Friday, January 31, 2014

ஏன் இத்தனை கடவுள்!

கோயிலில் பக்திச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பேசியவர், ""ஸ்ரீதேவியை வணங்கு; அருள் தருவார் பெருமாள். துர்க்கையை துதித்தால் துன்பம் நீங்கும். பிள்ளையாரை வழிபட பிரச்னை தீரும். ஒப்பிலியப்பனை வணங்கினால் வாழ்வு வளமாகும்'' என்று பேசிக் கொண்டிருந்தார். ஒருவர் எழுந்து இடைமறித்தார்.
""ஐயா! ஆண்டவன் ஒன்று தானே! ஆனால், பல தெய்வங்களின் பெயரைச் சொல்கிறீர்கள். இன்ன கடவுளிடம், இன்னதான் கேட்க வேண்டும் என விதிமுறை இருக்கிறதா என்ன? அல்லது ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்று தருவரா?''
பேச்சாளர் கேட்டார்.
""உன் வயதென்னப்பா?''
""ஏழு''
""உன் பக்கத்தில் இருப்பவர்கள் யாரப்பா....?''
""என் அம்மா; அக்கா; அது என் அப்பா...''
பேச்சாளர் சொன்னார்.
""உனது கல்வி, உணவு, விளையாட்டுப் பொருள் என தேவையைப் பொறுத்து, அப்பாவிடமோ, அம்மாவிடமோ, அக்காவிடமோ கேட்கிறாய் இல்லையா....! அதே போல், எல்லோரும் அவரவருக்கு தேவையானதை அவரவருக்கு பிரியமான கடவுளிடம் கேட்கிறார்கள். இதனால் தான் பலதெய்வ வழிபாடு! புரிகிறதா!'' என்றார்.
சிறுவன் புரிந்து கொண்டான். கேட்ட எல்லாருக்கும் சிறந்த உபதேசமானது.

குறை இல்லை கோவிந்தா!


பெருமாள் பக்தர் ஒருவர் அதிகாலை நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.
ஒரு குருவிடம் சென்று, ""குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன்'' என்றார்.
குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து,""தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா?'' என்று கேட்டார்.
அந்த நபரோ, ""பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை...?''என்றார்.
உடனே பெருமாள் பக்தர் ஆச்சரியத்துடன், ""எனக்கு அந்த மந்திரம் தெரியாதே! அதைச் சொல்லேன்!'' என்றார்.
வந்தவர்,""கோவிந்தா! கோவிந்தா!'' என்றார்.
பக்திமான் ஏமாற்றத்துடன்,""இது தானா! நான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது?'' என்றார்.
குரு அவரிடம்,""நீ தவறாக நினைக்கிறாய். ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சகஸ்ரநாமம். இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது. இதைப் போல அற்புதம் வேறில்லை. ஆனால், எல்லாரும் பீஷ்மராக முடியுமா? பாமரனும், பெருமாள் அருள் பெற சொல்லப்பட்டதே கோவிந்த நாமம். திரவுபதியின் மானம் காத்தது அதுவே. எந்த மந்திரமும் அறியாதவன் கூட "கோவிந்தா' என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'' என்றார் குரு. பக்தரின் மனதில் தெளிவு பிறந்தது.

நெப்போலியனின் மாபெரும் வெற்றிக்கு காரணம் அவனது வித்தியாசமான சிந்தனைகளே!

மாவீரன் நெப்போலியனிடம் ஓடிவந்தான் அந்த வீரன்.
""அரசே! தங்களுக்கு மகிழ்ச்சிதரத்தக்க செய்தி ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன். சொல்லட்டுமா?'' என்றான்.
நெப்போலியன் சிரித்தான்.
""வீரனே! நான் துன்பப்படும்படியாக ஏதேனும் செய்தி இருந்தால் முதலில் அதைச் சொல், மகிழ்ச்சி தரும் செய்தியை அடுத்ததாக கேட்கிறேன்,'' என்றான்.
அப்போது, ஒரு வீரன் பணிவுடன்,""தாங்கள் இப்படி சொல்வதன் காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டான்.
""வீரர்களே! வாழ்க்கை என்ற போர்க்களத்தில் நாம் இருக்கிறோம். இன்பத்தை தரும் செய்திகள் தற்காலிக சுகத்தைத் தான் கொடுக்கும். துன்பப்படும்படியான செய்திகள் தான் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத்தரும். வீரமாக நடை போட வைக்கும். எதிரிகளை எதிர்கொள்ளச் செய்யும். இன்பமான செய்திகளால் நமது திறமையை எடை போடும் விதத்தில் எதுவும் நடக்க வாய்ப்பில்லை,'' என்றான்.
தங்கள் தலைவனின் விளக்கம் கேட்டு, வீரர்கள் அசந்து போனார்கள்.
நெப்போலியனின் மாபெரும் வெற்றிக்கு காரணம் அவனது வித்தியாசமான சிந்தனைகளே! வாழ்க்கை போராட்டத்தில் நாமும் வித்தியாசமாக சிந்தித்து முன்னேறுவோம்.

மனமும் குணமும் மாறாது

  ஊதாரித்தனமாக செலவழிக்கும் ஒரு பணக்காரியிடம் ஐந்து பசுக்கள் இருந்தன. தன் வீட்டில் கறக்கும் பாலை விற்றுக் கிடைக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவழித்து விடுவாள். போதாக்குறைக்கு கடனும் வாங்குவாள். அவள் எதிர்வீட்டில், ஒரே பசுவுடன் ஏழைப்பெண் இருந்தாள். அந்த பசு தரும் வருமானம் தான், அவள் குடும்ப வாழ்வை ஓட்டியது. அவள் அந்தப்பணத்திலும் சிறிது மிச்சம் பிடிப்பாள். பணக்காரி, தன் வீட்டுப்பாலை முழுமையாக விற்று விட்டு, ஏழைப் பெண்ணிடம் கடனுக்கு பால் வாங்கினாள். இப்படியே ஐம்பது செம்பு பால் வாங்கி விட்டாள்.
ஒருமுறை, ஏழையின் பசு இறந்து விட்டது. தன் நிலையைச் சொல்லி, பணக்காரியிடம், ""அம்மா! நீங்கள் என்னிடம் வாங்கிய பாலுக்குரிய பணத்தைக் கொடுங்கள்,'' என்றாள். பணக்காரியோ, பாலே வாங்கவில்லை என மறுத்து விட்டாள்.
விஷயம் கோர்ட்டுக்குப் போனது.
""என்னிடம் ஐந்து பசுக்கள் இருக்க, இவளிடம் ஏன் பால் வாங்கப் போகிறேன்?'' என்று குண்டை தூக்கிப் போட்டாள் பணக்காரி. ஏழையோ, நடந்த உண்மையைச் சொன்னாள்.
நீதிபதி புத்திசாலி. நடந்ததைப் புரிந்து கொண்டார். ஆளுக்கு ஐந்து செம்பு தண்ணீரைக் கொடுத்து, "கால் கழுவி வாருங்கள்' என்றார்.
பணக்காரி, ஐந்து செம்பை நீரையும் காலில் மொத்தமாக கொட்டிக்கவிழ்த்து விட்டு, அழுக்கு கூட போகாமல் உள்ளே வந்தாள். ஏழையோ, ஒரே செம்பில் அழுக்கு தீர கால் கழுவி வந்து விட்டாள். நான்கு செம்பு நீரைத் தொடவே இல்லை. இதிலிருந்தே, பணக்காரியின் ஆடம்பரத்தைப் புரிந்து கொண்ட நீதிபதி, ஏழைக்கு சாதகமாக தீர்ப்பளித்தார்.
மனமும், குணமும் இயற்கையில் எப்படி அமைந்ததோ அப்படித்தான் கடைசி வரை இருக்கும். அதை மறைத்து நல்லவர் போல் நடிக்க முயன்றாலும் முடியாது.

பூணுல் ஏன் இடது தோளில் அணிகிறோம். ? பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது ?

பூணுல் ஏன் இடது தோளில் அணிகிறோம். ?


 ........................................................................ பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது ? இடது தோளில...் அணியவேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்பொதும் பூணுல் இடது தோளின் இருக்க வேண்டும். இடது தோளின் பூணுல் இருக்கும்போது அதற்கு உபவீதி என்று சிறப்புப் பெயர். உபவீதியாக எப்பொதும் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் (ஸதோப வீதினா பாவ்யம்) சொல்கிறது. தேவர்களுக்கு பணிவிடை செய்யும் வேளையில் பூணுல் இடது தோளில் இருக்க வேண்டும். அதாவது உபவீதியாக இருக்க வேண்டும. நம் முன்னோர்களை ஆராதிக்கும்போது பூணுல் வலது தோளில் இருக்க வேண்டும். ரிஷிகளை வழிபடும் வேளையில் இரு தோளிலுமாக தொங்க வேண்டும். அதாவது மாலை போல அணிய வேண்டும். முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி. மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை. காலம் மூன்று. முர்த்திகள் மூன்று. வேதம் மூன்று. பூணுலின் பிரிவுகளும் மூன்று. மூன்று எண்ணிக்கை முற்று பெற்றதாக கூறும். ஏலத்தில் மூன்று முறை அழைப்பார்கள். நீதி மன்றத்திலும் மூன்று முறை அழைப்பார்கள். அது முற்று பெற்றதாக கருதுகிறோம். பூணுல் பரமாத்மா வடிவம் (யஞஜாக்ய பரமாத்மாய). பரமாத்மா மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரீபாத் ஊர்தவ) மூன்று அடி அளந்தவர். அப்போது முற்றுப் பெற்றது. தேவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு ஆதாரமான பூணுலும் மூன்று பிரியாக இருப்பது பொருந்தும். அவன் ஆராதிக்கும் காயத்ரீ மூன்றடிகளோடு விளங்குபவள். அவளை மூன்று வேளையும் வழிபட வேண்டும். அதற்கு காரணமாக பூணுலும் மூன்று பிரியாக வந்தது சிறப்பு.சைவநீதி விளங்குக உலகமெல்லாம்Mehr anzeigen

யார் உயர்ந்த மனிதன்?


யார் உயர்ந்த மனிதன்?
மகான் ஒருவரிடம் சீடர் ஒருவர்,
குருவே, உயர்ந்த மனிதனுக்கும்
தாழ்ந்த மனிதனுக்கும் என்ன
வேறுபாடு? என்று கேட்டார். அன்பனே!...
உயர்ந்த மனிதன் தன்
ஆத்மாவை நேசிக்கிறான்.
தாழ்ந்தவன் தன்
சொத்தை மட்டுமே நேசிக்கிறான்.
இதுதான் வேறுபாடு என்றார்

சூலம்(வார சூலை) என்பது என்ன? -


சூலம்(வார சூலை) என்பது என்ன? ----------------------------------------------- நாம் பயன்படுத்தும் நாட்காட்டிகளிலோ,பஞ்சாங்களிலோ ஒவ்வொரு கிழமைக்கு ஒவ்வொரு திசையில் ...சூலம் என போட்டியிருக்கும்.இதற்கு வாரசூலை என்ற மற்றொரு பெயரும் உண்டு.பெரும்பாலனவர்கள்ஒரு காரியமாக புதுவிஷயமாக செல்வது என்றால் அன்று நாம் செல்லும் திசையில் சூலம் உள்ளதா? என்பதை பார்த்து தான் காரிய முயற்சி செய்வார்கள். இதற்கான அடிப்படை காரணம் என்னவெனில்,இந்த உலகை ஆளும் சிவபெருமான் தன் சூலாயுத்தை ஓய்வுக்கு கொடுக்க ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திசையில் சற்று நேரம் தரையில் வைத்து வைப்பார்.அப்போ நாம் அதை எதிர்கொண்டு போக்க்கூடாது எனபதால் தான் வார[ தினம் ] சூலம் வாரசூலை உருவானது. சிவனின் சூலம்.., ஞாயிறு = மேற்கு. திங்கள் = கிழக்கு. செவ்வாய்= வடக்கு. புதன்= வடக்கு. வியாழன்= தெற்கு. வெள்ளி= மேற்கு. சனி= கிழக்கு. சிவனின் சூலம் கூட காலையில் 5 நாழிகை தான் பூமிமீது வைப்பார் , 2 மணி நேரம் மட்டுமே காலையில் வாரசூலை கணக்கிடவும், பின் 2 மணிநேரத்திற்க்கு மேல் மேற்கொண்டு அந்த திசையில் பயணிக்கலாம் என்பதே பொருள் ஆகும்

சுப்ரம்மணியம்


சு+பிரம்ம+நியம் என்பதே சுப்ரம்மணியம் என்று சொல்லப்படுகிறது.

 சு என்றால் உயர்வான அல்லது மேலான என்று பொருள். ப்ரம்மம் என்பது பரமாத்மா அதாவது சதாசிவத்தைக் குறிப்பது.... நியம் என்றால் தோன்றிப் பிரகாசிப்பது அல்லது ஒளிர்வது. அதாவது சதாசிவத்தின் ஞானத்திலிருந்து(நெற்றிக்கண்) உதித்து ஞானமே வடிவாகப் பிரகாசிப்பவன் என்பது பொருள். எனவேதான் ஞான சூரியன் என்றும். சேந்தன் என்றும் கூறுவார்கள். தமிழர்களுக்கே சொந்தமான முருகன் வேறு தமிழ் வேறு அல்ல என்பது தமிழ் அறிஞர்கள் கருத்து. 12 தோள்களையும் 12 உயிரெழுத்தாகவும், 18 கண்களை 18 மெய்யெழுத்தாகவும், 6 இன எழுத்துக்களை ஆறு முகங்களாகவும், ஃ என்ற ஆயுத எழுத்து வேலாகவும் குறிப்பிடுவார்கள். உலகில் தோன்றிய சித்தர்களுக்கெல்லாம் தலைவன் முருகனே. எனவேதான் சித்தநாதன் என்பார்கள். அதனால்தான் போகர் பழனியில் தங்கள் குலகுருவான சுப்ரமண்ய சித்தருக்கு நவபாசான சிலையைச் செய்து பிரதிஷ்டை செய்தார். அகத்தியர், அருணகிரி போன்றவர்களுக்கும் அவ்வளவு ஏன், சிவனுக்கும் கூட குருவாக முருகன் குருபரன் என்று சொல்லப்படுவதன் காரணம் அவர் பகுத்தறிவின் அடையாளமாக, மனிதனின் வடிவமாகவேத் திகழ்வதுதான். அவர் மூலமாகவே தமிழ் பூமிக்கு வந்தது என்பது ஆன்றோர் வாக்கு. காந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்தே ஸ்கந்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது. சிவபெருமான் கொண்டுள்ள ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்த்தே முருகனுக்கு ஆறுமுகம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கீழ் நோக்கிய முகம் என்பது பொருள். சிவபெருமானின் உலகத்தை நோக்கிய முகமாகிய ஞானக் கண்ணாகிய நெற்றிக்கண்ணை தனது ஆறாவது முகமாகக் கொண்டவன் முருகன். எனவே முருகனின் தத்துவத்தை முழுவதும் உணர்ந்தவன் ஞானத்தை உணர்ந்தவனாவான். வேல் என்பது அறிவின் நிலையைக் குறிப்பது. கூர்மையாக, அகலமாக, ஆழமாக சிந்திப்பவன் உலகையே வெல்லலாம் என்பது நுட்பம். மனிதனின் ஆறு ஆதாரங்களும் ஆறு படைவீடுகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன. ஆணவம், கன்மம், மாயை இந்த மூன்றையும் அடக்குபவன் ஞானத்தை அடையலாம் என்பதைக் குறிக்கும் விதமாகவே மயில், யானை, ஆடு இந்த மூன்றையும் அடக்கி வாகனமாக வைத்திருப்பதாகக் காட்டப்படுகிறது. யோகத்தில் திளைத்து ஞானத்தை உணர்ந்தவனுக்கு முதுமை என்பதே கிடையாது என்பதை உணர்த்தவே குமரன் என்பார்கள். முருகு என்றால் அழகு என்பது பொருள். தமிழ் அறிஞர்கள் மு என்றால் மெல்லினமென்றும், ரு என்றால் இடையினம் என்றும், கு என்றால் வல்லினம் என்று அழகு தமிழில் குறிப்பிடுவார்கள். இவை சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று மண்டலங்களைக் குறிப்பதாகவும் சொல்வதுண்டு. சரவணபவ என்றால் நாணல் காட்டில் பிறந்தவன் என்று வடமொழிக்காரர்கள் கதை கட்டுவார்கள். ஆனால் தமிழ் மொழியைப் பொருத்தவரை சரம் என்றால் மூச்சு அவணன் என்றால் திண்ணிய அல்லது பூரணமான, செல்வாக்கு உடைய என்று பொருள். அதாவது உயிர்களுக்கு மூச்சாக விளங்குபவன் என்றும், மூச்சை கவனித்து முறையாக சுவாசிப்பவர்களுக்குள் ஞானமே வடிவாகத் தோன்றுபவன் என்று பொருள். சதாசிவத்தில் சக்தி ஒடுங்கி நிற்கிறது. பிரபஞ்சத்தில் சிவ சொரூபம், சக்தி சொரூபம் என்று இரண்டு நிலைகளில் விளங்குகிறது. நாம் பெற்றுள்ள உடல் சக்தியின் சொரூபமாகும். அதற்குள் உயிராக விளங்கும் அறிவுப் பொருள் சிவ சொரூபமாகும். இந்த இரண்டையும் இணைத்து அதன் பயனால் மேன்மையடைவதையே திருக்கல்யாணம் என்று சொல்கிறார்கள். அவ்வேளையில் வடகோடு தாழ்ந்து தெற்கு உயர்வது என்று சொல்வது எதற்காகவென்றால், வடக்கு என்பது நம் தலைப்பகுதியைக் குறிப்பது, அதாவது பரமாத்வை அடைவதற்கான அனைத்து விஷயங்களும் அடங்கிய பகுதி. ஞான வாசலே அங்குதான் உள்ளது. தெற்கு என்பது மனிதனை கீழ் நோக்கி அழுத்தி இந்திரிய சுகங்களில் அழுத்தி வைக்கும் உடல் பகுதியைக் குறிப்பது. திருமணம் ஆனவர்கள் மனம் முழுவதும் இந்திரிய சுகத்தில் திளைத்து அதிலேயே உழன்று கொண்டிருப்பதால் அவர்கள் ஞானத்தை அடைய முடியாமல் போகிறது. இதையே வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது என்றார்கள். அதற்காகவே அகத்தீயான ஞானத்தை அனுப்பி அதை சமன் செய்ததாகச் சொல்வார்கள். அதாவது யோக நிலையில் உண்மையை உணர்ந்து அளவும் நெறி முறையும் கடைபிடித்தால் இரண்டு பகுதியும் சமநிலையில் திகழும். இதையே முருகனும் உணர்த்துகிறார். அவருக்கு இரண்டு சக்திகள். ஒன்று தெய்வயானை கிரியா சக்தி, இரண்டு வள்ளி இச்சா சக்தி. தெய்வயானை தேவர்கள் நிலையைக் குறிக்கும் கிரியா சக்தி. எனவேதான் அவளை தேவர்களின் அரசனின் மகளாகச் சொன்னார்கள். அதாவது மனிதர்களும் தேவர்களுக்கு நிகராக கிரியையாகிய மேலான செயல்களின் மூலம் தெய்வத்தை மணந்திடலாம் அதாவது இணைந்திடலாம் என்பதைக் குறிப்பவள் தெய்வயானை. வள்ளியைப் பொருத்தவரை இச்சை அதாவது கடவுள் மேல் உண்மையான பற்று அல்லது அன்பு கொண்டு கடவளை மணந்திடலாம் அதாவது இணைந்திடலாம் என்பதை உணர்த்துகிறாள். இதில் மற்றொரு சூக்குமமான கருத்தும் உண்டு. குலத்தில் மேலானவர், கீழானவர் என்பதெல்லாம் கடவுளுக்கு முன் கிடையாது. தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களும் உண்மையான பக்தியின் மூலம் இறைவனை அடையலாம். அதாவது யோகத்தின் மூலம் ஞானமே வடிவான இறைவனை அடைவதைக் குறிப்பவள் தெய்வயானை. பக்தியின் மூலம் இறைவனை அடைவதைக் குறிப்பவள் வள்ளி. எனவே குலத்தில் தாழ்ந்தவர்கள் என்று சொல்லி பிற மனிதர்களை தன்னிடத்தில் வர அனுமதிகாதவர்களை இறைவன் தன்னிடத்தில் வர அனுமதிக்கமாட்டான். இது தெரியாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக பல இலட்சம் மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படாமலேயே இருந்தார்கள். தற்போதுதான் அந்த நிலை மாறியுள்ளது. ஏனென்றால் தற்போது நடைபெறுவது அறிவின் காலம். அதாவது அறிவு இயல் காலம். விண்ணாகிய இறைவனின் காலம். அதுவே விண் ஞான காலம். கலிகாலத்தில் இறைவன் நியாயமான தீர்ப்பை வழங்க வருவார் என்பது இதைத்தான். இப்போதுதான் இறைவனின் நடுநிலையான ஆட்சி பேராற்றலின் ஆட்சி, பேரறிவின் ஆட்சி உலகில் நடைபெறுகிறது. இதுவே சித்தம் உணர்ந்த சித்தர்களின் காலம். நாமும் அதை உணர்ந்து அறிவால் அறிவை அறிந்துணர்ந்து பேரறிவைப் பெற்று மேன்மை  அடையலாம்

தங்கத்தை காலில் அணிந்தால்?

தங்கத்தை காலில் அணிந்தால்?

முன்னொரு காலத்தில் இருந்து முற்றிலும் அழிந்து போன ஒரு வியாதி உண்டு. அது பொண்ணுக்கு வீங்கி. அதாவது தங்க நகை போட்டுப் பார்க்கும் அள...விற்கு வசதி இல்லாமல், ஏக்கத்தில் வாடும் பெண்களுக்கு கன்னத்தில் வீக்கம் வரும். அப்படி வந்தால் அந்த பெண்ணுக்கு யாரது தங்க நகையை கழுத்தில் அனுவித்து விடுவார்கள். அந்த வீக்கம் மறைந்து போகும். இன்று விலை உச்சத்தில் இருந்தாலும் தங்கம் போட முடியாத அளவிற்கு தரித்திரம் யாரும் இல்லை. ஆனால் இந்த தங்கத்தை அணிந்து கொள்ள சில கட்டுப்பாடுகள் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? தங்கத்தை மகாலக்ஷ்மியின் அம்சம் என்பார்கள். இந்த தங்கத்தை இடுப்புக்கு கீழே அணியக் கூடாது என்கிறது தர்மசாஸ்திரம். குறிப்பாக காலில் கொலுசாக அணியும் பழக்கம் சில பெண்களிடம் இருக்கிறது. தங்க கொலுசு போடும் அளவிற்கு வசதி இருந்தாலும் காலில் அணிந்தால், அடுத்த பிறவியில் தெருநாயாக பிறப்பார்கள் என்கிறது சாஸ்திரம். அத்துடன் முடிந்து விடாது. அடுத்து வரும் பிறவிகளில் தகரம் கூட அணிய முடியாத தரித்திரமாக பிறப்பார்கள் என்றும் சொல்கிறது.

இதுவல்லவா இல்லறம்!

ஒரு அரசன், ""இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?'' என ஒரு துறவியிடம் கேட்டான்.
""நடத்துகிறபடி நடத்தினால் ஒவ்வொன்றும் சிறந்ததே'' என்று அவர் பதில் கூறினார்.
அரசனுக்கு புரியவில்லை.
""வா! என் கருத்தை விளக்குகிறேன்,'' என்று அரசனைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார்.
வழியில் ஒரு அரண்மனையில் ராஜகுமாரிக்கு நடந்த சுயம்வரத்தை வேடிக்கை பார்க்க இருவரும் சென்றனர். ராஜகுமாரி அங்கு நின்ற ஒரு சந்நியாசியின் கழுத்தில் மாலையிட்டாள். சந்நியாசியோ, ""எனக்கேது குடும்ப வாழ்வு,'' என்று சொல்லி மறுத்து விட்டு, வேகமாக வெளியேறினார்.
இளவரசியோ,""இவரைத் தவிர வேறு யாரையும் கனவிலும் கூட நினைக்க மாட்டேன்,'' என்று அவரை பின்தொடர்ந்தாள்.
அரசனும், துறவியும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். எப்படியோ சந்நியாசி தப்பி விட்டார். பின் தொடர்ந்து வந்த துறவியையும், அரசனையும் பார்த்த ராஜகுமாரி, தன் கதையைக் கூறினாள். அவர்களும் ஏதும் அறியாதவர்கள் போல கேட்டனர். அப்பொழுது இரவாகி விட்டதால், அங்கேயே தங்கிவிட்டு, அடுத்தநாள் காலை செல்ல தீர்மானித்தனர்.
அவர்கள் தங்கிய இடத்தில் இருந்த ஆலமரத்தில், புறா ஒன்று தன் பெண் துணையோடும், குஞ்சுகளோடும் குடும்பம் நடத்தி வந்தது.
இவர்களைக் கண்டதும், ஆண்புறா ""நமது வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துவிட்டார்கள். இரவோ, ரொம்பவும் குளிராக இருக்கிறது.
குளிர் காய இவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றது. மேலும் குச்சிகளையும் எடுத்து வந்து அவர்கள் அருகில் போட்டது.
அவர்கள் அவற்றை அருகில் கிடந்த சருகுகளுடன் சேர்த்து "தீ' மூட்டி குளிர் காய்ந்தனர்.
அப்போது ஆண் புறா, மற்ற புறாக்களை நோக்கி, ""நாமே இல்லறத்தில் இருப்பவர்கள். விருந்தாளிகளை சுகப்படுத்த வேண்டியது நமது கடமை. நம்மிடம் அவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை. என் உடம்பைக் கொடுத்தாவது இவர்களின் பசியைப் போக்குகிறேன்,'' என்று சொல்லி, சற்றும் தாமதிக்காமல் எரியும் தீயில் விழுந்து உயிர்விட்டது. இந்த உண்மை தெரியாத அரசன் அதை எடுத்து சாப்பிட முற்பட்டான். அப்போது பெண்புறா, ""என் கணவரால் மட்டும் இந்த மூவரின் பசி எப்படி அடங்கும்? கணவன் செய்த தர்மத்தை மனைவி முழுதாக செய்ய வேண்டுமல்லவா!'' என்றபடி தானும் தீயில் விழுந்தது.
இப்படி இரண்டு புறாக்களும் நெருப்பில் விழவே, அவர்கள் மூவரும் திகைப்படைந்தனர்.
துறவி, அந்த இரண்டு புறாக்களின் இல்லற தர்மத்தைப் பற்றி போற்றி, பாராட்டினார்.
அப்போது குஞ்சு புறாக்கள் இரண்டும், ""பெற்றோர் செய்த தான, தர்மத்தை பின்பற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை,'' என்று சொல்லி அவையும் தீயில் விழுந்து மாண்டன. தர்ம ஆத்மாக்களான, அந்த புறாக்களை தின்ன அவர்களுக்கு மனம் வரவில்லை.
அடுத்தநாள் இளவரசியை அவளது தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, அரசனும் துறவியும் தமது ஊர் நோக்கி திரும்பினர். வழியில் துறவி அரசனிடம், ""சந்நியாசி என்றால், சுயம்வர சந்நியாசியைப் போல தன்னை விரும்பி வலிய வந்த பெண், ராஜகுமாரி என்று தெரிந்தும் ஏற்காதது போல் இருக்க வேண்டும். இல்லறத்தான் என்றால், புறாக்களைப் போல் தங்கள் உயிரையும் ஒருவருக்கொருவர் கொடுக்கத் தயங்கக்கூடாது,'' என்று விளக்கினார். அரசனும் உண்மையை உணர்ந்தான்

கடவுள் இருக்கும்போது நான் ஏன் உங்களோடு வர வேண்டும்?''

சிறுவன் ஒருவன் எப்போதும் கடவுள் சிந்தனையிலேயே இருந்து வந்தான். முற்பிறவியின் பக்தி சிந்தனை இப்போதும் தொடர்ந்தது.
ஒருநாள் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அவ்வழியே வந்த மன்னன், சிறுவனின் முகத்தில் அலாதியான பிரகாசம் தென்படுவதைக் கண்டான்.
அவன் உடம்பில் புழுதி ஒட்டியிருந்ததைக் கண்டு, ""தம்பி! ஏன் இப்படி மண்ணில் விளையாடுகிறாய்?'' என்றான்.
சிறுவனும் தத்துவமாகவே விளக்கம் அளித்தான்.
""இந்த உடலே மண்ணால் ஆனது தானே! என்றாவது ஒருநாள் மண்ணில் சேரத் தான் போகிறது. அதனால் இப்போதே புழுதியானால் என்ன?'' என்றான்.
சிறுவனின் பேச்சைக் கேட்ட மன்னன் மகிழ்ந்தான்.
"நீ என்னுடன் வருகிறாயா?' என்று கேட்டான்.
"என் நிபந்தனைக்கு சம்மதித்தால் வருகிறேன். நான் தூங்கும்போது விழித்திருக்க வேண்டும். நான் சாப்பிட்டாலும் தாங்கள் சாப்பிடக் கூடாது. நான் உடுத்தினாலும், நீங்கள் உடுத்தக் கூடாது. எங்கு சென்றாலும் என்னோடு வரவும் வேண்டும்'' என்றான்.
"ஏனப்பா! நீ சொல்வது யாருக்கும் சாத்தியமில்லையே'' என்றான் மன்னன்.
அதற்கு சிறுவன்,""ஏன் இல்லை! நான் அன்றாடம் தூங்கினாலும், அவர் தூங்க மாட்டார். நான் சாப்பிடுகிறேன். அவர் ஏதும் சாப்பிடுவதில்லை. நான் ஆடை அணிந்தாலும், அவர் அணிவதில்லை. எங்கு சென்றாலும், என்னோடு உடன் வருகிறார். அவரே கடவுள். அவர் இருக்கும்போது நான் ஏன் உங்களோடு வர வேண்டும்?'' என்றான்.
சிறுவனின் ஞானமொழி கேட்ட மன்னன் வாயடைத்து கிளம்பினான்

ஓரறிவு உயிரான மாமரமே கல்லெறிந்தால் கனியைக் கொடுக்கிறது. ஆறறிவு படைத்த நாம் ஏதாவது கொடுப்பது தானே சரி

ஒரு நாட்டில் மழையில்லாமல் வறட்சி அதிகரித்தது. மக்களின் நிலையை தெரிந்து கொள்ள, மன்னர் மந்திரியுடன் குதிரையில் மாறு வேடத்தில் வலம் வந்தார். நகர்ப்புறத்தைக் கடந்து வெகுதூரம் சென்று விட்டனர்.
ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள் மாமரத்தின் அடியில் இருவரும் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு கல் மன்னரின் தலையில் விழுந்து ரத்தம் வெளிப்பட்டது.
கல் வந்த திசையை மந்திரி வெகுண்டு பார்த்தார். சற்று தூரத்தில் ஒரு மூதாட்டி நின்றாள்.
"மன்னர் மீது கல் எறிய உனக்கு என்ன தைரியம்?' என்று அதட்டி, அவளை இழுத்து வந்தார்.
நடுங்கியபடி அவள் மன்னர் முன் நின்றாள்.
""மன்னா! அறியாமல் செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள். மூன்று நாள் பட்டினியாக என் கணவர் படுக்கையில் கிடக்கிறார். அவருக்கு பழம் பறிக்க மரத்தின் மீது கல்லெறிந்தேன். தவறுதலாக அது உங்கள் மீது பட்டு விட்டது'' என்று சொல்லி கும்பிட்டாள்.
மந்திரியிடம் மன்னன்,""அரண்மனைக்கு இவளை அழைத்துச் சென்று, வயிறார உணவும், உடையும், நூறு பொற்காசும் கொடுத்தனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்'' என ஆணையிட்டார்.
மந்திரி,""மன்னா! இது தான் தப்புக்கு தண்டனையா?'' என்று ஆச்சர்யமாக கேட்டார்.
""இது பஞ்ச காலம். அவளும் நாம் இருப்பதை அறியாமலேயே தவறு செய்தாள். இந்த பஞ்சகாலத்தில், ஓரறிவு உயிரான மாமரமே கல்லெறிந்தால் கனியைக் கொடுக்கிறது. ஆறறிவு படைத்த நாம் ஏதாவது கொடுப்பது தானே சரி!'' என்றான்

கர்வமுள்ள மனதில் கடவுள் தெரியமாட்டார்

ஒருஇளைஞனுக்கு கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது.
அவன் ஒரு வேத பாடசாலைக்கு சென்றான். அங்கிருந்த பண்டிதரிடம் தனது விருப்பத்தை சொன்னான். அவர் இளைஞனுக்கு வேதம் கற்றுக்கொடுத்ததோடு, பல நூல்களையும் படிக்கச் செய்தார். இளைஞனும் புலமை பெற்றான்.
ஆனால், கடவுள் காட்சி கிடைக்கவில்லை. வெறுப்படைந்த அவன் அங்கிருந்து வெளியேறினான். "இவ்வளவு கற்றிருக்கிறோம். ஆனாலும் நமக்கு தரிசனம் கிடைக்கவில்லையே' என்று நினைத்தான்.
சிலகாலம் அமைதியாக இருந்தான்.
ஒருசமயம், ஒரு மகானிடம் தன் மனதில் இருந்த எண்ணத்தை கொட்டினான். தான், படித்த மேதாவியாக இருந்தும் கடவுள் தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என்றும் ஆணவமாகப் பேசினான்.
அவனது கர்வத்தைக் கவனித்த மகான்,""தம்பி! ஒரு நிமிடம் நான் சொல்வதைக்கேள். நீயோ நிறைய கற்றதாகவும், பல அனுபவங்கள் பெற்றதாகவும் சொல்கிறாய். அவற்றையெல்லாம் நான் சோதிக்க வேண்டுமானால் அதற்குரிய அவகாசம் எனக்கு இல்லை. எனவே, உனக்கு என்னென்ன தெரியுமோ, அவற்றையெல்லாம் ஏட்டில் எழுதி வா! நான் ஓய்வாக இருக்கும் வேளையில் அவற்றை படித்து உனக்கு கடவுளைக் காணும் பாக்கியம் இருக்கிறதா என்பதை அறிந்து சொல்கிறேன்,'' என்றார்.
இளைஞன் வீட்டிற்கு திரும்பினான். தான் படித்ததையெல்லாம் எழுத ஆரம்பித்தான். இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது.
பின்பு அவற்றை ஒரு பையில் கட்டி, மகானை சந்திக்கச் சென்றான்.
மகான் அவனிடம், ""மகனே! இவ்வளவு ஏடுகளை படிக்கும் பொறுமை என்னிடம் இல்லை. இதில், தேவையற்றதை நீக்கி, சுருக்கமாக ஒரே ஒரு ஏட்டில் நீ படித்ததன் சாராம்சத்தை மட்டும் எழுதி வா!'' என்றார்.
இளைஞனும் சில மாதங்கள் முயற்சி செய்து, அவர் சொன்னதைச் செய்தான். அவரைச் சந்திக்கச் சென்றான்.
அப்போது மகான் அவனிடம், "அடடா! இப்போது எனக்கு முன்புபோல் பார்வை சரியாக இல்லையே! சரி, இந்த ஏடுகளில் இருப்பதை இன்னும் சுருக்கமாக ஒரு ஏட்டில் எழுதி வா. பதில் சொல்கிறேன்,''என்றார்.
இளைஞன் சளைக்கவில்லை. அதையும் எழுதிக்கொண்டு, இன்னும் சில மாதங்கள் கழித்து அவரிடம் வந்தான்.
அப்போதும் மகான் அதை படிக்கவில்லை. ""நீ கற்றவற்றை ஒரே ஏட்டில் எழுதி கொண்டு வந்தது மகிழ்ச்சிதான். ஆனாலும், இதையே இன்னும்
சுருக்கமாக ஒரு வரியில் எழுதிக் கொண்டு வா. உனக்கு பெரிய வேலையும் அல்ல,'' என்று சொல்லி அனுப்பிவைத்தார். இப்போது இளைஞனுக்கு என்ன எழுதுவெனத் தெரியவில்லை. எனவே, வெற்று ஏட்டுடன் வந்தான்.
மகான் புன்னகையுடன், ""மகனே! நீ கேட்ட கேள்விக்கான பதிலை இப்போது நீயே புரிந்துகொண்டிருப்பாய். நீ கற்றதாக சொன்னதெல்லாம், இந்த வெற்று ஏட்டைப் போன்றது தான். வெறும் கல்வி, கடவுளைக் காண உதவாது. அவரைக் காண வேண்டுமானால் முதலில் அவரிடம் மனப்பூர்வமான பக்தி செலுத்து. அதைவிடுத்து "நான் அவ்வளவு படித்தவன், இவ்வளவு தெரிந்தவன்,' என்று பேசுவதால் பயன் ஏதும் ஏற்படாது. இதனால் கர்வமே உண்டாகும்.
கர்வமுள்ள மனதில் கடவுள் தெரியமாட்டார்,''என்றார்.

சூரியனுக்கே சவால்

கவுசிக முனிவரின் மனைவி சைப்யா கணவனுக்கு சேவை செய்வதில் மிகவும் சிறந்தவள். முன்வினைப்பயன் காரணமாக, கவுசிகர் குஷ்டரோகத்தால் அவதிப்பட்டார். எனினும் அவள், அவருக்கு பணிவிடை செய்வதில் குறை வைக்கவில்லை.
இருப்பினும், மனைவியின் மனஉறுதியைப் பரிசோதிக்க எண்ணினார் முனிவர். சைப்யா விடம், தன்னை ஒரு தாசியின் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். பதிலேதும் பேசாத சைப்யா, ஒரு தாசியிடம் சென்று தன் கணவர் தொழுநோயாளி என்ற <உண்மையையும், அவரது விருப்பத்தையும் சொல்லி, மன்றாடி சம்மதிக்க வைத்து விட்டாள். சைப்யாவிடம் அந்த தாசி, ""உன் கணவர் இங்கு வந்து சென்ற விஷயம் வெளியில் தெரியக் கூடாது,'' என நிபந்தனை விதித்தாள்.
சைப்யாவும் அவ்வாறே வாக்களித்தாள். பின், தன் கணவரை, ஒரு கூடையில் அமரச் செய்து தாசி வீட்டுக்குப் புறப்பட்டாள்.
அந்த வேளையில், மாண்டவ்யர் என்ற முனிவரைக் கழுமரத்தில் ஏற்றும்படி அந்நாட்டு மன்னன் உத்தரவிட்டிருந்தான். கழுவில் ஏற்றப்பட்ட மாண்டவ்யர் உயிர் பிரியாமல் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். அந்த வழியை சைப்யா கடந்தாள். அந்த நேரத்தில், கவுசிகருக்கு தன் காலை மடக்கி கூடைக்குள்ளே வைத்திருந்ததால் வலி அதிகமானது. அதனால் கூடைக்கு வெளியில் காலை தூக்கி உதறினார். அது கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாண்டவ்யரின் மீது பட்டுவிட்டது. ஏற்கனவே, வலியால் துடித்துக் கொண்டிருந்த மாண்டவ்யர், தன் ஞானதிருஷ்டியால் கவுசிக முனிவர் தான் தன்னை உதைத்தார் என்பதை உணர்ந்து கோபம் கொண்டார்.
""கழுவிலே கிடந்து அவதிப்படும் என்னை உதைத்த கவுசிகரே! உமது உயிர் நாளை சூரியன் உதிக்கும் போது போய்விடும்,'' என்று சபித்தார். மாண்டவ்யரின் சாபம் கேட்ட சைப்யா, ""தெரியாமல் நடந்து விட்ட தவறைப் பொருட்படுத்தாமல் மன்னியுங்கள்,'' என அவரிடம் மன்றாடினாள். மாண்டவ்யரோ மனம் இரங்கவில்லை.
சைப்யாவுக்கு கோபம் வந்து விட்டது. ""மாண்டவ்யரே! நான் எனது பதிவிரதா தர்மத்திற்கு பங்கம் வராமல் இது நாள் வரையில் நடந்திருக்கிறேன். அது உண்மையானால், நாளை சூரியன் உதிக்காது,'' என்று பதிலுக்கு சபதம் செய்தாள்.
அதன்படியே சூரியனால் மறுநாள் உதிக்க முடியவில்லை. இது கண்ட தேவர்கள், அத்திரி முனிவரின் தர்மபத்தினி அனுசூயாவை, சைப்யாவிடம் தூது அனுப்பினர்.
அனுசூயா சைப்யாவிடம், ""சூரியன் உதிக்காததால் பூலோகமே இருண்டு கிடக்கிறது. உயிர்களின் நன்மைக்காக உன் சாபத்தை திரும்பப்பெறு'' என்று வேண்டினாள்.
சைப்யா அவளிடம்""அம்மா! சூரியன் உதயமானால் என் கணவரின் உயிர் போய்விடும். அதனால், என் சபதத்தை மாற்ற முடியாது,'' என்று மறுத்தாள்.
""கலங்காதே! மாண்டவ்யர் இட்ட சாபம் பலித்தாலும், கவுசிகரின் உயிரை மீட்டுத் தருவது என் பொறுப்பு,'' என்று தைரியம் சொன்னாள் அனுசூயா.
சைப்யாவும் மனம் இரங்கி, சூரியன் உதிக்க சம்மதித்தாள். கிழக்கில் சூரியன் உதயமானது. கவுசிகர் இறந்து போனார்.
அனுசூயா தன் இரு கரங்களையும் குவித்தபடி, விஷ்ணுவைப் பிரார்த்தித்தாள்.
""திருமாலே! நான் இதுவரை பதிவிரதையாக வாழ்ந்திருக்கிறேன். அதனால் இந்த வரத்தை எனக்கு தந்தருள வேண்டும். சைப்யாவின் கணவர் கவுசிகர் உயிர் பெறுவதுடன், அவரது குஷ்டநோயும் நீங்கி குணம் பெற வேண்டும்,'' என்றாள்.
சற்று நேரத்தில் கவுசிக முனிவரும் தூங்கி எழுந்தது போல கண் திறந்து பார்த்தார். அவருடைய குஷ்டநோயும் நீங்கியது. தன் மனைவியின் கற்புத்திறத்தை எண்ணி வியந்தார். தன் மனைவியின் பெருமையை உலகறியச் செய்யவே இவ்வாறு செய்ததாகக் கூறினார். கற்புத்திறன் மிக்க இத்தகைய பெண்கள் வாழ்ந்ததால் தான், இன்றும் நம் பூமியில் ஆன்மிகம் நிலைத்திருக்கிறது.

நண்பனுக்காக தன் பிரகாசத்தையே விட்டுக் கொடுத்த பிறகும், சூரியன் இன்னும் இவ்வளவு பிரகாசிக்கிறான்

துவாரகையைச் சேர்ந்த சத்ராஜித்துக்கு நண்பனாக விளங்கியவர் சூரியன். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். ஒருநாள், காலையில் உதித்த நண்பனான சூரியதேவனை சத்ராஜித் வணங்கினான். தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்த சூரியனின் பிரகாசத்தை சத்ராஜித்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ""சூர்யா! எப்போதும் உன்னை நெருப்புக் கோளமாகவே பார்க்கிறேன். கண்கள் கூசுகின்றன. என் நண்பனாக உன்னைக் காண முடியாதா?'' என்று கேட்டான்.
சூரியதேவன் சிரித்துக் கொண்டே, தன் கழுத்தில் இருந்த சியமந்தகம் என்னும் ரத்தினத்தை மறைத்து விட்டு, அவன் முன் காட்சியளித்தார். என்ன ஆச்சரியம்! இப்போது, அவன் கண்கள் கூசவில்லை.
""நண்பனே! நீ விரும்பியதைக் கொடுக்கவும் காத்திருக்கிறேன்'' என்று வரம் அளிக்கவும் தயாரானார் சூரியன்.
சத்ராஜித்துக்கு சூரியனின் சியமந்தக மணியை தானும் அணிய வேண்டும் என்ற ஆவல் உண்டானது. சூரியனும் அதைக் கொடுத்து விட்டார் நண்பனுக்காக. சத்ராஜித் அதை அணிந்தபடியே, துவாரகைக்குத் திரும்பினான். அவனைக் கண்ட மக்கள், கிருஷ்ணரிடம் சென்று சூரிய பகவான், துவாரகைக்கு வந்திருப்பதாக தெரிவித்தனர்.
கிருஷ்ணர் தன் ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்தார். ""மக்களே! வந்திருப்பது சூரியதேவன் அல்ல! நம் சத்ராஜித் தான், சூரியனின் மாலையை அணிந்திருக்கிறான். அவன் அணிந்திருக்கும் சியாமந்தக மணியால், அவன் பிரகாசமுள்ளவனாகி விட்டான்'' என்ற உண்மையை தெரிவித்தார்.
நண்பனுக்காக தன் பிரகாசத்தையே விட்டுக் கொடுத்த பிறகும், சூரியன் இன்னும் இவ்வளவு பிரகாசிக்கிறான் என்றால், அந்தக்கால சூரியன் எப்படி இருந்திருக்குமென கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை! சரிதானே!

ஆளுக்கொரு அறிவுரை


ஒருமுறை, ராமகிருஷ்ணரின் சீடரான பிரும்மானந்தர் படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த ஒருவன், அவரைக் கேலிசெய்தான்.
பிரும்மானந்தர் வருத்தமடைந்தாலும், அவனைத் தட்டிக் கேட்கவில்லை. குருநாதரிடம் சென்று, நடந்ததைச் சொன்னார்.
ராமகிருஷ்ணர் அவரிடம், ""நீ ஏன் அவனைக் கண்டிக்கவில்லை. தவறு செய்பவனைக் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும்,'' என்றார்.
மற்றொரு முறை, மற்றொரு சீடரான விவேகானந்தர் படகில் சென்றார். அதே ஆசாமி படகில் அவருடன் வந்தான். அவன், விவேகானந்தரை கேலி செய்ய ஆரம்பித்தான். விவேகானந்தர் மாவீரர் அல்லவா! கை முட்டியை மடக்கி, அவனை ஓங்கிக் குத்தப் போனார். அவன் அப்படியே ஒடுங்கி விட்டான்.
இந்த சம்பவத்தை பெருமையாக குருவிடம் வந்து சொன்னார் விவேகானந்தர். உடனே, ராமகிருஷ்ணர் அவரைக் கடிந்து கொண்டார்.
''துறவிகளுக்கு பொறுமை வேண்டும். துறவு ஏற்ற நீ இப்படி செய்யலாமா?'' என்றார்.
அவர் சென்ற பிறகு மற்ற சீடர்கள், ""குருவே! நீங்கள் ஆளுக்கொரு அறிவுரையாக மாற்றி மாற்றி சொன்னது ஏன்? புரிந்து கொள்ள முடியவில்லையே,'' என்றனர்.
""பிரும்மானந்தர் அப்பாவி. அவருக்கு கொஞ்சமாவது உணர்ச்சி வர வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னேன். விவேகானந்தர் உணர்ச்சிவசப்படுபவர். அவருக்கு மேலும் உணர்ச்சியை ஊட்டி கோபக்காரனாக்கக்கூடாது. அவரவர், குணத்திற்கேற்பவே புத்திமதி சொல்ல வேண்டும். புரிகிறதா?'' என்றார்.
சீடர்கள் அவரது அறிவுத்திறன் குறித்து வியந்தனர்.

துர்வாசரை விரட்டிய விஷ்ணு சக்கரம்!

ரகுவம்சத்தில் தோன்றிய கடைசி அரசர் அம்பரீசன். இவர் ஏகாதசி விரதத்தை தவறாமல் அனுஷ்டிப்பார். விரதம் முடிக்கும்போது, யாராவது ஒருவருக்கு அன்னம் அளித்தபிறகே சாப்பிடுவார்.
ஒருமுறை, யமுனைக்ரையில் துர்வாசமுனிவரைக் கண்டார். முனிவருக்கு அன்னம் அளித்து விட்டு, விரதத்தை நிறைவு செய்ய முடிவெடுத்தார். ஆனால், துர்வாசரோ, தனது அன்றாட பூஜையை முடித்து விட்டு, வருவதாகச் சென்றார். நேரம் சென்று கொண்டிருந்தது. துர்வாசர் வந்தபாடில்லை. ஏகாதசி திதி முடியும் வேளை நெருங்கியது. உணவேதும் சாப்பிடாமல், சாஸ்திரத்திற்காக கங்கா தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் முடித்தார் சிறிது நேரத்தில் துர்வாசர் வந்தார். அம்பரீசன் விரதம் முடித்ததை அறிந்து கோபம் கொண்டார். தன் தலையில் இருந்து ஒரு முடியை எடுத்து, மந்திரம் ஜெபிக்க அது பூதமாக மாறி, அம்பரீசனை கொல்லத் துணிந்தது.
உடனே திருமால், ஏகாதசி விரதமிருந்த தன் பக்தனுக்காக, சக்கரத்தை ஏவினார். அது நொடிப்பொழுதில் பூதத்தைக் கொன்றதோடு, துர்வாசரையும் விரட்டியது. பயந்து போன துர்வாசர் விஷ்ணுவைச் சரணடைந்தார். அவர், துர்வாசரிடம், அம்பரீசனிடம் சென்று மன்னிப்பு கேட்கும்படி கூறினார். துர்வாசரும் அவ்வாறே செய்ய, சக்கரத்திடம் இருந்து தப்பித்தார்

ஏகாதசி கதை (பத்ம புராணத்தில் இடம் பெற்றுள்ளது)


முரன் என்னும் அரக்கன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனுடைய தொல்லை தாளாத தேவர்கள், வைகுண்டம் சென்று திருமாலிடம் முறையிட்டனர். அசுரனை அழிக்க திருமால் புறப்பட்டார்.
முரனுக்கும், திருமாலுக்கும் கடும் போர் நிகழ்ந்தது. திருமாலின் சக்ராயுதத்தின் முன் முரனால் நிற்கக்கூட முடியவில்லை. பலமாய வடிவங்கள் எடுத்து, மறைந்திருந்து தாக்கினான். தினமும் சூரியோதயம் முதல் அஸ்தமனம் வரை போர் நடக்கும். அதன்பின், முரனும், திருமாலும் ஓய்வெடுக்கச் சென்று விடுவர். பத்ரிகாசிரமத்திலுள்ள ஒரு குகையில் திருமால் இரவுப் பொழுதைக் கழிப்பது வழக்கம்.
ஒருநாள் திருமால் படுத்திருந்த நேரத்தில், முரன் குகைக்கு வந்து திடீரென தாக்கத் தொடங்கினான். அப்போது, திருமாலின் உடலில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றி, முரனின் முன் வந்தாள். அவன், அவளது அழகைக் கண்டு மோகம் கொண்டான். ஆனால், அந்த பெண் சக்தியோ, கையில் ஆயுதங்களைத் தாங்கி விஸ்வரூபம் எடுத்தாள். அசுரனைக் கொன்றாள். திருமால் அவளிடம், ""சக்தியே! உனக்கு ஏகாதசி என்று பெயரிடுகிறேன். நீ முரனைக் கொன்ற இந்த நாளில் விரதமிருந்து வழிபடுவோர், எம் அருளால் செல்வவளமும், மறுபிறவியில் வைகுண்ட பதவியும் பெறுவர்,'' என வரம் அளித்தார்.
இந்தக் கதை பத்ம புராணத்தில் இடம் பெற்றுள்ளது.

அவர் தான் அரங்கன்


ஸ்ரீரங்கத்தில் பராசர பட்டர் என்ற ஆச்சார்யார் வசித்து வந்தார். அவர் மகா வித்வான்.
அவர், ரங்கநாதர் கோயில் வீதியிலுள்ள குருகுலத்தில், தன் சிஷ்யகோடிகளுக்கு தினமும் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே ஒரு வித்வான் தன் சீடர்களோடு போவார். பட்டர் அவரைக் கவனிக்கக் கூட மாட்டார். அதே நேரம், அந்த வீதியில் ஒரு செம்பை எடுத்துக் கொண்டு உஞ்சவ்ருத்தி (பிச்சை எடுத்தல்) செய்யும் ஒரு பிராமணரை விழுந்து விழுந்து கவனிப்பார். அவரிடம், தினமும் நீண்ட நேரம் பேசவும் செய்வார்.
இதைப் பார்த்த பராசர பட்டரின் சீடர்களுக்கு வியப்பும், கோபமும் ஒரு சேர மேலிட்டது. ஒருநாள், பட்டரிடம் அதைக் கேட்டே விட்டார்கள்.
""சுவாமி! மிகப்பெரிய வித்வான் இந்த வழியே தினமும் போகிறார். அவரை நீங்கள் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை. ஆனால், அஞ்ஞானியான இந்த பிராமணரிடம் நீண்ட நேரமாய் பேசுகிறீர்கள். என்ன காரணம் சொல்லுங்கள்?'' என்றனர்.
பட்டர் அவர்களை அமைதிப்படுத்தினார்.
""காரணமா! பொறுங்கள், காலம் போகப் போக உங்களுக்கே புரியும்,'' என்றார்.
சில மாதங்கள் கழித்து, அந்த வித்வானை தன் குருகுலத்துக்குள் அழைத்தார்.
""வித்தகரே! பரதத்துவம் (நிஜமான கடவுள்) யார்?'' என்று கேள்வி கேட்டார்.
வித்வான் பட்டரிடம்,""எனக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் தான் உமக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதற்குரிய விடையைத் தானே நான் நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்,'' என்றார். பட்டர் வித்வானை அனுப்பி விட்டார்.
சில நாட்களில், உஞ்சவ்ருத்தி எடுத்த பிராமணரை பட்டர் அழைத்தார். ""உம்மிடம் ஒன்று கேட்க வேண்டும், உள்ளே வாரும்,'' என்றார்.
பிராமணர் பயந்து போனார். இவ்வளவு பெரிய ஆச்சார்யர், தன்னை அழைக்கிறாரே! கேள்வி வேறு கேட்கப் போகிறேன் என்கிறார். எனக்கு படிப்பறிவே கிடையாதே! எதற்காக அழைக்கிறாரோ?'' என்ற நடுக்கத்துடன் உள்ளே வந்தார்.
""சுவாமி! உண்மையான கடவுள் யார்?'' என்று கேட்டாரோ இல்லையோ! பிராமணருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. கையில் இருந்த பிச்சை செம்பை தூக்கி எறிந்தார்.
""என்ன ஓய் கேட்டீர்? இது கூட தெரியாமல் தான், நீர் உம் சீடர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறீரா? நிஜமான கடவுள் நம் ரங்கநாதர் என்று கூட நீர் அறியவில்லையோ? நீரெல்லாம் ஒரு குரு!'' என்று சொல்லிவிட்டு, வேகமாக எழுந்து போய்விட்டார்.
பராசர பட்டர் தன் சீடர்களிடம்,""பார்த்தீர்களா? நம் ரங்கன் தான் நிஜமான தெய்வம் என்று அந்த வித்வானுக்கு தெரியவில்லை. அவனிடம் பேசி என்ன லாபம்? இந்த பிராமணரோ, "ரங்கனே எல்லாமும்' என்பதில் உறுதியாக இருக்கிறார். ரங்கனே சகலமும் என்று எண்ணுபவர்கள் தானே நமக்கு சொந்தக்காரர்கள்,'' என்றார். குருவின் செய்கைக்கான காரணமறிந்த சீடர்கள் வியந்து நின்றார்கள்.

தெய்வங்களே மோதிக் கொள்ளலாமா?

ராமாயணத்தில் பரசுராமரும், ராமரும் மோதிக் கொள்வது போல ஒரு காட்சி வருகிறது. இதை படிப்பவர்கள் தெய்வங்களே மோதிக் கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை.
ராமன் சீதாவை இழந்து தவிக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்தவர் பரசுராமர். ஏற்கனவே, சிவதனுசுவை ஒடித்து சீதாவைக் கல்யாணம் செய்து கொண்ட ராமனிடம், ""நீ ஏற்கனவே பலரால் இழுக்கப்பட்டும், வளைக்கப்பட்டும் இற்றுப்போன சிவதனுசுவை ஒடித்ததில் ஆச்சரியமில்லை. இதோ என் கையில் இருக்கும் விஷ்ணு தனுசுவை தூக்கி நாணேற்று பார்க்கலாம்,'' என்றார்.
ராமனும் எளிதாக அதைச் செய்து விட்டு, இப்போது இதில் நான் தொடுத்துள்ள பாணத்திற்கு இலக்கு யார்?'' என்றார்.
உடனே பரசுராமர் பணிவுடன், "" நீ சுத்தவீரன்.
என் புண்ணியங்களின் பலனை இலக்காக கொள்,'' என்று பதிலளித்தார். ராமனுக்கு அவரது புண்ணியத்தின் பலன் கிடைத்தது.
அந்த விஷ்ணு தனுசைக் கொண்டுதான் பிற்காலத்தில் ராவணனை அழித்தார் ராமன்

குருவை மிஞ்ச முடியுமா?

ஒரு ஆஸ்ரமத்தில் இருந்த குருவுக்கு பிரதான சீடன் இருந்தான். குருவைச் சந்திக்க வருபவர்கள், அவருக்கு செய்யும் மரியாதையில் தனக்கு ஒரு பங்கு கூட செய்வதில்லையே என்ற ஏக்கம் அவனிடம் இருந்தது. ஒருநாள், குருவிடமே தனது எண்ணத்தைச் சொல்லி விட்டான்.
குரு அவனிடம், ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை எடுத்துவரும்படி சொன்னார். அவனும் எடுத்து வந்தான். ""இதில் என்ன இருக்கிறது?'' என சீடனிடம் கேட்டார்.
அவன் "தண்ணீர் இருக்கிறது' என பதில் சொன்னான்.
""இப்போது தண்ணீரை கொட்டிவிட்டு வா!'' என்றார் அவனிடம்.
அவனும் அப்படியே செய்தான். ""இப்போது பாத்திரத்திற்குள் என்ன இருக்கிறது சொல்!'' என குரு கேட்க, ""ஒன்றுமில்லை,'' என்றான்.
குரு சிரித்தார். சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரிடமே காரணம் கேட்டான்.
குரு அவனிடம், ""பஞ்சபூதங்கள் என்ன?' என்று கேட்டார்.
அவன் ""நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்,'' என வரிசையாக சொல்லி முடித்தான்.
""மகனே! பஞ்சபூதத்தில் ஒன்றான தண்ணீர் இந்த பாத்திரத்திற்குள் இருந்தபோது, அதை நீ சரியாகச் சொன்னாய். ஆனால், அது இல்லாத பாத்திரத்திற்குள் தற்போது காற்று இருக்கிறது.இது கூட உனக்கு தெரியவில்லையே?'' என்றார்.
குருவின் பார்வைக்கும், தனது பார்வைக்கும் வித்தியாசமிருப்பதை சீடன் உணர்ந்தான். தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதைப் புரிந்து கொண்டு, பணிவுடன் நடக்க ஆரம்பித்தான்.

பிறன் மனை நாடுபவர்களுக்கு இதோ ஒரு செவிவழிக்கதை.

பிறன் மனை நாடுபவர்களுக்கு, மனதை விட்டு என்றும் நீங்காத வடுவுடன், சூடு போடும் வகையிலான பாடம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக இதோ ஒரு செவிவழிக்கதை.
ராவணன் சீதையை அடைய என்ன உபாயம் என்று சிந்தித்தான். ஒரு யோசனை தோன்றியது.
ராமனைப் போல் உருமாறி, சீதை இருக்குமிடம் சென்றான். மிகவும் பிரியத்துடன் சீதை அருகில் சென்று, ""சகியே! உன் நாதன் வந்து விட்டேன், இன்னும் ஏன் கவலை?'' என்றவன், அவளருகே வந்து அணைத்துக் கொண்டான்.
சீதையும் அவனை அணைத்தவாறு புன்னகை புரிந்தாள். ராவணன் திகைத்தான். "எந்தச்சூழலிலும் ராமன் யார், மற்றவர்கள் யார் என்று கண்டு பிடித்து விடும் இவளா இப்படி!' என்று யோசித்த வேளையில், அவள் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது.
""ஆகா! இவள் சீதையல்ல! தூரத்தில் நின்றாலே, அவளது உடலிலிருந்து சுகந்த வாசனை அல்லவா வீசும்! இது துர்நாற்றமாயிருக்கிறதே!''
அவன் அவளை உதறிவிட்டு, தன் உருவத்தை வரவழைத்துக் கொண்டு ""யார் நீ?'' என்றான்.
அவளும் உருமாறினாள்.
அப்போது அங்கு நின்றது சூர்ப்பனகை.
""அண்ணா! நீயா! நான் ராமனை அடையும் ஆசையில், சீதையைப் போல், என் உருவத்தை மாற்றிக்கொண்டு இங்கு நின்றேன்! உன்னை ராமன் என நினைத்து நெருங்கினேன்,' ' என்று அவமானத்தால் தலை குனிந்து சொன்னாள்.

அரக்கனிடம் இரக்கம்

அரக்கன் ஒருவன் தினமும் ஒருவரைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டிருந்தான்.
ஒருமுறை, ஒரு அந்தணரின் குடும்பத்தினர் அவனிடம் சிக்கிக் கொண்டனர். அரக்கன் அவர்களிடம், ""உங்களில் ஒருவர் எனக்கு இரையாக வேண்டும்,'' என்றான்.
அந்தணர் அவனிடம், ""என் மனைவி நோயாளி. அவளைத் தின்றால் அவளது நோய் உன்னையும் பற்றும். நான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளேன். மூத்த மகன் மேல் எனக்கு பாசம். இளையவன் மேல் என் மனைவிக்கு
பாசம். அதனால், நடுவிலுள்ள மகனை எடுத்துக் கொள்,'' என்றார்.
அரக்கனும் சம்மதித்தான்.
அந்த மகனை அவன் தன்னருகே இழுத்த போது, அவன் சிரித்தான், பிறகு அழுதான்.
""ஏனப்பா! முதலில் சிரித்தாய், பிறகு அழுகிறாய்?
எதற்காக அப்படி செய் தாய்?'' என்றான் அரக்கன்.
""அரக்கனே! மனிதர்களை உண்பது ராட்சதர்களுக்கு இயல்பு. அதில் தவறில்லை. ஆனால், பெற்ற பிள்ளை என்றும் பாராமல், என்னை உனக்கு உணவாக்க முனைந்த இந்த பெற்றோரை எண்ணினேன். யார் ராட்சதர் என்று சந்தேகம் வந்துவிட்டது. அதனால் சிரித்தேன். இருப்பினும், பெற்றவர்களை பிரியப்போகிறோமே என்ற வேதனையால் அழுதேன்,'' என்றான்.
இந்த விளக்கம் கேட்டு அரக்கனே இரங்கி விட்டான். அவனை விடுவித்தான்

ஆயிரம் ஆண்டுகள் தவமிருப்பதை விட, ஒரு அப்பாவி உயிருக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்குவதே மேலானது

ஒரு மேய்ப்பன், தன் ஆடுகளை விரட்டிச் சென்று கொண்டிருந்தான். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி ஆட்டின் கால் ஒடிந்திருந்தது. அதையும், மற்ற ஆடுகளின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்கும் வகையில் உதை கொடுத்தபடியே சென்றான்.
அந்த வழியே புத்தர் வந்தார். காலுடைந்த ஆட்டின் நிலையைப் பார்த்து உள்ளம் உருகினார். அதைத் தூக்கிக் கொண்டு, மேய்ப்பவன் செல்லும் இடம் வரை சுமந்து சென்று விட்டு வந்தார்.
""ஆயிரம் ஆண்டுகள் தவமிருப்பதை விட, ஒரு அப்பாவி உயிருக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்குவதே மேலானது,'' என்று அறிவுரையையும், இந்த சம்பவம் மூலம் உலகுக்கு எடுத்துச் சொன்னார்.

பெற்றவர்களே, கெட்ட வழக்கங்களை உடையவராக இருந்தால், பிள்ளைகளும் அப்படித்தான் வளரும்.

ஒரு ராஜாவுக்கு எதிரி ஒருவன் இருந்தான். அவனை ஆரம்பத்திலேயே அழித்து விடுங்கள் என்று மந்திரி யோசனை சொன்னார். ராஜா கேட்கவில்லை. ""இவனெல்லாம் ஒரு ஆளா! என் தகுதிக்கு முன்னால் இவன் தூசு,'' என்றார்.
இருப்பினும், மந்திரி வற்புறுத்தியதால், அவன் மீது போர் தொடுத்துச் சென்றார். அந்த எதிரி அவனைக் கண்ட மாத்திரத்தில் காலில் விழுந்து விட்டான். இப்படி பயப்படுபவனா என்னோடு மோதுவான் என்ற தைரியத்தில் ராஜா திரும்பி விட்டார்.
மந்திரியோ விடவில்லை. அவனைக் கொன்றே தீர வேண்டும் என்றார். ராஜா திரும்பவும் போருக்குப் போனார். அப்போது அவன் காலில் விழவில்லை. தலை குனிந்து நின்றான். ராஜா விட்டு விட்டார். இப்படியே, நான்கைந்து தடவைகள் அவனைக்
கொல்லும் நோக்கில் போக, அவனோ பணிந்து போனதால் கொல்லும் எண்ணத்தை விட்டு விட்டார்.
கடைசியாக, ஒருநாள் அவன் ராஜாவின் அரண்மனைக்குள் புகுந்து விட்டான். ராஜாவை போருக்கு அழைத்தான்.
""நான் இப்போது உம்மை விட வலிமையானவன் ஆகிவிட்டேன். முடிந்தால் போரிட்டு பாரும்,'' என்றான்.
மந்திரியின் வார்த்தைகளில் இருந்த உண்மையை ராஜா உணர்ந்தார். அவனோடு போரிட்டார். அவனோ கடுமையாகப் போராடி, அவரது கை, கால்களை வெட்டி விட்டான்.
யார் அந்த எதிரி தெரிகிறதா?
கெட்ட பழக்கங்கள் தான் அந்த எதிரி. ராஜா கெட்ட வழக்கங்களுக்கு ஆளாகியிருந்தார். அந்த வழக்கங்களை எதிரியாக உருவகம் செய்து, மந்திரி எச்சரிக்கை விடுத்தார். ராஜாவோ கேட்கவில்லை. கடைசியில், அந்த வழக்கங்களே அவரை ஊனமுள்ளவராக்கி விட்டது. இதுபோல் தான், குழந்தைகளை கெட்ட வழக்கங்கள் அண்டாமல், பெற்றவர்கள் இளமையிலேயே கவனித்துக் கொள்ள வேண்டும். பெற்றவர்களே, கெட்ட வழக்கங்களை உடையவராக இருந்தால், பிள்ளைகளும் அப்படித்தான் வளரும்.
"டிவி பார்க்காதே' என்று பிள்ளைகளைக் கண்டிப்பவர்கள், தாங்களும் பார்க்காமல் இருக்க வேண்டுமல்லவா!

தெய்வத்தை நம்பு! மனிதர்கள் எவ்வளவு உயர்ந்த பிறப்பாயினும் நம்பாதே!


கந்தனும், குமரனும் ஒரு அரசரிடம் பணிபுரிந்தனர். கந்தன் முருக பக்தன். "முருகனாலேயே எல்லாம் நடக்கிறது' என்று மன்னர் உள்ளிட்ட எல்லாரிடமும் சொல்வான். குமரன் "காக்கா' பிடிப்பவன். "அரசரால் தான் எல்லாம் நடக்கிறது' என்று சொல்லித் திரிவான்.
இவர்கள் சொல்வதில் எது சரியானது என அரசருக்கு சந்தேகம் வந்தது. மந்திரியை அழைத்து அவர்களை பரீட்சிக்க சொன்னார்.
மந்திரி அவர்களிடம் நூறு வெள்ளிக்காசுகளைக் கொடுத்து, ""இதை வைத்துக் கொண்டு நீங்கள் நூறு நாட்கள் வெளியூரில் தங்க வேண்டும். பிறகு இங்கே வாருங்கள். இது அரச கட்டளை,'' என்றார்.
அவர்களும் புறப்பட்டனர். செல்லும் வழியில் ஒரு முருகன் கோயிலைப் பார்த்த கந்தன், முருகனுக்கு அபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் படைத்தான். அதை அங்கு வந்த ஏழைகளுக்கு கொடுத்து, அவர்கள் பசியாறுவதைப் பார்த்து மகிழ்ந்தான். நூறு காசுகளும் ஒரே நாளில் செலவழிந்து விட்டது.
"அவனை வணங்குவது என் கடமை, என்னைக் காப்பது அவன் கடமை' என்று நினைத்தவனாய் பயணத்தைத் தொடர்ந்தான்.
வழியில், ஒரு வண்டி குளத்தில் விழுந்து இருவர் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்த்தான். அவர்களைக் காப்பாற்றினான். அதன்பிறகு, தத்தளித்தவர்கள் அவ்வூர் ராஜகுமாரன் மற்றும் வண்டியோட்டி என்பதைத் தெரிந்து கொண்டான். அவர்கள் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். தன் மகனைக் காத்த கந்தனுக்கு, ராஜ உபசாரம் செய்த மன்னன், தங்கள் அரண்மனையில் தங்கிச் செல்லும்படி வேண்டினான். கந்தனுக்கு நூறு நாட்களும் ராஜ உபசாரம் நடந்தது.
குமரன், ஒரு சத்திரத்தில்தங்கினான். அவனது பணத்தை தலைக்கடியில் வைத்திருந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, திருடர்கள் அதைக் கவர்ந்து சென்று விட்டனர். விழித்த அவன், வருத்தமடைந்து, பசியோடு நடந்த போது, கந்தன் தங்கியிருந்த அரண்மனை கண்ணில் பட்டது. அங்குள்ள நந்தவனத்திற்கு சென்றான். அப்போது, ஒரு மரத்திலிருந்த கழுகு, பாம்பைப் பிடித்து கொத்திக் கொண்டிருந்தது. பாம்பின் விஷம் மரத்தடியில் படுத்திருந்த, ராஜகுமாரனின் கழுத்தில் விழுந்ததைப் பார்த்தான். தன் கத்தியை எடுத்து, அந்த விஷத்தை சுரண்டினான். அப்போது, மன்னன் வந்து விட, தன் மகனை அவன் கொலை செய்ய முயற்சிக்கிறானோ என்று எண்ணி, சிறையில் அடைத்து விட்டான்.
ஒருநாள், கந்தன் சிறைவாசிகளுக்கு முருகனின் சிறப்பை எடுத்துரைக்க சென்றான். அங்கே குமரன் இருந்ததைப் பார்த்தான். நடந்ததை எடுத்துச் சொன்னான் குமரன்.
""குமரா! தெய்வத்தை நம்பு! மனிதர்கள் எவ்வளவு உயர்ந்த பிறப்பாயினும் நம்பாதே! மன்னர்களும் ஒருநாள் அழியப் போகிறவர்கள் தானே! அழியாப்பொருளான முருகப் பெருமானை மட்டுமே புகழ்ந்து பேசு,'' என்று புத்திமதி சொன்னான். குமரனும் அதை ஏற்றான். தாங்கள் வந்த விஷயத்தை மன்னனிடம் சொன்ன கந்தன், குமரனை விடுவிக்கச் செய்தான். இருவரும் தங்கள் நாட்டை அடைந்தனர்.
மன்னரிடம் குமரன்,""தெய்வ அனுகூலமே உயர்ந்தது என்பதைப் புரிந்து கொண்டேன்,'' என்றான்.

செல்வம் என்பது சிந்தையின் நிறைவு

துறவி ஒருவர் கிராமத்திற்கு வந்திருந்தார். பணக்காரன் ஒருவன் அவரிடம் ஆசி வாங்கினால் தனக்கு மேலும் பணம் பெருகும் என்ற எண்ணத்தில் அவரை சந்திக்க சென்றான். துறவியின் பாதத்தில் விழுந்து வணங்கினான்.
""அன்பனே! எழுந்திரு! உனக்கு என்னப்பா குறை!'' என்று கேட்டார்.
""ஐயா! உங்கள் நல்லாசியுடன் நான் இன்னும் பணம் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துங்கள்,'' என்று கூறினான். துறவி அவனிடம், ""செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. பொருளாசைக்கு எல்லையே கிடையாது. மனம் என்னும் குரங்கு தாவிக் கொண்டே தான் திரியும். நாம் தான் மனதை ஒருமுகப்படுத்தி நிலைநிறுத்த வேண்டும்.
இல்லாதவர்களுக்கு சிறிதளவாவது கொடுப்பதே நீ பெற்ற செல்வத்தின் பயனாகும். பெற்ற பொருள் அனைத்தையும் நீ ஒருவனே அனுபவிக்க வேண்டும் என்றால் முடியாது. வாழ்க்கையில் நாம் இழக்கக் கூடாத பெருஞ் செல்வம் மனநிறைவும், நிம்மதியுமே. ஒரு நாளைக்கு ஒருபிடி அன்னத்தையாவது பசித்தவருக்கு உணவாக இடு! உன்னிடம் உள்ள பணம் உனக்கு உதவலாம், உதவாமலும் போகலாம். நீ படுத்த படுக்கையாக கிடந்தால், பணத்தை எட்டி எடுக்கக்கூட கை உதவாது. ஆனால், ஒருவன் செய்த தர்மம் தக்க சமயத்தில் உதவும்,'' என்று ஆசியளித்தார். இந்த அறிவுரை பணக்காரனின் மனதை மாற்றியது. தான் மட்டுமே செல்வத்தை அனுபவிக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

உலகமே அவன் தான்

தன் திருவடிகளையே சிந்திக்கும் அடியார்களுக்கு, அப்படி அதில் என்ன தான் ஆனந்தம் கிடைக்கிறது என்று கிருஷ்ணருக்கே, ஒருமுறை ஆச்சரியம் வந்து விட்டதாம். அதனால் தன் கால்பெருவிரலை தானே சுவைக்கத் தொடங்கினாராம். அந்த நேரத்தில், 16 வயது மார்க்கண்டேயருக்கு அந்தக்காட்சியைப் பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. கிருஷ்ணரைப் பிரார்த்தித்தார். மாயனாகிய கிருஷ்ணன், பலத்தமழை பெய்யச்செய்தான். அவரது ஆஸ்ரமத்தைச் சுற்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தண்ணீரில் ஒரு ஆலிலை மிதந்து வந்தது. அதில் கிருஷ்ணர் கட்டை விரலை வாயில் சுவைத்த வண்ணம் படுத்திருந்தார். அந்தக் காட்சி கண்டு பரவசம் அடைந்த மார்க்கண்டேயர், அக்குழந்தை, மூச்சுக்காற்றை இழுக்கும்போது கொசுவாக மாறி, உள்ளே போனார். புறவுலகில் என்னென்ன உ<ண்டோ, அத்தனையையும் உள்ளே கண்டார். தன் ஆஸ்ரமமும் கிருஷ்ணருக்குள் இருக்கக் கண்டார். மீண்டும் மூச்சுக்காற்றில் வெளியே தள்ளப்பட்டு வெளியேவந்தார். உலகமே அவன் தான் என்பதைப் புரிந்துகொண்டார்.

குருவிற்கே குருவானவன்

வேடன் ஒருவனுக்கு, "மற்றவர்களைப் போல படிப்பறிவு இல்லையே, கடவுளை அறியும் அறிவும் இல்லையே, காட்டிலுள்ள முனிவர்களைப் போல் மனம் ஒன்றி வழிபாடு செய்ய முடிவதில்லையே' என்று பலவிதமான ஏக்கங்கள் மனதில் ஏற்பட்டது. அவனுக்கு திருமண வாழ்வில் நாட்டமில்லை. உலகத்தின் பிற சுகங்களும் பிடிக்கவில்லை. மனதின் ஒரு ஓரத்தில், எப்படியும் ஈசனைப் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.
ஒருமுறை ஒரு துறவியைக் கண்டான். அந்த துறவிக்கு ஆசை அதிகம். தன்னை நாடி வரும் அன்பர்களிடம் பெறும் தட்சணையும், பால், பழமும் பெற்று உண்டு கொழுத்து உடம்பை நன்கு வளர்த்திருந்தார். அவரது உள்ளத்தில் அருள்நாட்டமே இல்லை. அவரை வேடன் பணிந்தான்.
""குருவே! நான் வேடனாய் பிறந்தும் மாமிசம் உண்பதில்லை. சிவனருளை எண்ணி எண்ணி தூக்கம் வருவதில்லை. அருள் மார்க்கத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளேன். எனக்கு நல்வழி காட்டுங்கள்.'' என்று வேண்டினான்.
வேடனின் வேண்டுதலைக் கேட்ட துறவி, ""கல்வியறிவில்லாத உனக்கு உபதேசம் செய்து என்ன பலன்? பக்திக்கும் உனக்கும் வெகுதூரம். காட்டில் கிடைக்கின்ற தேன்,பலா, தினைமாவு, மாம்பழங்கள், கனிவகைகளை எனக்கு கொண்டு வந்து கொடு, உனக்கு <உபதேசம் செய்வது பற்றி பிறகு பார்க்கலாம்,'' என்று சொன்னார்.
எப்படியாவது படித்து விட வேண்டும் என்ற ஆவலில் வேடன் மீண்டும் காட்டிற்கு சென்றான். குருநாதர் கேட்ட கனிவகைகள், தேன், தினைமாவை தட்சிணையாக எடுத்துக் கொண்டு மடத்தை வந்தடைந்தான்.
குருவினை வணங்கி, ""ஐயனே! தாங்கள் கேட்டதை கொண்டு வந்து இருக்கிறேன். பொருள்களை ஏற்று, எனக்கு நல்வழி காட்டி அருள் செய்யுங்கள்.'' என்று வேண்டினான்.
""ஏ! வேடனே! "சிவாயநம' என்று தினமும் ஜபம் செய். உனக்கு விரைவில் சிவபெருமான் காட்சி தருவார். ஆனால், ஒரு நிபந்தனை. அவ்வப்போது எனக்கு காட்டில் கிடைக்கும் பழங்களை கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உனக்கு ஈசனருள் கிடைக்காது'' என்று சொல்லி அனுப்பினார்.
காட்டிற்கு திரும்பிய வேடன் மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தான். தூக்கத்திலும் அவன் "சிவாயநம' என்றே உளறுவான். தனக்கு உபதேசித்த குருவின் மீது அலாதி நம்பிக்கை கொண்டிருந்தான். அவர் சொன்னபடி நிச்சயம் தனக்கு ஈசனின் காட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது. ஒரு நாள், சிவன் அவனுக்கு ஆசியளிப்பது போல கனவு கண்டான்.
அன்று முதல் அவனுக்கு தெளிந்த ஞானம் உண்டாயிற்று. பாசபந்தங்களை விட்டான். காண்பதெல்லாம் சிவ காட்சியாகவே தென்பட்டது. தன் குருநாதரான துறவியைக் காணச் சென்றான். தன் சிவானுபவத்தை குருவிடம் சொன்னான்.
வேடனின் வார்த்தைகள் அவ்வளவும் உண்மை என்பதை துறவி உணர்ந்தார். அவனது முகத்தில் தெய்வீக ஒளி இருந்தது. உண்மை ஞானம் உள்ளம் சார்ந்தது என்ற உண்மையை துறவி உணர்ந்தார்.
""குருவாக இருந்து பலகாலம் ஆசாபாசங்களில் சிக்கிக் கிடந்த அற்பனாகிய நான் இனிமேல் குருவல்ல! என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டு ஞானம் பெற்ற நீ தான் எனக்கு குரு! என்னை சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் சுவாமி!'' என்று வேடனின் கால்களில் விழுந்து, தன்னைப் பற்றிய உண்மையையும் கூறி மன்னிப்பும் கேட்டார்.

தெய்வத்தாய்

பிங்கல நாட்டின் மன்னன் ரகுநாதன். அவனது மனைவி சியாமளா கருவுற்றாள். நாடெங்கும் விழாக்கோலம்.
தங்கள் இளவரசன் வரவுக்காக மக்கள் காத்திருந்தனர். பிரசவநாளும் வந்தது. அரண்மனை வைத்தியர்கள் ஆலோசனைகள் வழங்க, தாதிகள் அரசிக்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தனர். மிகக்கடுமையான வலி வந்தும் குழந்தை பிறக்கிற வழியைக் காணோம். ரகுநாதன் வேண்டாத தெய்வமில்லை. ஒருவழியாய் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அத்தோடு, "ஓவென' தாதியர்கள் அழும் குரலும் கேட்டது.
குழந்தையின் அழுகுரல் கேட்டு மகிழ்ந்திருந்த ரகுநாதன், தொடர்ந்து வந்த தாதியர்கள் அழுகுரல் கேட்டு அதிர்ந்தான். ஆம்...
குழந்தையைப் பெற்றுக் கொடுத்த சியாமளா, ஜன்னி கண்டு இறந்து விட்டாள்.
""பிரசவம் ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்பார்கள். என் மனைவிக்கு அந்தப் பிறவி கிடைக்காமல் போயிற்றே!'' என ரகுநாதன் கலங்கி அழுதான். குழந்தையைக் கவனிக்க யார் இருக்கிறார்கள் என்ற கவலையும் சேர, சோர்ந்து போனான்.
தாதிகள் குழந்தையைக் கவனித்துக் கொண்டார்கள். அவர்களில், தன் நம்பிக்கைக்குரிய பவானி என்பவளைத் தேர்ந்தெடுத்த ரகுநாதன், "" பவானி! இவனை இனி உன் குழந்தை போல் கவனித்து வா!'' என்றான். பவானியும் மகிழ்வுடன் சம்மதித்தாள்.
பவானியின் கணவன் ஏற்கனவே இறந்து விட்டான்.
அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன். இரண்டு குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்தாள்.
மனைவியின் இறப்பால், சோகத்தில் ஆழ்ந்திருந்த மன்னனால் நாட்டின் நிர்வாகத்தில் சீராக கவனம் செலுத்த முடியவில்லை. இதைப் பயன்படுத்தி, அமைச்சர்களும், பிற அதிகாரிகளும் மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர்.
ஆனால், மக்களோ மன்னனைத் தான் தூற்றினர்.
ரகுநாதனுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி, அவனை நாட்டே விட்டு துரத்தி விட வேண்டும். தாதியிடம் வளரும் இளவரசனைக் கொன்று விட வேண்டும். தங்களில் ஒருவர் ராஜாவாகவும், மற்றவர்கள் ராஜபிரதிநிதிகளாகவும் இருந்து சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என திட்டமிட்டனர்.
திட்டத்தின் முதல் கட்டமாக, இளவரசனைக் கொல்ல சதி செய்தனர். இதை பவானி தெரிந்து கொண்டு விட்டாள். இளவரசனைக் கொல்ல வரும் நாளில், அவனை வெளியே அழைத்துச் சென்று, ஒரு வீட்டில் மறைவாக வைத்து விட்டாள். தன் மகனுக்கு இளவரசன் போல் அலங்காரம் செய்து, அவன் படுக்கும் கட்டிலில் தூங்க வைத்தாள். சதிகார அமைச்சர்கள், இருளில் பதுங்கி வந்தனர். தூங்கிக் கொண்டிருந்த பவானியின் மகனை, இளவரசன் எனக்கருதி கொன்றனர்.
விஷயம் மன்னனுக்கு தெரிந்தது. அவன் பவானியின் தியாகத்தைப் பாராட்டினான். அமைச்சர்கள் செய்த சதியை மக்களுக்கு தெரியப்படுத்தினான். மக்களுக்கு உண்மை தெரிய வரவே, அவர்கள் அமைச்சர்களை கட்டி இழுத்து வந்தனர். அந்த ராஜதுரோகிகளை பொது இடத்தில் தூக்கிலிட்டனர்.
மகனின் பிரிவைத் தாங்காத பவானி கவலையில் இறந்து போனாள். அந்த தியாகத்தாயை தெய்வமாக மதித்து, அவளுக்கு சிலை வடித்தனர். மன்னன் அவளுக்கு கோயில் எழுப்பினான். அவள் பிங்கலநாட்டின் குலதெய்வமாக வணங்கப்பட்டாள்.

புகழ்ச்சிக்கு அடிமையாகலாமா

ஒரு ஏரிக்கரையில் இருந்த மாமரத்தின் அடியில், அவ்வழியே சென்ற நரி இளைப்பாற ஒதுங்கியது. அவ்வேளையில் காற்றில் ஒரு மாம்பழம் கீழே விழுந்தது. அதைச் சுவைத்த நரி, "ஆஹா! பழம் தித்திப்பாக இருக்கிறதே!' என்று மகிழ்ந்து, மரத்தை அண்ணாந்து பார்த்தது. நிறைய பழங்கள் தொங்கின. மேலும் சில பழங்களைச் சுவைக்க ஆசை எழுந்தது.
மரத்தில் ஒரு காகம் அமர்ந்திருந்தது. நரிக்கு அதன் புத்தி வேலை செய்தது. காகத்தைப் புகழ்ந்து பேசினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது.
காகத்தை பார்த்து, ""தங்கம் போன்று பொன்னிறமாக இருக்கும் அன்புக்காகமே! நல்ல மயிலின் அழகும், குயிலின் குரலும் கொண்டு விளங்குகிறாயே!'' என்று ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியது.
இதைக்கேட்ட காகம்,"" உத்தமமான குலத்தில் பிறந்திருப்பதால் உமக்கு என் அருமை பெருமை எல்லாம் தெரிந்திருக்கிறது. பாவம்! நடந்து வந்த களைப்பும், அயர்வும் உம் முகத்தில் தெரிகிறது. உம் வயிறு நிறையும்படி நன்கு மாம்பழங்களைப் புசியுங்கள்!'' என்று கூறி மாம்பழங்களை கொத்திக் கிழே போட்டது.
நரி, ""என்ன நாம் சொல்லி விட்டோம். மயில், குயில் என்று புகழ்ந்து பேசினோம். அவ்வளவுதானே! அதற்காக நம்மை உத்தமகுலம் என்று புகழ்ந்ததோடு, பசிக்கு பழங்களும் தந்து அமர்க்களப்படுத்தி விட்டதே!'' என்று எண்ணியவாறே சுவைத்து மகிழ்ந்தது.
தங்களுக்கு ஏதோ கிடைக்கிறதே என்பதற்காக, தகுதியற்றவர்களைப் புகழ்ந்து பேசுவதை தவிருங்கள்