Tuesday, February 8, 2011

அடி உதவுவது போல...

அடி உதவுவது போல...

கேகய தேசத்து ராணி கேகயி. இவள், தசரதரின் மனைவியான கைகேயியின் தாய். கேகய நாட்டு அரசனுக்கு விலங்குகள், பறவைகள், பூச்சிகள் பேசும் மொழிகளைப் புரிந்து கொள்ளும் ஞானம் இருந்தது. சாமிகா ரிஷி என்பவர் மன்னனுக்கு இவ்வரத்தை தந்தபோது, ""பறவை விலங்குகள் பேசிக்கொள்வதைப் புரிந்து கொள்ளும் வரத்தை என்னிடமிருந்து பெற்ற நீ மற்றொரு விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். அவை பேசுவதை, ஒருபோதும் பிறருக்கு சொல்லக் கூடாது. மீறினால் உன் தலை சிதறி விடும்,'' என்று எச்சரிக்கையும் செய்திருந்தார்.
ஒருநாள் பூந்தோட்டத்தில் மன்னனும், ராணியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு எறும்பு ஒரு அரிசியைச் சுமந்து கொண்டு சென்றது. மற்றொரு எறும்பு அதன் அருகில் வந்தது. அது பேசுவது மன்னனின் காதில் விழுந்தது. ""நண்பா! எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. அந்த அரிசியை எனக்குக் கொடு''என்றது ஒரு எறும்பு. அரிசியைக் கொண்டு சென்ற எறும்பு, ""உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த நீ தாழ்ந்த ஜாதியான என்னிடம் அரிசியைப் பெறமுடியாது'' என்றது. "எறும்புகளிடம் கூட ஜாதிபேதம் இருக்குமா? இந்த சிறுமைத்தனம் எப்படி இவற்றுக்கு வந்தது?' என்று சிந்தித்த மன்னர் வாய்விட்டு சிரித்தார். அருகில் அமர்ந்திருந்த ராணி கேகயிக்கு, மன்னரின் சிரிப்பு விந்தையாக இருந்தது. ""ஏன் சிரித்தீர்கள்? '' என்று கேட்டாள். சாமிகா ரிஷியின் எச்சரிக்கை மனதில் உதயமானதால், அவளிடம் மன்னனால் ஏதும் சொல்ல முடியவில்லை.
கேகயி பிடிவாதமாக,""நீங்கள் எதையோ என்னிடம் மறைக்கிறீர்கள். உங்கள் சிரிப்புக்கான காரணத்தை என்னிடம் சொல்லாவிட்டால் நான் சாப்பிட மாட்டேன், உங்களிடம் பேசவும் மாட்டேன்,'' என்று கோபித்துக் கொண்டாள். அரசன் வேண்டாத இக்கட்டில் மாட்டிக் கொண்டான். என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை.
"அன்பே! உண்மையை என்னால் சொல்ல முடியாது. அப்படி மீறியும் நடந்ததைச் சொன்னால் என் தலை சுக்கு நூறாக சிதறி விடும். உன் பிடிவாதத்தை விட்டு விடு'' என்று வேண்டினான். ராணியோ அதை நம்பாமல் தன் நிலையில் பிடிவாதமாக இருந்தாள். பலமான யோசனைக்குப் பின் மன்னன்,
""அன்பே! என் உயிர் போவதைப் பற்றி நீ கவலைப்படவில்லை. இறக்க முக்தி காசி என்பார்கள். அங்கு இறப்பவர்கள் நற்கதி அடைவர். அதனால் இந்த உண்மையை உனக்கு காசியில் வந்து சொல்லிவிட்டு இறந்து விடுகிறேன்,'' என்று சொன்னான். மன்னனும், ராணி கேகயியும் காசிக்குப் புறப்பட்டனர். அங்கு சென்றதும் உண்மையைச் சொல்லும்படி வேண்டினாள். மன்னன் அவளிடம், "" மூன்று தினங்கள் பொறுமையாக இரு. உனக்கு அப்போது உண்மையைச் சொல்கிறேன்'' என்றான்.
தன் விதியை நொந்து கொண்டு வெளியில் உலாவச் சென்றான். அங்கொரு மரத்தடியில் இரு வெள்ளாடுகள் பேசிக் கொள்வதைக் கேட்டான். பெண் ஆடு ஆண் ஆட்டிடம், ""அதோ அந்தக் கிணற்றின் மேல் சுவரில் உள்ள புல்லை எனக்கு கொண்டு வந்து கொடு. இல்லாவிட்டால் உன்னை விட்டு சென்று விடுவேன்'' என்று மிரட்டியது. கோபமுற்ற ஆண் ஆடு, ''என்ன திமிர் உனக்கு! தண்ணீர் இல்லாத அந்த பாழும் கிணற்றில் தவறி விழுந்துவிட்டால் என் நிலை என்னாகும்'' என்று சொல்லிக்கொண்டே பெண் ஆட்டை முட்டித் தள்ளியது. தன் தவறை உணர்ந்த பெண் ஆடு மன்னிப்பு கேட்டு வருந்தியது. இதைக் கண்ட மன்னன், உடனே மாளிகைக்குத் திரும்பினான். நீண்ட பிரம்பினால் ராணி கேகயியை கடுமையாக அடித்தான். ""ரகசியத்தை வற்புறுத்திக் கேட்டால் உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று எச்சரித்தான். ராணி கேகயி பயந்து போனாள்.
""பிரபு! என்னை மன்னியுங்கள். நீங்கள் எந்த ரகசியத்தையும் எனக்கு சொல்ல வேண்டாம். தயவு செய்து அடிப்பதை நிறுத்துங்கள். இன்று முதல் எதையும் கேட்டு பிடிவாதம் செய்யமாட்டேன்,'' என்று கெஞ்சினாள். மன்னனும், ராணி கேகயியும் காசியிலிருந்து அரண்மனைக்குத் திரும்பினர். மன்னன் தன் கவலையிலிருந்து மீண்டு நிம்மதி அடைந்தான். மனம் பிடிவாத குணம் கொண்டது. குரங்குப்பிடியாக சில விஷயங்களைப் பிடித்துக் கொண்டு விட மறுக்கும். அதன் போக்கில் போனால் அதற்கு நாம் அடிமையாகி விடுவோம். நம் மனதை நாமே அடித்து திருத்தி, அதைக் கட்டுபடுத்தி, நம் வசத்தில் வைத்திருந்தால் தான் கஷ்டங்களில் இருந்து விடுபட முடியும்.

No comments:

Post a Comment