Tuesday, February 8, 2011

ராகு, கேது என்னும் கிரகங்களின் வரலாறு

அதிக ஆசைக்கு முற்றுப்புள்ளி!

ஆசையில்லாமல் வாழ்க்கையில்லை; அதே நேரம், அதிக ஆசை வாழ்க்கையை அழித்து விடும். ராகு, கேது என்னும் கிரகங்களின் வாழ்க்கை வரலாறு இதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்து, அதில் இருந்து இறப்பை அறவே நீக்கும் அமுதத்தைப் பருக திட்டமிட்டனர். இந்த முயற்சியில் அசுரர்களும் சேர்ந்து கொள்ள விரும்பினர். மிகப்பெரிய பாற்கடலைக் கடைய, ஒரு மலையே மத்தாக தேவைப்பட்டது. மேருமலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பை கயிறாக்கி இருதரப்பினரும் கடைந்தனர். தேவர்களுக்கு அமுதம் கிடைக்கும் வேளையில், அதைப் பிடுங்கிச் சென்று தாங்கள் அருந்திவிட வேண்டும் என்பது அசுரர்களின் திட்டம்.
இதை அறிந்த திருமால், இரு தரப்புக்கும் சமமாக அமுதத்தைப் பங்கிட முடிவு செய்து, தேவர்களுக்கு முதலில் அமுதம் பரிமாறப்படும் என்றும், இடையில் தெரியாமல் வந்து அமுதத்தை ஒரு அசுரன் பருக முயற்சித்தால் கூட, முழுமையாக தேவர்களுக்கே கொடுத்து விடுவதாகவும் கூறி எச்சரித்தார். அமுத கலசம் வெளிப்பட்டதும் மோகினி அவதாரம் எடுத்தார் அவர். அவளது அழகில் அசுரர்கள் லயித்திருந்த நேரத்தில், தேவர்களுக்கு அமுதத்தை வேகமாக பரிமாறினார். இதை கவனித்து விட்டான் சுவர்பானு என்ற அசுரன்.
தங்கள் இனத்துக்கே அமுதம் கிடைக்காமல் திருமால் சதி செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட அவன், தன் இனத்தாரை எச்சரிக்க முயன்றான்; ஆனால், மோகினியின் அழகில் மூழ்கியிருந்த அசுரர்கள், அவனது பேச்சைக் கண்டுகொள்ளவே இல்லை. எனவே, அவன் மட்டும் தேவர் போல் வேடம் தரித்து அமுதம் பரிமாறும் வரிசையில் அமர்ந்து விட்டான். திருமால், அவனுக்கும், அமுதம் கொடுக்கவே வேகமாக சாப்பிட்டு விட்டான். எனவே, அவனுக்கு சாகாவரம் கிடைத்துவிட்டது.
சுவர்பானு உருமாறி அமுதம் பருகியதை சூரியனும், சந்திரனும் கவனித்து திருமாலிடம் காட்டிக் கொடுத்து விட்டனர். அவனை வெட்டித் தள்ளினார் திருமால். இரு துண்டானாலும், அமுதம் பருகியதால் அவனுக்கு உயிர் போகவில்லை; அவன் சிவபெருமானைச் சரணடைந்தான். அவனுடைய மனித முகம் இருந்த பாதி உடலில், பாம்பு உடலைப் பொருத்தி ராகு என்று பெயர் வைத்தார். தலையற்ற உடலுக்கு பாம்புத் தலையைப் பொருத்தி கேது என பெயர் வைத்தார் சிவன்; அவர்களை வானமண்டலத்தில் நிழல் கிரகங்களாக்கி வைத்தார்.
சூரிய, சந்திரரால் அவர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதால், தினமும் ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி நேரம்) வீதம் சூரியனின் பணியையும், சந்திரனின் பணியையும் செய்ய அனுமதித்தார். இந்த காலமே ராகு மற்றும் எமகண்டம் எனப்படுகிறது.
ஆனாலும், அவர்களின் ஆதிக்க காலத்தில் சுபநிகழ்ச்சிகளை தேவர்கள் தவிர்த்து விட்டனர். பதவியிருந்தும் அதிகாரமில்லாமலே இன்று வரை அவர்கள் இருக்கின்றனர். அவர்களது அதீத ஆசையால் அசுரர்களுக்கு கிடைக்க இருந்த பாதிப் பங்கு அமுதமும் கிடைக்காமல் போய்விட்டது.
ராகு, கேதுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, எதற்கும் அவசரப்படாமல், நம் உழைப்புக்குரிய பலன் கிடைக்கும் வரை காத்திருந்து பெற்றால் தான் அது நிலைத்து நிற்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.










No comments:

Post a Comment