Tuesday, February 8, 2011

கருணையிலே கடவுளையும் காணலாம்

கருணையிலே கடவுளையும் காணலாம்

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட ஒருவர், ஒரு துறவியிடம் சென்று, ""சுவாமிஜி! இறைவனைக் காண வழி சொல்லுங்களேன்,'' என்று கேட்டார்.
"" நீ என் ஆஸ்ரமத்திலேயே தங்கி, தனிமையில் ஓராண்டு காலம் இடைவிடாமல் இறைவனை நினைத்து வணங்கி வா!

உன்னுடைய அகந்தை முற்றிலும் அகன்ற பின் நல்ல நீரில் குளித்துவிட்டு வந்து என்னைப் பார்,'' என்றார் துறவி ஆன்மிக சாதகர், ஓராண்டு காலமாக அந்த ஆஸ்ரமத்தில் தங்கி இறைவனைத் தியானித்து வந்தார். ஓராண்டு முடிந்து, துறவி குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு துறவியைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார்.
ஆஸ்ரமத்தை தூய்மைப்படுத்த ஒருவர் தினமும் அங்கு வருவார். துறவி அவரை அழைத்து, ""பணியாளனே! அதோ அந்த இடத்தில் என்னைப் பார்க்க ஒருவர் காத்திருக்கிறாரே! அவரது தலையில் இன்று ஆஸ்ரமத்தில் கூட்டிய மொத்த குப்பை�யும் தட்டி விடு. புரிகிறதா?'' என்றார்.
குப்பை கூட்டுபவருக்கு பெரும் தர்மசங்கடம். யார் தலையிலாவது குப்பையைக் கொட்டினால் அவர்கள் நம்மை சும்மா விடுவார்களா? அது மட்டுமல்ல, ஒரு பெரிய துறவியின் மனதில் இப்படிப்பட்ட விகல்பமான எண்ணங்களெல்லாம் தோன்றலாமா? என்ன மனுஷன் இவர்? அந்த மனிதர் தேமேவென அவர் பாட்டுக்கு அமர்ந்திருக்கிறார். அவர் தலையில் குப்பையைக் கொட்டுவதா?' ' என சிந்தித்தவர் அடுத்த நிமிடமே, ""ஐயையோ! துறவி கோபக்காரர் ஆயிற்றே! அவர் சொன்னதைச் செய்யாவிட்டால் நமக்கு வேலை போய் விடும், அல்லது ஏதாவது சபித்து கை, காலை அசைக்க முடியாமல் போய் விடும். எதற்கு வம்பு? இந்த சாமியார் சொன்னதைச் செய்து விடுவோம்,'' என்று மறு ஆலோசனை செய்து, துறவி சொன்னதைச் செய்து விட்டார். குப்பை கொட்டுபவனின் இந்த செயல், சாதகரின் மனநிலையைப் பெரிதும் பாதித்து விட்டது. கடுங்கோபத்துடன் அந்த பணியாளை விரட்டிக் கொண்டு ஓடினார்.
""படுபாவி! என்னை அசுத்தப்படுத்திவிட்டாயே!'' என்று ஆத்திரத்துடன் அவரை நான்கு அடி அடித்தவர், திரும்பவும் போய் குளித்துவிட்டு துறவியைச் சந்திக்க வந்தார்.""ஐயா! தாங்கள் கூறியபடி ஓராண்டு காலம் இறைவனைத் தியானித்து விட்டேன். நான் இப்போது இறைவனைக் காண முடியுமா?'' என்று கேட்டார். சாதகனை மீண்டும், ""குழந்தாய்! உன் மனதில் இன்னும் பணிவும் பொறுமையும் ஏற்படவில்லை. இன்னும் பயிற்சிசெய்து மனதை அடக்கு'' என்றார் துறவி. மீண்டும் தன் பயிற்சியைத் தொடங்கி வெற்றிகரமாக முடித்தார் ஆன்மிகசாதகர்.
இரண்டாம் ஆண்டு பூர்த்தியடைந்ததும், சாதகர் குளித்து விட்டு வழக்கம் போல் துறவியைக் காண காத்திருந்தார். அன்றைய தினமும், பணியாளரை அழைத்த துறவி, குப்பையைக் சாதகரின் தலை மீது கொட்டச் சொன்னார். அவரும் அப்படியே செய்து விட்டு நடுங்கி நின்றார். ஆனால், மனம் பக்குவப்பட்டிருந்த சாதகர் பணியாளைக் கோபிக்கவில்லை. பயந்து நின்ற பணியாளைப் பார்த்து,
""மகனே! தவறு செய்வது மனித இயற்கை. உனது கையிலுள்ள குப்பை கவனக்குறைவாகக் கொட்டியிருக்கலாம். அதனால் மனம் வருந்தாதே'' என்று இனிய வார்த்தைகளை அன்புடன் கூறினார்.
இதைக் கேட்ட துறவி மனம் மகிழ்ந்தார்.
சாதகரிடம், ""குழந்தாய்! கோபப்படும் சூழ்நிலையிலும், உணர்ச்சி வசப்படாமல் இருப்பதே மனிதனுக்கு தேவையான உயர்ந்த நிலை. அப்படிப்பட்ட நிலையே தெய்வீகம். தெய்வம் என்ற ஒரு வடிவத்தை நம் மனதிற்குள் கற்பனை செய்து கொண்டு அதைக் காணவே நாம் அனைவரும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதை விடுத்து மனதிற்குள்ளேயே தெய்வத்தைக் காண வேண்டும். அதற்கு மித மிஞ்சிய பொறுமை வேண்டும், '' என்று சொன்னார்.
மேலும் அவர் அந்த சாதகரிடம், ""மகனே! அன்று உன் உள்ளம் தூய்மை பெறாததால், புறத்தூய்மையை இழந்ததும் அசுத்தமாகி விட்டதாக எண்ணி கோபம் கொண்டாய். ஆனால், இன்று அகத்தூய்மை (மனசுத்தம்) பெற்று விட்டதால் அவனை அடிக்க உன்னால் கையை ஓங்க முடியவில்லை. அகத்தூய்மையே நமக்கு தீமை செய்வோரிடமும் தெய்வம் ஒளிந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும். இப்போது உன் மனம் பக்குவமடைந்து விட்டது,'' என்றார். தெளிந்த மனநிலையில் இருந்த சாதகர் அமைதியுடன் அவர் சொன்னதைக் கேட்டுச் சென்றார்








No comments:

Post a Comment