Thursday, May 30, 2013

நிவேதனப் பொருட்களை எடுத்துச் செல்வது எப்படி?

கோவில்களிலே மடைப்பள்ளியிலிருந்து (சிவாச்சாரியார்கள்) நைவேத்தியம் எடுத்துச் செல்லும் பொழுது பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அப்பொருள்களை அவர்கள் தங்கள் வயிற்றுக்கு மேலாகவோ அல்லது தோள்களுக்கு மேலாகவோ தான் தூக்கிச் செல்வார்கள். அதே போன்று இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பொழுதும் அவ்வாறே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.


இறைவனுக்குரிய நிவேதனங்கள்......


சிவன் - வெண் பொங்கல், வடை, வெறும்சாதம். பார்வதி - சர்க்கரைப் பொங்கல், உழுந்து வடை. விநாயகர்- மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும். முருகன்- வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த கடலைப்பருப்பு, தினைமாவு. பெருமாள் - லட்டு, வெண்பொங்கல், புளியோதரை.

கிழமை பிரதோஷ வழிபாடு பலன்

ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்

திங்கள் சோம பிரதோஷம் - நல் எண்ணம், நல் அருள் தரும்

செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்

புதன் பிரதோஷம் - நல்ல குழந்தை பாக்கியம் தரும்

வியாழன் பிரதோஷம் - திருமணத் தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.

வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்

சனிப் பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.


தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.

மாத பிரதோஷ பிரசாதங்கள் பலன்கள்

சித்திரை - தயிர் சாதம், நீர் மோர் - உடல்சூடு, எலும்புருக்கி நோய் விலகும்.

* வைகாசி - பால், சர்க்கரை பொங்கல் - எல்லாவித வயிற்றுக் கோளாறு நீக்கி சுகமடைதல்.

* ஆனி- தேன், தினை மாவு - மலட்டுதன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* ஆடி - வெண்ணை சர்க்கரை சேர்த்து - கொழும்பு சம்பந்தப் பட்ட நோய்கள் தீரும்.

* ஆவணி - தயிர் சாதம் - காரியத்தடை, நோய்களில் இருந்து விடுபடுதல்.

* புரட்டாசி - புளியோதரை, சர்க்கரை பொங்கல் - விஷகடி, தோல் சம்பந்தமான நோய்கள் விலகும்.

* ஐப்பசி - உளுந்தவடை, ஜிலேபி - சீதளமான நோய் விலகும்

* கார்த்திகை - தேங்காய் சாதம், எலுமிச்ச சாதம் - பெண்களுக்கு கர்ப்ப சம்பந்தமான நோய், அடி வயிறு நோய் தீரும்.

* மார்கழி - வெண் பொங்கல், சுண்டல் - மஞ்சள் காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.

* தை - தயிர் ஏட்டில் தேன் சேர்த்து தானம் கொடுக்க - விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

* மாசி - நெய்யுடன் சர்க்கரை - சிறு நீரகக் கோளாறுகள், மந்தம், வயிறு உப்பிசம் போன்றவை விலகும்.

* பங்குனி - தக்காளி சாதம், தேங்காய் சாதம் - மனக்கிலேசம், மனக் காளாறுகள் பித்தம் போன்றவை விலகும்.

நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?

நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றும்போது ஏழுமுறை வலமாகவும், இருமுறை இடமாகவும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.நவக்கிரகங்களை வழிபட்டு விட்டு சிவனையோ, விநாயகரையோ தரிசிக்கலாகாது. எல்லா தெய்வங்களையும், தரிசித்து கடைசியில் தான் நவக்கிரகங்களை தரிசித்தல் வேண்டும்.

சிவ மந்திரம்.......

சிவனை நாம் வணங்கும் போது, `ஓம் சிவாய நம' என்ற மந்திரத்தை ஓதி வணங்குகிறோம். இம்மந்திரம் பல பெரிய தத்துவங்களை உணர்த்துகிறது. இதில் உள்ள `சி' எனும் எழுத்து சிவனையும், `வா' எனும் எழுத்து அம்பாளையும், `ய' எனும் எழுத்து மனிதர்களையும், `நம' எனும் சொல் மும்மலங்களான, மாயை, ஆணவம் மற்றும் கர்வத்தைக் குறிக்கிறது. இம்மந்திரத்தை ஓதி இறைவனையும்,இறைவியையும், மனிதன் வேண்டும் போது நம்மைப் பிடித்திருக்கும் கர்வம், ஆணவம் மற்றும் உலக மாயையிலிருந்து விடுபடலாம்

விஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?

விஷ்ணு கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.


எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.


இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.


அதன்பின் லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும்.


அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்

"சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

முருகனும், வேங்கை மரமும்........

முருகன் கோவில்களில் பெரும்பாலும் வேங்கைமரம் தலவிருட்சமாக இருக்கும். முருகன் வள்ளி திருமணத்தில் வேங்க மரம் முக்கிய இடம் பெறுகிறது. இம்மரம் தனிச்சிறப்பு உடையது. தெய்வீக அருள்பெற்ற மரம்.

முருகனருள் பெற்ற மரமல்லவாப இம்மரத்துண்டுகளை நீரில் நனைய வைத்து அந்நீரை வெயிலில் காயவைத்து வெற்றிக்கு இடும் பொட்டு (திலகம்) செய்து வந்தார்கள் என்ற குறிப்பும் உண்டு. இது கெடுதல் விளைவிக்காது. இந்த நீரை குடித்தால் வலிமையான நோயற்ற உடல்நலம் உருவாகும். இம்மரம் பாதுகாப்பு கவசம் போன்றது.

அறுபடை வீடுகளில் முருகனின் வடிவும், தன்மைகளும்........


திருப்பரங்குன்றம் -நல்துணை வடிவு -உல்லாசம்
திருச்செந்தூர் - ஒளிவடிவு -மறுபிறப்பின்மை
பழனி - பழம் (திருவடிவு) -யோகம்
சுவாமிமலை -சொல்வடிவு -இவ்வுலக சுகம்
திருத்தணி - கலசநீர் வடிவு -சல்லாபம்
பழமுதிர்ச்சோலை -மர வடிவு -விநோதம்

கோதானத்தின் சிறப்பு..........

கோதானத்தின் சிறப்பு..........
ஒரு பசுவை ஒரு ஒரு நல்லவரிடம் (சாதுவிடம்) தானமாகக் கொடுக்க வேண்டும். அந்த நல்லவர் அப் பசுவின் பாலை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துதல் வேண்டும். நல்ல காரியங்களுக்கு அப்பசுவின் பால் பயன்படுத்தப்பட்டு வந்தால் அச்செயல் புண்ணியச் செயல் ஆகும்.

அந்த புண்ணியமானது தானம் கொடுத்தவனைச் சென்று சேருமாம். இந்தப் பசுவின் உடலில் எவ்வளவு உரோமம் (முடிகள்) இருக்கின்றனவோ அவ்வளவு புண்ணியம் கொடுக்குமாம். ஆகவே முடிந்தால் நல்லவரைத் தேர்ந்து எடுத்து கோதானம் செய்யலாம்.

சரஸ்வதிக்கு உகந்த நைவேத்யம்..........

சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜெப மாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர் குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடா மகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் கொண்டுள்ளனர்.

கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.

இறைவனுக்கு அணிவிக்க வேண்டிய வஸ்திரங்கள்..........

ஆடையை நாம் இறைவனுக்குச் சூட்டி வழிபடும்போது, அவனது திருவருள் கிடைக்கப் பெற்று பாவங்கள் நீங்கி மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம்.சிவன், திருமாலுக்குத் தூய வெண்மை நிறமுடைய பட்டாடை, அம்பாளுக்கு சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறப் புடவைகளைச் சூட்டி வழிபட்டால் சிறக்கலாம். நாட்டில் தவறாமல் மழை பெய்து, செழிப்பு ஏற்படவும் இறைவனுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்.

பூவும் நீரும் போதும்..........

ஏழை மக்களால் இறைவனுக்கு காணிக்கை ஏதும் படைக்க முடிய வில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். இந்த ஆதங்கத்தை மனதைவிட்டு முதலில் ஒழிக்க வேண்டும். இதை ஒழித்தாலே செல்வ வளம் பெருகி விடும் என்பது நம்பிக்கை. ஆண்டவனை வணங்க உதிரிப்பூவும், தண்ணீரும் போதும்.

இதைக் கோயிலில் கொண்டு கொடுத்தாலே இறைவனின் அருள் கிடைத்துவிடும். வீட்டில் சுவாமியை வணங்கும் போதும் மிகப்பெரிய படையலைப் படைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. படங்களில் பெரிய மாலைகளை மாட்ட வேண்டும் என எண்ண வேண்டாம்.

சிறிது பூவைத் தூவி, தண்ணீரை படத்தின் கீழே லேசாக தெளித்தாலே போதும். இறைவன் அன்பை மட்டுமே விரும்புகிறான். நமது பொருட்கள் அவனுக்குத் தேவைப்படுவதில்லை. பூவைக் கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்து,எமனையே வென்றவன் மார்க்கண்டேயன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

ஆறுபடை முருகனை தரிசிப்பதன் பயன்

1. திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.

2. திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. விடயாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.

3. திரு ஆவினன்குடி (பழனி): ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனிì ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும்.

4. சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.

5. திருத்தணிகை (குன்று தோராடல்): குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும்.

6. பழமுதிர்ச்சோலை : இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு.

குரு பார்வை கோடி நன்மை

ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான். கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான். சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.
சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான். அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான். குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன. சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது. தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க, குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது. திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி, மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.
தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது. குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.
அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது. சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான். தன் கணக்கு சரியாகவே இருந்ததுபோலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.
ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது? குழந்தை எப்படிப் பிழைத்தது? - தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது. புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார் ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்?
சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றான். ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்தபோதும், கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை உணர முடியும். குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.

விரதம் தரும் பலன்கள்

* ஏகாதசி விரதத்தால் மனம் தூய்மை அடையும்.

* மாத சிவராத்திரி விரதத்தால் நினைத்த காரியம் முடியும்.

* சங்கட ஹர சதுர்த்தி விரதத்தால் துன்பம் அகலும். அகால மரணம் மற்றும் விபத்துக்களில் இருந்து தப்பலாம்.

* சதுர்த்தி விரதத்தால் நல்வாழ்க்கை ஏற்படுவதுடன் உத்யோகம் கூடிவரும்.

* சஷ்டி, கிருத்திகை விரதத்தால் தீராத விளைவுகள், நோய்கள், பில்லி சூன்யம் பகைவர்கள் ஏவல்களால் ஏற்படும் தீமைகள் போன்றவை நீங்கும்.

* சனிப்பிரதோஷ தினத்தில் சனிக்கிரக மூர்த்தி சன்னதியில் நல்லெண்ணெய் விளக்குகள் ஏற்றிவர மிகுந்த செல்வம் பெறலாம். ஏழ்மை தரித்திர நிலைகள் அறவே நீங்கும்.

சிவன் - விஷ்ணு விளக்கம்

சிவன் - விஷ்ணு விளக்கம்

சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் கூறுகிறார்: பெருமாள் கோவில்களில் தாயார் கிழக்கு பார்க்கிறாள். சிவன் கோவில்களில் அம்பாள் தெற்கு நோக்குகிறாள் .இதன் ஐதிகம் என்ன? சிவன் கோயிலில் சிவா பிரதிஷ்டை , உருவம் இல்லாமல் லிங்க பிரதிஷ்டைதான் இருக்கும்.''சிவனே'' என்று தனித்து இருப்பவர் அவர். அதனால் தனி சந்நிதிதான் இருக்கும்.அவர் கிழக்கே பார்த்தால் , அவருடைய இடப்பக்கம் அம்பாள் தெற்கே பார்த்தபடி இருப்பாள் .இரு சந்நிதிகளில் நிற்கும் போதும் இருவரையும் பார்ப்பது போல் அமையும்.அவர்கள் இருவரும் நேருக்கு நேர் பார்ப்பது போல் பிரதிஷ்டை செய்வது இல்லை. ஆகம விதிப்படிதான் இப்படி இருக்கிறது. இது ஐதிகம் இல்லை .இப்படி இருந்திருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள் என்பதுதான் ஐதிகம். இது ஐதிகம் இல்லை.ஆகம விதி.
விஷ்ணு ஷேத்திரத்தில் பகவான் கிழக்கே பார்த்திருப்பார். அவளும் பக்கத்திலேயே கிழக்கு பார்த்து இருப்பாள் . விஷ்ணு ஷேத்திரத்தில் லட்சுமியை மடியில் வைத்து அணைத்தபடி கூட விஷ்ணு காட்சி தருவார். '' நீ தியாகம் பண்ணினால் மோட்ஷம் கிடைக்கும்'' என்று சொல்வதற்காக சிவன் வந்திருக்கிறார். போகம் பண்ணி அனுபவிப்பதை விளக்க விஷ்ணு வந்திருக்கிறார்.அவர் தியாக ஸ்வரூபி . இவர் போக ஸ்வரூபி .அவர் தியாக ஸ்வரூபி என்றாலும் உடலிலேயே பார்வதியை வைத்திருக்கிறார். ஆனால் நாம் அர்த்தநாரியை பூஜிக்காமல் லிங்கத்தையே பூஜிக்கிறோம்

Wednesday, May 29, 2013

ஐங்கரன்- பெயர்க்காரணம்


ஐங்கரன்- பெயர்க்காரணம்

இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்

Monday, May 27, 2013

நோயில் இருந்து விடுதலை கிடைக்கும் பரிகாரம்


பணம் உள்ளவர்கள் தான் ஆடம்பரத்துக்காக பூஜை செய்கின்றனர். நமக்கு ஏன் இந்த வேலை என யாரும் புறக்கணிக்க வேண்டாம். முடிந்த அளவு இந்த அமாவாசையில் நீங்கள் உங்கள் குல மூதாதயர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய்களில் இருந்து விடுவிக்கும்.

பிதுர் தேவதைகள்:நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.

1. நம் பித்ருக்கள் (மண்), 2. புரூரவர் (நீர்), 3. விசுவதேவர் (நெருப்பு), 4. அஸீருத்வர் (காற்று), 5. ஆதித்யர் (ஆகாயம்) என பஞ்ச பூத அம்சமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்றது.

திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு தர்பணம் செய்ததாக நமது இதிகாசங்கள் கூறுகின்றன.

ஆனால் இக்காலத்திலோ சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றது.

இந்த அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழவர்க்கங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாத வகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்தி கீரையை பசுமாட்டிற்கு உணவாக தந்தாலே போதும்.

முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். வருங்காலத்தில் நீங்கள் வெற்றியாளர்களே!

முன்னோர் ஆசி பெற பரிகாரம்

இறந்தவர்களின் திதி வரும் அன்று பிண்டம் கொடுத்து வரும் பழக்கம் இருக்கிறது. அப்படி கொடுக்கும் அனைவரும், வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள்.உங்கள் முன்னோர்களின் ஆசி, உங்களுக்கு முழுவதும் கிடைக்க, ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து, மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள்.

அவர்களை விட, உங்களுக்கு வரும் இன்னல்களை தடுக்க கூடிய சக்தி வேறு இல்லை.நீங்கள் உயிருள்ள வரை, உங்கள் தாய், தந்தையரின் இறந்த திதி வரும் நாளில், மறக்காமல் ஈம சடங்குகளை குறைவில்லாமல் செய்யுங்கள். இதைவிட உங்களுக்கு பெரிய காரியம், முக்கியமான காரியம் எதுவும் இல்லை.

வாய்ப்பு இருக்கும் அன்பர்கள், நீங்களும் ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் கொடுக்க ஆரம்பிக்கலாம். காலையில் தினமும், நீங்கள் உணவு உட்கொள்ளும் முன் காகத்திற்கு உணவிடலாம். உங்கள் கடன் தீர்ந்தால் தான், உங்கள் பலம் பெருகும். உங்கள் சந்ததியை நீங்கள் காக்க முடியும்.உங்கள் உணவை காகம் சாப்பிடும் போது உங்கள் கர்ம வினைகள் கரைய ஆரம்பிக்கும்.

உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அத்தனை விஷயங்களும், விலகும். உங்கள் பின்னால், உங்கள் மேல் உயிருக்குயிராக பாசம் வைத்து இருக்கும் ஒரு படையே உருவாகும். நீங்கள் வெகு விரைவில் நிம்மதியும், புகழின் உச்சியிலும் நிற்பீர்கள்.சூரிய சஞ்சாரத்தில் உத்தராயணம், தட்சிணாயனம் என்று இரு பிரிவுகள் இருக்கிறது.

இரவை ஆரம்பிக்கும் மாதங்களில், விண்ணில் இருந்து அபரிமிதமான சக்தி வெளிப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதத்திற்கும், தை மாதத்திற்கும் வரும் அமாவாசையில் நீங்கள் உங்கள் முன்னோர்களை நினைத்து எந்த பூஜை, தர்ப்பணம் செய்தாலும், அவர்களை உடனே சென்றடையும்.

இறந்தவர்களின் திதி தெளிவாக தெரியாதவர்கள், இந்த ஆடி அமாவாசையன்றோ, அல்லது தை அமாவாசையன்றோ, பித்ரு பூஜை செய்து, பிண்டங்கள் கொடுக்கலாம்.

உங்களின் முன்னோர்களின் ஆசி முதலில், அதன்பின் உங்கள் குலதெய்வம், அதற்கு பிறகு தான் மற்ற தெய்வங்கள் எல்லாம். உங்களுக்கு ஒரு கஷ்டம், உடனே ஓடி வர்றது, உங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி தான். இவர்களுக்கு பலம் கொடுக்கிறது, உங்கள் பித்ரு பூஜையும், தர்ப்பணமும் தான்.

திருமண தடை நீங்கும் பரிகாரம்

பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர்.

முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை.

இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம் நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

கர்மவினைகளுக்குப் பரிகாரம்

உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் வலிவு உள்ளவையே. அதுவே உங்கள் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி என்றால் அவர்களை நீங்கள் முறையாக வழி பாடும் செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்க அவர்கள் முழு ஆசீர்வாதம் செய்வார்கள்.உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன் னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.

அவர்களை நமது சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து கொள்ள இயலாது. மேலும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிட இயலாது. இதனால் தான் அவர்களுக்கு ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்ச பூதங்களையும் முன்நிறுத்தி உரிய மந்திரங்களோடு வணங்குகிறோம். இதுவே பித்ரு ஹோமம்.

சிருஷ்டியின் போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியை தொடங்குவது போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக தோன்றும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.

அம்மாவாசை யன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக் கரைகளிலும், கடலோரங்களிலும் காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜை யானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சா வளியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே அமாவாசையில் கொடுக்கப்படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்குகிறது.

பொதுவாக வலது ஆள் காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது.

சாதாரணதாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே பித்ரு லோக அந்தர ஆக்ரஷன சக்தியின் தெய்வீகக் தன்மையாகும். தை அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிதமான தாகப் பெருகுகின்றது.பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது திருப்தியளிப்பதாய் கருதப்படுகிறது.

பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே, இதன் நிழலில் தான் பித்ரு- தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.ஆக, அதி அற்புதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து பல்லாயிரக்கணக்கான நம் கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

எளிய பரிகாரங்களும், பலன்களும்!

 பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.

* துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.
* மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

* ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

* தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.

* பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.

* தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.

* காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

* கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.

* உழவாரப் பணிகளை மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்

கண் திருஷ்டி தோஷம்

சிலரது கண்கள் கொள்ளிக் கண்களாக இருக்கும் இப்படிப்பட்டவர்கள் எதனைப் பார்த்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே கண் திருஷ்டி பட்டு விடும். இந்த திருஷ்டியினால் உடல்நலன் பாதிப்பு வியாபாரப் பாதிப்பு மற்றும் பொருள் விரயங்கள் எல்லாம் ஏற்பட்டு விடும்.

அதற்கு கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நிவர்த்தி காணலாம். மிளகாய்-5, படிகம் (சீனிக்காரம்-10) கிராம், உப்பு-ஒரு கைப்பிடி, சூடம்-9.மேலுள்ளவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு துணியில் கட்டி வியாபார தலமாக இருந்தால் கல்லா முதற்கொண்டு எல்லா அறைகளையும் மூன்று சுற்று சுற்றி வாசலில் கொளுத்த வேண்டும்.

வீடாக இருந்தால் வீட்டில் உள்ள அனைவரையும் இருக்கச் செய்து மூன்று சுற்று சுற்றி வாசலில் போட்டுக் கொளுத்த வேண்டும்.ஒவ்வொரு வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில் இரவு 8.30 மணி முதல் 9 மணிக்குள் இந்த பரிகாரம் செய்தால் கண் திருஷ்டி பாதிக்காது.

புராணம்

புராணம்
------------
புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக்கூறுவதே என பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் கூறுகிறார். அதாவது சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி நன்றாகப் பெரிசு பண்ணிக் காட்டுகிறதல்லவா? இம்மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்னச் சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவதுதான் புராணம். ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனஸில் ஆழப்பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரம் பண்ணிச் சொன்னால் நன்றாக மனசில் பதியும். ஸத்யம் வத (உண்மையே பேசு) என்று மட்டும் வேதம் சொல்கிறது. அப்படிப் பேசுவதால் எத்தனை பெருமை ஏற்படுகிறது என்பதை ஹரிச்சந்திரன் கதை பல அத்யாயங்களில் விஸ்தாரமாகச் சொல்கிறது. தர்மம் சர (அறத்தைப் பின்பற்று) என்று இரண்டு வார்த்தையில் வேதம் சொன்னதை நீள நெடுக மஹாபாரதத்தில் தர்மபுத்திரரின் கதையாகச் சொல்லியிருக்கிறது. மாத்ரு தேவோ பவ. பித்ரு தேவோ பவ வாக்குக்கு ஸ்ரீராம சரித்ரம் பூதக்கண்ணாடியாய் இருக்கிறது. அடக்கம், பொறுமை, தயை, கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் கட்டளையிட்டுள்ளவற்றை புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாகப் பிரகாசிக்கும்படி செய்திருக்கிறார்கள். அவற்றைப் படிப்பதாலும், கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது.

புராணங்கள் தோன்றிய காலம்: புராணங்கள் பல உண்டு. அவற்றில் மகா புராணங்களையே பதினெண் புராணங்கள் என்று கூறுவர். வேதங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் உள்ள உட்பொருளை சற்றுக் கற்பனையும் கலந்து யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய கதை வடிவில் உள்ளவை புராணங்கள். புராண என்ற சொல்லுக்கு மிகப் பழைமையானது என்ற பொருள் உண்டு. புராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துள்ளியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்து சமயத்தின் பொற்காலம்: கி.பி. 300-600 காலகட்டங்களில் வடநாட்டை ஆண்ட குப்தர்கள் வடமொழியை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம் என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும்.

கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி: திருப்பூவணப் புராணத்தில், சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம், சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம், மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி.

திருப்பூவணப் புராணத்தில் நளன்கலிமோசனச் சருக்கத்திலே,

மேவுமந்தமிகுந்திரையாயுக
மோவில்பல்புகழோங்குநளன்றனக்
கியாவுநல்கியிருங் கலி தீர்த்தருள்
பூவணேசன்பொற்கோயில்புகுந்தனன் (பாடல் 1325)

என்று கூறப்பட்டுள்ளது. எனவே கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் என்பதும், அவனது ஆட்சிக்காலத்திற்குப் பிறகே பிரமகைவர்த்த புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் உறுதி. கலியுகம் தோன்றி 5108 ஆண்டுகள் ஆகின்றன. எனவே பிரமகைவர்த்த புராணம் எழுதப் பெற்ற காலம் (கலி5108 கி.மு.2008 3100) கி.மு.3100க்குப் பிற்பட்டகாலம் எனத் திருப்பூவணப் புராணத்தின் வழியாக அறியமுடிகிறது. இந்நூல் பல்வேறு வகைகளில் கம்ப இராமாயணத்துடன் ஒப்பு நோக்கிப் பார்க்கப்படுகிறது.

இறைவன் குறித்த புராணங்கள்: நைமிசாரண்யத்தில் சூதர் சொன்ன கதைகளை வியாசர் புராணங்களாகத் தொகுத்தார் என்பது ஐதீகம். வியாசரால் தொகுக்கப்பட்ட புராணங்கள் பதினெட்டு. அந்தப் பதினெண் புராணங்களும், சத்துவம், ராஜஸம், தாமசம் ஆகிய முக்குணங்களுக்கு உரியவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இதில்
சத்துவ குணப் புராணங்கள் விஷ்ணுவைப் புகழ்கின்றன. அவையாவன: விஷ்ணுபுராணம், பாகவத புராணம், நாரதீய புராணம், கருட புராணம், மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம், பத்மபுராணம், வராக புராணம், வாமன புராணம். ராஜஸ குண புராணங்கள் பிரம்மாவைப் புகழ்கின்றன. அவையாவன: பிரம்ம புராணம், பிரமாண்ட புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம். தாமஸ குண புராணங்கள் சிவனைப் போற்றுகின்றன. அவையாவன: சிவபுராணம், லிங்கபுராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம், அக்கினி புராணம், மத்சய புராணம், கூர்ம புராணம் முதலியன.

வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும் . அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், கதைகளாக எழுதினார்கள். அவையே புராணங்கள். வேதத்தின் கண்ணாடி என்று புராணங்களைச் சிறப்பிப்பர். புரா என்றால் முற்காலத்தில் நடந்தது என பொருள்.வேதங்களைப் போலவே புராணங்களும் பிரம்மாவிடம் இருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்ய உபநிஷத், மத்ஸ்ய புராணங்கள் கூறுகின்றன. மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 18 புராணங்களிலும் 5,09, 500 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஸ்கந்த புராணம் பெரியது. 1,81,000 ஸ்லோகங்கள் கொண்டது. மார்க்கண்டேய புராணம் சிறியது. 9000 ஸ்லோகங்களே உள்ளன.

வேதங்களின் அங்கங்களாக உள்ள பிராம்மணங்களில் கூட புராணங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நான்கு வேதங்களையும் தொகுத்த வேதவியாசரே புராணங்களையும் தொகுத்துக் கொடுத்துள்ளார். திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூவரும் உருவாகக் காரணமாக இருந்த வேதவியாசரே அவர்களின் உண்மை வரலாற்றை உடனிருந்து மகாபாரதம் என்ற இதிகாசமாக இயற்றியதுடன் ஸ்ரீமத் பாகவத புராணம் என்பதையும் இயற்றியுள்ளார். புராணங்களில் 18 பெரிய புராணங்களும் 18 சிறிய உபபுராணங்களும் இருக்கின்றன. பதினெட்டுப் பெரிய புராணங்களைப் பற்றிய விவரங்களை இனி பார்ப்போம்.

மற்ற புராணங்கள்: 1.அக்னி புராணம். 2.வாயு புராணம். 3.பவிஷ்ய புராணம். 4.நாரதீய புராணம். 5.ஸ்காந்தம் (கந்த புராணம்). 6.மார்க்கண்டேய புராணம்.

பிரம்ம புராணம் : பிரம்மன் தட்சப் பிரஜாபதிக்கு விவரிப்பதாக உள்ள இப்புராணத்தில் 25,000 ஸ்லோகங்கள் உள்ளன.

விஷ்ணு புராணம் : இது மிகவும் பழைமையானது. ஆறு காண்டங்களையும், ஒவ்வொரு காண்டத்திலும் ஐந்து பெரும் பிரிவுகளையும் கொண்டது. பராசர மகரிஷி, மைத்ரேயருக்கு உபதேசம் செய்ததே விஷ்ணு புராணமாகும்.

மத்ஸ்ய புராணம் : விஷ்ணுவின் முதலாவது அவதாரமான மத்ஸ்யம் (மீன்) தன்னைக் குறித்து மனுவிடம் விவரிப்பதாக உள்ளது இப்புராணம். பதிமூன்றாயிரம் ஸ்லோகங்களை உள்ளடக்கிய இப்புராணம் பல மன்னர்களின் வரலாறுகளைக் கதைபோல விவரிக்கிறது.

கூர்ம புராணம் : விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்மம் (ஆமை) இந்திரத்யும்னன் என்று மன்னனிடம் விவரிப்பது போல அமைந்துள்ளது. இதில் எட்டாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன. இப்புராணத்தில்தான் முதன் முதலாக ஜம்புஸ்த்வபம் என்பதாக நமது பரதக்கண்டத்தின் பூகோள அமைப்பு விவரிக்கப்படுகிறது.

வராஹ புராணம் : விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்தை பதினான்காயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம்.

வாமன புராணம் : பத்தாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் வாமன அவதார வரலாற்றை மட்டுமல்லாது பரமேஸ்வரன்பார்வதி ஆகியோரின் திருமண வரலாற்றையும் கூட விரிவாக விவரிக்கிறது.

கருட புராணம் : மகாவிஷ்ணுவானவர், தமது வாகனமாகிய கருடனுக்கு எட்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கும் செய்திகளே இப்புராணம். இதில் மருத்துவம், வான் ஆராய்ச்சி, மரணத்திற்குப் பின் மனிதர்கள் அடையும் நிலைகள் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.

ஸ்ரீமத் பாகவத புராணம் : வியாசரே எழுதியது. மகாபாரதத்தில் முழுமையாக இடம் பெறாத ஸ்ரீகிருஷ்ணரின் முழு வரலாறும், விஷ்ணுவின் பிற அவதாரங்கள் குறித்த செய்திகளும், பன்னிரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு பதினெட்டாயிரம் ஸ்லோகங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.

லிங்க புராணம் : சிவபெருமானைக் குறித்தும் அவரது 28 வடிவங்களைப் பற்றியும் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம். லிங்க வழிபாட்டின் தோற்றமும், காரணமும், சிவபெருமானின் அவதார லீலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

பத்ம புராணம் : ஆறு காண்டங்களில் 55,000 ஸ்லோகங்களைக் கொண்ட பெரிய புராணம் இது. பிரம்மனின் பத்மாசனம் விவரிக்கப்படுவதால் இது பத்ம புராணம் என்று பெயர் பெற்றது.

பிரம்மவைவர்த்த புராணம் : பிரம்மகாண்டம், ப்ரக்ருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகிய பிரிவுகளுடன் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. இதில் உள்ள கணேச காண்டம் என்ற பகுதிதான் விநாயக புராணம் என்ற உபபுராணமாக பின்னர் உருவானது. “கிருஷ்ண ஜன்ம காண்டம்” என்ற பகுதிகளில் உள்ள தகவல்களை ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் காணலாம்.

பிரம்மாண்ட புராணம் : பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் ஒரு பொன்னிற முட்டையிலிருந்துதான் நமது பிரபஞ்சம் (பிரம்மாண்டம்) தோன்றி விரிவடைந்தது என்று விவரிக்கிறது. நவீன விஞ்ஞானம் தற்காலத்தில் நம்பும் பெருவெடிப்பு என்ற நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்ட இப்புராணத்தில் காணலாம்.

அக்னி புராணம் : அக்னிதேவன் வசிஷ்ட மகரிஷிக்கு விவரித்தது இப்புராணம். சிவலிங்கம், துர்க்கை, இராமர், கிருஷ்ணர் ஆகியோரைப் பற்றியும், நாடகம், சிற்பம், ஜோதிடம் போன்ற கலைகளைப் பற்றியும் விவரிக்கிறது என்பது இப்புராணத்தின் சிறப்பாகும்.

வாயுபுராணம் : பதினான்காயிரம் ஸ்லோகங்களைக் கொண்டு இப்புராணத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆண்ட குப்த வம்சத்து மன்னர்களைப் பற்றியும், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்டர் என்பவரைப் பற்றியும் கூட தகவல்களைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பவிஷ்ய புராணம் : வருங்காலத்தில் என்னென்ன நிகழ்வுகளெல்லாம் நடக்க இருக்கின்றன என்று சூரியன் முன் கூட்டியே மனுவுக்குத் தெரிவிப்பதாக அமைந்தது இப்புராணம். ஸ்தலங்களைப் பற்றியும் அங்கெல்லாம் யாத்ரிகர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியும் கூட இப்புராணம் விவரிக்கிறது.

நாரதீய புராணம் : நாரத மகரிஷியானவர் சனத்குமாரருக்கு உபதேசித்தது இப்புராணம். 25,000 ஸ்லோகங்கள் இதில் உள்ளன.

ஸ்காந்தம் : முருகனின் வரலாற்றை விவரிப்பதுதான் இப்புராணம்

மார்க்கண்டேய புராணம் : மிகப்பழைமையான புராணம் இது. இதிலுள்ள தேவி மகாத்மியம் என்ற பகுதிதான், பின்னர் தனியான ஓர் உப புராணமாக உருவெடுத்தது.

மேற்குறிப்பிட்ட பதினெட்டு பெரிய புராணங்களும் தேவபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் தான் உள்ளன என்றாலும் பிற்காலங்களில் பாரத நாட்டின் பல்வேறு பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஸ்காந்தம் தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியரால் கந்தபுராணம் என்ற பெயரில் வழிநூலாக எழுதப்பட்டது. ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற உப புராணம் தான் பின்னர் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் தமிழில் உருவெடுத்தது. பதினெண் புராணங்கள் எனப்படினும் அவை உண்மையில் வாயு புராணத்துடன் 19 என்று ரோமஹர்ஷனர் (அ) லோமஹர்ஷனர் கூற்றாக ஓர் ஆங்கில நூலில் வாயுபுராணத்துடன் சேர்த்து 19 பெயர்கள் தரப்பட்டுள்ளன. இந்த ரோமஹர்ஷனர் வியாசரின் சீடர்களில் முதன்மையானவர் என்றும், புராணங்களைக் கூறும் இனத்தவர் என்பதால் சூதர், சூதமுனிவர், சூதபவுராணிகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

புராணங்கள் சூதமுனிவரால் நைமிசாரணிய முனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்டுப் பின்னர் சீடர்கள் பலர் மூலம் பரவின என்பர். அவை வடமொழியில் இயற்றப்பட்ட பின் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. எனினும் புராணங்கள் முதன்முதலில் தோன்றிய வரலாறு பற்றி அகச்சான்றுகள் சில உள்ளன. எடுத்துக்காட்டுகள் :

1. சிவ புராணம் - பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.
2. கூர்ம புராணம் - புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது.
3. கருட புராணம் - கருடன் காசியபருக்குக் கூறினார்.
4. மார்க்கண்டேய புராணம் - மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது.
5. அக்கினி புராணம் - அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறினார்.
6. வராக புராணம் - வராகரே கூறினார்.
7. கந்த புராணம் - கந்தனே கூறி அருளினார்.
8. வாயு புராணம் - வாயுவாலேயே கூறப்பட்டதாகும்.
9. விஷ்ணு புராணம் - மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்

Sunday, May 26, 2013

உறங்கும்முன் "ஸ்ரீராமஜெயம்' கூறிக் கொண்டே இருக்கலாமா?

உறங்கும்முன் "ஸ்ரீராமஜெயம்' கூறிக் கொண்டே இருக்கலாமா?

ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை ஆண் பெண் பேதமில்லாமல் யாரும் எப்போதும் ஜெபிக்கலாம். குறைந்தபட்சம் 108 என்றாலும், தூக்கம் வரும் வரை ஜெபிக்கலாம். ராம, ஆஞ்சநேயருடைய அருள் உங்களுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.

கோயிலுக்குச் சென்று விட்டு வேறெங்கும் செல்லக்கூடாது என்பது உண்மையா?

கோயிலுக்குச் சென்று விட்டு வேறெங்கும் செல்லக்கூடாது என்பது உண்மையா?

கோயிலுக்குச் சென்று புனிதம் பெற்ற நம் கால்களை வேறு எங்கும் செல்லாமல் நம் வீட்டில் படும்படி செய்தால் புண்ணியம். எனவே தான் வேறெங்கும் செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றனர்.

பில்லி, சூன்யம், மாயமந்திரம் உண்மைதானா?

பில்லி, சூன்யம், மாயமந்திரம் இருப்பது உண்மைதானா?

தீய சக்திகளை அழிப்பதற்காக இவை ஏற்படுத்தப்பட்டன. சில மந்திரங்களை முறையாக ஜபித்து அதனை நல்வழியில் பிரயோகித்து எல்லோருக்கும் நன்மை செய்து வந்தனர். ஆனால், இப்போதோ வேண்டாதவர்களை எல்லாம் துன்புறுத்த கையாளுகிறார்கள். இந்த எண்ணத்துடன் செயல்பட்டால் கண்டிப்பாக இவை பலிக்காது. இதற்குரிய முறையான பயிற்சி பெற்றவர்கள் இது போல செயல்பட மாட்டார்கள். அவர்களை அடையாளம் காண்பதே அரிது. அரை குறையாகத் தெரிந்த, வியாபாரரீதியாக செயல்படும் சிலரை நம்பி மக்கள் மகிழ்ச்சியான குடும்ப ஒற்றுமையைக் கெடுத்துக் கொள்கிறார்கள். பகுத்தறிவு வளர வேண்டிய சூழலில், இவற்றில் ஈடுபடாமல் இருந்தாலே போதும்.