Monday, February 14, 2011

முருகநாயனார்

முருகநாயனார் புராணம்


மன்னுதிருப் புகலூர்வாழ் முருகனாரா
மறையவர்கோ வர்த்தமா னீச்ச ரத்தார்
சென்னியினுக் கழகமரு மலர்கள் கொய்து
திருமாலை புகழ்மாலை திகழச் சாத்திக்

கன்னிமதிற் கழுமலநா டுடைய நாத
காதன்மிகு மணங்காணுங் களிப்பினாலே
யின்னல்கெட வுடன்சேவித் தருளான் மீளா
திலங்கு பெரு மணத்தரனை யெய்தி னாரே.

சோழமண்டலத்தில், திருப்புகலூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவராகிய முருகநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தினந்தோறும் சூரியோதயத்துக்குமுன் எழுந்து ஸ்நானம்பண்ணிச் சந்தியாவந்தனம் முடித்துக்கொண்டு போய், கோட்டுப்பூ கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்கின்ற நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிலே இட்டுக்கொண்டு வந்து, தனியிடத்திலிருந்து, பலவகைப்பட்ட திருமாலைகள் செய்து, அந்த ஸ்தலத்திலுள்ள வர்த்தமானீச்சரம் என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தும், திவ்விய மந்திரமாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைச் செபித்தும் வருவார்.
இப்படிச் செய்துவருங்காலத்திலே, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குச் சிநேகராகிய பெருமையையும் பெற்றார். பெற்ற அம்முருகநாயனார் அந்தத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமணத்தில் தம்முடைய சிவபூசாபலத்தினாலே போய், பரமசிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.



No comments:

Post a Comment