தவம் இயற்றிய மாதங்க முனிவருக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து அருந் தொன்றாற்றினாள்.

மாதங்க முனிவர் தனது இறுதிகாலத்தில் சபரியை நோக்கி “சபரி நீ இப்பிறப்பில்’ வேடுவக் குலப்பெண்ணாய் பிறந்தாய் எனினும் பல நற்கருமங்களை புரிந்தாய். ஸ்ரீ இராமர் இந்த ஆச்சிரமத்திற்கு வருவார். அவர் உனக்கு அருள்புரிவார். நீ நற்கதி பெறுவாய்” என்று கூறினார்.

முனிவர் கூறியபடியே சீதாபிராட்டியைத் தேடிவந்த இராம, இலக்குமணர்கள் சபரி மலைக்கு வந்தனர். சபரிமலை காட்டில் கிடைத்த கிழங்கு, கனி வகைகளில் முதலில் சுவைத்துப் பார்த்து, அவற்றில் இனியவைகளை மட்டுமே தெரிந்து இராம, இலக்குமணரிடம் சமர்ப்பித்து சபரி வணங்கினாள். இராமபிரானின் பரிபூரண அருள் சபரிக்குக் கிடைத்தது.

பம்பாநதி தீரத்தில் வாழ்ந்த சபரியைப் பற்றி பின்வரும் தகவலும் வழக்கிலுள்ளது. ஒருமுறை சில முனிவர்கள் சபரியை தம் காலால் உதைத்ததால் பம்பாநதி முழுவதும் பருக உதவாதவாறு கெட்டது. இராமபிரானை தரிசித்து அவர் பாதம் வணங்கி நின்ற சபரியை நோக்கி இராமபிரான் “அம்மா அடியேன் உனக்கு என்ன வரம் அளிக்க வேண்டும்? என்று கேட்க, அதற்கு சபரி, தேவரீர் பம்பாநதி முழுவதும் பருக உதவாது அசுத்தமடைந்துள்ளது. அதனை மீண்டும் தூய்மைப்படுத்தி நன்னீராக மாற்றி அருள வேண்டும் என்றாள்”

இராமபிரான் தாயே, இதற்கு ஏன் நான் வரம் கொடுக்க வேண்டும்? உன் பாத தூளியே பம்பையை தூய்மையாக்கி விடாதா? பம்பையில் அது தூய்மையாகிவிட வேண்டும் என்று பிரார்த்தித்தபடியே நீராடி வரும்படி திருவாய்மலர்ந்தருளினார். கருணைக்கடல் இராமபிரானின் எண்ணப்படி சபரியும் நீராட பம்மைநதியும் சகல தோஷகங்களும் நீங்கி தூய்மையடைந்தது. பம்பையில் நீராடி பக்தர்கள் தூய்மையடைகின்றனர். அன்னை சபரி அன்பின் வடிவம். அவள் இருந்தும் நடந்தும், உலாவிய பகுதி அழகிய சபரிமலையின் சிகரம். எழில் மிகு அந்த கொடுமுடியிலேதான் தருமசாஸ்தா ஐயப்பனாக வீற்றிருந்து அருள்புரிகின்றார். இதயத்தை பரம்பொருளில் ஏற்றி இராமபிரானை துதித்த வண்ணமே யோக சமாதியில் மூழ்கி சபரி வீடு பேறு பெற்றார்.

Monday, May 7, 2012

காஞ்சிப்பெரியவ

காஞ்சிப்பெரியவர் ""மாதா, பிதா, குரு, தெய்வம்'' என்னும் வேதவாக்கியத்தை பக்தர்களுக்கு அடிக்கடி உபதேசிப்பார். பிறருக்கு உபதேசம் செய்வதோடு தானும் வாழ்வில் கடைபிடித்து நடப்பதே நல்ல குருநாதரின் அடையாளம்.
தன் வாழ்க்கையின் கடைசிநாளில் இதைக் கடைபிடித்து நமக்கு வழிகாட்டியிருக்கிறார்.
1994 ஜனவரி 8ல், அவர் ஸித்தியடைந்தார். அதற்கு முந்தியநாள் இவரது தாயாருடைய ஊரான ஈச்சங்குடியில் வைப்பதற்காக பெற்றோரின் புகைப்படங்கள் பெரிதாக்கப்பட்டு தயாராக இருந்தன. ஸித்தியடைவதற்கு முன் அவரது மரக்குவளையைச் சுத்தம் செய்வதற்காகச் சென்ற சீடரிடம், "நீ கலவை சென்றிருக்கிறாயா? அங்கே தான் என் குரு, பரமகுரு ஆகியோரின் பிருந்தாவனம் இருக்கிறது'' என்று சொல்லி அவர்களை நினைவு கூர்ந்தார். பின் அவரிடம் ஈச்சங்குடிக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த பெற்றோரின் புகைப்படங்களை எடுத்துவரச் சொல்லிப் பார்த்தார். சிறிதுநேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
மாதா,பிதா, குரு, தெய்வம் என்னும் உபதேசத்தை பின்பற்றி வாழ்ந்த பெரியவரின் பிருந்தாவனத்தை பிர்லா குடும்பத்தினர் கலையழகு மண்டபமாக அமைத்தனர். அதில் நித்ய வாசம் செய்யும் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பூஜையறையில் பெரியவரின் பிருந்தாவனப்படத்தை வைத்து பூஜித்தால் அவரது பூரண அருள் பெறலாம். 

நரசிம்மர் வரலாறு


நரசிம்மர் வரலாறு பல முக்கிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. அவை வருமாறு.
1. பாகவதம்
2. ஹரிவம்சம்
3. விஷ்ணுபுராணம்
4. விஹகேந்திரஸம்ஹிதை
5. பத்ம ஸம்ஹிதை
6. ஈசுவர ஸம்ஹிதை
7. பராசர ஸம்ஹிதை
8. ஸாத்வத ஸம்ஹிதை
9. சேஷ ஸம்ஹிதை
10. வைகானச ஆகமம்
11. விஷ்ணு ஸம்ஹிதை
12. ஸ்ரீபிரஸன்ன ஸம்ஹிதை
13. விஷ்ணு தந்திரம்
14. விஷ்வக்சேன ஸம்ஹிதை
15. ஹயசீர்ஷ ஸம்ஹிதை
16. பரமேசுவர ஸம்ஹிதை
17. மத்ஸ்ய புராணம் 18. சில்ப ரத்தினம்
19. ப்ரபஞ்ச சார ஸங்கிரஹம்
20. நரசிம்ம புராணம்.

நரசிம்மருக்குரிய கிழமை

செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுகிறார் நரசிம்மர். எனவே, செவ்வாய் கிழமை அவருக்கு ஏற்ற நாளாக உள்ளது. தினமும், செவ்வாய் ஹோரை நேரத்திலும் அவரை வணங்கலாம்.

நரசிம்மரின் பெயர்களை தினமும் மூன்று முறை பக்தியுடன் வாசிப்பவர்களின் நியாயமான தேவைகள் நிறைவேறும்.


பல ஊர்களில் அருள்பாலிக்கும் நரசிம்மரின் திருப்பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பெயர்களை தினமும் மூன்று முறை பக்தியுடன் வாசிப்பவர்களின் நியாயமான தேவைகள் நிறைவேறும்.
1. அகோபில நரசிம்மர் , 2. அழகியசிங்கர், 3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர் 4. உக்கிர நரசிம்மர், 5. கதலி நரசிங்கர் , 6. கதலி லட்சுமி நரசிம்மர் 7. கதிர் நரசிம்மர் , 8. கருடாத்ரி லட்சுமி நரசிம்மர், 9. கல்யாண நரசிம்மர், , 10. குகாந்தர நரசிம்மர்,11. குஞ்சால நரசிம்மர், 12. கும்பி நரசிம்மர், 13. சாந்த நரசிம்மர்,14. சிங்கப் பெருமாள்,15. தெள்ளிய சிங்கர்,16. நரசிங்கர்,17. பானக நரசிம்மர் 18. பாடலாத்ரி நரசிம்மர், 19. பார்க்கவ நரசிம்மர், 20. பாவன நரசிம்மர்,21. பிரஹ்லாத நரசிம்மர் 22. பிரகலாத வரதன்,23. பூவராக நரசிம்மர், 24. மாலோல நரசிம்மர், 25. யோக நரசிம்மர், 26. லட்சுமி நரசிம்மர், 27. வரதயோக நரசிம்மர், 28. வராக நரசிம்மர், 29. வியாக்ர நரசிம்மர் , 30. ஜ்வாலா நரசிம்மர்

நரசிம்ம வழிபாடு


சித்திரை அல்லது வைகாசி வளர்பிறை சதுர்த்தசியன்று நரசிம்ம ஜெயந்தி வருகிறது. தினமும் பிரதோஷ வேளையில் (மாலை 4.30-6) நரசிம்மரை வழிபடுவது சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்து, கயவனாக இருந்த சுவேதன் என்பவன், மறுபிறவியில் பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றான். நரசிம்மருக்கு செவ்வரளி மாலை சாத்தலாம். நைவேத்தியத்திற்கு பானகம், சர்க்கரைப் பொங்கல் உகந்தது. அவருக்கு ஹோமம் நடத்தும் போது தேன் கலந்த மல்லிகை மலர்களைத் தூவலாம்.

கவலையா! தூக்கிப்போடுங்க!


வேதம், புராணம், மகாபாரதம் இப்படி எத்தனையோ எழுதியும் வியாசரின் கவலை தீராமல், சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்திருந்தார். நாரதர் அங்கு வந்தார்.
""வியாசரே! நீண்ட நாளாக ஒரு சந்தேகம். சிதை, சிந்தை இரண்டையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்,'' என்றார்.
""சிதை என்பது உயிரற்ற உடலுக்குரிய படுக்கை. சிந்தை என்பது மனதில் ஏற்படும் வருத்தம்,'' என்றார் வியாசர்.
நாரதர் அவரிடம்,""சிந்தையை விட சிதை மேலானது. சிதையில் உயிரில்லாத பிணம் மட்டுமே எரியும். ஆனால், கவலையால் உயிருள்ள நம் சரீரமே எரிந்து விடும். அதனால், கவலையை ஒரு மூலையில் தூக்கிப் போடுங்கள்,'' என்றார். இந்த அருமையான விளக்கம் வியாசருக்கு மனதில் தெளிவு ஏற்பட்டது.
""வியாசரே! உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டுமானால், என்றுமே மகிழ்ச்சியாக இருந்த கிருஷ்ணரின் பெருமையைக் கூறும் பாகவதத்தை எழுதுங்கள். கவலை தீரும்,'' என்று வழிகாட்டினார். வியாசரும் அதன்பின் அமிர்தம் போன்ற பாகவத்தை எழுதினார். மகிழ்ச்சியில் திளைத்தார். அவதாரங்களிலேயே கிருஷ்ணாவதாரம் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாம்பின் காலை பாம்பு தானே அறியும்,


ஒருவருக்கு நன்மை கிடைக்கும் என்றால், பொய் சொன்னாலும் தவறில்லை என்பதை சீதை, அனுமன் ஆகியோரே செய்து காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையைக் காவல் செய்தவள் லங்கிணி. அனுமன் இலங்கையில் நுழைந்ததும், ""ஏ குரங்கே! நீ யார்?எதற்காக இங்கு வந்திருக்கிறாய்?''என்று அதட்டினாள்.
ராமனின் மனைவி சீதையைத் தேடி வந்திருக்கும் உண்மையைச் சொன்னால் பிரச்னை ஆகுமல்லவா! எனவே, ""இங்கே இருக்கும் வனப்பகுதி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. அதைச் சுற்றிப் பார்க்க வந்தேன்,'' என்று பொய் சொன்னார். சீதையைப் பார்த்துவிட்டு திரும்பும்போது, அவர் அசோகவனத்தை துவம்சம் செய்தார். ராட்சஷியர் அலறியடித்து சீதையிடம் வந்து, ""இந்த குரங்கு யார்? ஏன் இப்படி வனத்தை அலங்கோலப்படுத்துகிறது?'' என்று கேட்டனர்.
"ராமனின் தூதன் இவன்' என்ற உண்மையைச் சொன்னால், அனுமனுக்கு பிரச்னை வரும் என்பதால், ""ராட்சஷர்களான உங்களுக்கே தெரியாவிட்டால் எனக்கு எப்படி தெரியும்? பாம்பின் காலை பாம்பு தானே அறியும்,'' என்று பதிலளித்து விட்டு அமைதியாக இருந்து விட்டாள்.

பழி தீர்ப்பதிலும் கூட, இனிமை

பழி தீர்ப்பது நல்ல செயலா என்றால் "இல்லவே இல்லை' என்போம். ஆனால், பகவானையே பழி தீர்த்திருக்கிறாள் ஆண்டாள்.
மனிதனாகப் பிறந்தவனுக்கு மனைவி, குழந்தை, உறவு, நட்பு, பணி என்று எத்தனையோ கட்டுகளை போட்டு வைத்தான் இறைவன். ஆனாலும், வாழ்வில், இன்பத்தைக் கண்டோமா என்றால், அதற்கு "இல்லவே இல்லை' என்று தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. விருந்தில் கூட பர்பியையும், பாகற்காயையும் பக்கத்தில் வைக்கிறார்கள். இனிக்கிறதே என சிறிது சுவைத்தால், அடுத்து கசக்கிறது வாழ்க்கை. துன்பம் அதிகமாகி விட்டால், "இந்த துன்பத்துக்கெல்லாம் காரணம் நீ தானே' என இறைவனை சபிக்கவும் செய்கிறோம்.
ஆனால், ஆண்டாள் ஒரு மாலையை எடுத்தாள், கழுத்தில் போட்டாள். ஆண்டவனுக்கு அனுப்பி வைத்தாள். பக்தி என்னும் நாரால் கட்டிய மாலை, அவனையே கட்டிப் போட்டது. ""ஏ கிருஷ்ணா! மனிதனாய் பிறந்த எல்லாரையும் கட்டிப் போடலாம் என கனவு காணாதே. நாங்கள் பக்தி என்னும் கயிறால் உன்னைக் கட்டிப் போட்டு விடுவோம். ஏற்கனவே, எங்கள் யசோதை உன்னை உரலில் கட்டிப் போட்ட முன்னுதாரணம் இருக் கிறது,'' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறாள். பக்தி என்னும் கயிறால், சம்சாரத்தில் நம்மைக் கட்டிய ஆண்டவனையே பழிக்குப்பழி வாங்கலாம். பழி தீர்ப்பதிலும் கூட, எவ்வளவு இனிமை பார்த்தீர்களா

பிள்ளையைப் பெற்று விட்டால் மட்டும் போதாது


கல்யாணம் முடிந்தவுடன், தம்பதியர் அம்மி மிதித்து, அருந்ததி, துருவ நட்சத்திரங்களை பார்க்கும் சடங்குகள் நடக்கும். துருவன், அருந்ததி இருவரும் வான மண்டலத்தில் இன்றும் நட்சத்திரங்களாக பிரகாசிப்பதாக ஐதீகம். அருந்ததியைப் போல கற்புத்திறமும், துருவனைப் போல நல்ல குழந்தையும் பெறவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.
துருவன் சிறுவனாக இருந்தபோதே, பக்தி திறத்தால் விஷ்ணுவின் அருளைப் பெற்றான். யாருக்கும் கிடைக்காத "துருவபதம்' என்னும் உயர்பதவி பெற்றதோடு, தன் தாயான சுநீதிக்கும் நற்கதி பெற்றுத் தந்தான். துருவ நட்சத்திரத்திற்கு அருகில் சுநீதியும் ஒரு நட்சத்திரமாக இருக்கிறாள். உத்தமபுத்திரனைப் பெற்ற தாய்மார்கள், கொடுத்து வைத்தவர்கள் என்பதை துருவனின் கதை உணர்த்துகிறது. பிள்ளையைப் பெற்று விட்டால் மட்டும் போதாது. அவர்களை இளமை முதலே நல்வழியில் பேணி வளர்ப்பவர்களே சிறந்த தாய்க்குரிய அந்தஸ்தைப் பெற முடியும்.

புராணங்களில் ஸ்லோகங்களின் எண்ணிக்கை


வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும் . அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், கதைகளாக எழுதினார்கள். அவையே புராணங்கள். வேதத்தின் "கண்ணாடி' என்று புராணங்களைச் சிறப்பிப்பர். "புரா' என்றால் "முற்காலத்தில் நடந்தது' என பொருள். வேதங்களைப் போலவே புராணங்களும் பிரம்மாவிடம் இருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்ய உபநிஷத், மத்ஸ்ய புராணங்கள் கூறுகின்றன. மொத்தம் 18 புராணங்கள் உள்ளன.
18 புராணங்களிலும் 5,09, 500 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஸ்கந்த புராணம் பெரியது. 1,81,000 ஸ்லோகங்கள் கொண்டது. மார்க்கண்டேய புராணம் சிறியது. 9000 ஸ்லோகங்களே உள்ளன.

புராணங்களில் ஸ்லோகங்களின் எண்ணிக்கை
ஸ்கந்த புராணம் - 1,81,000
பத்மபுராணம் - 55,000
நாரத புராணம் - 25,000
வராஹ புராணம் - 24,000
வாயு புராணம் - 24,000
மத்ஸ்ய புராணம் - 24,000
விஷ்ணு புராணம் - 23,000
கருட புராணம் - 19,000
பிரும்ம வைவர்த்த புராணம் - 18,000
பாகவத புராணம் - 18,000
கூர்ம புராணம் - 17,000
பவிஷ்ய புராணம் - 15,500
அக்னி புராணம் - 15,000
பிரம்மாண்ட புராணம் - 12,000
லிங்க புராணம் - 10,000
பிரம்ம புராணம் - 10,000
வாமன புராணம் - 10,000
மார்க்கண்டேய புராணம் - 9,000

பசுதானம்


தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியன. பொன்னிறம், கருமை, வெண்மை, புகைநிறம், சிவப்பு நிறமானவை. இவற்றின் சந்திகளே பூலோகத்தில் வாழும் பசுக்கூட்டமாகும். இந்த ஐந்தும் கிருஷ்ணருக்குரிய கோலோகத்தில் இன்றும் இருப்பதாக ஐதீகம்.
பசுதானம் செய்தால் பிதுர்சாபம், முன் வினைப்பாவம் நீங்கும். திருமந்திரத்தில் திருமூலர் தினமும் பசுவிற்கு புல் இடும்படி வேண்டுகோள் விடுக்கிறார். இதனை வேதம் "கோக்ராஸம்' என்று குறிப்பிடுகிறது. ஒருவர், தானம் தரும் பசுவின் உடம்பில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கைக்கு ஈடான ஆண்டுகள் கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழும் பாக்கியத்தை அடைவார் என சில நூல்களிலும் தகவல் உள்ளது.
அவ்வையார், "ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று கோயில் வழிபாட்டோடு, பசுவின் சிறப்பையும் பாடியுள்ளார். ஆலயம் என்ற சொல்லை ஆ+ லயம் என்று பிரித்து "பசுக்கள் சேர்ந்திருக்கும் இடம்' என்று பொருள் கூறுவர். அவ்விடத்தை தொழுவது நன்மையைத் தரும் என்பதே இதன் பொருள். பசுமாடுகள் கட்டியிருக்கும் இடம் தொழுவதற்குரிய (வழிபாட்டுக்குரிய) இடமாக இருப்பதால் "மாட்டுத் தொழுவம்' எனப்படுகிறது.

சுவாமிக்கு தேங்காய் படைப்பது ஏன்?


சுவாமிக்கு முற்றின தேங்காய் உடைக்கிறோம். இதன் தாத்பர்யத்தை உணர்ந்து படைத்தால் சிறப்பு. தேங்காயில் இருக்கும் இளநீர் உலக ஆசைகளைக் குறிக்கும். அதன் கெட்டியான ஓட்டை நம்பி தண்ணீர் இருப்பது போல, நமது உடலும் நிலையானது என்று எண்ணுகிறோம். முற்றின தேங்காயில் நீர் வற்றிவிடுவது போல, ஆன்மிக சிந்தனை நம்முள் வளர உலக ஆசைகள் ஒருபோதும் தீண்டுவதில்லை. நீர் வற்றியபின், தேங்காய் கெட்டுப்போகாமல் காய்ந்து விடும். அதுபோல ஆசைகளைத் துறந்தவனும் பக்குவநிலை பெறுகிறான். முதிர்ந்த தேங்காய் இறைவனுக்குப் படைக்கப் படுவதைப் போல பக்குவ ஆன்மாக்களையும் கடவுள் ஏற்று அருள்புரிகிறார்.

மனதை நான் கொடுக்கிறேன்


கருடவாகனத்தில் பவனி வந்தார் பெருமாள். பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, துளசி, பழம், கல்கண்டு சமர்ப்பித்து வணங்கினர். ஒருவர் மட்டும் பூஜைக்காக எதுவும் வாங்கி வைக்கவில்லை. ""பெருமாளே! எல்லாரும் உனக்கு பூ, பழம் என தந்தார்கள். இவையெல்லாம் உன்னிடம் இல்லையா என்ன! உன்னிடம் இல்லாததைக் கொடுத்தால் தானே பெருமை! அதை நான் தருகிறேன்,'' என்றார். பகவான் ஒரு கணம் அசந்து அவரைப் பார்த்தார். ""பகவானே! துவாபரயுகத்தில் உன் மனதை கோபியர்களிடம் பறி கொடுத்துவிட்டாய். உன்னிடம் இல்லாத மனதை நான் கொடுக்கிறேன், ஏற்றுக் கொள்,'' என்றார் அவர். அவர் தான் சுவாமி தேசிகன். தான் பாடிய யதிராஜ ஸப்ததியில் இப்படி குறிப்பிடுகிறார்.

அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை - காஞ்சிப்பெரியவர்

அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில் தற்காலிக இன்பம் கிட்டலாம். ஆனால், இவற்றால் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு இல்லாமல், வெறும் மரம், மட்டை, கல் மாதிரி ஜடமாக இருப்பதில் பிரயோஜனம் இல்லை. அன்பில்லாத வாழ்வில் ருசியே இல்லை. அன்பு செலுத்தும்போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும், பணச்செலவானாலும் தெரிவதில்லை. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே. ஆனால், அன்புக்குரிய ஒருவரை விட்டுப் பிரியும்போது துக்கம் உண்டாகிறது. அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்கவேண்டும். என்றும் மாறாத வஸ்துவாக இருப்பவர் பரமாத்மா மட்டுமே. அவர் மீது பூரணமான அன்பைச் செலுத்த வேண்டும். நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும் அவரை விட்டு நாம் பிரிவதில்லை. இதுவே சாஸ்வதமான அன்பாகும். ஈஸ்வரனிடம் இந்த அன்பை அப்பியாசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் (உலக உயிர்கள்) விஸ்தரிக்கவேண்டும். இதுவே ஜென்மம் எடுத்ததன் பயன்

ராமனை "பரமாத்மா' என்றுகடவுளாக வணங்கிய ஒருத்தி இவள் மட்டுமே

ராவணன் இறந்ததும், அவனது மனைவி மண்டோதரி பதட்டமாக வந்தாள். ""வாழ்வில் நன்மை செய்தவன் நற்கதி அடைகிறான். தீமை செய்தவன் கீழ்நிலை பெறுகிறான். விபீஷணன் ராமனோடு சேர்ந்து நற்கதி பெற்றான். நீங்கள் தீமை செய்து மாண்டு விட்டீர்களே!''என்று கதறினாள்.
அவளுக்கு எதிரில் மரவுரியும், ஜடையும் தரித்த ராமன் வில்லேந்தி நின்றார். அவரைப் பார்த்ததும் ""பராத்மா'' என்றாள். மனிதனாக வாழ்ந்த ராமனை ராமாயணத்தில் "பரமாத்மா' என்று கடவுளாக வணங்கிய ஒருத்தி இவள் மட்டுமே. அவள் பதிவிரதை (கணவன் சொல்லுக்கு மறுசொல் பேசாதவள்) என்பதால், அவளுக்கு மட்டும் இந்த ரகசியம் தெரிந்தது. தன்னுடைய பரதத்துவத்தை(கடவுள் நிலையை) ராமனால் மண்டோதரியிடம் மறைக்க முடியவில்லை. ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில் மண்டோதரி மட்டுமே, ராமனை "பரமாத்மா' என்று சொல்கிறாள்.

*சுவாமிக்குப் பிரசாதம் படைக்கும்போது திரையிட்டுக் கொள்வது ஏன்?


*சுவாமிக்குப் பிரசாதம் படைக்கும்போது திரையிட்டுக் கொள்வது ஏன்?
.
வீட்டில் சாப்பிடும்போது எல்லோரும் பார்க்கும்படி வாசலில் உட்கார்ந்து நாம் சாப்பிடுவதில்லையே. குளிப்பது, சாப்பிடுவது, ஜெபிப்பது போன்ற விஷயங்களை பிறர் பார்க்கும்படி செய்வது கூடாது என்பது நியதி. தெய்வத்திற்குப் பிரசாதம் படைக்கும் நைவேத்யத்தை ரகசியமாக செய்யும்படி சாத்திரங்கள் கூறுகின்றன. கவுரவம், பயபக்தியோடு மட்டுமே கடவுளுக்கு உணவு படைக்கவேண்டுமே தவிர மேடை காட்சியாக செய்யக்கூடாது. 


திருவிளக்கு பூஜையில் கன்னிப்பெண்கள், சிறுமிகள், சுமங்கலிகள் அனைவரும் பங்கேற்கின்றனர். இதற்கு ஏதேனும் வயது வரம்பு உண்டா?

பெண்களுக்கு வயது அடிப்படையில் சில பெயர்கள் உண்டு. ஏழுவயது வரை பாலா, பதினொரு வயதுவரை கன்னி, அதன்பிறகு திருமணமாகும் வரை வதூ, திருமணமான பின் சுமங்கலி, வயது முதிர்ந்த சுமங்கலிக்கு சுவாசினி என்று பெயர். சுமங்கலி, சுவாசினி ஆகியோர் திருவிளக்கு பூஜை செய்வது தான் சிறந்தது.

* அமாவாசையை சிலர் நிறைந்தநாள் என்று சொல்லி சுபநிகழ்ச்சி நடத்துவது சரியா?
செய்யக் கூடாது. வியாபாரரீதியாக சில விஷயங்களை முடிவெடுப்பது, ஒப்பந்தம் செய்வது போன்றவற்றை சமீபகாலமாக சிலர் செய்து வருகிறார்கள். சாஸ்திரரீதியாக இதற்கு பதில் சொல்ல முடியாது. அவர்களது அனுபவத்தில் நல்லதாக இருக்கலாம்.

** ஆத்திகம் நாத்திகம் இரண்டுமே சரியானதாக என் மனதிற்குப் படுகிறது. ஆத்திகத்தை முழுமையாக ஏற்க வழிகாட்டுங்கள்.

நல்லது என்று ஒன்று இருந்தால் கெட்டது என்று ஒன்றும் இருக்கும். எது நமக்குப் பயனளிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு தேர்வு செய்து கொள்வதே நல்லது. இந்த அடிப்படையில் யோசித்துப் பார்த்தால் ஆத்திகம் நல்லது. மனித வாழ்விற்கு உறுதுணையாகவும், கவலையைப் போக்குவதாகவும் உள்ளது. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கடவுள் கைகொடுப்பார் என நம்பினால் காப்பாற்றப்படுகிறோம் என்பதை உங்கள் அனுபவங்களின் மூலமே சீர்தூக்கிப் பார்க்கலாம். நாத்திகம் நம் கலாச்சாரத்தை கேலிக்கூத்தாக்குகிறது. உலகப்பொதுமறையான திருக்குறள் கடவுள் வாழ்த்துடன் தான் தொடங்குகிறது. சிறந்த ஆன்மிகவாதியாக இருந்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.


*பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வழிபாட்டில் தேங்காய் உடைக்கக் கூடாதா ஏன்?

கர்ப்பமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது. பெண்கள் தேங்காயை உடைக்கவோ, பூசணிக்காயை வெட்டவோ கூடாது. ஆண்கள் தான் எப்போதும் செய்ய வேண்டும். 

கும்பாபிஷேகத்தைத் தரிசிப்பதால் ஏற்படும் நன்மைகள்


கும்பாபிஷேகத்தைத் தரிசிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் கூறுங்கள்.

எல்லா தெய்வங்களும் கும்பாபிஷேக நேரத்தில் சங்கமிக்கிறார்கள். தெய்வத்தின் சக்தியை வரவழைக்கும் அற்புத நிகழ்ச்சி அது. அந்நேரத்தில் தரிசித்தால், எல்லா தெய்வங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும். இதனால் கவலை நீங்கும். எண்ணியதெல்லாம் வெற்றி பெறும்.
நமக்கு ஏழுபிறவிகள் இருப்பது உண்மையா? சொர்க்கம் நரகம் போன்ற உலகங்கள் எங்கிருக்கின்றன?

எல்லா உலகங்களும் உங்கள் கண்ணெதிரிலேயே உள்ளன. அறிவாற்றலைப் பெருக்கி மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டால் எல்லாமே சொர்க்கம் தான். மனதை அடக்கும் சக்தி இல்லாவிட்டால் நாம் வாழும் சூழலே நரகமாகி விடுகிறது. பேரின்பநிலையை அடையும் வரை உயிர் வேறு வேறு உருவில் பிறப்பு, இறப்பை அடைந்து கொண்டே இருக்கும். இந்த அடிப்படையில் பிறவிகளுக்கு எண்ணிக்கையே கிடையாது. ஏழு ஜென்மம் என்பது ஒரு வரையறைக்காக சொல்வதாகும். இவற்றை நாம் புரிந்து கொள்வதற்கு தேவையான அறிவாற்றல் பெற பக்தி செய்வதே நம் கடமையாகும்.

*பூஜையறையில் ஏற்றும் விளக்கை லட்சுமிவிநாயகர் போன்ற தெய்வ உருவம் பொறித்த பித்தளை தாம்பாளத்தின் மீது வைக்கலாமா?

கீழே தெய்வ உருவம் இருக்கும்போது அதன்மீது விளக்கேற்றி வைப்பது கூடாது. சாதாரண தாம்பாளத்தில் ஏற்றி வைக்கலாம். தெய்வ உருவம் பொறித்த தாம்பாளங்களில் பூ, பழம் வைத்து பயன்படுத்தலாம்.

* நாடிஜோதிடம் உண்மையா? அதில் கூறப்படும் பரிகாரத்தைச் செய்தால் குறை தீருமா?

நாடி என்ற சொல்லுக்கு காலஅளவு என்று பொருள். இந்த நாழிகையில் இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இருந்தால் இன்னின்ன நிகழ்வுகள் என்பதை தமது தவவலிமையால் வசிஷ்டர், அகத்தியர் போன்ற முனிவர்கள் நாடிஜோதிடத்தை எழுதி வைத்துள்ளனர். மனிதவாழ்வு மட்டுமின்றி இயற்கைநிகழ்வுகளான மழை, புயல், அமாவாசை, பவுர்ணமி, சூரியசந்திர கிரகணம் பற்றிய குறிப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன. அதனால் நாடிஜோதிடம் உண்மையே. கஷ்டநிவர்த்திக்காக பரிகாரம் செய்வதும் சரியே. ஆனால், ஜோதிடர் நம்பகம் உள்ளவராக இருப்பது மிகமிகஅவசியம். ஒருசிலரின் தவறான போக்கால் ஜோதிடம் மூடநம்பிக்கையாகி விடுகிறது.வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

இறைவனுடைய புகழை பேசுவதாலும், கேட்பதாலும் புனிதர்களாக மாறுகிறோம் --மகாபெரியவர்

இறைவனுடைய புகழை பேசுவதாலும், கேட்பதாலும் புனிதர்களாக மாறுகிறோம். இறைவனுடைய அருள் இல்லாமல் உலகம் இயங்காது.
* கடமைகளை ஆன்மிக சிந்தனையோடு செய்தால், ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை ஏற்பட்டு, உண்மையான பக்தியும், அறிவும் கைகூடும்.
* நாம் அலங்காரம் செய்தால் அகங்காரம் ஏற்படும். அதே அலங்காரத்தை அம்பாளுக்குச் செய்தால் பாவம் தொலையும்.
* அறிவுச் சக்தியும், அறிவியல் ஆற்றலும் அதிகமாகிக் கொண்டிருப்பதால் தான், உலகிற்கு ஆபத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பக்தியும், அமைதியும் தான் உலகில் இன்று ஏற்பட்டுள்ள கோளாறுக்கு ஏற்ற மருந்து.
* இறைவனிடம் நாம் பெற்றிருக்கும் மனம், வாக்கு, உடம்பு இவற்றால் செய்யும் செயல்கள் அனைத்தும் தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும். குணத்தாலும், உடலாலும், மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறையில் செயல்களைச் செய்ய வேண்டும்.
* "ஹரஹர' என்று ஜெபிப்பதால் துன்பம் நீங்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிம்மதி தேடி எங்கெங்கோ அலைகிறோம். இருக்குமிடத்தில் இதைச் செய்ய மனம் மட்டும் ஒத்துழைக்க வேண்டும்.
* நடிகன் பல வேஷம் போட்டாலும், ஆள் ஒருத்தன் தான். அதேபோல் எத்தனை ஜீவராசிகள் இருந்தாலும், அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள், சுவாமி ஒருத்தர் தான்.
* கவலை, குறை மட்டும் தான் பாரம் என்றில்லை, தன்னைப்பற்றிய பெருமையும் பெரிய பாரம் தான். அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது.
* வழிபாட்டு முறை எதுவாக இருந்தாலும், பக்தி அனைவருக்கும் பொதுவானதே.
* உலகம் பல வண்ணங்களைப் பூசிக் கொண்டிருக்கிறது. வண்ணம் கலைந்த பிறகு எஞ்சியிருப்பது உண்மைப் பொருளான இறைவன் மட்டுமே.
* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள் தேடி, அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.
* தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவளவு அமைதியும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும்.
* பாவம் நீங்க ஒரே வழி தியானம் செய்வது தான். தியானத்திற்காக தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். அதே நேரம் புதிதாகப் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியம்.
* தூய்மையோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் அங்கு நல்ல முறையில் மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்.
* நல்ல மனமுள்ளவர்கள், ஒருவரைப் பூஜை செய்கிறார்கள் என்றால், அப்படிப் பூஜிக்கப் படுபவரும், ரொம்ப நல்ல மனம் படைத்தவராகத் தான் இருப்பார்.
* புத்தியை சுத்தப்படுத்திக் கொள்ள கல்வி, மனதை சுத்தமாக்க தியானம், வாக்கைச் சுத்தமாக்க ஸ்லோகம் இருக்கின்றன. இவற்றை வாழ்க்கையில் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

வாழ்க்கையே போர்க்களம்- புத்தர்

 தூய்மையான எண்ணத்துடன் ஒருவன் பேசினாலும், செயல் புரிந்தாலும், அவனை விட்டு விலகாத நிழல் போல, மகிழ்ச்சி அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.
* பகை, பகையால் நீங்காது. அன்பு ஒன்றினாலேயே நீங்கும்.
* உண்மை பேசுங்கள், கேட்பவர்களுக்கு முடிந்ததைக் கொடுங்கள். இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனை அடையலாம்.
* எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான்.காற்றாடி(பட்டம்) காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது. வாழ்க்கை என்பது போராட்டக்களமாகவே இருக்கிறது.
* ஒருவரது வெற்றி, அவரிடம் தோல்வியடைந்தவருக்கு வெறுப்பை மூட்டுகிறது. அவர் வேதனையிலும் வாழ்கிறார். வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் மனதை ஒரே நிலையில் வைத்திருப்போர் இன்பமாக வாழ்வர்.
* அறியாமையுடனும் தன்னடக்கமில்லாமலும், ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, அறிவுடன் தன்நினைவோடு ஒரே நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
* கோபத்தை நயத்தாலும், தீமையை நன்மையாலும், கஞ்சனை தானத்தாலும், பொய்யை உண்மையாலும் வெல்ல வேண்டும்.
* நல்ல வழியில் நன்கு நிர்வகிக்கப்பட்ட மனம் தான் நமக்கு மாபெரும் உதவி செய்யும். தாய், தந்தை, உறவினர்களால் அந்த அளவு உதவியைச் செய்ய முடியாது.
* உடலையும், நாக்கையும், மனதையும் அடக்கியுள்ளவர்களே அறிவாளிகள். ஏழைகள் கூட மாளிகையில் வசிப்பதாக மனதில் நினைத்தால் பணக்காரர்களாகி விடுகிறார்கள்.
* வயலுக்குத் தீமை களை; சமுதாயத்திற்கு தீமை ஆசை. ஆதலால் ஆசையில்லாதவர்களுக்குச் செய்யும் உதவி பெரும் பயனை ஏற்படுத்தும்.
* செயலில் காட்டாமல் ஒருவன் தன்னுடைய வாயால் தேன் ஒழுகப் பேசுவது, அழகும் நிறமும் அமையப்பெற்ற மலர், வாசனை இழந்து காணப்படுவது போல் பயனற்றதாகும்.
* நம்மால் இவ்வளவு பெரிய செயலை எப்படி செய்ய முடியும் என்று நினைத்து நல்ல செயலைச் செய்யாமல் இருந்து விடாதே. நீர் துளித் துளியாகக் கொட்டியே குடம் நிரம்பிவிடும்.
* சிறிய இன்பத்தை விடுவதன் மூலம், பெரிய இன்பத்தை அடைய முடியும் என்றால் பெரியதற்காகச் சிறியதை விட்டுக் கொடுப்பவன் அறிவாளி.
* பண்புள்ள மனிதன் <இம்மை, மறுமை இரண்டிலும் ஆனந்தமடைகிறான்.
* சமூகம் நலமுடன் வாழ வேண்டும். துக்கமும் துயரமும் நீங்க வாழ வேண்டும். சமூகத்தின் பகையான தனியுடைமை ஒழிக்கப்பட வேண்டும்.
* உலகத்தில் ஆசையைப் போன்ற நெருப்பில்லை. வெறுப்பை போன்ற பகை இல்லை. மயக்கம் போன்ற வலை இல்லை, காமத்தைப் போன்ற புயல் இல்லை.
* விழிப்புடன் இருப்பவனுக்கும், அசைவற்ற மனம் உடையவனுக்கும் நன்மை தீமை என்னும் இரண்டையும் ஒதுக்கியவனுக்கும், அச்சம் எப்போதும் ஏற்படுவதில்லை.
* ஆழமாகவும், திறமையாகவும் படித்தல், நல்ல வார்த்தைகளைப் பேசுதல், மரியாதையுணர்வு, அடக்கம், மனதிருப்தி, நன்றி, நல்ல அறிவுரைகளைக் கேட்டல் இவையே ஒரு மனிதன் செய்த நல்ல அதிர்ஷ்டம்.

இறைவனின் நாமத்திற்குச் சிறப்பு அதிகம்.

 இறைவனின் நாமத்திற்குச் சிறப்பு அதிகம்.
 மந்திரம்,ஸ்தோத்திரம், ஹோமம் இவை எல்லாவற்றையும் விட, இறைவனின் நாமம் (பெயர்) சொல்வது மிக எளிமையானது. ராமா, கிருஷ்ணா என்று சொல்வதில் என்ன சிரமம்! இது அபரிமிதமான பலன் தரவல்லது என பெரியோர்கள் கூறுகின்றனர்.
* கலியுகத்தைக் கடப்பதற்கு நாமஸ்மரணம் என்னும் இறைநாமத்தை ஜெபிப்பதே சிறந்தது என ஞானிகள் கூறுகின்றனர்.
* நாரதர், சுகபிரம்மம், பிரகலாதர், உத்தவர் போன்ற மகான்கள் ஆதிகாலத்தில் இறைநாமத்தின் மகிமையை உலகிற்கு எடுத்துரைத்தனர்.
* வைகுண்டபதியான நாராயணனே நாம சங்கீர்த்தனத்தின் சிறப்பை எடுத்துக்காட்ட கிருஷ்ண சைதன்யராக அவதரித்தார். நாமத்தின் பெருமையை, ""கேட்டதை தரும் கற்பக விருட்சம்'' என குறிப்பிடுகிறார்.
* கபீர்தாசர், சூர்தாசர், துக்காராம், ஞானேஸ்வரர், ஏக்நாத், சோகாமேளர், ஜக்குபாய், மீரா முதலிய ஞானிகள் கலியுகத்தில் அவதரித்து நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை நிலைநாட்டியுள்ளனர்.
* போதேந்திர சுவாமிகள், சத்குரு ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் சத்குருசுவாமி பஜனை சம்பிரதாயத்தை தென்னகத்தில் பரப்பினர்.
* கடலிலேயே பெரிய கடல் பிறவிக்கடல். நாமஸ்மரணத்தில் ஈடுபடுவர்கள் பிறவிக்கடலை சுலபமாக தாண்டி விடுவர். கோடி ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக மட்டுமே, ஒருவரது மனம் இதில் ஈடுபடும் என துளசிதாசர் கூறுகிறார்.
* எங்கெல்லாம் ராமநாமம் ஜெபிக்கப்படுகிறதோ அந்த இடத்தில் ராமதூதர் ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்புரிவார்.
* ஹரிநாமம் ஜெபிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. காலநேரம் பார்க்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். அந்த வீடே வைகுண்டம் போலாகிவிடும் என்று ஞானேஸ்வரர் குறிப்பிடுகிறார்.
* ராமானுஜர் எல்லோரும் மோட்சத்திற்குச் செல்லவேண்டும் என்பதற்காக, ""ஓம் நமோ நாராயணாய' என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அருள்செய்தார்.
* ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் பகவான் நாம மகிமையைக் கூற முடியாமல் ஓய்ந்து விட்டதாக ஸ்ரீதர ஐயாவாள் குறிப்பிடுகிறார்.
* எட்டெழுத்து மந்திரமான நாராயணநாமத்தின் பெருமையை திருமங்கையாழ்வார், ""நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்,'' என்று போற்றுகிறார்.
* இறைநாமத்தை ஜெபித்தால் உயிரும் உள்ளமும் உருகுவதாக கூறுகிறார் வள்ளலார்.
* இதயத்தின் ஆழத்தில் இருந்து பக்தியுடன் தனியாகவோ, கோஷ்டியாகவோ நாமசங்கீர்த்தனம் செய்யும்போது இறைவன் நம்மைத் தேடி வருவது உறுதி.
* இசையோடு நாமசங்கீர்த்தனம் செய்யும் போது இறைவனும் நம் இசைக்கேற்ப நர்த்தனமாடி வருவான். நம் இதயக்கோயிலில் ரத்தினசிம்மாசனம் இட்டு அமர்வான். அப்போது பரமானந்தம் நம்முள் ஊற்றெடுக்கும்.
* இந்த ஆனந்த அனுபவத்தை பிறருக்கு எடுத்துரைக்க முடியாது. கரும்பின் இனிமையை வார்த்தைகளால் எப்படி வர்ணித்தாலும் கரும்பைச் சுவைத்தவரைத் தவிர மற்றவர்க்கு அதனை உணரமுடிவதில்லை.
* இறைநாமத்தின் சிறப்பை "நாமருசி' என்று குறிப்பிடுவர். இதனை ரசித்து ருசித்தால் தான், நம் பிறவி அர்த்தமுள்ளதாகும்.