Wednesday, May 21, 2014

வைராக்யம் ஒன்றுதான் அபயம்

வைராக்யம் ஒன்றுதான் அபயம்

பகவத்கீதை என்பது ரொம்பவும் ப்ரமாணமானது.

கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: சாஸ்த்ர விஸ்தரை: |
யாஸ்வயம் பத்மநா பஸ்ய முகபத்மாத்விநி: ஸ்ருதா ||...

கீதைக்கு விசேஷம் என்ன என்று கேட்டால் அதுஸ்வயம் பகவானால் சொல்லப்பட்டது. பகவான் கிருஷ்ணாவதாரத்தில் அர்ஜுனனுக்கு இந்த பகவத் கீதையை உபதேசம் செய்தார். அப்போது சிலர் ஒரு கேள்வி கேட்பார்கள். அர்ஜுனனுக்குத்தானே உபதேசம் பண்ணினார். நமக்கு எதற்கு அது என்று சொல்வார்கள். யாருக்கு அவர் என்ன உபதேசம் பண்ணினாரோ அது அவருக்குத்தானே? இன்னொருவருக்கு அதில் சம்பந்தம் என்ன? என்பார்கள். இந்த ப்ரச்னைக்குப் பதிலாக ஆதிசங்கர பகவத் பாதாள் அந்த பகவத்கீதைக்கு பாஷ்யம் எழுதும்போது “அர்ஜுனன் நிமித்தி ப்ரத்ய லோகாய பகவான் பகவத்கீதம் உபதேஸ்யா” என்று சொன்னார். அர்ஜுனனை ஒரு நிமித்தமாக (காரணமாக) வைத்துக் கொண்டார். அர்ஜுனனுக்கு மட்டும் அந்த உபதேசம் இல்லை. அதனால் பகவத்கீதை நம் எல்லோருக்கும் பகவானால் செய்யப்பட்ட உபதேசம். அந்த பகவத்கீதையை நாம் எல்லோரும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அங்கே பகவான் என்ன உபதேசம் பண்ணி இருக்கிறாரோ அதன்படி ஆசரணம் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆசரணம் செய்வதென்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் அதற்காக முயற்சி எடுப்பது என்பது ஒன்றும் கஷ்டம் இல்லை.

முயற்சியை இப்போதே ஆரம்பிக்கலாம். அதாவது ஒருவன் பி.எச்.டி வாங்க வேண்டும் என்றால் அது ரொம்ப சிரமம். ரொம்ப நாளைக்குப் பின்பு தான் பி.எச்.டி கிடைக்கும். ஆனால் அதற்கு முயற்சி எடுக்கவேண்டும் இல்லையா? மிகவும் முன்னாலேயே அவன் அந்த முயற்சியை ஆரம்பித்தால் ரொம்ப வருஷத்திற்குப் பிறகு பி.எச்.டி வாங்கிக் கொள்ளலாம். பி.எச்.டி பற்றி சொன்னால் நன்றாக இருக்காது. சி.ஏ. பற்றி சொல்லவேண்டும். சி.ஏ. பரீக்ஷை பாஸ் ஆகவேண்டும் என்று சொன்னால் அவன் ரொம்பவும் முன்னாடியே முயற்சி எடுக்கவேண்டும். அந்த முயற்சியில் ஒரேயடியாக அவன் பாஸ் ஆகமாட்டான். ஆனால் என்றைக்காவது ஒரு நாள் அவன் பாஸ் ஆகிவிடுவான். எப்போதும் முயற்சியை அவன் பண்ணிக் கொண்டேயிருந்தால் பாஸ் ஆகிவிடுவான். முயற்சி எடுக்கவில்லை என்றால் என்றைக்குமே அவன் பாஸ் ஆகமுடியாது. அதேபோல் பகவத்கீதையில் பகவான் சொல்லியிருக்கக் கூடிய உபதேசங்களை நாம் ஆசரணம் செய்வதற்கு முயற்சி செயதோமானால் என்றைக்காவது ஒரு நாள் நம்முடைய முயற்சி பலிக்கும். பகவானுடைய உபதேசத்தின் படி நாம் அனுஷ்டானம் செய்வோம். நம்முடைய வாழ்க்கையை ஸார்த்தகம் ஆக்கிக் கொள்வோம். என்ன முயற்சி? பகவான் சொன்ன விஷயங்கள் நிறைய இருக்கிறது. பகவத்கீதையைப் பற்றி நாம் எத்தனையோ நாட்கள் பேசலாம். அது ஒரு நாளில் முடியக் கூடிய விஷயம் இல்லை. பகவான் சொன்னவற்றில் ஏதாவது ஒரு விஷயத்தையாவது நாம் எடுத்துக் கொண்டு அதைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். முக்கியமாக ஒரு கேள்வி அர்ஜுனன் பகவானிடம் கேட்டான். பகவான் பல விஷயங்களைச் சொன்ன பிறகு அர்ஜுனன் ஒரு கேள்வி கேட்டான். பகவானே! இந்த மனிதர்கள் அநேகம் பேர் பல நல்ல விஷயங்களை எல்லாம் பெரியோரிடம் கேட்டு பல புஸ்தகங்களை எல்லாம் பார்த்து பலவிஷயங்களைப் புரிந்து கொண்டும் கூட தவறான காரியங்களைச் செய்கிறார்களே? அதனால் இந்தத் தவறான காரியங்கள் பண்ணுகிறவர்கள் தெரியாதவர்கள் என்று நாம் சொல்லமுடியாது. ரொம்பத் தெரிந்தவர்களும் தவறான காரியங்களைப் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் எனக்கு ஒரு பெரிய ப்ரச்னையாக இருக்கிறது. தெரிந்தும் தவறான காரியங்கள் செய்வதன் காரணம் என்ன? என்று கேட்டான். அப்போது பகவான் அர்ஜுனனிடம் நீ கேட்கிற கேள்வி தவறானது என்று சொல்லவில்லை. நீ முட்டாள் மாதிரி கேட்கிறாய் என்றும் சொல்லவில்லை. பகவான், “நீ கேட்ட கேள்வி ரொம்ப சரிதான். இந்த மனிதருடைய போக்கு அப்படித்தான் இருக்கு. எல்லாம் தெரிந்து கொண்டும் தவறு பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஒன்றும் இல்லாமல் இல்லை” என்று சொன்னார். என்ன காரணம்? நெருப்பில் கை வைக்கக் கூடாது என்று குழந்தைக்குத் தெரியாது. தெரியாததினால் அது கையை வைத்துவிட்டது. அதனுடைய கை சுட்டுவிட்டது. இன்னொருவனுக்கு நெருப்பில் கை வைத்தால் சுடும் என்று தெரிந்தும் கூட அவன் கை வைக்கிறான் என்றால் அது ரொம்ப ஆச்சர்யம் இல்லையா? அதே மாதிரி மனிதன் எது நல்லது எது கெட்டது என்று தெரிந்தும் கூட தவறான காரியத்தைச் செய்கிறான். அதர்மத்தை ஆசரணம் பண்ணுகிறான். அநியாயம் செய்கிறான். அஸத்யம் பேசுகிறான். இது எல்லாவற்றிற்கும் என்ன காரணம்? அதற்கு பகவான் சொன்னார் “இது எல்லாவற்றிற்கும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு காரணங்களால்தான் இந்த மாதிரித் தெரிதவர்களும் கூடத் தவறு பண்ணுகிறார்கள். என்ன அந்த இரண்டு காரணங்கள் என்று கேட்டால் பகவான் சொன்னார்:

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குணஸமுத்பவ: |
மஹாசனோ மஹாபாப்மா வித்த்யேனமிஹவைரிணம் ||

மனிதனைக் காமம், க்ரோதம் என்கிற இரண்டு குணங்கள் மனதில் இருப்பதனால் தவறான காரியங்களைச் செய்ய வைக்கிறது. இந்தக் காமமும், க்ரோதமும் எவன் மனதில் இல்லையோ அவனால் தவறான காரியங்கள் நடக்காது. இது நம் எல்லோருடைய அனுபவத்தில் இருக்கிற விஷயம். நாம் ஒரு தவறான காரியம் செய்கிறோமானால் மனதில் ஏதோ ஓர் ஆசை இருக்கவேண்டும். இல்லை யார் மேலோ கோபம் இருக்க வேண்டும். கோபத்தைப் பற்றி இராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் ஹனுமார் வாயாலே வால்மீகி வரவழைத்தார். கோபத்தைப் பற்றிய அந்தச் சந்தர்ப்பம் என்னவென்று கேட்டால் ஹனுமார் இராவணனோடு பேசி முடித்ததற்குப் பிறகு இராவணன் ஹனுமாருடைய வாலுக்கு நெருப்பு வைக்கச் சொன்னான். அப்போது அங்கே இருந்த ராக்ஷஸர்கள் எல்லோரும் ஹனுமாருடைய வாலுக்கு நெருப்பு வைத்தார்கள்.

ஆனால் அந்த நெருப்பு ஹனுமாருடைய வாலைச் சுடவில்லை. அது எதனால்? சீதை, ஹனுமாருடைய வாலுக்கு நெருப்புப் பிடித்தது என்று தெரிந்த உடனே அந்த அம்மா அக்னிபகவானைப் ப்ரார்த்தனை செய்தாள்.

அந்தச் சீதா மாதாவுடைய ப்ரார்த்தனையின் பலத்தினால் ஹனுமாருக்கு அக்னி ஒன்றும் சுடவில்லை. ஆனால் அந்த ஹனுமார் என்ன பண்ணிவிட்டார் அந்த வாலில் இருந்த நெருப்பை வைத்து முழு லங்கா பட்டணத்தையும் சுட்டுவிட்டார். எத்தனையோ வீடுகள் எல்லாம் பஸ்மம் (சாம்பல்) ஆகிவிட்டது அப்புறம் அனுமாருக்கு ஒரு யோசனை வந்தது.

நான் என்ன பண்ணுவேன். லங்கா பட்டணம் முழுவதும் சுட்டு விட்டேனே, சுடாதது ஒன்றுமே மிஞ்சாதே! அப்போது சீதா அம்மா என்ன ஆகியிருப்பாளோ? தாயாரும் இந்த அக்னியில் பஸ்மம் ஆகியிருந்தால் என் கதி என்ன? நான் எப்படி திரும்பிப் போவது? இராமருக்கு முகத்தைக் காட்டுவது எப்படி? சுக்ரீவனுக்கு முகத்தைக் காட்டுவது எப்படி? அடாடா! இந்தக் கோபம் என்பது எவ்வளவு கெட்டது. இந்த ராக்ஷஸர்கள் மீது வந்த கோபத்தினால் நான் இப்போது என்ன அனர்த்தம் பண்ணிவிட்டேன். அப்போது ஹனுமார் வாயிலிருந்து வந்த வார்த்தை வால்மீகி சொல்ல வைத்த வார்த்தை:

க்ருத்யப்பான்னகுர்யாத்த
க்ருத்தோ ஹன்யா குருநதி
க்ருததா வருஷயா வாசா நரஸ்
ஸாஸுன இஹிதி
நாவாக்ய மஸ்திஜி க்ருத்தஸ்ய
நாகார்யன் வித்ய மேக்ருது

கோபம் வந்தவன் என்ன பாபம்தான் செய்ய மாட்டான். கோபம் வந்தவன் குருவைக் கூட ஹிம்ஸிப்பான். யார் மீது ரொம்ப மதிப்பு வைத்துக் கொண்டிருந்தானோ அவரிடம் கூட கோபம் வந்த சமயத்தில் ஹிம்சை கொடுப்பதற்குத் தயங்க மாட்டான். அத்யந்த ஸத்புருஷன் கூட கோபம் வந்தால் ரொம்பவும் சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொல்வான். கோபம் வந்தவனுக்குச் செய்யக்கூடாத காரியமேயில்லை. சொல்லக்கூடாத வார்த்தையேயில்லை. இந்தக் கோபத்தில் நான் மகாபாபம் பண்ணி விட்டேனே என்று ஹனுமார் வருத்தப்பட்டார். ஆனால் சீதா மாதாவை அக்னி ஒன்று பண்ண முடியாது.

நெருப்பை நெருப்பு சுடாதே. சீதை ஒரு நெருப்பு அந்த நெருப்பை இந்த நெருப்பு என்ன செய்யும். சுடாதே. அதனால் சீதா மாதாவுக்கு ஒன்றும் ஆகவில்லை. சீதா மாதாவை தர்சனம் பண்ணிய பின்புதான் ஹனுமாருக்கு மனம் சமாதானம் ஆனது. எதற்கு சொல்ல வந்தேன் என்றால் கோபம் வந்தவன் என்ன செய்ய மாட்டான் என்பதற்கு அங்கே ஹனுமாருடைய வார்த்தை நமக்குச் சாக்ஷியாக இருக்கிறது. அதனால் மனிதன் அகாரியங்கள் செய்வதற்குக் காரணம் இந்த கோபம் அதேபோல் ஆசை.

ஆசை, இந்த வஸ்து வேண்டும், அந்த வஸ்து வேண்டும் என்று நினைப்பவன் அது சரியான வழியில் போனால் கிடைக்காது என்றால் தவறான வழியில் போவான். என்ன ஆனாலும் சரி எனக்கு அந்தப் பொருள் வேண்டும். அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் பண்ணத் தயார். இந்த மாதிரி வழியில் போனால் அனர்த்தம் வரும் என்றாலும் பரவாயில்லை எனக்கு அது வேண்டும். அதில்தான் அவன் மனம் போகுமே தவிர அனர்த்தம் வரும் மற்றும் துக்கத்திற்கு ஆளாக வேண்டி வரும் என்பதை யோசனை பண்ணக்கூடிய சக்தி அவனுக்கு அந்தச் சமயத்தில் போய்விடும். அதையும் பகவான் சொன்னார். அந்தச் சமயத்தில் எப்பேர்ப்பட்ட விவேகிக்கும் கூட அந்தக் காமமும், க்ரோதமும் அதிகமான சமயத்தில் விவேகம் மறைந்து விடுகிறது. எல்லோரும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு பார்க்கலாம். அதற்கு பகவான் ஒரு த்ருஷ்டாந்தம் சொன்னார். ஒரு கண்ணாடி இருக்கிறது அந்தக் கண்ணாடியில் நாம் முகத்தைப் பார்த்தால் ஸ்பஷ்டமாகத் தெரியும். ஆனால் அந்தக் கண்ணாடியில் அழுக்கு உட்கார்ந்தால் அந்த அழுக்கு உட்கார்ந்திருக்கிற கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் தெரியாது. ஏன்? அந்தக் கண்ணாடியில் அழுக்கு உட்கார்ந்து இருப்பதால் அந்த பிரதி பிம்பத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய சக்தி அந்தக் கண்ணாடிக்குப் போய்விட்டது. அந்த அழுக்குக் கண்ணாடியை ஸ்வச்சம் (சுத்தம்) பண்ணி விட்டோமானால் திரும்பவும் அந்த பிரதி பிம்பத்தைக் கிரஹிக்கக் கூடிய சக்தி வரும். அப்போது நாம் நம் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தால் நமக்குத் தெரியும். அதே போல் இவனுக்கு விவேகம் இருந்தது. நிறைய புஸ்தகங்கள் படித்தான். நிறைய பெரியவர்களிடம் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டிருந்தான். ஆனால் அந்த காம, க்ரோதங்கள் ஜாஸ்தி ஆன பொழுது அவனுடைய விவேகம் எல்லாம் மறைந்து விட்டது. எப்படி அந்த அழுக்கு உட்கார்ந்து இருக்கிற கண்ணாடியில் பிரதி பிம்பத்தைக் கிரஹிக்கிற சக்தி போய்விட்டதோ அதே மாதிரி இவனுடைய விவேகம் மறைந்து விட்டது. அந்தக் காம க்ரோதங்கள் போய்விட்டது என்றால் அவனுடைய விவேகம் மேலுக்கு வரும் அவனால் தவறான காரியங்கள் செய்வதற்கு அவகாசம் கொள்ளாது. அதனால் மனிதனுக்கு எல்லா அனர்த்தங்களுக்கும் காரணமானது காம, க்ரோதங்கள்.

காமக்ரோதாதிகளுக்கு துளி கூட இடம் கொடுக்கக் கூடாது. அப்போது பல பேர் சொல்வார்கள் நீங்கள் சொல்வது எல்லாம் ரொம்பச் சுலபம்தான். ஆனால் ஆசரணம் பண்ணுவது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதே? காம க்ரோதங்களுக்குத் துளி கூட இடம் கொடுக்கக்கூடாது என்று நீங்கள் சொல்வது கேட்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறது. ஆனால் எப்படி இடம் கொடுக்காமல் இருக்கிறது, அது தானாக வந்து விடுகிறது அந்தச் சமயத்தில் என்பார்கள்.

பகவத்பாதாளுடைய பால்யத்தில் அவர் எப்படி இருந்தார் என்பதை சங்கர விஜயத்தில் வர்ணனை பண்ணி இருக்கிறது. அவர் பால்யத்தில் காம க்ரோதாதிகளெல்லாம் தூரமாக்கி விட்டார். ரொம்ப சிறு வயதிலேயே “காமம் வஸ்து விசார தோஸ்தினிதயம்” வேண்டும் வேண்டும் என்கிற ஆசையை வஸ்து விசாரத்தினால் தூரமாக்கி விட்டார். வஸ்து விசாரம் என்ன என்று கேட்டால் ஒன்றுமில்லை. எனக்கு இது வேண்டும் என்ற ஆசை வரும்போது கொஞ்சமாவது யோசனை பண்ணுங்கள். அதனால் எனக்கு என்ன ப்ரயோஜனம்? எதை வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்களோ அதனால் உங்களுக்கு ப்ரயோஜனமா? இல்லை தொந்தரவா என்று கொஞ்சம் யோசனை பண்ணுங்கள். உங்களுக்கு அந்த யோசனை பண்ணக்கூடிய சக்தியும் இல்லையென்றால் பின்பு நாம் ஒன்றும் பண்ண முடியாது. கொஞ்சம் யோசனை பண்ண வேண்டும். இதை நான் சம்பாதிப்பதினால் எனக்கு உண்டாகக்கூடிய ப்ரயோஜனம் எவ்வளவு? எனக்கு வரக்கூடிய தொந்தரவு எவ்வளவு? அது கணக்கு போட்டு பார்த்தால் தொந்தரவுதான் அதிகம். எல்லோருக்கும் அனுபவத்தில் இருக்கிற ஒரு விஷயம் சொல்கிறேன். எல்லோருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். நிறைய சம்பாதிக்கவும் செய்கிறார்கள். ஏழையானவனுக்குப என்ன ஆசை இருந்தாலும் சம்பாதிக்க முடிவதில்லை. அவனிடம் கொஞ்சம் கூட பணம் கிடையாது. இவனிடம் நிறையப் பணம் இருக்கிறது. இந்த இரண்டு பேருக்குள்ளே சுகமான தூக்கம் யாருக்கு வருகிறது? நிறையப் பணம் இருக்கிறவனுக்கா? ஏழைக்கா? என்று கேட்டால் நீங்களே பதில் சொல்வீர்கள். அந்த ஏழைக்குத்தான் சுகமாக தூக்கம் வருகிறது. இவனுக்கு தூக்கம் வருவது கிடையாது என்று சொல்வீர்கள். ஏன் வரவில்லை? எந்த சமயத்தில் எப்படி ரைடு வருமோ? எந்தப் பக்கத்திலிருந்து ரைடு வருமோ? ஆடிட்டர் சார் கிட்டேதான் எல்லாம் தெரியும் அவர்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். அப்போது பகவான் கூட நினைவுக்கு வராது. ஆடிட்டர்தான் நினைவுக்கு வருவார். பகவான் இருக்கிறார் நம்மை காப்பாற்றுவார் என்கிற நினைவு வரவில்லை. ஆடிட்டர் கிட்ட போய் சார் நாளைக்கு என்னவோ ரைடு வரப்போகிறதாம் ஏதாவது செய்து காப்பாற்றுங்கள் என்று சொல்வார்கள்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையினாலே சம்பாதிக்கிறோம். அதனால் நமக்கு என்ன சௌக்கியம்? ஒரு சௌக்கியமும் இல்லை. அதுதான் சொன்னார் வஸ்து விசாரம். இதிலிருந்து என்ன சௌக்கியம் என்று விசாரம் செய்தால் கடைசியில் எனக்கு ஒரு சௌக்கியமும் இல்லை என்கிற பதில்தான் உங்களுக்கு வரும். அப்போது அதுபற்றி உங்கள் மனசு போய்விடும். அதை வஸ்து விசாரம் என்கிறார் அவர். அதை நாம் யாரும் செய்வது இல்லை. அதனால், வேண்டும், வேண்டும் என்கிற ஆசை வருகிறது. சங்கரர் தன் பால்யத்தில் (காமம்) வஸ்து விசாரம் செய்தார். எந்த விஷயத்திலும் வேண்டும், வேண்டும் என்கிற ஆசை வரும்போது இது எதற்கு வேண்டும் அதனால் எனக்கு என்ன ஆகப்போகிறது? தொந்தரவா? உபயோகமா? தொந்தரவுதான் வேண்டாம். எந்த விஷயத்தைப் பார்த்தாலும் தொந்தரவுதான். அதுதான் சொன்னார் இந்த உலகத்தில் ஒரு விதமான பயம் இல்லாத நிலைமை யாருக்கு என்று சொன்னால் எவனுக்கு வைராக்கியம் இருக்கிறதோ அவனுக்குத்தான் அபயம். பயமே இருக்காது. “வைராக்யமேவ அபயம்” வைராக்கியம் என்றால் எந்த ஒரு வஸ்துவிலேயும் ஆசை இல்லாமல் இருக்கிறதுதான் வைராக்கியம். அப்பேர்ப்பட்டனுக்குத்தான் அபயம். அவன் எதற்கும் பயப்பட வேண்டியது இல்லையே? அவனிடம் ஒன்றும் இல்லையே. எதுவும் தேவையும் இல்லை அவனுக்கு. எதுவும் தேவையில்லாதவனுக்கு, எதையும் வைத்துக் கொள்ளாதவனுக்கு பயத்துக்கு இடமே இல்லை. இந்த உலகத்தில் எல்லாம் பயம்தான். வைராக்கியம் ஒன்றுதான் அபயம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் இந்த காமத்தைப் போக்குவதற்கு வஸ்து விசாரம் வேண்டும். சங்கரர் சிறிய வயதிலிருந்தும் கூட அந்த வஸ்து விசாரத்தினால் காமத்தைத் தூரமாக்கினார். பொறுமையினால் க்ரோதத்தை தூரமாக்கினார். யார் என்ன தவறு பண்ணினாலும் பொறுத்துக் கொண்டார் அவர். சங்கரருடைய ஜீவன சரித்திரம் எல்லோருக்கும் தெரியும். காபாலிகன் சங்கரரிடம் நான் பெரிய உபாசனை பண்ணிக்கொண்டு இருக்கிறேன். அந்த உபாசனை சித்திக்க வேண்டுமானால் நான் ஒரு ஸர்வக்ஞனுடைய சிரசை பலி கொடுக்க வேண்டும். அல்லது ஒரு சக்ரவர்த்தியினுடைய சிரசை (தலையை) பலி கொடுக்க வேண்டும். அப்போதுதான் என்னுடைய தபசு (தவம்) பலிக்கும். சக்ரவர்த்தியினுடைய தலையை பலி கொடுக்க என்னால் முடியாது. நீ ஸர்வக்ஞனாக சக்தியாய் இருக்கிறாய். உன்னுடைய சிரஸை கொடுத்தாயானால் அதை நான் அந்த பைரவனுக்கு பலி கொடுத்துவிட்டு என்னுடைய தபஸில் ஸித்தி அடைவேன். அப்போது சங்கரர் என்ன சொன்னார் தெரியுமா? ரொம்ப சந்தோஷம் என்னுடைய சிரஸை எடுத்துக்கொள். பலி கொடுத்துவிடு. உனக்கு ஸித்தி வரும், சந்தோஷம் என்றார். அது மட்டுமில்ல. அவனுக்கு ஓர் உபாயமும் சோல்லிக் கொடுத்தார். நீ நாளைக்கு என் சிஷ்யர்கள் எல்லோரும் பக்கத்தில் இருக்கிற சமயத்தில் வராதே, வந்தால் உன் காரியம் நடக்காது. அவர்களெல்லாம் மத்யானம் ஸ்னானத்திற்குப் போய் விடுவார்கள் நதிக்கு. நான் தனியாக இருப்பேன். அந்தச் சமயத்தில் வந்து எடுத்துக் கொள் என்று ஒரு வழிகூட சொல்லிக் கொடுத்தார். மறுநாள் மத்யானம் அவன் அதேபோல் வந்தான். சிஷ்யர்கள் எல்லோரும் ஸ்நானத்திற்குப் போய் விட்டார்கள். இவர் தனியாக இருந்தார். அவன் வந்தான். அவர் சிரஸை வெட்டுவதற்கு கட்கத்தைத் தூக்கினான். அதற்க்குள்ளே பத்மபாதர் வந்தார். பத்மபாருக்கு நரஸிம்மர் ஆவேசம் வந்துவிட்டது. நரஸிம்ம ரூபத்தில் பத்மபாதர் வந்தார். அந்த காபாலகனின் கதையை முடித்துவிட்டார். சங்கரருடைய பொறுமை எப்படிப்பட்டது என்பதற்கு நான் இந்தக் கதையைச் சொன்னேன். தன்னை ஸம்ஹாரம் செய்ய வந்தவனிடம் கூட அவருக்குக் கோபம் வரவில்லை. அதுதான் முக்கியம். நம்மை யாராவது அடிப்பதற்கு வந்தால் நாம் சும்மா இருப்போமா? அடிக்கிறது அப்புறம். தொடுவதற்கு வந்தால் சும்மா இருப்போமா? மாட்டோமே. அவர் சிரஸை எடுப்பதற்கு வந்தவனிடம் கூட கோபித்துக் கொள்ளவில்லை. அப்பேர்ப்பட்ட பொறுமை. அந்தப் பொறுமை நமக்கு யாருக்கும் வராது. அப்யாஸம் பண்ணவேண்டும். சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபித்துக் கொள்வது என்பது கூடாது என்கிற ஒரு அப்யாஸம் வேண்டும். அநேகம் பேர் சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபித்துக் கொண்டு எல்லா அனர்த்தத்தையும் பண்ணிக் கொண்டு இருப்பார்கள். ஒரு தடவை என்னிடம் ஒரு சிஷ்யன் கேட்டான். ஆசார்யாள் எனக்கு ரொம்பக் கோபம் வருகிறது. நான் அந்தக் கோபம் போவதற்கு என்ன பண்ணட்டும் என்று கேட்டான். ரொம்ப கோபம் வந்துவிட்டால் சிரித்துவிடு கோபம் போய்விடும் என்றேன். இது எவ்வளவு தூரத்திற்கு இதனுடைய பலன் ஆகிவிட்டது என்று சொன்னால் இந்த சபையில் சொல்வதற்கு எனக்கு ஒரு தயக்கமும் இல்லை. நான் சொல்கிறேன். எனக்கு ஒருவன் ஒரு லெட்டர் எழுதினான். அந்த லெட்டர் எழுதியது யார் தெரியுமா? ஒரு முஸ்லீம். அவன் எனக்கு லெட்டர் எழுதினான். நான் சொன்ன இந்த சந்நிவேசத்தை என் சிஷ்யன் ஒரு புஸ்தகத்தில் போட்டுவிட்டான். எனக்கு லெட்டர் எழுதினவன் “நான் பாம்பே ஏர்போர்ட்டில் இருந்தேன், அப்போது அங்கே ஒரு புஸ்தகம் கிடைத்தது. அந்தப் புஸ்தகத்தைப் படித்தேன். உங்களுடைய அட்ரஸ் அதில் இருந்தது. ரொம்ப கோபம் வந்தால் என்ன பண்ண வேண்டும் சிரிக்க வேண்டும் என்கிற உங்கள் அட்வைஸ் அதில் இருந்தது. அதை நான் படித்தேன். அப்புறம் எனக்கும் என்னுடைய ஸ்நேகிதனுக்கும் ஒரு பெரிய சண்டை வந்துவிட்டது. அவனும் நானும் ரொம்ப ப்ராண ஸ்நேகிதர்கள். ஏதோ ஒரு சின்ன காரியத்திற்காக பெரிய சண்டை வந்துவிட்டது. அந்த சண்டை எந்த அளவுக்கு வந்து விட்டது என்றால் எனக்கு வந்த கோபத்திற்கு அவனை நான் முடிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டேன். உடனே நீங்கள் சொன்னது ஞாபகம் வந்து சிரித்துவிட்டேன். என் கோபமும் போய்விட்டது. இரண்டு பேரும் கைகொடுத்துவிட்டுப் போய் விட்டோம்.” என்று எழுதியிருந்தான். அந்த லெட்டர் இன்றைக்கும் மடத்தில் இருக்கிறது. நீங்கள் கொடுத்த அட்வைஸ் ஓர் உயிரைக் காப்பாற்றியது என்று எழுதியிருந்தான். இல்லாவிட்டால் வந்த கோபத்திற்கு அன்று நான் அவனை முடித்து இருப்பேன். எதற்கு சொல்ல வருகிறேன் என்றுகேட்டால் கோபத்தைப் போக்குவதற்கு என்ன மார்க்கம் என்று கேட்டால் இது ஒரு சுலபமான மார்க்கம். இப்படி நம்முடைய வாழ்க்கையில் இந்த காம, க்ரோதங்களுக்கு இடம் கொடுக்காமல் போனால் வாழ்க்கை ரொம்ப நல்லபடியாக நடக்கும். நம்மால் யாருக்கும் தொந்தரவு ஆகாது. நமக்கும் தொந்தரவு ஆகாது. அப்பேர்ப்பட்ட ஒரு பவித்திரமான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று பகவான் பகவத்கீதையில் சொன்னார்

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குணஸமுத்பவ: |
மஹாசனோ மஹாபாப்மா வித்த்யேனமிஹவைரிணம் ||

“அப்பேர்ப்பட்ட காமத்தையும் தூரமாக்கி க்ரோதத்தையும் தூரமாக்கி நீ சௌக்கியமாய் இருப்பாயாக” என்று சொன்னார்.

ஆரம்பத்தில் சொன்ன மாதிரி பகவான் பகவத்கீதையில் சொன்ன பல உபதேசங்களில் ஏதாவது ஓர் உபதேசத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டு அதை ஆசரணம் செய்வதற்கு முயற்சி எடுத்தால் நமக்கு ரொம்ப நல்லதாகும். முதலில் இந்த முயற்சியை நாம் ஆரம்பிக்க வேண்டும். நம் ஜீவனத்தில் காம, க்ரோதங்களுக்குக் கூடுமானவரையிலும் இடங் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்கிற ஒரு தீர்மானம் பண்ணிக்கொண்டு அதுபடி நடப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்போது நம் வாழ்க்கை ரொம்ப நன்றாகவே இருக்கும். பகவத் பாதாளும் சொன்னார்.

த்வயிமயிசான்யத் ரைகோ விஷ்ணு:
வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: ||

எல்லா இடத்திலேயும் உன்னிலேயும் என்னிலேயும் ஒரே சைதன்யம்தான் ப்ரகாசிக்கிறது. ஆகாயத்தில் இருக்கிற சூரியன் கிணற்று ஜலத்திலேயும், அவனுடைய பிரதிபிம்பம், சமுத்திர ஜலத்திலேயும் அதே பிரதிபிம்பம். அந்தப் பிரதிபிம்பத்தில் வித்தியாசமே இல்லை. அதேபோல் தான் சைதன்யமும் ஒரே மாதிரியாகத்தான் எங்கும் இருக்கும்பொழுது எதற்கு ஒருவருக்கொருவர் கோபித்துக் கொள்ள வேண்டும்? இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்கலாமல்லவா? என்று பகவத் பாதாளும் சொன்னார். இப்பேர்பட்ட ஒரு பவித்ரமான வாழ்க்கையை நடத்தக் கூடிய ஒரு அதிர்ஷ்டம் எல்லோருக்கும் லயிக்கட்டும் என்று நான் சொல்கிறேன்.

No comments:

Post a Comment