Tuesday, August 28, 2012

இந்து தர்ம சாஸ்திரம்

பொங்கல் இந்து மதம் இயற்கை மதம். தைப் பொங்கல் என்பது பூமியில் விளைந்த இயற்கையான காய்கறிகள் , நவதானியங்கள் , பொங்கல் , கரும்பு மற்றும் பலவற்றை சூரியபகவானுக்கு படைத்து வழிபடுகின்றனர். சூரியன் என்பது இயற்கை. அதனால் இயற்கையில் விளைந்த பொருள்களை வழிபடுபது என்பது பொருள். தீபாவளி தீபாவளி என்பது நரகாசூரனை வதம் செய்வது. அதாவது கெட்ட சக்தியினை அழிப்பது என்பது தான் உண்மை. அதைப்போல் கெட்ட எண்ணங்களை அகற்றி நன்மை வர வேண்டும் என்று மனதில் நினைத்து தீபத்தை ஒளியேற்றி வணங்குவது ஆகும். ஆயுதப்பூஜை செய்யும் தொழில் நல்ல முறையில் இருக்கனும் என்று நினைத்து நேர்மையான முறையில் தொழில் செய்யனும் என்பது தான் பொருள். நாம் அவ்வாறு வேலை செய்யும் இயந்திரங்கள் , மற்றும் பொருள்களை வைத்து வழிபடுவது தான் ஆயுதப்பூஜை ஆகும். கார்த்திகை தீபம் “ கார்த்திகைப் பொழுது கால் பொழுது “ எனறு முன்னோர்கள் சொல்வார்கள். ஏனென்றால் இதன் விளக்கத்தினை கீழே பார்க்கலாம். சூரியன் ஐப்பசி மாதம் நீசமாகி கார்த்திகை மாதம் பிரபலிக்கிறார் என்பது ஜோதிடத்தின் உண்மை. இதனால் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி சூரியனை வரவேற்கின்றோம் என்பது தான் உலக உண்மை ஆகும்.- ஸ்ரீ கிருஷ்ணா கால்ரேகை ஜோதிடம் காலின் பெருவிரல் ரேகையை வைத்து கணித்து சொல்லப்படும். இதன் மூலம் ஒருவருடைய வாழ்க்கை வரலாறு தௌளத்தெளிவாக தெரியும். திருமணவாழ்க்கை தடை வாழ்க்கையின் பிரச்சனைகள் போன்ற தீர்க்கமுடியாத பல பிரச்சனைகள் தீர்க்கப்படும். இந்த கால்ரேகை ஜோதிடம் கிருஷ்ணருடைய பாதத்தை மையமாக வைத்து சொல்லப்படும். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது தனது இடது கையினால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு. தனது இடது கையினால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம். தனது இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். ஜோதிடர்,குரு,நோயாளி,கர்ப்பிணி,மருத்துவர்,சந்நியாசி முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். மிகவும் புண்ணியமாகும். சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும். அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும் பசு, தேர் , நெய்குடம் , அரசு , வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால் , வலது புறம் சுற்றி செல்ல வேண்டும். குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றிக் கொண்டு சாப்பிடக்கூடாது. துணியில்லாமல் குளிக்கக்கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது. கன்றுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது. மழை பெய்யும் போது ஓடக்கூடாது தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது. நெருப்பை வாயால் ஊதக்கூடாது மலஜலம் கழிக்கும் போது , இரவில் தெற்கு முகமாகவும் , மற்ற நேரங்களில் வடக்கு முகமாகவும் கழிக்க வேண்டும். கிழக்கு , மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக்கூடாது. பெண்கள் , எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ , கற்பை இழந்துவிட்டாலோ , புண்ய நதியில் 3 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும். குழந்தையில்லாதவன், பெண் குழந்தைகளை மட்டும் பெற்றவன் , திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவன் , மனைவியை இழந்தவன் இவர்களை சுபகாரியங்களில் முன்னிறுத்தக்கூடாது. சாப்பிடும் போது , முதலில் இனிப்பு , உவர்ப்பு , புளிப்பு , கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர் அருந்த வேண்டும். சாப்பிடும் பொது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது. பெண்கள் ஆண்களுடன் அருகருகே அமர்ந்து உண்ணக்கூடாது. கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும். திருமணத்திலும், பந்தியிலும் பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம். கோவணமின்றி , வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது. இருட்டில் சாப்பிடக்கூடாது. சாப்பிடும் பொது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்துவிட்டு மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும் . சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டியது வெற்றிலையில் நுனியில் பாவமும், மூலையில் நோயும் , நரம்பில் புததிக்குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விடவேண்டும். சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனையோ , வெறும் பாக்கை மட்டும் போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம்தான் சுண்ணாம்பு தடவவேண்டும். மனைவி கணவனுக்கு வெற்றலை மடித்துக் கொடுக்கலாமே தவிர , கணவன் மனைவிக்கும் , மகன் தாய்க்கும் , பெண் தந்தைக்கும் மடித்து தரக்கூடாது. குரு , ஜோதிடர் , வைத்தியர் , சகோதரி , ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது. ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது தலையையோ , உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும் .இரண்டும் கைகளாலும் சொறியக்கூடாது. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும். தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது. வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு , உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது. ஈரக்காலுடன் படுக்கக்கூடாது. வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது .நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது. ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது பகைவன் , அவனது நண்பர்கள் , கள்வன் , கெட்டவன் , பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது. பெற்றதாய் சாபம் , செய்நன்றி கொல்லுதல், பிறன் மனை கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்த மேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும். அங்ககீனர்கள் , ஆறுவிரல் உடையவர்கள் , கல்வியல்லாதவர்கள் , முதியோர் , வறுமையில்லுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிக் பேசக்கூடாது. ரிஷி , குரு , ஜோதிடர் , புரோகிதர் , குடும்ப வைத்தியர் , மகான்கள் , கெட்ட ஸ்திரியின் நடத்தை இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது. பிறர் தரித்த உடைகள், செருப்பு,மாலை,படுக்கை ,ஆசனம் இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது. பிணப்புகை , இளவெளியில் , தீபநிழல் இவை நம்மீது படக்கூடாது. பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது தீனி போடாமலிருப்பது இவை பாவங்களாகும். பசு மாட்டிடம் “கோமாதா” வாக எண்ணி சகல தேவர்களையும் திருப்திபட வைப்பதற்கு அம்மாட்டுக்கு புல்,தவிடு,தண்ணீர் , பிண்ணாக்கு, அகத்திகீரை கொடுப்பது புண்ணியமாகும். தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது.தூங்குபவரை பார்க்கக்கூடாது. பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது , பால் பருகுவது கூடாது. தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது. அண்ணன் - தம்பி , அக்காள் - தங்கை , ஆசிரியர் - மாணவர் , கணவன் - மனைவி, குழந்தை- தாய் , பசுவும் - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக்கூடாது. நெல்லிக்காய் , ஊறுகாய் , இஞ்சி , தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது. வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும். கையால் மோரைக் குழப்பக்கூடாது. தாம்பத்ய சுகம் அனுபவிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மனைவியுடைய மர்ம உறுப்பையும் பிற பெண்களுடையதையும் பார்க்கக்கூடாது. நம்மை ஒருவர் கேட்காதவரையில் , நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது மங்கையர்கள் கவனிக்க வேண்டியவை பெண்கள் கணவன் தூங்கிய பின்பு தூங்கி கணவன் விழிப்பதற்கு எழவேண்டும். சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து , முற்றத்தில் பெருக்கி சாணந் தெளித்துகோலமிட வேண்டும். கோலமிடுவதற்கு , மஞ்சள் கலந்த அரிசிமாவு , பச்சிலைப்பொடி , குங்குமம் கலந்த அரிசி மாவு இவற்றால் கோலமிட வேண்டும். சுபகாரியங்களுக்கு ஒரு கோடும் , அசுப காரியங்களுக்கு இரண்டு கோடும் போட்டு கோலம் போடக்கூடாது. பூஜையறை , சமையலறை , சாப்பிடுமிடத்தை நாள் தோறும் கழுவுதல் வேண்டும் அமாவசை , பௌர்ணமி , கார்த்திகை , மாதப்பிறப்பு , வெள்ளிக்கிழமை , பிறவிசேஷதினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும். மண் பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது. தாமிரப் பாத்திரங்களை புளியினாலும் , வெங்கலம், பித்தளைப் பாத்திரங்களை சாம்பலாலும் ஈயப் பாத்திரங்களை சாணத்தாலும் , எவர்சில்வர் , பீங்கான் பாத்திரத்தை அரப்புப் பொடியினாலும் சுத்தப்படுத்த வேண்டும். குளித்த பினபு தான் குடிநீர் எடுக்க வேண்டும். தண்ணீர்குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வர வேண்டும். தோளிலும், தலையிலும் சுமக்கக்கூடாது. சூரிய அஸ்தமன சமயமான மாலை நேரங்களில் , கைகால் கழுவி விளக்கேற்றி வைக்க வேண்டும். உரல் , அம்மி , முறம் , வாசற்படி , உலக்கை இவற்றின் மீது உட்காரக்கூடாது. வீட்டுவிலக்கான முதல் 3 நாட்கள் வீட்டு வேலை ஒன்றும் செய்யக்டாது. 4 வது நாளில் கணவனை வணங்கிவிட்டு , 5ம் நாள் குளித்து விட்டு வீட்டுப் பணிகளில் ஈடுபடலாம். அன்று கணவனோடு சேர்வது சிறப்பு வாழை, புன்னை, மா, பலா இலைகள் சிறந்ததாயினும், உணவு படைப்பதற்கு வாழையிலையே மிகச்சிறந்தது. வாழையிலையில் அடியில் சிறிது அறிந்துரிட்டு, கழுவிவிட்டு இலையை போட வேண்டும். சாப்பிடுபவர்களின் வலது கைப்பக்கம் இலையின் அடிப்பாகமும், இடக்கைப்பக்கம் நுனிப்பாகம் இருக்கும்படி போடவேண்டும். எதையும் கையால் படைக்கக்கூடாது. அப்பளம் போன்றவற்றை கையை கழுவிவிட்டு போட வேண்டும். சோறு, கறி முதலியவற்றை மண்பாண்டத்தில் வைத்தோ அல்லது அடுப்பில் வைத்த பாத்திரத்தை வைத்தோ படைத்தல் கூடாது. வீட்டுக்கு வந்த புது மருமகளையும், நோயாளிகளையும் கர்ப்பிணிப் பெண்களையும். குழந்தைகளையும் வயதானவர்களையும் முதலில் சாப்பிடச் சொல்ல வேண்டும். சாப்பிடும் போது நீர் குடிக்கக்கூடாது.உண்ட பின்பு குடிக்க வேண்டும். உணவு அருந்திய பின் குளிக்கக் கூடாது. மிகவும் தேவைப்பட்டால் 5 நாழிகை கழித்து(2மணி நேரம்) குளிக்கலாம். ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தன்தலையில் வைக்கக் கூடாது. தலையில் சூடிய மலரை தானே எடுத்தெறிய கூடாது. பெண்கள் விரதமிருக்க வேண்டும். கணவனுடைய அனுமதி பெற்றே விரதமிருக்க வேண்டும். தீபம் ஏற்றும் நேரம் தீபம் ஏற்றும் நேரம் : பிரம்ம முகூர்த்தம் காலையில் உஷத் காலத்திலும் , மாலையிலும் சூரிய அஸ்தமனத்தக்கு முன்பும் வீட்டில் தீபமேற்ற வேண்டும் எவர்சில்வர் விளக்கு ஆகாது. 2 திரியை சேர்த்த முறுக்கி, ஏற்றுவது உத்தமம். தீபத்தை கிழக்கு திசையிலும் , மேற்குத்திசை நோக்கயும், வடக்கு திசை நோக்கியும் தீப மேற்ற வேண்டும். தெற்கு எமனுடைய திசையாதலால் தெற்கே பார்த்து தீபம் ஏற்றக்கூடாது. ஒரு திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும்

Thursday, August 23, 2012

புத்தர் சொல்கிறார்

தானம் செய்பவன் உள்ளக் களிப்புடன் அமைதி பெறுகிறான். அவனுக்கு கவலையுமில்லை. சஞ்சலமுமில்லை.


* செல்வத்தைச் சேர்த்து வைக்கும் கருமி பாவத்தை கட்டி வைக்கிறான். முடிவில் எல்லாவற்றையும் இழக்கிறான்.

* திரவிய தானம், தர்மதானம் என தானத்தில் இருவகை உள்ளது. இதில் தர்மதானமே உயர்ந்தது.

* தயாளம், தர்மகுணமுள்ளவனை எல்லாரும் விரும்புவர். அவனுடைய நட்பைப் பெற முட்டி மோதுவர். அவனுக்கு மிகவும் மதிப்பு உண்டு. இறக்கும் சமயத்தில் அவனது உள்ளம் சாந்தியும் மகிழ்ச்சியும் பெற்று விளங்கும். அவனுடைய தானங்கள் நன்கு பழுத்த கனியாகி அவனுக்குப் பயனளிக்கும். தர்மகுணம் மலைபோன்ற துயரங்களையும் அழித்து விடும்.

* நமது உணவை பிறருக்கு அளிப்பதால், நாம் அதிகவலிமை பெறுவோம். உடைகள் அளிப்பதால் நாம் அதிக அழகு பெறுவோம். பரிசுத்தமான சத்தியநிலையங்களை அமைப்பதால் நாம் அரிய பொக்கிஷங்களை அடைவோம்.

* தீயவர்களுடன் சேராதீர்கள். இழிந்தவர்களுடன் இணங்க வேண்டாம். ஒழுக்கமுள்ளவரோடு உறவாடுங்கள். அறிஞர்களுடன் தொடர்பு வைத்திருங்கள்.

* யாரைச் சந்தித்தாலும் புண்ணியமான விஷயங்களை மட்டுமே பேசுங்கள். அது முடியாதென்றால் மவுனமாக இருங்கள். இந்த இரண்டில் ஒன்றே உங்களுக்கு நல்லது.

* நட்சத்திரங்கள், கனவுகளின் பலன் ஆகிய சாஸ்திரக் குறிகளைக் கொண்டு நன்மை தீமைகளைப் பார்க்காதீர்கள். இவற்றை அறவே ஒதுக்கியவனே சரியான வழியில் செல்பவன். ஜோதிடத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் கூறுதல், நன்மை, தீமைகளை முன்னதாகக் கூறுதல் தகாத செயலாகும்.

* உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்தாலும், இன்னும் கடலுக்கு அப்பால் ஒரு கண்டம் இருக்கிறதா என்று ஆசைப்படுவது மனித இயல்பு. ஆசைக்கு ஓர் அளவில்லை. கடல் முழுவதும் நீர் நிரம்பியிருந்தாலும் அதற்கு அமைதியில்லை. அதுபோல், எத்தனை இன்பங்கள் இருப்பினும் மனித மனத்திற்கு தெவிட்டுதல் இல்லை.

* உயிர்களை துன்புறுத்தாதே. பிறர் பொருளை எடுக்காதே. பெண்களை இம்சை செய்யாதே. பொய் சொல்லாதே. பொறுப்பற்ற தன்மைக்கு விதை தெளிக்கும் மதுவை அருந்தாதே. இவற்றைக் கடைபிடிப்பவன் பூமிதானம் செய்பவனை விடவும், யாகம் செய்பவனை விடவும் உயர்ந்தவன்.

* ஒருவர் செல்வந்தராய் பிறக்கிறார், இன்னொருவர் ஏழையாய் பிறக்கிறார். ஒருவர் அழகாயிருக்கிறார், இன்னொருவர் அவலட்சணமாய் உள்ளார், ஒருவர் அறிவுள்ளவராயும், மற்றவர் அறிவிலியாகவும் உள்ளனர். ஒருவர் தீர்க்காயுள் வாழ்கிறார், இன்னொருவர் அகால மரணமடைகிறார். ஒருவர் உயர்வும், இன்னொருவர் தாழ்வும் அடைகின்றனர். ஒருவருக்கு நல்ல வாய்ப்பு வருகிறது. இன்னொருவருக்கு தீயவாய்ப்பும் வந்து விடுகிறது. இதற்கெல்லாம் காரணம் அவரவர் வகுத்துக்கொண்ட விதியே. அவரவர் செய்கைகளே இத்தகைய பலன்களைத் தருகின்றன.தர்மத்தை கடைபிடிக்கச் சொல்கிறார் புத்தர்

கமலாத்மானந்தர் எச்சரிக்கிறார்
* எவரிடமும் இனிமையாகப் பேசுவது தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முதல்படி.

* கடந்த காலம் திரும்புவதில்லை, நிகழ்காலம் விரும்புவதில்லை. காலம் விரைந்து கொண்டிருக்கிறது. காலத்தின் அருமையை உணர்ந்து கடமையை விரைவில் செயல்படுத்துபவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள்.

* அரிய செயல்களைச் செய்ய வேண்டுமானால் மனம் ஒருமுகப்பட வேண்டும். மனஇறுக்கம், மனதை ஒருமுகப்படுத்துவதற்கு முட்டுக்கட்டை.

* ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன் அதனால் ஏற்படும் நல்லனவற்றையும், அல்லனவற்றையும் ஆராய்ந்து தீர்மானித்து உரிய காலம் அறிந்து செயல்பட வேண்டும்.

* பிறரை அனுசரித்து வாழ்பவர்கள், விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள், சரியாகவும் ஆழமாகவும் சிந்திப்பவர்கள், உழைப்பும் முயற்சியும் உள்ளவர்கள் மட்டுமே வெற்றிகளைக் குவிக்கிறார்கள்.

* எந்த அளவுக்கு உயர்வான சிந்தனைகள் நம்மிடம் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கே நாம் சாதனைகளைப் படைக்க முடியும்.

* தூங்குவதும் ஏங்குவதும் வாழ்க்கையில் எதையும் தேறவிடாது. உள்ளத்தின் ஊக்கத்திற்கு ஏற்பவே ஒருவன் மேற்கொள்ளும் முயற்சிகள் அமைகின்றன. அந்த முயற்சிகளுக்கேற்பவே அவன் பெறும் வெற்றிகளும் அமைகின்றன.

* நாம் உயர்ந்தவராக விரும்பினால் உயர்ந்தவற்றையே நாம் சிந்திக்க வேண்டும். உயர்ந்தவற்றையே பேச வேண்டும், உயர்ந்தவற்றையே செயல்படுத்த வேண்டும்.

* வியாபாரம் செய்வதற்கு பணம் தேவை. குழந்தைக்கு தாயன்பு தேவை. மனிதன் உயர்ந்த நிலையில் வாழ்வதற்கு பெரியோர் தொடர்பு கட்டாயம் தேவை.

* சின்னஞ்சிறு சிந்தனைகளில் மனம் உழன்று கொண்டிருப்பதைத் தவிர்த்து, உயர்ந்த சிந்தனைகளில் மனதை வைத்திருப்பதற்கு, முயற்சியும் பயிற்சியும் செய்ய வேண்டும்.

* அற்ப விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள் பெரிய சாதனைகளைப் படைக்க இயலாதவர்களாக இருப்பார்கள்.

* கண்ணாடியில் தூசு படிந்திருந்தால் அதில் உருவம் சரியாகத் தெரியாது. அதுபோல் எதிர்மறையான சொல், செயல், சிந்தனைகள், தீய எண்ணங்கள், தீய இயல்புகள் ஒருவரிடம் இருந்தால் அவரது ஆற்றல் வெளிப்படாது.

* தீட்ட தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும். சுடச் சுடத்தான் பொன் ஒளிரும். அரைக்க அரைக்கத்தான் சந்தனம் மணக்கும். உழைக்க உழைக்க மனிதன் உயர்வு பெறுகிறான்.

* தோல்வி என்பது ஒரு பாடம். பல அறிவியல் கண்டுபிடிப்புகள், பல பரிசோதனைகளின் தோல்விகளிலிருந்து கிடைத்த வெற்றிகள் தான், துன்பப்படாமல், உழைக்காமல் சிரமப்படாமல் உலகில் அரிய சாதனைகளைப் படைக்கவே முடியாது.

* உறுதியான வைரம் பாய்ந்த நெஞ்சம் உடையவர்கள் மகத்தான வெற்றியாளர்களாகத் திகழ்வார்கள். அலைபாயும் மனம் உள்ளவர்கள் தோல்வியைத் தழுவுபவர்களாக இருப்பார்கள்.

* குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசுவதும், குடத்திலிட்ட விளக்காக ஒளி மங்கிப் போவதும் அவரவர் கையில் தான்.

* ஊக்கம் இல்லாதவனிடம் முயற்சி இருப்பதில்லை. முயற்சி இல்லாதவனிடம் ஆக்கமும் இல்லை, செழிப்பும் இல்லை.

* "நான்உயர்ந்தவன்'என்ற எண்ணத்துடன், முழு ஊக்கத்துடன் செயல்புரிய வேண்டும். அப்படிசெய்தால் தோல்வியின் நிழல் கூடநம் மீது படியாது.வள்ளுவர் சிந்தனைகள்

* கடவுளின் திருவடி என்னும் தோணியில் ஏறிக் கொண்டால் பிறவிக்கடலை நம்மால் எளிதாகக் கடக்க முடியும். * மழை பெய்யாவிட்டால் உலக வாழ்வு நடைபெறாது. இன்னும் சொல்லப்போனால், மக்களிடம் ஒழுக்கமும் இல்லாமல் போய்விடும். * நாளை பார்க்கலாம், நல்ல நாள் பார்த்து தர்மம் செய்யலாம் என்று இல்லாமல், இன்றே தர்மம் செய்து விடுங்கள். (ஏனெனில், நாளை என்பது நிச்சயமில்லை) செய்த தர்மம் இப்பிறவியில் மட்டுமல்லாமல் எப்போதும் துணைநிற்கும். * தர்மத்தைப் பின்பற்றி குடும்ப வாழ்வு நடத்துபவன் ஆசைகளில் இருந்து விடுபட முயற்சிக்கும் துறவியை விட மேலானவன். * கற்பு என்னும் மனவலிமை பெண்ணிடம் இருந்து விட்டால் அதைவிடச் சிறந்த விஷயம் உலகில் வேறு என்ன இருக்க முடியாது. * சிறையில் பூட்டி வைத்து பெண்ணைக் காப்பாற்ற முடியாது. பெண் என்பவள், தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே சிறந்த பாதுகாப்பாகும். * பழிச்சொல்லுக்கு ஆளாகாத நல்ல பிள்ளைகளைப் பெற்றவனிடம் ஏழேழு பிறவியிலும் துன்பம் நெருங்குவதில்லை. * பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்ப்பதால் எந்த பலனுமில்லை. அதுபோல் மனிதனாய் பிறந்தும் மனதில் அன்பு இல்லாவிட்டால் அவனால் சமூகத்துக்குப் பயனில்லை. * வீட்டில் விருந்தினர் அமர்ந்திருக்க, சாகாவரம் தரும் அமிர்தமாகவே இருந்தாலும் தான் மட்டும் தனித்து உண்பது கூடாது. * இனிய சொற்களைப் பேசுவதால் இன்பம் உண்டாகும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் பிறர் மனம் நோகும்படி கொடிய சொற்களைப் பேசுவானேன்! * சரியான நேரத்தில் செய்யும் உதவி சிறிதாக இருந்தாலும், அதன் மதிப்பு பரந்த உலகத்தை விடப் பெரியது. * பழிச்செயலைச் செய்தாலும் கூட மீள்வதற்கு வழியுண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்த பாவத்தில் இருந்து மீள வழியில்லை. * ஒருவனால் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாக்கைக் காத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் கொடிய துன்பத்திற்கு ஆளாக நேரிடும். * ஒழுக்கமாக வாழ்வதே மனிதன் உயர்வதற்கு வழி. உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை மதித்துப் போற்றுங்கள். * உண்ணாமல் விரதம் மேற்கொள்வதை விட, பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்வது மேலான விரதம். * பிறரது வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவனிடம், செல்வத்திற்கு அதிபதியான திருமகள் தன் மூத்த சகோதரியை இருக்கும்படி செய்து விடுவாள். * பேசுவதாக இருந்தால் பயனுடைய நல்ல சொற்களைப் பேசுங்கள். பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் பேசுவது கூடாது. * மறந்தும் பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது. அவ்வாறு நினைத்தவனுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று அறக்கடவுள் எண்ணி விடுவார். * பொருள் இல்லாவிட்டால் இம்மண்ணுலகத்தில் வாழ முடியாது. அதுபோல, அருள் இல்லா விட்டால் விண்ணுலகத்தில் வாழ முடியாது. * மாமிச உணவு வேண்டாம் என்று உயிர்களைக் கொல்லாமல் வாழ்பவனை, உலக உயிர்கள் இருகரம் கூப்பி வணங்கும்.

Wednesday, August 22, 2012

சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் தானே வரும்

இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும். இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித் திறன் ஆகியவை படிப்பவர் விரும்பிக் கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருளும் அரிய கவசம் ஆகும். சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம். இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் தானே வரும் என்று பழமொழியாக கூறுகிறார்கள்)

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டதால் தான்!இறைவனை எளிதாக நெருங்க முடியும்

"சுவாமி விவேகானந்தர். "நீங்கள் கீதை வாசிப்பதை விட கால்பந்து விளையாடுவதன் மூலம் இறைவனை எளிதாக நெருங்க முடியும்,'' என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார் சுவாமி விவேகானந்தர். கீதையை கடைபிடிக்க வேண்டுமானால், இளைஞர்கள் உடல் வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடோபநிஷதம் என்ற நூலில், "பலமில்லாதவன் ஆன்ம சாட்சாத்காரம் பெற முடியாது' என்று சொல்லப்பட்டிருக்கிறது. * ஜான் கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது, ஆரம்பப்பள்ளி சிறுவர்கள் அனைவரும் பாடங்கள் தொடங்கும் முன் ஒரு கி.மீ., தூரமாவது ஓட வேண்டும், அதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என ஆணையிட்டார். * தேசத்தலைவர் பாலகங்காதர திலகர் கணிதத்தில் எம்.ஏ., மற்றும் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர். அவர் கல்லூரியில் பயின்ற காலத்தில் நோஞ்சானாக இருந்ததால், படிப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு, ஓராண்டு காலம் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்தார். அவ்வாறு செய்ததே பிற்காலத்தில் பல இடங்களில் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு நடந்த கொடுமைகளைத் தாங்க தனக்கு பேருதவியாக இருந்தது என்கிறார். * ஆரியசமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ணரின் சமகாலத்தவர். இவர்தன் மாணவர்களுக்கு வேதம் கற்றுக்கொடுப்பார். அத்துடன் மற்போரும் (பாக்சிங்) பயிற்சி அளிப்பார். * கட்டான தசைகளும் பலமான நரம்புகளும் இருந்தால் தான் மனதில் எழும் தீய ஆசைகளை கட்டுக்குள் வைக்கும். கோபம், பொறாமை, காமம் ஆகிய கீழான ஆசைகளில் இருந்து மாணவர்கள் விலகியிருக்க வேண்டும். உடல் வலுவைப் பெருக்கிக் கொண்டால் இது சாத்தியமே. * விவேகானந்தர் ஒருமுறை இமயமலையிலுள்ள மாயாவதி ஆஸ்ரமம் முன்பு குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்தார். அவரது சீடர்களான ஞான், காளி கிருஷ்ணர் ஆகியோர் அவருக்காகக் காத்திருந்தனர். அவர்களைக் கவனிக்காதது போல் கடந்து சென்று விடுவதென நினைத்த சுவாமிஜி, வேகமாக அவர்கள் இருக்கும் இடத்தைக் கடக்க முயன்றார். ஆனால், ஞான் பாய்ந்து வந்து குதிரையின் லகானை இழுத்து நிறுத்திவிட்டார். குதிரையில் இருந்து இறங்கிய சுவாமிஜி, ""சபாஷ்! வேகமாகச் சென்ற குதிரையை நிறுத்திவிட்டாயே!'' எனப் புகழ்ந்தார். * மேற்கத்திய விளையாட்டுகளில், விவேகானந்த ருக்கு கால்பந்து மிகவும் பிடிக்கும். அது விளையாடுபவரின் தசைகளைக் கட்டமைக்கும். தைரியத்தை வளர்க்கும். * தன் உடலை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க உடற்பயிற்சி உதவும். ஒரு உடற்பயிற்சி கலைஞன் எந்த விளையாட்டிலும் தேர்ச்சி பெற்று திகழ்வான். * சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு மற்போர் வீரர் பயிற்சி செய்து கொண்டிருப்பதை விவேகானந்தர் பார்த்தார். அவரிடம் சென்று, தன்னுடன் பயிற்சிப்போருக்கு வரும்படி கேட்டார். அந்த நபரும் சம்மதிக்கவே இருவரும் மோதினர். அந்த நபர் தோற்றார். சுவாமியிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதற்கு காரணம் சுவாமி தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டதால் தான்!

Saturday, August 18, 2012

விரதத்தின் பொருள்

<விரதத்தின் பொருள் விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே “விரதம்” என அழைக்கப்படுகிறது. ஆனால் இது விரதத்தின் முதற் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும். உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ’விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம். விரதத்தின் பயன் மனம் ஒடுங்க புலன் ஒடுங்கம். புலன் ஒடுங்க அகம் ஒடுங்கும். அகம் ஒடுங்க, ஆன்ம ஒளி பிரகாசிக்கும். அந்த ஆன்ம ஒளியை அகத்திலே கண்டு தரிசிப்பதே விரதத்தின் பயன். பொறிகள் அடங்க வேண்டுமானால் உணவு ஒடுங்க வேண்டும். “அன்னம் அடங்க அஞ்சும் அடங்கும்” என்பது ஆன்றோர் முது மொழி. அதை உள்ளபடி உணர்ந்து விரதம் இருக்க வேண்டும். இறையருள் பெற முயற்சிக்க வேண்டும்

Friday, August 17, 2012

எலுமிச்சை விளக்கேற்றும் முறை

எலுமிச்சை விளக்கேற்றும் முறை ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள். எலுமிச்சையின் மகிமை ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு

ஐயப்பன் கோயிலில் உள்ள பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்! காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது. குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது. மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான். மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும். டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது. அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை. சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும். ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது. தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது. ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு. மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள். கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது. காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும். மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும். நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும். இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம். 18 படி தெய்வங்கள் ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு. 1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன? முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி. இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி. மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி. நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி. ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி. ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி. ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி. எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி. ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உ<ணர்வது ஒன்பதாம் படி. பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி. பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி. பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி. பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி. பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி. பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி. பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி. பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி. பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்