Sunday, February 13, 2011

இயற்பகையார்

இயற்பகையார்
சோழமண்டலத்திலே, காவேரிநதி சமுத்திரத்தோடு கலத்தலால் காவேரிசங்கமம் எனப்பெயர்கொண்ட விசேட தீர்த்தம் பொருந்திய காவிரிப்பூம்பட்டினத்திலே, வைசியர் குலத்திலே, குருலிங்க சங்கமபத்திகளிற் சிறந்தவரும் ஒளதாரியம் உள்ளவரும் ஆகிய இயற்பகையாரென்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் இல்லறத்தில் இருந்து, விபூதி உருத்திராக்ஷம் தரித்த சிவபத்தர்களுக்கு அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு கொடுத்துக்கொண்டு வருங்காலத்தில்; ஒருநாள், திருக்கைலாசபதியானவர், அவ்வியற்பகையார் அடியார்கள் விரும்பியவை யாவையேனும் அவற்றை மறாது கொடுத்தலைச் சகலருக்கும் புலப்படுத்தும்பொருட்டு, ஒரு பிராமணவடிவங் கொண்டு, விபூதி திருமேனியிலே பிரகாசிக்க, தூர்த்த வேடமுந் தோன்ற, அவர் வீட்டிற்கு எழுந்தருளினார். இயற்பகை நாயனார் அன்பினோடு அவரை எதிர்கொண்டு நமஸ்கரித்து, அழைத்துக்கொண்டு போய் விதிப்படி அருச்சித்து, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளியது பூர்வசன்மத்தில் அடியேன் செய்த தவத்தினாற் போலும்" என்றார். அது கேட்ட ஐயர் இயற்பகைநாயனாரை நோக்கி, "சிவனடியார்கள் விரும்பிக் கேட்பன யாவையெனினும் நீர் அவைகளை மாறாமல் மகிழ்ச்சியோடு கொடுத்தலை நான் கேள்வியுற்று, உம்மிடத்திலுள்ள ஒரு பொருளை விரும்பி இன்றைக்கு இங்கே வந்தேன். நீர்தருதற்கு இசைவீராயில், அந்தப்பொருள் இன்னது என்று சொல்லுவேன்" என்றார். அதற்கு இயற்பகைநாயனார் "எப்படிப்பட்ட பொருளாயினும் என்னிடத்தில் இருக்குமாயின், அந்தப்பொருள் நமது கடவுளாகிய பரமசிவனுடைய அடியார்களுக்கு உரிய பொருளேயாம். இதைக் குறித்துத் தேவரீர் சந்தேகிக்க வேண்டுவதில்லை. திருவுள்ளம் விரும்பியதை இன்னது என்று சொல்லியருளும்" என்று சொல்ல; ஐயர் " உம்முடைய மனைவியை விரும்பிவந்தேன்" என்றார், அப்பொழுது இயற்பகைநாயனார் முன்னிலும் பார்க்க மிக மகிழ்ந்து வணங்கி நின்று, "சுவாமீ! தேவரீர் அடியேனிடத்தில் உள்ள பொருளையே விரும்பிக் கேட்டது அடியேனுடைய பாக்கியம்" என்று சொல்லி, சீக்கிரம் உள்ளே போய், கற்பிலே சிறந்த தம்முடைய மனைவியாரை நோக்கி, "நான் இன்றைக்கு உன்னை இந்தச் சிவனடியாருக்கு கொடுத்துவிட்டேன்" என்றார். உடனே மனைவியார் மனங்கலங்கிப் பின்னே தெளிந்து, "பிராணநாயகரே! நீர் கட்டளையிட்டது எதுவோ அதையே நான் செய்வேன். அதையன்றிச் செய்தற்கு உரிய காரியம் எனக்கு வேறொன்று உண்டோ? இல்லை" என்று சொல்லி, அவரை வணங்க; அவர் தமது மனைவியாரை, அங்கு வந்த சிவனடியாருக்கு மனைவியா கைபற்றி, வணங்கினார். மனைவியார் போய், அவ்வையாருடைய பாதங்களிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்றார். அதுகண்ட இயற்பகைநாயனார் மனமகிழ்ந்து அவ்வையாரை வணங்கி "இன்னும் அடியேன் செய்யவேண்டிய பணியாது" என்று வினாவ, ஐயர் "இந்தப்பெண்ணை நான் தனியே கொண்டு போகையால், உங்கண்மேலே பற்றுள்ள பந்துக்களையும் ஊரவர்களையும் கடக்குவரைக்கும் அவர்களால் எனக்கு ஓரிடையூறும் உண்டாகாதிருக்கும்படி, நீர் துணையாக வரவேண்டும்" என்றார். இயற்பகைநாயனார் அதைக் கேட்டு, "இவர் கட்டளையிடுமுன் நானே நினைந்து செய்யவேண்டிய இக்குற்றேவலைச் செய்யாமல், இவர் சொல்லும் வரைக்கும் தாழ்ந்து நின்றது குற்றம்" என்று நினைத்துக் துக்கித்து, ஆயுதசாலையிலே போய், போர்க்கோலங் கொண்டு, வாளும் பரிசையும், ஏந்திக்கொண்டு, ஐயரிடத்திற்கு வந்து, அவரை வணங்கி, அவரையும் மனைவியாரையும் முன்போம்படி செய்து தாம் பின்னே போனார்.
அப்பொழுது இயற்பகைநாயனாருடைய சுற்றத்தவர்களும் அவர் மனைவியாருடைய சுற்றத்தவர்களும் "இயற்பகை பைத்தியத்தினாலே தன் மனைவியைக் கொடுத்தானாயினும், அவளை ஒருவன் கொண்டுபோவது நீதியா" என்று, தங்கள் மரபுக்கு வரும் பெரும்பழியை நீக்கிக் கொள்ளும்பொருட்டு அவர்களைத் தொடரக் கருதி, வேல் வில் வாள் முதலிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, சண்ட மாருதம் போலத் தீவிரமாக நடந்து, நகருக்குப் புறத்திலே போய், ஐயருக்கு இருபக்கத்திலும் நெருங்கி, ஆராவாரித்து, "ஓ துட்டனே! எங்களுக்குப் பழி வராதபடி எங்கள் குலப்பெண்ணை விட்டுப்போ" என்று சொல்லி, அவரை வளைத்துக் கொண்டார்கள். ஐயர் அதைக் கண்டு, அஞ்சினவர்போல இயற்பகைநாயனாருடைய மனைவியாரைப் பார்க்க; அம்மனைவியார் "சுவாமி! நீர் பயப்படவேண்டாம். இயற்பகைநாயனார் அவர்களை வெல்லுவார்" என்றார். இயற்பகை நாயனார் அதைக் கேட்டு, "அடியேன் அவர்கள் எல்லாரையும் இப்போது கொன்று போடுகின்றேன், தேவரீர் அஞ்சவேண்டாம்" என்று சொல்லி, அங்கு வந்த சுற்றத்தவர்களைப் பார்த்து, "நீங்கள் என்வாளுக்கு இரையாவீர்கள். ஒருவரும் எனக்கு எதிர் நில்லாமல் ஓடிப் பிழையுங்கள்" என்று கூற; அவர்கள் "ஏடா இயற்பகை! நீ என்னகாரியஞ்செய்தாய்! ஊரவர்கள் பேசும் பழிமொழிக்கும் நம்முடைய சத்துருக்கள் நகைக்கும் நகைப்புக்கும் நீ சற்றாயினும் வெட்கப்படவில்லை, மனைவியைப் பிராமணனுக்குக் கொடுத்தோ நீ சாமர்த்தியம் பேசுவது, நாமெல்லாம் ஒருங்கே மடிவதன்றி இந்தப் பெண்ணைப் பிராமணனுக்குக் கொடுக்க விடோம்" என்றார்கள். உடனே இயற்பகைநாயனார் அதிக கோபங்கொண்டு, உங்கள் சரீரங்களைத் துண்டம் துண்டமாக்கி உங்களுயிரைச் சுவர்க்கத்துக்கேற்றி ஐயரைத் தடையின்றிப் போகவிடுவேன்" என்று சொல்லி எதிர்க்க; அவர்கள் அந்நாயனாரோடு யுத்தஞ்செய்யத் தொடங்காமல், அவர் மனைவியாரைக் கொண்டுசெல்கின்ற ஐயருக்கு முற்பட்டு, அதிக கோபத்தோடும் அவரைத் தடுத்தார்கள். அதுகண்ட நாயனார் கோபங்கொண்டு, வாளினாலே, இடசாரி வலசாரியாக மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களுடைய தோள்களையும் கால்களையும் தலைகளையும் துணித்து, விழுத்தி, பின் ஒவ்வொருவராய் வந்து எதிர்த்தவர்களையும் கொன்று, மேல் எதிர்ப்பவர் ஒருவருமின்றி யுத்தகளத்திலே உலாவினார். பின் இந்தச் செயற்கருஞ் செய்கையைச் செய்த நாயனார் ஐயரை நோக்கி, "சுவாமி! தேவரீர் அஞ்சாவண்ணம் இந்தக் காட்டைக் கடக்கும் வரைக்கும் வருகிறேன்" என்று சொல்லி, அவரோடு போனார். திருச்சாய்க்காடு என்னுஞ்சிவஸ்தலத்துக்கு சமீபத்திலே போன பொழுது, ஐயர் இயற்பகைநாயனாரை நோக்கி, "இனி நீர்திரும்பிப் போகலாம்" என்று சொல்ல; நாயனார் அவருடைய திருவடிகளை வணங்கி அஞ்சலிசெய்து ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டு திரும்பினார். அப்பொழுது ஐயர் "இயற்பகையே! இங்கே வா" என்று சொல்லி ஓலமிட்டார். நாயனார் அந்த ஓசையைக்கேட்டு, "அடியேன் வந்துவிட்டேன் வந்துவிட்டேன். இன்னும் இடையூறு, செய்பவர்கள் உண்டாயில், கொன்று போடுவேன்" என்று சொல்லிக்கொண்டுவர; ஐயர் மறைந்தருளினார். வந்த நாயனார். அவ்வையரைக்காணாமல் மனைவியாரைமாத்திரங் கண்டார். பின்பு ஆகாயத்திலே பார்வதி சமேதராகி இடபவாகனத்தில் எழுந்தருளிவந்த திருக்கைலாசபதியைக் கண்டார்.
ஆராமையினாலே உடனே விழுந்தார்; எழுந்து ஸ்தோத்திரம்பண்ணினார். சுவாமி அவரை நோக்கி "நம்மேலும் நம்முடைய அடியார்கண் மேலும் நிஷ்களங்கமாகிய அன்பு வைத்த இயற்பகையே! நீ உன் மனைவியோடும் நம்முடனே வா" என்று திருவாய் மலர்ந்து, அந்தர்த்தானமாயினார். இயற்பகைநாயனாரும் மனைவியாரும் சிவலோகத்தை அடைத்து, பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள். யுத்தத்திலே இறந்த அவர்கள் பந்துக்களும் வானுலகத்தை அடைந்து இன்பமனுபவித்தார்கள்.

No comments:

Post a Comment