Thursday, February 3, 2011

விரதம் இருக்கும் விதிமுறைகள்

விரதம் இருக்கும் விதிமுறைகள்!


விரதங்கள் எல்லாவற்றிற்கும் கூடுதலான விதிமுறைகள் பொதுவானதாகவே இருக்கும். விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகள் உண்டு. அதற்கு ஏற்றபடி உணவினை உட்கொள்ளுதல் நன்று. பாரணை நாளன்று உரிய நேரத்தில் சமைத்து சாப்பிடுதல் வேண்டும். சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.
விரத பூர்த்தியாகிய பாரணை செய்யும் தினத்தன்று வேறு விரதம் சேர்ந்தால் (எடுத்துக்காட்டு: கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம்) காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் மற்றைய விரதத்தை கடைப்பிடிக்கவும்.
சமையல் பாத்திரங்கள் விரதத்திற்கு எனத் தனியாக சுத்தமாக இருக்க வேண்டும். ஏற்கனவே சமைத்ததாகவோ, அசைவ உணவுகளைச் சமைத்த பாத்திரங்களாகவோ இருக்கக் கூடாது. முதல் நாள் சமைத்த உணவுகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்.
நோயாளர்களும், அசௌகரியமுடையோரும், பாலகர்களும், மாதவிலக்கான பெண்களும் விரதம் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். இவர்கள் விரதம் கைக்கொள்ள வேண்டுமாயின் தமக்காக வேறு ஒருவரை நியமித்துக் கொள்ளவேண்டும். பெண்கள் தம் கணவரை அல்லது மகனை அனுட்டிக்க வைக்கலாம் மற்றும் பெற்றோர்கள் தங்களது சிறு பிள்ளைகளுக்காக விரதம் கடைப்பிடிக்கலாம். விரத சம்ஹிதை என்னும் நூல் நோயாளிகள் மிகவும் வயதானவர்கள், குழந்தைகள் இப்படி உள்ளவர்கள் விரதப் பூசைகளில் கலந்து கொண்டால் போதும் என்கிறது. பெண்கள் மாத விலக்காகி ஏழு தினங்கள் ஆன பின்பே விரதம் மேற்கொள்ளலாம்.
மேலும் குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்குப் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் கடைப்பிடிக்கலாம். குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்தால், அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
விரதங்கள் இருப்பவர்கள் ஆணாக இருந்தால் முதலில் குடும்பத்தாரின் அனுமதி பெற்றே விரதம் இருக்க வேண்டும். கன்னிப் பெண்களாயின் பெற்றோரின் அனுமதியுடனும், மணமான பெண்கள் கணவனின் தாயாரான மாமியாரின் அனுமதி பெற்ற பின்னும் விரதம் இருக்க வேண்டும். பிறருக்கு உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் இருக்கும் விரதங்கள் முழுப்பலனை பெறமுடியாது.

விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது.
விரதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அடிக்கடி நீராகாரம் சாப்பிடக்கூடாது. ஓய்வு தேவை என்று பகலில் படுத்துத் தூங்கக்கூடாது. நாம் விழித்திருந்து இறைவழிபாட்டில் நமது சிந்தனையைச் செலுத்த வேண்டும். விரதம் இருப்போர் தாம்பத்திய உறவில் ஈடுபடுதல், தவறான உணர்ச்சிகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தல், கேட்டல் கூடாது. விரதத்தின் போது அசைவ உணவுகளை சாப்பிடுதல், பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூட தவறாகும். வெற்றிலை பாக்கு போடுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் ஆகியவையும் கூடாது.
விரதம் இருப்பவர் விரத நிபந்தனைகளை முழுமனதோடு ஏற்று அதன் விதிமுறைக்கு உட்பட்டு உபவாசம் இருப்பதற்கு தயாராக வேண்டும்.

விரத பூசையின் போது ஒவ்வொரு முறையும் பிள்ளையாருக்கு பூசை செய்த பிறகே விரதத்திற்கான தெய்வங்களுக்கு பூசை செய்ய வேண்டும். விரதங்களில் குறிப்பிட்ட முறைப்படியே பூசை விதிகளையும், விதி முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் குறிப்பிட்டுள்ள மலர்களே பயன்படுத்த வேண்டும். மாற்று மலர்கள் பயன்படுத்தக் கூடாது. இது விரதங்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் என்பது முன்னோர் நம்பிக்கை.
இவை விரதம் இருக்கும் பொது விதிகளாகும். இவற்றோடு சம்பிரதாய பூர்வமாக தமது பிரதேசங்களில் நிகழும் நடைமுறைகளையும், குருமூலமாக உபதேசிக்கப்பட்டவற்றையும் சேர்த்து முழுமனதாக விரதத்தை நம்பிக்கையோடு கடைப்பிடித்தலே முறையாகும்.

விரதம் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவற்றை மனதில் உறுதியாகக் கொள்ளுவதையே விரதம் என்பார்கள். இவ்விதம் விரதம் கடைப்பிடிக்கின்றபோது எதனைச் செய்ய வேண்டும், எதனைச் செய்யக்கூடாது என்பதனை புராணங்கள் தெளிவு படக்கூறுகின்றன. இவற்றை நாம் முறைப்படி கைக்கொண்டால் விரதத்தின் முழுப் பயனைப் பெற்றுக்கொள்ளலாம்

No comments:

Post a Comment