Saturday, June 23, 2012

பாசமுள்ள தாயாக மட்டுமல்ல...வீரத்தாயாகவும் இருந்து பிள்ளைகளை வளருங்கள்


மரத்திலோ, வீட்டுச்சுவரிலோ விளையாடுகிற மகனைப் பார்த்து ""கீழே விழுந்து விடாதே மகனே! கவனமாக இரு,'' என்று எச்சரிக்கை செய்கிற பாசத்திற்குரிய தாய்மார்களை உலகம் முழுக்கக் காணலாம்.
ஆனால், மகன் மரணத்தை தழுவ இருக்கிற வேளையில், ""போ..மரணக்கயிற்றை முத்தமிடு. இது என்றேனும் ஒருநாள் உன்னைத் தேடி வரத்தான் போகிறது. எதுவரை வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல.
எதற்காக வாழ்ந்தாய் என்பது தான் முக்கியம். நீ இந்த தேசத்துக்காக <உயிர்விட்டால், நிச்சயமாக மரணமடைய மாட்டாய். உன்னைப் பற்றி தினமும் ஒருவன் எழுதிக் கொண்டிருப்பான், ஒருவன் பேசிக்கொண்டிருப்பான், ஒருவன் நினைத்துக் கொண்டிருப்பான்,'' என்று முழக்கமிட்ட வீரத்தாய் ஒருத்தியும் இந்த பூமியில் தான் வசித்தாள்.
சுதந்திரப் போராட்ட சிரோன்மணி பகத்சிங்கின் தாயே அவர். விடுதலைக்காக பாடுபட்ட தீரன், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, மார்ச் 23, 1931ல் மரணக்கயிற்றில் தொங்க வேண்டியிருந்த நிலையில், இருபது நாட்களுக்கு முன்பாக அவரது தாய் மகனைச் சந்தித்தார்.
"தன் மரணத்துக்காக, தாயார் அழுது புலம்புவாரே! அவரை எப்படி சமாளிக்கப் போகிறோம்...' வெள்ளையர் களைக் கண்டால் கர்ஜிக்கும் அந்த சிங்கம், தன் தாயின் முகத்தைப் பார்க்க தயங்கியது. இருப்பினும், சற்றே கண்களை உயர்த்தி அவரைப் பார்த்தபோது தான், அவள் தீட்சண்யமாக தன்னைப் பார்ப்பதைக் கவனித்தார்.
அப்போது, அந்தத்தாய் உதிர்த்த வார்த்தைகளைத் தான் மேலே வாசித்தீர்கள்.
ஆறு வயதானாலும், நூறு வயதானாலும் என்றோ ஒருநாள் மரணம் வந்தே தீரும். இந்த உண்மையை மனதில் வைத்து, பாசமுள்ள தாயாக மட்டுமல்ல...வீரத்தாயாகவும் இருந்து பிள்ளைகளை வளருங்கள். அவர்கள் உலக சரித்திரத்தில் இடம்பிடிப்பார்கள்.

பணியாளனின் செய்கைக்கு எஜமானனே பொறுப்பாளி


விபீஷணனை காட்டில் சில அந்தணர்கள் சிறைபிடித்து விட்டதாக ராமர் கேள்விப்பட்டார். அந்தணர்களிடம் நேரில் சென்ற ராமர், அங்கு கை, கால் கட்டப்பட்ட நிலையில் அவர் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். ராமரைக் கண்ட அந்தணர்கள் அவரது திருவடியில் விழுந்து வணங்கி வரவேற்றனர். காட்டில் கிடைத்த கனிவகைகளை கொடுத்து உபசரித்தனர்.
விபீஷணரைத் தேடித் தான் ராமர் வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தனர்.
அவரிடம் ""சுவாமி! தர்ப்பை சேகரிப்பதற்காக வயோதிக அந்தணர் ஒருவர் வனப்பகுதிக்கு வந்திருந்தார். அவர் எப்போதும் மவுன விரதம் மேற்கொள்பவர். அப்போது தேரில் வந்த இந்த அரக்கன் அவருடன் பேச முற்பட்டான். ஆனால், அவரோ மவுனம் காத்தார். கோபம் கொண்டு காலால் அவரை உதைத்து விட்டான். நிலைகுலைந்து விழுந்த அந்தணரின் உயிர் போய்விட்டது. அதனால் இவனைக் கட்டி வைத்தோம். எங்களின் நல்லகாலம். உத்தமரான நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். கொலைகாரப்பாவியான இவனுக்கு தண்டனை வழங்குங்கள்,'' என்று கேட்டுக் கொண்டனர்.
விபீஷணன் தலை குனிந்து நின்றான்.
ராமர் அந்தணர்களிடம்,""இவன் என்னுடைய பணியாளன்.ஒரு பணியாளனின் செய்கைக்கு எஜமானான நானே பொறுப்பாளி. இவனுக்கு கொடுக்க நினைக்கும் தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன்,'' என்றார்.
இதைக் கேட்டு அந்தணர்களின் உள்ளம் நெகிழ்ந்தது.
விபீஷணனுக்கு அவரைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பதையும், அவருடைய மரணம் தற்செயலாக நடந்தது என்பதையும் உணர்ந்தனர். விபீஷணனை விடுவித்து ராமருடன் அனுப்பி வைத்தனர்.

மரங்களை வெட்டுவதில் மக்கள் கட்டுப்பாடு


காளையார்கோவிலிலுள்ள சிவாலயத்துக்கு புதிதாக தேர் செய்யும்படி மருதுபாண்டிய மன்னர் உத்தரவிட்டார். தச்சர்கள் மரம் தேடி அலைந்தனர். சிவகங்கை சமஸ்தானத்திற்குரிய திருத்தலமான பூவனநாதசுவாமி கோயிலில் ஒரு மரம் இருந்தது. அது நன்கு பருத்து அடர்ந்து வளர்ந்திருந்தது. அதனை வெட்டி தேர்ப்பணியைத் தொடங்குவது என முடிவெடுத்தனர். அதற்காக ஆட்களும் வந்துவிட்டனர். பலருக்கும் நிழல் தரும் மரத்தை வெட்ட கோயில் அர்ச்சகருக்கு மனமில்லை.
ஓடிவந்து, ""மன்னரின் மீது ஆணை! இந்த மரத்தை யாரும் வெட்டக்கூடாது '' என்று வேகமாக கத்தினார். பணியாட்கள் செய்வதறியாது திகைத்தனர். விஷயமறிந்த மன்னருக்கு கோபம் தலைக்கேறியது. ""என் கட்டளையை மீறும் தைரியம் அர்ச்சகருக்கு எப்படி வந்தது? '' என்றவர் கோயிலுக்கு விரைந்தார்.
அர்ச்சகர் சிவனை வணங்கி விட்டு மன்னரிடம் வந்தார்.
மன்னரைப் பார்த்து, ""மாமன்னரே! வணக்கம். உங்களைப் போலவே இந்த மருதமரமும் அனைவருக்கும் குளிர்ச்சியான நிழலைக் கொடுக்கிறது. நீங்களோ மருதுபாண்டியர். இது மருத மரம். இதைப் பார்க்கும் போதெல்லாம் உங்களின் நல்லாட்சியே என் நினைவிற்கு வருகிறது. அதனால் தான் மரத்தை வெட்டுவதற்கு எனக்கு சிறிதும் மனமில்லை,'' என்று சொல்லி வணங்கினார்.
அர்ச்சகரின் பேச்சைக் கேட்ட மன்னர் என்ன செய்வதென தெரியாமல் நின்றார். அவரைப் பாராட்டிய மன்னர் பரிசளித்து விட்டு அரண்மனை திரும்பினார். சுபமான ஒரு விஷயத்துக்கு கூட மரங்களை வெட்டுவதில் மக்கள் கட்டுப்பாட்டைக் கடைபிடித்ததை இதன்மூலம் தெரிந்து கொள்கிறோம்.

அக்கரையில் ஒரு முனிவர்

யமுனைக் கரையில் கண்ணனும் ராதையுமாக அமர்ந்திருந்தார்கள். சிலுசிலுவென்று சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது. கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்தவாறிருந்தாள்.
ஆனால், கண்ணன் அக்கரையையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
""என்மேல் ஒருசிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?'' கேட்டாள் ராதை.
""எனக்குப் பசிக்கிறது!''
ராதை பதறினாள்.
""அடடா! இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன். அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?''
"" அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!''
""யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தாள். அங்கே ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது.
""துர்வாச மகரிஷி!'' என்றான் கண்ணன்.
""அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும் பெயர்பெற்றவர்!''
""ராதா! என் மனத்தில் நீ இருக்கிறாய். அவர் மனத்தில் நான் இருக்கிறேன்! அவர் என் பக்தர்!''
சரி...சரி... அவருக்கும் சேர்த்தே உணவு சமைத்து எடுத்துவருகிறேன்! அதிருக்கட்டும், உங்கள் மனத்தில் நான் இருப்பது பற்றி மகிழ்ச்சி. ஆனால் அங்கே நான் மட்டும் தான் இருக்க வேண்டும். என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது, ஞாபகமிருக்கட்டும்! கண்ணன் நகைத்தான். ராதை தொடர்ந்தாள்.
""இப்படிச் சொன்னால் எப்படி ராதா? நான் நேசிக்கும் எல்லாப் பெண்களிடமும் உன்னைத் தானே காண்கிறேன்!
"நல்ல நியாயம் இது! உங்கள் தாயார் யசோதையிடம் சொல்லித்தான் உங்களைத் திருத்த முயலவேண்டும்!''
""தாயார் யசோதைக்கும் உனக்கும் ஒரே ஒரு வேற்றுமை தான் ராதா. என் தாய் என்னை உரலில் கட்டிப் போட்டாள். நீ உன் குரலில் கட்டிப் போடுகிறாய். என் புல்லாங்குழலை இனிமை என்பவர்கள் உன் குரலைக் கேட்காத முட்டாள்கள்''.
""போதுமே உங்கள் புகழ்ச்சி. ஆண்களுக்குப் பசிவந்தால் கூடவே கவிதையும் வரும்போல் இருக்கிறது. என்னை அதிகம்
புகழவேண்டாம். எப்படியும் சாப்பாடு உறுதி!''
ராதை நகைத்தவாறே மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தாள்.
""ஒரு தட்டில் உணவு கொண்டுவா, போதும். துர்வாசர் பசியாறட்டும்!''
ராதை தலையாட்டியபடி, சாப்பாடு செய்து எடுத்து வரப் புறப்பட்டாள்.
ராதை உணவுத் தட்டோடு வந்தபோது யமுனை நதியில் கணுக்காலளவு நீர்தான் இருந்தது. தானே அக்கரைக்குப் போய் முனிவருக்கு உணவு பரிமாறிவிட்டு வருவதாகச் சொல்லி நதியில் இறங்கி நடந்தாள். அவளது நடையழகைப் பார்த்து ரசித்தவாறே இக்கரையில் அமர்ந்திருந்தான் கண்ணன்.
துர்வாச மகரிஷி ஞானதிருஷ்டியால் வந்திருப்பது யார் என்று உணர்ந்துகொண்டார்.
""கண்ணக் கடவுள் மேல் அழியாப் பிரேமை கொண்ட என் தாய் ராதா மாதாவா? என்னைத் தேடித் தாங்களே வந்தீர்களா தாயே?''
""உங்களுக்குப் பசிக்கிறதென்று அவர் சொன்னார். என்னைத் தாய் என்கிறீர்கள் நீங்கள்! பசிக்கும் குழந்தைக்கு உணவு தரவேண்டியது தாயின் பொறுப்பல்லவா?''
""எனக்குப் பசிப்பதைப் பற்றி மட்டும்தானா சொன்னார்? கண்ணனுக்கும் பசிக்குமே? அதைப் பற்றிச் சொல்லவில்லையா?''
""அதையும் தான் சொன்னார். ஆனால், நீங்கள்தான் முதலில் பசியாற வேண்டும். கணவர் காத்திருக்கலாம். குழந்தை காத்திருக்கக் கூடாது!''
ராதை இலைவிரித்து வெகுபிரியமாக உணவு பரிமாறினாள். பசியின் வேகமோ உணவின் சுவையோ எது காரணமோ தெரியவில்லை. பார்க்க ஒல்லியாக இருந்த அந்த மகரிஷி, ஒரு பயில்வான் சாப்பிடுவதுபோல் வயிறாரச் சாப்பிட்டார். இந்தச் சாப்பாட்டு வேளையில் நடந்த இன்னொரு விஷயத்தை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. யமுனையில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது. வெள்ளத்தைப் பார்த்த ராதை திகைத்தாள்.
""தாயே! எப்படித் திரும்பிச் செல்வீர்கள்?'' - முனிவர் கவலையோடு வினவினார்.
""அதுதான் எனக்கும் புரியவில்லை. நான் கண்ணனாக இருந்தால் நந்தகோபர் என்னைக் கூடையில் எடுத்துச் செல்லக் கூடும். ஆதிசேஷனே வந்து மழை, மேலே படாமல் குடைபோல படம் விரித்துக் காக்கக் கூடும். ஆனால், நான் கண்ணனல்லவே? ராதை தானே? எனக்கு இந்த நதி வழிவிடுமா என்ன?''
""ஏன் விடாது? இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால், யமுனை வழிவிடட்டும் என்று சொல்லிப் பாருங்கள். வழி கிடைக்கும். நதியைக் கடந்து கண்ணனிடம் சென்றுவிடுங்கள்!''
ராதை கலகலவென சிரித்தாள்.
""என் கண்ணெதிரே நீங்கள் வயிறார உணவு உண்டிருக்கிறீர்கள். நான் தான் இலைபோட்டுப் பரிமாறியிருக்கிறேன். அப்படியிருக்க இப்படியொரு பொய்யைச் சொல்லச் சொல்கிறீர்களே?''
""தாயே! அது பொய்யா நிஜமா என்பதை முடிவு செய்ய வேண்டியது யமுனை நதியின் பாடு. நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்? சொல்லித்தான் பாருங்களேன்!''
ராதை வியப்போடு யமுனை நதியின் கரையில் நின்று, "இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனையே வழிவிடுவாயாக!'' என்று கூறினாள்.
மறுகணம் யமுனை இரண்டாகப் பிளந்து ராதை நடந்துசெல்லும் வகையில் வழிவிட்டது. ஆச்சரியத்தோடு விறுவிறுவென்று நடந்து கண்ணன் இருக்கும் கரைக்கு வந்து சேர்ந்தாள் ராதை. மறுகணம் நதி மீண்டும் இணைந்து வழிமறைத்து மூடிக்கொண்டது! ராதையின் முகம் கோபத்தால் சிவந்தது.
""என்ன ராதா? நீ அனைத்தையும் கரைகண்டவள் என்பது உண்மைதான் போலிருக்கிறது? இன்று இக்கரை அக்கரை இரண்டையும் கண்டுவிட்டாயே?''
""நான் கரைகண்ட லட்சணம் இருக்கட்டும். யமுனை இப்படி துர்வாசருக்குப் பயப்பட வேண்டாம். அவர் சபித்துவிடுவாரோ என்பதற்காக அவர் சொன்ன பொய்க்கெல்லாம் இந்த நதி துணைபோகிறது''.
கண்ணன் நகைத்தவாறே கேட்டான்:
""அப்படி என்ன பொய்க்குத் துணைநின்றது இந்த நதி?''
""இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனை வழிவிடட்டும் என்று சொல்லச் சொன்னார், என் சாப்பாட்டை வயிறாரச் சாப்பிட்ட உங்கள் பக்தர். அவர் சொன்னதைச் சொன்னேன். இந்தப் பாழும் நதி அந்தப் பொய்க்கு உடன்பட்டு வழிவிட்டிருக்கிறது. இந்த நதியை என்ன செய்தால் தகும்?''
""வா! உண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நதியை மலர்தூவி வழிபடுவோம்!''
""நீங்களுமா அதை உண்மை என்கிறீர்கள்? அப்படியானால் என் கண்ணால் பார்த்தது பொய்யா?''
""கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம். தீர விசாரிப்பதுதான் மெய். துர்வாசர் உபவாசமிருந்தார் என்பது சத்தியம் தான்! நதிகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கும்''.
""அது எப்படிச் சத்தியமாகும்?'' ராதை வியப்போடுவிசாரித்தாள்.
கண்ணன் சொல்லலானான்:
""அன்பே ராதா! எனக்குப் பசிக்கிறது என்றேன். ஆனால், ஒரு தட்டு உணவே போதும் என்றேன். நீ துர்வாசருக்கு உணவு படைத்தாய். அந்த முனிவர், தன் இதயத்தின் உள்ளிருக்கும் எனக்கு நைவேத்தியம் செய்வதான பாவனையுடன் உணவு
முழுவதையும் உண்டார். அதனால் தான் நான் உண்ணும் அளவு அதிக உணவை அந்த ஒல்லியான முனிவரால் உண்ண முடிந்தது. அவர் உண்ட உணவின் பலம் என் உடலில் கூடிவிட்டது. என் பக்தர்களின் பக்தியால் தான் எப்போதும் எனக்கு பலம் கூடுகிறது. இனி நீ வற்புறுத்தினாலும் கூட என்னால் சாப்பிட முடியாது. வயிறு நிறைந்திருக்கிறது. இந்த ரகசியத்தை என் ராதை
அறியவில்லை. ஆனால் யமுனை அறிவாள். அதனால் தான் அவள் விலகி வழிவிட்டாள்!''
கண்ணன் சொன்னதை, ராதை வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள்.
""கண்ணே ராதா! எந்த மனிதன் தான் செய்யும் எந்தச் செயலையும் தன் உள்ளிருக்கும் இறைவனுக்கு சமர்ப்பணம் என நினைத்துச் செய்கிறானோ அவனை எந்தத் துன்பமும் பாதிப்பதில்லை. ஏனெனில் அவனுக்கு நேரும் துன்பத்தையெல்லாம் அவன் இதயத்தின் உள்ளிருக்கும் இறைவன் தாங்கிக் கொண்டு விடுகிறான்!''
ராதை ஒரு பேருண்மையைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் மலர்ந்து சிரித்தாள்.
""ஆனால் ராதா! நான் எப்போதும் சூடாக எதையும் சாப்பிடுவதில்லை!''என்றான் கண்ணன்.
""ஏன்?'' என்று கேட்டாள் ராதை.
""நீ என் உள்ளத்தில் இருக்கிறாய். உனக்குச் சூடு பொறுக்காது!'' என்றான் கண்ணன். ராதை கலகலவென மலர்ந்து சிரித்ததைக் கேட்டு அக்கரையில் இருந்த துர்வாசரின் மனம் மகிழ்ந்தது

ஆசை யாரை விட்டது?

புலிப்பால் கொண்டு வந்தால் தான் தலைவலி குணமாகும் என ஐயப்பனின் அம்மா சொன்னாளே! அதேபோல, ஒரு மகாராஜாவுக்கு வயிற்றுவலி குணமாக கரடிப்பால் வேண்டுமென சொல்லிவிட்டார் வைத்தியர். கரடியிடம் பால் கறப்பதென்றால் சும்மாவா! லட்சம் பொற்காசு தரப்படும் என முரசறையப்பட்டது.
அவ்வூரிலுள்ள நான்கு இளைஞர்கள், ""நாங்கள் போகிறோம்,'' எனகாட்டுக்குச் சென்றனர். ஒரு கரடியை லாவகமாகப் பிடித்தும் விட்டனர்.
கரடிக்கு பயம். ""வேண்டுமளவு பால் கறந்து விட்டு, நம்மை அடித்தே கொன்று விடுவார்கள்.
இவர்களிடம் இருந்து தப்பித்தாக வேண்டுமென, அந்த இளைஞர்களிடம், ""லட்சம் தங்கக்காசை பிரித்தால் ஆளுக்கு 25 ஆயிரம் தான் வரும்.
இதெல்லாம் என்ன ஜுஜுபி...என்னுடன் வாருங்கள். தங்கச்சுரங்கத்தையே காட்டுகிறேன். வேண்டுமளவு அள்ளிச்செல்லுங்கள்,''
என்றது. ஆசை யாரை விட்டது?
நம்ம ஆ(ø)சாமிகள் கரடியின் பின்னால் சென்றனர். அது அவர்களை ஒரு பள்ளத்தில் இறங்கச் சொன்னது. ""இதற்குள் போங்க புதையல் இருக்குது<,'' என்றது. இளைஞர்கள் உள்ளே இறங்கியதும், ஒரு குகை போல் தென்பட்டது.
இவர்களின் சப்தம் கேட்டு உள்ளே படுத்திருந்த சிங்கம், புலியெல்லாம் பாய்ந்து வந்தன. நாலுபேரும் அவற்றுக்கு இரையாகி விட்டனர்.
இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டா இப்படித்தான்!

தர்மரின் பெருமை


ஆணுரிமை, பெண்ணுரிமை என்ற போர்வையில், உலகத்தில் ஒழுக்கம் சரிந்து கொண்டிருக்கிறது. காதலில் சிக்கி தன்னையே இழக்கும் பெண்கள் பலர். காதலிகளால் பணம், அழகுக்காக கைவிடப்படும் ஆண்களும் இல்லாமல் இல்லை. இப்படி
ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்தால் நிலைமை என்னாகும் என்பதற்கு தர்மரின் இறுதிக்காலத்தில் நடந்த சம்பவம் உதாரணம்.
பாரதப்போருக்குப் பின் சிலகாலம் ஆட்சி செய்த தர்மர், தன் தம்பிகளிடம், ""தம்பியரே! காலத்தை வென்றவர் எவருமில்லை. கலியுகம் வந்துவிட்டது. ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைப்பவர்கள் அதிகரிப்பார்கள். இனியும், இந்த உலகில் இருக்க வேண்டாம்.
அரசாங்கத்தை அபிமன்யுவின் பேரன் பரீட்சித்திடம் ஒப்படைத்து விட்டு, நாம் திரவுபதியுடன் காடு செல்வோம். அங்கு சென்று தவவாழ்வு வாழ்ந்து இறைவனுடன் ஐக்கியமாவோம்,'' என்றார். எல்லாரும் சம்மதித்தனர்.
மக்களிடம் பிரியாவிடை பெற்று அவர்கள் காட்டுக்குப் புறப்பட்டனர். அவர்கள் பின்னால் ஒரு நாய் மட்டும் சென்றது. செல்லும் வழியில் திரவுபதி மயங்கி விழுந்தாள். இதைக்கண்ட பீமன் தர்மரிடம், ""அண்ணா! யோக வாழ்வைத் தேடி செல்கிறோமே! இந்த சமயத்தில் திரவுபதி விழுந்துவிட்டாளே! என்ன காரணம்?'' என்றான்.
""அவள் அர்ஜுனன் மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தாள். அவனைப் பிரியப்போகிறோமே என நினைத்தாள், மயங்கிவிட்டாள்,'' என்றார்.
சற்றுநேரத்தில் சகாதேவன் விழுந்தான். ""அண்ணா! இதென்ன ஆச்சரியம்! இவனுக்கென்ன ஆயிற்று?'' என்ற பீமனிடம், ""இவன் தன்னை விட உயர்ந்த கல்விமான் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தான். அதனால் சரிந்தான்,'' என்றார்.
அடுத்து, நகுலன் விழுந்தான்.
""இவன் தன்னை விட அழகன் இல்லை என்ற இறுமாப்பு கொண்டிருந்தான். அதனால் மயங்கினான்,'' என்றார் தர்மர்.
பின்பு, வில்லாதி வீரனான அர்ஜுனனே விழுந்தான்.
""பாரதப்போரில், தான் ஒருவனே தனித்து நின்று எதிரிகள் அனைவரையும் கொல்வேன் என உறுதிகூறினான். சொன்னபடி செய்யவில்லை. முடியாத ஒன்றை செய்து தருவதாகக் கூறுவது பாவம், அதனால் இறந்தான்,'"' என்றார் தர்மர்.
அடுத்து பீமன் மயங்கி விழ தர்மர் அங்கு நின்றபடியே,"" பீமா! உன்னைப் போல் பலசாலிகள் யாருமில்லை என்ற இறுமாப்பு கொண்டிருந்தாயல்லவா! அதனால் தான் இந்தக்கதி,'' என்றார்.
மயங்கி விழுந்த எல்லாரும் சில நிமிடங்களில் இறந்து விட்டனர். தர்மர் பயணத்தைத் தொடர நாய் மட்டும் பின்னால் சென்றது. அப்போது, இந்திரன் ஒரு விமானத்தில் வந்தான். தர்மரை சொர்க்கத்துக்கு அழைத்தான்.
""என் தம்பிகள், மனைவி இறந்துவிட்டனர். அவர்களின்றி என்னால் வர முடியாது,'' என தர்மர் மறுத்தார்.
""அவர்கள் ஏற்கனவே சொர்க்கம் சென்று விட்டனர். எனவே, அங்கு வருவதில் தடையில்லை,'' என்றான் இந்திரன்.
""சரி...வருகிறேன், ஆனால், நான் நாட்டை விட்டுக் கிளம்பியது என்னையே பின்தொடரும் இந்த நன்றியுள்ள ஜீவனையும் அழைத்து வருவேன். சம்மதமா?'' என்றார்.
""நாய்கள் இழிபிறவிகள். சொர்க்கம் வர தகுதியற்றவை,'' என்ற இந்திரனிடம், ""ஐயனே! அடைக்கலமாக வந்தவனைக் காப்பாற்றாமல் இருப்பது, பெண்களைக் கொல்வது, நல்லவர்களின் பொருளை அபகரிப்பது, நண்பனுக்கு தீங்கு செய்வது ஆகிய நான்கும் மிகக்கொடிய பாவங்கள். இதற்கு நிகரானது தான் நம்பி வந்தவனைக் கைவிடுவது. எனவே, நாயை விட்டு வரமாட்டேன். இதனால் சொர்க்கவாழ்வை இழக்கிறேன் என்றால், அதுபற்றி எனக்கும் கவலையும் இல்லை,'' என்றார் ஆணித்தரமாக.
அப்போது, அந்த நாய் தர்மதேவதையாக உருமாறி நின்றது.
""தர்மரே! உம் பெருமையை உலகுக்கு உணர்த்தவே உம் பின்னால் நான் வந்தேன். இழிந்தபிறவியான நாய்க்கும் நல்லது நடக்க வேண்டும் என நீர் நினைத்ததால், உனக்கு உமரான நிகரான ஒருவன் இனி விண்ணிலோ, மண்ணிலோ பிறக்கமாட்டான். எல்லாரும் இறந்தபிறகு ஆன்மா மட்டுமே சொர்க்கம் செல்லும். நீர் <உடம்புடன் சுவர்க்கம் செல்லலாம்,'' என்றது.
தர்மதேவதையை வணங்கிய தர்மர் உடலுடன் சொர்க்கம் கிளம்பினார்.

தெய்வத்தின் அருளுக்கு இணையானது

தெய்வத்தின் அருளுக்கு இணையானது

பாஞ்சாலி கண்ணனையே பக்திப் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
""என்ன என்னையே பார்க்கிறாய் திரவுபதி?'' - கண்ணன் கனிவோடு கேட்டான்.
""உன் அருள் மட்டும் உரிய நேரத்தில் கிட்டாதிருந்தால் அன்று துரியோதனன் சபையில் என் சேலை இழுக்கப்பட்ட போது, என் கதி என்னவாகியிருக்கும் என்று நினைத்தேன். உன் கருணையை எண்ணி மெய்சிலிர்த்தேன். தக்க தருணத்தில் ஓடி வந்து பக்தர்களைக் காப்பதில் உனக்கு இணை யார் உண்டு?''
""நான் ஓடி வரவில்லையே? தொலைவிலையே துவாரகையிலேயே தானே இருந்தேன்?'' - கண்ணன் நகைத்தான்.
""நீ என் அருகிலேயே தான் இருந்தாய். என் உள்ளத்தில் இருந்தாய்!''- திரவுபதி பெருமையுடன் சொன்னாள்.
""பெண்களைப் பேச்சில் வெல்லக் கடவுளால் கூட முடியாது!''
""எனக்கு ஒரு சந்தேகம்!''
""பெண்களின் தேகம் முழுவதுமே சந்தேகம்தான்! கேள்!''
""நீ ஆண்களுக்குத் தான் உபதேசிப்பாயா? பெண்களுக்கு மாட்டாயா?''
""யார் சொன்னது? எவர் கேட்டாலும் என் அறிவுரை உண்டு. ஆனால் பெண்கள் பெரும்பாலும் உபதேசத்தைக் கேட்பவர்களாக இல்லை. உபதேசம் செய்கிறவர்களாகத் தான் இருக்கிறார்கள்! ருக்மிணி, சத்யபாமா போன்றோர் "இந்தப் பெண்ணைப் பார்க்காதே, அந்தப் பெண் அருகே நிற்காதே' என்று நாள்தோறும் எனக்குச் செய்யும் உபதேசங்கள் எண்ணி மாளாது. தாய் யசோதை கூட நான் குழந்தையாக இருந்தபோது, "இங்கே நிற்காதே, அங்கே போகாதே' என்றெல்லாம் உபதேசம் செய்துகொண்டே இருப்பாள். பிறருக்கு உபதேசம் செய்யும் என் ஆற்றலே பெண்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது தான்!''
இதைக் கேட்டு திரவுபதி கலகலவென்று நகைத்தாள்.
பின் விடை தெரிந்து கொள்ளும் ஆவலோடு ஒரு கேள்வி கேட்டாள்:
""கண்ணா! என் கணவர் அர்ச்சுனர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக என்னென்னவோ அறிவுரையெல்லாம் சொல்கிறாயே? எனக்கு ஒரு கேள்வி உண்டு. அதற்கு உன் நேரடி பதில் தேவை. உன் அருளுக்கு இணையான வலிமை பெற்ற இன்னொன்று புவியில் உண்டா? அப்படியானால் அது எது?''
கண்ணன் புல்லாங்குழலைக் கையில் தட்டிக் கொண்டே மெல்லிய முறுவலுடன் தீர்மானமாகச் சொன்னான்:
""தெய்வத்தின் அருளுக்கு இணையான வலிமை படைத்தது பெரியவர்களின் ஆசி. இன்னும் சொல்லப்போனால் பெரியவர்களின்
ஆசி மொழிகளே தெய்வத்தின் வாக்கு தான். அதனால் தான் தெய்வம் போல் வாழ்ந்த பெரியவர் சொன்ன மொழிகளைத் தெவத்தின் குரல் என்கிறோம். தெய்வம் தன் ஆசியைப் பெரியவர்களின் சொற்கள் வழியே தான் வழங்குகிறது.''
வாழ்க்கை தொடர்பான ஒரு பெரிய உண்மையைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் திரவுபதி கண்ணனைக் கைகூப்பி
வணங்கினாள். தானே அந்த உண்மையால் பயனடையவும் அவள் வாழ்வில் விரைவிலேயே ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது....
பாரதப் போர் தொடங்கிச் சில நாட்கள் தான் ஆகியிருந்தன. பீஷ்ம பிதாமகர் தொடர்பான அந்தக் குறிப்பிடத்தக்க செய்தி திரவுபதியை எட்டியபோது அவள் நிலைகுலைந்து போனாள். துயரம் வரும் வேளையில் எல்லாம் அவளுக்குக் கண்ணன்
தானே கதி? "கண்ணா' எனக் கதறினாள். கண்ணன் தோன்றினான்.
""பாண்டவர்கள் மேல் உள்ள பாசத்தின் காரணமாக பீஷ்மர் தனக்கு விசுவாசமாக இல்லை என்று துரியோதனன் பீஷ்மரைக் கடுøமாகச் சாடினானாமே? நாளைக்குள் பாண்டவர்களை இல்லாமல் செய்வேன் என்று பீஷ்மர் சபதம் செய்தாராமே?''
""ஆமாம். பீஷ்மர் சபதம் செய்தார் என்றால் அதை நடத்திக் காட்டிவிடுவார். திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று பல
ஆண்டுகள் முன் சபதம் செய்தாரே? அதை நடத்திக் காட்டினார் இல்லையா?''
""என் கலக்கத்தை அதிகப்படுத்தவா உன்னை அழைத்தேன்? இந்த நிலைமையை எப்படிச் சீர் செய்வது என்று சொல்!''
""பீஷ்மரின் சபதத்தை விட வலிமையான ஒன்றின் மூலம் அதை முறியடிக்க வேண்டும்!''
""அப்படி ஏதும் உண்டா?''
""உண்டே! பெரியவர்களின் ஆசி! பீஷ்மருக்கு இணையான ஒரு பெரியவரிடம் நீ ஆசி பெற வேண்டும்!''
""அந்தப் பெரியவர் யார்? அவரிடம் எப்படி எப்போது எங்கே ஆசி பெறுவது?''
கண்ணன் திரவுபதியை அருகே அழைத்தான். அந்தச் சூட்சுமத்தைக் காதோடு ரகசியமாய்ச் சொல்லிக் கொடுத்தான். அதைக் கேட்ட திரவுபதியின் விழிகள் வியப்பால் விரிந்தன. ""அப்படியே செய்கிறேன்!'' என ஒப்புக்கொண்டாள். கண்ணன் குறும்பு கொப்பளிக்க நகைத்தவாறே சொன்னான்:
""ஆனால் ஒன்று. நான் சொன்னபடி நீ நாளை அதிகாலை அந்தப் பெரியவர் ஆற்றில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு வரும்போது அவர் பாதங்களில் விழுந்து ஆசி பெறப் போகிறாயே? அப்போது மறக்காமல் உன் முகத்தை முக்காடால் மூடிக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல. உன் கால்களில் நீ கொலுசணிந்து செல்ல வேண்டும். ஆற்று மணலில் புதையாமல் நடந்து உன் கொலுசுச் சப்தம் அவர் காதில் விழுகிற மாதிரி நீ பார்த்துக்கொள்ள வேண்டும்!''
""முக்காடால் முகத்தை மூடிக்கொள்ளச் சொன்னது ஏன் எனப் புரிகிறது. கொலுசு அணிந்து அது ஓசை எழுப்புமாறு நடந்துசெல்ல வேண்டும் என்கிறாயே? அதன் பொருள்தான் புரியவில்லை''.
""நான் சொன்னபடி கொலுசணிந்து நட. விளக்கத்தை நாளை சொல்கிறேன்!''
""நீ சொன்னபடி தானே நான் எப்போதும் நடக்கிறேன்! -'' திரவுபதி கண்ணனைக் கைகூப்பி வணங்கினாள்.
மறுநாள் சூரியோதயத் தருணத்திலேயே அவள் ஆற்றங்கரைக்குச் சென்று காத்திருந்தாள். அந்தப் பெரியவர் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு மணலில் கால்கள் புதைய நடந்துவந்தார். தன் முகத்தை முக்காடால் மூடிக் கொண்ட திரவுபதி கொலுசு சப்தம் செய்ய நடந்து அவர் அருகே சென்றாள். கொலுசின் ஓசை கேட்ட அவர் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டார். அவர் பாதங்களில் விழுந்து வணங்கினாள் திரவுபதி.
""தீர்க்க சுமங்கலீ பவ! மங்களானி பவந்து. என்றும் சுமங்கலியாய் இருப்பாய்! மங்களம் உண்டாகட்டும்!''
அவர் அவளது நமஸ்காரத்தை ஏற்று மனப்பூர்வமாக ஆசி வழங்கினார். ஆனால் நமஸ்காரம் செய்வதை அவள் நிறுத்தவில்லை. ஐந்து முறை வணங்கி எழுந்தாள். ஐந்து முறையும் அவரது ஆசி தொடர்ந்தது.
""நான் தான் ஆசி கூறிவிட்டேனே? ஏன் மறுபடி மறுபடி விழுந்து வணங்குகிறாய்?'' கேட்டவாறே அவர் திரும்பிப் பார்த்தார். முக்காடை விலக்கி அவரைப் பணிந்த திரவுபதி ஏனென்றால் எனக்கு ஐந்து கணவர்கள்! ''என்று சொல்லி விடைபெற்று வேகமாய்க் கண்ணனைச் சந்திக்க நடந்தாள்.
வியப்படைந்த பீஷ்மர், தன்னிடமே ஆசிபெறும் ஏற்பாட்டைக் கண்ணன் தான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்
என்றெண்ணி மனத்திற்குள் நகைத்துக் கொண்டார். தன் ஆசி பலிக்காமல் போகாது.
கண்ணன் இருக்கும் கட்சி ஜெயிக்கும் என்று அவர் பெருமூச்சோடு எண்ணிக் கொண்டார்.
பாஞ்சாலி, ""கண்ணா! நீ சொன்னபடிச் செய்து ஆசி பெற்றுவிட்டேன்!'' எனக் கண்ணனை வணங்கி நன்றி தெரிவித்தாள்.
""பீஷ்மருக்கு இணையான பெரியவர் வேறு யார் உண்டு? அதனால் தான் பீஷ்மரிடமே ஆசிபெறச் சொன்னேன்!'' என நகைத்தான் கண்ணன்.
""அதுசரி. முக்காடால் முகத்தை மறைத்துக் கொள்ளச் சொன்னாய். நான் என்று தெரிந்தால் அவர் ஆசி வழங்க மறுக்கக் கூடும் என்பதால்! எதற்குக் கொலுசு சப்தம் கேட்குமாறு நடக்கச் சொன்னாய்?''
""அவர் பெண்கள் என்றால் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார். உன் கொலுசு சப்தம் கேட்டதுமே வந்திருப்பது பெண் என்பதால் உன் பக்கம் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டார். அதோடு நீ முகத்தை மறைத்து முக்காடும் போட்டுக் கொண்டு விட்டாய். இந்த இரு காரணங்களால் நம் எண்ணம் பலித்தது!''
""நம் எண்ணம் பலித்ததா? உன் எண்ணம் பலித்தது என்று சொல்! நீ நினைப்பது தானே நடக்கும்? பெரியவர்களது ஆசியின்
முக்கியத்துவத்தை இந்தச் சம்பவம் மூலம் உலகம் உணரட்டும்!'' என்று, தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிய கண்ணனைக் கைகூப்பித் தொழுதாள் திரவுபதி. 

Thursday, June 21, 2012

ஒருவர், தான் செய்த தவறுக்கு கடவுள் எப்படி பொறுப்பாவார்!

ஒரு ஆஸ்ரமத்தில், வேதாந்த பாடம் நடத்திக் கொண்டிருந்த குரு, ""உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் கடவுளின் அம்சம்,'' என்று போதித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பசு தோட்டத்தில் உள்ள பயிர்களைத் தின்று கொண்டிருந்தது. சிஷ்யர்களின் கவனம் பசுவின் மீது செல்லத் தொடங்கியது.
ஆத்திரமடைந்த குரு, பசுவை தடியால் பலமாக அடித்தார். அந்த இடத்திலேயே பசு இறந்து போனது. பசுவின் உரிமையாளர் குருவிடம் வந்து நஷ்ட ஈடு கேட்டார். அதற்கு குருவோ, ""பசுவும் பிரம்மம். நானும் பிரம்மம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் பிரம்மம் (கடவுள் அம்சம்). பிரம்மத்தைப் பிரம்மம் அடித்தது. பிரம்மம் பிரம்மத்திடம் சென்றுவிட்டது, அவ்வளவு தான்,'' என்று பதில் அளித்தார்.
பதிலைக் கேட்ட பசுவின் உரிமையாளர் செய்வதறியாமல், வழியில் சென்ற துறவி ஒருவரை அழைத்து குருவிடம் நியாயம் கேட்கும்படி வேண்டினார்.
துறவி குருவிடம், ""இங்கே பாடம் நடத்துவது யார்?'' என்றார்.
""நான் தான்'' என்றார் குரு.
""இந்த தோட்டம், ஆஸ்ரமம் இவற்றை எல்லாம் பராமரிப்பவர் யார்?''
அதற்கும், ""நான் தான்'' என்றார் குரு.
சந்நியாசி குருவிடம், ""இதற்கெல்லாம் பதில் "நான்' என்றால் பசுவைக் கொன்றதும் தாங்கள் தானே!'' என்றார்.
தவறை உணர்ந்த குரு, பசுவின் உரிமையாளருக்கு நஷ்டஈடு தர ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
ஒருவர், தான் செய்த தவறை, கடவுள் தான் செய்ய வைத்தார் என்று சொல்லி காரணம் கற்பிக்கக்கூடாது, புரிகிறதா! 

உணவும் உள்ளுணர்வும்

உணவும் உள்ளுணர்வும்

பாஞ்சாலியையே கனிவாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். இன்னமும் தலையை விரித்துப் போட்டவாறுதான் இருக்கிறாள் அவள்.
மகாபாரத யுத்தம் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. "பாவி துச்சாதனன் செந்நீர், பாழ்த்துரியோதனன் ஆக்கை ரத்தம் மேவி இரண்டும் கலந்த குழல் மீதினில் பூசிக் குளித்த பின் தான் தலைமுடிவேன்' என்று சபதம் செய்திருக்கிறாளே? சபதத்தை நிறைவேற்ற வேண்டியதும் கண்ணன் பொறுப்புத்தான்.
"எல்லாவற்றையும் கண்ணனிடமே விட்டுவிடுபவள் இன்று மட்டும் நான் செல்லுமிடத்திற்கு உடன்வர மறுக்கிறாளே? இவள் மனத்தை மாற்றி நான் இப்போது செல்லுமிடத்திற்குக் கட்டாயம் இவளையும் அழைத்துச் சென்றாக வேண்டும்.
அங்கே தான் இவளுடைய சந்தேகத்திற்கு விளக்கம் கிடைக்கும்'.
கண்ணனிடம் பாஞ்சாலி கேட்டாள்: ""கண்ணா! நடந்துகொண்டிருக்கிற இந்த பாரத யுத்தம் எப்போது முடியும்?''
""முடியும்போது முடியும்!''
""இது ஒரு பதிலா? பீஷ்ம பிதாமகர் மரணப் படுக்கையில் இருக்கிறார். இரு தரப்பு சேனைகளும் திகைத்து நின்றுவிட்டன. இந்தச் சூழலிலும் உன் கிண்டல் மட்டும் போகவில்லை!''
""நான் கிண்டல் செய்யவில்லை. உண்மையைத்தான் சொன்னேன். உன் கூந்தலை நீ முடியும்போது யுத்தம் முடியும் என்றேன்!''
திரவுபதி கலகலவென்று சிரித்தாள்.
""அதுதான் கேட்கிறேன். கூந்தலை நான் எப்போது முடிவது? யுத்தம் என்றைக்கு முடியும்? பீஷ்மர் ஸித்தி அடைந்துவிட்டால் துரியோதன் தரப்பு வலுவிழந்துவிடும் அல்லவா?''
""பீஷ்மருக்குப் பிறகு கர்ணன் இருக்கிறான். அர்ஜுனனுக்கு இணையான வீரன். தர்மம் அவனைக் காத்துக் கொண்டிருக்கிறது. அவனிடமிருந்து அர்ஜுனன் தப்பிக்க வேண்டும். இன்னும் நடக்க வேண்டியவை எத்தனையோ! அதெல்லாம் இருக்கட்டும்.
இப்போது நான் கூப்பிடும் இடத்திற்கு நீ ஏன் வர மறுக்கிறாய்? அதைச் சொல்!''
""எல்லாம் தெரிந்துகொண்டு ஒன்றுமேதெரியாததுபோல் பேசுவதில் வல்லவன் அல்லவா நீ? பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். தான் இறக்க நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுத்து மரணத்திற்காகக் காத்திருக்கிறார். அவரிடம் அறிவுரை பெற பாண்டவர்கள் ஐவரும் சென்றிருக்கிறார்கள். அங்கே என்னையும் வரச் சொல்கிறாய் நீ. நான் எப்படி வருவேன்?''
அப்பழுக்கற்ற முதியவர். கடும் பிரம்மச்சாரி. உன்னைப்போல் அவரும் என் தீவிர பக்தர். அவரை ஒருமுறை சென்று இறுதியாக தரிசிப்பதில் என்ன தயக்கம்?''
""துரியோதனன் அவையில் துச்சாதனன் என் துகிலை உருவ முனைந்தபோது பீஷ்மர் ஏன் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்றிருந்தார்? இந்த மாபாதகச் செயலைச் செய்யாதே என்று ஏன் அவர் உரத்துக் குரல் கொடுக்கவில்லை? அதர்மத்திற்குத் துணைபோனவர் எப்பேர்ப்பட்ட மகானாகத்தான் இருக்கட்டும். அவரிடம் அறிவுரை பெறவேண்டிய அவசியம் எனக்கில்லை. என் கணவர்களுக்கு அந்த அவசியம் இருந்து அவர்கள் போயிருக்கிறார்கள். அதை நான் தடுக்கவில்லையே?''
கண்ணன் பாஞ்சாலியை மீண்டும்பரிவுபொங்கப் பார்த்து, மெல்லச் சொல்லலானான்: ""துரியோதனன் சபையில் அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்ற கேள்வியை அவர் மரணமடைவதற்கு முன் அவரிடமே கேள். பதிலைத் தெரிந்து கொண்டால் உனக்கு விவரம் புரியும்!''
திரவுபதி யோசித்தாள். சரி... தன் கேள்வியை பீஷ்மரிடமே கேட்போம் என முடிவுசெய்தாள். கண்ணனைப் பார்த்து நகைத்தாள்: ""எப்படியும் நீ என்ன நினைக்கிறாயோ அதை நீ நடத்திக் கொண்டுவிடுவாய். சரி. நீ முன்னே நட. நான் உன்னைப் பின்பற்றுகிறேன். எப்போதும் நான் உன்னைப் பின்பற்றுபவள் தானே?''
கண்ணனும் பாஞ்சாலியும் பீஷ்மர் படுத்திருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆகாயத்தைப் பார்த்தவாறு அம்புப்படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர்,
""அர்ஜுனா! தாகமாக இருக்கிறது!'' என்றார்.
மறுகணம், ""இதோ!'' என்ற அர்ஜுனன் பூமியை நோக்கி ஓர் அம்பைச் செலுத்தினான்.
பூமியின் உள்ளிருந்து கங்கை நீர் விர்ரெனப் புறப்பட்டு வெளியே வந்து சரியாக பீஷ்மரின் தாகம் அடங்கும்வரை அவரது வாயில் கொட்டியது. பின் நின்றுவிட்டது.
கண்ணன் திரவுபதியிடம் தணிந்த குரலில் சொன்னான்: ""பாஞ்சாலி! கங்கா மாதா தானே பீஷ்மரின் தாய்? மகன் இறக்கும் தறுவாயில் அந்தத்தாய் பாசத்தில் நீராய் உருகுகிறாள் பார்!''
அந்தச் சூழல் திரவுபதியின் கோபத்தைச் சற்று மாற்றிச் சாந்தப்படுத்தியது. மரணப் படுக்கையிலிருக்கும் வயோதிகரிடம் தனக்கென்ன கோபம் என்றவாறே நெகிழ்ச்சியுடன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
பல்வேறு அறநெறிகளை பாண்டவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்த பீஷ்மர், நீர்வேட்கை தீர்ந்த புத்துயிர்ப்போடு தன் உபதேசத்தை மீண்டும் தொடரலானார். அதைச் சற்றுநேரம் கேட்ட பாஞ்சாலி, திடீரென்று அடக்கமாட்டாமல் "கிளுக்' என்று
சிரித்தாள்.
உபதேசத்தைச் சட்டென்று நிறுத்திய பீஷ்மர், ""யாரோ பெண் சிரித்த சிரிப்புச் சப்தம் கேட்கிறதே? சிரித்தவள் என் முன்னே வரட்டும்!'' என்றார்.
""நான்தான் சிரித்தேன் சுவாமி!'' என்றவாறே பீஷ்மரின் முன்வந்து தலைதாழ்த்திப் பணிந்தாள் பாஞ்சாலி.
""திரவுபதி! உன் கணவர்கள் கட்டிய மாளிகைக்கு முன்பொருமுறை முதல்தடவையாக வந்தான் துரியோதனன். அப்போது நிலம் எது நீர் எது என்று தெரியாத தரையின் வழவழப்பில் மயங்கித் திகைத்தான். நிலமிருக்கும் இடத்தில் ஆடையைத் தூக்கியவாறு நடந்தான். நீரிருக்கும் இடத்தில் நிலமென நினைத்து தொப்பென்று விழுந்து நனைந்தான். அப்போது சிரித்தாய் நீ. அதனால் தானே, உன்மேல் கொண்ட வெஞ்சினம் காரணமாக பாரதப் போர் மூண்டது? அதுசரி. இப்போது ஏன் சிரித்தாய்?''
""சுவாமி! அப்போது நான் சிரித்தது அறியாமையினால். ஒரு குழந்தை விழுந்தால் கூட அதன் தாய் மலர்ந்து சிரிப்பதுண்டு. அது சூழலால் உருவான சிரிப்பே தவிர, விழுந்தவரைக் காயப்படுத்தும் நோக்கம் அதில் இல்லை. தடுக்கி விழுந்தவரைக் கண்டு நகைப்பது எளிய மனித இயல்பு. அந்தச் சிரிப்புக்குத்தான் இத்தனை உயிர்ப்பலி என்றால் அது ஏற்கத்தக்கதல்ல. துரியோதனனுக்கு பாண்டவர்கள் மேல் உள்ள கோபம் என் திருமணத்திற்கும் முற்பட்டது. போகட்டும். இப்போது நான் சிரித்தது உங்களைப்
பார்த்துத் தான்!''
""என்ன காரணம் தேவி? அம்புப் படுக்கையிலிருந்து நான் ஒன்றும் தடுக்கி விழவில்லையே?''
""முன்னொருமுறை வாழ்க்கையில் நீங்கள் தடுக்கி விழுந்துவிட்டீர்களே, அதை நினைத்துச் சிரித்தேன்!''
""நான் தீவிரமான பிரம்மச்சரிய விரதம் காத்தவன்!''
""நான் உங்கள் பிரம்மச்சரிய விரதத்தில் நீங்கள் தடுக்கி விழுந்துவிட்டதாகச் சொல்லவில்லை சுவாமி! உங்கள் நல்லொழுக்கத்தை உலகே அறியும். உங்கள் ஐம்புலன்களில் ஒருபுலன் இப்போது அபாரமாகப் பணியாற்றுகிறது. ஆனால் முன்னொருமுறை தேவைப்பட்ட நேரத்தில் அது பணியாற்ற மறந்துவிட்டது. அதை நினைத்துச் சிரித்தேன்!''
""புரியும்படிச் சொல்! இப்போது பாண்டவர்களுக்கு எல்லா தர்மங்களையும் போதிக்கும் உங்கள் ஐம்புலன்களில் ஒன்றான வாய், கவுரவர் சபையில் துச்சாதனன் என் துகிலை உரிய முற்பட்டபோது பேச்சிழந்து போயிற்றே, என்ன காரணம்? இன்று தர்மம் பேசும் நீங்கள் அன்று ஏன் அதர்மத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை?''
பஞ்சபாண்டவர்கள் அந்தக் கேள்வியின் உக்கிரம் தாங்காமல் மவுனம் காத்தார்கள். கண்ணன் மனத்திற்குள் நகைத்தவாறு பீஷ்மரின் பதிலுக்காகக் காதைத்தீட்டிக் காத்திருந்தான். உலகம் அறியவேண்டிய ஓர் உண்மையை அல்லவா பீஷ்மர் சொல்லப்போகிறார்?
பீஷ்மர் தொண்டையைச் செருமிக்கொண்டு பேசலானார்: ""உன் கேள்வியில் உள்ள நியாயம் புரிகிறது பாஞ்சாலி! ஆனால், மனம் உடலின் கைதி. உடலோ சூழ்நிலையின் கைதி. நான் அன்று துரியோதனனுக்கு விசுவாசமாக இருந்தேன். அவன் அளித்த உணவைச் சாப்பிட்டு வாழ்ந்தேன். கெட்டவர்கள் வழங்கும் உணவை ஏற்றால் உடலில் கெட்ட சத்துத்தான் சேரும். அதனால் மனத்தில் கெட்ட புத்தி தான் வரும். அதனால் தான், அவன் உணவை உண்ட காலத்தில் அதர்மத்தை எதிர்க்கவேண்டும் என்ற வேகம் எனக்கு வராமல் போயிற்று. என் தர்ம சிந்தனை மழுங்கியிருந்தது''.
""இப்போது மட்டும் தர்மசிந்தனை திடீரென்று எப்படி மேலோங்கியது சுவாமி? நீங்கள் இன்னும் அவன் அணியில் தானே இருக்கிறீர்கள்?'' பாஞ்சாலி விடாமல் கேட்டாள்.
பீஷ்மர் சொல்லலானார்: ""என் உடலைப் பார்! உன் கணவன் அர்ஜுனன் விட்ட அம்புகள் என் மேனி முழுவதையும் காயப்படுத்தியிருக்கின்றன.
துரியோதனன் அளித்த உணவால் என் உடலில் ஊறிய கெட்ட ரத்தம் முழுவதையும் அந்த அம்புகள் நீக்கிவிட்டன. இப்போது புது ரத்தம் ஊறியுள்ளது. அதனால் தான் என் இயல்பான தர்ம சிந்தனை இப்போது எனக்குத் தோன்றியுள்ளது. இதுவே உன் கணவர் ஐவருக்கும் நான் அறநெறியைச் சொல்லக் காரணம்''.
பாஞ்சாலி நெகிழ்ச்சியுடன், ""தீயவர் அளிக்கும் உணவை ஏற்கலாகாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன் சுவாமி. நான் பேசியதில் தவறிருந்தால் மன்னியுங்கள்,'' என்றவாறு பீஷ்மரைப் பணிந்தாள்.
""நீ பாக்கியசாலி. கண்ணன் உனக்குத் துணையிருக்கிறான். கண்ணனைத் துணையாகக் கொண்டவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது!'' என்ற பீஷ்மர், திரவுபதி அருகே நின்ற கண்ணனைக் கைகூப்பித் தொழுதார். பின்னர் அவரது வலக்கரம் உயர்ந்து திரவுபதியை ஆசிர்வதித்தது.

பழசை எப்பவுமே மறக்கக்கூடாது..

கொம்பன் மாடு மேய்க்கும் தொழில் செய்தான். அதற்கு கூலியாக அவனுக்கு தினமும் சாப்பாடு கொடுப்பார் எஜமான்.
ஒருசமயம் மாடு மேய்க்கப் போன போது, ஓரிடத்தை கையில் இருந்த இரும்புக்கம்பியால் நோண்டிக் கொண்டிருந்தான். சிறிது ஆழத்திலேயே "டங்' என்று சத்தம் வர, உள்ளே பார்த்தான்.
ஒரு தகரப்பெட்டி தெரிந்தது.
அதை வெளியே எடுத்துப் பார்த்தால் லட்சம் ரூபாய்க்கு குறையாமல் பணம் இருந்தது.
""இது வெளியே தெரிந்தால் போலீஸ் பிடித்து விடும். அல்லது <உடமையாளன் என சொல்லிக்கொண்டு யாராவது பிடுங்கிக் கொள்வார்கள். கொம்பன் பணப்பெட்டியை வேறு இடத்தில் மறைத்து விட்டான். தினமும் அதை திறந்து பார்த்துக் கொள்வான்.
அன்று மாலை மாடுகளை விட்டதும், ""ஏலே கொம்பா! தட்டை எடுத்துட்டு வா! சாப்பாடு வாங்கிக்கோ,'' என்றார் எஜமான்.
""எஜமான்! இனிமேல் என்னை "ஏலே'ன்னு சொல்லக்கூடாது. கொம்பா சாப்பாடு வாங்கிக்கோன்னு சொல்லணும், தெரியுதா?'' என்றான்.
""அவரும் சரியப்பா! அப்படியே சொல்கிறேன்,'' என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.
மறுநாள் "கொம்பா வா'' என அவர் அழைக்க, ""இனிமேல் என்னை நீங்க வாங்க போங்கன்னு தான் சொல்லணும்,'' என்றான்.
இவனது போக்கு எஜமானுக்கு புரியவில்லை. மறுநாள், அவன் அறியாமல் மாடு மேய்த்த இடத்துக்குப் போனார். அவன் பணப்பெட்டியை அடிக்கடி திறந்து பார்ப்பதைக் கண்டார். அன்றிரவே பெட்டியை லவட்டிக்கொண்டு வந்து விட்டார்.
மறுநாள் கொம்பன் பெட்டியைக் காணாமல் தவித்தான். அன்றிரவு, ""கொம்பா வாங்க! சாப்பிடுங்க!'' என்ற எஜமானனிடம், ""பரவாயில்லே! ஏலே இங்கே வாலேன்னே கூப்பிடுங்க,'' என்றான் கொம்பன்.
பழசை எப்பவுமே மறக்கக்கூடாது...புரியுதா

இப்படியும் பாடம் கற்பிக்கலாம்

ஒரு தாசில்தார் ரொம்ப ரொம்ப சிடுசிடுப்பானவர். தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை கடுமையாகத் திட்டுவார். தாசில்தாரின் தந்தையும் உதவி கலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மகன் மீதுள்ள பாசத்தில் சம்பாதித்த சொத்து, பணத்தைக் கொடுத்து விட்டு, அவர் போடும் சாப்பாட்டை சாப்பிட்டு வந்தார். மருமகள் மாமனாரை மதிக்கவே மாட்டாள்.
இந்த நிலையில், சில ஊழியர்கள் அவரைச் சந்தித்து, ""உங்கள் மகன் வார்த்தைகளால் எங்களைப் புண்படுத்துகிறார். அவரிடம் நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா?'' என்றனர்.
அன்று மாலை மகன் அலுவலகத்தில் இருந்து வந்ததும், ""ஏனடா! அடுத்தவங்க வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டுகிறாய்?'' எனக் கண்டித்தார்.
தாசில்தார் குதித்தார். ""எனக்கே புத்தி சொல்கிறாயா? நீயே என் வீட்டில் தண்டச்சோறு சாப்பிடுகிறாய். வெளியே போய்விடு. பிச்சை எடுத்து சாப்பிடு,'' என்று கத்திவிட்டு போய்விட்டார்.
பெரியவர் சற்றும் கலங்கவில்லை. மறுநாள் காலை தாசில்தார் ஆபீஸ் முன் <உட்கார்ந்து விட்டார்.
""ஐயா! என் மகன் இந்த ஆபீசிலே தான் தாசில்தாரா வேலை செய்றான்! என்னை பிச்சை எடுத்து சாப்பிடச் சொல்லிட்டான். இரக்கமுள்ள ஐயாமாரே! தர்மப்பிரபு! பிச்சை போடுங்க சாமி,'' என கத்திக் கொண்டிருந்தார்.
அப்போது மகன் ஜீப்பில் அலுவலகத்துக்கு வர மானம் போய்விட்டது. அப்பாவை, உடனேயே ஜீப்பில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டார். தகவல் பத்திரிகைகளுக்குப் போய் உயரதிகாரிகளின் கண்டனத்துக்கும் ஆளானார்.
இரக்கமில்லாத பிள்ளைகளுக்கு, இப்படி புத்தியில் உறைக்கிற மாதிரி பாடம் கற்பித்தால் தான், இந்த கலியுகத்தில் பெரியவர்களுக்குரிய மரியாதை கொஞ்சமாவது காப்பாற்றப்படும். 

வாயில்லா ஜீவன்களின் மீது அன்பு-ரமணர்.


ரமண மகரிஷி ஒரு மான் மீது அதீத பாசம் வைத்திருந்தார். அங்கே குரங்கு, மயில் போன்றவை இருந்தாலும் மான் மீது தனிபாசம் அவருக்கு!
திருவண்ணாமலையில்உள்ள ரமணாஸ்ரமத்தில், அந்த மான் எப்போதும் அவருடனேயே இருக்கும். அதற்கு "வள்ளி' என பெயர் சூட்டியிருந்தார். அதற்கு உணவூட்டுவது, அன்புடன் தடவிக்கொடுப்பது எல்லாமே அவர் தான். வெளியில் போனால் கூட, ""போயிட்டு வரட்டுமா! சமர்த்தாக இரு!'' என்று சொல்லிவிட்டு தான் போவார்.
ஆஸ்ரமத்தில் இருந்தவர்கள் எல்லாம், ""ஆஹா..நாம் இந்த மானாய் பிறந்திருக்கக் கூடாதா! அவரது அன்புக்கரங்களால் தினமும் வருடுகிறாரே! அத்தகைய ஸ்பரிசத்தைப் பெறுவதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்கிறது இந்த மான்! இந்த ஸ்பரிசம் நமக்கு கிடைக்கவில்லையே,'' என ஏங்கியவர்கள் உண்டு.
அவர் என்ன கட்டளையிட்டாலும் அப்படியே கேட்கும் அந்தமான். அவர் வெளியே சென்றால், ஏக்கத்துடன் அவரைப் பார்க்கும். ஆனால், எல்லாருக்கும் முடிவு என்ற ஒன்று உண்டல்லவா! அந்தமானுக்கு ஒரு "கல்' ரூபத்தில் முடிவு வந்தது.
யாரோ ஒருவர் அதன் மீது கல்லை வீசி எறிந்து விட்டார். மானுக்கு கடுமையான காயம். டாக்டர்களை வரவழைத்தார் ரமணர்.
அவர்கள் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போனது. கடைசியில், அவரைக் கண்கொட்டாமல் தரிசனம் செய்தபடியே அது உயிரை விட்டது.
ரமணர் அதை புதைக்க ஏற்பாடு செய்தார். புதைக்கப்பட்ட இடத்தில் தன் அன்புமானுக்கு சமாதியும் கட்டினார்.
பக்தர்களின் அன்புக்கு மட்டுமல்ல! வாயில்லா ஜீவன்களின் அன்புக்கும் அடிமைப்பட்டிருந்தார் ரமணர்.

சமயோசித புத்தி


சமயோசித புத்தி இல்லாவிட்டால், வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது என்கிறாள் ஒரு மகாராணி. அவளது கதையைக் கேட்போமா!
கலிங்கநாட்டை சிம்ம மகாராஜா ஆண்டு வந்தான். அவனது மனைவி திலகவதி. ராஜா திறமைசாலி என்றாலும், திலகவதியின் அளவு புத்திசாலியல்ல. ஆனாலும், மனைவியே மந்திரி போல் அமைந்து விட்டதால், இக்கட்டான சூழ்நிலைகளில் அவள் சொல்லும் யோசனைகளைச் செயல்படுத்தி நிர்வாகத்தை சீராக நடத்தினான் சிம்மராஜா.
ஒருமுறை, அவனது நாட்டிற்கு ஒரு பூதம் வந்தது. மக்களை தாறுமாறாகப் பிடித்து தின்ன ஆரம்பித்தது.
மக்கள் ராஜாவிடம் முறையிட்டனர். அவன் சில வீரர்களை அனுப்பி, அதைப் பிடித்துக் கட்ட உத்தரவிட்டான். ஆனால், பூதம் அந்த வீரர்களை அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களுடன் விழுங்கி விட்டது.
சிம்மன் நூற்றுக்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்களை அனுப்பி, அதை ஒரே அமுக்காகக் கட்டித் தூக்கி வர உத்தரவிட்டான்.
பூதமோ, அவர்களை ஒரே வாயில் போட்டு மென்று விட்டது.
"ஆஹா...இது அமானுஷ்ய சக்தி கொண்டதாக இருக்கும் போல் தெரிகிறதே! என்ன ஆனாலும், சரி...நானே நேரில் சென்று பூதத்தைப் பிடித்து வருகிறேன்' என சிம்மன் கிளம்பி விட்டான்.
பூதத்தைப் பிடிக்க முயன்றான். அது அவன் பிடியில் அகப்படவில்லை.
""ராஜா! பலநூறு வீரர்களை விழுங்கிய நான், உன் ஒருவனை விழுங்குவதில் தடையேதும் இராது என்பதை நீ அறிவாய். இருப்பினும், நான் நல்லவர்க்கு நல்லவன். மக்களுக்கு கஷ்டம் என்றதும், நீயே நேரில் வந்து அவர்களின் குறைதீர்க்க முயல்கிறாய். இந்த எண்ணத்தைப் பாராட்டுகிறேன். மேலும், உன் நாட்டில் மக்கள் குறைந்த வரி செலுத்தி நிறைவாக வாழுகிறார்கள். இதனாலும் உனக்கு நான் நன்மை செய்ய விரும்புகிறேன். நீ எனக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை முடித்தவுடனே அடுத்த வேலையைத் தந்து விட வேண்டும். இல்லாவிட்டால், உன்னை விழுங்கி விடுவேன்,'' என்றது.
ராஜாவும் பூதத்துடன் அரண்மனைக்கு வந்தான்.
""பூதமே! மக்கள் வசிக்க பத்து லட்சம் மாளிகைகள் வேண்டும், உடனே கட்டு,'' என்றான்.
பத்தாவது நிமிடத்தில் பூதம் அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தது. அவனது நாடெங்கும் மாளிகைகள் ஜொலித்தன. ""உம் அடுத்த வேலை,'' என்றது. ஆச்சரியப்பட்ட மன்னன், ""என் நாட்டிலுள்ள கிணறு, குளம், ஆறுகளைத் தூரெடுத்து வா,'' என்றான். அப்போது ராணி திலகவதி வந்தாள்.
அவளிடம் தன் இக்கட்டான நிலையைச் சொன்னான் சிம்மன்.
""இதற்காகவா கலங்குகிறீர்கள்! அந்த பூதத்தை என்னிடம் அனுப்பி வையுங்கள், நான் பார்த்துக் கொள்ளுகிறேன்,'' என்றாள்.
மன்னன் எதிர்பார்த்தது போல. ஐந்தே நிமிடங்களில் தூரெடுத்து திரும்பிய பூதத்தை, ""மகாராணியிடம் ஏதோ வேலை இருக்கிறதாம்! அங்கே போய் கேள்,'' என்றான்.
பூதம் ராணியின் முன்னால் வந்து, ""வேலை கொடு, இல்லாவிட்டால் உன்னை விழுங்கி விடுவேன்,'' என பயமுறுத்தியது.
""கொஞ்சம் பொறு,'' என்றவள், தன் கூந்தலில் இருந்து ஒரு முடியை எடுத்தாள்.
""பூதமே! இதை 108 ஆக கிழிக்க வேண்டும். கிழித்த ஒவ்வொரு துண்டின் மீதும் ஒவ்வொரு கோட்டை கட்டு,'' என்றாள்.
முடியை வாங்கிய பூதம் ஒரு வாரம் கழித்து சிரமப்பட்டு அதை எப்படியோ இரண்டாகக் கிழித்தது. அடுத்து அதனால் அதை அசைக்கக்கூடமுடியவில்லை. ராணியிடம் மன்னிப்பு கேட்டது.
""பூதமே! நான் கூப்பிடுகிற நேரத்தில் வந்து, கொடுக்கிற வேலைகளைச் செய்தால் போதும், பயமுறுத்தல் எல்லாம் கூடாது, புரிகிறதா? போ இங்கிருந்து..'' என அதட்டினாள்.
பூதம் தலை குனிந்தபடியே வெளியேறியது.
இக்கட்டான சூழ்நிலைகளில், சமயோசிதம் ரொம்ப அவசியம்...புரிகிறதா!

பணிவுள்ளவர்களே உலகில் அதிக நாள் வாழ முடியும்.


கடலரசனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ""எனக்குள் கலக்கும் இந்த நதிகள் பல பெரிய மரங்களைக் கூட அடித்துக் கொண்டு வந்து, எனக்கு இரையாக்குகின்றன. ஆனால், நான் தர்ப்பணம் முதலானவை செய்ய தர்ப்பை புல்லைக் கொண்டு வருவதில்லை. ஏன்... பெயருக்கு ஒரு நாணல், இன்னும் கால்நடைகள் தின்னும் புல்லைக் கூட கொண்டு வருவதில்லை. ஏனோ...'' என்பது தான் அந்த சந்தேகம்.
ஒருநாள், தன் சந்தேகத்தை அவன் கங்காதேவியிடம் கேட்டான்.
அதற்கு அவள், ""உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் மாமன்னரே! எங்கள் நீரை உறிஞ்சி, எங்களையே நம்பி உணவு உண்ணுகின்ற மரங்கள், எங்களைக் கண்டால் தலை சாய்த்து வணக்கம் தெரிவிப்பதில்லை. ஆனால், தர்ப்பை, நாணல் முதலான புற்களோ நாங்கள் ஆக்ரோஷமாக வந்தாலும், அமைதியாக நடந்தாலும் எங்களுக்குள் தங்கள் தலையைப் புதைத்து வணக்கம் தெரிவிக்கின்றன.
பணிவுள்ளவர்களே உலகில் அதிக நாள் வாழ முடியும்.
அவர்கள் அமிர்தம் குடித்த தேவர்களுக்கு ஒப்பானவர்கள். இப்போது புரிகிறதா, காரணம் என்னவென்று..'' என்றது.
கடலரசன், இந்த அரிய ரகசியத்தை அறிந்து கங்கா மாதாவைவணங்கிச் சென்றான்.
 
   

ரமணர்


பேசாமலே மாணிக்கவாசகருக்கு முக்தி நிலைக்கான பாதை காட்டிய தெய்வம் யார் என்றால் "சிவனின் தட்சிணாமூர்த்தி கோலம்' என்போம். அந்த தட்சிணாமூர்த்தியே நம் மத்தியில் சமீபகாலத்தில் வாழ்ந்து விட்டும் சென்றிருக்கிறார். இதோ! அந்த அதிசயம்!
திருவண்ணாமலையைச் சேர்ந்த ராகாவாச்சாரியார் என்ற பக்தர், ஆஸ்ரமத்தில் இருந்த ரமணரைப் பார்க்க வந்தார். அவர் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்.
பகவத்கீதை அவரது கையில் இருக்கும். யாருமில்லாத போது, ரமணரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.
அவர் ரமணரை நெருங்கவும், ஏற்கனவே அவருடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் புறப்பட்டு விட்டனர்.
""ஆஹா...எதிர்பார்த்து வந்த தனிமைச்சூழல் கிடைத்து விட்டதே!'' என்று ஆவலுடன் அவர் அருகே நெருங்கியவுடன், ""நீங்கள் பிரம்மசமாஜத்தைச் சேர்ந்தவர் என்பது உங்கள் கையிலுள்ள கீதையைப் பார்த்தாலே புரிகிறது. கேளுங்கள், உங்களுக்கு என்ன வேண்டும்?''என்றார்.
""உங்களது உண்மையான வடிவத்தை தரிசிக்க எனக்கு ஆசை, காட்டுவீர்களா?'' என்ற ராகவாச்சாரியார்
கண்முன் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ரமணரின் பின்னால் தோன்றிய ஒளிவட்டத்தில், தட்சிணாமூர்த்தி வடிவம் தெரிந்தது. மவுனமாக இருக்க வேண்டும் என்பதை அதிகமாக வலியுறுத்தியவர் ரமணர்.
ராகவாச்சாரியாருக்கு இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவானது. தட்சிணாமூர்த்தியும் அமைதியே வடிவாக சின்முத்திரை காட்டி, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடுத்து, தன்னைச் சரணடைவோருக்கு முக்திநிலை அருள்கிறார். இதையே ரமணர்
தன்னிடம் பேசாமல் பேசிவிட்டதாக உணர்ந்தார்.

சுப்ரபாதம் என்றால் என்ன?'

சுப்ரபாதம் என்றால் என்ன?'' என்று பாரதியாரிடம் கேட்டார் அவரது நண்பரான கிருஷ்ணன் என்பவரின் தாய்.
""சுப்ரபாதமா? அப்படியென்றால் என்ன?'' ஒன்றும் தெரியாதவர் போல் பதிலளித்தார் மீசைக்காரர்.
அந்தத்தாய் மகனை வீட்டுக்குள் அழைத்தார்.
""ஏனடா! இந்த மீசைக்காரரை பெரிய கவிஞன் என்றாய். இந்த ஆளுக்கு சுப்ரபாதம் என்றால் என்ன என்று கூட தெரியலையே,'' அம்மா சலித்துக் கொண்டார்.
நண்பர் கிருஷ்ணனும், பாரதியும் வெளியே கிளம்பினர்.
செல்லும் வழியில், ""கிருஷ்ணா! அம்மா கேட்டார்களே! சுப்ரபாதம், அப்படியானால் என்ன?'' என்றார்.
""அதுவா! சமஸ்கிருதத்தில் சுப்ரபாதம். தமிழில் திருப்பள்ளியெழுச்சி. திருப்பதியில் பெருமாளை எழுப்புவார்களே! கவுசல்யா சுப்ரஜா என்று! இங்கே மாணிக்கவாசகர் திருவெம்பாவை, ஆண்டாள் திருப்பாவை பாடுகிறார்களே அதிகாலையில்...அது தான்.''
""அப்படியா!'' பாரதியார் கிளம்பி விட்டார்.
அடுத்தநாளே ஒரு பாடல் தொகுப்புடன் வந்தார்.
நண்பரின் அம்மாவிடம் காட்டினார்.
""அம்மா! நீங்கள் கடவுளை எழுப்பும் பாடல்களைப் பற்றி சொன்னீர்கள். இதோ! நான் பாரதஅம்மா (பாரதத்தாய்) குறித்தே
சுப்ரபாதம் பாடியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்,'' என்றார்.
அருமையான அந்தத் தொகுப்பை படித்த அம்மையார், இந்த மீசைக்காரர் நம்மிடம் ஒன்றும் தெரியாதது போல நடித்து விட்டு, வெளுத்துக் கட்டியிருக்கிறாரே என மனதுக்குள் புகழ்ந்தார்

நம்பினார் கெடுவதில்லை


ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சமயம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உண்டானது. நீர்த்தேக்கங்கள் அனைத்தும் வற்றிவிட்டன. கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து போனது.
சென்னையில் இருந்து மக்கள் வெளியேறினால் தான் பிரச்னை தீரும் என்ற நிலை ஏற்பட்டது. அதிகாரிகளும் இதே யோசனையைத் தெரிவித்தனர். இந்த யோசனையை முதல்வர் ராஜாஜி ஏற்கவில்லை. அவர் வேறொரு கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, ஒரு குறிப்பிட்டநாளில் சென்னையைக் காப்பாற்றுமாறு எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்யும்படி மக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டார்கள்.
சட்டபேரவையில் ஒரு கட்சியினர் ராஜாஜி கூறியதைக் கேலி செய்தார்கள். சென்னை நகரைக் காப்பாற்ற இது தான் ராஜாஜியின் வழி என்றால், மக்களைக் காப்பாற்ற வழியே இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால், முதல்வரின் வேண்டுகோளின்படி மக்கள் அனைவரும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 24மணி நேரத்திற்குள் சென்னைநகர் முழுவதும் மேகங்கள் திரண்டன. மூன்று நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது.
நீர்த்தேக்கங்கள், ஏரி,குளங்கள் அனைத்தும் நிரம்பின. குடிநீர் பிரச்னையில் இருந்து சென்னை நகரம் தப்பியது. இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு மே மாதத்தில். அது கடுமையான கோடை காலம்.
பிரார்த்தனை யால் மழை பெய்ததாக தாங்கள் கருதவில்லை என்றும் இது ஒரு தற்செயல் நிகழ்வு என்றும் குற்றம் சாட்டிய கட்சியினர் கருத்து வெளியிட்டனர். அதற்கு ராஜாஜி, ""நீங்கள் எது வேண்டுமானாலும் கூறுங்கள். மனப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்தால் அதிசயம் நிகழும்,'' என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு அத்தாட்சி என பதிலளித்தார்.
"நம்பியவர்க்கு நடராஜன், நம்பாதவர்க்கு வெறும் ராஜன்' என்று ஒரு சுலவடை சொல்வார்கள். நம்பினார் கெடுவதில்லை என்ற வேதங்களின் கூற்றுக்கு இந்த நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம்.

மனசை ஜெயிக்க முடியாது


இந்த உலக வாழ்க்கையை உண்மை என்று நம்புவதையே, ஆன்மிகத்தில் "மாயை' என்பார்கள். வியாசர் தன் சீடர்களிடம், ""சிஷ்யர்களே! இந்த உலக வாழ்வு உண்மையென நம்பாதீர்கள். இறைவன் மட்டுமே உண்மை என நம்புங்கள். பரந்தாமனின் நாமம் சொல்லுங்கள். இவ்வுலக வாழ்வில் இருந்து விடுபடுவீர்கள். ஆனால், அது சுலபமானதல்ல. நாம் தனித்திருந்து தவம் செய்ய வேண்டும். வாருங்கள், பல இடங்களுக்கு யாத்திரை செல்வோம்,'' என்று கூறி புறப்பட்டார்.
வியாசரின் 12 சீடர்களில், ஜெயமுனி என்ற சீடன் மட்டும் வர மறுத்தான்.
""ஏன் வரமாட்டேன் என்கிறாய்?''
""நான் தான் மனதை ஏற்கனவே வென்று விட்டேனே! வெல்லாத சீடர்களை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்,''.
""அதெப்படி வென்றிருப்பாய், உனக்கு அந்தளவு பக்குவம் வரவில்லையே!''
""குருவே!நான்சொல்வதுஉண்மை... உண்மை... உண்மை. நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்,''.
சிஷ்யன் பிடிவாதமாகச் சொன்னதால், வியாசர் அவனை ஆஸ்ரமத்திலேயே விட்டுவிட்டு, மற்றவர்களை அழைத்துச் சென்றார்.
ஒருவாரம் கழிந்து ஆஸ்ரமத்துக்கு ஒரு இளநங்கை வந்தாள். அவள் அழகில் சிக்கிப்போனான் ஜெயமுனி.
""உன்னைத் திருமணம் செய்ய என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கிறேன்,'' என காதல்மொழி பேசினான்.
அவ்வளவுதான்! அப்பெண் படபடவென ஆடைகளை அவிழ்த்தாள். அங்கே வியாசர் நின்றார். அவர் தான் பெண் வேடமிட்டு வந்தார்.
""சிஷ்யா! நீ மனதை வென்ற லட்சணம் இதுதானா! வா என்னோடு,'' என அதட்டினார்.
வாய் பொத்தி அவர் பின்னாலேயே கிளம்பிவிட்டான் சீடன்.

ஒருவருக்கு என்ன கிடைக்கிற வேண்டுமென இருக்கிறதோ, அதுதான் கிடைக்கும்.


கடவுள் சந்நிதிக்குள் நுழைந்தாலே போதும், ""ஏம்ப்பா! பக்கத்து வீட்டு பரமசிவம் கோடி கோடியா வச்சிருக்கான். நான் அவ்வளவாடா உன்கிட்டே கேட்கிறேன். ஏதோ அஞ்சு லட்சம் பத்து லட்சம் கேக்கிறேன். தரமாட்டாங்கிறியே! அவன் காரிலே போறான், எனக்கு ஒரு பைக் தரக்கூடாதா!
ஏ முருகா! கண்ணைத் தொறந்து பாருடா,'' என்று கதறுபவர்கள் பலர்!
ஒருத்தன் இப்படித்தான் கடவுளைப் பாடாய் படுத்தினான். ஒருநாள், கடவுளே அவன் முன்னால் வந்து விட்டார்.
""என்னப்பா வேணும்''னார்.
""வேறென்ன கேக்கப்போறேன்! ஒரு முப்பது லட்சம், தங்க நகை, வைர வைடுரியங்கள் வேணும்''னான்.
அவர் மூன்று தேங்காயைக் கொடுத்தார். ""என்ன சொல்லி உடைக்கிறாயோ, அது இதில் இருந்து வரும்,'' என்றார்.
அவன் "முப்பது லட்சம் வரட்டும்' என்று சொல்ல வாயெடுத்த வேளையில், அவன் மனைவி வந்து ""என்னங்க! டீ போடட்டுமா!'' என்றான்.
""ஆங்...முக்கியமான வேலையா இருக்கேன்லே! உன் தலையிலே இடிவிழ'' என்றான்.
திடீரென மேகக்கூட்டம்...இடி இடித்தது.
அவன் மனைவி தலையில் விழுந்து விட்டது.
""ஐயோ இறைவா! விளையாட்டா சொன்னது வினையாப் போச்சே! அவளுக்கு உயிர் பெற்று எழட்டும்,'' என்று சொல்லியபடியே இன்னொரு தேங்காயை உடைத்தான். அவள் எழுந்தாள். ஆனால், இடி விழுந்ததில் முகம் விகாரமாகி விட்டது.
""இவளோடு எப்படி குடுத்தனம் நடத்துறது! பழைய முகம் திரும்பி வரட்டும்,'' என்றான்.
அவளுக்கு முந்தைய முகம் கிடைத்தது.
ஆக, முப்பது லட்சம் போச்சு! ஒருவருக்கு என்ன கிடைக்கிற வேண்டுமென இருக்கிறதோ, அதுதான் கிடைக்கும். கடவுள் கொடுத்திருக்கிற சவுகரியத்தோட வாழ கத்துக்கணும்....புரியுதா!

அர்ச்சுனனின் ஆணவம் முற்றிலுமாக அழிந்தது

அர்ச்சுனனின் மனம் பாரதப் போரில் வெற்றி பெற்ற மமதையில் திளைத்துக் கொண்டிருந்தது.
"கண்ணன் எனக்குத் தேரோட்டினான். தெய்வம் என் அருகே இதோ இப்போது கூட அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னை விடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யார் இருக்கமுடியும்?....'
""அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னை விட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?'' கண்ணன் கேட்டான்.
அர்ச்சுனன் திடுக்கிட்டான்.
"என் மனத்தில் ஓடுகிற எந்தச் சிறு நினைவையும் உடனே படித்து விடுகிறானே கண்ணன்!'
""நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் நினைவுகளைக் கண்டுகொள்வது சிரமமா?'' கண்ணன் கலகலவென்று நகைத்தான். கண்ணன் மேல் தன்னளவு பக்தி செலுத்துபவர் யாருமில்லை என்ற ஆணவம், தொடர்ந்து அர்ச்சுனன் மனத்தில் பால் ஏடு போல் மிதந்து கொண்டிருந்தது.
உள்ளத்தில் எழும் ஆணவ அழுக்கைப் போக்க பகவானை பக்தி செய்ய வேண்டும். பகவானை பக்தி செய்வது குறித்தே, ஆணவம் எழுமானால் அந்த அழுக்கை எப்படி அகற்றுவது? அர்ச்சுனனின் பக்திசார்ந்த கர்வத்தை அடக்க வேண்டியதுதான். கண்ணன் ஒரு முடிவு செய்தான்.
""அர்ச்சுனா! என் பக்தர்களில் சிலரை நேசிக்கிறேன். சிலரை மதிக்கிறேன். நான் மதிக்கும் பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகிலேயே வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!''
""அதற்கென்ன போகலாம். சில பக்தர்களை நேசிப்பதாகவும் சில பக்தர்களை மதிப்பதாகவும் சொன்னாயே? அந்த இரு பக்தர்களிடையே என்ன வேறுபாடு?''
""சுயநலம் சார்ந்து பிரார்த்திப்பவர்களும் என் பக்தர்கள் தான். அவர்கள் வேண்டியதை அருள்கிறேன். அவர்களை நேசிக்கிறேன். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் பக்தி செலுத்துபவர்களும் அபூர்வமாகச் சிலர் இருக்கிறார்கள். அவர்களை நேசிப்பது மட்டுமல்ல, மதிக்கவும் செய்கிறேன். சுயநலமற்ற பக்தர்களால் தான் பகவானுக்கே ஆற்றல் கூடுகிறது. நான் மதிக்கும் மூதாட்டியான பிங்கலையை நாம் சந்திப்பதில் வேறொரு நோக்கமும் இருக்கிறது''.
""என்ன நோக்கம்?''
""கர்ணன் நாகாஸ்திரத்தை உன்மேல் பிரயோகம் செய்தபோது உன் உயிரைக் கர்ணனிடமிருந்து காப்பாற்றி விட்டேன். அதுபோலவே பிங்கலையிடமிருந்தும் உன் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது''.
"பிங்கலை ஒரு மூதாட்டி. வீராதி வீரனான எனக்கு அவளிடமிருந்து எப்படி இறப்பு வர முடியும்?' அர்ச்சுனன் திகைத்தான்.
கண்ணன் நகைத்தவாறே சொல்லலானான்:
""ராமாவதாரத்தில் சபரி போல், கிருஷ்ணாவதாரத்தில் எனக்கு இந்தப் பிங்கலை. போய் அவளைச் சந்திப்போம். ஆனால், இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீ தோழியாக மாறு. ஊர்வசியின் சாபத்தால் பிருஹன்னளையாக ஓராண்டு இருந்த உனக்கு பெண்ணாகச் சற்றுநேரம் வேடம் புனைவது சிரமமாக இராது!''
சற்று நேரத்தில் அந்த அரண்மனையிலிருந்து கண்ணனும் அர்ச்சுனனும் ஆகிய இரண்டு தோழிகள் வெளியே புறப்பட்டுச் சென்றார்கள்.
பிங்கலையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள். அவள் தான் பிங்கலை என்பதைப் பார்த்தவுடனேயே புரிந்துகொண்டான் அர்ச்சுனன். கண்ணன் பணிவாகச் சொல்லலானான்:
""தாயே! நாங்கள் அடுத்த ஊர் செல்லும் பொருட்டு நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா?''
""அதற்கென்ன? உள்ளே வாருங்களேன். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்தபிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாமே?''
பிங்கலை உள்ளே நடந்தாள்.
""நாங்களும் உங்கள் பூஜையில் கலந்துகொள்ள விரும்புகிறோம்,'' என்றவாறு கண்ணன் அர்ச்சுனனை இழுத்துக்கொண்டு, பிங்கலையின் பின்னே நடந்தான்.
பூஜையறையில் ஒரு பீடத்தின் முன் நின்று பிங்கலை கிருஷ்ண கிருஷ்ண என்று ஜபிக்கலானாள். பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும் சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும் பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. விழிகளில் கண்ணீர் வழிய கிருஷ்ண நாமத்தைச் சொன்ன அவள், ""என் பூஜை இவ்வளவுதான், வாருங்கள், உண்பதற்கு ஏதாவது தருகிறேன்,'' என்றவாறே திரும்பினாள். கண்ணன் ஆவலோடு கேட்டான்:
""தாயே! கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே? கத்திகள் யாருடையவை?''
""என்னுடையவை தான். நாள்தோறும் கிருஷ்ண நாமத்தை ஜபித்து கத்திகளின் வலிமையை அதிகப்படுத்தி வருகிறேன். வாய்ப்புக் கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமைசெய்த என் விரோதிகளான மூவரைக் கொல்ல வேண்டுமே நான். அதன் பொருட்டுத்தான் இந்த பூஜை!''
""யார் அந்த விரோதிகள் தாயே?''
""என் பிரியமுள்ள கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்தவர்கள் வேறு யார்? குசேலன், பாஞ்சாலி, அர்ச்சுனன் மூவரும் தான். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. பாஞ்சாலிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றித் திரியும் அர்ச்சுனனைக் கொல்லத்தான் இந்தப் பெரிய கத்தி!''
அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அர்ச்சுனனைக் கடைக்கண்ணால் பார்த்த கிருஷ்ணன் மேலும் பிங்கலையிடம் கேட்கலானான்.
"" அப்படி இந்த மூவரும் கண்ணனுக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே?''
""பின்னே.. குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கண்ணனுக்குக் கொடுக்கலாமா? என் கண்ணன் வெண்ணெ#யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கண்ணனின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா? இந்த புத்தி கூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுப்பதாவது?''
""பாஞ்சாலி பாவம் பெண். அவள் எப்படி உங்கள் விரோதியானாள்?''
""கிருஷ்ணனிடம் புடவைகளைப் பெற்றாளே? துவாரகையில் இருக்கும் கண்ணன் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அவளுக்கு வாரி வாரிப் புடவைகளை அருளினானே? புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான் இல்லையா? புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால், புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய
கண்ணனுக்கு கை எவ்வளவு வலித்திருக்கும்? கண்ணனின் கைகளை வலிக்கச் செய்த பாஞ்சாலியைச் சும்மா விடுவேனா நான்?''
""அர்ச்சுனன் கண்ணனின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே? அவன் மேல் ஏன் விரோதம்?''
""அர்ச்சுனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கைவலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா? குதிரைகளின் லகானை இழுத்து இழுத்து கண்ணன் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும்? தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாமான்யமா? ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம்? என் கண்ணன் தானா அகப்பட்டான் அந்தக் கடினமான வேலையைச் செய்ய! என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ச்சுனன். அன்று பார்த்துக் கொள்கிறேன் அவனை!''
அர்ச்சுனன் முந்தானையால் பதட்டத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தான் கண்ணன்.
""தாயே! குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கண்ணனாகத்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன்,''.
பிங்கலை யோசித்தாள்.
""உன் குரல் கண்ணனின் புல்லாங்குழலைப் போல் இனிமையாக இருக்கிறது,'' என்றவள் பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கிக் வீசினாள்.
பின்னர், ""ஆனால் பாஞ்சாலி சுயநலம் உள்ளவள் அல்லவா? தன் மானம் காக்கத்தானே கண்ணனை வேண்டினாள்?'' என்று கேட்டாள்.
""ஆம் தாயே! பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்ததில் கண்ணன் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா? அதைக் காத்துக் கொள்ள அவள் கொலை கூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றனவே? எனவே சுயநலமே என்றாலும், மானம் காக்க வேண்டியதால் பாஞ்சாலியையும் மன்னித்து விடுங்களேன்!''
பிங்கலை சிந்தித்துவிட்டு, ""நீ சொல்வது சரிதான்,'' என்றவாறே பீடத்திலிருந்த இரண்டாவது கத்தியையும் கீழே வீசினாள்.
""ஆனால், போரில் தனக்கு வெற்றி கிட்டவேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கண்ணனைத் தேரோட்டச் செய்த அர்ச்சுனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். இந்தப் பெரிய கத்தி பீடத்திலேயே இருக்கட்டும்!'' என்றாள்.
""சுயநலம் பிடித்த அர்ச்சுனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்,'' என்றான் கண்ணன்.
அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
""எப்படியாவது காப்பாற்று! என்று அவன் பார்வை கண்ணனை இறைஞ்சியது. கண்ணன் நகைத்தவாறே பிங்கலையிடம் சொல்லலானான்: ""அர்ச்சுனனைக் கொல்வதில் வேறு ஒரு சிக்கல் இருக்கிறது தாயே? நீங்களோ கண்ணனுக்குச் சின்னத் துன்பம் வந்தால் கூடப் பதறுகிறீர்கள். எப்படியோ அர்ச்சுனன் கண்ணன் மனதைக் கவர்ந்து விட்டான். அதனால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான்? அர்ச்சுனனை நீங்கள் கொன்றுவிட்டால், உற்ற நண்பனை இழந்து கண்ணன் வருந்துவானே? கண்ணன் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா? அதனால் போனால் போகட்டும். அர்ச்சுனனின் சுயநலத்தைப் பொருட்படுத்தாது அவனையும் மன்னித்து விடுங்கள்.
பிங்கலை யோசித்துவிட்டுச் சொன்னாள்.
""நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை.
நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்தி கூட வேண்டாம். என் கண்ணன், உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால், அதுபோதும் எனக்கு.
கண்ணனுக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன்.
பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள். பெண் வேடத்திலிருந்த அர்ச்சுனன், பெண்வேடத்திலிருந்த கண்ணனையும் மூதாட்டி பிங்கலையையும் கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது

தற்பெருமை மட்டும் கூடவே கூடாது.

மனிதனுக்குள், நல்லதும் கெட்டதுமாக ஆயிரம் வகையான குணங்கள் புதைந்து கிடக்கும். ஆனால், தற்பெருமை மட்டும் கூடவே கூடாது. ஏன்?
வியாசரின் மகன் சுகபிரம்மர். "சுகம்' என்றால் "கிளி'. ஆம்..சுகபிரம்மர் கிளிமுகம் கொண்டவர். பிறந்தவுடனேயே இவருக்கு ஞானம் வந்து விட்டது. எள் முனையளவு கூட களங்கம் இல்லாத மனதுடையவராக இருந்தார்.
ஒருநாள் வியாசர், ""சுகபிரம்மா இங்கே வா,'' என்றார்.
""வருகிறேன்,'' என்று சுகபிரம்மர் மட்டுமல்ல, அங்கே நின்ற மரம், மட்டை, செடி, கொடி எல்லாம் "வருகிறேன்,'' என்றன. சுகபிரம்மருக்கு பெருமை தாங்கவில்லை.
"நான் வருகிறேன்' என்றேன். ஆனால், ஊரிலு<ள்ள மரம் மட்டைக்குள் கூட நான் இருக்கிறேன். நான் எவ்ளோ பெரிய ஆள்,'' என்று நினைத்தாரோ இல்லையோ ஞானம் போய்விட்டது.
""சுகா! தற்பெருமையால் ஞானம் இழந்தாய். நீ ஜனகரைப் பார்த்து உபதேசம் பெற்று வா,'' என்றார்.
சுகர் மிதிலாபுரிக்கு சென்றார். ராஜாங்கத்தில் இருந்தும், குடும்ப வாழ்வில் பட்டும் படாமல் இருந்த ஜனகரைச் சந்திப்பதற்காக வாயில் காப்பவனிடம் அனுமதி கேட்டார்.
""சுவாமி! இங்கேயே நில்லுங்கள்! நான் போய் அரசரிடம் அனுமதி பெற்று வருகிறேன். மன்னர் நீங்கள் யார் எனக் கேட்பார். என்ன சொல்ல வேண்டும்?'' என்றான்.
""சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருப்பதாகச் சொல்,'' என்றார்.
காவலன் உள்ளே ஓடினான்.
""மன்னா! சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் தங்களைக் காண வந்துள்ளார்கள். அனுப்பட்டுமா?'' என்றான்.
""அவர் நாலைந்து பேருடன் வந்துள்ளார். அவர்களை வெளியே விட்டுவிட்டு தனியே வரச்சொல்,'' என்றார்.
காவலனுக்கு புரியவில்லை.
""அவர் ஒருவர் தானே வந்துள்ளார். மன்னர் இப்படி சொல்கிறாரே!'' இருந்தாலும் எதிர்க்கேள்வி கேட்க முடியுமா? அவன் தலையைப் பிய்த்துக்கொண்டு, ""சுகர் அவர்களே! தாங்கள் அழைத்து வந்துள்ள நாலைந்து பேரை விட்டுவிட்டு மன்னர் தங்களை உள்ளே வரச்சொன்னார்,'' என்றான்.
""சரி...சுகப்பிரம்மம் வந்திருக்கிறது என்று சொல்,'' என்றார்.
காவலனும் மன்னனிடம் அவ்வாறே சொல்ல, ""இன்னும் ஒரே ஒரு ஆள் இருக்கிறார். அவரை விட்டுவிட்டு வரச்சொல்,'' என்றார் ஜனகர்.
அவனுக்கு இன்னும் குழப்பம்.
""சுவாமி! தங்களுடன் இருக்கும் ஒருவரை விட்டு வரச்சொல்கிறார்,''.
""சரியப்பா! சுகபிரம்மன் வந்திருக்கிறான் என்று சொல்,'' என்றதும், அவனும் அங்கு போய் சொல்ல, ""அவரை உள்ளே வரச்சொல்,'' என்றார் ஜனகர்.
ஜனகர் அவரிடம் பேசவில்லை. மொட்டையடித்த ஒருவரை அழைத்து வரச்சொன்னார். அவனை அமரவைத்து தலையில் ஒரு தட்டை வைத்தார். தட்டில் எண்ணெ#யை ஊற்றினார்.
""டேய்! உடனே புறப்பட்டு ரதவீதிகளைச் சுற்றி விட்டு மீண்டும் இங்கே வா. தட்டு கீழே விழக் கூடாது. தட்டில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தக்கூடாது. விழுந்தால், உனக்கு தலையிருக்காது,'' என்று எச்சரித்தார்.அவன் பயத்துடன் கிளம்பினான். செல்லும் வழியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கச்சேரி எல்லாம் நடந்தது. அவன் எதன் மீதும் கவனம் செலுத்தவில்லை. ஒட்டுமொத்த கருத்தும் தட்டின் மேலேயே இருந்தது. அது கீழே விழாமல் பவ்யமாக நடந்து மன்னர் முன்னால் வந்து நின்றான்.
""ஓடிப்போ,'' என்றார் ஜனகர். அவன் தலை தப்பித்த மகிழ்ச்சியில் பறந்தான். ஜனகர் அப்போதும் சுகரிடம் பேசவில்லை.
ஆனால், ஒன்றைப் புரிந்து கொண்டார்.
"ஒருவனுக்கு உயிர் போய்விடும் என்ற நிலையில், சுற்றுப்புறத்தில் என்ன நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் கருத்தை தட்டின் மீது செலுத்தினான். அதுபோல, நாமும் மனதை அடக்கி, கடவுளின் மீது மட்டும் கருத்தைச் செலுத்தினால் அகங்காரம் தானே அடங்கும். மீண்டும் ஞானம் பிறக்கும்' என்ற உபதேசத்தைப் பெற்றவராக அங்கிருந்து கிளம்பினார்.

உயர்ந்த பக்தன் யாரு

என்னை விட்டால் இந்த ஊரில் <உயர்ந்த பக்தன் யாரு! தூக்கத்தில் கூட "கிருஷ்ணா, ராமா' என்று தானே கத்துகிறேன்,'' என்ற ஆணவம் சிலரிடம் இருந்தது. அவர்கள் தான் நாரதர், பிரகலாதன், திரவுபதி, அர்ஜுனன் ஆகியோர் இந்த நான்கு பேருக்குமே பாடம் புகட்ட கிருஷ்ணர் எண்ணினார். அர்ஜுனனை தேரில் ஏற்றிக் கொண்டு, காட்டுவழியே போய்க் கொண்டிருந்தார். வழியில், ஒரு மகரிஷி கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார்.
""கண்ணா! கமண்டலம் ஏந்த வேண்டிய இந்த மகான் ஏன் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறார். உனக்கு ஏதாச்சும் தெரியுமா?''
""எனக்கென்ன தெரியும்! நானும் உன்னோடு தானே வருகிறேன். இப்போது அது தெரிந்து நமக்கென்ன ஆகப்போகிறது. போவோம் நம் வேலையைப் பார்த்துக்கொண்டு..'' என அதில் அக்கறையே இல்லாதவர் போல் நடித்தார் அந்த மாயவன்.
அர்ஜுனன் அடம் பிடிக்கவே, தேரை நிறுத்தி விட்டு அவர் அருகே சென்று வணங்கினார்கள்.
""மகரிஷி! சாந்தமூர்த்தியான தாங்கள் தாங்கள் கத்தியைத் தீட்டும் நோக்கமென்ன!'' என்றனர்.
""அதுவா! நாரதன்னு ஒருத்தன் இருக்கிறானே! அவன் என் சுவாமி தூங்கும் நேரம் கூட பார்க்காமல், அவன் இஷ்டத்துக்கு வைகுண்டத்துக்குப் போய் "நராõயணா நாராயணா' என்று கத்தி தூக்கத்துக்கு இடைஞ்சல் செய்கிறான். அவனை குத்தப் போகிறேன்,'' என்றவரிடம், ""ஓஹோ!'' என்ற கண்ணன் கிளம்பத் தயாரானார்.
அவரை மகரிஷி நிறுத்தினார்.
""இன்னும் கேள்! பிரகலாதன்னு ஒரு பொடியன். எங்க சாமி எங்கேயும் இருக்கிறார்னு சொல்லி, எல்லா இடத்திலும் அவரை நிற்க வைத்து பதறடித்தான்.
ஒரு தூணுக்குள் இருப்பதாகச் சொல்லி அவரை மூச்சு விட முடியாமல் செய்தான். இப்படி அவரைத் துன்பப்படுத்திய அவனுக்கும், இந்தக் கத்தி பதில் சொல்லப்போகிறது,'' என்றவரிடம் "கிளம்பட்டுமா!'என்றார்கண்ணன்.
""இன்னும் கேளுங்க!'' என்று அவர்களை நிறுத்திய மகரிஷி, ""திரவுபதின்னு ஒருத்தி. அவளது சேலையை துச்சாதனன் பறித்தான். ஒன்றுக்கு அஞ்சு புருஷன் உள்ள அவள் புருஷன்மாரை கூப்பிட வேண்டியது தானே! கண்ணனைக் கூப்பிட்டாள். அவன் கை வலிக்க புடவை தந்தான். அவளும் என் கையில் சிக்கினால்...,'' என்று பற்களைக் கடித்த அவரை சாந்தம் செய்ய முயன்றான்கண்ணன்.
""இன்னும் கேளுங்கப்பா!'' என்றவர், ""இன்னும் ஒருத்தன் இருக்கிறானே,'' என்றார்.
""அட...சீக்கிரம் சொல்லுங்க சாமி! உங்க பட்டியல் நீண்டுகிட்டே போகுது. எங்க வேலையைப் பார்க்க போகணும்,'' என்ற கண்ணனிடம், ""அர்ஜுனன்னு ஒரு பயல் இருக்கிறானாம். அவனை இதுவரை நான் பார்த்ததில்லை. அவன் என் பரமாத்மாவையே தேர் ஓட்ட வைத்திருக்கிறான். உலகத்துக்கே எஜமான், அந்தச சிறுவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறார். கண்ணனையே வேலைக்காரனாக்கியவனுக்கு காத்திருக்கிறது கத்திக்குத்து,'' என்று முடித்தார்.
""பார்த்தாயா அர்ஜுனா! நீ மட்டுமே என்னிடம் பக்தி கொண்டதாக எண்ணாதே! இவரைப் போன்ற ஆயிரம் பக்திமான்கள் உலகில் இருக்கிறார்கள். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு எல்லையே கிடையாது,'' என்றார் கண்ணன்.
அர்ஜுனன் தன் அறியாமையை எண்ணி தலை குனிந்தான்.

Tuesday, June 19, 2012

வயதானவர்கள் நல்லொழுக்கம், கட்டுப்பாடு கொண்டவர்களாக வாழத் தொடங்க வேண்டும். (15.6.12)

கட்டுப்பாடில்லாத காளை எல்லாரையும் முட்டித்தள்ளி விடுவது போல, காளைப்பருவத்தில் வாலிபர்களும் கட்டுப்பாடில்லாமல் இருக்கிறார்கள். காளைக்கு மூக்கணாம் கயிறு போட்டாக வேண்டும். அப்போது தான் அது தனக்கும் உபயோகமாக, மற்ற பேருக்கும் <உபயோகமாக உருவாக முடியும். நல்லபடியாக வளர்ச்சி பெறாமல், தாங்கள் வீணாகப் போய்விடக்கூடாது என்ற கவலை மட்டும் வாலிபர்களுக்கு இருந்துவிட்டால் போதும். பிரியப்பட்டு தானே மூக்கணாங்கயிறு என்னும் கட்டுப்பாட்டை போட்டுக் கொண்டு விடுவார்கள். மற்றவர்கள் போடுவதற்கும் இஷ்டப்பட்டு விடுவார்கள்.
அவர்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டை எப்படி உண்டு பண்ணுவது? பெரியவர்கள் தான் விடாமல் பிரியத்துடனும், பொறுமையுடனும் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். அப்படிச் சொல்ல வேண்டுமானால் சொல்பவர்களும் கட்டுப்பாடான வாழ்க்கை நடத்துபவர்களாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் உபதேசத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்? அதனால், வாலிபர்களை உத்தேசித்தாவது வயதானவர்கள் நல்லொழுக்கம், கட்டுப்பாடு கொண்டவர்களாக வாழத் தொடங்க வேண்டும்.

சனியைப் பாராட்டிய சிவன்,


ஒருமுறை சிவனுக்கும் சனிபிடிக்கும் வேளை வந்தது. அதனைத் தவிர்க்கும் எண்ணத்தில், ஒரு குகைக்குள் சென்று அதன் வாசலை மூடிக் கொண்டார். கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார். நீண்டநாள் கழித்து வெளியில் வந்தபோது, வாசலில் சனி நின்றார். ஏழரை ஆண்டுகள் கழிந்துவிட்டது. சனியிடம் சிவன், ""நான் உன் பிடியில் சிக்காமல் தவத்தில் இருந்துவிட்டேன் பார்த்தாயா?,'' என்று சொல்லி சிரித்தார். அதற்கு சனி,""இந்த ஏழரை ஆண்டுகளாக, ஒரு குகைக்குள் அமர வைத்து, பார்வதிதேவியிடம் இருந்து பிரித்து வைத்ததே நான் தானே,'' என்றார். இறைவன் என்றும் பாராமல் கடமையைச் சரிவரச் செய்த சனியைப் பாராட்டிய சிவன், அவருக்கும் "ஈஸ்வரன்'' என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கினார். இதனாலேயே நவக்கிரகங்களில் சனியை மட்டும் "சனீஸ்வரர்' என்கின்றனர்.

ஆசுதோஷி'

பக்தர்களின் எளிய பிரார்த்தனைக்குக் கூட மகிழ்ச்சி அடைந்து விரைவில் அருள்புரிவதால், சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற சிறப்புப் பெயருண்டு. இவர் 64 திருவிளையாடல்களைப் புரிந்த தலம் மதுரை. மற்ற தலங்களில் சிவனின் திருப்பாதம் மண்ணில் பட்டது. ஆனால், மதுரை மண்ணைச் சிவனே தன் தலையில் தாங்கி நின்றதுடன், இந்த மண்ணை அரசாட்சியும் செய்தார். வந்தியம்மை என்னும் பக்தைக்காக கூலியாளாக வந்த இவர் பிட்டுக்காக மண் சுமந்தார். இவரது தேவியான மீனாட்சி சந்நிதியில் வழிபட்ட பின்னரே, சுந்தரேஸ்வரர் என்னும் பெயர் கொண்ட இவரது சந்நிதிக்குச் செல்லும் வழக்கம் இருக்கிறது.

குருபக்தியில் சிறந்த சூர்தாசர்,

கிருஷ்ணபக்தியை வடஇந்தியாவில் பரப்பிய மகான்களில் வல்லபாச்சாரியாரும் ஒருவர். இவருடைய பக்திநெறியை, "புஷ்டிமார்க்கம்' என்பர். "புஷ்டி' என்றால் "கிருஷ்ணரின் அருள்'. இவரது சீடரான சூர்தாசர் கிருஷ்ணர் மீது 25 ஆயிரம் பாடல்கள் பாடினார். குருபக்தியில் சிறந்த சூர்தாசர், தன்னுடைய பாடல்களில் ஒன்றில் கூட குருநாதர் வல்லபாச்சாரியாரின் பெயரைக் குறிப்பிட்டதில்லை. பக்தர் ஒருவர், ""நீங்கள் உங்கள் குருவின் பெயரை ஏன் பாடல்களில் குறிப்பிடவில்லை?,'' என்று கேட்டார். அதற்கு சூர்தாசர், ""நான் என் குருவையும், கிருஷ்ணரையும் வேறுவேறாக நினைக்கவில்லை,'' என்று பதிலளித்தார்

பகவத்கீதை


வேதத்தின் சாராம்சத்தை தன்னுள் கொண்டது பகவத்கீதை. இந்நூலில் 18 அத்யாயங்கள், 729 ஸ்லோகங்கள் உள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று தத்துவ ஞானிகளாலும் உரை எழுதப்பட்ட பெருமை கொண்டது. வேதத்தை "வேதமாதா' என்று போற்றுவது போல, கீதையை "கீதா மாதா' என்பர். காந்திஜி "பகவத்கீதை தான் என் தாய்' என்று அடிக்கடி புகழ்வது வழக்கம். குரு÷க்ஷத்திர போர் நடந்தபோது, எதிரே தனது உறவினர்கள் இருந்தது கண்டு கலங்கிய அர்ஜுனன் அவர்களைக் கொல்ல மனமில்லாமல், தனது வில்லை கீழே போட்டுவிட்டு தயங்கி நின்றான். அவனுடைய தயக்கத்தை போக்கி, கடமையைச் செய்வதிலும், தர்மத்தைக் காப்பதிலும் தான் ஆனந்தம் என்ற உண்மையை கிருஷ்ணர் உபதேசித்தார். மேலும், எல்லா உயிரும் என்றேனும் ஒருநாள் மரணமடையக்கூடியதே என்ற உண்மையைப் போதித்தார். அதுவே பகவத்கீதையாக மலர்ந்தது. யுத்தம் நடந்த குரு÷க்ஷத்திரத்தில் "கீதாமந்திர்' என்னும் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

பைரவர் வழிபாடு


திங்கட்கிழமையன்று வரும் சங்கடஹரசதுர்த்தியன்று பைரவருக்கு மஞ்சள் நிற பூக்களாலான மலர்மாலை அணிவித்து ஜவ்வரிசிப்பாயசம், அன்னம் படையல் இட்டு அர்ச்சிக்க தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய்க்கிழமை ராகுவேளையில்  பைரவருக்குச் செவ்வரளி மாலை சாத்தி, துவரம்பருப்புப் பொடி சாதம், செம்மாதுளம்பழம் படையலிட்டால் சகோதரப் பகை நீங்கி ஒற்றுமை நிலைக்கும். புதன் கிழமை மாலை, பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி புனுகுபூசி பாசிப்பருப்புப் பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்புப் பாயசம் படையல் செய்ய மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவர். கிரகிப்புத்திறன் அதிகரித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர். புதன்கிழமை  பைரவருக்குச் சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி, பாசிப்பயறு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்புப் பொடி சாதம் படைக்க வியாபாரத்தில் அமோகவளர்ச்சி உண்டாகும். வெள்ளிக்கிழமை ராகுவேளையில் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து, தாமரை மலர் மாலை சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப்பொங்கல் படைத்து அர்ச்சனை செய்தால் மனதிற்குப் பிடித்த வகையிலும், தடையின்றியும் திருமணம் கைகூடும்.

ராவணனுக்கு சிவன் பத்து தலைகளை அளித்த காரணம்

ராட்சஷர்களில் ராவணன் பத்து தலைகளுடன் விளங்கினான். சிவன், விநாயகர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கூட ஐந்து தலை இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இவர்களை "பஞ்சமுக' என்ற அடைமொழி சேர்த்து அழைப்பது வழக்கம். ஆனால், தனது பக்தனான ராவணனுக்கு சிவன் பத்து தலைகளை அளித்தார். காரணம், அவன் யாகம் செய்யும் போது, சிவன் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக தனது தலையையே அறுத்து யாக குண்டத்தில் போடுவான். இவனது பக்தியை மெச்சிய சிவன், அறுந்து விழுந்த தலை மீண்டும் முளைக்கும் வகையில் பத்து தலை வரமளித்தார்.

ஸ்மிருதிசாஸ்திர நூல்களை "ஸ்மிருதி' என்பர். இதற்கு "நினைவில் வைத்துக் கொள்ளுதல்' எனப்பொருள். சாஸ்திரங்களை நினைவில் வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும். இதனால் காலம் காலமாக சாஸ்திர அறிவு தொடரும்.மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும், பொறுப்புகளும் சாஸ்திரத்தில் அடங்கும். இன்ஜினியர், டாக்டர், கம்ப்யூட்டர் வல்லுநர் என என்ன தான் கல்விஞானம் இருந்தாலும், எல்லாருக்குமே சாஸ்திர அறிவு தேவைப்படுகிறது. இன்று என்ன கிழமை, என்ன திதி, என்ன நட்சத்திரம்...இதற்கேற்ப அன்றையக் கடமைகளை எப்படி செய்து முடிப்பது என்ற சாஸ்திர ஞானம் எல்லாருக்கும் தேவைப்படுகிறது. படித்தவர்களும் நல்லநாள் பார்த்து திருமணம் செய்வது, கிரகப்பிரவேசம் செய்வது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள். பகவத்கீதையில் நம் அன்றாடக்கடமைகள் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளார் கிருஷ்ணர்.

நல்லவர்களுக்கு மட்டும் சோதனை வருவது ஏன்


சிவந்த நிறமுள்ள சிவபெருமானை நீலகண்டன் என்கிறோம். "கண்டம்' என்றால் "கழுத்து'. பாற்கடலைக் கடையும் போது, வாசுகி பாம்பு கக்கிய விஷத்தை எடுத்து உண்டார் சிவன். அது அவரது கழுத்திலேயே தட்டி நின்றது. விஷம் சாப்பிட்டால், உடல் நீலநிறமாவது இயற்கை. கழுத்துடன் நின்று போனதால், கழுத்து நீலநிறமானது. எனவே அவர் நீலகண்டன் ஆனார். அந்தப்பாம்பின் விஷம் பரவியிருந்தால், தேவர், அசுரர் யாரும் பிழைத்திருக்க மாட்டார்கள். பிறரைக் காப்பாற்ற தன்னுயிரையும் தர தயாராக இருக்க வேண்டும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவம். உயர்ந்த குணங்களைக் கொண்டவர்களாலும், அறிவில் சிறந்தவர்களாலும் மட்டுமே வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தீயவிளைவுகளான நஞ்சையும் விழுங்க முடியும். நல்லவர்களுக்கு மட்டும் சோதனை வருவது ஏன் என சிலர் கேட்பதுண்டு. இதற்கு என்ன பதில் தெரியுமா? நல்லவர்களுக்கு மட்டுமே சோதனைகளைத் தாங்கும் மனவலிமை இருக்கிறது. அதன்மூலம் எல்லாருக்கும் நன்மை கிடைக்கிறது. இன்னொரு அரிய தத்துவமும் இதனுள் புதைத்திருக்கிறது. தேவர்களுக்கான நல்லவர்களுக்கு உதவப்போய், அசுரர்களான கெட்டவர்களும் விஷத்தில் இருந்து உயிர் பிழைத்தனர். நாம் சிலரால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர்களுக்கும் உதவுவதே சிறந்த பண்பு என்பது இதன்மூலம் உணர்த்தப்படுகிறது.

முருகன் கோடிகோடி மன்மதர்களுக்கு ஈடானவன்


கோடியைக் கோடியால் பெருக்கினால் எவ்வளவு பெரிசு? அதுதான் கோடி கோடி. முருகன் கோடிகோடி மன்மதர்களுக்கு ஈடானவன். அழகுக்குப் பெயரெடுத்தவன் மன்மதன். "என்ன மன்மதன்னு நினைப்போ!' என்று தான் பரிகாசம் பண்ணுகிறோம்.
அப்படிப்பட்ட கோடிகோடி மன்மதர்களின் அழகை ஒன்று சேர்த்தால் எவ்வளவு அழகாயிருக்குமோ அத்தனை அழகானவர் சுப்ரமண்யர்.
தமிழ் தேசத்துக்கு இவர் மீது ரொம்பப் பிரியம். தமிழ்த்தெய்வம் என்றே சொல்கிறோம். தமிழில் "வைதாரையும் வாழ வைப்பவர்' என்று அவரைப் போற்றுகிறோம். தமிழில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் "முருகன்' என்றே சூட்டியிருக்கிறோம். அழகு, அருள் இரண்டும் வேறு வேறில்லை. அழகே அருள் வடிவெடுத்து முருகனாக இருக்கிறார்.
சுப்பிரமணியரின் பெருமைகளில் மேலானது குருவாக உபதேசித்து மோட்சத்தைக் கொடுப்பது தான்.
""குருவாய் அரர்க்கும் உபதேசம் வைத்த'' என்று அருணகிரிநாதர் சொல்றபடி அப்பாவுக்கும் உபதேசம் செய்தவர். ""ஞானபண்டித ஸ்வாமி''யாக இருப்பவர். அவர் நமக்கு அழகு, அறிவு, அருள், வீரதீரம், சக்தி எல்லாம் நமக்கு அனுக்கிரஹம் செய்கிறார்.

தசாவதாரங்களில் உத்தம அவதாரம்

தசாவதாரங்களில் உத்தம அவதாரம் என்ற ஏற்றம் பெற்றது வாமன அவதாரம். மற்ற அவதாரங்களில் அசுரர்களை வதம் செய்யும் பகவான், இதில் மட்டும் யாரையும் கொல்லவில்லை. மாறாக, மலைநாட்டு (கேரளம்) சக்கரவர்த்தி மகாபலியின் ஆணவத்தைப் போக்கி பிறவாநிலை அளித்தார். "நெடுமால்' என்று பெயருக்கேற்ப நெடியவனாக வளர்ந்து மண்ணுலகையும், விண்ணுலகையும் திருவடியால் அளந்தார். அந்த திருவடியின் பெருமையை அறிந்த ஜாம்பவான், பறை என்ற தாளவாத்தியம் கொட்டியபடி வலம் வந்து வணங்கினார். ஆண்டாள் வாமனரை, "ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று போற்றியிருக்கிறாள். . இவர் ஒற்றை விரலை நீட்டிக் கொண்டிருக்கிறார். மூன்றடியும் அளந்த பிறகு, இன்னும் ஒற்றை விரலை ஏன் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் நமக்கு எழுகிறது. அன்று நீட்டியது மகாபலியிடம் கடைசி அடி நிலத்தைக் கேட்பதற்காக. இன்று நீட்டியிருப்பது ஆணவத்தை விடுத்து, அவரிடம் நம்மைச் சரணடையச் செய்வதற்காக! 

எவ்வளவு கஷ்டமான சூழலிலும், ராகவேந்திரரை வழிபாடு


ராகவேந்திர சுவாமிகள் தன் குடும்பம் மற்றும் சீடர்களின் குடும்பங்களுடன் தல யாத்திரை செய்து கொண்டிருந்தார். ஒரு சீடரின் மனைவி நிறைமாத கர்ப்பவதியாக இருந்தாள்.செல்லும் வழியில் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தாகம் வாட்டியது. அவர்கள் சென்று கொண்டிருந்த இடமோ பாலைவனப்பகுதி. தண்ணீர் இல்லை. சுடுமணலில் படுத்து அவளால் எப்படி பிரசவிக்க முடியும்!ராகவேந்திரர் தன் தண்டத்தால் ஒரு வட்டமிட்டார். மூலராமரை வணங்கி சில மந்திரங்களைச் சொன்னார். என்ன ஆச்சரியம்! தண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. அதை அந்தப் பெண்ணும் உடன் வந்தவர்களும் குடித்து தாகம் தணித்தனர். தண்ணீர் பெருகியதால், அந்த இடத்தில் கிடந்த மண்ணும் குளிர்ந்தது. ராகவேந்திரர் தன் கஷாயத்தை (ஆடை) கூடாரம் போல் கட்டி நிழலை ஏற்படுத்தினார். உடன் வந்த பெண்கள் பிரசவம் பார்க்க குழந்தை பிறந்தது. எவ்வளவு கஷ்டமான சூழலிலும், ராகவேந்திரரை வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

மரங்கள் மேல் பாசம்

புதுச்சேரி ஆரோவில் ஆஸ்ரமத்தில் ஸ்ரீஅன்னை தங்கியிருந்தார். ஆஸ்ரமத்திலுள்ள பங்களாவில் ஒரு மாமரம் இருந்தது. அதற்கு மிகவும் வயதாகி விட்டது. அதை வெட்டிவிடலாம் என ஸ்ரீஅன்னையிடம் ஆஸ்ரம பாதுகாவலர் யோசனை சொன்னார். வேண்டாம் என மறுத்து விட்டார் ஸ்ரீஅன்னை. மற்றொரு தடவை, ஒரு பக்தரை அழைத்து, ""இங்குள்ள ஒரு ஆலமரம் மிகவும் சிரமப்படுகிறது. அதன் சிரமத்தைப் போக்குங்கள்,'' என்று உத்தரவிட்டார். அவர் பல இடங்களில்சுற்றிமரங்களைப் பார்வையிட்டார். ஓரிடத்தில் மரத்தின் வேர் பகுதியில், யாரோகத்தி ஒன்று குத்தி வைத்திருப்பதைக் கண்டார். கத்தியை அகற்றினார். இப்படி மரங் களுக்கும் அருள்செய்பவராக விளங்கினார் 

மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மது அரக்கன் அழிந்து போவான்

இன்றைய சுற்றுப்புற சூழ்நிலையால் தவறான பழக்கங்கள் மனிதனை ஆட்கொள்வது இயற்கை. அவற்றை விட்டு நாம் தப்பி ஓடியாக வேண்டும். ஊர் முழுக்க மதுக்கடைகள் நிறைந்துள்ள நமது மாநிலத்தில் குடிக்காதவர்களும் குறிப்பிட்ட சதம் இருக்கத்தானே செய்கிறார்கள்! அவர்களில் நீங்கள் ஒருவர் என்ற பெருமை பெற வேண்டுமானால் இந்த சம்பவத்தைப் படியுங்கள்.
ஒருவன் குடித்து விட்டு தள்ளாடி வந்து, ரோட்டில் வந்து கொண்டிருந்த பெரியவர் மேல் மோதினான்.
""ஏம்ப்பா..இப்படி கெட்டுப்போறே! இந்தப் பாழாப்போன குடியை விட்டுடேன்''.
""நான் விடத்தயாரா இருக்கேன், அது என்னை விடமாட்டேங்குதே!'' என்றவனை, ""சரி சரி.. நாளைக்கு என் வீட்டுக்கு வா,'' என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இளைஞனும் போனான்.
பெரியவர் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு நின்றார். வந்தவனை "வா' என்று கூட சொல்லவில்லை.
""ஐயா! வீட்டுக்கு வந்தவனை வான்னு கூட சொல்லாம, தூணை புடிச்சுகிட்டு நிக்கிறீங்களே! அதை விட்டுட்டு வாங்களேன்!''
""நான் விடணுமுனு தான் நினைக்கிறேன். அது விடமாட்டேங்குதே!''.
""அது எப்படிங்க! உயிரில்லாத தூண் எப்படி உங்களை புடிச்சு வைக்கும்,''.
""உயிரில்லாத மது உன்னை புடிச்சுகிட்டு விட மாட்டேங்குதே!அது மாதிரி தான் இதுவும்!''
இளைஞன் அன்றே மதுவை விட்டுவிட்டான்.
மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மது அரக்கன் அழிந்து போவான். அதை அறிமுகப்படுத்திய அரசாங்கம் உங்களிடம் தோற்றுப் போகும்

ஓரறிவு உயிராக இருந்தாலும் மரத்திற்கு உயிர் உண்டு

ஓரறிவு உயிராக இருந்தாலும் மரத்திற்கு உயிர் உண்டு. அவற்றுக்கு அன்போடு தண்ணீர் ஊற்றுவது நம் கடமை. காட்டில் உள்ள மரங்களை வெட்டி வீட்டிற்குத் தேவையான ஜன்னல்,கதவு எல்லாம் செய்து கொள்வது தவிர்க்க முடியாதது. ஆனால், அனுமதியின்றி இங்கு மரங்களை வெட்டினால், சிறைதண்டனை தரப்படுகிறது. அங்கோ நரகமே கிடைக்கும் என்கிறது விஷ்ணு புராணம். இவர்கள் "அசிபத்ரவனம்' என்ற காட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். அங்கு மரங்கள் மிக அடர்ந்து நெருக்கமாக இருக்கும். இலைகள் கத்திபோல கூர்மையாக இருக்கும். தேவையில்லாமல் மரத்தை வெட்டிய பாவத்திற்காக யமபடர்கள் வெட்டியவர்களை அந்தக்காட்டிற்குள் விரட்டிவிடுவர். கத்திமாதிரியான இலைகள் உடம்பைக் குத்திக் கிழிக்கும். தேவையின்றி மரம் வெட்டும் நபர்கள் இதை மனதில் கொள்ளட்டும்

ஒழுக்கமில்லாதவன் கூட கடைசி நேரத்தில் பகவந்நாமத்தைச் சொல்லி நற்கதி அடைந்து விட்டான்


பாகவதத்தில் அஜாமிளன் என்பவனின் கதை வருகிறது. "ஜாமி' என்றால் "ஒழுக்கமான பெண்'. "அஜாமி' என்றால் ஒழுக்கமற்றவள். ஒழுக்கமற்ற பெண்களை விரும்பியதால் இவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது. 88வயது வரை பெண்பித்தனாக வாழ்ந்த அஜாமிளனுக்கு அந்திமகாலம் நெருங்கியது. இவனுடைய பத்து பிள்ளைகளில் கடைசிப் பிள்ளை நாராயணன். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மகனை "நாராயணா' என்று கூப்பிட்டபோது உயிர் நீங்கியது. பெரியாழ்வார் பாடியது போல, "நாராணன் அன்னை நரகம்புகாள்' என்பது அஜாமிளன் வாழ்வில் உண்மையானது. விஷ்ணுதூதர்கள் வந்து அஜாமிளனை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒழுக்கமில்லாதவன் கூட கடைசி நேரத்தில் பகவந்நாமத்தைச் சொல்லி நற்கதி அடைந்து விட்டான். எனவே, ஒழுக்கத்துடனும், பக்தியுடனும் நாராயணன் பெயரைச் சொன்னால் அவனது அருள் நிச்சயம். அதற்காக அஜாமிளன் போல கடைசி நேரத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். நாக்கு உள்ளே இழுத்துவிட்டால் எதுவும் பேசமுடியாமல் போய்விடும்.இன்றே சொல்லுங்க! இப்போதே சொல்லுங்க! நற்கதிக்கு பாதை ஏற்படுத்துங்க!

உலகிலேயே "எடை அதிகமான ஊர்!

பரம்பொருளான விஷ்ணு அயோத்தியில் ராமராக அவதரித்த போது தேவதைகள் எல்லாம் பூலோகத்தில் ஒன்றுகூடினர். கையில் தராசை வைத்துக் கொண்டு அயோத்தியை ஒரு தட்டிலும், வைகுண்டத்தை மற்றொரு தட்டிலும் வைத்து நிறுத்துப் பார்த்தனர். வைகுண்டம் மேலே இருக்க, அயோத்தி இருந்த தட்டு கீழே இருந்தது. ராமர் பிறந்த இடம் புனிதமானது என்பதால் அயோத்தியின் எடை அதிகரித்தது. ராமாயணத்தில், வால்மீகி முனிவர் அயோத்தியின் பெருமையைப் பாடியுள்ளார். நம்மாழ்வாரும் இவ்வூர் பெருமையைப் புகழ்ந்திருக்கி றார். ""இவர்களெல்லாம் சொல்லியபிறகு அடியேன் அற்ப புத்தி கொண்டவன். என்னால் இவ்வூர் பெருமை பற்றி என்ன சொல்லிவிட முடியும். இருந்தாலும் சொல்கிறேன்' என்று அயோத்தி பற்றி கம்பர் வர்ணிக்கிறார்.

அழகென்ற சொல்லுக்கு முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா என்பர். முருகன் என்பதன் பொருள் "அழகன்'. "முருகு' என்னும் சொல்லில் தமிழின் வல்லினம்,மெல்லினம், இடையினம் ஆகிய மூன்று இன எழுத்துக்கள் உள்ளன. மெல்லினமாகிய "மு' விஷ்ணுவையும், வல்லினமாகிய "ரு' சிவனையும், இடையினமாகிய "கு' பிரம்மனையும் குறிக்கும் என்பர். முருகப்பெருமானை வழிபட்டால்
மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

"வேலு மயிலும் --'மகாமந்திரம்முருகனுக்குரிய தமிழ் மந்திரமாக உள்ளது "வேலுமயிலும்'. இதனை "மகாமந்திரம்' என்று பாம்பன் சுவாமிகள் குறிப்பிடுகிறார். கந்தபுராணம் என்னும் கடலையே இந்த மந்திரம் தன்னுள் அடக்கியது என்பர். அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் "வேலு மயிலும்' மந்திரத்தை சூட்சுமமாகக் கூறுகிறார். இந்தமந்திரத்தை "வேலும் மயிலும்' என்று ஜெபிக்காமல் ஆறெழுத்தாக "வேலுமயிலும்' என்றே ஜெபிக்க வேண்டும். முருகன் இருக்கும் இடத்தில் வேலும், மயிலும் வீற்றிருக்கும். வேலை வணங்கினால் நம் தீவினை நீங்கும். மயிலை நினைத் தால் பயம் அகலும்.

படைவீடு


படைவீடு என்னும் சொல்லுக்கு, "போர் புரிவதற்காக படைத்தளபதி படைகளுடன் தங்கும் இடம்' என்று பொருள். முருகன் சூரனுடன் போர் புரியத் தங்கிய இடம் திருச்செந்தூர். அதனால் அத்தலம் படைவீடாகும். மற்ற கோயில்கள் அனைத்தும் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்படும் ஆற்றுப்படைவீடுகளே. ஆற்றுப்படை என்பதன் விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு புலவர் வள்ளல் ஒருவரின் பெருமையைப் புகழ்ந்து பாடுகிறார். வள்ளல் புலவருக்கு பரிசளிக்கிறார்.தன்னைப் போல் கஷ்டப்படும் மற்ற புலவர்களின் பசியும் தீர வேண்டும் என்ற நோக்கத்தில், "நீங்கள் இன்ன ஊரிலுள்ள வள்ளலைப் பாடினால் உங்களுக்கும் பொருள் கிடைக்கும்,'' என வழிகாட்டுகிறார். ஆறுதல்படுத்துதலே "ஆற்றுப்படுத்தல்' ஆயிற்று.
இதே போல, நக்கீரர் "முருகன் அருள்' என்னும் செல்வத்தைப் பெற்றார். தன்னைப் போல, மற்றவர்களும் பெற வேண்டும் என்பதற்காக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி,சோலைமலை ஆகிய தலங்களுக்குச் செல்லும்படி வழிகாட்டுகிறார். இத்தலங்கள் மனித மனதை ஆறுதல்படுத்தும் ஆற்றுப்படைவீடுகள். முக்திவாழ்வுக்கு வழிகாட்டும் முத்தான தலங்கள். ஆற்றுப்படை கோயில்களே ஆறுபடைவீடுகளாக மாறின.

வள்ளி திருமணம்!

வள்ளியை முருகப்பெருமான் காதலித்து மணம் செய்தார். அவள் முருகனை அடைவதற்கு அவளுடைய உறவினர்களே தடையாக இருந்தனர். இறுதியில் வள்ளியின் தோழியே அவளை முருகனோடு சேர்த்து வைத்ததாக கந்தபுராணம் கூறுகிறது. உயிரையும் இறைவனையும் சேர்ப்பதை உணர்த்தும் தத்துவமே வள்ளிதிருமணம். வள்ளி என்பது உயிராகிய ஜீவாத்மா.
வினைப்பயன்களே உறவினர்களைப் போல நம்முடன் இருந்து இறைவனுடன் சேர விடாமல் தடுக்கிறது. பக்தியே தோழியாக இருந்து அவனோடு நம்மைச் சேர்க்கிறது

ஆறுகுழந்தைகளாக அவதரித் வைகாசிவிசாக நன்னாள்.

சூரபத்மன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். இந்திரலோகத்தையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். தேவர்கள் அனைவரும் தங்களின் துன்பத்தைப் போக்கும்படி பிரம்மாவிடம் சென்றனர். ""தேவர்களே! சூரபத்மனை உங்களால் அழிக்க முடியாது. ஆனால், நான் சொல்லும் ஆலோசனைப்படி நடந்தால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். உடனே, மன்மதனின் உதவியை நாடுங்கள். யோகநிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் சிவனின் தவத்தைக் கலைக்கும்படி கூறுங்கள். அப்போது ஆற்றல் மிக்க சுப்ரமண்யமூர்த்தி அவதரிப்பார். அவரால் மட்டுமே சூரபத்மனை அழிக்க முடியும்,'' என்று தெரிவித்தார். மன்மதனால்சிவனின் தவம் கலைந்தது. கோபத்தில் நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறுசுடர்கள் கிளம்பின. கங்கைநதியில் உள்ள சரவணத்தை அடைந்தன. ஆறு தாமரை மலர்களில் ஆறுகுழந்தைகளாக அவதரித்தனர். அந்நாளே வைகாசிவிசாக நன்னாள்.

எளிமையா இருங்க!

மின்சாரம், பஸ், பெட்ரோல் என விலைவாசி மூச்சு முட்டும் அளவு இருக்கும் இந்த நேரத்தில், காஞ்சிப்பெரியவர் கூறும் இந்த அறிவுரையை மனதில் கொள்வோமே!
மனசில் எழும்புகிற பலதரப்பட்ட ஆசைகளுக்குத் தானே செலவெல்லாம் செய்கிறோம்? கண்டதைத் தின்னத் தோன்றுகிறது. சினிமா ஆசை, டிரெஸ் ஆசை என்று இவற்றுக்காகத் தானே செலவு கூடுகிறது. இந்தச் செலவுக்கெல்லாம் நிறைய சம்பாத்தியம் இருந்தால் தான் முடிகிறது. அதற்காக வேண்டாத தொழிலை எல்லாம் செய்யத் தொடங்குகிறோம்.
""ஐயோ! இதை தின்பது பாபம். இதைப் பண்ணுவது பாபம்'' என்று சாஸ்திரங்களைப் பார்த்து பார்த்து, மனசின் ஆசைகளை எல்லாம் குறைத்துக் கொண்டு விட்டால், இத்தனை செலவுக்கு அவசியமில்லை. எளிய வாழ்க்கைக்குரிய சம்பாத்தியம் தருகிற ஒரு தொழிலைப் பார்த்துக் கொண்டு நிம்மதியாக இருந்து கொண்டிருக்கலாம். வேண்டாத பொழுது போக்குகள், அலைச்சல்கள் இல்லாமல் இருந்தால், தெய்வசிந்தனையும் ஆத்மவிசாரமும் செய்ய நிறைய நேரமும் கிடைக்கும்.
ஒரு மாறுதல் வேண்டும். வெளிலோகத்தைப் பார்க்க வேண்டும் என்றால் ÷க்ஷத்ராடனம், தீர்த்தாடனம் செய்யலாம். கோஷ்டியாக பலர் சேர்ந்து யாத்திரை போனால், அதிலே வேறெந்தப் பொழுதுபோக்குக் கேளிக்கையிலும் கிடைக்காத ஆனந்தமும் கிடைக்கும். பஜனை, ஹரிகதா சிரவணம், உத்ஸவம் இவற்றில் கிடைக்கும் ஆனந்தம், வேண்டாத பொழுதுபோக்கில் கிடைக்கிற சந்தோஷத்தை விட மேலானது என்பது அப்போது தெரியும்

Monday, June 18, 2012

ஞானத்திற்கும் (அறிவு) திருமகளே ஆதாரம்


அறிவு மிக்கவரை "இவர் பெரிய பிருகஸ்பதி' என்று சொல்வதுண்டு. வால்மீகி ராமனின் அறிவுத்திறத்தைக் குறிப்பிடும்போது, "பிருஹஸ்பதி சமோ புத்யா' என்கிறார். "தேவகுருவான பிருகஸ்பதிக் குச் சமமான அறிவுடைய வர்' என்பது இதன் பொருள். மக்கள் அனைவரும் பிருகஸ்பதி(தேவகுரு) போல ஞானம் கொண்டவராகவோ அல்லது வனஸ்பதி (காட்டில் உள்ள மரம்) போல அறியாமை பெற்றவராகவோ வாழ்வதற்கான காரணத்தை கூரத்தாழ்வார், தான் பாடிய ஸ்ரீஸ்தவத்தில் கூறியுள்ளார்.
செல்வத்திற்கு அதிபதியான திருமகளின் பார்வை ஒருவர் மீது பட்டால், அவருக்கு பிருகஸ்பதி போல ஞானமும், படாவிட்டால் மரம் போல நிற்கும் அஞ்ஞானமும் உண்டாகிறது. இதை "லோகே பிருஹஸ்பதி வனஸ்பதி' என்கிறார். செல்வச்செழிப்புக்கு மட்டுமின்றி, ஞானத்திற்கும் (அறிவு) திருமகளே ஆதாரம் என்பது அவரது கருத்து.

அமுதமொழி-வாரியார் சுவாமிகள்

நாம் எப்போதும் நம்மிலும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைக் கண்டு, "ஏதோ கடவுள் நமக்கு இவ்வளவாவது தந்திருக்கிறாரே.. போதும்' என்று திருப்தியடைய வேண்டும். குடிசையில் வாழ்கின்றவன், வீடின்றி மரத்தடியிலே மழையிலே நனைந்து, வெயிலிலே காய்பவனைக் கண்டு, "நமக்கு ஆண்டவன் இந்தக் குடிசையையாவது தந்தானே' என்று இறைவனுக்கு நன்றி கூறி திருப்திப்பட வேண்டும். காரிலே போகின்றவனைக் கண்டு, குதிரை வண்டியிலே போகின்றவன் நமக்கு கார் இல்லையே என்று நினைக்கக்கூடாது.குதிரை வண்டியிலே போகின்ற ஒருவன், மாட்டுவண்டியிலே போகிறவனையும், மாட்டுவண்டியில் போகிறவன் நடந்து போகிறவனையும், நடந்து போகிறவன், காலில்லாதவனைக் கண்டும் "கடவுள் நமக்கு இவ்வளவு வசதியைத் தந்தாரே' என்று திருப்திப்பட வேண்டும். காலே இல்லை எப்படி திருப்தியடைவது என்பவன், "நமக்கு இந்த ஊன்றுகோலையாவது இறைவன் தந்தானே! நோயற்ற உடலைத் தந்தானே!' என்று திருப்தியடைதல் வேண்டும். கஞ்சி குடிக்கிறவன் பட்டினி கிடக்கிறவனைப் பார்த்தும், ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்குபவன் நாற்பது வாங்குபவனைப் பார்த்தும் திருப்தியடைய வேண்டும். ஒரு கொடையாளி தன்னிடம் தானம் கேட்டவனுக்கு பத்து ரூபாய் கொடுத்தால் "அடப்பாவி! இருபதாக தந்தால் இவனுக்கென்ன குறைந்து விடுமாம்' என்று அதிருப்தி அடையக்கூடாது. "பத்து ரூபாய் தந்த அந்த புண்ணியவான் நன்றாக இருக்க வேண்டும்' என்று வாழ்த்த வேண்டும்.

பக்தனின் அடையாளம் என்ன?


பக்தனின் அடையாளம் என்ன என்பதை பக்தியில் சிறந்த பிரகலாதன் விஷ்ணு புராணத்தில் கூறுகிறான். ""எக்காரணம் கொண்டும் யார் மீதும் வெறுப்பு காட்டக்கூடாது. மற்றவர்களைப் பரிகாசம் செய்யக்கூடாது. விவேகம் இல்லாதவர்களிடம் தான் இதுபோன்ற இழிகுணங்கள் இருக்கும், எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக (மறைபொருள்) விஷ்ணு இருக்கிறார். அவரே உனக்குள்ளும், எனக்குள்ளும் உறைந்திருக்கிறார். யார் மீது அன்பு காட்டினாலும், அது அந்த பரம்பொருளையே சேரும். யாரை வெறுத்தாலும், நிந்தனையாகப் பழித்தாலும் அதுவும் அவரையே சேரும்,''.

ராமராஜ்யம்


ராமச்சந்திர மூர்த்தி புதுசாக ராஜநீதி என்று எதுவும் செய்து ராஜ்யத்தை நடத்தவில்லை. தன் அபிப்ராயம், தன் காரியம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல், எல்லாமே சாஸ்திர அடிப்படையிலேயே பின்பற்றினார். அவரது முன்னோர் முதல் சக்கரவர்த்தி தசதரர் வரை எந்த தர்மவழியில் ஆட்சி நடந்ததோ அதையே அவரும் பின்பற்றி நடந்தார்.
தசரதர் ராமபட்டாபிஷேகம் செய்ய உத்தேசித்ததும், தன் குமாரன் ஸர்வ ஜன அபிமானத்தையும் பெற்றவன் என்று தெரிந்தபோதிலும், சபையைக் கூட்டி பலதரப்புகளையும் சேர்ந்த பிரதிநிதிகளிடமும் அபிப்ராயம் கேட்டார் என்று ராமாயணத்தில் சொல்லி இருக்கிறது. ஜனங்களின் அபிப்ராயங்களை உள்ளது உள்ளபடி கேட்டுத் தெரிந் து கொள்ளத்தான் வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். ஒரு நாய் கூட ராமரிடம் நியாயம் கேட்க நேராகத் தானே வழக்குக் கொடுத்திருப்பதாக உத்தர காண்டத்தில் வருகிறது.
"ராமாயணமா! அது திரேதாயுக சமாச்சாரமாச்சே!' என்று ஒதுக்கி விடக்கூடாது. மக்களின் அபிப்ராயம், திறமையான, தூய்மையான நிர்வாகம் என்ற இரண்டையும் எந்த அளவில் இணைக்கலாமோ, அப்படி கலந்து ஆட்சி நடத்த வேண்டும். வெறும் பழம் பெருமையோடு மட்டும் நின்றுவிடாமல், இன்றும் ராமராஜ்யம் நமக்கு வழிகாட்டியாவதற்கு ஸ்ரீராமசந்திரமூர்த்தி கிருபை செய்வாராக.

நாதஸ்வரம்

இசைக்கருவிகளில் நாதஸ்வரம் மிக முக்கியமானது. இதனை நாகஸ்வரம், நாயனம் என்றும் கூறுவர். ஆச்சா மரத்தால் செய்யப்படும் இதன் மேல்பாகம் உலோகத் தகட்டினால் மூடப்பட்டிருக்கும். திமிரி,பாரி என்று இருவித நாதஸ்வரங்கள் உண்டு. திமிரி, உயரம் குறைவாகவும், ஆதாரசுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி, அதிக உயரமும், ஆதாரசுருதி குறைவாகவும் இருக்கும்.கோயில்களில் பூஜைக்கு தக்கபடி ராகம் வாசிப்பர். காலை பள்ளியெழுச்சியின் போது பூபாளம், இரவு அர்த்த ஜாம பூஜையில் நீலாம்பரி, ஆனந்தபைரவி வாசிக்கப்படும்.இருமனம் இணையும் திருமண விழாவில் கெட்டிமேளம் கொட்டுவதில் நாதஸ்வரத்தின் பங்களிப்பு முக்கியமானது

சிவஞானபோதம்' என்னும் அரிய நூலை இயற்றிய மெய்கண்டார்


பெண்ணாடத்தில் வசித்த சிவபக்தரான அச்சுதகளப்பாளருக்கு மகப்பேறு இல்லை. தன் குருநாதர் அருள்நந்தி சிவாச்சாரியாரிடரிடம் முறையிட்டார். அவர், நாயன்மார்கள் பாடிய பன்னிருதிருமுறைகள் மீது அபார நம்பிக்கை கொண்டவர். அவர் "கயிறு சாத்துதல்' என்னும் முறை மூலம் களப்பாளருக்கு குழந்தை பாக்கியம் உண்டா என சோதித்தார். அதாவது, திருமுறை ஏடுகளை சிவன் முன் வைத்து, அதில் கயிறு போட்டு பார்ப்பதாகும் (நாடி ஜோதிடம் போல) அதில் சம்பந்தரின் திருவெண்காட்டுப்பதிகம் வந்தது. அப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்ய சீடரிடம் கூறினார்.
ஆனால், சிவன் களப்பாளரின் கனவில் தோன்றி, ""நீ என்ன செய்தாலும், உனக்கு புத்திர பாக்கியம் இல்லை'' என்று கூறிவிட்டார்.
களப்பாளர் அவரிடம்,""சுவாமி! என் ஊழ்வினைப்பயனால் எனக்கு குழந்தை இல்லாமல் போனாலும், தங்கள் அருள்பெற்ற சம்பந்தரின் வாக்கும், நான் இதைப் படிக்க காரணமான என் குருநாதரின் வாக்கும் பொய்யாகலாமா?'' என்று வருத்தத்துடன் கேட்டார். இந்த நியாயமான கேள்வியில் சிக்கிக் கொண்ட சிவன், அவருக்கு பிள்ளைவரம் அளித்தார். சைவத்துக்கே சாஸ்திரமாக விளங்கும் "சிவஞானபோதம்' என்னும் அரிய நூலை இயற்றிய மெய்கண்டார் தான் அந்தக் குழந்தை.

கோடி வருஷம் வாழ்க!


43கோடி வருஷம் வாழ்க!

"நூறாண்டு காலம் வாழ்க' என்று தான் நாம் வாழ்த்துகிறோம். ஆனால், 43கோடியே 20 லட்சம் ஆண்டுகள் வாழ்க என்கிறது அதர்வண வேதம். வியாசர் அதர்வண வேதத்தை "சுமந்து' என்னும் முனிவருக்கு உபதேசித்து மக்களிடம் பரவச் செய்தார். இதில் 20 காண்டங்களும், 5038 செய்யுள்களும் உள்ளன. வருணன், அக்னி, விஷ்ணு, வாசஸ்பதி, சோமன், இந்திரன், மருத்து, அஸ்வினி தேவர்கள், சூரியன், வாயு, கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள் போன்ற தேவதைகள், இயற்கைச் சக்திகள் பற்றிய தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. "தர்வ' என்றால் "பயம்' . "அதர்வம்' என்றால் "பயமற்ற தன்மையைத் தருவது' என்பது பொருள். இச்சொல்லே "அதர்வணம்' என திரிந்தது. தீயசக்திகளிடம் இருந்தும், சம்சார பந்தத்தில் இருந்தும் ஏற்படும் அச்சத்தைப் போக்குவதால் அதர்வவேதம் என்னும் பெயர் உண்டானது. தற்காலத்தில், அதர்வண காளி வழிபாடு முக்கியம் பெற்றுள்ளது. பிரத்யங்கிரா, காளி போன்ற சக்திகளே இவர்கள். கலியுகத்தில் மக்கள் தங்கள் பயத்தைப் போக்க இந்த தெய்வங்களுக்கு வழிபாடு நடத்துகிறார்கள். அதர்வ வேதத்தில் உலகத்தின் வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. "நூறால் பத்தாயிரத்தைப் பெருக்கி வருவதுடன் இரண்டு, மூன்று, நான்கு என்ற எண்களைச் சேர்' என்ற குறிப்பு இதில் உள்ளது. அதாவது, 43 கோடியே 20 லட்சம் ஆண்டுகள். இதனை ஆயிரம் சதுர்யுக ஆண்டுகள் என்று குறிப்பிடுவர். இவ்வளவு காலமும், ஒருவன் வாழ வேண்டும் என நம் ஆயுள் நீடிக்கவும் இந்த வேதம் வாழ்த்துகிறது.

கஜாசுர

கஜாசுரன் என்பவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். விண்ணில் இருக்கும் அண்டத்தை காலால் உதைத்தான். அண்டச்சுவர் உடைந்து ஆகாசகங்கை பூலோகத்தை நோக்கி வந்தது. உயிர்கள் அனைத்தும் மரண பயத்தால் கலங்கின. தேவர்கள் விநாயகரிடம் சரணடைந்தனர். கஜாசுரனைக் கொல்ல ஆயத்தமானார் விநாயகர். முதலில் பூலோகத்தைக் காக்க, கால்பெருவிரல் நகத்தால் அண்டச்சுவரில் ஏற்பட்ட துளையை அடைத்தார். ஆகாச கங்கை தடைபட்டது. பின், கஜாசுரனை ஒரே நொடியில் வீழ்த்தினார். கலக்கம் தீர்ந்த தேவர்கள் விநாயகரை பூஜித்து மகிழ்ந்தனர். 

அனுமனும் ராமர் பிறந்த சூரியவம்சத்தில் பிறந்தவர்


ரகுவம்சத்தில் (சூரியவம்சம்)பிறந்ததால் ராமருக்கு "ரகுராமர்' என்ற பெயர் உண்டு. அவரைப் போலவே, ராமதூதரான அனுமனும் ரகுவம்சத்தில் அவதரித்ததாக அனுமன் சாலீஸா குறிப்பிடுகிறது. துளசிதாசர் இயற்றிய ராமாயணத்தில், சீதையும், ராமரும் தத்தெடுத்துக் கொண்ட பிள்ளையே அனுமன் என்று குறிப்பிடப்படுகிறது. அவர் சீதையைத் தேடி இலங்கை சென்ற போது, சீதை அனுமனைச் "சுத' என்று அழைக்கிறாள். "சுத' என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு "மகன்' என்று பொருள். அனுமனும் சீதாதேவியைத் "தாயே' என்று அழைத்து வணங்குகிறார். அனுமனை ராமரே முதலில் சந்தித்தாலும், தன் மகனாக ஏற்று அன்பு காட்டியவள் சீதையே. இந்த வகையில், அனுமனும் ராமர் பிறந்த ரகுவம்சத்தில் பிறந்தவராகவே கருதப்படுகிறார். இதனை நிரூபிக்கும் விதத்தில் துளசிதாசர் அனுமன் சாலீஸாவில் "ரகுபர' என்று அனுமனைப் போற்றியுள்ளார். இதற்கு "ரகுவம்சத்தில் சிறந்தவர்' என்று பொருள்.

Sunday, June 17, 2012

பழி தீர்ப்பது நல்ல செயலா


பழி தீர்ப்பது நல்ல செயலா என்றால் "இல்லவே இல்லை' என்போம். ஆனால், பகவானையே பழி தீர்த்திருக்கிறாள் ஆண்டாள்.
மனிதனாகப் பிறந்தவனுக்கு மனைவி, குழந்தை, உறவு, நட்பு, பணி என்று எத்தனையோ கட்டுகளை போட்டு வைத்தான் இறைவன். ஆனாலும், வாழ்வில், இன்பத்தைக் கண்டோமா என்றால், அதற்கு "இல்லவே இல்லை' என்று தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. விருந்தில் கூட பர்பியையும், பாகற்காயையும் பக்கத்தில் வைக்கிறார்கள். இனிக்கிறதே என சிறிது சுவைத்தால், அடுத்து கசக்கிறது வாழ்க்கை. துன்பம் அதிகமாகி விட்டால், "இந்த துன்பத்துக்கெல்லாம் காரணம் நீ தானே' என இறைவனை சபிக்கவும் செய்கிறோம்.
ஆனால், ஆண்டாள் ஒரு மாலையை எடுத்தாள், கழுத்தில் போட்டாள். ஆண்டவனுக்கு அனுப்பி வைத்தாள். பக்தி என்னும் நாரால் கட்டிய மாலை, அவனையே கட்டிப் போட்டது. ""ஏ கிருஷ்ணா! மனிதனாய் பிறந்த எல்லாரையும் கட்டிப் போடலாம் என கனவு காணாதே. நாங்கள் பக்தி என்னும் கயிறால் உன்னைக் கட்டிப் போட்டு விடுவோம். ஏற்கனவே, எங்கள் யசோதை உன்னை உரலில் கட்டிப் போட்ட முன்னுதாரணம் இருக் கிறது,'' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறாள். பக்தி என்னும் கயிறால், சம்சாரத்தில் நம்மைக் கட்டிய ஆண்டவனையே பழிக்குப்பழி வாங்கலாம். பழி தீர்ப்பதிலும் கூட, எவ்வளவு இனிமை பார்த்தீர்களா!

இளமை முதலே நல்வழியில் பேணி வளர்ப்பவர்களே சிறந்த தாய்க்குரிய அந்தஸ்தைப் பெற முடியும்

கல்யாணம் முடிந்தவுடன், தம்பதியர் அம்மி மிதித்து, அருந்ததி, துருவ நட்சத்திரங்களை பார்க்கும் சடங்குகள் நடக்கும். துருவன், அருந்ததி இருவரும் வான மண்டலத்தில் இன்றும் நட்சத்திரங்களாக பிரகாசிப்பதாக ஐதீகம். அருந்ததியைப் போல கற்புத்திறமும், துருவனைப் போல நல்ல குழந்தையும் பெறவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.
துருவன் சிறுவனாக இருந்தபோதே, பக்தி திறத்தால் விஷ்ணுவின் அருளைப் பெற்றான். யாருக்கும் கிடைக்காத "துருவபதம்' என்னும் உயர்பதவி பெற்றதோடு, தன் தாயான சுநீதிக்கும் நற்கதி பெற்றுத் தந்தான். துருவ நட்சத்திரத்திற்கு அருகில் சுநீதியும் ஒரு நட்சத்திரமாக இருக்கிறாள். உத்தமபுத்திரனைப் பெற்ற தாய்மார்கள், கொடுத்து வைத்தவர்கள் என்பதை துருவனின் கதை உணர்த்துகிறது. பிள்ளையைப் பெற்று விட்டால் மட்டும் போதாது. அவர்களை இளமை முதலே நல்வழியில் பேணி வளர்ப்பவர்களே சிறந்த தாய்க்குரிய அந்தஸ்தைப் பெற முடியும்.

18 புராணம் 5 லட்சம் ஸ்லோகம்

வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும் . அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், கதைகளாக எழுதினார்கள். அவையே புராணங்கள். வேதத்தின் "கண்ணாடி' என்று புராணங்களைச் சிறப்பிப்பர். "புரா' என்றால் "முற்காலத்தில் நடந்தது' என பொருள். வேதங்களைப் போலவே புராணங்களும் பிரம்மாவிடம் இருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்ய உபநிஷத், மத்ஸ்ய புராணங்கள் கூறுகின்றன. மொத்தம் 18 புராணங்கள் உள்ளன.
18 புராணங்களிலும் 5,09, 500 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஸ்கந்த புராணம் பெரியது. 1,81,000 ஸ்லோகங்கள் கொண்டது. மார்க்கண்டேய புராணம் சிறியது. 9000 ஸ்லோகங்களே உள்ளன.

புராணங்களில் ஸ்லோகங்களின் எண்ணிக்கை
ஸ்கந்த புராணம் - 1,81,000
பத்மபுராணம் - 55,000
நாரத புராணம் - 25,000
வராஹ புராணம் - 24,000
வாயு புராணம் - 24,000
மத்ஸ்ய புராணம் - 24,000
விஷ்ணு புராணம் - 23,000
கருட புராணம் - 19,000
பிரும்ம வைவர்த்த புராணம் - 18,000
பாகவத புராணம் - 18,000
கூர்ம புராணம் - 17,000
பவிஷ்ய புராணம் - 15,500
அக்னி புராணம் - 15,000
பிரம்மாண்ட புராணம் - 12,000
லிங்க புராணம் - 10,000
பிரம்ம புராணம் - 10,000
வாமன புராணம் - 10,000
மார்க்கண்டேய புராணம் - 9,000