Tuesday, November 29, 2011

யாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் நல்லது என்பது உண்மைதானா?

யாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் நல்லது என்பது உண்மைதானா?

உண்மைதானா என்ற சொல்லை பலரும் பயன்படுத்துகிறார்கள். அந்த அளவுக்கு சாஸ்திர சம்பிரதாயங்களில் சந்தேகம் எழும் சூழல் உருவாகியுள்ளது போலிருக்கிறது. சந்தேகம் வேண்டாம். உண்மைதான். சளி பிடித்தால் ஆவி பிடிக்கிறோம் இல்லையா? இது சாதாரண மருத்துவம். ஆனால், யாகத்தில் பலவகையான மூலிகைப் பொருட்களை மந்திரம் சொல்லி இடம் பொழுது அதன் புகைக்கு சக்தி அதிகமாகிறது. உடலுக்கு மட்டும் இல்லை. மனதிற்கும் நல்லது.

*கிரகண நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் நடமாடக் கூடாது என்று சொல்வது ஏன்?

முழு நிலவை அல்லது சூரியனை பூமியின் நிழல் மறைப்பது கிரகணம். சக்தி வாய்ந்த பவுர்ணமி நிலவின் அல்லது சூரியனின் ஒளி வீச்சு தடைபடுகிற பொழுது இயற்கையில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. நல்லதை விட கெடுதலே அதிகம். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் ஏற்படுகின்றன. இதனால் பிறக்கும் குழந்தைக்கு சில ஊனங்களை ஏற்படுத்தும். பிரசவ காலத்தில் தாய்க்கும் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இத்தனையையும் ஆராய்ந்து தான் சாஸ்திரங்கள் கிரகண காலத்திற்கென சில நியதிகளை வகுத்துள்ளன. இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவை தான். கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும். அறிவியல் என்ன சொல்கிறது என்பது வேறு! சாஸ்திரம் இதைத்தான் சொல்கிறது.

*சதுர்த்தி நாளில் விரதமிருப்பவர்கள் மாலை சந்திர தரிசனம் செய்த பின் தான் உணவு உண்ண வேண்டும் என்று கூறுகின்றனர். உண்மை தானா?

எந்த ஒரு விரதம் இருந்தாலும் எதற்காக இருக்கிறோம் என்று ஒரு குறிக்கோள் இருப்பது வழக்கம். பிரதோஷ விரதம் என்றால் மாலை 4.30 மணி முதல் ஆறு மணி வரை விரதம் இருந்து பிறகு சாப்பிட வேண்டும். இதுபோன்று சதுர்த்தி விரதத்திலும் சந்திர தரிசனம் என்பது குறிக்கோள். எனவே இதை செய்த பிறகு சாப்பிடுவதே சரியானது.

* காலண்டரில், சில நாட்களில் திதியின் பெயர் இல்லாமல் "அதிதி என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கான காரணம் என்ன?

முன்னோர்களுக்கு செய்யப்படும் சிரார்த்தம் எனப்படும் திதி கொடுப்பதை அவர்கள் பிறந்த திதியிலேயே செய்ய வேண்டும். இந்தத்திதியானது முதல் நாளும், மறுநாளும் இருந்தால் ஒரு நாள் சிரார்த்தத்திற்குரிய திதியாகவும், ஒரு நாள் அதிதி எனவும் குறிப்பிடுவார்கள். அ+திதி= சிராத்த திதி இல்லாத நாள் என்று பொருள்.

* மாலை நேரத்தில் அரசமர பிரதட்சணம் கூடாது என்று சொல்கின்றனர். இதற்கான காரணம் என்ன?

சூரிய உதய காலத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணர் அரச மரத்தில் இருந்து அருளுகிறார். அந்த நேரத்தில் வலம் வந்தால் கேட்டது கிடைக்கும். பொதுவாக மரங்கள் பகலில் ஆக்சிஜனையும், இரவில் கார்பன் டை ஆக்ஸைடையும் வெளிப்படுத்தும் இயல்புடையவை. அதுவும் விடியற்காலைப் பொழுதில் அரசமரம் வெளியிடும் பிராணவாயு உடலுக்கு மிகவும் நல்லது. மாலை நேரத்தில் இந்நிலை மாறி விடுவதால் வேண்டாம் என்கிறார்கள்.
 ** காலை ஐந்து மணிக்கு விளக்கேற்றி வழிபட விரும்புகிறேன், ஆனால், அந்நேரத்தில் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு நல்வழி காட்டுங்கள்.

இரவு ஒன்பது மணிக்கு "டிவி'யை அணைத்து விட்டு எல்லாரையும் தூங்கச் சொல்லுங்கள். காலை ஐந்து மணிக்கு எல்லாருமே எழுந்துவிடலாம். ஆனால், இந்த பதிலை உங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள வேண்டுமே! "சுகமாக "டிவி', பார்ப்பதையும், காலைத் தூக்கத்தை கெடுக்கிறேன்' என்றும் உங்கள் வீட்டினர் என்னை சபிக்காமல் இருந்தால் சரி!

* சூரியகாந்தி எண்ணெய், பாமாயிலை விளக்கேற்ற பயன்படுத்தலாமா?
.
எண்ணெய் என்ற சொல்லே நல்லெண்ணெயைத்தான் குறிக்கிறது. எள்+நெய்=எண்ணெய். இதுதான் விளக்கேற்ற உயர்ந்தது. தைல தீபம் என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. "திலம்' என்றால் "எள்'. திலத்திலிருந்து எடுக்கப்படுவதால் "தைலம்' என்று பெயர். சாஸ்திரம் ஏற்பட்ட பொழுது சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவை கிடையாது. அதனால் சாஸ்திரங்கள் விட்டிருக்கலாம் என்று கேட்பீர்கள்! அதற்கு மின்சார விளக்கே போதுமே?

* மலைக்கோயிலுக்குச் செல்லும் பொழுது, குரங்குகள் பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்று விடுகின்றன. இதனால் உண்டாகும் மனக்கஷ்டம் நியாயமானதா?

குரங்குகள் நம்மைப்போல் சிந்திக்கத் தெரியாதவை. உங்கள் மனம் கஷ்டப்படும் என்று அவற்றிற்குத் தெரிந்திருந்தால் இதுபோல் செய்யுமா? சிந்திக்கத் தெரிந்த நாமே அவற்றிடம் ஏமாந்து விடுகிறோமே! ஜாக்கிரதையாக இருந்து கொண்டால் போதும். இதையும் மீறி இப்படி நடந்தால் சுவாமியே எடுத்துக் கொண்டதாக சமாதானமாகிக் கொள்ளுங்கள். வீட்டில் சுவாமி நிவேதனத்திற்காக வைத்திருக்கும் இனிப்பை விபரம் அறியாத குழந்தை சாப்பிட்டு விட்டால் என்ன செய்கிறோம்? சோலைமலை, முக்கொம்பு போன்ற இடங்களில், குரங்குகளிடம் படாதபாடு பட்ட அனுபவம் எனக்கும் உண்டு.

* முன்னோர் திதியன்று ஏழைகளுக்கு அன்னதானமும், குழந்தைகளுக்கு கல்விக்கான உதவியும் செய்தால் தர்ப்பணம் செய்த பலனைத் தருமா? விளக்கம் தேவை.

மற்ற எந்தக் காரியமாக இருந்தாலும் மாற்று வழியை சிந்தித்துச் செயல்படலாம். முன்னோர் திதி என்ற காரியம் மட்டும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியன செய்துதான் ஆக வேண்டும் அன்னதானம், கல்விக்கு உதவி என்று எல்லாமே மிகப்பெரிய புண்ணிய செயல்கள் தான். ஆனால் பிதுர்காரியத்தோடு இவற்றை ஒப்பிடாதீர்கள்.

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க.....

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார்.அந்த பரிகாரம் வருமாறு: பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும்.
 
அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
 
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை  ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.
 
அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். 
 
 
ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு....
 
தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணை ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
 
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம். 
 
* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
 
* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்
 
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
 
* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
 
* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
 
* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
 
* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
 
* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
 
* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
 
* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
 
* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
 
* கோமாதா பூஜை செய்யலாம்.
 
* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
 
* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
 
* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
 
* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
 
* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
 
* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
 
* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை  கொடுத்து வணங்க வேண்டும்.
 
* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். 
 
லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு
 
* பரிகாரம்,சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.
 
* சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.
 
* சனி மூன்றில் இருந்தால்-வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.
 
* சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு( தானியம்) தானம் செய்யலாம்.
 
* சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.
 
* சனி 6-ல் இருந்தால் 40-க்கும் மேல் 48 வாதிற்குள்ள  இடைகாலத்தில்  வீடுகட்டுதல் கூடாது.
 
* சனி7-ல் இருந்தால்- கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது.
 
* சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு  ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.
 
* சனி 9-ல் இருந்தால்-வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.
 
* சனி 10-ல் இருந்தால்-10-பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.
 
* சனி11-ல் இருந்தால்- வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும் போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.
 
* சனி 12-ல் இருந்தால்-வீட்டின் கடைசி இருட்டறையில் 12-ம் பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மையூட்டும்.
 
சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார். 
 
 
ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு.
 
குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.
சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும் தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான் என்று புலம்புவது உண்டு.
 
அது போன ஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர். சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார், அவரது நேரடிப்பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.
 
ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும்.
 
உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ, வைத்து விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும். ச
 
னி பகவான் கால் ஊனமுற்றவர், ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது. விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும். கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.
 
வாதம் நீக்குபவர்........
 
இந்த சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும், கந்தலும் அகப்படாது....
 
இந்த சனியின் பிறந்த நாளிலிருந்து குடும்பத்தை பாடாய்படுத்துகிறது. இப்படியாக சனியை பல கோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.
 
குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000 மைல். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலையா கோவிலில் கற்சிலையாக தூணில் பெண் உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்திலும் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார். மனித உடலில் தொடைகளுக்கு உடையவர்.
 
குடல் வாத நோய் இவரால் ஏற்படும். மேலும் முதுகு வலி,  முடக்கு வாதம், யானைக் கால், பேய் தொல்லை, மூலநோய், மன தளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பாதித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்

Monday, November 28, 2011

மங்கு சனி, பொங்கு சனி

 
ஜாதகத்தில் சூரியனும் சனியும் உச்சம் பெற்று இருந்தால் பித்ரு தோஷம் என்று கொள்ள வேண்டும். இதற்கு உரிய பரிகாரம் தில ஹோமம் செய்வதுதான். மேலும் சனிக்கிழமைகளில் சனியையும் ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சிவபெருமானை வணங்கினால் தோஷங்கள் மறையத் தொடங்கும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவர்களுக்கும் சனியின் இருள் விரைவில் கிடைக்கும். அவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். 
 
சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு 2+3=7 ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை சிரசு சனி என்றும் 1-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும் கூறுவர்.
 
ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும். கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்பர்.
 
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.
 
சனி பவானுக்குரிய கோவில்களில் உள்ள தீர்த்ததில் நீராடி தக்கதான தருமங்களை செய்வது பயன்தரும். இவை இரண்டும் செய்ய இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன் எள் தீபம் ஏற்றி வருவது மற்றொரு வகை சாந்தி பரிகாரம் ஆகும்.
 
சைவர்களாக இருந்தால் சிவபுராணம், பஞ்சாட்சர ஜெபம் செய்வது உத்தமம், வைஷ்ணவர்களாக இருந்தால் சுதர்சன மூல மந்திரம், ஜெபம், சுதர்ஸன அஷ்டகம், ஆஞ்சநேயர் கவசம் போன்றவற்றை வாசிக்கலாம். அல்லது ஜெபிக்கலாம். இதனால் சனியின் இன்னல்கள் நீங்கி சங்கடங்கள் அகன்று சர்வ மங்களம் பெருகும்.
 
கந்த சஷ்டி கவச  பாராயணமும் சனி பகவானின் கோபத்தை தணிக்கும். தாரித்ரிய தஹன ஸ்தோத்திரத்தை வாசிக்க நலங்கள் விளையும். பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் பிறவிப்பிணி அகலும் பிறப்பின் பயன் புலப்படும். சனி பகவான் கோசார ரீதியில் வரும் போது ஏற்படும் நோய்களுக்கு மருந்து என்ன தெரியுமா? காராம் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு அளிக்கலாம்.
 
இதனை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது ஜென்ம தினத்தன்று வரும் சனிக்கிழமையன்று அல்லது சனி பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம், குரு பிரதோஷம் ஆகிய தினங்களில் அல்லது ஜென்ம, வாரம் அல்லது ஜெனன திதி ஆகிய நாட்களில் அளிக்கலாம். சிவதரிசனம் செய்வதும் சிவனின் உடல் பூராவும் கருத்த பசுவின் பாலை அபிஷேகம் செய்வதும் நலம். சிவதரிசனம் செய்பவரை, சிவபூஜை செய்பவரை சனீஸ்வர பகவான் பாதிப்பது இல்லை. 
 சனி பகவான் ஸ்தான பலன்கள்
 
சனிபகவான் உச்ச, ஆட்சி, நீச வீடுகளில் அளிக்கும் பலன்களைக் காண்போம். சனி பகவான் துலாத்தில் உச்சம் அடைகிறார். மேஷத்தில் நீசம் அடைகிறார். மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் ஆட்சி பெறுகிறார். சனி பகவான் உச்சம் பெற்றிருப்பாரானால் அந்த ஜாதகர் எதையும் நல்ல முறையில் செய்து பலரது பாராட்டைப் பெறுவார்.
 
மனோதிடம், தீர்க்காயுள் பெற்று தொழில் துறையில் சிறந்து விளங்குவார். சனி பகவான் ஆட்சி பெற்றிருப்பாரானால் சுகபோக வாழ்க்கையுண்டாகும். தொழில் வளம் சிறக்கும். விவசாய நன்மை விருத்தியாகும். வாகன யோகமுண்டு. பிரயாண லாபம் உண்டாகும். சனி பகவான் நீசம் பெற்றிருப்பாரானால் நாத்திக வாதம் புரிவார்.
 
சாஸ்திர சம்பிரதாயங்களை நம்ப மாட்டார். எதற்கும் மனோ தைரியம் இருக்காது. கீழ்த்தரமானவர்களுடன் நட்பு கொள்வார். கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய வீடுகளில் சனி பகவான் பகை பெறுகிறார். சனி பகவான் பகை வீட்டிலிருப்பாரானால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கும். எதிலும் எப்போதும் ஒருவித சலிப்பான உணர்வு மிகுந்து காணப்படும். உற்றார், நண்பர் ஆதரவு இருக்காது. 
சனி என்பவர் யார்?
 
சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள்.
 
அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டாள். பிறகு அவள் இனி  நீ   சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டு தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர்.
 
இவர்களில் ச்ருதசர்மா  உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார். 
 சனிபகவானின் பார்வை
 
சனிபகவானின் பார்வையானது மிகவும் தீட்சண்யம் வாய்ந்தது. இளம் வயதில் இருந்தே சனி பார்வை விழிகளில் அபார சக்தி இருந்தது. அவரது உக்கிர பார்வைபட்டவர்கள் பலம் இழந்து விடுவார்கள் என்பது ஜதீகமாகும். ஒரு சமயம் சிவனிடம் அரிய வரம் பெற்ற ராவணன் நவக்கிரகங்களை அடக்கி தன் வீட்டில் படிக்கட்டுகளாக குப்புறப்போட்டு வைத்திருந்தான்.
 
அதை பார்த்த நாரதர், ராவணா சனியை நேருக்கு நேர் பார்க்க பயமா? என்று கேட்டார். உடனே ராவணன் ஆவேசத்துடன், சனியே என்னை நன்றாக நிமிர்ந்து பார் என்று கூறினான். சனியும் நிமிர்ந்து பார்க்க, மறு வினாடியே ராவணனிடம் இருந்த சக்தி பலம், வீரம், வரம் எல்லாம் போய் விட்டது அவனை ராமர் மிக எளிதாக வென்றார்.
 
சனியின் பார்வைக்கு இத்தகைய அபார சக்தி உண்டு. சனி பார்வை தனித்துவம் கொண்டது என்பதற்கு இது போன்று பல உதாரணங்களை சொல்லலாம்.
 
சனி பகவானின் குணம்
 
ஓருவரது ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்று இருந்துவிட்டால் திரண்ட செல்வத்தை தந்து சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் பாராட்டவைப்பார். சனி பகவானின் பலத்தைப்பொருத்துத்தான் ஒரு மனிதனின் நேர்மையை கூற முடியும்.
 
சனி கெட்டு நீசம் அடைந்துவிட்டால் காக்கை வலிப்பு மற்றும் நரம்புக் கோளாறுகள் வந்துவிடும். அவ்வாறு வரும்போது சனிக்குறிய பரிகாரங்களை செய்து  மருத்துவரின் உதவியையும் நாடினால் வெற்றிகள் கண்டிப்பாக உண்டாகும்.
 
சனி திசையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே அந்த அனுபவத்தை  எங்கும் பெற முடியாது. ஒருவரது வாழ்க்கையில் 7 சனி வரும்போது அவர் கும்பராசியாகவோ அல்லது மகர ராசியாகவோ, அல்லது துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளாகவோ இருந்தால் நல்வழிப்படுத்தி விடுவார்.
 
அதே சமயத்தில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளாக இருந்தால் கடினமாக தண்டித்து பிறகு நல்வழிப்படுத்துவார். அதே சமயத்தில் மீனம், தனசு ராசிக்காரர்களுக்கு தண்டனையை கொடுத்து முன்னேற்றப்பாதையை காட்டுவார். எனவே, நவ்வழிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே உலகம்.
 
 விரயச்சனி
கோசார ரீதியில் சனி பகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலம் விரயச்சனி ஆகும். இதற்கு சனிக்கிழமை தவறாது சனீஸ்வர பகவானை வலம் வர வேண்டும். எள் எண்ணெய் தீபம் ஏற்றினால் நலம். தினசரி காக்கைக்கு அன்னம் இடுவது.
 
இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்ற தான தர்மங்களை செய்து வருவதும் நலம். இது மிகமிக எளிமையானது ஆகும். விரயச்சனி காலத்தில் இதுபோல செய்யலாம்.
 `ஜென்மச்சனி'
 
கோசார ரீதியில் சனிபகவான் சந்திரன் நின்ற ராசி  இல்லத்துக்கே வந்து நிற்கும் காலம் `ஜென்மச்சனி' இதற்கு தினசரி அல்லது சனிக்கிழமைகளில் முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய்) விளக்கேற்றி சனி பகவானை வலம் வருவது நலம்.
 
இந்த காலத்தில்  பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். ஏழைகளுக்கு கறுப்பு ஆடை தானம் வழங்கலாம். இந்த தானம் அவரவர் ஜென்ம வாரமாகவோ அல்லது ஜென்ம நட்சத்திரமாகவோ இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.
 
உடலில் பலகீனம், நோய் போன்றவை பீடித்து நீங்காமலிருப்பின் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. அதிலும் சனிப்பிரதோஷ விரதம் இருப்பது மிக மிக சிறப்பு. 
 சனி பகவான்
 
பெயர் - சனி பகவான், சனீஸ்வரன்,  முடவன், மந்தன்
தந்தை - சூரிய பகவான்
தாயார் - உஷா, சாயாதேவி
மனைவிகள் - நீலாதேவி,
சேஸ்டா தேவி புத்திரர் - குளிகன் அல்லது மாத்தி
நண்பர்கள் - புதன், சுக்கிரன்
சின்னம்  - தராசு
மொழி - அந்நிய பாஷை
ஆசனம் - வில்வ வடிவம்
பாலினம் - அலி
சாஸ்திர பெயர் - மேற்கோள்
கோத்திரம் - காசியபர்
வடிவம் - குள்ளம்
நாடி - வாத நாடி
உடல்உறுப்பு - நரம்பு (தொடை)
உணவு - எள்ளு சாதம்
உடமை - ஆயுளுக்கு முழுப் பொறுப்பு
ரத்தினம் - கருநீலம், நீலம் பஞ்சபூதத்
தன்மை - ஆகாயம்
குணம் - குரூரர்
நன்மை அடையும் இடம் - 3, 6, 11 தசை
வருடம் - 19 வருடம் பலன் கொடுக்கும்
பார்வை - 3, 7, 10
ராசி சஞ்சாரம் - 2 வருடம்
பிணி - வாதம், நரம்பு நோய்
பகைவர்கள் - செவ்வாய், சூரியன், சந்திரன்
கிழமை - சனிக்கிழமை
பூஜிக்கும் தேவதை - துர்க்கா, சாஸ்த்தா
பெற்ற பட்டம் - ஈஸ்வர பட்டம்
பரிகார தலங்கள் - 1. திருநள்ளாறு, 2. குச்சனூர்,   3. திருக்கொள்ளிக்காடு
திசை - மேற்கு
அதிதேவதை - எமன்
தேவதை  - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
இனம் - சூத்திரர்
நிறம் - கருமை
வாகனம்  - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை   மற்றும் வன்னி
ஆடை  - கருப்பு நிற ஆடை
ரத்தினம்  - நீலமணி
சுவை  - கசப்பு
சமித்து  - வன்னி
உலோகம் - இரும்பு
பயன் - நோய்,
வறுமை,   சிரமங்கள், நீங்குதல்
தீபம் - எள்ளு தீபம் ஆட்சி
வீடு - மகரம், கும்பம்
உச்ச வீடு - துலாம்
நீச்ச வீடு - மேஷம்
நட்பு வீடு - ரிஷபம், மிதுனம்,   கன்னி, தனுசு, மீனம்
சம வீடு - விருச்சிகம்
பகை வீடுகள் - கடகம், சிம்மம் 
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை
 
ஜோதிட விதிப்படி ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாக கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும். கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமாக சனிபகவானே இருக்கிறார்.
 
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம். சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால்தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை. 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது. பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர்.
 
குறிப்பாக சனிபகவான் 3, 6, 11-ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை. உடல்நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.
 
ஆனால், சனி பகவான் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை உண்டாக்குவார். குறிப்பாக 12, 1, 2-ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள். ஜென்மராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1-ல் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி என்றும் கூறுவார்கள்.
 
இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சினைகள், நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள், தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும். சனி 4-ல் சஞ்சரிக்கும் காலங்களை அர்த்தாஷ்டம சனி என்கிறோம்.
 
இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். சனி 7-ல் சஞ்சரிப்பதை கண்ட கனி என்கிறோம். இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்பு, கணவன்-மனைவி யிடையே கருத்து வேறுபாடு, நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடு, கூட்டுத் தொழிலில் வீண் பிரச்சினைகள், விரயங்கள் உண்டாகும். சனி 8-ல் சஞ்சரிக்கும்போது, அஷ்டம சனி உண்டாகிறது.
 
இக்காலங்களில் அதிகப்படியான சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். உடல்நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். குறிப்பாக சனிபகவான் சாதகமற்று சஞ்சரிக்கும்போது சிலருக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி ஜெனன காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும் அஷ்டம சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
 
தொழில் ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல. சனி சாதகமற்ற பலன்களை ஏற்படுத்தும் என்றாலும் ஜெனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய மகரம், கும்பம், துலாகத்தில் அமைந்திருந்தாலும் சனியின் நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சனியால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது. 
 பாதச்சனி
 
கோசார ரீதியில் சனிபகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் காலம் பாதச்சனி ஆகும். இதனால் குடும்ப சூழ்நிலையிலும் தன வருவாயிலும் சில சிக்கல்கள் நேரலாம். இதற்கு சனிக்கிழமையில் எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி, சனிபகவானை வழிபட்டு எள் அன்னம், நைவேத்தியம் செய்து ஆராதித்து, அதனை ஏழைகளுக்கு வழங்கி, அப்படிப் பெறுகின்ற ஏழைகளுக்கு சில்லரைகளையும் தான தர்மங்களையும் செய்யலாம்.
 
வீட்டிலும் தினசரி சமைத்த உணவை உண்ணுவதற்கு முன்பு காக்கைக்கு வைத்து அது உண்ட பின்பு உண்பது நலம். ஒரு தேங்காயை பசுவாக ஆவாகனித்து ஆத்ம சுத்தியுடன் ஏழைகளுக்கு தானமாக வழங்கினால் போதும். வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்றவற்றை நடத்தினால் நல்லது.
 மங்கு சனி, பொங்கு சனி
 
சனி சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கிரகம் ஆகும். சூரியக் குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும். வளி அரக்கக் கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும். சனிக்கோள் ஐதர்சன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒரு சில  தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது.
 
இது பாறை மற்றும் கனிக்கட்டியிலான சிறிய உள்ளகமும்  அதைச் சுற்றி தடிமனான  உலோக (மாலை) ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம  அடுக்கும் கொண்டது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கி.மீ. மணி வரையிலும் இருக்கக் கூடும்.
 
சனிக்கிகோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும்  ஆனவை. சனிகிரகத்தில் மொத்தம் 61 நிலவுகள் உள்ளன. இதைத் தவிர சுமார் 200 நிலவுக்குட்டிகள் சனிக்கு உள்ளன. கிரக வளையங்கள் கொண்ட சனி சூரிய குடும்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமாக  விளங்குகிறது. 
 
இவ்வளையங்கள் சனியின் பூமத்திய ரேகைக்கு மேல் சுமார் 6630 கி.மீ. லிருந்து 120700 கி.மீ.வரை நீண்டிருக்கிறது. சனி கிரகத்துக்கு சனைச்சரன் என்றும் மந்தன் என்றும் சனை என்றால் மெள்ள அதாவது மெதுவாக என்று  அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச்  சுமார் இரண்டரை வருடங்கள் சனி எடுத்துக் கொள்கிறார்.
 
விண் வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் இவர் வெகு தொலைவில் இருப்பவர், சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம் அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின. ராசி மண்டலத்தை ஒரு முறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை.
 
அதாவது ஒருவருது  வாழ்நாளில், சனி பகவான் மூன்று  முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒரு முறை 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை  என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி, அடுத்ததை பொங்கும் சனி, மூன்றாவதை போக்கு சனி என்பார்கள்.
 
இப்படி முன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கவுமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம். அதாவது இளமைப்  பருவம் எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு அலசி ஆராயும் திறனுடன், நல்லது, கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது.
 
துன்பங்களைத் தாங்கி, அதனை  அலட்சியப்படுத்தி, மனோபலமும், சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது. மூன்றாவது, முதுமை தேக ஆரோக்கியமும் மனோபாலமும் குறைகிற இறுதிப் பகுதி. சிறு வயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில் சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும் போது,   சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும்.
 
மனதில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத  நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே, சனியின் பாதிப்பு மங்கியது என்பர். இளமையில் வளர்ச்சியுற்று எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து  சனி பகவானின் தாக்கம் கட்டுகடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்க செய்கிறது. ஆகவே, பொங்கு  சனி என்கின்றனர்.
 
இன்ப- தன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று  மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, திருப்பத்தை நிறைவேற்றும் வகையில்  திசை திருப்ப முடியும்.
 
ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர். முதுமையில் சோர்வைச் சந்தித்த  உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர் கொள்ள  முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக் கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும், ஆகவே, அவனது வேலையைச்  சுட்டிக்காட்டி, போக்கு சனி என்றனர்.
 
ஆக, முதல் பகுதி வளரும் பருவம், 2-ம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கிற பருவம் இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது. 
 
 ஈஸ்வரர் பெயர் வந்த கதை
 
 
சூரியனுக்கு உஷாதேவி(சுவர்க்கலாதேவி) சாயாதேவி என்று இரண்டு மனைவிகள். சாயாதேவிக்கு பிறந்த கிருதவர்மா என்ற மகன்தான் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். கருமை நிறம் கொண்ட சனீஸ்வரனுக்கும் ஒளியாக  மின்னும் சூரியனுக்கும் பகை உணர்வு ஏற்பட்டது.
 
சனி பகவானுக்கு சிவன் மீதுதான் பக்தி அதிகமாக இருந்தது. சிவனுக்கு நிகரான நிலையை அடைய வேண்டும் என்று விரும்பிய சனிபகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை நிறுவி கடும் தவம் செய்தார். அவரது பக்தியை கண்டு மனம் இரங்கிய சிவபெருமான்"உனக்கு என்ன வரம் வேண்டும்'' என்று கேட்டார்.
 
அதற்கு சனி, "எனக்கு என் தந்தை சூரியனை விட அதிக பலமும் பார்வையும் வேண்டும். என் பார்வையில் இருந்து யாரும் தப்பக்கூடாது. என் பார்வைபட்டால் மற்றவர்கள் தங்கள் பலத்தை இழந்து விட வேண்டும். நவக்கிரகங்களில் எனக்கு மட்டுமே அதிக பலம் வேண்டும்.
 
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்  தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு தர வேண்டும்'' என்றார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உனக்கும் ஈஸ்வரன் என்ற பட்டம் தருகிறேன். இன்று முதல் நீ சனீஸ்வரன் என்று அழைக்கப்படுவாய் என்றார். இப்படித்தான் சனிக்கு ஈஸ்வர அந்தஸ்து கிடைத்தது. 
பக்குவப்படுத்தும் சனி
 
ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார்.
 
முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.
 ராசிகளில் சனி பிறந்த பலன்கள்
 
 மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளில் சனி இருக்கப் பிறந்த பலன் வருமாறு:-
 
* மேஷத்தில் சனி நிற்க பிறந்தவர் மூர்க்கனாவார். தொழில் நிமித்தம் அதிகம் சிரமம் அடைய நேரிடும்.
 
* ரிஷபத்தில் சனி நிற்க பிறந்தவர் சகோதர நன்மை இல்லாதவராகவும், தொழில், விவசாயம் போன்றவற்றில் தனம் தேடுபவனாகவும் இருப்பார்.
 
* மிதுனத்தில் சனி நிற்க பிறந்தவன் தொழில்நுட்ப அறிவு படைத்தவர். அரசுக்கு ஆலேசானை வழங்குபவராகவும் இருப்பார்.
 
* கடகத்தில் சனி நிற்க பிறந்தவர் ரோகமான தாயாரையுடைவர். தண்ணீரால் வியாதி கண்டம் உடையவர்.
 
* சிம்மத்தில் சனி நிற்க பிறந்தவர் பிதுர் துவேஷி, ரோக களத்திரம் உடையவர்.
 
* கன்னியில் சனி நிற்க பிறந்தவர் தொழிலில் தனமுடையவர். கடின உழைப்பாளி.
 
* துலாத்தில் சனி நிற்க பிறந்தவர், நேர்மையானவர், மூர்க்கன், தனக்காக (அ) தன்னைச் சார்ந்தவர்க்காக நியாய ஸ்தலம் செல்வார்.
 
* விருச்சிகத்தில் சனி நிற்க பிறந்தவர் முன் கோபியாக இருப்பார். கடின உழைப்பாளி, பிணியான மனைவி அமைவாள்.
 
* தனுசில் சனி நிற்க பிறந்தவர் சகோதர அன்பை பெற முடியாவராக காணப்படுவார். தொழில் நுட்ப அறிவு மிகுந்தவராகவும் இருப்பார்.
 
* மகரத்தில் சனி நிற்க பிறந்தவர் பெருந்தன்மை மிகுந்தவர். நீதி நெறி தவறாதவர்.
 
* கும்பத்தில் சனி நிற்க பிறந்தவர் சதா பிரயாண சுகம் உள்ளவர். சகோதர நேசம் இல்லாதவர்.
 
* மீனத்தில் சனி நிற்க பிறந்தவர் தொழில், தனம் உடையவர். தொழில் நுட்ப அறிவுடையவராக திகழ்வார். 
 
 
சனி கோர பார்வை ராஜாவை பிச்சைகாரனாகவும், பிச்சைக்காரனை ராஜாவாகவும் மாற்றும் சக்தி வாய்ந்தது. அதனால்தான் "சனியை போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை'' என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனென்றால் சனிபகவான் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவார்.
 
ஆனால் பிறருக்கு கெடுதல், தீமை செய்பவர்கள் மீது சனியின் கோரப்பார்வை சனி பிடிக்கும்போது அவர்களை ஏழரை ஆண்டுகள் சனி பிடித்து ஆட்டி படைப்பார். அப்போது வாழ்க்கை இன்பத்தினை இழந்து, பதவி மற்றும் இருந்த வேலை இழந்து, வாழ்க்கையே வெறுத்து தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு துன்பத்தினை அனுபவிப்பார்கள். 
இந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்
 
ஒரு சமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு "நான் தேவர்களுக் கெல்லாம் தலைவன் என்னை எப்படி நீ பிடிக்கலாம்?'' என்று  கேட்டார். அதற்கு சனி பகவான் "என் பார்வையிலிருந்து எவருமே  தப்ப முடியாது'' எனப்பதிலளித்தார். "அப்படியானால் நீ என்னைப்பிடிக்கும் நேரத்தைச் சொல்லி விடு'' என்று தேவேந்திரன் கேட்டார்.
 
சனி பகவானும் அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச்சாளி உருவம் எடுத்து சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார்  என்று நினைத்தார். அவர் நினைத்தப்படியே குறிப்பிட்ட நேரம் கடந்தது. சனி பார்வை தன் மீது படவில்லை என்று இந்திரன் மகிழ்ந்தார்.
 
சிறிது நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்துக் விட்டதாக பெருமையாக கூறினார். உடனே சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால் தான்! என்றார் எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் சனியின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 
 சனி பகவான் பூஜை
 
சனிக்கிழமை காலை குளித்து சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும். எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள், கசப்பு பதார்த்தகங்கள் படைத்து பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும். சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கவும்.
 
எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது போட்டு கட்டி, திரி போல் திரித்து விளக்கில் போட்டு எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும். பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் முதலியவற்றில் சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.
 
சனிபகவானும் நோய் பாதிப்பும்
 
ஜாதகத்தில் சனி பகவான் பலம் குன்றியவர்களுக்கு நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட வியாதிகளான வாயு, கை- கால் தொடர் நடுக்கம் என்கிற  வியாதி, சிறுநீரகக் கோளாறு அடிவயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் போன்றவை உண்டாகின்றன. ஒருவருக்கு ஏழரைச்   சனி வந்தால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்த அளவிலாவது ஏற்படும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.
 
இது ஏழரைச் சனிக்கு மட்டுமின்றி அஷ்ட மச்சனி, சனி தசைக்கும் பொருந்தும், அது போன்ற நிலையில் உள்ளவர்கள் சொகுசாக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து அதிகளவில் நடந்து செல்ல பழக வேண்டும். சனி எளிமைக்கு உரிய கிரகம் என்பதே அதற்கு காரணம்.சனியின் ஆதிக்கத்திற்கு  உட்படும் போது நடை பயணம் செய்வதன் மூலமே சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும். 
 
 
 சனி பற்றிய 53 முக்கிய தகவல்கள்
1. சனியானவர் ஜன்ம லக்னத்தில் இருந்தாரானால் அது சொந்த வீடாக இல்லாத பட்சத்தில் ஜாதகரின் வாழ்க்கையில் சங்கடங்கள் சூழக் கூடும். ஜாதகர் வறுமையில் உழல்வார். மட்டமான செயல்களைச் செய்யக்கூடியவர் ஆவார். மந்தமாகப் பேசுவார்.
 
2. லக்னத்தில் சனி இருக்கப் பெற்று சனிக்கு அது பகைவீடாக இருக்குமானால் நண்பருடன் சண்டை போடுகிற குணம் ஜாதகருக்கு அமையும். ஜன்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனி இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு. தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்.
 
3. மகரம் அல்லது கும்பம் ஜன்ம லக்னமாகி சனியானவர் அங்கே இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு விசேஷமான தகுதிகள் நன்மைகள் சிறப்புகள் எல்லாம் உண்டாகும்.
 
4. ரிஷபத்தில் உள்ள சனியானவர் அது ஜன்ம லக்னமானால் சிறப்பான பலன்களைத் தருவார் என்று சில கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
 
5. 2-ஆம் இடத்தில் உள்ள சனி நிறையப் பணம் தருவார். ஆனால், அந்தப் பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். 2-ல் உள்ள சனியினால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக் கூடும்.
 
6. சனியானவர் 2-ஆம் இடத்தில் இருந்தாரானால் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று சுகபோகங்களையும், செல்வங்களையும் பெறக்கூடியவராக இருப்பார்.
 
7. 2-ல் உள்ள சனியால் ஜாதகருக்குத் தாயிடம் பக்தியுண்டாகும். ஆனால், சகோதர பாசம் இராது.
 
8. 2-ல் உள்ள சனிக்குச் சுபபலம் இருக்குமானால் அதாவது ஆட்சி, உச்சம் போன்ற நிலை இருக்குமானால் குறைகள் குறையவும், நிறைகள் அதிகமாகவும் சந்தர்ப்பமுண்டு.
 
9. 3-ஆம் இடத்தில் உள்ள சனி அறிவு, ஆற்றல் இரண்டையும் தருவார். ஆனால், மனோவியாகூலம் அவ்வப்போது உண்டாகும்.
 
10. சனியானவர் 3-ல் இருந்தால் ஜாதகருக்குத் தரும குணம் இருக்கும். ஆனாலும் செய்யும் காரியங்களில் தரக்குறைவு இருந்து கொண்டிருக்கும்.
3-ல் உள்ள சனி பலம் பெற்றிருந்தாரானால் குறைகள் எல்லாம் அகல்வதோடு மனைவியால் இன்பமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும்.
 
11. 3-ஆம் இடத்தில் உள்ள சனி பலவீனமாக இருந்தாரானால் சகோதரர்களுக்கு நாசம் ஏற்படக்கூடும். தாய்நாட்டை விட்டு வெளிநாடு செல்லக்கூடிய நிலை ஜாதகருக்கு உண்டாக கூடும். அந்த நிலை நல்லதாக அமைவதற்கு 3-ல் உள்ள சனிபலம் பெற்றிருக்க வேண்டும்.
 
12. 4-ல் உள்ள சனி மகிழ்ச்சியைக் கெடுப்பார். அமைதியைக் குலைப்பார். கவலையைக் கொடுப்பார். குடும்பத்திலிருந்து பிரிய வைப்பார்.
 
13. 4-ஆம் இடத்தில் உள்ள சனியால், தந்தை வழி நலம் குறையும். சொத்துக்கள் சேர்மானம் இராது. இருதயநோய் ஏற்படக்கூடும். வயிற்றுவலியும் உண்டாகக்கூடும்.
 
14. 4-ஆம் இடத்தில் உள்ள சனியினால் அந்நிய தேசவாசம் ஜாதகருக்கு உண்டாகும்.
 
15. பலம் பொருந்தியவராக உள்ள சனி 4-ல் இருப்பாரானால் ஜாதகருக்குச் சுபிட்சமும், செல்வமும் வாகனவசதியும் ஏற்படத் தடையிராது.
 
16. 5-ல் சனி மக்கள் பாக்கியத்தைக் குறைப்பார். புத்திர தோஷம் உண்டாகக் கூடும். மேலும் செல்வம் சந்தோஷம் இவைகள் குறையும்.
 
17. 5-ல் உள்ள சனி ஜாதகருக்குப் புத்தி மந்தத்தை உண்டு பண்ணுவார். பகைவரால் தொல்லையை உண்டாக்க கூடும். மனநலம் திருப்திதராது. நேர்வழியில் சிந்தனை செல்லாது. மனோவியாதி உண்டாக கூடும்.
 
18. 5-ல் உள்ள சனியின் மூலம் வயிற்றுநோய் உண்டாகலாம். ஆனால் பொதுவாக ஓர் உன்னதமான வாழ்க்கை பெறுவதற்குச் சந்தர்ப்பமுண்டு.
 
19. 8-ல் உள்ள சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்தாரானால் கெட்ட பலன்கள் பெருமளவுக்கு குறைந்து விடும். நல்ல பலன்கள் இடம்பெறும்.
 
20. 6-ஆம் இடத்தில் சனிக்குப் பலம் இருக்குமானால் ஜாதகர் பகைவரை வெற்றிக் கொள்வார். பலம் குறைந்த சனியினால் ஜாதகர் பகைவரால் ஒடுக்கப்படுவார்.
 
21. 6-ல் உள்ள சனி பகைவருடைய வீட்டிலோ, நீச்ச நிலையிலோ இருப்பாரேயானால், பிறந்த குடிக்கே நாசம் தேடுவார். மேலும் வாழ்வில் சோதனையை ஜாதகர் சந்திக்கக்கூடும்.
 
22. பொதுவாக 6-ஆம் இடம் சனிக்கு ஏற்புடைய இடமாகையால் ஜாதகர் கவுரவமாகவும், செல்வ சுகங்களோடும் வாழக்கூடும். ஜீரண சக்தியும் ஜாதகருக்கு இருக்கும்.
 
23. 6-ஆம் இடத்தில் உள்ள சனியினால் தாய் நலம் பாதிக்கப்படும். வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இந்தச் சனி பலமுள்ளவராக இருந்தால் ஜாதகருக்கு நோய் நொடிகள் உண்டாகாமல் ஆரோக்கியம் இருந்து வரும்.
 
24. 7-ல் உள்ள சனியினால் நன்மைகள் குறையும். செல்வ சுபிட்சம் குறையும். அலைச்சல்கள் அதிகமாகும்.
 
25. 7-ஆம் இடத்தில் உள்ள சனி, ஆண் ஜாதகருக்குத் தகாத பெண் சேர்க்கையை உண்டாக்கும். கீழ்த்தரமான செயல்களை ஜாதகர் செய்ய நேரும்.
 
26. 8-ல் உள்ள சனியால் கண்பார்வை மங்கக்கூடும். வயிற்றுக் கோளாறு உண்டாகக் கூடும்.
 
27. 8-ல் உள்ள சனி ஜாதகருக்குப் பணத்தைச் சேர்த்துத் தருவாரே தவிர மதிப்பை தர மாட்டார். ஜாதகர் அடிமைவேலை செய்ய வேண்டியிருக்கும். சுயமாக பெரிய காரியங்களை நிர்வகிக்கக்கூடிய ஆற்றல் இல்லாமல் போகும்.
 
28. 8-ல் உள்ள சனி இளம் வயதில் ஜாதகருக்கு மகிழ்ச்சியை தரமாட்டார். ஆயுளை தீர்க்கமாகக் கொடுப்பார்.
 
29. 9-ல் உள்ள சனியால் ஜாதகருக்குப் பணம் குவியும். மகிழ்ச்சி ஏற்படும். மக்களால் மகிழ்ச்சியுண்டாகும்.
 
30. சனி 9-ல் இருக்கப் பிறந்தவர்களுக்கு வேதாந்த மனப்பான்மை ஏற்படும். ஜோதிடம் போன்ற கலைகளில் பாண்டித்யம் உண்டாகும்.
 
31. 9-ல் உள்ள சனி பலவீனம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டக்குறைவு உண்டாகும். மற்றவர்களுக்கு ஜாதகரால் தொல்லை விளையக்கூடும்.
 
32. பெரும்பாலும் 9-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டில் யோகத்தை உண்டு பண்ணுவார்.
 
33. 10-ஆம் இடத்தில் உள்ள சனியானவர் விவசாயம் மற்றும் தானியங்கள், எண்ணெய், உரம் ஆகியவற்றின் மூலம் ஜாதகர் பொருள் திரட்ட சந்தர்ப்பத்தைத் தேடித்தருவார்.
 
34. 10-ல் உள்ள சனி ஜாதகருக்கு சாத்திர ஞானத்தை உண்டு பண்ணுவார். சிறந்த கல்வி ஜாதகருக்கு உண்டாகும். தைரியம் புகழும் ஜாதகரை வந்து சேரும்.
 
35. 10-ல் உள்ள சனி ஜாதகரை பணக்காரராக்குவார். உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பார். பெரிய நிர்வாகியாக விளங்குவார்.
 
36. 10-ஆம் இடத்தில் சனி உள்ளவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்க முடியும். பெரிய குழுவுக்கு ஜாதகர் தலைமை தாங்கும் சக்தி ஏற்படக் கூடும்.
 
37. 10-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டு வாசத்தை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.
 
38. சனி 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் நிறையச் சம்பாதிப்பார். சொத்துக்கள் சேர்ப்பார். நிறைய வருமானம் அடையப் பெறுவார்.
 
39. 11-ஆம் இடத்தில் உள்ள சனி மூலம் ஜாதகர் தைரியசாலியாக வாழ முடியும். சரீர சுகம் அமையும். ஆனால் இளமையில் உடல் உபாதை ஏற்படக் கூடும்.
 
40. பொதுவாக 11-ஆம் இடத்தில் உள்ள சனியால் ஒரு ஜாதகர் வியாபாரத் துறையில் விற்பன்னராக முடியும். இரும்பு, விவசாயம், எண்ணெய், உலோகங்கள் ஆகிய துறைகளின் மூலம் ஜாதகர் நிறையப் பொருள் திரட்டும் வாய்ப்பு ஏற்படும்.
 
41. 11-ஆம் இடத்தில் உள்ள சனி பல நிலைகளிலும் சிறப்பைத் தருவார். என்றாலும், குடும்பத்தில் ஜாதகருக்குச் சிறப்பை உண்டாக்க மாட்டார். ஜாதகரால் குடும்பத்தாருக்கு நலம் உண்டாகவும் விடமாட்டார்.
 
42. 12-ல் உள்ள சனி ஜாதகருக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்க மாட்டார். தொழில்களிலும் வீழ்ச்சியை உண்டு பண்ணுவார்.
 
43. 12-ல் உள்ள சனியினால் ஜாதகருக்கு கடும் செலவு உண்டாகக் கூடும். அறிவாற்றல் மங்கியிருக்கும். பகைவரால் தொல்லை விளையக்கூடும்.
 
44. 12-ஆம் இடத்தில் உள்ள சனிக்கு சுபர் பார்வை ஏற்பட்டு ஆட்சி அல்லது உச்சநிலை ஏற்பட்டிருக்குமானால், குறைகள் பெரும்பாலும் குறையும். சில நன்மைகள் தலைகாட்டும்.
 
45. நவகோள்களிலும் ஈஸ்வரப்பட்டம் சனியைத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது.
 
46. ஒருவரது ஜென்மராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசி வீடுகளில் தலா 2 வருட வீதம் 32 1/2 என்ற சஞ்சரிக்கும் காலம் 7 சனி காலமாகும்.
 
47. ஒருவரின் ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 8ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.
 
48. ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை கூட்டி வழங்குவார்.
 
49. இந்தியாவில் திருநள்ளாறில் தனி ஆலயமாக சனீஸ்வரன் மிகப் பிரசித்தம் பெற்று விளங்குகின்றார். இலங்கையில் திருக்கோணமலையில் மரத்தடியில் சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
 
50. சனிக்கிரகம் பூமியில் இருந்து 97 கோடியே 90 லட்சம் மைல்கள் தொலைவில் உள்ளது. இதனைச் சுற்றி 3 வளையங்கள் உள்ளன. இதன் நடுவில் இருள் படலம் உள்ளது. 75000 மைல்  விட்டமும் 700 பங்கு கன பரிமானம் உள்ளது. பூமியைப் போல் 100 மடங்கு எடையுள்ளது. இது ராசி மண்டலத்தைச் சுற்றிவர 29 வருடம் ஆகிறது.
 
51. சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவானை சனிக்கிழமைகளில் விசேஷமாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து எள்ளு எரித்து சனிபகவானின் கெடுபலனிலிருந்து விடுபடுவதால் நற்பலனை பெறலாம்.
 
52. சனீஸ்வரரின் அருளை வேண்டி வழிபடுபவர்கள் அவசியம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வது நல்லது.
 
53. சனிபகவான் தொல்லை நீங்க வேண்டுமானால் விபூதி அணிய வேண்டும் என்கிறார் ஷீத்வா முனிவர். 
 
 சனீஸ்வர தீபம்
முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
 
இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
 
இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
 
ஸ்ரீசனி பகவான் வழிபாடுகள்


 
1.உடல் ஊனமுற்றவர்களுக்கு அல்லது அதை சார்ந்த பள்ளிகளுக்கு உதவி செய்தல்.
 
2.சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல்.
 
3.அருகில் உள்ள சிவ ஆலயங்களில் சிவ வழிபாடு செய்தல்.
 
4.சங்கடஹர சதுர்த்தி அன்று மோதகம் வைத்து அருகம்புல் சாற்றி வழிபடுதல்.
 
5.ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மலை சாற்றி வழிபடுதல்

Friday, November 25, 2011

ஆன்மிக தகவல்கள்

* குலதெய்வம் கோயிலுக்கு அகல் விளக்குகள் வாங்கிச் சென்ற பொழுது ஒரு சில உடைந்து விட்டன. இது நன்மையா கெடுதலா?

விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய்யும் பொழுது அதுவே தானாக விழுந்து உடைந்தால் தான் பரிகார தீபம் ஏற்ற வேண்டும். வாங்கிச் செல்லும் பொழுது கவனக்குறைவால் உடைந்ததற்கெல்லாம் பயப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே.

* கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்?

நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றே புரியவில்லை.
கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது.

* எங்கள் வீட்டில் துளசியுடன் வில்வமும் சேர்ந்து வளருகிறது. இரண்டையும் சேர்த்து வணங்கலாமா? அல்லது கோயிலில் நடலாமா?
கமலா, ஆத்தூர்
இரண்டும் உங்கள் வீட்டில் நன்றாக வளருவதே பெரிய பாக்கியம். தினமும் விளக்கேற்றி நன்றாக வழிபடுங்கள். உங்கள் வீடு மங்களகரமாக இருக்கும்.

** வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறேன். அதனால் குறை ஏதுமில்லை. ஆனால், சிலை வழிபாடு கூடாது என்று சிலர் கூறுகின்றனர். விளக்கம் தேவை.
எஸ்.தீபா கடலூர்
வீட்டில் சாமி சிலைகளை ஆறு அங்குல உயரத்திற்கு மேல் இல்லாமல் வைத்து தாராளமாக பூஜை செய்யலாம்.

* பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூடாதா?

பிறந்த நட்சத்திரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. கிழமை பார்க்க வேண்டாம். தீபாவளியன்று ஜென்மநட்சத்திரம் வந்தால் சும்மா இருந்து விடாதீர்கள். அது விதி விலக்கு.

* வீடு, தீர்த்தக்கரை, கடற்கரை இம்மூன்றில் பிதுர்தர்ப்பணத்தை எங்கு செய்வது சிறப்பானது?

கடற்கரையில் செய்வது முதன்மையானது. நதி, குளக்கரைகளில் செய்வது விசேஷமானது. வீட்டில் செய்வது மத்திமம் தான். அவசர கதியில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழலில், ஏதாவது ஓரிடத்தில் விட்டுவிடாமல் செய்வதே மிக மிக உத்தமமானது தான்.

* பஞ்சாட்சர மந்திரம் (நமசிவாய, சிவாயநம)சொல்லித்தான் திருநீறு பூச வேண்டும் என்பது உண்மையா?

பஞ்சாட்சரம் (நமசிவாய) சொல்லி திருநீறும், அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய)சொல்லி திருமண்ணும் இட்டுக் கொள்வதைப் போன்ற புண்ணியச் செயல் இவ்வுலகில் வேறு கிடையாது.

* கருவறையில் திரைபோடும் போது சந்நிதியை தரிசனம் செய்வதோ சுற்றி வலம் வருவதோ கூடாது என்கிறார்களே? உண்மைதானா?

உண்மைதான். ஒருவரை சந்திக்கச் செல்கிறோம். அவர் நம்மை சந்தித்துப்பேசும் நிலையில் விழித்துக் கொண்டிருந்தால் தானே சந்திப்பு என்பது நிகழும். அதுபோலத் தான் திரைப்போடப்பட்ட சந்நிதியும்! அப்போது தரிசிப்பது வலம் வருவது போன்றவை செய்யக்கூடாது. இது போன்ற சமயங்களில் விமான கோபுரங்கள் உள்ளன. அவற்றை தரிசித்தாலே சுவாமி தரிசன பலம் கிட்டும்.
கோயில்களில் கொடுத்த பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு போடுவது சரிதானா?
.
ஒருமுறை சுவாமிக்கு சாத்தப்பட்டு பிறகு எடுக்கப்படும் மாலைக்கு "நிர்மால்யம்' என்று பெயர். நிர்மால்ய மாலைகளை வேறு தெய்வத்திற்குச் சாத்துதல் கூடாது.

* பூஜை அறையில் சுவாமி படங்களுடன் மறைந்த பெரியவர்களின் படங்களை வைக்கலாமா?

சுவாமி படங்களுடன் சேர்த்து வைப்பது கூடாது. சற்று தள்ளி தனியாக வைத்து வழிபடலாம். மறைந்த பெரியவர்கள், பிதுர்கள் என்று அழைக்கப்படுவர். தெய்வநிலை வேறு. பிதுர்நிலை வேறு.

* அசைவம் சாப்பிடும் நாட்களில் கோயிலுக்கு செல்வது தவறுதானா?
எஸ்.ஆதிகேசவன், விருதுநகர்
கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டிருக்கும் நீங்கள் அந்த கருமத்தை விட்டுவிடக்கூடாதா? உலகிலேயே அதிகமாக அசைவம் சாப்பிடும் சீனர்கள் கூட இன்று சைவத்திற்கு மாறி வருகிறார்கள். உலகிற்கே எடுத்துக்காட்டாக இருக்கும் இந்து தர்மம் புலால் சாப்பிடுவதை அனுமதிப்பதில்லை. எனவே இந்தக் கேள்வி தள்ளுபடி செய்யப்படுகிறது.

* என் தாய் பூஜை செய்து வந்த விக்ரஹங்களுக்கு என்னால் சரிவர பூஜை செய்ய முடிவதில்லை பூ, பால் வைத்து வணங்கினால் போதுமா?

தாய் தந்தை விட்டுச் சென்ற மற்ற எல்லாவற்றையும் பராமரிக்கிறோம். பூஜை மட்டும் சரிவர செய்யமுடியவில்லை என்றால் எப்படிப் பொருந்தும்? நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே உங்கள் தாய் பூஜை செய்து வந்திருக்கிறார்கள். உங்கள் வாரிசுகளும் நன்றாக இருக்க, நீங்களும் முடிந்த வரை நன்றாகவே பூஜை செய்யுங்கள்.

** வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்த என்னால் இயலவில்லை. இதனால் ஏதேனும் பாதிப்பு நேருமா?

வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்தவில்லையே என உங்கள் மனம் உறுத்துகிறது. இதுவே பெரிய பாதிப்பு தானே! சீக்கிரம் நிறைவேற்றிவிடுங்கள்.

* திருமணம், காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னதாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்களே ஏன்?

திருமணம், காதுகுத்தல் போன்றவை நம் குலம் அபிவிருத்தியடைவதற்காகச் செய்யப்படும் சுபநிகழ்ச்சிகளாகும். இவை நல்ல முறையில் நடந்து நம் குலம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலில் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

* இரண்டு மாத இடைவெளியில் இறந்த பெற்றோருக்கு ஒரே நாளில் திவசம் பண்ணலாமா?

தாயின் சிராத்தம் முறை வேறு. தந்தையின் சிராத்தம் முறை வேறு. இரண்டையும் அவரவர்கள் திதியில் செய்தால் தான் பித்ருக்கள் திருப்தியடைவார்கள். ஒன்றாக செய்யக் கூடாது.

* திருமாங்கல்யத்தில் "சிவாயநம' என எழுதி வழங்கலாமா?

திருமாங்கல்யம் என்பது பரம்பரை பரம்பரையாக பழக்கத்தில் செய்து வருகிற ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதிரி அமைந்துள்ளது. நம் குடும்பத்துப் பெரியவர்கள் கூறும் முறைப்படி செய்வது தான் நல்லது. சுவாமி அம்பாள் உருவங்கள் பொறிப்பது தான் வழக்கம். எழுத்துக்கள் எழுதுவது இல்லை. 

அடி கொடுத்தவர் பிட்டு தரவில்லையே! -எல்லாம் தாமே என்பதை ஈஸ்வரன் அறிந்திருக்கிறார். ஆனாலும், அவரை வேறாக நினைத்திருக்கிற ஜீவர்களை அவரும் வேறு போல பார்த்து வேடிக்கையும் செய்வார். இதைப்பற்றி ஸ்ரீநீலகண்டதீட்சிதரின் "சிவலீலார்ணவத்தில்' ஓர் அழகான ஸ்லோகம் உண்டு.
""பரமேஸ்வரன் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்த கதை எல்லோருக்கும் தெரியும். அவர் உடைப்பு அடைத்து ஒழுங்காக வேலை செய்யாததைக் கண்டு பாண்டியராஜா அவரைப் பிரம்பால் அடித்தான். அந்தப் பிரம்படி பாண்டியன் உள்பட சகலஜீவராசிகள் மீதும் விழுந்தது. இங்கே தாமே எல்லாமும் என்பதை அவர் காட்டி விட்டார்.
இதைப் பார்த்து கவி கேட்கிறார், "" அது சரி! உன்னைத் தவிர வேறில்லை என்ற சிவாத்வைதம் பிரம்படிக்கு மட்டும் தானா? நீ மதுரமான பிட்டை வாங்கித் தின்றாயே, அப்போது மட்டும் ஏன் எல்லா ஜீவராசிகளுக்கும் அதை உண்ட ஆனந்தம் இல்லை? அடிபடும்போது ஒன்று; ஆனந்தத்தின் போது வேறா? '' சுவாமி உள்ளே அடங்கிய பிரம்மமாகவும், வெளியே காரியம் செய்கிற ஈஸ்வரனாகவும் இருப்பதைஇந்த ரசமான கேள்வி மூலம் தெரிந்து கொள்கிறோம்.
அவர் செய்கிற காரியங்களை, "பஞ்ச கிருத்யம்' என்று ஐந்தாகச் சொல்வார்கள். இதில் மாயையால் மறைக்கிற காரியம் "திரோதானம்' எனப்படும். இந்த மாயையில் இருந்து விடுவிப்பதே, அவர் செய்கிற மகா பெரிய காரியம், அநுக்கிரகம்.
விளக்கம்: உலகத்தில் பிறந்தது பெரிய அடி. "ருசியான பிட்டு' என்பது வாழ்வில் அவ்வப்போது கிடைக்கும் தற்காலிக இன்பங்கள். தற்காலிக இன்பம் என்பதே "மாயை' . பிறவி என்ற அடி மட்டும் தான் நினைவில் இருக்க வேண்டும். அந்த அடியில் இருந்து தப்பிக்கிற வழியைப் பார்க்க வேண்டும்.

கை குலுக்கும் பழக்கம் யாரிடமிருந்து வந்தது

கை குலுக்கும்  பழக்கம் மேல் நாட்டுக்காரர்களிடம் இருந்து, உலகிலுள்ள எல்லாரையும் தொற்றியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் நம்மூர் பிரமுகர்களை சந்திக்க வந்தால் நீண்ட நேரமாக கை குலுக்குவதை "டிவி'களில் காட்டுகிறார்கள். இந்தப் பழக்கம் குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தொற்றியது என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்கு தெரியுமா?
ஒரு பெண்ணை ஆணுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை "பாணிக்ரஹணம்' என்பர். அதுபோல, ராமபிரானை சுக்ரீவன் சந்தித்து அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான்.அதற்கு அடையாளமாக தனது கையை அவர் பிடித்தால் போதும் எனக்கருதி "க்ருஹயதாம் பாணினா பாணிம்' என்றான். "கையைப் பிடித்தாலே நம் நட்பு உறுதியாகி விட்டது' என்று பொருள். ராமன் மனிதனாக வந்திருந்தார் என்றாலும் அவர் கருணாமூர்த்தி. அவரவர் தரத்தைப் புரிந்து கொண்டு, அதே தரத்திற்கு தானும் இறங்கி வந்து அனுக்கிரஹம் செய்பவர். எனவே, குரங்கு என்றும் பாராமல் சுக்ரீவனின் கையைப் பிடித்து நட்பை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு முதன்முதலில் கைபிடித்து உருவாகிய நட்பு, இன்று பரிணாம வளர்ச்சி பெற்று கை குலுக்கும் அளவுக்கு போயிருக்கிறது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்ட போது, அவர்களை குரங்குகளுக்கு ஒப்பிட்டு பரிகாசம் செய்ய, ஆன்மிக உபன்யாசகர்கள் இந்த மேற்கோளை காட்டுவார்கள்

இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.
ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ""ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது,'' என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.

ததீயாராதனம் என்றால்திருவிழா அழைப்பிதழ்களில் "ததீயாராதனம்' என்ற வார்த்தையைப் பார்த்திருக்கலாம். இதற்கு "அன்னதானம்' என்று மிகச் சாதாரணமாக பொருள் சொல்லி விடுகிறார்கள். இது மிகவும் அர்த்தமுள்ள வார்த்தை. "ததீயா' என்றால் "கடவுளுடன் சம்பந்தப்பட்டவர்' என்று பொருள். கடவுளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணவளிப்பதையே "ததீயாராதனம்' எனச் சொல்ல வேண்டும். அதாவது, ஏழைகளும், பூஜை செய்பவர்களும் இறைவனைச் சார்ந்தவர்கள் என எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு தேவையான உணவை அளிக்க வேண்டும். பசி என்ற சொல்லையே அகராதியில் இருந்து அகற்ற வேண்டும். பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமன், தன் அரண்மனைக்கு வரும் ஏழை பிராமணர்களுக்கு, உணவளிக்கும் போது சமையலறையை கவனிக்க போய்விடுவானாம். ஒரு சமயம், அவர்களது அரண்மனையில் நடந்த அன்னதானத்தில் 82 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை படைத்தனர்.

பின்னானார்'என்றால்

வனவாசத்தின் போது, ராமர், சீதை, லட்சுமணன் சித்திரகூடத்தில் தங்கியிருந்தனர். ராமனை எப்படியும் அயோத்திக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் பரதன் வேகமாக வந்து கொண்டிருந்தான். இக்காட்சியைக் கண்ட லட்சுமணன், அண்ணனுடன் யுத்தம் செய்யத் தான் பரதன் வருகிறான் என்று தவறாக எண்ணி கோபத்துடன் வில் மீது கையை வைத்தான். ராமன் அவனைத் தடுத்தார். பின், பரதன் எதற்காக அங்கு வந்தான் என்பதை அறிந்த லட்சுமணன், தான் செய்த தவறுக்காக வருந்தினான். இதனால் ஏற்பட்ட பாவத்தை தீர்க்க திருமூழிக்களம் என்னும் தலத்தில் மகாவிஷ்ணுவை வழிபட்டான்.
இதனை திருமங்கையாழ்வார், ""பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக்களத்தானாய்'' என்று பாடியுள்ளார். "பின்னானார்' என்றால் "ராமனுக்குப் பின்னால் பிறந்தவர்'. லட்சுமணன், பரதனைக் கட்டித் தழுவி இனிய சொற்களைப் பேசிக் கொண்டதால் இத்தலத்திற்கு "திருமொழிக்களம்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அதுவே மருவி திருமூழிக்களம் என்று மாறியதாகவும் கூறுவர்.

வள்ளி திருமணம்

 நான் முதலில் தெய்வானை திருமணத்தை  அப்புறமா வள்ளி திருமணத்துக்கு வரலாம் என்று இருக்கிறேன். என்ன இது?? இறைவனுக்குத் திருமணம்ங்கறாங்க? அதுவும் இரண்டு திருமணமாமே? அப்படினு பேசிக்கிறவங்களுக்கு எல்லாம் இது இறை தத்துவத்தைப் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிமைப் படுத்திச் சொல்வதற்கென்றே ஏற்பட்ட ஒன்று. திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று இறைவன் கேட்கவில்லை. ஆனாலும் நாம் தானே செய்து வைக்கின்றோம். அவன் திருமணம் செய்து கொண்டதாய்ப் பாடி, ஆடியும் மகிழ்கின்றோம் இல்லையா? ஆன்மாக்கள் இறைவனைச் சென்றடைவது ஒன்றே வாழ்க்கைத் தத்துவம். என்றாலும்எப்போது இப்படித் தத்துவார்த்தமாய் அனைவராலும் சிந்திக்க
முடியாது. அப்படிப் பட்டவர்களுக்கென இம்மாதிரி எளிய சம்பிரதாயங்கள், வழக்கங்கள் மூலம் இறைவனைச் சென்றடையும் வழியைக் காட்டுவதே இந்த அவசர யுகத்திற்கென  ஏற்பட்டது ஆகும். இங்கே தெய்வானை முருகனுக்கு இடப்புறமாய் இருக்கும் இடகலைச் சக்தியாவாள். வள்ளியோ வலப்பக்கம் இருக்கும் பிங்கலை சக்தி. இந்த இரு சக்திகளும் நம் உடலில் எவ்வாறு இயங்குகின்றதோ அவ்வாறே தெய்வானையும், வள்ளியும் முருகனோடு இணைந்த ஐக்கியமாக நமக்கு யோகத்தையும், அருளையும் போதிக்கின்றனர். நம் உடலின் இரு சுவாசங்களே, ஆறுமுகனின் இரு மனைவியராக உணரப் படுகின்றனர். இந்த சுவாசம் இல்லையேல் நாம் எங்கே? ஓகே, ஓகே, கோபி, இதோ கதை! தத்துவத்தை நிறுத்திக்கிறேன். இப்போது இவர்கள் எவ்வாறு தோன்றினார்கள் என்ற வழிவழியாக வரும் புராணக் கதையைப் பார்ப்போம்.

தில்லைக் கூத்தனின் நடனத்தைக் கண்ட மஹாவிஷ்ணுவின் ஆனந்தப் பரவச நிலையில் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரிலிருந்து தோன்றிய இரு மங்கையரே அமிர்தவல்லி, சுந்தரவல்லி. இருவரும் கந்தனை மணக்க விரும்ப, கந்தனோ, தன் அவதார நோக்கம் நிறைவேறும் வரையில் திருமணம் இல்லை எனவும் அது வரையில் இருவரையும், ஒருத்தியை
விண்ணிலும், மற்றொருத்தியை மண்ணிலும் பிறந்து தவத்தில் ஈடுபடும்படியும் சொல்லுகின்றான். விண்ணில் பிறந்த குழந்தையான தெய்வானையை தேவேந்திரனின் யானையான ஐராவதம் வளர்த்து வருகின்றது. யானைக் கூட்டத்துக்கே இயல்பாக உள்ள பாச உணர்ச்சியால், தாயில்லாக் குழந்தையான தெய்வானை யானையால் பாசத்துடன் வளர்க்கப்
பட்டு தெய்வானை ஆகின்றாள். முருகனை இப்பிறவியிலும் மறவாது மணம் புரியவேண்டி தவம் இருக்கின்றாள். அவள் தவம் நிறைவேற வேண்டியும், தன் அன்பு மகளின் மனோரதம் நிறைவேறவும், தேவர்களுக்குச் சேனாபதியாக வந்த தேவசேனாபதிக்குத் தன் மகளைத் தர நிச்சயிக்கின்றான், தேவேந்திரன். திருமணம் நிச்சயிக்கப் பட்டு வேத முறைப்படி, வேள்விச் சடங்குகளைப் பிரம்மா நிறைவேற்ற, தேவேந்திரன் தாரை வார்த்துத் தர முறைப்ப்படி நடக்கின்றது. தவமிருந்த தெய்வானையாகிய ஆன்மா இறையைத் தேடி
மண்ணுக்குவந்து மண்ணுலகில் திருப்பரங்குன்றத்தில் இறையோடு ஒன்றாய்க் கலப்பதே தேவ குஞ்சரியின் திருமணம் ஆகும். விண்ணுலக அருள் சக்தியான தெய்வானை முக்தியை முருகன் அருளுகின்றான் என்பதை விளக்க ஏற்பட்டதே தெய்வானை திருமணமாம் திருப்பரங்குன்றம் என ஏற்பட்டது. அடுத்து முருகன் தமிழ்க் குறத்தி ஆன வள்ளியைத் திருமணம் செய்து கொண்டது. வள்ளியம்மையை இச்சா சக்தி என்பார்கள். இவளை முருகன் இச்சை கொண்டானா அல்லது இவள் முருகனிடம் இச்சை கொண்டாளா என்பதை அறிதல் கடினம். ஆனால் தானே தமிழ், தமிழே
தானாகிய கந்தன் ஒரு பெண்ணை மணந்தது போதாது என நினைத்து, மற்றொரு பெண்ணையும் மணக்க நினைத்தான். அதுவும் ஒரு வேடுவப் பெண்ணை. எப்படித் திருமணம் புரிந்தான்?
  முதலில் வள்ளி பிறந்ததைப் பார்ப்போம்
 நமக்கெல்லாம் தெரிந்த கதையான வள்ளி கதையில்
நம்பிராஜனின் மகளாய்ப் பிறக்கின்றாள் என்று ஒரு கதையும், நம்பிராஜன்
கண்டெடுக்கின்றான் என இன்னொரு வகையும் உண்டு. ஆனால் இந்தக் குமரி மாவட்டக் கதைப் பாடல்களில் சொல்லுவதே வேறே.ரிஷ்ய
சிருங்கருக்கும், மற்றொரு பெண் மான் உருவில் இருந்த பெண்ணிற்கும் பிறந்த குழந்தையே வள்ளி. நம்பிராஜன் வேளி மலை அரசன். இவன் மனைவி மோகினி. இவன் வேட்டைக்குச் செல்லும்போது வள்ளிக் கிழங்குகள் சூழ்ந்த தோட்டத்தில் இந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்து வருகின்றான். இந்தக் குழந்தையைச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகின்றனர் நம்பிராஜன் குடும்பத்தில். குழந்தை அழுதால் பாடும் பாட்டெனச் சொல்லுவது,
"மானே நீ போட்ட சத்தம்
மலக்குறவன் ஓடி வந்து
ஓடி வந்து வள்ளி தனை
வளைத்துமே எடுத்தானே
வளைத்துமே எடுத்தானே
பெண்பிள்ளை பிள்ளையல்லோ
பிள்ளையே ஆயிப்போச்சு
ஆமணக்கு தண்டு வெட்டி
அது நிறையத் தேனடச்சு
தேனடச்சு
அமுது பெறும் நேரமெல்லாம்
அமுது பசி அடக்கிவிட்டு
குச்சு போய்ச் சேர்ந்தார்கள்."
என்ற இவ்வாறு ஓடி வந்து வள்ளியாகிய குழந்தையின் அழுகையை அடக்குகின்றார்களாம், குறவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து. நம்பிராஜனுக்கு மகன்கள் நிறையப் பேர். அனைவரும் வள்ளியைத் தங்கள் சொந்த சகோதரி போலவே எண்ணிப் பாசமுடனும், நேசமுடனும்
வளர்த்து வந்தார்கள். தினைப்புலத்தில் தினை அறுவடைக்குக் காத்து நின்றது. அங்கே பட்சிகள் வந்து செய்யும் இம்சை தாங்க முடியவில்லை. தன் மருமகள்கள் ஒவ்வொருவரையும் வேண்டுகின்றாள் நம்பிராஜன் மனைவியான மோகினி. ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு காரணம். மறுக்கின்றார்கள். ஒருத்திக்குக் குழந்தைக்குப் பால் கொடுக்கணும், ஒருத்திக்குக் குழந்தை பிறக்கப் போகின்றது. இன்னொருத்திக்குத் தலை
நோவு. இப்படிச் சொல்ல, அங்கே மெல்ல, மெல்ல மாமியார், மருமகள் சண்டை உதயம் ஆகும்போல் சூழ்நிலை உருவெடுக்கின்றது. பார்த்தாள் வள்ளி, தானே தினைப்புலம் காவல்காப்பதாய்ச் சொல்லிக் கிளம்புகின்றாள். பதறுகின்றாள் மோகினி. ஆஹா, பொன்னைப் போல் போற்றி வளர்த்த
பெண்ணாயிற்றே. எப்படி அனுப்புவது?? தயங்கினாள் மோகினி. அன்னையைத் தேற்றி விட்டுப் புறப்படுகின்றாள் வள்ளி. கூடவே துணைக்குத் தோழிப் பெண்களை அனுப்பினாள் மோகினி. தோழிகள் புடை சூழ தினைப்புலம் வந்து, அங்கே மரத்தின் உச்சியில் தங்குவதற்குக் கட்டி இருக்கும் இடத்தில் தங்கிக் கொண்டு, கையில் ஒரு குச்சியையும் வைத்துக் கொண்டு வரும் பட்சிகளை விரட்டுகின்றாள் வள்ளி.. ஆலோலம், ஆலோலம், ஆலோலம் என்று பாடுகின்றாள் வள்ளி. அவள் ஆலோல சப்தம் கேட்டுப் பட்சிகள் பறந்தனவா? அவளைத் தூக்கிச் செல்ல கந்த பட்சி பறந்து வந்ததா??
வள்ளி தினைப்புலம் காக்க வந்துவிட்டாள். ஏற்கெனவே வள்ளியின் திருமணம் குறித்து அவளின் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனும், தாயான மோகினியும் கவலையுற்றிருந்தார்கள். ஆனால் நாரத முனியோ அவள் குறிஞ்சிக் கடவுளான முருகனுக்கே உரியவள் எனச் சொல்லி இருந்தார். முருகனாவது, வள்ளியை வந்து மணப்பதாவது! என்ன செய்வது என்றறியாமல் இருந்தனர் நம்பிராஜனும், மோகினியும். இந்நிலையில் வள்ளி தினப்புலம் காக்கச் சென்றாள். அங்கே தோழிகள் புடை சூழ "ஆலோலம்" பாடினாள். ஆடினாள். அப்போது தோழிகள் ஓடி வந்து வள்ளியிடம் வளைச் செட்டி வந்திருப்பதாய்க் கூற , அவனை அழைத்து வருகின்றனர். தோழியர் அழைத்து வந்த வளைச் செட்டியைப் பார்த்து வள்ளி, இவன் என்ன சிறு பிள்ளையாக இருக்கின்றானே என மனதிற்குள் எண்ணினாள். வள்ளியின் கை பிடித்து வளை போட செட்டி நெருங்கியதும், வள்ளி விதிர் விதிர்த்துப் போகின்றாள். அந்த ஆறுமுகன் பிடிக்க வேண்டிய கை இது, ஒரு வளைச்செட்டி பிடிக்கலாமோ என மயங்குகின்றாள். வளைச் செட்டியைத் துரத்துகின்றாள் வள்ளி. ஏளனமாய்ப் பேசுகின்றாள் அவனைப் பார்த்து. அவமானப் படுத்தித் திருப்பி அனுப்புகின்றாள். "ஏ! வளைச்செட்டி,
"ஆருமற்ற வள்ளி நாம்
அருந்தினையைக் காக்கப் போறேன்
வாசலிட்டுப் போறவளுக்கு
வளசலு எனக்கெதுக்கு?"
என்று சொல்லி அவனை விரட்டுகின்றாள். வள்ளியின் அன்பின் ஆழம் புரிகின்றது கந்தனுக்கு. ஆம் வளைச் செட்டி வேடத்தில் வந்து வள்ளியைச் சோதனை செய்தது அந்தக் கந்தனே ஆகும். தினைப்புலம் காக்கும் போது வள்ளி தினைக் கொத்த வரும் கிளி, மைனா, குருவி, அன்னங்கள், காக்கைகள் போன்றவற்றை விரட்டுகின்றாள். ஆலோலம், ஆலோலம், ஆலோலங்கடி, சோஓஓஓஓஓஓ" ஆலோலங்கடி சோஓஓஓஓஓ
ஆயலோ கிளி ஆயலோ
அன்னங்களே, வாத்துகளே
போவென்று விரட்டினாலும்
குந்துகெட்ட வெள்ளக்கிளி
ஆனாலும் போவதில்லை அடி
ஆலோலம், ஆலோலம், ஆலோலங்கடி சோஓஓஓஓ"
எனப் பாடிப் பறவைகளை விரட்டுகின்றாள் வள்ளி. அப்போது அங்கே ஒரு தள்ளாத வயது சென்ற கிழவர் வருகின்றார். கிழவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கின்றது. உடல் மட்டுமில்லாமல் அனைத்து அவயங்களும் ஆடுகின்றன. கையில் பிடித்திருந்த தடியும் கையில் பிடிக்க முடியாமல் தடுமாற்றத்தோடு வந்து கொண்டிருந்தார் கிழவர். தோழிகள் பார்த்தனர். கிழவரை மெதுவாய்க் கை பிடித்து அழைத்துச் சென்று வள்ளியிடம் கொண்டு
சேர்த்தனர். கந்தன் நினைப்பில் இருந்த வள்ளி கிழவரைக் கொஞ்சம் எரிச்சலுடனேயே பார்த்தாள். என்னவென்று கேட்க, பாவம் தள்ளாத கிழவர், பசி போலிருக்கிறது, கை, கால் நடுக்கமாய் இருக்கிறது, அதான் இங்கே கொண்டு வந்து சேர்த்தோம் என்றனர் தோழிகள். சரி அந்தத் தினைமாவைக் கொஞ்சம் சாப்பிடக் கொடுங்கள் என்று தோழியரிடம் ஆணை இடுகின்றாள் வள்ளி. "வள்ளி, வள்ளி, நீ உன் கையால் கொடேன்!" என்று ஆசையுடன் கிழவர் கேட்க, கிழவருக்கு ஆசையைப் பாரேன், என்ற வள்ளிக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்து விடுகின்றது.
"கல்லை உரலாக்கி
கருங்கம்பை ஒலக்கையாக்கி
தேக்கிலையை அளவாக்கி
தெள்ளி விடு வள்ளி
தினைமாவை அள்ளி"
சரி, கிழவர் தானே ஆசையை நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டே, தேனும், தினைமாவும் கலந்து கிழவருக்குக் கொடுக்கின்றாள் வள்ளி. ஒரு வாய் போடவில்லை, கிழவருக்கு, விக்கல் எடுத்து விடுகின்றது. பயத்தில் வள்ளியைக் கட்டிக் கொள்கின்றார் கிழவர். வள்ளிக்குக் கோபம் வந்துவிடுகின்றது. "தண்ணீர் தவிக்குதடி வள்ளி" என்று தண்ணீர் கேட்கின்றார் கிழவர். வள்ளி மறுக்க, கிழவர் யோசிக்கின்றார். இவள் எதற்கும் பயப்படவே மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கின்றாளே என நினைத்த வண்ணம், "வள்ளி, வள்ளி, இந்தக் காட்டு யானை இருக்கே!" என்று ஆரம்பித்தார்.

 யானையா? தாத்தா, இருங்க, இருங்க, போயிடாதீங்க! எனக்கு யானையைக் கண்டால் பயம்!" என்று வள்ளி நடுக்கத்துடன் ஓடி வந்து கிழவரைக் கட்டிக் கொள்கின்றாள். மனதில் சந்தேகம் பூக்கின்றது வள்ளிக்கு. கிழவர் மாதிரி இல்லையே கையும், காலும், என்று நினைத்துக் கொள்கின்றாள். ஆனாலும் யானை பயம் மனதில் முந்துகின்றது. கிழவருக்கு சந்தோஷம், " வள்ளி, ஏமாந்தாயா? ஏச்சுப்புட்டேனே, வள்ளி, ஏச்சுப் புட்டேனே!" என்று பாடி, ஆட, இவர் கிழவர் இல்லை என வள்ளியின் மனதில் உறுதிப் படுகின்றது.
"சரி, தண்ணீர் தானே, தாத்தா, வாங்க , தண்ணீர் தருகின்றேன்"என்று அருகே இருந்த சுனைக்கு அழைத்துப் போய்க் கிழவரைச் சுனையில் தள்ளி விடுகின்றாள். பின் கை கொட்டிச் சிரிக்கின்றாள் வள்ளி. "ஏச்சுப்புட்டேனே, தாத்தா, ஏச்சுப்புட்டேனே!" என்று பாடி ஆடுகின்றாள் வள்ளி. "அப்படியா, வள்ளி, அதோ பார்!' என்கின்றார் கிழவர். அங்கே வந்தது ஒரு யானை பிளிறிக் கொண்டு. வள்ளிக்கு நடுக்கம் அதிகம் ஆகி அவளும் சுனைக்குள் இறங்கிக் கிழவரைக் கட்டிக் கொண்டாள். யானை போகவே இல்லை. அங்கேயே பிடிவாதமாய் நிற்கின்றது.
"ஆனையும் குதிக்குதல்லோ
அசட்டாளம் பண்ணுதல்லோ
சண்டாளப் பண்டாரா- என்னை
சதி மோசம் செய்தீரே
ஆனையை விலக்கி விடும் – நீர்
ஆளையேக் கலக்குதல்லோ!"
என்று கிழவரிடம் யானையைக் கூப்பிடும்படியும், விரட்டும்படியும் வள்ளி
கெஞ்சுகின்றாள். கிழவர் கெஞ்சினால் மிஞ்சுகின்றார், மிஞ்சினால் கெஞ்சுகின்றார். இப்போது கிழவரின் முறையாச்சே. வள்ளி சரியாக மாட்டிக் கொண்டாள். "வள்ளி, என் அருமை வள்ளி, ஆசை வள்ளி, நான் உனக்கு என்ன வேண்டும், அதைச் சொல்லு, என்னைக் கல்யாணம் செய்துக்குவியா? சரினு சொல்லு! ஆனை போகும்!" என்று சொல்கின்றார்
கிழவர். வள்ளி மறுக்கின்றாள். "நீர் எனக்கு மாமன், நான் உமது மருமகள்" என்று வள்ளி சொல்ல, கிழவர் மறுக்கின்றார். யானை போக மறுக்கின்றது. யானையை எப்படியாவது துரத்தினால் போதும் என நினைத்த வள்ளியோ,
"ஆகட்டும், ஆகட்டும் தம்புரானே
ஆனய விலக்கிவிடு
நீரெனக்குப் பாட்டாவாம்
நானுனக்குப் பேத்தியாம்"
என்று சொல்கின்றாள் இம்முறை. ஆனால் கிழவர் இதற்கும் மசியவில்லையே. அழுத்தமாய் "வள்ளி, நீ என்னைக் கல்யாணம் செய்துக்கறேன் என்று சொல்லு, ஆனை
போயிடும்" என்று சொல்கின்றார் கிழவர். அரை மனதோடு வள்ளி சம்மதிக்கின்றாள்.  அப்போது நம்பிராஜனுக்குத் தினைப்புலத்தில் ஒரு கிழவர் வந்து வள்ளியைத் துன்புறுத்துகின்றான் எனத் தகவல் கிட்ட, அவன் வள்ளியைப் பார்க்க விரைந்து வந்தான் தன் மகன்கள் அனைவருடனும்.
அவனும், அவன் கூட்டத்தாரும் வருவதைக் கண்டதும் "ஆஹா, பிழைத்தோம் " என நினைத்த வள்ளி, கிழவர் இருந்த பக்கம் திரும்ப அங்கே கிழவரைக் காணவில்லை. புதியதாய் ஒரு
வேங்கை மரம் நிற்கின்றது. வள்ளிக்கு அப்போது தான் இதிலே ஏதோ விஷயம் இருக்கிறது எனப் புரிய, என்ன செய்யலாம் என யோசிக்கின்றாள். நம்பிராஜன் வந்து பார்த்துவிட்டு, "என்ன இது? புதுசாய் ஒரு வேங்கை மரம்? வெட்டுங்கள் இதை! " என்று சொல்ல, அதை வெட்ட ஆரம்பிக்க, வள்ளியோ, வேண்டாம், வேண்டாம் என அலறிக் கொண்டே அந்த வேங்கை மரத்தைக் கட்டிக் கொள்கின்றாள். ஆறுமுகன் தன் ஆறுமுகங்களோடும் தோன்றி வள்ளியை ஆட்கொள்கின்றான். நம்பிராஜன் திகைத்துப் போய் நிற்கின்றான்.
எத்தனையோ தெய்வத் திருமணங்கள் இருந்தாலும் இந்த வள்ளி திருமணக் கதை அனைவரையும் கவர்ந்தாப் போல் வேறு ஒன்று கவராது. அனைவருக்கும் பிடித்த கதையாகும் இது.

பஞ்ச தந்திரம் என்றால் என்ன?

முதலில் பஞ்ச தந்திரம் என்றால் என்ன?

1.மித்திர பேதம் - நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது
2.மித்ரலாபம் - தங்களுக்கு இணையானவர்களுடன் கூடி பகை   
                                 இல்லாமல் வாழ்வது
3.சந்தி விக்ரகம் -பகைவரை உறவு கொண்டு வெல்லுதல்
4.லப்தகாணி (artha nasam) -கையில் கிடைத்ததை அழித்தல்
5.அசம்ரெஷிய காரியத்துவம் - எந்த காரியத்தையும் விசாரணை 
                                                                   செய்யாமல் செய்வது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்ச தந்திர கதைகள். விலங்குகளை கொண்டு மனிதனுக்கும், ஏன் அரசனுக்கும் அறம் போதிக்கும் கதைகள் இவை. 

எடுத்துக் கொண்ட கதைக்கு வருவோமா.


அழகான ஒரு ஏரியின் கரையில் , அதிசயமான ஒரு பறவை வாழ்ந்து வந்தது, அதற்கு ஒரு உடல், இரண்டு தலைகள். இரண்டு தலைகளும் , ஒற்றுமையாக நேசம் கொண்டு பல நாட்கள் வாழ்ந்து வந்ததன. 


ஒரு நாள் , அமுதம் போன்ற ருசியான ஒரு பழத்தை ஒரு தலை கண்டது. எடுத்து ருசித்ததும், "ஆகா என்ன சுவை" என்றது மற்றொரு தலையிடம். இதைக் கெட்டு மற்றொரு தலை "எனக்கும் கனி தா" என்றது கனிவாய்.

பழத்தின் சுவையில் மயங்கிய அந்த தலையோ, "நம் இருவருக்கும் உடல் ஒன்று தானே, நான் தின்றால் என்ன? நீ தின்றால் என்ன?" என்றது. இது நாள் வரை எல்லாவற்றையும் பகிர்ந்து உண்டுவந்த அந்த தலைகளுக்குள் இப்படி பகை மூண்டது.  


ஏமாந்த தலை பழி வாங்கும் தருணம் பார்த்து காத்து இருந்தது. ஒரு நாள் , விஷக் கனி ஒன்று அதன் கண்ணில் பட்டது. அதை அந்த தலை உண்ணப் போவதைப் பார்த்ததும், பதறிப் போய் கத்தியது மற்றொரு தலை "உண்டு விடாதே , இருவருக்கும் ஆபத்து" என்றது. ஆனால் பழிவாங்கும் உணர்ச்சியில் 
அதைக் கேட்காமல் ஏமாந்த தலை உண்டு விட்டது. அந்த பறவை இரு தலைகளும் தொங்க இறந்து விழுந்தது. 

இந்த கதையிலிருந்து பல கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தங்கள் புரிந்து கொள்ளல் மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்வின் பல நிகழ்ச்சிகளுக்கு வேறு வேறு கோணங்களில் பொருத்தி பார்க்க முடியும். "அமுதமே ஆனாலும் அதை பகிர்ந்து உண்ண வேண்டும்" ,"துணை என்பது அவசியம்-ஒருவருக்கு ஒருவர் பகை இல்லாமல் இருத்தலும் அவசியம்"என்பதே இக்கதையின் அடிப்படை கருத்

இருக்கும் இடத்தை விட்டு...

இருக்கும் இடத்தை விட்டு...

இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படுபவர்கள் அதிகமாகி விட்டார்கள். ஆசை... ஆசை..ஆசை...ஆசை காரணமாக, எத்தனையோ பேர் போலி நிதி நிறுவனங்கள், ஏமாற்றுப்பேர் வழிகளிடம் சிக்கி வாழ்க்கையையே தொலைத்துக் கொள்கிறார்கள். நம்மிடம் என்ன இருக்கிறதோ, அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதே புத்திசாலித்தனம். கடைசி வரை அதுதான் நிலைக்கும்.
ஒரு சர்க்கஸ் கம்பெனியில் புலி, சிங்கம், கரடி என எல்லா மிருகங்களையும் கூண்டில் அடைத்திருந்தனர். அதில் ஒரு கரடி, பிறந்த புதிதிலேயே இந்த சர்க்கஸ் கம்பெனிக்கு எப்படியோ வந்து சேர்ந்து விட்டது. கம்பெனிக்காரர்கள் அன்றாடம் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டுக் கொண்டு, வித்தை காட்டியது. ஒருநாள், அதற்கு ஆசை வந்துவிட்டது.
""காட்டில் இருக்க வேண்டிய நாம், நாட்டில் இருக்கிறோம். அங்கேயே சென்று விட்டால் என்ன! '' என்று நினைத்தது. ஒருநாள், கூண்டில் இருந்து தப்பி காட்டுக்குப் போய் விட்டது. அங்கே, மற்ற கரடிகள் ஒரு புதுக்கரடி வந்திருப்பதைப் பார்த்து அதைத் தாக்க ஆரம்பித்தன. மேலும், அவை வேகமாக மரம் ஏறி கனி வகைகளைச் சாப்பிட்டன. இதற்கோ, பயிற்சி இல்லாததால் மரம் ஏற முடியவில்லை.
உணவும் கிடைக்கவில்லை.
பசியாலும், தாக்குதலால் வேதனையும் தாங்காத கரடி, ""அங்கேயாவது வேளா வேளைக்கு சாப்பாடு போட்டார்கள். இங்கே ஒன்றும் கிடைக்க வில்லையே,'' என கம்பெனிக்கே திரும்பி விட்டது. தப்பித்துப் போனதால், கோபத்தில் இருந்த கரடி மாஸ்டர் அதை அடிஅடியென அடித்ததையும் வாங்கிக் கொண்டது. அவரவர் தகுதிக்கேற்ப, இருக்கிற இடமே சொர்க்கம் என இருக்க வேண்டும். தகுதியை மீறி கால் வைத்தால் சிரமப்படுவது உறுதி.

வேலையிலே மனசு வையுங்க!
காட்டு வழியே ஒரு துறவி சென்று கொண்டிருந்தார். அங்கே வேட்டையாடிக் கொண்டிருந்த, ஒரு ராஜா மான் மீது அம்பு எய்தான். அது துறவியின் கையில் பலமாகப் பாய்ந்தது. துறவி வலி தாங்காமல் அலறினார். சத்தம் கேட்டு ராஜா ஓடினான்.
""சுவாமி! மன்னிக்க வேண்டும். தாங்கள் அந்தப் பக்கமாக வந்ததை நான் கவனிக்கவில்லை. வேண்டுமென்றே செய்ததாக தயவுசெய்து தவறாக எண்ணி விடாதீர்கள். என்னை மன்னியுங்கள்,'' என்று அழாக்குறையாக பேசினான்.
அது வேண்டுமென்றே நடக்கவில்லை என துறவிக்கும் தெரியும். மன்னனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சென்று வைத்தியரை அழைத்து வந்தனர். ""கையில் பாய்ந்திருந்திருக்கும் அம்பை யாராவது எடுத்து விட்டால், காயத்துக்கு மருந்து வைக்க நான் தயார்,'' என்றார் வைத்தியர்.
மந்திரி ஒருவர் அதற்கு உடன்பட்டார். இதற்குள் துறவிக்கு தியானநேரம் வந்து விட்டது. எப்படித்தான் அவரது கண்கள் மூடியதோ, அப்படியே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இதுதான் சமயமென, மந்திரி அம்பை உருவி எடுக்க, துறவியோ எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தார். இதைப் பயன்படுத்தி வைத்தியரும் கையை நன்றாகத் துடைத்து மருந்து வைத்து கட்டி விட்டார்.
சற்றுநேரம் கழித்து கண்விழித்த துறவி, ""இதெல்லாம் எப்படி நடந்தது?'' என்று கேட்டார். தியானத்தில் மனம் ஒன்றிப் போனதால், நடந்தது எதுவும் தெரியவில்லை. ஒரு செயலில் மனம் ஒருமிக்கும் வரை தான் கஷ்டம். ஒன்றிவிட்டால், மலையும் கடுகாகி விடும். நீங்கள் செய்யும் தொழில், பணி எதுவானாலும் மனம் ஒன்றி செய்யுங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள்.

நம்பிக்கையை விடவே விடாதே!ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பதöன்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப்போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லையென நம்பிக்கையை இழந்து விடும்.
மேலும், அவற்றுக்கு அவ்வப்போது சாப்பாடு வந்து விடும். அதை விரும்பி சாப்பிடும் குட்டிகள் கொஞ்சநாளில் சமாதானமாகி விடும். வளர்ந்து பெரிதாகி விடவும் செய்யும். இதன்பிறகு, வேடன் அவற்றை சங்கிலியில் இருந்து விடுவித்து கயிற்றில் கட்டி விடுவான். யானைகளும் இனி தப்பித்து என்னாகப் போகிறது என அங்கேயே நின்றுவிடும்.
ஒருமுறை, தன் மகனுடன் வேட்டைக்கு வந்த ஒரு அரசன், ""குட்டி யானைகளை சங்கிலியிலும், பெரிய யானைகளைக் கயிற்றிலும் பிணைத்துள்ளாயே! பெரிய யானைகள் கயிற்றை எளிதாக அறுத்து விடுமே!'' என்று வேடனிடம் கேட்டான்.
""மன்னா! கயிற்றில் பிணைக்கப்பட்ட இந்த யானைகள், குட்டியாக இருந்த போது சங்கிலியில் தான் பிணைக்கப்பட்டிருந்தன. இப்போது அவற்றுக்கு இவ்விடம் பழகி விட்டதால், பெரிதான பிறகும், வேறிடத்துக்குப் போய் என்ன செய்யப் போகிறோம் என நம்பிக்கையை இழந்து விட்டன. எனவே, கயிற்றில் பிணைத்துள்ளேன்,'' என்றான்.
இந்த யானைகளைப் போல், நம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது. இலக்கை எட்ட ஆரம்பத்தில் என்ன முயற்சி எடுத்தோமோ, அதை விட அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

இதுவல்லவா பக்தி!பகவான் கிருஷ்ணரின் நினைவு எந்நேரமும் நம் நினைவில் இருந்தால் போதும். உலகில் எதையும் சாதிக்கலாம். பக்தனின் உண்மை அன்புக்கு அவன் <உடனே கட்டுப்படுவான்.
ஒருசமயம், கிருஷ்ணர் தனக்கு தலைவலி வந்தது போல நடித்தார். அவரது மனைவி சத்யபாமாவுக்கு விஷயம் தெரிந்து மருந்துடன் ஓடோடி வந்தாள். அடுத்து ருக்மணி வந்தாள். அவர்கள் தங்களால் ஆன வைத்தியத்தை எல்லாம் செய்து பார்த்தார்கள். வலியால் துடிப்பது போல நடித்தார்.
அந்த சமயத்தில் நாரதர் அங்கு வந்தார். ஊரையே ஏமாற்றும் நாரதரை உலகளந்த பெருமான் ஏமாற்றி விட்டார். உண்மையிலேயே, சுவாமிக்கு தலைவலி தான் போலும் என்று நம்பிவிட்டார். இதற்கான மருந்தை அந்த பரந்தாமனைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும் என நினைத்து,""ஐயனே! எங்களைப் போன்ற ஜடங்களுக்கு வியாதி வந்தால் வைத்தியர் மருந்தளிப்பார். நீயே உலகம். உனக்கு ஒன்று என்றால், அதற்கு மருந்தும் உன்னிடம் தானே இருக்கும். என்ன மருந்து என சொல். வரவழைக்க ஏற்பாடு செய்கிறேன்,'' என்றார்.
கிருஷ்ணர் அவரிடம், ""என் மீது அதிக பக்திகொண்டவன் யாரோ, அவனது பாதத்தில் படிந்த மணலை உதிர்த்து தண்ணீரில் கலக்கிக் கொண்டு வாருங்கள். அந்த "பாததூளி தீர்த்தம்' என்னைக் குணமாக்கி விடும்,' ' என்றார். நாரதரும் தேடிப்பார்த்தார். யாரும் சிக்கவில்லை. எல்லாரும் தங்கள் பக்தியில் ஏதோ ஒரு குறை இருப்பதாகவே கூறினர்.
கிருஷ்ணரிடமே திரும்பிய நாரதர்,"" மருந்தைச் சொன்ன நீ மருந்து எங்குள்ளது?'' என்பதையும் சொல்லி விடு,'' என்றார்.
அதற்கு, கிருஷ்ணர் சொன்ன பதிலைக் கேட்டு, நாரதர் சிரித்துவிட்டார்.
""கிருஷ்ணா! கோபியர்களின் கால் தூசைக் கொண்டு வரச்சொல்கிறாயே! எங்களைப் போன்றவர்கள் யாகம், பூஜைகளால் <உன்னை ஆராதிக்கிறோம்.
அப்படிப்பட்ட நாங்களே எங்கள் பாத தூசை தருவதற்கு யோசிக்கிறோம்.கல்வியறிவற்ற கோகுலத்துப் பெண்களின் கால் தூசை கேட்கிறாயே!என்ன விளையாட்டு இது,'' என்றார்.
""சொன்னதைச் செய்,''என்றார் கிருஷ்ணர்.
நாரதர் கோகுலம் சென்றார்.
""கோபியரே! கிருஷ்ணனுக்கு <உடல்நிலைசரியில்லை,''என்றார்.
இதைக் கேட்ட மாத்திரத்திலேயே பல கோபிகைகள் மயங்கி விழுந்து விட்டனர். சிலர் அரைகுறை மயக்கத்தில்,""கண்ணா! உனக்கு என்னாயிற்று! கிருஷ்ணா! நீ பிழைக்காவிட்டால் நாங்களும் பிழையோம். இந்த உலகில் வாழமாட்டோம்,'' என்று உயிர்போகும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். சிலர், பித்துப் பிடித்ததைப் போல தயிர் பானைகளை கீழே போட்டு விட்டு அங்குமிங்குமாக ஓடினர்.
""கிருஷ்ணா! உனக்கு என்னாயிற்று? இப்போதே உன்னைப் பார்க்க வேண்டும்!'' என்று அரற்றினர். அவர்களின் பக்தியைப் பார்த்து நாரதர் அசந்து போனார்.
தேவலோகத்திற்கு போய், ""கிருஷ்ணனுக்கு <உடல்நிலை சரியில்லை, உங்களில் பக்தி மிக்கவர் பாதத்தூளியைக் கொடுங்கள் என்ற போது, ""நாங்கள் ஒன்றும் அவர் நினைக்குமளவு பக்தி செலுத்தவில்லையே!'' என்றார்களே தவிர, ஒருவராவது இப்படி வருத்தப்பட்டார்களா! ஏன்! நராõயணா! நாராயணா! என்று அவன் திருநாமத்தை எந்நேரமும் உச்சரிக்கும் நான் கூட அப்படி ஒரு நிலையை அடையவில்லையே! இந்தக் கோபிகைகளோ, "கிருஷ்ணனின் உடல்நிலை சரியில்லை எனக் கேட்டதுமே கலங்கித் துடிக்கிறார்களே! உயிரையே விடுமளவுபக்தி செலுத்துகிறார்களே! இவர்களின் பாதத்தூளியே கிருஷ்ணரின் வியாதியைக் குணப்படுத்தும்' என்று நினைத்த நாரதர், அவர்கள் பாதம்பட்ட கோகுலத்து மண்ணில் சிறிதளவு நீரில் கரைத்து கொடுத்தார். கிருஷ்ணருக்கு சுகமாகி விட்டது.
அந்தக்கண்ணனை நாமும் "கிருஷ்ணா! கிருஷ்ணா' என பக்தியுடன் நினைப்போம். அவனது கருணா கடாட்சத்துக்கு ஆளாவோம்.

உலகை வெல்வதற்கு வழி?

   வித்யாசிரமத்தில் ஒரே பரபரப்பு... அங்கிருப்பவர்கள் அனைவரும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டார்கள். அந்த ஆசிரமத்தின் தாளாளரும் ஆசிரியர்களும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டதோடு மட்டுமின்றி, மாணவர்களையும் சுத்தப்படுத்தும் பணியில் துரிதப்படுத்தினார் கள். காரணம், அந்த ஆசிரமத்திற்கு சுவாமி சுத்தானந்தா ஆசி வழங்க வருகிறார் என்பது தான்.

அந்தச் சமயத்தில் சுறுசுறுப்பும் தன்னூக்க மும் கொண்ட மாணவன் ஒருவன் மெல்ல ஆசிரியர்முன் வந்து, ""சார், சாமி உபதேசம் பண்ண வரப்போகிறார். அவர் உட்காரப் போகிற இடத்தை மட்டும் சுத்தம் பண்ணி           னால் போதாதா? எல்லாம் துறந்தவர் மொத்த இடத்தையும் சரியாகச் சுத்தம் செய்யவில்லை என்பதை பெரிய விஷயமாக நினைத்துக் கோபித்துக் கொள்ளப் போகிறாரா? அப்படி மற்றவர்மேல் குற்றம் பார்ப்பவர் துறவியாக முடியுமா?'' என்று கேட்டான்.

சிறிது நேரம் அவனையே பார்த்த ஆசிரியர், ""இந்த செயல்களெல்லாம் அவருக்காகச் செய்கிறோமென்றோ- அவர் எதிர்பார்ப்பா ரென்றோ யார் சொன்னார்கள்? அனைத் தையும் கடந்தவர் இதை கவனிக்கக்கூட மாட்டார். மனதில் உள்ள அழுக்கைக் களைய வந்தவர் வெற்றுநிலக் குப்பையைப் பற்றி கவலைப்பட மாட்டார். இதுவெல்லாம் நமக் காகத்தான். காரணம், மனமே சூழலின் அடிமை. நமது மனம் மேன்மை களில் லயிக்க வேண்டுமெனில், சூழலும் மேன்மை யாக இருக்க வேண்டும்.

மேலும் அவரின்பால்- அவரின் நன்மொழி களின்பால் ஒன்றுவதற்கு அவருக்காகச் செய்யும் ஏற்பாடுகளில் நம் பங்களிப்பும் இருக்க வேண்டும். நாம் இந்த வேலைகளுக்கு சில ஆயிரங்கள் செலவழித்து, வெளியாட்களை வைத்துச் செய்துவிடலாம். அது சிறப்பல்ல. இத்தகைய அருங்கல்வியினை மகாத்மா காந்தி, வினோபாஜி போன்றவர்கள் தங்கள் வாழ்வியல் மூலம் கற்பித்தார்கள். அதனால் மேன்மை கொழித்தது. ஆன்மநேயமும் ஒருமைப்பாடும் செழித்தது. உலகத்தின் ஆன்மிகக் குருவாக பாரதம் சிறந்தது. எனவே, இத்தகைய பயிற்சி மூலம்தான் நாம் நம்மை உயர்த்திக் கொள்ள முடியும்'' என்றார்.

அந்த மாணவனின்  உள்ளத்தில் புத்தொளி பிறந்தது. இது நமக்காக- நமது ஆன்மநேய முன்னேற்றத்திற்காக என்ற எண்ணம் எழுந்த தும், வேலை செய்யச் செய்ய வலிமை மிகுந்தது.

சாமிகள் வந்தார். சிலரின் வருகையே- இருப்பே சிறப்பினை நல்கும் என்பதனைக் கண்ணாரக் கண்டார்கள். அவரின் முககாந்தியும் ஏற்படுத்திய சாந்தியும் அனைவரின் உள்ளத் திலும் தெய்வீகத்தைக் கொலுவேறச் செய்தது.

பிறகு மெதுவாக சாமிகள் தனது இருக்கை யில் அமர்ந்ததும், ஆசிரமத்தின் மேலாளர் பவ்யமாக, ""குழந்தைகளுக்கு ஏதாகினும் ஒரு உபநிஷத்தின் சாரத்தையாவது உபதேசித்தால் நாங்கள் பேறு பெற்றவர்களா வோம்'' என விண்ணப்பித்துக் கொண்டார். துறவியும் அதை அங்கீகரித்தார்.

ஆனாலும் வீரிய விதையை விதைப்பதற்கு முன்னால் நிலத்தின் தரத்தை அறிந்துகொள்ள வேண்டாமா? அதற்காக குழந்தைகளிடம் சில கேள்விகளைக்  கேட்கத் தொடங்கினார்.

அசத்தும் வகையினிலே மாணவமணிகளும் பதிலளித்தார்கள். குருவே பிரமித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

குரு: வெற்றியென்பது என்ன?

மாணவர்: தன்னுள் அடங்குதல்.

குரு: உலகை வெல்லுவதற்கு என்ன வழி?

மாணவர்: தன் மனத்தை கட்டுக்குள் அடக்கி வெல்லுதல்.

குரு: மனிதனுக்கு சத்ரு யார்?

மாணவர்: அவனுடைய ஆசைகள்.

குரு: பகைவர் யார்?

மாணவர்: அகங்காரம், மமகாரம்,

அதன்விளைவாம் கோபம்.

குரு: முன்னேற்றும் ஏணி எது?

மாணவர்: பணிவு, சத்துவத்தில் நிரந்தர ஆர்வம்.

குரு: நிலைத்த வழித்துணை எது?

மாணவர்: நாம் செய்த நல்வினை.

குரு: ஞானமென்பது எது?

மாணவர்: நாய், நரியும் பரம் பொருளின் நல்லுருவே என்கின்ற உண்மையை உளமார ஏற்று வாழ்வினிலே செயற் படுத்தல்.

குரு: நம்மை நீங்காது தொடர்வன யாவை?

மாணவர்: செய்த வினைகள்.

குரு: பரமாத்மா, ஜீவாத்மா- விளக்க முடியுமா?

மாணவர்: கூட்டுக்குள் அடங்குங் கால் ஜீவாத்மா. புறத்தே நிறையுங் கால் பரமாத்மா.

குரு: வாழ்வில் பக்குவத்தில் தொடர்ச்சி, முடிவு எவை?

மாணவர்: புறத்தே உருவில் வணங் கிய இறையை, அகத்தே முக்குணங்களின் முகடேறி உணர்ந்து தெளிந்து அடங்குதல்.

குருவின் கண்களிலே ஆனந்தக் கண்ணீர்.

அதுவே மாணவச் செல்வங்களின் ஞானமுதிர்விற்கு அங்கீகாரப் பட்டயமாயிற்று. பின் அவர் பேசலுற்றார்.

""குழந்தைகளே! கடோபநிஷத் பிறவாமைப் பேற்றையளிக்கின்ற அருமருந்தை மொழிந் துள்ளது. அதைச் சொல்லப் போகிறேன்.

அதாவது, இந்த தேகமெனும் தேரினை மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளாகிய ஐந்து குதிரைகள் இழுத்துச் செல்கின்றன. பாசம் என்பதே கடிவாளக் கயிறாகும். மனத்தே விளங்கும் ஞானம்- செலுத்துபவன் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது. படிப்பு, அறிவு, ஞானம் என்பது வெவ்வேறாகும். முதலில் படிக்க வேண்டிய வற்றை ஆசிரியர் மூலம் கற்க வேண்டும். பிறகு அறிவுசார் கேள்விகள் மூலம் நுண்மையில் தெளிய வேண்டும். பிறகு நன்கு ஆய்ந்து, தோய்ந்து ஞானத்தே செழிக்க வேண்டும். இவ்வகையில் ஞானத்தின் வழிகளில் நம் பொறி களை வாழ்வினிற் செலுத்தினால், மரணத்திற்குப் பின்பும் (பூதஉடல் சாய்ந்த பிறகு) மரணமிலாப் பெருநிலை வந்தெய்தும். மண்ணிற் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இதுவே இலக்காக இருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருவரிட மும் ஒரு நசிகேதனைப் பார்க்கிறேன். சாந்தி சாந்தி சாந்தி.''

Sunday, November 20, 2011

வேல் உண்டு வினை இல்லை

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது. எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது.
 
வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன், துங்கவடிவேலன், வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப் பெறலாயிற்று, ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
 
வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார். வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.
 
வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.
 
திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை.
 
இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக  உள்ளன. தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.

துளசி பூஜை

 
அக்கலசத்தின்றும் பச்சை நிறத்துடன் ஸ்ரீதுளசி மகாதேவி தோன்றினாள். துளசி, லட்சுமி, கௌதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார். துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவிணிதேவர் இருவர் ஆகியோர் உறைகின்றனர்.
 
இலையின் நுனியில் பிரமன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரசுவதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம் புகழ் செல்வம் மகட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.