Thursday, May 30, 2019

அம்மனுக்கு பொங்கல் பொங்குவது ஏன்




அம்மனுக்கு பொங்கல் பொங்குவது ஏன்?


பொங்கல் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று பஞ்ச பூதங்களுக்கு ஒப்பிடுகின்றனர். மண்பானை என்பது நிலம், அதில் நிரப்பப்படுகின்ற தண்ணீர், பற்ற வைக்கப்படுகின்ற நெருப்பு, அது எரிய துணைபுரிகின்ற காற்று, அதன் புகை செல்கின்ற ஆகாயம் என்று பஞ்ச பூதங்களும் பொங்கலுடன் நிறைந்து நிற்கிறது.

 பச்சரியில் பசு நெய் ஊற்றி, அதனுடன் வெல்லம், பால், முந்திரி, திராட்சை, ஏலம் சேர்த்து மணக்க மணக்க பொங்கல் வைப்பார்கள். இந்த பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்கின்றனர் முன்னோர்கள். பச்சரியும் பசுநெய்யும்... பொங்கல் வைக்க பச்சரிசியைத்தான் பயன்படுத்துகின்றனர். பச்சரிசி என்பது ஒருவரது பக்குவமில்லாத நிலையை காட்டுகிறது. அது பொங்கி வெந்த உடன் சாப்பிடும் நிலைக்கு வந்து விடுகிறது.

அரிசியுடன் வெல்லம், நெய், ஏலம், சுக்கு, உலர் திராட்சை என்ற அன்பு, அருள், சாந்தம், கருணை உள்ளிட்ட நல்ல குணங்களையும் கலந்து விடும்போது அது அருட்பிரசாதமாகி விடுகிறது.

மனம் என்ற அடுப்பில் இறை சிந்தனை என்ற நெருப்பை பற்ற வைப்பதின் மூலம் அது ஆண்டவன் விரும்பும் நிவேத்தியமாகிறது.

Monday, May 27, 2019

மடிப்பிச்சை எடுப்பது ஏன்

வீடுகளில் மடி ஏந்தி பிச்சை எடுக்க செல்வதால் ஒருவனுக்கு உள்ள தான் என்ற அகங்காரமே இல்லாமல் போக வேண்டும் என்ற எண்ணதினாலும் தன்னை மிஞ்சினவன் எவனும் இல்லை என்ற எண்ணமே மானிடனுக்கு வரக கூடாது என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்ற கருத்துக்கு இணங்க பிச்சை எடுத்து திருப்பதி செல்வது விசேஷம் என பெரியோர்களால் கூறப்படுகிறது

Sunday, May 19, 2019

ஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்

ஆசிர்வாதம் மூலம் அனைத்து
செல்வங்களும் பெறலாம் ..!!
நாம வீட்ல உள்ள பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறது உண்டா..?
சில வீடுகள்ல பொறந்த நாள், கல்யாண நாள், வெளியூர் வெளிநாடு போறப்ப, தீபாவளி அன்னிக்கு புது புடவை கட்டினப்ப இது மாதிரி சந்தர்ப்பங்கள்ல பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறது உண்டு.

பெரியவங்க - வயசானவங்க - கால்ல விழுந்து ஆசி பெற்றால் நம்ம சக்தி அதிகப்படும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது.
அசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல.. ஆசிர்வாதம் செய்வதும் கூட உங்களுக்கு சக்தியை கொடுக்கும்..
நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில்தான் விஷயம் இருக்கிறது.
100 வயது பெரியவரிடம் ஆசி வாங்னேன்..அவர் தீர்க்காயுசா இருப்பா என்றார். ரெம்பவே  சந்தோஷமா இருந்துச்சு ..! 
ஐயா எவ்வளவு நாளா இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆசி பண்றீங்க என்றேன்.
அது ஒரு 30 - 40 வருசமா அப்படித்தான் ஆசி பண்றேன் என்றார்.
அவரது தீர்க்காயுளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்..!!.
சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்.
அய்யோ என் கால்ல போய் விழுந்துட்டு என பதறுவர்.
இதெல்லாம் தவறு. ஆசி வழங்காமல் புறக்கணித்தல் பாவம் என்கிறது சாஸ்திரம்.
புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும் ,தீர்க்க சுமங்கலிமான் பவ என பெண்ணுக்கும் ஆசி வழங்கலாம் ...
வயதானவர்கள், சகல தோசங்களும் நீங்கப்பெற்று சகல செல்வங்களும் பெற்று ,குடும்ப ஒற்றுமையுடன் , நீண்ட ஆயுளுடன் வாழுங்க  -- "வாழ்க வளமுடன்" -- என்று ஆசிர்வாதிக்கலாம் ...
தமிழில் அழகான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பிறருக்கு ஆசியாக கொடுங்கள்.
அவர்களுக்கும் அவை கிடைக்கும் உங்களுக்கும் அவை வந்து சேரும்..இது பிரபஞ்ச விதி .
"வாழ்க வளமுடன்"  என்பது ஒரு மந்திரச் சொல்லாகும்..!  இப்படி வாழ்த்துவதால் பிரபஞ்சசக்தி அந்த வார்த்தைகளை உங்களுக்கும் உங்களை சார்ந்தோரையும் வளமாக வாழ வைக்கிறது என்பது பலரது அனுபவ உண்மை..
நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின்படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது.
ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது -  வாய்ப்பு கிடைத்தால்  - அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறும் போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது.
காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது.
மேலும் சொல்லும் வார்த்தைகளில் அதிக சக்தி இருக்கிறது.
மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது.
பல பாவங்களையும், தோஷங்களையும் கூட அது போக்குகிறது.
பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுவதை பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள் ..!
உங்கள் சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Wednesday, May 15, 2019

பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?


பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

 

இறுதி சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதி சடங்குகள் நடத்தப்டுகிறது. ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.

 

இறந்தவர்கள் மரணத்திற்கு பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது. ஆனால் பல இறுதி சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது. இந்த பதிவில் அனைத்து இறுதி சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை பார்க்கலாம்.

 

மூக்கில் பஞ்சு வைப்பது

இறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறிவிடும். எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான்.

 

விளக்கேற்றுவது

இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். உயிர் சக்தியானது உடலை விட்டு பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறிவிடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேற தொடங்கிவிடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றிவரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்தபின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிகொள்ள வேண்டும்.

 

ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும்

ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகிவிடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும்.

 

ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?

அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல்ரீதியாக கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.

 

மூங்கில் பாடை

மூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது, இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

 

கால்கள் சேர்த்து கட்டப்படுவது

இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது.

 

மண்பானை

இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை

தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறா எதற்காக வளர்க்கபடுகிறது ????

தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறா எதற்காக வளர்க்கபடுகிறது ????
1. கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது.
2. மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும்.
3. கரையான் வராது அப்படியே வந்தால் அதுவும் இரையாகி விடும்.
4. கற்சிற்பங்களை சேதப்படுத்தும் சிற்றுண்டிகள் வராது. மீறி வந்தால் அதுவும் புறாக்களுக்கு இரையாகி விடும்.
5. வவ்வால் உள்ளே வராது, ஆந்தையும் உள்ளே வராது புறாக்கள் எழுப்பப்படும் ஓசை அவைகளை விரட்டிவிடும்.
6. புறாக்கள் எழுப்பப்படும் ஓசையானது நோயாளிகளை குணப்படுத்தும். கோயில்களில் உள்ள சக்தியை சிதையாமல் அதிகரித்து மனிதனுக்கு தரவல்லது.

Sunday, May 5, 2019

நாயினும் கடையேன் என்று தன்னை மாணிக்க வாசக சுவாமிகள் கூறிகொள்கிறார் ஏன்அவ்வாறுசொல்கிறார்?

நாயினும்  கடையேன்  
                     

நாயினும் கடையேன் என்று தன்னை 
மாணிக்க வாசக சுவாமிகள் கூறிகொள்கிறார்  ஏன்அவ்வாறுசொல்கிறார்?
மற்ற ஜீவ ராசிகளை விட நாயை மட்டும் 
சொல்வதனால் நாயின் அப்படிப் பட்ட குணங்கள் தான் என்ன என்று சிந்திப்போம்
தன்னை  பொல்லாவினையேன், புழுத்தலைப் புலையனேன், ஊற்றையேன்  என்று கீழ் நிலைப்படுத்திக் கொண்டும்  திருப்தி இல்லை போலும்

நாயேன், நாயடியேன், அடிநாயினேன், ஊர்நாயின் கடையேன் என்று  திரும்ப  திரும்ப  தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்கிறார்   
நாய் தன் தலைவனை அறியும் தன்மை 
உடையது மேலும் தன் தலைவன் மேல்  விசுவாசம் மிக்கது .சேக்கிழார் பெருமான் கண்ணப்ப நாயனார் புராணத்தில் வேட்டை நாய்களை பற்றி சொல்லும் போது ஒன்றுக்கு ஒன்று நேர் படாமல் செல்லும் என்கிறார் அதாவது வரிசையாக செல்லாமல் மாறி மாறி செல்லும் தன்மையது . தனக்கு பிடிக்காது  ஒதுக்கும் ஒன்றை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வது  போல நாய்   தன் வாயினால் கக்கியதை தானே திரும்ப திண்ணும் இயல்புடையது .இதன் பொருள் வெறுத்த ஒன்றையே திரும்ப விரும்பும் தன்மையைக் குறிக்கிறது . ஐந்தறிவு நாய்க்கு அது இயல்பு. ஆனால் ஆறறிவு உடைய  மனிதனுக்கும் தான் வெறுத்ததையே  மீண்டும் மீண்டும் விரும்புகின்ற குணமுண்டு  
ஆக ஐந்தறிவு உள்ள நாயின் குணத்தை உயர்த்தி தான் அதை விட கீழானவன் என்கிறாரா? அல்லது கீழ்தரமான நாயை விட நான் கீழானவன் என்ற அர்த்தத்தில் கூறு கிறாரா? எப்படி தன்னை ஐந்தறிவு ஜீவனை விட கீழானவன் என்று கூறும் பாங்கு என்ன ?
ஆன்மாவானது  பிறவி, பந்தம், பற்று, பாசம் போன்ற இயல்புகள் மனிதனை திரும்ப திரும்ப வந்து ஆட்டி வைப்பதையும்  பிறவித் தளையில் இருந்து விடுபட முயற்சிப் பதையும்  இறைவனின் திருவடியை சேர தடையாய் இருப்பதையும்  கருத்தில் கொண்டே அவர் நாயேன் என்று நாயின்  பண்பை வைத்துக் கூறியிருக்க வேண்டும் என்பதே கடை நாயினும் கீழான இந்த நாயேனின் கருத்து

பிழை இருப்பின் மன்னிக்கவும்

இது சார்ந்த பெரியோர்களின் கருத்துக்கள் 
வரவேற்கபடுகிறது   
திருவாசகத்தில் 67 இடங்களில் நாயேன் என்று பாடியுள்ளார் 

1.சிவபுராணம்    (60வது அடி)

நாயிற் கடையாய்க்  கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

2.கீர்த்தித் திருஅகவல்   (127வது அடி )

நாயினேனை நலம் மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென

3.திருவண்டப் பகுதி   (164 வது அடி )

சொல்லுவது அறியேன் வாழிமுறையோ
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது

4.  திருவண்டப் பகுதி (172 வது அடி )

குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்து நிரம்பிய

5.போற்றித் திருஅகவல் (144 வது அடி )

கனவிலும் தேவர்க்கு அறியாய் போற்றி
நனவிலும் நாயேற்(கு) அருளினை போற்றி

6.போற்றித் திருஅகவல் (185 வது அடி )

பஞ்சுஏர்  அடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

7.போற்றித் திருஅகவல் (219 வது அடி ) 

பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல் மாலை கொண்டருள் போற்றி

8.திருச்சதகம் (அறிவுறுத்தல் 3 வது பாடல் )

வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாயடியேன்

9.திருச்சதகம் (அறிவுறுத்தல் 6 வது பாடல் )

சூழ்த்துமது  கரம் முரலும் தாரோயை நாயடியேன்

10.திருச்சதகம் (சுட்டறுத்தல் 3 வது பாடல் )

நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு

11.திருச்சதகம் (சுட்டறுத்தல் 6 வது பாடல் )

சிந்தனைநின் தனக்காக்கி நாயினேன்தன்
கண்ணினை நின் திருப்பாதப் போதுக் காக்கி

12. திருச்சதகம் (சுட்டறுத்தல் 8 வது பாடல் )

நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே  நாயினுக்கு தவிசிட்டு

13.திருச்சதகம் (சுட்டறுத்தல் 8 வது பாடல் )

நாயினேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப்பின்னும்

14.திருச்சதகம் (ஆத்துமசுத்தி 4 வது பாடல் ) 

கிற்ற வாமனமே கெடுவாய் உ டையானடி நாயேனை

15.திருச்சதகம் (ஆத்துமசுத்தி 7 வது பாடல் )

வினைஎன் போல் உடையார் பிறர் யார் உடையான் அடி நாயேனைத்

16.திருச்சதகம் (ஆத்துமசுத்தி 9 வது பாடல் )

நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நன்னெறி காட்டித்

17.திருச்சதகம் (கைம்மாறு கொடுத்தல்10வதுபாடல்)

அறிவனே அமுதேயடி நாயினேன்

18. திருச்சதகம் (அனுபோகசுத்தி முதல்  பாடல் )

நாசனே நான் யாதுமொன்று அல்லாப் பொல்லா நாயான

19.திருச்சதகம் (அனுபோகசுத்தி 2 வது பாடல் )

செய்வது அறியாச் சிறுநாயேன் செம்பொற் பாதமலர் காணாப்

20.திருச்சதகம் (அனுபோகசுத்தி 6 வது பாடல் )

 உடையார் உடையாய் நின்பாதம்  சேரக்கண்டு இங்கு ஊர்நாயின்

21. திருச்சதகம் (அனுபோகசுத்தி 9 வது பாடல் )

தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான

22.திருச்சதகம் (அனுபோகசுத்தி 10 வது பாடல் )

நகுவேன் பண்டு தோள் நோக்கி  நாணம் இல்லா நாயினேன்

23.திருச்சதகம் (காருண்யத்திரங்கல் 9 வது பாடல் )

ஆர்த்த நின்பாதம் நாயேற்கு அருளிடவேண்டும் போற்றி  

24. திருச்சதகம் (ஆனந்தத்தழுந்தல் 4 வது பாடல் )

ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளுநீ

25. திருச்சதகம் (ஆனந்த பரவசம் 4 வது பாடல் ) 

ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே

26.திருச்சதகம் (ஆனந்தாதீதம் முதல் பாடல் )

கீறு இலாத நெஞ்சுடைய நாயினேன்

27. திருச்சதகம் (ஆனந்தாதீதம் 10 வது பாடல் ) 

ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
ஆடும் நின் கலழ் போது நாயினேன்

28.நீத்தல் விண்ணப்பம் ( 6 வது பாடல் )

பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே

29.நீத்தல் விண்ணப்பம் ( 13 வது பாடல்)

கடலினுள் நாய்நக்கி யாங்குஉன் கருணைக் கடலின் உள்ளம் 

30.திரு அம்மானை (4 வது பாடல் )

தான் வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு

31.திரு அம்மானை (5 வது பாடல் )

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை

32.திரு அம்மானை (7 வது பாடல் )

நாயான நம் தம்மை  ஆட்கொண்ட நாயகனைத்

33.திரு அம்மானை (10 வது பாடல் )

கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட

34.திருப்பொற்சுண்ணம்  ( 8வது பாடல்)

நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை

35.திருக்கோத்தும்பி (8 வது பாடல்)

நன்றாக வைத்தென்னை நாய் சிவிகை ஏற்றுவித்த

36.திருக்கோத்தும்பி (10 வது பாடல்)

நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்

37. திருக்கோத்தும்பி (12 வது பாடல்)

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் 

38.திருக்கோத்தும்பி (20 வது பாடல்)

நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த

39.திருச்சாழல் (10 வது பாடல் )

தான் அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை

40.திருப்பூவல்லி (3 வது பாடல் )

நாயிற் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்துத்

41.திருப்பொன்னூசல் (முதல் பாடல்)

நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு 

42.திருப்பொன்னூசல் (6 வது பாடல்)

கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்

43.திருத்தசாங்கம் (9 வது பாடல் )

நாளுமணு காவண்ணம் நாயெனை ஆளுடையான்

44.கோயில் மூத்த திருப்பதிகம் (9 வது பாடல்) 

நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே

45.செத்திலாப் பத்து (7 வது பாடல்)

நாயி னேன் உனை நினையவும் மாட்டேன்

46.ஆசைப் பத்து (6 வது பாடல் )

எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்க கில்லேன் இல்வாழ்க்கை

47.ஆசைப் பத்து (10 வது பாடல் )

நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே நானோர் துணைகாணேன்

48.புணர்ச்சிப் பத்து (9 வது பாடல் )

தாதாய் மூவேழு லகுக்கும் தாயே நாயேன் தனை ஆண்ட

49.வாழாப் பத்து (6 வது பாடல் )

அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை

50.திருக்கழுக்குன்றம் (2 வது பாடல் )

சிட்டனே சிவலோகனே சிறு நாயினும்  கடையாய வெங்

51.கண்டப் பத்து (3 வது பாடல்)

அருத்தியினால் நாயடியேன்  அணிகொள் தில்லை கண்டேனே

52. கண்டப் பத்து (4 வது பாடல்)

கல்லாத புல்ல றிவிற்  கடைப்பட்ட நாயேனை

53. கண்டப் பத்து (5 வது பாடல்)

ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு

54. கண்டப் பத்து (9 வது பாடல்)

பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை

55.பிரார்த்தனைப் பத்து (6 வது பாடல் )

புறமே கிடந்து புலைநாயேன் புலம்புகின்றேன் உடையானே

56. பிரார்த்தனைப் பத்து (7 வது பாடல் )

இடரே பெருக்கி ஏசற்றிங்கு  இருத்தல் அழகோ அடி நாயேன்

57.குழைத்த பத்து  (3 வது பாடல் )

ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை

58.குழைத்த பத்து  (8 வது பாடல் )

நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்

59.குழைத்த பத்து  (10 வது பாடல் )

அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகின்றேன் உடையானே 

60.உயிருண்ணிப் பத்து (2 வது பாடல் )

நானாரடி யணைவானொரு நாய்க்குத் தவிசி ட்டிங்கு

61.திருவேசறவு (5 வது பாடல் )

பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே

62.அற்புதப் பத்து (9 வது பாடல் )

பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய் போல

63.எண்ணப் பதிகம் (2 வது பாடல் )

தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினால்

64.யாத்திரைப் பத்து (2 வது பாடல்)

 நகவே ஞாலத் துள்புகுந்து  நாயே அனைய நமையாண்ட

65.ஆனந்த மாலை (5 வது பாடல் )

நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே

66.ஆனந்த மாலை (5 வது பாடல் )

நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ

67.அச்சோப்பதிகம் (9 வது பாடல் )

நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த


திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற் கும் உருகார் என்பது போல நாயிற் கடைப் பட்டஇந்த ஆன்மா முக்தி பெற
இறைவனிடம் அழுது அழுது பாடியுள்ள இந்த அற்புத தேனை நாமும் பருகி  மாணிக்க வாசகப் பெருமானுக்கு நன்றி செலுத்தி அவர் பாதம் பணிவோம்.