Saturday, February 5, 2011

ஆதிசங்கரரின், கனகதாரா ஸ்தோத்ரம்

ஆதிசங்கரரின், கனகதாரா ஸ்தோத்ரம்

“கொடுக்கிற தெய்வம், கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்’ என்று ஒரு பழமொழி உண்டு. முன் ஒரு சமயம், தன் வறுமையைப் போக்க, அம்பாள் குறித்து, ஏழைப் பெண் ஸ்தோத்ரம் செய்ததாகவும், உடனே, அந்த வீட்டில் பொன்மாரி பொழிந்ததாகவும், வறுமை நீங்கிய தாகவும் சரித்திரத்தில் உள்ளது. இக்காலத்தில் அப்படியொரு பொன்மாரி எங்கேயாவது பெய்துள்ளதா? சாதாரணமாக யாருக்காவது ஒரு புதையல் கிடைத்து விட்டது என்றாலே, ஊர் மணியக்காரர், தாசில்தார், போலீசார் எல்லாம் வந்து விடுகின்றனர்; புதை யலை கொண்டு போய் விடுகின்றனர். சாதாரண புதையலுக்கே இப்படி என்றால், பொன்மாரி பொழிந்து விட்டால் சும்மா விடுவரா? போலீஸ் மட்டுமல்ல, ராணுவமே வந்தாலும் வந்து விடும்.அப்படியே பகவான் கூரையைப் பிய்த்துக் கொண்டு பணத்தையோ, பவுனையோ கொட்டினால், வீட்டுக்காரன் அதையெல்லாம் வாரி பத்திரப்படுத்தி விட்டு, ஏதோ கொஞ்சம் பவுனை காட்டி, “இது தான் கிடைத்தது…’ என்பான். அது மட்டுமா? “பகவான் என் வீட்டு கூரையை பிய்த்து விட்டானே! இந்த கூரையை சரி செய்வது யார் பொறுப்பு? இதற்கு நஷ்டஈடு யார் கொடுப்பர்?’ என்றெல்லாம் வாதாட ஆரம்பித்து விடுவான். பகவானுக்கும், “ஏண்டா இவனுக்கு இப்படிக் கொடுத்தோம்!’ என்று தோன்றும்.
ஒரு ஏழைப் பெண்மணியானவள், வாசலில் வந்து பிச்சை கேட்டு நிற்கும் சன்னியாசிக்கு பிச்சையிட வீட்டில் எதுவுமில்லையே என்று வருந்தி, வீட்டு மாடத்திலிருந்த ஒரு நெல்லிக்கனியை எடுத்து வந்து, கண்ணீருடன் அந்த சன்னியாசியிடம் சமர்ப்பித்தாள். இவளுடைய உண்மையான பக்தியையும், அவளுடைய ஏழ்மை நிலையையும் கண்டு கொண்ட சன்னியாசி வேடத்திலிருந்த ஆதிசங்கரர், கனகதாரா ஸ்தோத்ரம் சொல்லி, பொன்மழை பெய்ய வைத்தார் என்பது சரித்திரம். அந்தப் பெண்மணியை போல் மனமுவந்து, இருப்பதை கொடுத்து, நிறைய கொடுக்க இயலவில்லையே என்று வருத்தப்படுபவர் இருந்தால், பொன்மழை பெய்யலாம்

No comments:

Post a Comment