Sunday, February 13, 2011

கந்தரனு பூதி பாடிய கிளி

கந்தன் திருவருளால் கந்தரனு பூதி பாடிய கிளி


திருவண்ணா மலையில் அரசாட்சி செய்து கொண்டிருந்தான் மன்னன் பிரபுட தேவராயன். அவன் மக்கள் சந்தோசம் அடையும் வண்ணம் செங்கோலாட்சி செலுத்தி வந்தான். அவன் அண்ணாமலை ஈசன் மீதும் அம்பிகை மீதும் அளவுகடந்த பக்தி செலுத்தி வந்தான். அவர் சபையில் பல புலவர்கள் ரிஷிகள் முனி குமாரர்கள் இருந்தனர். அதில் சக்தி உபாசகர் எனப் போற்றப்படும் சம்பந்தாண்டான் என்ற புலவர் இருந்தார். மன்னன் அவர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.
ஒரு நாள் மன்னனுக்கு சுகவீனம் திடீரென்று ஏற்பட்டது. அது அதிகமாகி கூடிக் கொண்டு போகத் தொடங்கியது. வைத்தியர்கள் வைத்தியம் செய்து பலனில்லாது போக கவலை அடைந்தார். கந்தன் புகழ் பாடும் அருணகிரி வந்து கந்தன் புகழ்பாடி அண்ணா மலையானை தரிசிக்க வந்த போது பிரபுட தேவராய மன்னன் தீராத நோயில் அவதிபடுவதை அறிந்து அரண்மனை சென்றார். அங்கு வைத்தியர்கள் கூறுவதைக் கேட்டு அவர்களை அனுகி நோய் தீர வழியுண்டா எனக்கேட்டார். வைத்தியர்களும் என்ன வழி தெரியாமல் திகைத்திருந்தனர். ஏற்கனவே அரசபையில் முருகனின் இறைபக்தியை அறிய அருணகிரியுடன் போட்டியிட்டு தனது சக்தியை வரவழைக்க முடியாது தோற்று போயிருந்த சம்பந்தாண்டான், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை மடக்கலாம் என எண்ணி அருணகிரியிடம் "நீர் முருக பக்தன் என்பது உன்மையானால் நான் ஆனையிடுகிறேன், நீர் தேவலோகம் சென்று பாரிஜாத மலரைக் கொண்டு வந்தால் மன்னன் நோய் நீங்கும்" என்றார்.
அருணகிரியும் "முருகனருளால் பாரிஜாத மலரை கொண்டு வருவேன்" என்று கூறி, முருகனை நினைந்து திருவண்ணாமலைக் கோயிலுக்குச் உள்ளே சென்று கோபுரத்தில் உள்ள மேல் அறையில் தியானத்தில் அமர்ந்தார். அதே நேரம் ஒரு கிளி கோபுர உச்சியில் பறந்து வந்து அங்கே அமர்ந்தது. இறையருள் நிரம்பப் பெற்ற அருணகிரிநாதர் சித்தர் கலைகலில் ஒன்றான கூடு விட்டு கூடு பாயும் கலையில் தேர்ச்சி பெற்றவர். ஆதலால் கிளியின் உடலில் உயிர் பாய்ச்சி, அதாவது தமது உடலை மறைத்து அங்கே வைத்துவிட்டு கிளி உருவில் தேவலோகம் சென்றார்.
அமராவதி நகரில் உள்ள தேவர்கள் தலைவனான இந்திரன் சபையில் வீற்றிருந்தார். அப்போது அவர் மடியில் கிளி பறந்து வந்தமர்ந்தது. அதைக் கண்ட தேவேந்திரன் ஒரு கணம் அக்கிளியை உற்று நோக்கி விட்டு "அருணகிரிநாதரே வருக வருக! என் ஐயன் முருகன் ஏற்கனவே எனக்கு இட்ட கட்டளைப்படி இந்த பாரிஜாத மலரை எடுத்து வைத்திருக்கிறேன்" என மலரை கொடுத்தார். "அமரர்க்கு அரசே அடியேனின் நன்றி" எனக்கூறிய கிளி பாரிஜாத மலருடன் பறந்து விட்டது.
கிளிபறந்து வந்து திருவண்ணாமலையில் அரசன் பிரபுட தேவராயன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் பாரிஜாதமலரை வைத்தது. "கீ கீ" என்று கத்தியது. திரும்பிப் பார்த்தான் மன்னன் "பாரிஜாத மலரை இந்தக் கிளியா கொண்டு வந்தது" என வியந்தான். கிளி பறந்துவிட்டது. அருணகிரிநாதர் தான் கிளி உருவில் சென்று மலரைக்கொண்டு வந்துள்ளார். என நிணைத்து வைத்தியர்களிடம் கொடுக்க அவர்கள் அம்மலரால் அரசன் நோய் தீர்த்தனர். மகிழ்ச்சியடைந்த மன்னன் சம்பந்தாண்டாரை வரவழைத்தார். "என்ன

சம்பந்தாண்டாரே தாங்கள் விதித்த நிபந்தனையின் படி மலரைக் கொண்டு வந்து என் நோய் நீக்கி விட்டார், தோல்வியை ஒப்புக் கொள்ளும்"என்றார். அதைமறுத்து ஏளனமாக சிரித்தார். "சம்பந்தாண்டான் ஏன் சிரிப்பு?" என கோபத்துடன் வினவிய மன்னனைப் பார்த்து "அருணகிரியாவது தேவலோகம் சென்று திரும்பி வருவதாவது, அவர் வந்திருந்தால் எங்கே இருக்கிறார் என்று தங்களால் கூறமுடியுமா" எனக்கேட்டார். உடனே அரசனும் "ஆம் அருணகிரி கிளி உருவில் வந்தார், என் அருகே பாரிஜாத மலரை வைத்து விட்டு பறந்து விட்டது கிளி இது சத்தியம்" எனக் கூறினார்.
கிளியாக வந்த அருணகிரி தமது உடலை கோபுரத்தில் தேடியது உடலைக்கான முடியவில்லை அருணகிரியாரும் முருகனை நினைந்து தொழுதார். முருகன் அவன் முன் காட்சி அளித்தான். "அருணகிரி கவலை வேண்டாம், இதே கிளியுருவில் இருந்து எம்மைப் பாடுவதைத் தொடருங்கள்" என்று அருள் புரிந்தார். இதே போல் மன்னன் கனவிலும் தோன்றி "அரசே அருனகிரி கிளி உருவில் திருவருணைக் கோபுரத்தில் எப்போதும் இருப்பார். கவலை வேண்டாம்" என்றருள் புரியவும் அரசன் ஒடோடிச் சென்றான். அருணைக் கோபுரத்துக் கிளி மன்னனைக் கண்டதும் "கீகீ" என்று அவரது தோள்மீது வந்தமர்ந்து அவர் தலை முடியைக் கோதி ஆசி கூறியது. அன்று முதல் பிரபுட தேவராயன் முருக பக்தனாக மாறிவிட்டான்.
அருனகிரியாரும் தான் மரணமடையாமல் காத்த முருகன் திருவருளை கிளியாக இருந்து பாடிய திருப்புகழே, கந்தரனுபூதி ஆகும். அவர் உடல் மறைந்தாலும் கிளியுருவில் அவர் எமக்கு அருலிய பாடல்கள் திருப்புகழ், க்ந்தரனுபூதி, வேல்வகுப்பு என்பதாகும். சம்பந்தாண்டான்னால் யாருக்கும் தெரியாமல் அருணகிரியின் உடலைதான் அழிக்க முடிந்தது. ஆனால் உயிரை அழிக்கமுடியவில்லை. திருப்புகழ் பாடினால் வாய் மணக்கும்,கந்தன் அனுபூதி பாடினால் வாழ்வு சிறக்கும்.





No comments:

Post a Comment