Sunday, February 13, 2011

மன்னருக்கு உரிய பண்புகள்

மன்னருக்கு உரிய பண்புகள்
மன்னன் மயில் போல் இருக்க வேண்டும்

மன்னருக்கு உரிய பண்புகள் பற்றி மேலும் அறிய விரும்புவதாக தருமர் கூற பீஷ்மர் உரைக்கலானார்..
'தருமா..எல்லா உயிரினங்களையும் காக்க வேண்டியது மன்னனது கடமை ஆகும்.மன்னன் மயிலைப் போல திகழ வேண்டும்.மயில் தன் பல வண்ணத் தோகையை எவ்விதம் அமைத்துக் கொள்கிறதோ அவ்விதம் தருமம் அறிந்த மன்னன் பலவிதமான வடிவங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.வரி வசூலிக்கும் போது சத்தியத்தையும், நேர்மையையும் மேற்கொண்டு நடுவு நிலையுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.தண்டனை தரும் போது கடுமையாகவும், உதவி செய்யும் போது அன்புடனும் தோன்ற வேண்டும்.
மயில் சரத் காலத்தில் ஒலி எழுப்பாது இருப்பதைப் போல அரசன் மந்திராலோசனையை வெளியிடாமல் காக்க வேண்டும்.மன்னன் மயிலைப் போல இனிய குரலும்,மென்மையான தோற்றமும் தன் செயலில் ஆற்றலும் உள்ளவனாகத் திகழ வேண்டும்.
மயில் நீரருவிகளில் நாட்டம் உள்ளதாக இருப்பதைப் போல மன்னன் வரவு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.மயில் மலையில் உள்ள மழை நீரை விரும்பியிருப்பதைப் போல மன்னன் ஆன்றோரைச் சார்ந்திருக்க வேண்டும்.மயில் தன் தலையில் உள்ள சிகையை எப்போதும் தூக்கி வைத்திருப்பதைப் போல மன்னன் தருமக் கொடி கட்டி அடையாளம் காட்ட வேண்டும்.மயில் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு பாம்பு முதலியவற்றைத் தாக்க எப்போதும் விழிப்புடன் இருப்பதைப் போல மன்னன் தண்ட நீதி வழங்குவதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மயில் தான் இருக்கும் மரத்திலிருந்து செழுமையான மற்றொரு மரத்துக்குச் செல்வது போல, மன்னன் வரவு செலவுகளைக் கண்டு, வரவு அதிகமாகவும் . செலவு குறைவாகவும் உள்ள செயல்களில் ஈடுபட வேண்டும்.மயில் தன் தோற்றத்தினாலேயே காக்கை முதலான பறவைகளின் குறை தோன்றுமாறு இருப்பது போல, மன்னன் தன் நேர்மையினாலேயே பகை மன்னர்களின் குறைகள் வெளிப்படுமாறு இருத்தல் வேண்டும்.மயில் உயர்ந்த வளமான மலையை நாடுவது போல, மன்னன் தன்னைவிட உயர்ந்த மன்னர்களுடன் நல்லுறவு கொள்ள வேண்டும்.மயில் களைத்த போது நிழலை விரும்புவது போல, தளர்ந்த காலத்தில் சுற்றத்தாரிடம் விரும்பிச் செல்ல வேண்டும்.
மயில் வேனிற் காலத்தில் மரத்தில் மறைந்திருப்பது போல அரசன் ரகசியமான இடங்களைச் சார்ந்து இருக்க வேண்டும்.மயில் மழைக்காலத்தில் மகிழ்ந்து இருப்பது போல மன்னன் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனிமையில் மகிழ்ந்து இருத்தல் வேண்டும்.மயில் தான் சஞ்சரிக்கும் இடங்களில் தன்னைப் பிடிக்க அமைத்த வலைகளை விலக்கித் தப்பித்துக் கொள்வது போல, மன்னன் பகைவர் விரித்த வலைகளை ஒற்றர்கள் மூலம் அறிந்து அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.மயில் நச்சுத் தன்மை வாய்ந்த பாம்புகளைக் கொல்வது போல அரசன் வஞ்சக மன்னர்களைக் கொல்ல வேண்டும்.
மயில் புழு முதலியவற்றை வெறுக்காது இருப்பது போல, மன்னன் தாழ்ந்தவரைக் கண்டு அருவருப்பு அடையக் கூடாது.மயில் உறுதியான சிறகுகளைக் கொண்டிருப்பதைப் போல, மன்னன் உறுதி மிக்க அமைச்சர்களைப் பெற்றிருக்க வேண்டும்.மயில் தன் சிறகுகளை விருப்பப்படி விரிப்பது போல, மன்னன் தன் சுற்றத்தாரிடம் விரிந்து பரந்த மனதுடன் இருக்க வேண்டும்.எல்லா இடங்களில் இருந்தும் நல்லறிவைப் பெற்று நாட்டை நன்கு ஆட்சி புரிய வேண்டும்'

No comments:

Post a Comment